Monday, September 30, 2013

8. வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லம் அருங்காட்சியகம், ஒட்டப்பிடாரம், தமிழகம், இந்தியா.


உலகின் வெவ்வேறு சில நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களைப் பார்த்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிப்பொருட்களின் தரங்களையும் பார்த்த அனுபவம் உள்ள எனக்கு இந்த அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருட்கள் ஒரு ஆரம்பப்பள்ளியில் இருக்கக்கூடிய தகவல் சுவரொட்டி போல இவை காட்சியளிப்பதைப் பார்த்த போது உண்மையில் மன வருத்தமே தோன்றியது. கண்காட்சி மேளாண்மை-பராமரிப்பு என்பது ஒரு தனிக் கலையாக உருவாகிவிட்ட காலம் இது.  புதிய தொழிற்நுட்பங்களின் துணை கொண்டு தரம் வாய்ந்த காசிப்பொருட்களை அமைக்கக்கூடிய வாய்ப்பு தற்கால நிலையில் ஒரு எட்டாக் கனியல்ல.  ஆனால் அதற்கான சிந்தனையும் முயற்சியும் இருக்கின்றதா என்பதே கேள்வி.  இங்கு பார்த்தபோது காட்சிப்பொருட்களின் தரம் என் எதிர்ப்பார்ப்பிற்கு ஏமாற்றத்தை அளித்தது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ஒரு வகையில் இந்தச் சுதந்திரப் போராட்ட தியாகியின் பிறந்த இல்லத்தை நிர்வகித்து அவரது ஞாபகம் மக்கள் மத்தியில் மறையாமல் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி கூற நினைக்கும் என் மனம் அதே வேளையில் இன்னமும் தகுந்த தரத்துடன் இக்காட்சிப் பொருட்களைத் தயார்படுத்தி வைத்தால் என்ன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

வ.உ.சி அவர்கள் தமிழக சரித்திரத்திலும் தமிழர் தம் வாழ்விலும் மறக்க முடியா அங்கம் வகிப்போரில் ஒருவர்.  அம்மனிதரின் நினைவாக இன்று காட்சியளிக்கும் இந்த நினைவு இல்லத்தில் உள்ள அறிக்கைகளைத் தரமான காகிதங்கள் கொண்டு தயாரித்து அதற்கு ப்ரேம் போட்டு பாதுகாத்து வைக்கலாம்.  அவரது நூல்களின் படிவங்களை ஒரு கண்ணாடி அலமாரியில் காட்சிக்கு வைக்கலாம். அவரது கையெழுத்தில் அமைந்த ஆவணங்களைப் பத்திரப்படுத்தி காட்சிக்கு வைக்கலாம்.  அவரது உருவப்படங்களைக் கொண்டு உருவாக்கிய ஒரு டாக்குமெண்டரி திரைப்படத்தை வருவோர் காணும் வகையில் ஒரு தொலைக்காட்சியைப் பொருத்தி அதில் ஒலிபரப்பலாம். அவரது சேவையைப் பாராட்டிப் பேசியோரின் பேச்சுக்களின் ஒலிப்பதிவுகளை அங்கே வருவோர் கேட்டு பயன்பெற ஏற்பாடு செய்யலாம்.  இவற்றை செய்வதற்கு மிக அதிகமான பொருளாதாரம் தேவை என்பதில்லை. மனித முயற்சி இருந்தால் தற்கால கணினி, அச்சு தொழிற்நுட்பம் வழங்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இவற்றை எல்லாம் சாதிக்கலாம்.  வருங்காலத்தில் இவ்வகையில் இந்த அருங்காட்சியகம் புதுப் பொலிவு பெற்றால் நான் மிக அகம் மகிழ்வேன்.

உலகில் நிகழ்ந்த,  நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைவதே தனி மனித முயற்சிகள் தாம்.  தனி மனிதரின் ஆன்ம பலமும்,  ஆய்வுத் திறமும் சிந்தனையும் முயற்சியுமே உலகில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.  அத்தகைய்ச் பண்புடன் கூடியவர்களில் ஒருவராகத்தான் நான் வ.உ.சி அவர்களை நான் காண்கின்றேன்.


வ.உ.சி  வள்ளியம்மாளுடன் (2010)

அருங்காட்சியகத்தில் நான் பார்த்து எடுத்துக் கொண்ட குறிப்புக்கள் வழி அவரது குடும்பத்தினர் பற்றிய சில தகவல்களை நான் அறிந்து கொண்டேன்.  வ.உ.சி அவர்களின் முதல் மனைவியார் வள்ளியம்மை.  வள்ளியம்மை பிறகு இறந்து விட இவருக்கு இரண்டாம் திருமணமும் நிகழ்ந்தது.


வ.உ.சி  இரண்டாம் துணைவியாருடன்(2010)

வள்ளியம்மையுடனும் பிறகு அவரது மறைவுக்குப் பிறகு திருமணம் முடித்த இரண்டாம் மனைவியுடன்  இருப்பது போன்ற மூன்று படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.  இவை அக்கால சூழலில் செல்வந்தர்கள் வீட்டு ஆண் பெண்களின் ஆடை அலங்காரத் தன்மையை வெளிக்காட்டும் சிறந்த ஆவணங்கள்.  வணிக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று வக்கீலாகத் தொழில் புரிந்த சிதம்பரனாரின் மேன்மை பண்புகளை வெளிக்காட்டும் மிடுக்கான தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பதை இப்படங்களில் காண முடிகின்றது.


இறுதி ஊர்வலம் (2010)

சிதம்பரனார் நினைவு மண்டப அருங்காட்சியகத்தில் அவரது மறைவுக்குப் பின் அவருக்கு நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் உள்ளது.  அவரது அனைத்து சேவைகளையும் தெரிந்து அவரது இல்லத்திலேயே இருந்து உணர்ந்து இப்புகைப்படத்தைப் பார்க்கும் போது மனம் கலக்கம் கொள்வதை தடுக்கமுடியவில்லை.  இந்த இறுதி யாத்திரை புகைப்படத்தில் இவரது மகன்கள் வ.உ.சி. ஆறுமுகம், வ.உ.சி. சுப்பிரமணியம், வ.உ.சி. வாலேஸ்வரன்  ஆகியோர் இருப்பதாக இப்படத்தோடு உள்ள குறிப்பில் உள்ளது. இவர்களோடு இவரது நண்பர்கள் பெ.கந்தசாமி பிள்ளை, மாசிலாமணிப்பிள்ளை, பாபா ஜான் ஆகியோரும் இருப்பதாகவும் இந்தக் குறிப்பில் உள்ளது.

வ.உ.சி.  ஆங்கில ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடந்த மக்களின் சிந்தனையில் புத்துணர்ச்சியை ஊட்டியவர் என்பது மட்டும் அவரது பண்பு நலனுக்கு மதிப்பளிக்கும் ஒன்றாக அமைந்து விடவில்லை. அவரது தத்துவ ஞான விசாரணை,  தமிழ்க்கல்வி,  ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக்கத்திற்கு தமிழ் நூற்களைப் புதிய வடிவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பு ஆகியவை அவரைப் பற்றிய நம் சிந்தனையை மென்மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதாக அமைகின்றது.  வ.உ.சி அவர்கள் தமிழுக்கு நல்கிய தம் இலக்கியப் பங்களிப்பையும் இனி காண்போம்.

அவர் எழுதி வெளி வந்த நூல்கள்:


 • மெய்யறிவு
 • மெய்யறம்
 • எனது பாடல் திரட்டு
 • வ. உ.வி.கண்ட பாரதி
 • சுயசரிதை


இவர் மொழி பெயர்ப்பு செய்த நூல்களின் பட்டியல்:

 • மனம் போல வாழ்வு
 • அகமே புறம்
 • வலிமைக்கு மார்க்கம்
 • சாந்திக்கு மார்க்கம்


இவர் உரை எழுதியவையாக குறிப்பிடப்படும் நூல்களின் பட்டியல்:

 • சிவ ஞான போதம்
 • இன்னிலை
 • திருக்குறள்வ. உ.சி எழுதிய நூல்களில் இதுவரை வெளிவராத நூல்கள் பற்றியும் சில தகவல்கள் இதோ.

1. சிவ மதம்
2. விஷ்ணு மதம்
3. புத்த மதம்
4. ஊழை வெல்ல உபாயம்
5. இஸ்லாம் மதம்
6. கிருஸ்து மதம்
7. மனித மதம்
8. முத்தி நெறி
9. The Universal Scripture
10. திருக்குறள்
11. திலக் மகரிஷி

உயர் குலச்சமூகத்தினருக்கும் வசதி வாய்ப்புக்கள் நிறைந்தோருக்கும் மட்டுமே  கிடைத்த கல்வி ஞானத்தை அச்சுப்பதிப்பாக்க முயற்சிகள் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தி கல்வியும் ஞான நூல்களும் இலக்கியங்களும் எல்லோருக்கும் கிடைக்கும் வகை செய்தன.  அந்த வகையில் 18, 19, 20ம் நூற்றாண்டுகளில் பல சேவையாளர்களின் முயற்சியில் அறிய பல தமிழ் நூல்கள் ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்தன.  வ.உ.சி அவர்களும் இந்த முயற்சியில் பங்கெடுத்துக் கொண்டவர் என்பது பலரும் அறியாத ஒன்று. அவரது முயற்சியில் பனை ஓலை சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூல்களின் பட்டியல்:

 • தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் (இளம்பூரனார் உரை)
 • தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (இளம்பூரனார் உரை)
 • சிவஞான போதம்


சைவ சித்தாந்த சாஸ்திரங்களின் தலையாயதும் குருபரம்பரையினர் போற்றிப் புகழ்ந்த மெய்கண்டாரின் சிவஞான போத நூலை முதன் முதலில் பனை ஓலைச் சுவடியிலிருந்து அச்சு வடிவத்திற்குக் கொண்டு வந்தவர் நம் சிதம்பரனார் என்பதை அறியும் போது அவரைப் போற்றாமல் இருக்க முடியுமா?   இத்தகைய இலக்கியப் பணிகள் மட்டுமின்றி இவர் பத்திரிக்கைகளையும் நடத்தியிருக்கின்றார். அவற்றின் பட்டியல்:

 • விவேக பாநு
 • தமிழ் நேஷனல்
 • பத்திரிகை
 • இந்து நேசன்


சைவ சித்தாந்த சபையில் முக்கியமான அங்கம் வகித்தும் சைவ சித்தாந்த தத்துவங்களில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்திருக்கின்றார் வ.உ.சி அவர்கள்.  தான் அச்சு வடிவத்தில் வெளியிட்ட சிவஞானபோத நூலுக்கு உரை எழுதுவதற்கு முன்னரே தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபையில் அவர் பல சைவ  சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் தொடர்பான உரைகளை தொடர்ந்து நிகழ்த்தி வந்துள்ளார்.   1934-35களில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த தினமணி நாளிதழின் வருஷ அனுபந்தத்தில் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சிவஞானபோத உரையின் முதல் வடிவை எழுதியிருக்கின்றார்.  பிறகு அந்த உரை, நூல் வடிவில் தூத்துக்குடி எட்டையபுரம் நெடுஞ்சாலையிலுள்ள குறுக்குச் சாலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.  இவரது சொற்பொழிவுகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு 'எனது அரசியல் பெருஞ்செயல்'  என்ற தலைப்பில்  அச்சு வடிவம் கண்டுள்ளது.  இது அவரது அரசியல் அனுபவங்களை எடுத்துக் காட்டும் சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படுகின்றது.

இந்த விவரங்கள் எல்லாம் இக்கால இளம் தலைமுறையினர் அறிந்து உணர்ந்து போற்ற வேண்டிய விஷயங்கள் அல்லவா? இவையெல்லாம் தமிழ் நாட்டு கல்விப்பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றனவா?  வ.உ.சிதம்பரனார் பற்றிய தகவல்கள் செக்கெழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்ற மேல் நோக்கானப் புகழ்ச்சியோடு மட்டுமே என நின்று விடாமல் இம்மாமனிதரின் பரந்த சிந்தனை,  உயர்வான வாழ்வியல் நெறி முறைகள்,  தன்னலமற்ற சேவை, ஞானப் பரப்பு,  அறிவின் ஆழம் ஆகியவை பாடத்திட்டத்தில் கூறப்படுகின்றனவா என்று கேட்டு அவை இல்லையென்று அறிந்து சோர்ந்து ஏமாற்றம் அடைகின்றேன்.   இவர் எழுதி அவர் காலத்திலேயே வெளியிடப்படாத நூல்கள் எப்போது அச்சு வடிவம் பெறும்? என நினைக்கும் போதே அதனைத் தேடி அவற்றை பதிப்பிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.  தமிழகத்தில் உள்ளோர் இப்பதிவினை வாசிக்க நேர்ந்தால் நான் குறிப்பிட்டுள்ள நூல்கள் கிடைக்கும் இடத்தை எனக்கு அறியத்தருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

வ.உ.சி அவர்களின் கையெழுத்தில் அமைந்த ஒரு கடிதம் ஒன்றினை எட்டயபுரம் இளசை மணியன் அவர்கள் எனக்கு இந்தப் பயணத்தின் போது காட்டினார். அதன் டிஜிட்டல் வடிவத்தை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைத்து வைத்துள்ளேன்.  இக்கடிதத்தைப் பார்க்க விரும்புவோர் http://tamilheritagefoundation.blogspot.de/2010/05/blog-post.html பக்கத்தில் காணலாம்.

இந்த சிந்தனைகளுடனேயே இங்கிருந்து புறப்படுவோம். வேறொரு நாட்டில் மற்றுமொரு அருஙகாட்சியகத்தை நாம் அடுத்து காண வேண்டுமல்லவா?

4 comments:

 1. உடனுக்குடனே கருவூலத்தில் வைத்துக்கொண்டேன். நன்றி, சுபாஷிணி. உலகளவில் அருங்காட்சியகங்களை அருமையாக மேற்பார்வை செய்தவர் டாக்டர் ஆனந்த குமாரசாமி. அம்மை சிங்களத்தவர். தந்தை ஆங்கிலேயர். மனத்தளவில் இந்தியர். வாழ்ந்தது அமெரிக்கா. அவருடைய முறைகளை நாம் ஏன் பின்பற்றவில்லை. பாண்டிச்சேரியில் எத்தனை நாட்கள் 'ரிப்பேர்' என்று மஹாகவி பாரதியாரின், பாவாணர் பாரதி தாசனின் நினைவில்லங்களை பூட்டி வைப்பர். அக்கறை இல்லாத சமுதாயமிது. இலாஹாபாத் நேரு ஸ்வராஜ்யபவன் அருங்காட்சியகத்தில் விஜயலக்ஷ்மி படங்கள் மாயமாக காணமல் போயின. ஏனென்றால், அவரை இந்திராகாந்திக்குப்பிடிக்காது. இந்த வினாவை என் பெண் எழுப்பியதும் பொறுப்பாளர் மழுப்பினார். விதீஷா அருமையான மதுராபுரி தொன்மைப்பொருள் சேகரித்து மூலையில் கடாசியது. புகழ் வாய்ந்த சாலார் ஜங்க் அருங்காட்சியகத்தை, அறங்காவலர் என்ற பொறுப்பின் பணியாக சீர்திருத்த முயன்றபோது, எதிர்ப்புகள். அருங்காட்சியகங்களை சரியாக பராமரிப்பதை தவிர்ப்பதில் அருங்காட்சியகங்க உள்குத்து விரோதிகளுக்கு ஆதாயம் உண்டு. அதான்.
  இன்னம்பூரான்

  ReplyDelete
 2. உண்மைதான். பெரிய அளவில் தொடர்ந்து விழிப்புணர்ச்சி வழங்கிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

  ReplyDelete
 3. [[[[இத்தகைய இலக்கியப் பணிகள் மட்டுமின்றி இவர் பத்திரிக்கைகளையும் நடத்தியிருக்கின்றார். அவற்றின் பட்டியல்:

  விவேக பாநு
  தமிழ் நேஷனல்
  பத்திரிகை
  இந்து நேசன்]]]]

  சுபாஷினி:
  இந்து நேசன் பத்திரிகையை வ.உ.சி. நடத்தினாரா? இருக்க முடியாது என்று தோன்றுகிறது. எங்கோ தவறு உள்ளது! மறுபடியும் பட்டியலை சரி பார்க்கவும்.

  ReplyDelete