Friday, September 6, 2013

4. 5000 ஆண்டு பழம் நகரம் ஊருக், பெர்காமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி


இன்றைய தெற்கு ஈராக் நகரமாக அறியப்படும்  வார்க்கா (Warka) முந்தைய மெஸொப்போட்டேனியாவின் ஊருக் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டதொரு நகரம்.  இந்த நகரம் ஈராக் தலைநகரமான பக்டாட்டிலிருந்து 300கிமீ தூரம் தெற்கில்,  சமாவா நகருக்கு 15கிமீ  கிழக்கில்,  இயூக்ரப்டீஸ், திக்ரீஸ் நதிக்கரை அமைந்திருந்த பகுதியில் உள்ள பகுதி. இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உலகளாவிய மனித நாகரிகத்தின் சுவடுகளை ஆராயும் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு நின்று விடாமல் தொடர்ந்து பல ஆய்வுகளுக்கு அடிப்படையாகவும் அமைந்தது.

முதன் முதலில் 1849ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயர் வில்லியம் கென்னத் லோஃப்டுஸ் என்னும் தொல்லியல் ஆய்வாளர் இப்பகுதியில் ஓர் நகரம் இருப்பதை கண்டுபிடித்தார். இதுவே  பழமையான சுமேரியன் நகரான ஊருக். ஆங்கிலேய அரசின் ஆணையின் படி வெவ்வேறு நாடுகளில் சில குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட திரு.கென்னத் இறுதியாக தனது பணியை ஆங்கில காலணித்துவ இந்தியாவில் ஆற்றிக் கொண்டிருந்த சமயத்தில் உடல் நிலை நோய்வாய்ப்பட்டு 1856ல்  இந்தியாவிலேயே இறந்தார். அப்போது அவருக்கு வயது 38.

அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மானிய கீழ்த்திசைச் சங்கம் அப்போதைய ஒட்டோமான் பேரரசை அணுகி ஊருக்  (ஈராக்) நகரப் பகுதியில் தொடர்ந்து தாங்கள் அகழ்வாராய்ச்சிகள் செய்ய விண்ணப்பித்து சம்மதம் பெற்று 1912ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினர். ஊருக் எனும் ஒர் நகரமும் அங்கு நாகரிகம் அடைந்த ஒரு சமூகம் இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் இருந்தமையையும் குறிப்பிடும் சான்றுகளை இந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடித்தது இவ்வாய்வை மேற்கொண்ட குழு. இவ்வாய்வு தொல்பொருள் ஆய்விற்கு ஒரு மிகச் சிறப்பான  ஒரு கண்டுபிடிப்பாக அமைந்து பல்வேறு தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு அடிப்படையாகவும் அமைந்தது.



ஊருக் நகரில் ஆய்வுப் பணிகளின் போது
நன்றி: http://www.dainst.org

இங்கு தொல்லியல் பணிகள் தொடங்கிய காலம் தொட்டு இப்பகுதியில் இடைக்கிடையே நடைபெற்று வந்த போர், அரசியல் மாற்றங்களால் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் தொடர்ந்து இடர்பாடுகளுக்குள்ளாகி வருவது தொல்லியல் ஆய்விற்கு பெருமளவில் தடங்கலாகவே அமைந்திருப்பது உண்மை. இத்தகைய தடைகளுக்கிடையேயும் இது வரை நாற்பதற்கும் குறையாத வெவ்வேறு ஆய்வுகள் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்டு இங்கு ஊருக் நகரமும் அந்நகரத்து மக்களின் நாகரிகம் பண்பாடு பற்றியும் ஓரளவு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது ஆய்வு உலகத்திற்கு கிடைத்திருக்கும் பெறும் நன்மையே.

இத்தனை ஆய்வுகளும் இந்த நகரைப் பற்றிய  முழுமையான தகவல்களை வழங்கி விட்டதா என்றால் இல்லை என்பது தான் விடையாகின்றது. ஜெர்மானிய கீழ்த்திசைச் சங்கத்தினரின் அறிக்கையின் படி ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான ஊரூக் நகர் மட்டுமே இதுவரை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்னும் தகவலை அறிகின்றோம். இக்குறுகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகளே இந்த நகரத்தின் அக்கால நிலையை இன்று நமக்கு விளக்க உதவுவதாக உள்ளன.


ஈனன்னா கோயில் கண்டெடுக்கப்பட்ட பகுதி. தொல்லியல் ஆய்வுப்பகுதியாக ஈராக்கில் பாதுப்பில் இருக்கும் ஒரு பகுதி.
நன்றி: http://www.dainst.org

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டையாடியும் மீன்  பிடித்தும் ஊர் ஊராக நாடோடிகளாகத் திரிந்த சமூகத்தினரில் ஒரு சிறு பகுதியினர் மெஸபொட்டோமியாவின் தெற்குப் பகுதியில் குடியேறினர். கிபி 3200 ஆண்டு வாக்கில் அங்கே நிரந்தரமாக தங்கள் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள் அமைத்த நகரமே ஊருக் என்ற பெயருடன் இன்று அறியப்படுகின்றது. இங்கு அறியப்படும் நகரம் நல்ல நாகரிகம் அடைந்த ஒரு சமூகத்தின்  வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது என்பது ஆச்சரியமளிப்பதாகவும் அமைகின்றது. சிறந்த கட்டுமான வடிவத்தைக் காட்டும் கட்டிடங்களின் அமைப்பு, சிற்பங்கள், சிலைகள், வழிபாட்டு முறைகள், ஈமக்கிரியை முறைகள், எழுத்து வடிவங்கள் என பண்பாட்டு வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தைக் காட்டும் சான்றுகளாக இவை நமக்கு இன்று கிடைக்கின்றன.  சுமேரிய நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க ஒரு நகரமாக ஊருக் கருதப்பட்டாலும் பெரும்பாலும் அக்காடியப் பேரரசுடன் இணைத்து கருதப்படும் ஒரு நகரமாகவே இது பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றது.

பெர்லின் பெர்கமோன் அருங்காட்சியகத்தில் இவ்வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்த கண்காட்சியாக 5000 ஆண்டு பழமை வாய்ந்த நகரமான ஊரூக் பற்றிய கண்காட்சி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் மாதம் பெர்லின் நகருக்கு நான் சென்றிருந்த வேளையில் அங்கு பெர்காமோன் அருங்காட்சியகத்தில் இந்தக் கண்காட்சியைக் காணும் வாய்ப்பு அமைந்தது. ஜெர்மனியின் பழமை வாய்ந்ததும் உலகப்புகழ் வாய்ந்ததுமான  ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஊருக் நகர கண்டுபிடிப்புக்களும் இந்தக் கண்காட்சியில் இணைத்து வைப்பட்டிருந்தன.


ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு - எழுத்துக்குறியீடும் சிற்பமும் இணைந்து அமைக்கப்பட்டிருக்கும் ஒரு படிமம்.

1912ம் ஆண்டு முதல் 1989 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இந்த நகரின் வழிபாட்டு மையங்களைக் கண்டுபிடிப்பதைக் குறிக்கோளாக வைத்து ஆய்வுகளை மேற்கொண்டன. இக்காலகட்டத்தில் 39 தனித்தனி ஆய்வுகளில் பல சான்றுகள் இப்பகுதியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டன. அவற்றில் போர்,அருள் இவையிரண்டிற்கும் ஆதாரமாகக் கருதப்படும் ஈனன்னா தெய்வம், சொற்கத்திற்கான இறைவடிவமான அனு, கிமு 14ம் நூற்றாண்டுக் கோயிலான காரைண்டாஷ் கோயில், கிமு 3-2ம்  நூற்றாண்டு கோயிலான காரெய்ஸ் கோயில், கிமு 20-18ம் நூற்றாண்டு ஷின்காஷிட் அரண்மணை  போன்றவையும், எழுத்து வடிவங்களும், ஈமக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகளும், அலங்காரப் பொருட்களும்  கண்டுபிடிக்கப்பட்டன.

உலகப் பிரசித்தி பெற்ற கண்காட்சிகளின் வரிசையில் இடம் பெறும் ஊருக் கண்காட்சியை நேரில் பார்த்து அறிந்து கொண்டமை தனிப்பட்ட வகையில் எனக்கு பிரமிப்பை அளிக்கும் உணர்வினை அக்கணத்தில் ஏற்படுத்தியது என்பதை நான் மறுக்க முடியாது.  இன்றைக்கு 5000 ஆண்டுகால பழமையான ஒரு நாகரிகம் நமக்கு விட்டுச் சென்றுள்ள விஷயங்கள் ஏராளம். இந்த கண்டுபிடிப்புக்களை தன் வாழ் நாளில் பெரும் பகுதியை செலவிட்டு மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து முடித்த ஆய்வாளர்களையும் தொடர்ந்து இவ்வாய்வுகளில் ஈடுபட்டு புதிய ஆய்வு முடிவுகளை உலகுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களையும் நினைத்துப் பார்க்கும் போது மனம் பெருமிதம் அடைகின்றது. இத்தகைய கண்காட்சிகளுக்கு லட்சக்கணக்கான யூரோ செலவிட்டு அவற்றை பாதுகாத்தும் ஆய்வாளர்களை ஊக்குவித்தும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தும் வரும் பெர்கமோன் அருங்காட்சியத்தைப் பாராட்டுவது மிகத் தகும் அல்லவோ!

நன்றி:
http://www.smb.museum/smb/kalender/details.php?lang=en&objID=31969
http://www.pasthorizonspr.com/index.php/archives/01/2013/uruk-5000-years-of-the-megacity

2 comments:

  1. சிறந்த பதிவு; தொகுத்து
    வழங்கியமைக்கு நன்றி


    தேவ்

    ReplyDelete
  2. மிக்க நன்றி திரு.தேவ்

    ReplyDelete