Wednesday, March 23, 2016

60. பாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகம், எட்டயபுரம் (2), தமிழ்நாடு

http://www.vallamai.com/?p=67372
முனைவர்.சுபாஷிணி


பாரதி நினைவு இல்லத்தின் பக்கத்து வீட்டில் தான் நான் இந்தப் பயணத்தின் போது தங்கியிருந்தேன் என்று முதல் பதிவில் குறிப்பிட்டேன். அந்த   வீட்டின் சொந்தக்காரர் திருமதி சாவித்ரி. இவரது கணவர் மறைந்த திரு.துரைராஜ் அவர்கள். இவர் எட்டயபுரம் ராஜா  பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்தவர். தற்சமயம் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக  அவர்களது மகள் தான் பொறுப்பேற்றிருக்கின்றார். திரு.துரைராஜ்,  அவர் வாழ்ந்த காலத்தில் எட்டயபுரத்தில் இருந்த பாரதி அன்பர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டவர். அம்மையார் சாவித்திரி, தமிழகம் நன்கறிந்த திரு.பாஸ்கர தொண்டைமான் அவர்களின் சகோதரி. இவர்களது சகோதரர் ரகுநாத தொண்டைமான் பாரதி நூலகம் ஒன்றினை ஏற்படுத்தினார். அந்த நூலகம் இந்த இல்லம் இருக்கும் வீடுகளின் வரிசையில் முதலாவதாக இருக்கின்றது. நான் சென்ற சமயத்தில் அந்த நூலகத்தின் பொறுப்பாளராக இருந்தவர் திரு.இளசை மணியன் அவர்கள்.

பாரதி பிறந்த இல்லமாக இருக்கும் இந்த வீடு எவ்வாறு ஒரு  அருங்காட்சியகமாக மாறியது என்று சிலர் யோசிக்கலாம்.


நுழைவாயிலில்

பாரதியின் தாய் மாமன் திரு.சாம்பசிவம் ஐயர்,  பாரதி இங்கிருந்து சென்ற பிறகும் இந்த இல்லத்தில் இருந்திருக்கின்றார். பிறகு அவருடைய உறவினர்கள் சிலர், அவர்கள் கல்கத்தாவில் இருந்திருக்கின்றனர். அவர்கள் இந்த இல்லத்தைச் சில காலம் வேறொருவருக்கு வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர். பக்கத்து வீட்டில் குடியிருந்த திரு.துரைராஜ் ஆசிரியர்,  அதாவது அம்மையார் சாவித்திரியின் கணவர் சாம்பசிவ ஐயரின் உறவினர்களை அணுகி இந்த இல்லத்தை வாங்கியிருக்கின்றார். இந்த வீடு பாரதியின் பெயர் சொல்லும் ஒரு இடமாக அமையவேண்டும் என்பது திரு.துரைராஜ் அவர்களின் கனவாக இருந்திருக்கின்றது. ஆக, வாங்கியவுடன் அந்த இல்லத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். 1973ம் ஆண்டு வரை   இந்த இல்லம் பலர் வந்து நூல்களை வாசித்து செல்லும் நூலகமாக இருந்துள்ளது. 1973ல் அன்றைய தமிழக முதல்வர்.திரு.கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இந்த இல்லத்தை பாரதி நினைவு இல்லமாக பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது.  அப்போது இந்த இல்லத்தை அரசாங்கத்திடம்,  இக்கட்டிடத்திற்கானப் பணத்தை பெற்றுக் கொண்டு திரு.துரைராஜ் ஆசிரியர் குடும்பத்தினர்  ஒப்படைத்து விட்டனர்.
இன்று இந்த இல்லம் தமிழக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டு தினமும் ஒரு சிலர் வந்து பார்த்துச் செல்லும் வகையில் ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்படுகின்றது.

இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே பாரதியின் வரலாற்றுக் குறிப்பு  வழங்கப்பட்டுள்ளது.  பாரதி வெளியிட்ட நாளிதழ்கள், பாரதி சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், சில ஆவணங்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


பாரதியின் கையெழுத்து

பாரதியாரின் இலக்கிய முயற்சிகளை விட தேசப்பற்று சார்ந்த, சமுதாய சீர்திருத்தம் சார்ந்த, விடுதலை வேட்கை நிறைந்த சிந்தனைகள் மக்கள் மனதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின.

பாரதியார் தான் பிறந்த எட்டயபுரத்தில் தொடக்கப்பள்ளியில் கற்று பின்னர் திருநெல்வேலியில் உள்ள இந்துக் கல்லூரியில்  உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை பயின்றார்.  1897 ஜூன்மாதம் பாரதிக்கும் செல்லம்மாளுக்கும் கடையம் என்ற ஊரில் திருமணம் நடைபெற்றது. 1898ல் பாரதியின் தந்தை இறந்த போது அவருக்கு வயது 15 தான். அதன் பின்னர் காசிக்குச் சென்று அங்கு சில காலம் இருக்கும் சூழல் அவருக்கு ஏற்பட்டது அங்கே அலாகாபாத் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். டெல்லிக்கு அப்போது ஒரு தர்பாரில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எட்டயபுரம் ஜமீந்தார் பாரதியை மீண்டும் எட்டயபுரத்திற்கே அழைத்து வந்தார்.  ஆக 1901 முதல் 1904 வரை மீண்டும் எட்டயபுரத்தில் பாரதி வசிக்கும் சூழல் உருவானது. 1904ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சுதேசமித்திரன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் பணி அவருக்கு அமைந்தது.


அடுத்த இரண்டாண்டுகளில் பாரதியின் எழுத்துப் பணி மேலும் விரிவடந்தது. 1906 ஆண்டில் இந்தியா வார இதழின் பொறுப்பாசிரியராக இருந்து செயல்படத்தொடங்கினார். 1908 ம் ஆண்டில் இந்தியா பத்திரிக்கைக்கு தடை வழங்கியது அப்போதைய ஆங்கிலேய காலணித்துவ  அரசு.  அதே ஆண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரியிலிருந்து இந்தியா பத்திரிக்கையை வெளிக்கொணர்ந்தார்.  1909ம் ஆண்டில் தொடர்ச்சியாக புதுவையில் இருந்த வாரே விஜயா, கர்மயோகி ஆகிய இதழ்களை வெளியிட்டார்.  1910ம் ஆண்டு மார்ச் மாதம் புதுவையிலும் இந்தியா இதழுக்கு தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. இப்படி இவரது பத்திரிக்கைப் பணி என்பது தொடர்ச்சியாக மேடு பள்ளங்களைச் சந்தித்தவாறே நிகழ்ந்தது.

1920ம் ஆண்டில் மீண்டும் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் இவருக்கு தொடர்பு உண்டானது . மீண்டும் அதன் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அதன் அடுத்த ஆண்டு திருவல்லிக்கேணி கோயில் யானை தாக்கியதில் உடல் நிலை தளர்ந்து போக அதே ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவில் 12ம் தேதி அதிகாலையில் மறைந்தார். அப்போது பாரதிக்கு வயது 39 மட்டுமே.இவ்வளவு குறுகிய காலங்கள் மட்டுமே வாழ்ந்தாழும் பாரதி விட்டுச் சென்ற தாக்கம் என்பது தமிழ் உலகில் மாறாத இடம் பிடிப்பதாய் அமைந்திருக்கின்றது.

ஏட்டில் பாரதியைப் பற்றி படிக்கும் போது ஏற்படும் உணர்வு என்பது ஒரு வகை. பாரதி பிறந்த இடத்திற்கு வந்து பார்த்து அங்கே சில நிமிடங்களைச் செலவிடும் போது பாரதியுடன் இணைந்து பயணிக்கும் உணர்வு மேலிடுவதைத் தவிர்க்க முடியாது.

இந்த அருங்காட்சியகம் வார நாட்களில் திறந்திருக்கின்றது. எட்டயபுரம் வருபவர்கள் இங்கே வந்து பார்த்து செல்லும் போது அதே வரிசையில் இருக்கும் ரகுநாதன் நூலகம்  - பாரதி ஆய்வு மையத்தையும் தவறாமல் பார்த்துச் செல்லுங்கள். இங்கே பாரதி தொடர்பான பல சேகரிப்புக்கள் உள்ளன. இவை ஏனைய பல தொடர் ஆய்வுகலுக்கு நிச்சயம் உதவக் கூடியவை.

Monday, March 21, 2016

59. பாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகம், எட்டயபுரம், தமிழ்நாடு

http://www.vallamai.com/?p=67232
முனைவர்.சுபாஷிணி


நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே

இளம் வயதில் என் தாயார் தமிழ்ப்பாடம் போதித்த போது இப்பாடலையும் சொல்லக் கேட்டு வளர்ந்தேன். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் இருப்பவை தனித்தனி சொற்கள் தாம் என்றாலும் அவை ஒன்றாக இணைந்து  முழு வடிவம் பெற்று இவ்வரிகள் ஏற்படுத்திய அதிர்வுகளும் அதனால்  என் உள்ளத்தில் ஏற்பட்ட தாக்கம் என்பதும் மிக ஆழமானது;  அர்த்தம் நிறைந்தது.

தமிழ் இலக்கியச் சுவையை விரும்புவோராகட்டும், நாட்டின் சுதந்திரத்தை விரும்புவோராகட்டும், தனி மனித சிந்தனைச் சுதந்திரத்தை விரும்புவோராகட்டும், மத நல்லிணக்கத்தை விழைவோராகட்டும், பெண் சமூகத்தின் விடுதலைக்கு உழைப்பவர்களாகட்டும், சமய சிந்தனைகளில் திளைப்போராகட்டும், சாதிக் கொடுமைகளை எதிர்ப்போராகட்டும்.. இவர்கள் அத்துணை பேருக்கும் ஏதாவது ஒரு வகையில் பாரதியின் செய்யுள் வரிகளோ, விரிவான கட்டுரைகளோ, கார்ட்டூன் வரைப்படச் சித்திரங்களோ, நாளிதழ் செய்திகளோ கைகொடுத்துத் துணையாக நிற்கின்றன.

பாரதி வாழ்ந்த காலம் இந்திய தேசமே சுதந்திர தாகம் கொண்டு எழுச்சியுடன் இருந்த ஒரு காலகட்டம். தன்னலம் கருதா சுதந்திர தியாகிகள், சிந்தனையாலும், உடலாலும் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியை எதிர்த்து தனியாகவோ, குழுக்களாகவோ  ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டிய கால கட்டம் அது. இந்த எதிர்ப்புக்கள் சுவரொட்டிகளாகவும். கையெழுத்துப் பிரதிகளாகவும், நாளேடுகளாகவும், திறந்த வெளி பிரச்சாரப் பேச்சுக்களாகவும்,  வெளிப்பட்டு மக்கள் மனதில் தோன்றிய சுதந்திர தாகத்திற்கு மேலும் எழுச்சியை ஊட்டின. அப்படி சுதந்திர தாகத்துடன் நாட்டு விடுதலைக்காகவும், மக்கள் மனைதிலே ஆழப்பதிந்திருக்கும் மூடசிந்தனைகள், சமூக உயர்வு தாழ்வுகள் ஆகியனவற்றைக் களைந்து அதற்கும் விடுதலை வேண்டி செயல்பட்டவர்களில்  பாரதியார் தனித்துவம் மிக்கவராகத் திகழ்கின்றார். சாகாவரம் பெற்ற அவரது சிந்தனையின் எழுத்து வடிவங்கள் வாசிப்போர் மனதில் இன்றும் அதே அதிர்வினை ஏற்படுத்துவதை புறக்கணித்து விடமுடியாது.

தமிழகத்தின் கடந்த நூற்றாண்டில் தோன்றி வாழ்ந்து மறைந்த முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் திகழும் சுப்ரமணிய பாரதியார் பிறந்தது தமிழகத்தின் எட்டயபுரம் என்ற ஒரு சிற்றூரில். அந்தச் சிற்றூரில் அவர் பிறந்து, வளர்ந்து வாழ்ந்த இல்லம் தற்சமயம் பாரதியார் நினைவு இல்லம் ஒரு அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சிகயத்திற்குத்தான் இன்றைய பதிவின் வழி நாம் செல்லவிருக்கின்றோம்.

2009 ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவுகளுக்காக  தமிழகத்தின் தென்பகுதிக்குச் சென்றிருந்தேன். அந்தப் பயணத்தில் எட்டயபுரத்து ஜமீந்தரின் அரண்மனை தொடர்பான தகவல்களைப் பதிவாக்கும் பணி மையப்பணியாக எனது திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. அப்பணியின் போது எட்டயபுரத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.

நான் தங்கியிருந்த வீடு இப்போது பாரதியார் பிறந்த இல்ல அருங்காட்சியகமாக இருக்கின்ற பாரதியார் பிறந்த இல்லத்தின் பக்கத்து வீடு!நான் என் பயண ஏற்பாடுகளைச் செய்த போது இது எனக்குத் தெரியாது. இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கலந்த அனுபவம் கிட்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றி எட்டயபுரம் சென்ற எனக்கு நான்  அங்கு சென்ற பிறகு தான்  பாரதி பிறந்து வளர்ந்து ஆடி ஓடி விளையாடிய வீட்டின் பக்கத்து வீட்டில் இரண்டு நாட்கள் தங்கப் போகின்றோம்  என்ற விடயம் தெரிந்தது.


பாரதியார் பிறந்த இல்லத்தின் பக்கத்து வீட்டு வாசலில் திரு.இளசை மணியன் மற்றும் நண்பர்களுடன்

பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட வீடு அது.  வீட்டின் மாடிப்பகுதியில் பாரதி பிறந்த வீடு என்ற பெயர் பலகை மாட்டப்பட்டுள்ளது.  நுழை வாசலிலேயே வீட்டின் இரண்டு பக்கங்களிலும் திண்ணை வைத்து கட்டப்பட்ட வீடு அது. வீட்டின் பின்புறத்தில் கிணறு ஒன்றும் உள்ளது. திண்ணையைத் தாண்டி உள்ளே நுழையும் போது முகப்பு பகுதி வருகின்றது. அப்பகுதியில் வலது புரத்தில் கருஞ்சிலை வடிவத்தில் பாரதியார் முகத்தை வடித்து வைத்திருக்கின்றனர். அதற்கு சற்று தள்ளி ஒரு பகுதியை பாரதி பிறந்த இடம் எனக்குறிப்பிட்டுள்ளனர்.


பாரதியார் பிறந்த இடம் எனக் குறிக்கப்படும் பகுதி

தொடர்ந்து வாருங்கள்.  உள்ளே சென்று இந்தபாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகத்தில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்வோம்.

தொடரும்..

Wednesday, March 9, 2016

58. கைரோ அருங்காட்சியகம் (2), எகிப்து

​http://www.vallamai.com/?p=66951​


முனைவர்.சுபாஷிணி

கைரோ அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் எகிப்திய அருங்காட்சியகம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது. ஏறக்குறைய 120,000 அரும்பொருட்களைச் சேகரித்து வைத்துள்ளது இந்த அருங்காட்சியகம். உலகிலேயே ஃபாரோக்களைப் பற்றிய மிக அதிகமான தகவல்களைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் என்றால் அது இந்த கைரோ அருங்காட்சியகம் தான்.


எங்கள் குழுவினருக்குப் பயண வழிகாட்டி விளக்கம் தருகின்றார்


கைரோ அருங்காட்சியகத்தில் மம்மிக்களைப் போல கவரும் இன்னொரு விடயம் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள இறந்த பண்டைய அரச குடும்பத்தினரின் ஈமச்சடங்குப் பொருட்கள். ஈமச்சடங்குப் பொருட்கள் என்றவுடன் உடனே தூபக்கால், சிறிய மண்பாண்டம், மணிகள், கைவினைப் பொருட்கள், சாமி வடிவங்கள் என்று எண்ணி விடவேண்டாம்.

ஒவ்வொரு அரச குடும்பத்தினரது புதைக்கப்பட்ட வீடுகளிலிருந்து வெளிக்கொணரப்பட்டவை அனைத்தும் விலைமதிக்கமுடியாதவை. தங்கம், வெள்ளி, வைடூரியம், விதம் விதமான மணிகள், வைரக்கற்கள் என ஒவ்வொரு அரச குடும்பத்தினரின் அவரது தகுதி, முக்கியத்துவத்திற்கேற்ற வகையில் இறந்தவரின் மம்மி செய்யப்பட்ட உடலோடு இணைத்து வைக்கப்பட்டிருக்கும். அது மட்டுமா ?

இறந்த அந்த அரச குடும்பத்தினரின் இறப்புக்குப் பின்னர் அவர் வாழ்கின்ற உலகத்தில் அவர் பயன்படுத்துவதற்காகத் தேர், வாகனங்கள், பெட்டிகள், மிக நுணுக்கமாகச் செய்யப்பட்ட ஆடைகள், சாப்பிடுவதற்கான பாத்திரங்கள், இன்னும் அவர் என்னென்னவெல்லாம் பயன்படுத்துவார் என்று நினைத்தார்களோ அத்தனையையும் தங்கத்தினாலும் வெள்ளியாலும், விலை உயர்ந்த பொருட்களினாலும் செய்திருக்கின்றனர். தேர்கள், படுக்கை கட்டில்கள் எல்லாம் தங்கமுலாம் பூசப்பட்டு கண்களை கூசச் செய்வதாக இருக்கின்றன. புதைக்கப்பட்ட வீடுகள் என்று குறிப்பிட்டேன். ஆம். புதைக்கப்பட்ட ஒவ்வொரு அரச குடும்பத்தினருக்கும் பல அறைகளைக் கொண்ட குகை வீடுகள் உருவாக்கப்பட்டன. இந்த குகை வீடுகள் எகிப்திய பாலைவனப் பகுதியில் நைல் நதியின் இரு பக்கங்களிலும் அமைந்திருக்கின்றன.ஒரு பக்கத்தில் அரசர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings), மறு பகுதியில் அரசியர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Queens).


கர்னாக் ஆலய வாசலில்

நான் கைரோ அருங்காட்சியகம் சென்ற சமயத்தில் இளம் வயதில் இறந்த மன்னன் தூத்தான்சாமூனின் ஈமச்சடங்குப் பொருட்கள் அனைத்தும் அங்கு அன்றைக்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்பகுதி மிகுந்த பாதுகாப்புகளோடு கண்காணிக்கப்படும் பகுதி. தூத்தான்சாமூனின் மம்மிபடுத்தப்பட்ட உடல் ஏனைய அரசர்களது உடலைப் போல நல்ல நிலையில் இல்லை. இதற்குக் காரணம் இந்த இளம் அரசன் ஒரு சதிச்செயலால் மிக இளமையிலேயே வெட்டி கொல்லப்பட்டவர். இவரது உடல் மிகுந்த சேதப்படுத்தப்பட்ட நிலையில் மம்மியாக்கப்பட்டு ஏதோ ஒரு வகையில் பாதுகாத்துவிட்டார்கள். தாக்குதலில் அவரது தலைப்பகுதி மிகச்சிதைந்து போனதால் அவரது உடலின் மேல் தங்கத்தாலான கவசம் ஒன்றினைச் செய்து வைத்திருக்கின்றனர். தூத்தான்சாமூனுக்காகச் செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளையும் பார்த்து அதிசயத்தில் திகைத்துப் போய் நின்றேன்.

கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கும் பல ஒரு விலை மதிக்க முடியாத பொருட்களில் என் மனதைக் கவர்ந்த மேலும் ஒன்று என்னவென்றால் இங்கிருக்கும் அரசி ஹட்செப்சத் அவர்களது மம்மி என்று கூறலாம்.

கைரோ அருங்காட்சியகம் வருவதற்கு முன்னர் கட்சிப்சத் தனக்காக நினைவு மண்டபமாகக் கட்டிய கோயிலை பெனி ஹசான் பகுதியில் பார்த்து விட்டுத்தான் கைரோ அருங்காட்சியகம் வந்திருந்தேன். ஆகையால் பேரரசியார் ஹட்செப்சத் அவர்களது பராக்கிரமங்களை ஓரளவு அருங்காட்சியகம் வரும் முன்னரே தெரிந்து கொள்ள முடிந்தது.பேரரசியார் ஹட்செப்சத் தானே தனக்குக் கட்டிய நினைவாலயம்


இவர் அரசியாக முடிசூடிக் கொண்டு பண்டைய எகிப்தின் பதினெட்டாவது பரம்பரையின் ஐந்தாவது ஃபாரோவாக (மாமன்னனாக அல்லது பேரரசியாக) ஆட்சி செய்தவர். இவரது காலம் கி.மு 1507 – 1458. அதாவது மாமன்னன் ராம்ஸசுக்கு முன்னரே ஆட்சி செய்தவர் என்பதோடு பண்டைய எகிப்தில் மிகப் பிரமாதமான பல கட்டுமானங்களைச் செய்வித்தவர் என்ற பெரும் புகழ் பெற்றவர். இவர் பேரரசர் முதலாம் தூத்மோசிசின் மகள். முதலாம் தூத்மோசிசின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். அதே முதலாம் தூத்மோசிசின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த இரண்டாம் தூத் மோசிசை மணந்தவர்.

பேரரசியார் ஹட்செப்சத் தன் ஆட்சிக் காலத்தில் மிக விரிவாக நாடெங்கிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். முடங்கிக்கிடந்த சாலை சீரமைப்புப் பணிகளை செம்மைப்படுத்தி பிற நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் செழிப்புற வகை செய்தார். குறிப்பிடத்தக்க கோயில்களை இவர் எகிப்தில் கட்டினார். இவர் காலத்தில் சிற்பக்கலை செழித்தது. இவர் காலத்து சிற்பங்கள் உலகின் பல அருங்காட்சியகங்களைச் சிறப்பு செய்கின்றன. அதில் குறிப்பாக நியூயோர்க் மெட்ரோபோலிட்டன் அருங்காட்சியகத்தில் பேரரசியார் ஹட்செப்சத் கால சிற்பத் தொகுதிகளுக்கென்றே ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது குறைப்பிடப்படவேண்டிய ஒன்றே.


கர்னாக் கோயில் ஒபிலிஸ்க்


இவர் காலத்தில் கார்னாக் கோயிலில் மேலும் சில சிற்பங்களை இவர் இணைத்திருக்கின்றார். பண்டைய பெண் தெய்வமான முட் தெய்வத்தின் கற்பக்கிருக பகுதியைச் சீர் செய்தார். அது மட்டுமன்றி இரட்டை ஒபில்ஸ்குகளை இக்கோயிலின் வாசலில் பிரதிஷ்டை செய்தார். அதில் ஒன்று உடைந்து விழுந்து விட்டது. ஆனால் மற்றொன்று இன்னமும் அதே கோயிலில் இருக்கின்றது. இதுவே உலகின் மிக உயரமான ஒபிலிஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபிலிஸ்க் என்பது செலிண்டர் போன்ற அமைப்பில் மிக உயரமாக அமைந்து அதன் நுனிப்பாகத்தில் சூரியக் கதிர்போல் கூர் முனையைக் கொண்டிருக்கும் ஒரு வடிவம். இது சூரியக் கடவுளை பிரதிபலிக்கும் ஒரு வடிவம் என்றும் குறிப்பிடலாம். பேரரசியார் ஹட்செப்சத் தனது 22வது ஆட்சிக் காலத்தில் இறந்தார். கிடைக்கின்ற ஆவணங்களின்படி இவர் ஜனவரி மாதம் 16ஆம் தேதி கி.மு 1458ஆம் ஆண்டு இறந்தார் எனத் தெரிகின்றது.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னெவென்றால் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மன்னர்கள் தாடி வைத்திருப்பது வழக்கம். அதனை பிரதிபலிக்க பேரரசியார் ஹட்செப்சத் தானும் செயற்கை தாடி ஒன்றினை செய்து அணிந்து கொண்டு அரசவைக்கு வருவாராம்.பேரரசியார் ஹட்செப்சத் உருவச்சிலை தாடியுடன்


இந்தப் பேரரசியார் ஹட்செப்சத் அவர்களின் மம்மியும் இந்த கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. இவரது ஆட்சிக் காலத்து விடயங்களை அறிந்து கொண்டு நேரில் இப்பேரரசியார் ஹட்செப்சத்தை பார்த்தபோது உண்மையிலேயே பிரமிப்பில் உறைந்து போனேன்.​பேரரசியார் ஹட்செப்சத்தின் மம்மியாக்கப்பட்ட உடல்

இப்படி சொல்லிச் சொல்லி விளக்க எத்தனை எத்தனையோ அரும்பொருட்கள் இந்த கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் விலை மதிக்க முடியாத அரும்பொருட்கள்.

உலக வரலாற்றிற்கு உன்னத சரித்திரத்தை எகிப்து வழங்கியுள்ளது. அந்த பழைய காலத்தை மீட்டுக்கொண்டுவந்து நம் கண்முன்னே அனுபவமாகத் தருவதாக இந்த கைரோ அருங்காட்சியகம் திகழ்கின்றது.

சரி.. அடுத்த பதிவில் மேலும் ஒரு அருங்காட்சியகத்துடன் உங்களைச் சந்திக்கின்றேன். இந்த ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து பெயர்ந்து வேறு எங்கு உங்களை அழைத்துச் செல்லப்போகின்றேன் என ஊகித்து வையுங்கள்.​

Monday, March 7, 2016

57. கைரோ அருங்காட்சியகம் (1), எகிப்து

​http://www.vallamai.com/?p=66873​


கைரோ அருங்காட்சியகம், எகிப்து
முனைவர்.சுபாஷிணி​கைரோ அருங்காட்சியகம்

என் அனுபவத்தில் இதுவரை ஏறக்குறைய நானூறுக்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்றிருப்பேன். அவை அனைத்திலும் நினைத்த மாத்திரத்தில் ஒரு சில அருங்காட்சியகங்கள் மனக்கண்ணில் வந்து நிற்கும். அதனை வரிசைப்படுத்தினால் அவ்வரிசையில் முதலில் இடம் பெறுவதாக அமைவது எகிப்தில் இருக்கும் கைரோ அருங்காட்சியகம் தான்.

இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்வதற்கு நான் சற்று கூடுதலான பிரயத்தனம் செய்திருக்கின்றேன் என்று குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். 2009ஆம் ஆண்டில் நைல் நதியில் சூடான் வரை பயணித்து விட்டு ஹூர்காடாவில் நான் சுற்றுப்பயணம் பதிவு செய்திருந்த நிறுவனம் பயணத்தை தற்காலிகமாக முடித்திருந்தனர். ஹூர்காடா பகுதியில் செங்கடல் ஓரத்தில் ஓய்வெடுக்கும் வகையில் ஐந்து நாட்களை ஒதுக்கியிருந்தனர். எங்கள் பயணக்குழுவில் வந்திருந்த ஒரு சிலராக சேர்ந்து மூன்று நாட்களுக்கு கைரோ சென்று வருவது என முடிவெடுத்தோம். ஹூர்காடாவிலிருந்து இரவு நேர பஸ் எடுத்தால் ஏழு மணி நேரப்பயணத்தில் எகிப்தின் தலைநகரான கைரோவை அடைந்து விடலாம். அப்படி ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டு எட்டு பேர் கொண்ட குழுவினர் ஹூர்காடா நோக்கி பயணப்பட்டோம்.

கைரோவில் இருந்த மூன்று நாட்கள் குறிப்பிடத்தக்க இடங்களைச் சுற்றிப்பார்த்தோம் என்றாலும் அதில் மனதில் வெகுவாக கவர்ந்தவை பிரமிட்களும் கைரோ அருங்காட்சியகமும் தான்.அதில் கைரோ தேசிய அருங்காட்சியகத்தில் எகிப்திய நாகரிகத்தின் மையப் புள்ளிகளாக இருந்த பண்டைய மன்னர்கள் அவர்கள் துணைவியர் ஆகியோர் உடல்கள் பாடம் செய்யப்பட்டு மம்மிக்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமையை பார்வையிட்டு வந்தது மனதில் மறக்க முடியாத வகையில் இன்றும் பதிந்திருக்கின்றது.

இளமை காலத்தில் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே எகிப்திய மம்மிக்களைப்பற்றி கேள்விப்பட்டு அவற்றை நேரில் பார்ப்போமா என்று யோசித்ததுண்டு. அந்த வாய்ப்பு நிஜத்தில் எனக்குக் கிட்டியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை என்பேன். அது என்ன செத்த பிணங்களான மம்மிக்களை பார்ப்பதில் ஒரு ஆர்வம் என சிலர் நினைக்கலாம். அவை வெறும் செத்த பிணங்கள் என்று நாம் கூறிவிட முடியாது. மாறாக அவை இன்றைக்கு 5000 ஆண்டு பழமையான மனிதர்களை நம்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு அற்புத அனுபவம். இந்த அற்புத அனுபவத்தை நேரில் உணரும் போது உண்மையில் நாம் மெய் சிலிர்க்காமல் இருக்கமுடியாது. இல்லையென்றால் எதற்காக மில்லியன் கணக்கில் எகிப்தின் இந்த கைரோ அருங்காட்சியகத்திற்கு ஒவ்வொரு வருடமும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர் என்ற கேள்வி எழும் தானே!​மாமன்னன் முதலாம் செட்டியின் பராக்கிரமங்களைக் கூறும் கர்னாக் கோயில் வாசலில்

கைரோ அருங்காட்சியகத்தில் மம்மி சேகரிப்புக்களுக்காக இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் தலா 12 மம்மிக்கள் என காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் முதல் அறையில் பண்டைய எகிப்தின் பாரோக்கள் என அழைக்கப்படும் பேரரசர்களின் மம்மிக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது அறையில் மேலும் சில பாரோக்களுடன் அவர்களது மனைவி மற்றும் பண்டைய எகிப்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிலரின் மம்மிக்கள் வைக்கப்பட்டுள்ளன. நூல்களில் படித்து பாரோக்களின் பராக்கிரமத்தை அறிந்த நமக்கு அவர்களின் உடலை நேரில் பார்க்கின்றோம் என்பது திகைக்க வைக்கும் ஒரு நிகழ்வுதானே. அதிலும் என்னை ஈர்த்தது மன்னன் 2ம் ராம்ஸளின் பாடம்செய்யப்பட்ட மம்மி உடல். இவர் பண்டைய எகிப்தை 67 ஆண்டுகள் ஆண்ட பேரரசர். அடுத்ததாக மன்னன் முதலாம் ராம்ஸசின் மகனும் மன்னன் 2ம் ராம்ஸசின் தந்தையுமான முதலாம் செட்டியின் மம்மியைக் குறிப்பிடுவேன்.

ஒன்றை கவனித்தீர்களா?
இந்த மன்னர்களின் பெயர்கள் நமக்கு பரிச்சயமான பெயர்கள் போல் தானே ஒலிக்கின்றன? எகிப்து தொடர்பான பலதரப்பட்ட ஆய்வுகள் தென்னிந்திய மானுடவியல் ஆய்வுகள் செய்வோருக்கு மிகச் சுவாரசியமான தகவல்களை நிச்சயம் வழங்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

சரி. யார் இந்த இரண்டாம் ராம்ஸஸ்? இவரை ஏன் முக்கியமாக அதிலும் முதலாம் ராம்ஸஸை விட முக்கியமாக இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கின்றேன் எனக் கேள்வி எழலாம். 2ம் ராம்ஸஸைப் பற்றிச் சொல்கின்றேன்.


​மாமன்னன் ராம்ஸஸின் பதப்படுத்தப்பட்ட மம்மி

பேரரசன் 2ம் ராம்ஸஸ் கி.மு 1279 முதல் கி.மு 1213 வரை பரந்த எகிப்தை ஆண்ட மாமன்னன். கீழே இன்றைய சூடான் மேற்கே சிரியா என மிக விரிவான நிலப்பகுதி இவரது ஆட்சிக்குட்பட்டிருந்தது. மிக இளம்வயதிலேயே இவரது தந்தையார் முதலாம் செட்டி இவரை இளவரசராக நியமித்திருந்தார் என்பதுவும் தொடர்ச்சியாக தமது பதின்ம வயதினிலேயே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்றும் புக் ஆஃப் டெத் நூலில் உள்ள குறிப்புக்களிலுருந்து அறிகின்றோம். இவர் நீண்ட ஆண்டுகாலம் ஆட்சி செய்து தமது 90 அல்லது 91 வயதில் உயிர் நீத்தார். தமது ஆட்சிப்பொறுப்பின் காலத்தில் நைல் நதிக்கரையில் எகிப்திய அரசின் பிரமாண்டமான தலைநகரமான பை-ராம்ஸஸை உருவாக்கினார். இவர் இறந்த சமயத்தில் இவரது உடல் மம்மியாக பாடம் செய்யப்பட்டு மன்னர்கள் பள்ளத்தாக்கில் (Valley of King) வைக்கப்பட்டிருந்தது. தற்சமயம் அது கைரோ அருங்காட்சியகத்தில் உள்ளது. 2ம் ராம்ஸஸ் கட்டிய கட்டுமானங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பல கோயில்களை கட்டிய புகழ் இவருக்கிருந்தாலும் சூடானில் நைல் நதிக்கரையோரத்தில் இன்றைக்கு 4000 ஆண்டுகள் வாக்கில் 2ம் ராம்ஸஸ் அமைத்த அபு சிம்பெல் ஆலயம் ஒரு மைல்கல். இன்று அது எகிப்தின் எல்லை பகுதிக்கு யுனெஸ்கோ மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு கொண்டு வரப்பட்டு அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது.


​அபு சிம்பல் ஆலயம்

2ம் ராம்ஸஸின் அதிகாரப்பூர்வ மனைவி நெஃபடாரி மிக புகழ்மிக்க ஒரு அரச ஆளுமையாக கருதப்பட்டவர். எகிப்தில் ஜெர்மானிய தொல்லியல் துறை நிகழ்த்திய ஒரு அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட இவரது தங்கத்தினால் ஆன கழுத்து வரைக்குமான உருவச்சிலை ஜெர்மனியில் பெர்லின் நகரில் இருக்கும் புதிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளது. எகிப்து இச்சிலையை ஓரிரு முறை கேட்டும் கூட இச்சிலை ஜெர்மனியினால் திருப்பி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அபு சிம்பல் ஆலயத்தில் பேரரசன் ராம்ஸஸின் உருவச் சிலை போலவே நெஃபட்டாரியின் உருவச் சிலையும் இருக்கின்றது. மன்னன் 2ம் ராம்ஸஸ் ஆணையிட்டு தன் மகாராணிக்காக கட்டிய ஆலயத்தின் வாசலில் நெஃபட்டாரியின் உருவச் சிலையையும் காணலாம்.​மாமன்னன் முதலாம் செட்டியின் உருவப்படம்

பேரரசன் 2ம் ராம்ஸஸின் தந்தை முதலாம் செட்டி ஏறக்குறைய பதினொரு அல்லது பதினைந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் என்றாலும் இவர் காலத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எகிப்திய மொழியில் இவரது பெயரான செட்டி என்பது சேத் எனும் கடவுளின் பெயரை ஒத்து அமைவது. நைல் நதிக்கரையோர ஆலயங்களில் ஒன்றான கார்னாக் கோயிலில் முதலாம் செட்டியின் பராக்கிரமங்களை விளக்கும் ஹீரோக்ளிப்ஸ் ஆவணங்கள் சுவற்றில் வரிசையாகப் பதிக்கப்பட்டிருக்கின்றன. அவைமட்டுமன்றி மன்னர்கள் பள்ளத்தாக்கில் இவரது சமாதி இருக்கும் நீண்ட அறையில் இவரது ஆட்சிக் காலத்து வரலாற்றுச் செய்திகள் சுவர் முழுக்க ஹீரோக்ளிப்ஸ் குறியீடுகளால் வழங்கப்பட்டுள்ளன. மன்னர் முதலாம் செட்டியின் சமாதியை புதையுண்ட மணல் பகுதியிலிருந்து முதலில் கண்டெடுத்தவர் ஆஸ்திரியாவில் பிறந்த இத்தாலிய பூர்வீகத்தைக் கொண்ட Giovanni Battista Belzoni என்ற உலகப் புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வறிஞர். இப்பொழுது மாமன்னன் முதலாம் செட்டியின் மம்மியாக்கப்பட்ட உடல் கைரோ அருங்காட்சியகத்தில் உள்ளது.

இந்த மம்மிக்களைப் பார்க்க கைரோ அருங்காட்சியகத்தினுள்ளே செல்வோம்.

தொடரும்…