Monday, December 23, 2013

19. லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (4), பாரிஸ், ப்ரான்ஸ்

முனைவர்.சுபாஷிணி 


சொல்ல வரும் ஒரு விஷயத்தை மறைபொருளாக உருவகப்படுத்தி வைப்பதில் சித்திரக்கலை படைப்பாளர்களுக்கு உதவத் தவறுவதில்லை. நேரடியாகக் காணும் ஒரு காட்சி தானே, அல்லது ஒருவரின் உருவகப் படம் தானே, அல்லது ஒரு நிகழ்வின் காட்சி தானே, அல்லது ஏதோ புரியாத கோடுகளின் சங்கமிப்பில் ஒரு படைப்பு என்பது தானே என ஒரு சித்திரத்தை எடைபோட முடியாது. பல நுணுக்கமான விஷயங்களை, ஒரு சரித்திர நிகழ்வை, சமூக நிகழ்வை அல்லது சமகால சிந்தனையை, ஒரு படைப்பாளியின் சிந்தனையை, கற்பனையை பிரதிபலிக்கும் கருவியாக சித்திரம் அமைந்து விடுகின்றது.

ஐரோப்பாவில் சித்திரங்களின் அமைப்பில் புதிய பாணியும் அணுகு முறையும் 14ம் நூற்றாணடு தொடங்கி பின்னர் 15ம் நூற்றாண்டில் மிக வலுவடைந்தது. அரசர்களின், பிரபுக்களின் ஆதரவைப் பெற்று குறிப்பிடத்தக்க சித்திர வல்லுனர்கள் பல சித்திரங்களை இக்காலகட்டங்களில் படைத்தனர். குறிப்பிடத்தக்க வகையில் இக்கலை இத்தாலியில் சிறப்புடன் வளர்ந்தது. பல  சித்திரக்கூடங்களும் சித்திரங்கள் வரையும் பயிற்சி வழங்கும் பள்ளிகளும் இக்கால கட்டத்தில் உருவாகின. இப்படி எழுந்த முயற்சிகளின் விளைவாக குறிப்பிடத்தக்க கலைஞர்கள் தங்கள் ஓவியத்திறனைக் கொண்டு கருத்துகளுக்கு உருவம் வழங்கும் பணியை செய்து வந்தனர்.

பொதுவாக ஐரோப்பா முழுமைக்கும், 13ம் நூற்றாண்டு தொடங்கி உருவாக்கப்பட்ட சித்திரங்களின் தன்மை கிறிஸ்துவ மறையான கத்தோலிக்க சமயத்தைப் பிரதிபலிக்கும் ஏதாகிலும் ஒரு அம்சத்தைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதில் ஏசு சிறிஸ்துவின் இறுதித் தீர்ப்பு நாள்,  இரவு உணவு, ஏசுவின் சிலுவையில் ஏற்றப்பட்ட வடிவம், தேவதைகள் ஏசுவின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கும் நிலை, இறந்த ஏசு பிரானின் உடலை அன்னை மேரியும் ஏனையோரும் சுற்றி நின்று கண்ணீர் உகுத்து மடியில் கிடத்தி வருந்தும் காட்சி என்பதாக ஒரு வகை; அடுத்ததாக, பைபிளில் உள்ள கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள். உதாரணமாக ஆதாம் ஏவாள் இவர்களுடன் பாம்பு மரத்தில் தொங்க ஆப்பிளைப் பறிக்கும் சூழல், நரகத்தின் நிலை, தேவதைகள் சுவர்க்கத்தில் மகிழ்ந்திருக்கும் காட்சி என அமைந்திருக்கும். இவையல்லாது ஏனையன, போர்களை விவரிப்பதாக, மன்னனின் அல்லது மன்னனின் குடும்பத்தோர் உருவங்களை மையமாக வைத்து வரையப்பட்டதாக இருக்கும். இவற்றில் பைபிளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள் பல நேரடி விளக்கத்தைத் தருவன அல்ல. மறைமுக கருத்துக்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்டவை பல.

லூவ்ரே அருங்காட்சியகத்தில் இப்பதிவில் நாம் காணவிருப்பது இங்குள்ள சித்திரக்கூடத்தைத் தான்.   எண்ணற்ற விலைமதிக்க முடியாத பல சித்திரச் சேகரிப்புக்களின் கூடம் லூவ்ரே.  டெனோன் (Denon) பகுதியில் முதல் மாடியிலும் இரண்டாம் மாடியிலுமாக இச்சித்திரங்களின் சேகரிப்புக்கள் இடம்பெறுகின்றன. முதலாம் மாடியில் இத்தாலி, ஸ்பெயின் கலைஞர்கள் உருவாக்கிய சித்திரங்கள் இடம்பெறுகின்றன. இரண்டாம் மாடியில்  ப்ரான்ஸ் பெல்ஜியம், ஜெர்மனி, ஹாலந்து, வடக்கு ஐரோப்பாவின் ஏனைய நாட்டு கலைஞர்களின் படைப்புக்கள் என இடம் பெறுகின்றன.

மன்னன் முதலாம் ப்ரான்ஸிஸ் முதலில் இத்தாலியின் அரச மாளிகையில் இருக்கும் சித்திரங்களைப் போல தனது மாளிகை ஒன்றில் சித்திரக்கூடம் ஒன்று அமைக்க திட்டமிட்டார். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட முயற்சியின் பலனாகச் சேர்ந்தவைதான் இன்று லூவ்ரேவில் இருக்கும் இப்பகுதி சேகரிப்புகள். இந்த மன்னன் இத்தாலியில் புகழ்பெற்ற கலைஞர்களான மைக்கல் ஏஞ்சலோ,  ரஃபேல் ஆகியோரது கலைப் படைப்புக்களை வாங்கி தனது மாளிகையில் அவற்றை இணைத்துக் கொண்டார். அது மட்டுமில்லாது சித்திரக் கலைஞர்களையும் தனது மாளிகைக்கு சிறப்பு அழைப்பில் அழைத்தார். லியோனார்டோ டா வின்சி இந்த வகையில் மன்னன் முதலாம் ப்ரான்ஸிஸின் அழைப்பின் பேரில் இங்கு  அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வகை முயற்சிகளின் வழி சித்திரச் சேகரிப்புகள் பெருகின.

மன்னன் 14ம் லூய்ஸ் மேலும் தொடர்ந்து தனது சேகரிப்பிற்காக இத்தாலிய சித்திரங்களை வாங்கி இணைத்தார். அதுமட்டுமில்லாது ஸ்பேனிஷ் கலைஞர்களின் ஓவியங்களையும் தனது சேகரிப்பில் இடம்பெறச் செய்யும் முயற்சியில் இறங்கி முரியோ (Murillo)  வின் கலைப்படைப்புகளை வாங்கி இணைத்தார்.  அதன் பின்னர் பல ப்ரென்ஞ்ச் சித்திரக் கலைஞர்களின் ஓவியங்கள் இச்சேகரிப்பில் இணைந்தன.

இனி இங்குள்ள சில ஓவியங்களை மட்டும் அதன் விளக்கத்துடன் காண்போம்.

Alexander in Babylon (1665)

இது ப்ரெஞ்ச்  ஓவியக் கலைஞர் சார்ல்ஸ் லெ ப்ரூன் (Charles Le Brun ) வரைந்த சித்திரம்.

கி.மு 333ல், பெர்ஸிய மன்னன் மூன்றாம் டார்ஸியுஸை போரில் தேற்கடித்து வெற்றிக் கொடி ஏந்திக் கொண்டு பாபிலோன் நகரத்திற்கு வருகின்றான் மாவீரன் அலெக்ஸாண்டர். அங்கே அவனுக்கு நகரின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நல்வரவு நல்கப்படுகின்றது.  இது அவனை திகைக்க வைக்கின்றது. 3ம் டாரியுஸின் படையிலிருந்து பிடிக்கப்பட்ட 2 யானைகள் ஓட்டி வரும் வாகனத்தில் வலம் வருகின்றான் அலெக்ஸாண்டர். இக்காட்சியில் பாபிலோனின் தொங்கும் தோட்டம் பின்புறக்காட்சியாக அமைந்திருக்கின்றது.  1665ம் ஆண்டில் இந்த ஓவியம் வாங்கப்பட்டு சித்திரக் கூடத்தில் இணைக்கப்பட்டது.

மன்னன் 14ம் லூய்ஸ் ஐரோப்பாவில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க போர்களில் சிறந்த வெற்றி பெற்றவன். தன் பெருமைகளை வீரன் அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இந்த ஓவியம் அமைந்திருப்பதால் இதனை தன் சேகரிப்பில் இணைத்திருக்கின்றார்.  அது இப்போது லூவ்ரேவின் அருங்காட்சியகத்திற்குச் சிறப்பு சேர்க்கிறது.


A Table of Desserts (1640)

இது ஒரு டச்சு கலைஞனின் படைப்பு. மாட்டிசே Matisse இதன் 1635 அசலான டி ஹீம் வரைந்த ஓவொயத்தின் அடிப்படையில் இதனை உருவாக்கி  அதில் அதிகப்படியான பிரமாண்டத்தைச் சேர்க்க பாரோக் கலைவடிவத்தை இணைத்து உருவாக்கிய ஒன்று இது.

இது உணவு உண்ணல் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட படைப்பு.  விசித்திரமான இச்சித்திரத்தில் வெவ்வேறு சீதோஷ்ணத்தில் கிடைக்கும் பழங்களையும் க்ளாஸில் உள்ள வைன்,  அதோடு ஆங்காங்கே இசைக் கருவிகள் என பல அமசங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் ஒரு ஒழுங்கற்ற முறை தென்படுவதையும் காணமுடியும். ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு பொருள் இருப்பதாக குறியியல் அறிஞர்கள் (symbologist)  கருதுவதாகவும் குறிப்பு உள்ளது.  பைபிளில் குறிப்பிடப்படும் fruit if paradise  ஆகிய செர்ரி,  மறுக்கப்பட்ட பழங்களான ஆப்பிள், பீச் ஆகியவை தென்படுவதால் மறைமுக கருத்துக்கள் கொண்ட ஒரு கலைப்படைப்பு இது என்பது அவர்களின் விளக்கம்.


Allegory of Fortune (1729)

இது ஒரு ப்ளெமிஷ் (பெல்ஜியம்)  படைப்பு

ரோமன் கடவுள் ஃபோர்ச்சுனா இதில் ஒரு உலக உருண்டையின் மேல் இருப்பதாகக் காணலாம். நிலையற்ற தன்மை கொண்டது அதிர்ஷ்டம். இந்த உலக உருண்டை ஒரு கப்பலில் இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.  கடலில் பயணிக்கும் பயணம் போன்றது வாழ்க்கை; நிறைய எதிர்பாராத விஷயங்கள் நேரலாம், என்ற வகையில் பொருள் கொள்ளலாம்.

மண்னன் 14ம் லூயிஸின் சேகரிப்பிலிருந்து பெறப்பட்ட ஓவியம் இது. இதன் அசலை உருவாக்கியவர் 2ம் ப்ரான்ஸ் எனப் பெயர்கொண்ட பெல்ஜிய ஓவியக் கலைஞர்.


Charles VII (1403-1461), King of France (1445)

1445ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சித்திரம் இது. பேரரசன் 7ம் சார்ல்ஸின் உருவப்படம் கொண்ட ஓவியம். இந்த மன்னன் அச்சமயத்தில் இங்கிலாந்துக்கும் ப்ரான்ஸுக்கும் இடையே நிகழ்ந்த நூறாண்டுப் போரில் மாபெரும் வெற்றியை ப்ராஸிற்கு பெற்று வந்ததன் பின்னர் உருவாக்கப்பட்ட படைப்பு.  ப்ரெஞ்சுப் படைப்பான இதனை வரைந்தவர் Jean Fouquet. ஆரம்பத்தில் யாரால் உருவாக்கப்பட்ட ஓவியம் இது என்பதில் சரியான தகவல் கிடைக்காவிடினும் பல ஒப்பீடுகளுக்குப் பிறகு இவை ப்ரெஞ்சு ஓவியர் Jean Fouquet உருவாக்கிய சித்திரம் என்பது அறியப்பட்டது.

இப்படி இங்கு இன்னும் பல ஓவியங்கள்.. அவற்றையும் அடுத்தடுத்து என பார்த்துக் கொண்டே செல்லலாம்.  அதோடு உலகின் பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆவணங்களும் கலைப்பொருட்கலும் அரும்பொருட்களும் அடங்கியிருக்கும் மாபெரும் பொக்கிஷம் இம்மண்டபம். ஆனால் நாம் ஏனைய அருங்காட்சியகங்களுக்கும் செல்ல வேண்டுமல்லவா?

அடுத்ததாக உங்களை மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். ஐரோப்பாவை விட்டு சற்றே நெடுந்தூரம் செல்வோம்.

வேறொரு நாட்டிற்கு வேறொரு அருங்காட்சியகத்திற்கு!​

குறிப்பு: படங்களில் சில http://www.louvre.fr/en

No comments:

Post a Comment