Monday, August 29, 2016

69. தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (நிக்கலஸ் கோப்பர்னிக்கஸ்)

முனைவர்.சுபாஷிணி

உலக அருங்காட்சியகங்களில் மிக முக்கியமான அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம் பெறும் ஒன்று சுவிச்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள நேஷனல் மியூசியம். பொதுவான அருங்காட்சியக அமைப்பு அல்லது புது உலகக்கட்டிட கட்டுமான அமைப்பு, அல்லது கிரேக்க அக்ரோபோலிஸ் வகை கட்டுமான அமைப்பு என்றில்லாமல், பிரஞ்சு மறுமலர்ச்சிக்கால கட்டுமான வடிவில், ஒரு மாளிகையைப் போன்ற அமைப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குட்டி அரண்மனையோ என வியக்க வைக்கும் அழகிய கட்டிடம் இது. இக்கட்டிடத்தை 1898ம் ஆண்டில் கட்டுமானக் கலைஞர் குஸ்தாவ் கல் (Gustav Gull ) வடிவமைத்துள்ளார். இவர் 19ம் நூற்றாண்டின் சுவிச்சர்லாந்தின் புகழ்மிக்க கட்டிடக்கலைஞர்களில் ஒருவர். இக்கட்டிடம் தவிர்த்து சூரிச் நகரில் அமைந்திருக்கும் உரானியா கட்டிடம், லிண்டன்கோஃவ் மலை, மூன்ஸ்டர்ஹோவ், வைசன்கோவ் சூரிச், சூரிச் பிரேடிகெர் தேவாலயம் ஆகிய சூரிச் நகரின் மையக் கட்டிடங்களை வடிவமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.ஏனைய அருங்காட்சியகங்களைப் போன்றே, நிரந்தரக் கண்காட்சியும் சிறப்புக் கண்காட்சியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் கடற்பயணங்கள், புவியியல் துறை, வானவியல் ஆராய்ச்சி, புதுயுகத்தை உருவாக்கிய புத்தகப் பதிப்புத்துறை புரட்சி, என மட்டுமல்லாது ஐரோப்பிய கலை வளர்ச்சி, கிறிஸ்துவ சமய வரலாற்றுச் சின்னங்கள் என பல்வேறு வகையான சேகரிப்புக்களுடன் வருவோருக்குத் தகவல் களஞ்சியமாகத் திகழ்கின்றது இந்த அருங்காட்சியகம். இங்கிருக்கின்ற ஆவணங்களும் வரலாற்றுச் சின்னங்களும் உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவை என்பதால் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களைத் தனித்தனிப் பதிவாக விவரித்து எழுதுவது வாசிப்போருக்கு உதவும் எனக் கருதுகின்றேன்.அந்த வகையில் இந்தப் பதிவில் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ் அவர்களைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நிக்கோலஸ் காப்பர்னிக்கஸ் (1473 – 1543) இன்றைய போலந்து நாட்டில் பிறந்தவர். இலத்தீன், போலந்து, ஜெர்மனி, இத்தாலி, கிரீக் மொழிகளைப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். தனது கல்வியைப் போலந்து தலைநகரம் கிராக்கோவிலும், இத்தாலியிலும் கற்று பின்னர் வெகு தீவிரமாக வானவியல் துறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டவர். அவரது நூலான On the Revolutions of the Celestial Spheres மிகப்புகழ்பெற்ற நூல் என்பதுடன், இத்துறையில் மிக முக்கிய ஆய்வு நூல் என்ற சிறப்புத்தகுதியைப் பெறுவதும் இந்நூல்தான். பூமியைச் சுற்றி ஏனைய கோள்கள் வலம் வருகின்றன என ஏனையோர் நினைத்து ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்தபோது அச்சிந்தனைக்கு மாற்றாக, சூரியனைச் சுற்றித்தான் பூமியும் ஏனைய கோள்களும் வலம் வருகின்றன என்று கூறி வானவியல் ஆய்வில் முத்திரைப்பதித்தவர் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ்.புதிய சிந்தனைகளை உலகுக்குப் படைப்போரையும், மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போரையும் உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அவர்களின் கருத்துக்களையும் ஆய்வுகளையும் திட்டித்தீர்ப்பதும், குறைகூறி மறுப்பதும் உலக வரலாற்றில், அதிலும் குறிப்பாக கருத்துக்களத்திலும் இயல்பே. இதே நிலை இன்றும் தொடர்வதுதான். நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸின் ஆய்வு வெளியீடுகள் அவரது காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 17ம் நூற்றாண்டில் கலீலியோவின் ஆய்வுகளுக்குப் பின்னரும் ஜொகான்னெஸ் கெப்லரின் வானவியல் ஆய்வுகளுக்குப் பின்னரும் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ் புவியியல் கோட்பாடு அதாவது சூரியனை மையமாக வைத்து கோள்கள் வலம் வருதல் எனும் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்த சூரிச் அருங்காட்சியகத்தின் வானவியல் ஆய்வுக்கூடப்பகுதியில் நிக்கோலஸ் காப்பர்னிக்கஸின் இந்த குறிப்பிட்ட வானவியல் ஆய்வுத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஆய்வினை விளக்கும் அவரது கையெழுத்துப் பிரதியைக் கொண்ட 17ம் நூற்றாண்டு நூல் பாதுகாக்கப்படுகின்றது. அதே போல மேலும் நிக்கோலஸ் காப்பர்னிக்கஸின் தன் கையில் ஒரு மூலிகைச் செடியை வைத்திருப்பது போன்று தோற்றமளிக்கும் அவரது வரைபடமும், அவரது வரலாற்றுச்செய்தியும் ஆய்வுச் செய்தியும் அடங்கிய 17ம் நூற்றாண்டு நூல் ஒன்றும் இங்கே பாதுகாக்கப்படுகின்றது. இவை இரண்டும் எவ்வகையில் இந்த அருங்காட்சியகத்திற்குக் கிடைக்கப்பெற்றன என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.இந்த சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள மேலும் சில அரும்பொருட்களையும் ஆவணங்களையும் பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் தொடர்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

Friday, August 12, 2016

68. பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா (2)

முனைவர்.சுபாஷிணி

பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பு மிகப் பிரமாண்டமானது. அடித்தளத்தில் நான் சென்ற போது ஆசிய, அதிலும் தெற்காசிய சிற்பங்களின் கண்காட்சி வைத்திருந்தனர். இதில் அறிய புத்தர் சிற்பங்களும் திபேத்திய அருங்கலைப் படைப்புக்களும் நிறைந்திருந்தன. உள்ளே கட்டணம் கட்டி டிக்கட் பெற்றுக் கொண்ட உடன் முதல் தளத்திலேயே அங்குள்ள ரோமானிய, கிரேக்க சேகரிப்புக்களைப் பார்வையிடத் தொடங்கலாம். ஆனால், நான் அங்கே தொடங்காமல் அடித்தளத்தில் இருந்த சிறப்புக் கண்காட்சியை பார்வையிட ஆரம்பித்தேன்.கி.பி.11ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் கருங்கல் சிற்பம் ஒன்று இந்தியாவின் நியூ டெல்லி அருங்காட்சியகத்திலிருந்து வாங்கப்பட்ட சிற்பம் இங்கு காட்சிக்கு உள்ளது. இந்த சிற்பத்தை விலை கொடுத்து பிலடெல்ஃபியா அருங்காட்சியகத்திற்கு பொருளுதவி செய்தவர்கள் திரு. திருமதி ரோலண்ட் என்ற செய்தியையும் இங்கு காணலாம். இது 1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வாங்கப்பட்டது. கல்லால் ஆன மிக நேர்த்தியான வகையில் அமைந்த சிற்பம் இது. பாதப்பகுதியில் மட்டும் சேதம் ஏற்பட்ட வகையில் உள்ளது.

இதே போல விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம வடிவத்தின் சிற்பம் ஒன்றும் இங்குள்ளது. இது கி.பி. 4ஆம் நூற்றாண்டு சிற்பம் என்றும் மதுரா, அதாவது இன்றைய உத்திர பிரதேசம் பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்றது, இதுவும் இந்தியாவிலிருந்து வாங்கப்பட்ட சிலைதான். அதற்கு பொருளுதவி செய்தோர் பற்றிய குறிப்புகளும் அருங்காட்சியகத்தில் உள்ளது.இங்குள்ள மற்றுமொரு அற்புத சேகரிப்பு இந்தியாவின் மத்திய பிரதேசத்திலிருந்து வாங்கப்பட்ட 11 ஆம் நூற்றாண்டு அர்த்தநாரீஸ்வரர் சிற்பம். இதுவும் கருங்கல்லில் செய்யப்பட்ட சிற்பமே. இந்திய சிற்பக்கலைக்கு உதாரணமாகத் திகழும் வகையில் இந்த சிற்பத்தின் அமைப்பு அமைந்திருக்கின்றது.

இந்த அருங்காட்சியகத்தில் சேகரிப்பில் சிறப்பானவற்றுள் ஒன்றாகக் கருதப்படும் சுவர்க்கத்தின் நாயகனான இந்திரனின் சிலை ஒன்றும் இங்குள்ளது. இது நேப்பாளின் காட்மண்டு நகரிலிருந்து வாங்கப்பட்ட தனியார் சேகரிப்பிலிருந்து அருங்காட்சியகத்திற்குக் கிடைத்த 12ஆம் நூற்றாண்டுச் சிற்பம்.இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே இருக்கும் மிகப் பிரம்மாண்டமான அமைப்புகளில் 14ஆம் நூற்றாண்டு மூரோமாச்சி காலத்து கோயில் ஒன்றையும் குறிப்பிடலாம். இது ஜப்பானின் நாரா என்ற பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு அருங்காட்சியகத்தின் உள்ளேயே வைக்கப்பட்டுள்ளது. மூங்கிலால் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்ட கோயில் வளாகம். அதனுள்ளே பலகையால் ஆன கோயில் அமைக்கபப்ட்டு ஆலயத்தின் மத்தியில் புத்தர் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இங்கே நின்று பார்க்கும் போது அருங்காட்சியகத்தில் தான் இருக்கின்றோமா அல்லது ஒரு ஜப்பானிய புத்தர் கோயிலில் இருக்கின்றோமா என குழம்பித்தான் போய்விடுவோம்.இந்த ஜப்பானிய புத்தர் கோயில் இருக்கும் அதே தளத்திலேயே மற்றுமொரு பிரமாண்டமான கோயில் இருக்கின்றது. இது ஸ்பெயினின் கட்டாலானியா பகுதி, அதாவது இன்றைய பார்செலோனா இருக்கும் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட செயிண்ட் ஓத்தோ – செயிண்ட் போனவென்சோ தேவாலயத்தின் ஒரு மண்டபத்தின் ஒரு பகுதி. கிபி 1490 வாக்கில் கட்டப்பட்டது என அறியப்படும் இந்தக் கோயில் கல்லால் கட்டப்பட்டது. இதன் சில பகுதிகள் மரத்தால் ஆனவை. தங்க முலாம் பூசப்பட்ட வகையில் அமைக்கப்பட்டவை. இதுவும் ஒரு தனியார் கொடுத்த நன்கொடையின் வழி கிடைக்கப்பெற்றது. செயிண்ட் ஒத்தோ என்பவர் கத்தோலிக்க சமய குருமாராக இருந்து அங்கு ப்ரான்சிச்கான் அமைப்பில் இருந்து சமயம் பரப்பும் சேவையைச் செய்தவர்கள். அவர்கள். சமயம் பரப்பும் பணிக்காக மரோக்கோ நாட்டிற்குச் செய்ன்று அங்குள்ள மசூதி ஒன்றில் கத்தோலிக்க சமயம் பரப்பும் நடவடிக்கையைச் செய்ததால் இவர்கள் அங்கேயே சிரச்சேதம் செய்யபப்ட்டு கொல்லபப்ட்டனர். அவர்களின் நினைவாக ஸ்பெயின் நாட்டில் எழுப்பப்பட்ட தேவாலயத்தின் ஒரு பகுதி தான் இங்கிருப்பது.இப்படி இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சிறப்பானவற்றைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருக்கலாம். ஒரு நாள் முழுவதும் இருந்தால் இந்த அருங்காட்சியகத்தை நன்கு சுற்றிப்பார்த்து இங்குள்ள அரும்பொருட்கள் சேகரிப்புக்கள் பற்றி அரிந்து கொள்ளலாம்.

இந்த அருங்காட்சியகத்துக்கு அருகில் இருக்கும் மேலும் இரண்டு அருங்காட்சியகங்களுக்குச் செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதி. உள்ளது. இந்தப் பேருந்து இலவசம். இது வரும் வேளையில் இதில் ஏறிக் கொண்டால் அடுத்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்று விடும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.பிலடெல்ஃபியா அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம். மதுரை ஸ்ரீமதனகோபாலசுவாமி மண்டபம் மட்டுமல்லாது ஜப்பான், ஸ்பெயின், பிரான்சு, சீனா, கொரியா, என பல நாடுகளின் வழிபாட்டு வளாகங்கள் இங்கிருப்பது இதன் பெருமையைக் கூறும் வகையில் இருக்கின்றது.

சரி. அடுத்த கட்டுரையில் மேலும் ஒரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றி விவரிக்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

Monday, August 8, 2016

67. பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா

முனைவர்.சுபாஷிணி

மேலை நாடுகளில் தங்கள் நாட்டு அரும்பொருட்களைச் சேகரித்து வைப்பது போல அல்லது அதற்கும் சற்று கூடுதலான ஆர்வத்துடன் ஆசிய, ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளின் அரும்பொருட்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வம் இருப்பது, இந்த நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் போது உணர முடியும். ஆசிய நாடுகளுக்கே உரித்தான இறைவடிவங்கள், எழுத்து முறை வளர்ச்சி தொடர்பானவை, நூல்கள், இலக்கியங்கள் என்பனவோடு விலை உயர்ந்த கற்கள், பொன், வைடூரிய ஆபரணங்கள் என்ற வகையிலும் தங்கள் சேகரிப்புக்களை இத்தகைய அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் எகிப்திய பண்டைய நாகரிகத்தின் சின்னங்களும், இந்திய உபகண்டத்தின் சமயச்சின்னங்களும், சீன தேசத்தின் மன்னர்களின் உடமைப் பொருட்களும், ஆப்பிரிக்க தேசத்தின் ஆதிவாசிகளின் நம்பிக்கைக்கு உரிய பொருட்களும் இவ்வகை சேகரிப்புக்களில் முக்கியமானைவையாக இடம்பெறுகின்றன. ஐரோப்பிய நாடுகளின் பெரும் நகரங்களில் உள்ள ஏறக்குறைய அனைத்து அருங்காட்சியகங்களிலும் இத்தகைய சேகரிப்புக்களைப் பார்த்திருக்கின்றேன்.


அண்மையில் வட அமெரிக்கா சென்றிருந்தபோது நான் சென்று வந்த சில அருங்காட்சியகங்களில் இத்தகைய அரும்பொருட் சேகரிப்புக்களைப் பார்த்தேன். அத்தகைய அருங்காட்சியகங்களில் ஒன்றுதான் பிலடெல்ஃபியா அருங்காட்சியகம்.

திரு.நரசய்யா அவர்கள் எழுதி வெளியிட்ட ஆலவாய் நூலை வாசித்த போது மதுரையிலிருந்த ஒரு கோயிலின் சில பகுதிகள் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டதை அவர் குறிப்பிட்டிருந்தது என் நினைவில் இருந்தது. அதனை நேரில் சென்று பார்ப்பதுடன் இங்குள்ள ஏனைய அரும்பொருட்களையும் காணும் ஆவலுடன் இங்கு சென்றிருந்தேன்.இந்த அருங்காட்சியகத்தின் மூன்றாம் மாடியில் சில கோயில்களின் மண்டபங்களும் கருவறைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட கோயிலில் ஒரு பகுதியானது ஸ்ரீ மதனகோபாலசுவாமி கோயில் மண்டபம். மதுரையிலிருந்து இந்த கோயில் மண்டபத்தை அமெரிக்காவிற்கு கொண்டு வந்திருக்கின்றனர். 1912ம் ஆண்டில் திருமதி அடலீன் பெப்பர் என்பவர் இதனை மதுரையில் காசு கொடுத்து வாங்கியிருக்கின்றார். பின்னர் அவரது மகள் சூசன் பெப்பர் இந்த மண்டபத்தை பிலடெல்ஃபிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்.


இன்று தான் கோயில் கலைப்பொருட்கள் ஒரு சில சமூக விரோதிகளால் கொள்ளயடிக்கப்பட்டு திருடப்படுகின்றன என்றால் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிப்படையாக காசு கொடுத்து ஒரு அம்மையார் கோயில் மண்டபத்தையே வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது திகைக்க வைக்கின்றது தானே. இந்தக் கோயில் நாயக்கர் காலத்தில் அதாவது கிபி 1550ம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட கோயிலென இங்குள்ள குறிப்பில் காணலாம்.

நான் சென்றிருந்த நேரத்தில் இப்பகுதியை சீரமைப்பு செய்து கொண்டிருந்தமையால் என்னால் சரியாகப் புகைப்படம் எடுக்க இயலவில்லை. இருட்டாக ஒளி வெளிச்சம் குறைந்த நிலையில் இருந்ததால் புகைப்படம் சரியாக எடுக்க இயலவில்லை. இவை கருங்கற்களால் ஆன தூண்கள். நாயக்கர் கால அமைப்புடன் கூடியவை. கோயில்களில் நாம் காணும் கற்தூண்களில் பொறுத்திய சிற்பங்கள் என வரிசையாக இவை இங்கே உள்ளன. அருங்காட்சியகத்திற்குள் நம் கண்கள் பழகிய ஒரு கோயிலைக் காண வியப்பாகத்தான் இருந்தது. 1940ம் ஆண்டு தொடங்கி இந்த மண்டபம் பொது மக்கள் பார்வைக்காக இங்கே இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் வருவோரின் கண்களுக்கு இது விருந்து.

பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம் திங்கள் தவிர ஏனைய நாட்களில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அருங்காட்சியகத்தின் முகவரி, 2600 Benjamin Franklin Parkway, Philadelphia, PA 19130.ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பழமையானது இந்த அருங்காட்சியகம். 1876ம் ஆண்டில் தொடங்கப்பட்டு பின்னர் இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்கள் படிப்படியாக விரிவாக்கம் கண்டன. இங்குள்ள மேலும் சில அரும்பொருட்கள் பற்றி அடுத்த பதிவில் தொடர்கின்றேன்.