Monday, September 19, 2016

73. பாப்பிரஸ் அருங்காட்சியகம், வியன்னா, ஆஸ்திரியா

முனைவர்.சுபாஷிணி

பண்டைய எழுத்து ஆவணங்களைப்பற்றி ஆராய முற்படும்போது கல்வெட்டு ஆவணங்களைப் போலவே நமக்கு பேப்பிரசில் கீறப்பட்ட ஆவணங்களும் கிடைக்கின்றன. மிகப்பழமையான பேப்பிரஸ் ஆவணங்கள் எகிப்தின் செங்கடல் பகுதியைச் சுற்றி செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்றன. இன்றைக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பேப்பிரஸ் ஆவணங்கள் கி.மு.2560- கி.மு2550 எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க பேப்பிரஸ் ஆவணங்கள் உலக அதிசயங்களில் ஒன்றான கீசே பிரமிட் கட்டப்பட்ட இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளை பதிவனவாக அமைந்துள்ளன. உலகின் ஏனைய பாகங்களை விட எகிப்தில் தான் பேப்பிரஸ் ஆவணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பேப்பிரஸ் தாட்கள் நைல் நதிக்கரையோரத்தில் வளர்கின்ற பேப்பிரஸ் செடிகளைத்தக்க முறையில் பதப்படுத்தி தயார் செய்து அதிலிருந்து தாட்களாக உருவாக்கப்படுகின்றன.



உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் பேப்பிரஸ் ஆவணங்கள் அரும்பொருட்களில் ஒன்றாக இடம்பெறுவதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். பல அரும்பொருட்களுடன் ஒன்றாக என்றில்லாமல், பேப்பிரஸ் ஆவணங்களுக்கு மட்டுமன்றி பிரத்தியேகமாக ஒரு அருங்காட்சியகம் ஆஸ்திரிய நாட்டின் வியன்னா நகரில் இருக்கின்றது. ஆஸ்திரிய தேசிய நூலகம் இருக்கும் அதே பிரமாண்டமான கட்டிடத்தின் மறுபகுதியில் இந்த பேப்பிரஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

வியன்னாவில் உள்ள இந்த பேப்பிரஸ் அருங்காட்சியகத்தில் இருப்பவை அனைத்துமே எகிப்தின் கலாச்சார பண்பாட்டு வரலாற்று நிகழ்வுகளின் பதிவுகள். பல நூறு ஆண்டுகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் முழுமையான அல்லது சற்று சிதைந்த அல்லது பெரும்பாலும் சிதைந்த வகையில் காணப்படும் ஆவணங்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஆவணங்களில் உள்ள செய்திகள் பெரும்பாலும் இறப்பு சடங்குகளை விவரிப்பதாகவோ, மருந்து மூலிகைகள் பற்றியோ, மேஜிக் விசித்திரமான நிகழ்வுகள் என்ற வகையிலோ, இலக்கியங்களாகவோ, உணவுப்பழக்கம் பற்றியதாகவோ, நைல் நதி பயணம் பற்றியதாகவோ என்ற வகையில் அமைந்திருக்கின்றன.



இங்கு ஆவணப்பகுதியில் ஏராளமான பேப்பிரஸ் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்பில் 180.000 பேப்பிரஸ் ஆவணங்கள் உள்ளன என்பது வியப்பாக உள்ளது அல்லவா? இந்த அருங்காட்சியகம் மூன்று தளங்களில் அமைந்துள்ளது. அதில் ஒரு தளத்தில் மட்டுமே 200 பேப்பிரஸ் ஆவணங்கள் மட்டுமே பொது மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏனையவை ஆய்வாளர்களுக்குப் பிரத்தியேக ஆய்வுகளுக்கு எனத்தகுந்த அனுமதி பெற்ற பின்னர் மட்டுமே வழங்கும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பேப்பிரஸ் சேகரிப்பு உள்ள அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று என்பது இதன் சிறப்பை நமக்குப் புலப்படுத்தும். இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பினை பெருமைப்படுத்தும் வகையில் யுனெஸ்கோ நிறுவனம் 2001ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்திற்கு “Memory of the World” என்று அறிவித்து சிறப்புச் செய்தது.



இந்த அருங்காட்சியகத்தின் வலைப்பக்கத்தில் நிரந்தர கண்காட்சி பற்றியும் சிறப்புக் கண்காட்சி பற்றியும் பல தகவல்களைப் பெறலாம். இதன் முகவரி
http://www.onb.ac.at/ev/papyrus_museum.htm. அருங்காட்சியகத்திற்கு நேரில் செல்ல விரும்புபவர்கள் வியன்னாவின் மத்திய சாலையில் தேசிய நூலகத்தை தேடிச் சென்றால் அதே பிரமாண்ட மண்டபத்தின் வலது புறத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருப்பதைக் காணலாம். இதன் முகவரி:
Papyrus Museum
Heldenplatz, New Hofburg
1010 Wien
Tel.: (+43 1) 534 10-420

இங்குள்ள பேப்பிரஸ் ஆவணங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட செய்திகளைப் பதிவனவாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக ஒரு பெப்பிரஸ் ஆவணம் பார்லி, இறைச்சி, கோதுமை எண்ணெய் ஆகியவை பல்வேறு காலகட்டங்களில் கொடுக்கப்பட்டமையைக் குறிப்பதாக உள்ளது. இதில் பார்லி நைல் நதியில் ஏற்றிச் செல்லப்பட்டமையால் கூடுதல் வரி கட்டவேண்டியதைப் பற்றி குறிப்பிடுகின்றது. இந்த ஆவணம் கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.



இங்குள்ள மற்றுமொரு ஆவணம் எகிப்திற்கும் இந்தியாவிற்கும் ரோமானிய காலத்தில் இருந்த வர்த்தகத்தொடர்பை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. விலையுயர்ந்த பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டமையை இந்த ஆவணம் குறிப்பிடுகின்றது. இதில் ஒரு வியாபாரி கட்டவேண்டிய வரி பற்றிய செய்தியும் அவர் செங்கடல் பகுதியிலிருந்து இந்தியாவிற்குக் கப்பல் வழி பொருட்கள் ஏற்றி அனுப்பிய செய்தியையும் பதிகின்றது.


எகிப்து தொடர்பான பல்வேறு தகவல்களை வருவோருக்கு வழங்கும் ஆய்வுக்கூடமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது. நான் பார்த்து வியந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் இந்த அருங்காட்சியம் தவறாமல் இடம் பெறும் ஒன்றே.

சரி. அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா? தொடர்ந்து வாருங்கள்.

No comments:

Post a Comment