Monday, April 24, 2017

85. சைப்ரஸ் தொல்லியல் அருங்காட்சியகம், நிக்கோசியா, சைப்ரஸ்


முனைவர் சுபாஷிணி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Published today in Vallamai E-zine http://www.vallamai.com/?p=76521


ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களும் சந்திக்கும் இடத்தில், மெடிட்டரேனியன் சமுத்திரம் சூழ அமைந்திருக்கும் ஒரு தீவு தான் சைப்ரஸ். இந்தக் காரணத்தினாலேயே பல பேரரசுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு நிலப்பகுதியாக இந்தத் தீவு அமைந்து, அதனால் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பேரரசுகளின் ஆதிக்கத்தை இந்தத் தீவு சந்திக்க நேர்ந்தது.

சைப்ரஸ் நாட்டின் வரலாறு என்பது தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் கி.மு.7500க்கும் முன்னரே இங்கு மனித குலம் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருப்பதாகச் சான்று அளிக்கின்றது. இங்குப் பரவலாக மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மனிதர்களின் நடமாட்டம் இங்கு கி.மு 10,000 வாக்கிலேயே இத்தீவின் Aetokremnos பகுதியில் வேட்டையாடிப் பிழைத்த மக்கள் இங்கு வாழ்ந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. நாடோடிகளாகத் திரிவதை விடுத்து கிராமங்களை அமைத்து மக்கள் வாழ்ந்ததற்கு இந்தப்பகுதியில் அறியப்பட்ட தொல்லியல் சுவடுகள் சான்றுகளாக இருக்கின்றன.

இங்கே மக்களால் உருவாக்கப்பட்ட, இன்றைக்கு ஏறக்குறைய 10,000 ஆண்டுகள் பழமையான கிணறுகள் இரண்டு இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. எட்டு மாத பூனை ஒன்றின் எலும்புக்கூடு ஒரு மனித எலும்புக்கூட்டுடன் இருக்கும் வகையில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் சைப்ரஸ் தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சமாதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பண்டைய எகிப்திய சடங்குகளுடன் இங்கே இறந்தோருக்கான வழிபாடுகள் நிகழ்ந்தமையை விவரிப்பதாக உள்ளன. சைப்ரஸின் மேற்குப் பகுதியில் உள்ள Khirokitia என்ற நகரம் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் பழம் பெருமை கொண்ட நகரமாகத் திகழ்கின்றது. இப்பகுதி கி.மு 6500 ஆண்டு பழமையான நகர் என்ற பெருமை கொண்டதாக அமைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இரும்புக்காலத்தில் கிரேக்கத்திலிருந்து வந்தவர்கள் சைப்ரஸில் மிகுதியாகக் குடியேறியிருக்கின்றனர். மைஸேனியன் கிரேக்க (Mycenaen Greek) வணிகர்கள் குழு இங்கு கி.மு 1400 வாக்கில் வந்து வணிகத்தில் ஈடுபட்டனர் என்பதோடு இங்கேயே வந்து தங்கி வாழ்விடங்களை அமைத்தனர். அதன் பின்னர் கி.மு. 1100 லிருந்து 1050 வரை மிக அதிக அளவிலான கிரேக்க வணிகர்கள் இங்கே குழுக்களாக வந்து குடியேறினர். இதுவே இங்கு நிகழ்ந்த மிகப்பெரிய குடியேற்றம் எனலாம். கிரேக்க புராணங்களில் வருகின்ற முக்கிய கதாபாத்திரங்கள் பிறந்த ஊராகவும் சைப்ரஸ் திகழ்கின்றது. அப்ரோடைட் (Aphrodite) , அடோனிஸ் (Adonis), சினிராஸ் மன்னர் (King Cinyras), டொய்சர் (Teucer), மற்றும் பிமேலியன் (Pygmalion) ஆகிய கடவுள்களின் பிறப்பு இங்கே நிகழ்ந்ததாகக் கிரேக்க புராணங்கள் கூறும்.மிகப்பழமை வாய்ந்த அசிரிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் சைப்ரஸ் கி.மு.708ல் இருந்தது. பின்னர் எகிப்தியர்களாலும் ஆட்சி செய்யப்பட்டு, பின்னர் கி.மு.545ல் பெர்சிய மன்னர்களின் ஆட்சிக்குக் கீழ் சைப்ரஸ் இருந்தது. பின்னர் வெவ்வேறு மன்னர்களின் கைப்பிடிக்குள் வந்து கி.மு333ல் மாமன்னன் அலெக்ஸாண்டரால் கைப்பற்றப்பட்டது .

அத்தோடு நிற்கவில்லை.

தொடர்ந்து ரோமானியர்களால், துருக்கியர்களால், ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு இதன் ஆட்சி என்பது பலமுறை கைமாறிய ஒரு நாடாக சைப்ரஸ் இருந்துள்ளது. 1960ம் ஆண்டில் இங்கிலாந்து, கிரேக்கம், துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்ததின் அடிப்படையில் சைப்ரஸ் சுதந்திரம் அடைந்தது. ஆனாலும் உள்நாட்டில் அமைதி நிலவவில்லை. 77% கிரேக்கர்களும், 18 % துருக்கியர்களும் 5% ஏனையோரும் என இருந்த நிலையில், தொடர்ந்து பிரிவினைக்கானப் பல முயற்சிகள் நடந்து கொண்டேயிருந்தன. கிரேக்கர்கள் அதிகம் வாழும் மேற்குப் பகுதியையும் கிழக்கில் துருக்கியர்கள் வாழும் கிழக்குப் பகுதியையும் பிரிக்கும் சுவர்களும் முள் கம்பிகளும் அமைக்கப்பட்டன.
இன்று சைப்ரஸ் தீவு, ஒரு பகுதியில் அதாவது மேற்குப் பகுதியில் அதிகமான கிரேக்கர்களும், மற்றொரு பகுதியான அதாவது கிழக்குப் பகுதியில் துருக்கியர்கள் அதிகமாக வசிக்கும் வகையிலும் அமைந்திருக்கின்றது. நான் 2005ம் ஆண்டு சைப்ரஸ் சென்றிருந்த வேளையில் பெருமளவு கிரேக்கர்கள் வாழும் பகுதியில் இருக்க வேண்டிய சூழல் அமைந்தாலும், துருக்கியர்கள் வாழும் பகுதியில் அமைந்திருக்கும் எல்லைப்பகுதியையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்தது. முள் வேலிகள் போட்ட நீண்ட மதில் சுவர்கள் இரு பகுதிகளையும் பிரித்திருப்பதைக் காணமுடிந்தது.


சைரப்ஸின் வரலாற்றை விவரிக்கும் மிக முக்கியமான ஒரு அருங்காட்சியகமே சைப்ரஸ் அருங்காட்சியகம். 1882ம் ஆண்டில் இது கட்டப்பட்டது. சைப்ரஸில் நிகழ்த்தப்பட்ட பல்வேற்று தொல்லியல் ஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் அடங்கிய மிக முக்கியமான வரலாற்றுக் கூடம் இது எனலாம். சைப்ரசின் தலைநகரான நிக்கோசியாவில் இது அமைந்திருக்கின்றது. சைப்ரஸ் அருங்காட்சியகம் என்றும் சைப்ரஸ் தொல்பொருள் அருங்காட்சியகம் என்றும் இரு பெயர்களில் இந்த அருங்காட்சியகம் அழைக்கப்படுகின்றது.


சுவீடன் நாட்டு தொல்லியல் ஆய்வாளர்களுடன் இணைந்து 1927 முதல் 1931 வரை சைப்ரஸின் சில பண்டைய நகர்களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகளில் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்துள்ளன. கட்டிடத்திற்குள் உள்ள 14 பெரிய அறைகளுக்குள் மண்பாண்டங்கள், எலும்புக்கூடுகள், தங்க ஆபரணங்கள், இரும்புக் கருவிகள், சிற்பங்கள், கிரேக்க தெய்வங்களின் சிற்பங்கள், இறந்தோருக்கானச் சடங்குகள் செய்து இறந்தவர் உடலை வைக்கும் பானைகள், என பலவாரியான அரும்பொருட்கள் இங்குள்ளன. ஒரு அறையில் நூலகமும் அமைந்திருக்கின்றது.

பொதுவாக திங்கட்கிழமைகளில் இந்த அருங்காட்சியகம் மட்டுமல்ல, எல்லா அருங்காட்சியகங்களும் மூடப்பட்டிருக்கும். திங்கட்கிழமை தவிர்த்த ஏனைய நாட்களில் இந்த அருங்காட்சியகம் வருகையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.

சைப்ரஸ் நாட்டின் பண்டைய வரலாற்றைக் கால வாரியாகப் பிரித்து அறிந்து கொள்ள பல தகவல்களை ஒரே இடத்தில் வழங்கும் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டிடமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது.
குறிப்பு:Cyprus, Plurigraf.

Friday, April 21, 2017

84. விவேகாநந்தர் உரையாற்றிய கலை அருங்காட்சியகம், சிக்காகோ, வட அமெரிக்கா


முனைவர் சுபாஷிணி
http://www.vallamai.com/?p=76464


வியக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமான ஒரு கோத்திக் வகை கட்டிடத்திற்குள் 300,000 கலைப்பொருட்கள், பத்து வெவ்வேறு பகுதிகளில் தன்னகத்தே கொண்ட Art Institute of Chicago உலகின் முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்று.  1879ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் வட அமெரிக்காவின் மிகப் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 1.5 மில்லியன் வருகையாளர்கள் வந்து பார்த்துச் செல்லும் ஒரு வரலாற்றுக் கூடம் என்ற சிறப்பு கொண்டது இந்த அருங்காட்சியகம். இதன் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதாய் இங்குள்ள முதல் தளத்தில் அமைந்துள்ள ஒரு கருத்தரங்க வளாகம் அமைந்திருக்கின்றது.  ஆம். இங்குதான் இந்தியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராக, இந்து சமயத்தைப் பிரதிநிதித்து  உலக சமயங்களின் பார்லிமெண்டில் கலந்து கொள்ளச் சென்ற சுவாமி விவேகாநந்தரின் 1893ம் ஆண்டு நிகழ்ந்த உலகப் பிரசித்தி பெற்ற சொற்பொழிவு அமைந்தது.


உலக சமயங்களின் பார்லிமண்ட் என்ற நிகழ்வு முதல் முதலாக நடைபெற்றதும் அந்த ஆண்டில் தான். 1893ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 11ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை இந்த உலகப் பிரசித்தி பெற்ற மாநாடு நடைபெற்றது.  சுவாமி விவேகாநந்தரின் உரை,  நிகழ்வின் முதல் நாளான செப்டம்பர் 11ம் தேதி நிகழ்த்தப்பட்டது.


Sisters and Brothers of America...
என தொடங்கிய அவரது உரையின் தொடக்கமே அந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைத்து கருத்தரங்கப் பேராலர்களையும் திகைக்க வைத்தது. இதற்குக் காரணம், பொதுவாக சொற்பொழிவாளர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் 'பெருமதிப்பிற்குறிய ஆண்களே பெண்களே'  என விளிக்காமல், வந்திருந்தோரைத் தனது சகோதர சகோதரிகளாக நினைத்து அவர் தனது உரையைத் தொடங்கிய விதம் ஏனையோரை திகைக்க வைத்தது.


உலகப்பிரசித்தி பெற்ற அந்தத் தனது உரையில் அவர் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. தான் பிரதிநிதித்து வந்திருக்கும் இந்தியா உலகளாவிய வகையில் சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மையும் கொண்ட மக்களைக் கொண்ட நாடு, நாங்கள் எல்லா மதங்களும் உண்மையே சொல்கின்றன என்று நம்புகின்றோம்.  இத்தகைய நாட்டில் பிறந்து வளர்ந்தமைக்காக நான் பெருமைப்படுகின்றேன், எனச் சொல்லி இந்தியாவை திறந்த மனத்துடன் எல்லா மதத்தினரையும் ஆதரித்து, வந்தாரை வாழவைக்கும் ஒரு நாடு என்று சொல்லி பேராளர்களுக்கு அன்று தனது நாட்டை அறிமுகப்படுத்தினார் சுவாமி விவேகாநந்தர்.  அன்றைய நிலையில் சுவாமி விவேகாநந்தர் விவரித்த அதே வகையிலான சிந்தனைப்போக்கு இன்று உள்ளதா என்று கேள்வி கேட்காமல் இருக்க இயலவில்லை. இந்திய நாட்டின் ஒரு சாரார் உயர் வகுப்பினரென்றும், மறு சாரார் நடுத்தர வகுப்பென்றும், ஒரு சாரார் தீண்டத்தகாதார் என்றும், ஒரு சாரார் பார்க்கவே தகாதார் என்றும், பிரித்து வகுத்து வைத்திருக்கும் நிலையை சுவாமி விவேகாநந்தர் அன்றே பார்க்கத்தவறினாரா?  அல்லது அவரது பார்வைக்கு இந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் எட்டவே இல்லையா? என்ற கேள்வியும் எழுத்தான் செய்கின்றது.

சுவாமி விவேகாநந்தரின் சிக்காகோ பயணம் ஒரு நீண்ட பயணம்.  அவரது இப்பயணத்திற்கு மிக முக்கியக் காரணமாக அமைபவர் தமிழகத்தின் இராமநாதபுரத்தின் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியாவார்.  இவரது  ஏற்பாட்டில்  சுவாமி விவேகாநந்தரின் அமெரிக்க பயணம் அமைந்தது.  இன்று போல அன்று கடல் பயணங்கள் எளிமையானவை அல்ல. நீண்ட தூரப் பயணம் அது. ஆக 1893ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி தனது பயணத்தை பாம்பேயிலிருந்து தொடங்கினார். அமெரிக்காவை அடைவதற்கு முன்னர் இந்தப் பயணத்தில் சீனா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளுக்கும் சென்று பின்னர் அங்கிருந்து அமெரிக்கா சென்றடைந்தார். சீனாவிலும் ஜப்பானிலும் புத்த விகாரைகளைத் தரிசித்து பின் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

சுவாமி விவேகாநந்தரை உலக மக்கள்  அறியச் செய்த நிகழ்வாக இந்த சிக்காகோ உலக சமயங்களின் கருத்தரங்கம் அமைந்தது. அதே வேளை இந்த கருத்தரங்கம் தனிப்பட்ட வகையில் சுவாமி விவேகாநந்தருக்கும் புதிய பல அனுபவங்களை வழங்கிய நிகழ்வாக அமைந்ததையும் மறுக்க இயலாது.


இன்று வட அமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்தில் உள்ள இந்தக் கலை அருங்காட்சியகத்தில் உள்ள இந்த அறை அவரது நினைவாக அமைந்துள்ளது. அங்கே அருகாமையில் உள்ள விவேகாநந்தா வேதாந்த மையம் (Vivekananda Vedanta Society of Chicago) சுவாமி விவேகாநந்தரின் பெயரில் இயங்கி வரும் ஒரு அமைப்பு. இங்கே வேதாந்த வகுப்புக்கள், பஜனைகள், பூஜைகள் ஆகியனவற்றோடு சுவாமி ராமகிருஷ்ணர், சாரதா அம்மையார் பூஜைகளும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் உள்ள இந்த கருத்தரங்க வளாகத்திற்கென்று தனிக்கட்டணம் ஏதும் கிடையாது. அருங்காட்சியகத்திற்கு மட்டும்  நுழைவுக்கட்டணத்தைச் செலுத்தி விட்டால் இந்த கருத்தரங்க அறையையும் சென்று காணலாம். இந்த அறை பூட்டியே இருக்கின்றது. 1893ம் ஆண்டில் எப்படி இருந்ததோ அதே வடிவத்தில்  எந்த வகை மாற்றமும் செய்யாமல் இந்த அறையை அப்படியே வைத்திருக்கின்றார்கள்.  வருகின்ற சிறப்பு வருகையாளர்களுக்கு ஒரு அதிகாரியின் துணையுடன் திறந்து காட்டுகின்றனர்.நான் சென்றிருந்த வேளையில் எனக்கும் அந்த அரும் வாய்ப்பு கிட்டியது.
சுவாமி விவேகானந்தர் நின்று உரை நிகழ்த்திய இடத்தில் நின்று அந்த மண்டபத்தின் அமைதியான சூழலில் அதன் சிறப்பையும் தெய்வீகத்தையும் உணர்ந்தேன். உலக மாந்தர்கள் அனைவரும் ஒன்றே எனும் குரலில் தெள்ளத்தெளிவாக, ”எனது அமெரிக்க சகோதரியரே, சகோதரர்களே” என அழைத்து, வந்திருந்த மற்ற அனைத்து பேச்சாளர்களையும் சிறப்பு வருகையாளர்களையும் அன்பினால் கட்டிப் போட்ட அந்த நிகழ்வு இன்று இந்தியர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகத்தான் அமைந்துள்ளது. 

Friday, April 7, 2017

83. பண்டைய கலாச்சாரங்கள் - ஹோஹண்டூபிங்கன் அரண்மனை அருங்காட்சியகம், ஜெர்மனி


முனைவர் சுபாஷிணி
http://www.vallamai.com/?p=76153


மன்னர்கள் வாழ்ந்த அரண்மைனைகளில் சில இன்றைக்கு அருங்காட்சியகங்களாக மாற்றம் கண்டுள்ளன. ஐரோப்பாவில் இத்தகைய அருங்காட்சியகங்களை ஏறக்குறைய அனைத்து நாடுகளில் காணலாம். ஜெர்மனியிலோ கோட்டைகளுக்கும்  அரண்மனைகளுக்கும் சிறிதும் குறைவில்லை. அப்படி ஒரு அரண்மனை அருங்காட்சியகம் தான் டூபிங்கன் நகரில் இருக்கும் பண்டைய கலாச்சாரங்கள் - ஹோஹண்டூபிங்கன் அரண்மனை அருங்காட்சியகம்.

இந்த அரண்மனை கி.பி.1050ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த அரண்மனை 1979 தொடங்கி 1994ம் ஆண்டு வரை பெரிய அளவில் சீரமைக்கப்பட்டது. தற்சமயம் உலகப்புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகவும் இந்த அருங்காட்சியகம் விளங்குகின்றது.  கட்டிட சீரமைப்புப் பணிகள் முற்றுப்பெற்ற பின்னர் அரும்பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்காக இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.  இந்த அருங்காட்சியகத்தில் 2000 சதுர அடிப் பரப்பில் 4600 அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சேகரிப்புக்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துச்சேகரிப்புக்கள்,  தொல்லியல் அகழ்வாய்வுகள்,  மற்றும் எகிப்திய, கெல்ட், கிரேக்க ரோமானிய வரலாற்றுச் சான்றுகளின் சேகரிப்புக்களாக அமைந்துள்ளன.

1961ம் ஆண்டில் டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் எகிப்திய வரலாற்றுத்துறை தொடங்கப்பட்டது.  ஸ்டுட்கார்ட் நகரின் வர்த்தகரான எர்ன்ஸ்ட் ஃபோன் சீகலின் அவர்கள் வழங்கிய எகிப்திய அரும்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத்துறை தொடங்கப்பட்டது.  படிப்படியாக  மாநில அரசின் பொருளாதார உதவியுடனும் ஸ்டுட்கார்ட்  லிண்டன் அருங்காட்சியகத்தின் உதவியுடனும் எகிப்திய சேகரிப்புக்கள் இங்கே மேலும் சில இணைந்தன. இன்று ஜெர்மனியில் இருக்கும் மிக முக்கியமான எகிப்திய அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது. இதுவரை எகிப்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் ஏறக்குறை ஐம்பது விழுக்காட்டிற்கும் மேலாக ஜெர்மானிய அகழ்வாராய்ச்சி நிபுனர்கள் ஈடுபட்டனர் என்பதுவும் குறிப்பிடத்தக்க ஒன்று.  இங்குள்ள சேகரிப்புக்களில் இன்றைக்கு 5000 ஆண்டுகள் வரையிலான அரும்பொருட்கள் இடம் பெறுகின்றன.  மம்மிகளை வைத்து பாதுகாக்கும் மரப்பெட்டிகள், பாப்பிரஸ் ஆவணங்கள், இறந்தவர்களுக்கான சடங்குகளில் சேர்க்கும் சடங்குப்பொருட்கள், இறை வடிவங்கள், ஆபரணங்கள்,  ஆயுதங்கள், கருவிகள் என இவை வெவ்வேறு வகையில் அமைந்தவை.

ஐரோப்பிய பண்டைய நாகரிகங்களில் கிரேக்க,  ரோமானிய நாகரிகங்கள் அதி முக்கியமானவை. ஏறக்குறைய எல்லா ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி அமெரிக்காவிலும் சரி உலகின் ஏனைய நாடுகளிலும் சரி, கிரேக்க,  ரோமானிய கலைப்பொருட்களும் கட்டுமானக் கலைகளும், சித்தாந்தங்களும் கொண்டாடப்படும் கலைகளாகவே இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் பல அருங்காட்சியகங்களில் கிரேக்க,  ரோமானிய சிற்பங்களும் கோயில்களின் எச்சங்களும்,  ஏதாகினும் ஒரு வடிவில் அமைந்த கலைப்பொருட்களும் பாதுகாக்கப்படுகின்றன. டூபிங்கன் அருங்காட்சியகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு தனிக்காட்சி வளாக அறையில் 350 கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தைச் சிறப்பிக்கின்றன.


இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புக்களில் ஒன்று ப்ரான்சின் லாஸ்ஸாஸ் (Lascaux) குகையில் அமைந்திருக்கும் விலங்குகள் பாறை ஓவியம். சுமார் 17,000 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் அறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்த குகை பாறை ஓவியங்களின் மறுபதிப்பு ஒன்று இங்கே இந்த டூபிங்கன் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. லாஸ்ஸாஸ் குகையில் வியக்கத்தக்க வகையில் அமைந்த ஏறக்குறைய 2000 ஓவியங்கள் குகையின் உள்ளே பாறைச் சித்திரங்களாக தீட்டப்பட்டுள்ளன. விலங்குகள், மனிதர்கள், உருவங்கள் என மூன்று வகையில் இந்த ஓவியங்கள் உள்ளன. பெரும்பாலான ஓவியங்கள் கருப்பு, சிவப்பு, மஞ்சள் ஆகிய வர்ணங்களில் அமைந்திருக்கின்றன.  இவற்றுள் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுவது காளை மாடுகள் நிறைந்த ஒரு சுவர்ப்பகுதியில் இருக்கும் ஓவியங்கள். இது 36 விலங்குகளின் வரை ஓவியங்கள் நிறைந்த ஒரு தொகுதி. இந்தத் தொகுதியை ஆராய்ந்த David Lewis-Williams மற்றும் Jean Clottes என்ற அறிஞர்கள் இவற்றை உருவாக்கிய பண்டைய மனிதர்கள் தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீக சக்திகளை உருவகப்படுத்தும் வகையில் இதனை அமைத்திருப்பதாகக் கருதுகின்றனர். அது மட்டுமன்றி பிரான்சில் அன்றைய காலகட்டத்தில் மக்களின் சுற்றத்தில் அவர்கள் பார்த்துப் பழகிய மிருகங்கள் எவை என்பதை அடையாளம் காணவும் இந்த குகை பாறை ஓவியம் உதவுகின்றது.

இந்த அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய டூபிங்கன் பல்கலைக்கழகம் தற்சமயம் வெவ்வேறு தொல்லியல் ஆய்வுகளில் தம் குழுவினரை ஈடுபடுத்தியுள்ளது. 1988ம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தின்  மான்ஃப்ரெட் காஃப்மான் அவர்கள்  தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகளாகக் குறிப்பிடப்பட்டு மேலும் பல ஆய்வுகள் தொடர வழி அமைத்துக் கொடுத்தது. தற்சமயம் இந்த பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை ஜெர்மனி, பிரான்சு, ஐக்கிய அரபு நாடுகள், கிரேக்கம், ஈரான், தென்னாப்பிரிக்கா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன.  ஜெர்மனியின் தென்பகுதி ஆச் மற்றும் லோன் பள்ளத்தாக்கில் இக்குழுவினர் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் இப்பல்கலைக்கழகத்திற்கு புகழ் சேர்த்தவையாக அமைந்திருக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் குறிப்பிடத்தக்க சில சேகரிப்புக்களைப் பற்றியும் அறிந்து கொள்வது பயனளிக்கும்.


இது ஏறக்குறைய நாற்பதாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு சிற்பம். புலியின் வடிவம் இது. காட்டெருமையின் கொம்பினால் செய்யப்பட்டது இச்சிலை. இன்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விலங்கினைப் பார்த்து அதன் உருவத்தை வடிவமைக்கும் ஆற்றலுடன் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இருந்தினர் என்பதற்குச் சான்றாகின்றது இச்சின்னம். ஜெர்மனியின்   தென்பகுதி ஆச் மற்றும் லோன் பள்ளத்தாக்கில் சேகரிக்கப்பட்ட இதே வகையான 50 அரும்பொருட்கள் இங்கே காட்சிக்கு உள்ளன.கிரேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிற்பங்கள் கிடைத்தது போலவே பானைகளும் விளக்குகளும் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. அத்தகை ஒரு மண்பானை தான் இது. பல வடிவங்களை உள்ளடக்கிய ஒரு நீர் சேகரித்து வைக்கும் இறைவழிபாட்டுச் சடங்கில் பயன்படுத்தப்படும் பானை இது.


எகிப்து பண்டைய கோயில்களுக்கும் கடவுள் வடிவங்களுக்கும் எண்ணற்ற சடங்குகளுக்கும் பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கலாச்சாரப் பின்னனி கொண்ட நாடு. எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட, ஹீரோக்லிப்ஸ் எழுத்துக்கள் நிறைந்த ஒரு சிதைந்த ஆலயத்தின் உட்புறச்சுவர் பகுதி இது.


இறந்து போன உடல்களை மம்மியாக்கி அதனை வைக்கும் சவப்பெட்டிகள் இங்கு சேகரிப்பில் இடம்பெருகின்ற ன. சாதாரன மனிதர்களுக்கு மரத்தால் செய்யப்படும் இவ்வகை பெட்டிகள் அரசகுலத்தோருக்குத் தங்கத்தால் இழைக்கப்பட்டு ஆபரணங்களாலும் விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

கிரேக்க ரோமானிய சிற்பங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் சிற்பங்கள் இவை.  கையில் டிஸ்க் வடிவிலான ஒன்றை ஏந்தியிருக்கும் இச்சிற்பத்தின் பெயர் டிஸ்கோபொலுஸ் (Discobolus).  இதனை உருவாக்கியவர் மைரோன் என்ற கிரேக்க சிற்பி. கி.மு.460-450 வரை எனக்குறிப்பிடப்படும் காலகட்டத்தில் இச்சிற்பியால் பல சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் டிஸ்கோபோலுஸின் சிற்பமும்.

இப்படி சிறப்புக்கள் மிக்க பல்வேறு அரும்பொருட்களை கண்காட்சியில் அமைத்திருக்கின்றார்கள். இந்த அருங்காட்சியகத்தின் ஊழியர்களின் அன்பான சேவையும் மனதைக் கவரத்தவறவில்லை.

ஜெர்மனியில் காணவேண்டிய ஒரு முக்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அருங்காட்சியகம் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த அருங்காட்சியகம் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் https://www.unimuseum.uni-tuebingen.de/ என்ற  வலைத்தளத்தில் மேலதிக தகவல்கள் பெறலாம்.