Friday, March 31, 2017

82. டோஜஸ் அரண்மனை அருங்காட்சியகம், வெனிஸ், இத்தாலி

முனைவர் சுபாஷிணி
http://www.vallamai.com/?p=75942


வெனிஸ் நகரின் மிக முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று டோஞஸ் அரண்மனை. இத்தாலிய மொழியில் இது Palazzo Ducale எனக் குறிப்பிடப்படுகின்றது. கி.பி.9ம் நூற்றாண்டில் ஒரு அரண்மனையாக உருவாக்கம் கண்ட இந்த அரண்மனை தொடர்ச்சியான தாக்குதல்களால் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தற்சமயம் மிஞ்சி இருக்கும் பகுதி என்பது 14ம் மற்றும் 15ம் நூற்றாண்டு வெளிப்புறக் கட்டிடத்தின் ஒரு பகுதி மட்டுமே. மெல்லிய இளஞ்சிவப்பு நிற பளிங்குக்கற்களால் வடிவமைக்கப்பட்ட கோத்திக் அமைப்பிலான கட்டுமானம் கொண்டது இக்கட்டிடம். இவ்வகை அமைப்பு என்பது அக்காலத்து வழமையான கட்டிட அமைப்பிற்கு ஒரு மாற்றாக அமைந்தது.


வெனிஸ் நகர அமைப்பின் ஆரம்பக்காலம் தொட்டு இந்த டோஜஸ் அரண்மனை அரசாங்க அலுவலகமாகவே செயல்பட்டு வந்தது. அது மட்டுமன்றி இதே கட்டிடத்திற்குள் தான் நீதிமன்றமும் வெனிஸ் பிரபுவின் தங்கும் இடமும் அமைந்திருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் பல நூற்றாண்டுகளுக்கு இந்த ஒரு அரண்மனை மட்டும் தான் வெனிஸ் நகரில் அரண்மனை என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தின் உட்பகுதி சுவர் சித்திரங்கள் பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டவை. உலக கலைக் கூடங்களின் உயர் தரக் கலைக்கு உதாரணமாக இந்தக் கட்டிடத்தின் உட்பகுதியில் அமைந்திருக்கும் பிரமாண்டமான ஓவியங்களும் சித்திரங்களும் அமைந்திருக்கின்றன .


கண்காட்சியும் அருங்காட்சியகமும் அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும் முன் நாம் நுழைவாயிலைக் கடந்து செல்வோம். இது 15ம் நூற்றாண்டு கோத்திக் வகை முகப்பு. கோத்திக் அமைப்பு என்றாலே நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் அமைந்த ஒரு அமைப்பு எனக் கொள்ளலாம். உள்ளே நுழைந்த உடன் நாம் அருங்காட்சியகத்தை வந்தடைந்து விடுவோம். இந்த அருங்காட்சியகப் பகுதியில், முன்னர் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களின் போது சேதமடைந்த இந்த அரண்மனையில் தூண்கள், பகுதிகள், ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அப்படி சேதமடைந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான சிற்பங்களின் சிதறிய பகுதிகளும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் மட்டுமன்றி இன்று வருகையாளர்களுக்காகத் திறந்து விடப்படும் அனைத்துப் பகுதிகளுமே சிற்பங்களும் வரலாறுகளும் நிறைந்து ஒவ்வொரு பகுதியும் ஒரு அருங்காட்சியகமாகவே திகழ்கின்றன.​கட்டிடத்தின் முன் பகுதியில் ஆதாம் ஏவாள் ஆகிய இருவரின் சிலையும் நுண்ணிய முறையில் பளிங்கில் செய்யப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இதனை அந்தோனியோ ரிஸோ என்னும் சிற்பி வடிவமைத்தார். அரிய ஒரு சிற்பம் இது. ​ இன்னொரு பக்கத்தில் Torture Chamber என அழைக்கப்படும் சித்ரவதை அறை உள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் நபர்கள் இங்கே தான் விசாரிக்கப்படுவார்களாம். எவ்வகை விசாரணை என்பது இந்த அறையின் பெயரை வாசிக்கும் போதே நம்மால் ஊகித்துக் கொள்ள இயலும் தானே?


இதனைப் பார்த்து விட்டு வரும் போது நம்மைப் பிரமாண்டத்தில் ஆழ்த்தும் சுவர் சித்திரங்கள் நிறைந்த கூடங்கள் வரவேற்கும்.அதில் Sala del Maggior Consiglio என அழைக்கப்படும் மைய அறை சிறப்பு வாய்ந்தது. மலைத்துப் போய் நம்மை நிற்க வைக்கும் வகை ஓவியங்கள் இவை. உலகின் மிகப்பெரிய அரண்மனைச் சுவர் சித்திரம் என அறியப்படும் தி பேரடைஸ் (The Paradise) இங்கு தான் அமைந்துள்ளது. 1557ம் ஆண்டு தொடர்ச்சியாக ஒன்றின் பின் ஒன்றாக இந்த அரண்மனை தீக்கிரையானது. தீயினால் சேதமடைந்த பகுதியைப் புதுப்பிக்கும் சமயத்தில் புதிய சுவர்ச்சித்திரங்களை அரண்மனையில் நிறைக்க வேண்டும் என வெனிஸ் பிரபு முடிவெடுத்து அந்த நூற்றாண்டின் இத்தாலியின் தலைசிறந்த ஓவியக்கலைஞரான டிண்டொரெட்டோ (Tintoretto) அவர்களுக்கு இப்பணியை வழங்கினார். சொர்க்கம் என்ற பொருளில் அந்தப் பிரமாண்டமான சுவரில் நூற்றுக்கணக்கான உருவங்களை நிறைத்து சொர்க்கலோகத்தில் இறையடியார்களும் தேவதைகளும் உலா வருவது போல இந்தச் சித்திரத்தை வடிவமைத்தார். ஆண்டுகள் ஐநூறைக் கடந்தாலும் இன்றளவும் உலகளாவிய அளவில் பேசப்படும் ஒரு கலைப் பொக்கிஷமாக இந்த ஓவியம் காட்சியளிக்கின்றது.


இந்த அரண்மனையின் கீழ்த்தளம் வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. அதில் ஒரு பகுதி சிறைச்சாலையாக கி.பி16ம் நூற்றாண்டு தொடக்கம் இயங்கி வந்துள்ளது. இந்தச் சிறைச்சாலைப் பகுதியில் கொடுமையான தவறிழைத்தவர்கள் சிறை வைக்கப்படவில்லை. சிறிய திருட்டுக்கள், ஏமாற்றுத்தனம் செய்தோர் ஆகியோர் தண்டனை வழங்கப்பட்டு இங்கே கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர் என்ற செய்தியையும் இங்கே அறிய முடிகின்றது. மிகக் குறுகலான அறை. செல்லும் பாதையும் குகைக்குள் செல்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி விடும். ஒவ்வொரு அறையும் சிறிதாக, உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நானூறு வருடம் பழமை வாய்ந்த சிறைச்சாலை இன்றும் சேதமடையாமல் நல்ல நிலையில் இருக்கின்றது. இதில் என்ன வியப்பென்றால், மேல் தளத்தில் வெனிஸ் நகரை ஆளும் பிரபு தங்கியிருக்க, கீழ்த்தளத்தில் சிறைச்சாலைக் கைதிகள் இருந்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வித்தியாசமாகத்தான் இருக்கின்றது.


இதே அரண்மனையின் ஒரு பக்கத்தில் அரசின் ஆயுதக் கிடங்கு உள்ளது. கி.பி.14ம் நூற்றாண்டு தொடங்கி இந்த ஆயுதக்கிடங்கு பயன்பாட்டில் இருக்கின்றது. வாள், துப்பாக்கி வகைகள், பீரங்கிகள், குதிரைப்படையினரின் இரும்புக் கவசங்கள், பல்வேறு வகையான தாக்கும் கருவிகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இந்த ஆயுதக் கிடங்கில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. இதனைப் பேர்க்கும் போது வருகையாளர்களுக்கு இப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த போர்களின் நினைவு நிச்சயம் வந்து செல்லும்.


டோஜஸ் அரண்மனை வெனிஸ் நகரின் ஒரு வரலாற்றுச் சின்னம். அருங்காட்சியகம், அரசாங்கக் கட்டிடம், பிரபுவின் மாளிகை, சிறை, ஆயுதக்கிடங்கு கலைக்கூடம் என வெவ்வேறு வகையில் பல பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியக்கட்டிடமாக இந்த அரண்மனை திகழ்கின்றது. இதன் உள்ளே சென்று அனைத்து விசயங்களையும் நேரில் பார்த்து, ரசித்து, அதன் வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டு குறிப்பெடுத்து வருவதற்கு நிச்சயம் ஒரு நாள் தேவைப்படும். இந்த அருங்காட்சிகத்தின் உள்ளே செல்ல வசூலிக்கப்படும் கட்டணம், மற்றும் சிறப்புக் கண்காட்சிகள் பற்றி அறிந்து கொள்ள இதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் நீங்கள் அலசலாம். http://palazzoducale.visitmuve.it/en/home/ . 

Wednesday, March 22, 2017

81. கடலாய்வு அருங்காட்சியகம், மோனாக்கோ

முனைவர் சுபாஷிணி
http://www.vallamai.com/?p=75685


ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லையென்றாலும் அதன் சட்டதிட்டங்களை ஏற்ற ஒரு  நாடு  மோனாக்கோ. ஒரே நாளில் சுற்றி வரக்கூடிய வகையில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்று தான் இது. உலகிலேயே இரண்டாவது சிறிய நாடு இது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. மோனாக்கோ நாட்டை ஒரே நாளில் ஒருவர் சுற்றிப்பார்த்து வந்துவிடலாம். அதிவேக கார் ரேஸ் பந்தயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மோனாக்கோவைப் பற்றித் தெரிந்திருக்கலாம். ஏனெனில், இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் க்ரான் ப்ரீ கார் பந்தயம் உலகளாவிய அளவி` மிகப் பிரபலமான ஒன்று. அதுமட்டுமல்ல. மோனாக்கோ கேசினோ எனப்படும் சூதாட்ட விளையாட்டிற்குப் புகழ் பெற்ற ஒரு நாடும் கூட. Never Say Never Again, Glden Eye போன்ற ஜேம்ஸ் போண்ட் திரைப்படங்கள் மோனாக்கோவின் கேசினோவில் எடுக்கப்பட்டவை தாம்.மோனாக்கோவை ஆட்சி செய்பவர் இளவரசர் 2ம் ஆல்பெர்ட். ப்ராசின் தென் கோடிப் பகுதியில் மெடிட்டரேனியன் கடலை ஒட்டியவாறு பக்கத்தில் இத்தாலிக்கு எல்லை நாடாக அமைந்திருக்கின்றது மோனாக்கோ. சிறிய நாடுதான் என்றாலும் கூட பிரம்மாண்டமான அருங்காட்சியகங்கள் இங்கே இருக்கின்றன என்பது ஒரு தனிச் சிறப்பு. அதில் கடலாய்வு அருங்காட்சியகத்திற்கு நான் செல்லும் வாய்ப்பு 2009ம் ஆண்டு அமைந்தது. கடலாய்வுகளைப் பற்றிய தகவல் களஞ்சியங்களின் சேகரமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது.இளவரசர் முதலாம் ஆல்பெர்ட்டினால் 1910ம் ஆண்டு இந்தக் கடலாய்வு அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் கட்டிடம் பாரோக் கலைவடிவத்தில் கட்டப்பட்டது. கடலை ஒட்டிய வகையில் அமைக்கப்பட்ட கோட்டை போன்ற வடிவிலான அமைப்புடன் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. Temple of the Sea என ஆங்கிலத்தில் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது இந்த பிரமாண்டமானக் கட்டிடம்.

கடல் வாழ் உயிரினங்களில் பல வகையானவை இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மீன்கள், கணவாய்கள், விதம் விதமான கடல் உயிரினங்கள் என இந்த அருங்காட்சியகம் விரிவான உயிரினங்களைக் காட்சிப்படுத்துகின்றது. அதுமட்டுமன்றி கடல் சார்ந்த விசயங்களை விளக்கும் வகையிலும் இங்குள்ள கண்காட்சிப் பொருட்கள் அமைந்துள்ளன. உதாரணமாக மாதிரி கப்பல்கள், கடல் உயிரினங்களின் எலும்புக் கூடுகள், கப்பல்கள், படல் பயணங்களின் போது மாலுமிகள் பயன்படுத்தும் துணைக்கருவிகள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.இக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள அக்குவாரியத்தில் கடல்வாழ் தாவரங்கள், மீன் வகைகள்,கடல் குதிரைகள், ஆமைகள், ஏனைய கடல் உயிரினங்கள் என்பவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இக்கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு பயணியின் பயணப்பெட்டி என்ற பொருளில் அமைந்த கண்காட்சி இடம்பெறுகின்றது . இதில் இந்த அருங்காட்சியகத்தைத் தொடக்கிய இளவரசர் முதலாம் ஆல்பெர்ட் அவர்களின் கடல் பயணங்கள் தொடர்பான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இளவரசர் முதலாம் ஆல்பெர்ட்ட்டின் கூற்றுப்படி, மனிதர்கள் கடலை அறிந்து, அதனை நேசித்து அதனைப் பாதுகாக்க வேண்டும். தனது வாழ்வின் பெரும்பகுதியை இளவரசர் முதலாம் ஆல்பர்ட் கடலாய்வுகளிலேயே செலவிட்டார். ராணுவத்தில் சில ஆண்டுகள் சேவை செய்த பின்னர் தனது நெடுந்தூரக் கடல் ஆய்வுப் பயணங்களை அவர் 1885ம் ஆண்டு தொடங்கி மேற்கொண்டார். தனது நெடுங்கால ஆய்வுகளின் அடிப்படையில் சேகரித்த ஆவணங்களையெல்லாம் கொண்டு இந்தப் பிரமாண்டமான கடலாய்வு அருங்காட்சியகத்தை அவர் உருவாக்கினார்.க்ரேண்ட் ப்ரீ அதிவேகக் கார் பந்தயம் நடைபெறும் நாளிலும் டிசம்பர் 25ம் தேதி தவிர்த்து வருடத்தில் ஏனைய எல்லா நாட்களும் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டிருக்கும். உள்ளே சென்று காண்பதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மோனாக்கோ நாட்டிற்குச் செல்பவர்கள் கேசினோவின் பக்கத்திலேயே அமைந்திருக்கும் இந்தப் பிரம்மாண்டமான அருங்காட்சியகக் கட்டிடத்தை தவறவிட வாய்ப்பில்லை. மோனாக்கோவில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் என்பதோடு ஆய்வில் ஈடுபாடு கொண்டோருக்கு தேவையான தகவல்களை வழங்கங்கூடிய கடல் சார் ஆய்வுக் களஞ்சியம் இந்த அருங்காட்சியகம்.

Monday, March 20, 2017

80. அனைத்துலக செய்தித்தாள் அருங்காட்சியகம், ஆகன், ஜெர்மனிஉலகச் செய்திகளை உடனுக்குடன் வாசித்தால் தான் நம்மில் பலருக்கு அன்றாட ​கடமைகளைச் செய்த மன திருப்தி ஏற்படும். அந்த அளவிற்கு நமது சிந்தனையானது உலக விசயங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் இணைந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்றைய சூழலில் உலகச் செய்திகளாகட்டும், உள்ளூர் செய்திகளாகட்டும். எதுவாகினும் செய்தித்தாட்களை வாசிக்கின்றோமோ இல்லையோ. இணையத்தின் வழியாகச் செய்தி ஊடகங்கள் பலவற்றிலிருந்து உலக நடப்புக்களை அறிந்து கொள்வது போலவே சமூக ஊடகங்களின் வழியாகவும் தகவல் பரிமாற்றம் நிகழ்வதை நாம் சாத்தியப்படுத்தியிருக்கின்றோம். இதுதான் இன்றைய தகவல் தொழில்நுட்பம் அளித்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு.

உலக நாடுகள் சிலவற்றில் செய்தித்தாட்களின் சேகரிப்புக்கள் கொண்ட அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. சில, தனியார் ஏற்படுத்தியிருக்கும் அருங்காட்சியகங்கள். ஏனைய சில அரசாங்கமே அமைத்த அருங்காட்சியகங்களாக உள்ளன. ஜெர்மனியின் ஆகன் நகரிலும் ஒரு அனைத்துலக செய்தித்தாட்கள் அருங்காட்சியகம் உள்ளது. இது தனியார் ஒருவரின் சேகரிப்பில் உருவான பிரமாண்டமான சேகரிப்புக்கள் நிறைந்த ஒரு அருங்காட்சியகம்.

ஆகன் நகரம் ஜெர்மனியின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இதன் முக்கிய வரலாற்றுச் சிறப்பு இது பேரரசர் கார்ல் அவர்கள் வாழ்ந்த நகர் என்பது தான். பேரரசின் தலைநகராக முன்னர் இருந்ததன் அடையாளமாக இன்றும் இங்குள்ள பெரிய தேவாலயத்தில் மட்டுமல்ல இங்குள்ள பல மூலைகளிலும் பேரரசர் கார்ல் அவர்களை நினைவு கூறும் சின்னங்களைக் காணலாம்.
இந்த அனைத்துலக செய்தித்தாட்கள் அருங்காட்சியகம் ஆகன் பழைய நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கின்றது. அதாவது நகரின் மாநகர மையம் அமைந்துள்ள Pontstrasse சாலையிலேயே கட்டிடங்களின் வரிசையிலேயே ஒரு கட்டிடமாக இருக்கின்றது. ஆகன் நகரிலேயே பிறந்தவரான திரு.ஓஸ்கார் ஃபோன் ஃபோர்க்கென்பெக் (1822 - 1898) அவர்களது சேகரிப்புக்கள் தான் இங்குள்ளவை. உள்ளூர் சேகரிப்புக்களோடு அவரது பல்வேறு பயணங்களின் போது அவர் சேகரித்து வந்த செய்தித்தாட்களின் ஏடுகள் இங்கே மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. உலகின் மிக அதிகமான செய்தித்தாட்களின் சேகரிப்பு உள்ள ஒரு அருங்காட்சியகமாகவும் இது திகழ்கின்றது என்பது ஒரு சிறப்பல்லவா? அதாவது, 17ம் நூற்றாண்டு தொடங்கி 21ம் நூற்றாண்டு வரையிலான செய்தித்தாட்கள் 200,000க்கும் மேற்பட்டவை இங்கிருக்கின்றன.
​இங்கே உள்ளே நாம் நுழையும் போது முதலில் நம்மை வரவேற்பது பவுல் ஜூலியஸ் ரோய்ட்டர் அவர்களது பெரிய புகைப்படமும் அவரைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்புமாகும்.​ ரோய்ட்டர் என்ற பெயரைச்க் கேட்டாலே உலகம் முழுமைக்கும் செய்தி அனுப்பும் ரோய்ட்டர் சேவை நம் நினைவுக்கு வரலாம். அந்தச் சேவையை உருவாக்கிய நிறுவனத்தை உருவாக்கியவர் தான் திரு. ரோய்ட்டர். இவர் முதலில் 1850ம் ஆண்டு ஜெர்மனியின் இந்த ஆகன் நகரில் தனது செய்தி சேகரித்துப் பரிமாறும் ஒரு சோதனை முயற்சியைத் தொடங்கி ரோய்ட்டர் நிறுவனத்தை உருவாக்கினார்.பின்னர் அடுத்த ஆண்டு, 1851ல் ரோய்ட்டர் ஏஜென்சியை லண்டன் நகரில் விரிவாக்கினார். ஆரம்பத்தில் புத்தக வெளியீட்டாளர்களாகவும் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரவலாக்கும் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வந்த ரோய்ட்டர் ஏஜென்சி பின்னர் ரோய்ட்டர் டெலிக்ராம் நிறுவனமாக 1851ம் ஆண்டிலேயே விரிவடைந்தது. இந்த நிறுவனத்துக்கு முதல் உறுப்பினராக லண்டன் மோர்னிங் அட்வடைசர் பத்திரிக்கை அமைந்தது. பின்னர் படிப்படியாக இந்த நிறுவனத்தின் சேவையை உலகளாவிய நிலையில் பல பத்திரிக்கைகள் பயன்படுத்தத் தொடங்கின. இந்தச் செய்திகளை வாசித்தவாறே நாம் இந்த அருங்காட்சியகத்தின் ஏனைய பகுதிகளுக்குச் செல்லலாம்.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப்பொருட்கள் ஐந்து வெவ்வேறு வகைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.
முதலில் செய்தி சேகரிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள், நிருபர்களின் செயல்பாடுகள் என்பது பற்றி விளக்கும் காட்சிப்பொருட்கள் உள்ளன. இந்தப்பகுதியில் வருகையாளர்கள் ஒரு நிகழ்வு என்பது எவ்வாறு ஒரு செய்தியாக வடிவமைக்கப்படுகின்றது என்ற விசயத்தை அறிந்து கொள்ளலாம்.


அடுத்ததாகச் செய்தி ஊடகங்களின் பண்பு, பலன்கள் ஆகியவற்றோடு அவற்றினால் ஏற்படும் சமுதாயத் தாக்கங்கள் யாவை என்பதை விளக்கும் காட்சிப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கடுத்தார்போல எழுதுவதும் வாசித்தலும் என்பது பற்றிய வரலாற்றுப் பார்வையில் அமைந்த காட்சிப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கடுத்து, செய்திகளில் உள்ள நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பும் விசயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செய்தி தயாரிப்பில் உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் என்றும், எவ்வாறு முக்கியச் செய்திகள் திரிக்கப்பட்டு அவை மக்களைச் சென்றடைகின்றன என்ற விசயத்தைத் தக்க ஆதாரங்களோடு காட்சிப்படுத்தியிருக்கின்றனர். மிகச் சுவாரசியமான தகவல்கள் இப்பகுதியில் உள்ளன. இறுதியாக வருவது செய்தி ஊடகங்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதைக் காட்டும் கண்காட்சிப் பகுதி.

இந்தக்காட்சிப்பொருட்கள் மட்டுமன்றி இங்குள்ள செய்தித்தாட்களின் சேகரிப்புக்களும் வருகைதருவோர் பார்வையிடக் கூடிய வகையில் உள்ளன.இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும் போது சிறிய கட்டிடத்திற்குள்ளே நுழைகின்றோமோ என்ற சிந்தனை வந்தாலும் இங்குள்ள எல்லாப் பகுதிகளையும் பார்த்து முடித்து வருவதற்குள் குறைந்தது மூன்று மணி நேரங்களாவது ஆகிவிடும். வரலாற்றுப்பிரியர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மிகப்பல தகவல்களை வழங்கக்கூடிய ஒரு அனைத்துலக அருங்காட்சியகம் இது. ஜெர்மனிக்கு வருபவர்கள், அதிலும் குறிப்பாக ஆகன் நகருக்கு வருவோர் தவறாமல் இந்த அருங்காட்சியகத்தையும் சென்று பார்த்து வர மறக்க வேண்டாம். 

Friday, March 10, 2017

79. ​”கவ் போய்” அருங்காட்சியகம், ஃபோர்ட் வொர்த், டெக்சாஸ், வட அமெரிக்கா

           

”கவ் போய்” (Cow Boy) படங்களை இளைமை காலத்தில் பார்த்து அவர்கள் ஓட்டி வரும் குதிரையும், வேகமாகப் பறக்கும் அக்குதிரையின் மேல் அமர்ந்து வரும் கதாநாயகர்களையும் பார்த்து வியந்திருக்கின்றேன். என் மனதில் அவர்கள் பெரிய வீரர்களாக அச்சமயத்தில் பதிந்திருந்தார்கள். பின்னர் Cow Boy எனப்படுவோர் மாடுகளைப்பராமரிக்கும் இளைஞர்கள் என்பதும் அமெரிக்காவின் டெக்சாஸ் போன்ற வறண்ட நிலப்பகுதிகளில் குதிரைகளில் சென்று தங்கள் கால்நடைகளான மாடுகளை வளர்ப்போர் என்பது பற்றியும் அறிந்து கொண்ட பின்னர் ”கவ் போய்”கள் பற்றிய பிரமிப்பு என்பது கறைந்து போனது. இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு வார காலம் நான் டெக்சாஸ் மாநிலம் சென்றிருந்த போது அங்கே டல்லாஸ் நகருக்கு அருகே உள்ள Fort Worth என்ற சிறு நகருக்கும் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அது டெக்சஸ் நகரின் பழமையான வாழ்வியல் கூறுகளை இன்றும் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கிராமியச் சூழலை மையமாக வைத்து காட்சியளிக்கும் ஒரு சுற்றுலா தளம். அங்கு சென்றிருந்த போது டெக்சாஸ் கவ்போய் அருங்காட்சியகம் ஒன்று இருக்கின்றது என்று அறிந்த போது அங்கு சென்று Cow Boyகள் பற்றி தகவல்கள் அறிந்து வந்தேன்.


அமெரிக்காவிற்கு ”கவ் போய்”கள் கலாச்சாரம் என்பது ஸ்பெயின் நாட்டிலிருந்து தான் வந்தது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த பின்னர் ஐரோப்பாவிலிருந்து அதிலும் குறிப்பாக ஸ்பெயினிலிருந்து ஏராளமானோர் அமெரிக்காவிற்கு குடியேறினர். ஸ்பெயின் நாட்டிலிருந்து சற்று மாறுபட்ட தட்பவெட்ப நிலை என்றாலும், அவர்கள் தங்கள் வாழ்வில் இடம்பிடிக்கும் பல அம்சங்களை இங்கே தொடர்ந்தனர். அதில் முக்கிய அம்சமாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலும் அடங்கும்.18ம் நூற்றாண்டில் ஸ்பெயினிலிருந்து அமெரிக்காவின் இன்றைய தென் அமெரிக்காவின் இன்றைய மெக்சிகோ மற்றும் வட அமெரிக்காவின் ஃப்ளோரிடா ஆகிய பகுதிகளுக்கு குடியேறிய மக்கள் மாடுகளையும் குதிரைகளையும் கப்பல்களின் மூலம் கொண்டு வந்து இறக்குமதி செய்து புதிய குடியேற்றத்திற்கு வித்திட்டனர். ஏற்கனவே உள்ளூரில் வசித்த மக்களின் வாழ்வியல் கூறுகளிலிருந்து இவர்களது விவசாயக்கலை என்பது மாறுபட்டிருந்தது. தங்கள் குடும்பத்திற்கு மட்டுமே என கால்நடைகளை வளர்த்து வந்த ஆதிவாசி மக்களிடமிருந்து மாறுபட்ட நிலையில் இவர்கள் பால் உற்பத்திக்காகவும், மாட்டிறைச்சி விற்பனைக்காகவும், மாட்டின் தோலினால் செய்யப்படும் பொருட்களின் உற்பத்திக்காவும் என பெருவாரியான வணிக நோக்கத்துடனான முயற்சிகளை மேற்கொண்டனர். இப்படி உருவானவர்களே ”கவ் போய்”கள். இவர்களின் உடையலங்காரமும் தோற்றமும் இவர்களை வீரர்களைப் போல மக்கள் மனதில் பிரமிப்பை ஏற்படுத்தியது. ”கவ் போய்”கள் தங்கள் தொழில் என்ற ரீதியில் மட்டும் எண்ணாமல் வீர விளையாட்டுக்களில் ஈடுபடுதல், வித்தியாசமான தொப்பிகள், தோல் ஆடைகளை அணிதல், கவர்ச்சிகரமான உபகரணங்களை உருவாக்குதல், அவற்றைத் தமது அன்றாட தேவைகளுக்குப் பயன்படுத்துதல் என்ற வகையிலும் இவர்கள் மற்றவர்களின் கவன ஈர்ப்பைப் பெற்றனர்.டெக்ஸஸ் லோங்ஹோர்ன் (Texas Longhorn) என்னும் நீளமான பெரிய வளைந்த கொம்புகளைக் கொண்ட மாடுகள் ஸ்பெயினிலிருந்து 17, 18ம் நூற்றாண்டுகளில் மெக்சிக்கோவிற்கு கொண்டுவரப்பட்டவை. இன்றைய டெக்சாஸ் மாநிலம் முன்னர் மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். வேறு வகை மாடுகள் இன்று டெக்சஸ் மாநிலத்தில் அதன் பால், மற்றும் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வளர்க்கப்பட்டாலும், கலாச்சார நிகழ்வுகளில் இந்த டெக்ஸஸ் லோங்ஹோர்ன் வகை மாடுகள் தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு காட்சிக்கும் ஊர்வலங்களுக்கும் அழைத்து வரப்படுகின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் மிகச்சிறப்பான இரண்டு விசயங்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். முதலாவது, இங்குள்ள வெவ்வேறு வகையான குதிரை வண்டிகள். விவசாயம் இப்பகுதியில் செழித்து விரிவடைய ஆரம்பித்த பின்னர் மக்கள் வாழ்வியல் நிலை மேம்பாடு அடையத்தொடங்கியது. இந்த சூழலில் ஓரிடத்திலிருந்து காய்கறி கொண்டு சென்று விற்பனை செய்யவும், பால் வண்டிகளில் ஏற்றிச் சென்று விற்பனை செய்யவும், தபால் தலை கொண்டு செல்லவும், மக்கள் போக்குவரத்துக்காகவும் என வெவ்வேறு வகையிலான வண்டிகளை இங்கு மக்கள் உருவாக்கியிருக்கின்றார்கள். இந்த வண்டிகளில் பெரும்பாலானவை குதிரைகள் பூட்டி ஓட்டப்படுபவையே. சில, மனிதர்களே கைகளால் இழுத்துச் சென்று விற்பனை செய்யும் வகையில் அமைந்தவை. விவசாயிகள் தங்கள் கற்பனைத்திறனையும் கைத்தொழில் திறனையும் கொண்டு தங்கள் விளைப் பொருட்களை சந்தை செய்ய மேற்கொண்ட முயற்சிகளின் வெளிப்பாடாக இந்த வண்டிகளைக் காண முடிகின்றது. இத்தனை வகை வண்டிகளா என இந்த அருங்காட்சியகம் வருவோரை வியக்க வைக்கின்றது இங்குள்ள வண்டிகள் சேகரிப்பு.இதனை அடுத்து ”கவ் போய்”கள் தங்கள் ஓய்வு நேரத்தில் தயாரித்த வெவ்வேறு வகை தோல் கருவிகள், ஆடைகள், மற்றும் அவர்களது இசை ஆர்வத்தினால் அவர்கள் உருவாக்கிய பாடல் ஆல்பம், அவர்களின் வீர விளையாட்டுகள் தொடர்பான புகைப்படங்கள், விருதுகள், பரிசுகள் எல்லாம் வரிசையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியைச் சொல்லலாம். Texas Cow Boy Hall of Fame எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பகுதியில் இத்தகைய பல ”கவ் போய்”களின் சாதனைகளைக் கண்டு வியக்கலாம்.இந்த அருங்காட்சியகம் தொடர்பான செய்திகள், இது அமைந்திருக்கும் இடம், கட்டணம், திறந்திருக்கும் நேரம், சிறப்பு கண்காட்சிகள் என எல்லா விசயங்களையும் http://texascowboyhalloffame.org/contact.php என்ற வலைப்பக்கத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.​