Monday, May 28, 2018

109. அங்கோர் தேசிய அருங்காட்சியகம், சியாம் ரீப், கம்போடியா

http://www.vallamai.com/?p=85445

முனைவர் சுபாஷிணி 


உலகின் பிரமாண்டங்களில் தனக்கெனத் தனியிடம் பெறுவது கம்போடியாவின் அங்கோர்வாட். க்மேர்(Kymer) கலை பண்பாட்டு விழுமியங்கள் ஏனைய ஆசிய கலை வடிவங்களிலிருந்து வேறுபடுபவை. கி.பி.802ல் மாமன்னன் 2ம் ஜெயவர்மன் கம்போடியாவின் அரசாட்சியைக் கைப்பற்றினான். வைணவ பாரம்பரியத்தைப் பின்பற்றியது இந்த அரசு. கி.பி.12ம் நூற்றாண்டில் மன்னன் 2ம் சூரியவர்மன் அங்கோர் வாட் எனும் இந்த விஷ்ணு கோயிலை எடுப்பித்தான். விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்ட இக்கோயில் 2ம் சூரியவர்மனின் மறைவுக்குப் பின் சம்பா பேரரசின் தாக்குதலால் பாதிப்பைச் சந்தித்தது. அதன் பின்னர் 7ம் ஜெயவர்மன் புதிய தலைநகரை உருவாக்கி அங்கோர் தோம், பாயோன் என்ற இரு கோயிகளையும் எடுப்பித்து தனது ஆட்சியைத் தொடர்ந்தான். இக்காலத்தில் கம்போடியா பௌத்தத்தைத் தழுவி, ஒரு பௌத்த நாடாகப் பரிணாமம் பெற்றது. அடுத்த நூற்றாண்டில் பௌத்தக் கோயிலாக மாற்றம் கண்டது அங்கோர் வாட். விஷ்ணுவை மையக்கடவுளாக வைத்து அங்கோர் வாட் அமைக்கப்பட்டது. அங்கோர் பகுதியில் முதன்மை சமயமாக இருந்த வைணவம் அதன் புகழ் மங்கி, கி.பி.12ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு பௌத்தம் செழிக்கத் தொடங்கியது. இன்று கம்போடியாவின் மக்கள் தொகையில் 95% பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களே. தமிழகத்தைச் சில நூற்றாண்டுகள் ஆண்ட பல்லவ மன்னர்களின் தொடர்பு கொண்டவர்கள் பண்டைய கம்போடியாவை ஆட்சி செய்த க்மேர் பேரரசர்கள். பல்லவர்கள் எப்படி தமிழகத்தின் மாமல்லபுரம், காஞ்சி, தொண்டைமண்டலம் ஆகிய பகுதிகளில் தங்கள் நுணுக்கமானக் கட்டுமானக் கலையை வளர்த்தனரோ அதற்குச் சற்றும் குறைவில்லாது கம்போடிய க்மேர் அரசர்களும் பிரமாண்டமான கலை வடிவங்களைப் படைத்திருக்கின்றனர்.


தமிழகத்தைப் போலவே தொடர்ச்சியாகப் பல போர்களைச் சந்தித்திருக்கின்றது கம்போடியா. கம்போடியாவின் நில அமைப்பைக் காணும் போது அது வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய மூன்று பெறும் நாடுகளை எல்லையாகக் கொண்டிருப்பதைக் காணலாம். இதுவே கம்போடியா தொடர்ச்சியாக இந்த நாடுகளை முன்னர் ஆட்சி செய்த பேரரசுகளினால் போர் தொடுக்கப்பட்டு இன்னல்களை எதிர்கொண்ட அமைதியற்ற நிலையை உருவாக்கியிருந்தது. கி.பி18ம் நூற்றாண்டில் தாய்லாந்தும் வியட்நாமும் கம்போடியாவின் மீது யார் ஆட்சி செலுத்துவது என்று பிரச்சனையை கிளப்ப, வியட்நாமிய பண்பாட்டினை கம்போடியர்கள் மீது திணிக்கும் முயற்சிகளும் எழ ஆரம்பித்தன. தாய்லாந்தும் வியட்நாமும் கம்போடியாவை இணைந்து ஆட்சி செய்யும் முடிவையும் எடுத்தன. அப்போது பிரெஞ்சுக் காலணியாக இருந்தது வியட்நாம். 1863ம் ஆண்டு தாய்லாந்தினால் கம்போடியாவில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மன்னர் நொரோடொம் ப்ரோம்போரிராக் தாய்லாந்திடம் தனது நாட்டிற்கான பாதுகாப்பிற்காக உதவி கேட்க, தாய்லாந்து மன்னருக்கும் பிரான்சுக்குமிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆயினும் பிரெஞ்சுக் காலணியாகவே கம்போடியாவின் பெரும் பகுதி இருந்தது. பின்னர் 2ம் உலகப்போரின் காலத்தில் ஜப்பானியப் படைகளின் தாக்கம், அதன் பின்னர் தொடர்ந்த வியட்நாமின் தாக்குதல் என அமைதியின்றி கம்போடிய மக்களின் வாழ்க்கை தொடர்ந்தது. 

1989ம் ஆண்டு அமைதிக்கான முன்னெடுப்புக்கள் தொடங்கின. 1991ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாரீசில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சுதந்திர கம்போடியப் பேரரசின் மன்னராக மன்னர் நோரோடோம் சிகானுக் பொறுப்பேற்றார். மாமன்னர் உள்ள நாடு என்ற போதும் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அரசியல் கட்சிகள் செயல்படும் சட்டமன்ற அமைப்புடன் கூடிய ஆட்சி இன்று தொடர்கின்றது. இப்படி தொடர்ச்சியான பலபல அரசியல் மாற்றங்களைச் சந்தித்திருக்கும் நாடுதான் கம்போடியா. கம்போடியாவின் முக்கிய மதமாகத் திகழ்வது பௌத்தம். இலங்கையிலிருந்து தேரவாத புத்தம் கி.பி 12ம் நூற்றாண்டில் கம்போடியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கம்போடியாவின் பல பகுதிகளில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டன. பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிலைகள் வடிக்கப்பட்டன. பிரம்மாண்டமான அங்கோர் தோம் கோயில் வளாகத்தில் வெவ்வேறு திசைகளில் அமைக்கப்பட்டுள்ள போதிசத்துவர் அவலோகதேஷ்வரரின் வடிவங்கள் உலகின் வேறெங்கும் காணக்கிடையாத அரும்பெரும் பொக்கிஷங்கள். இத்தகைய கட்டுமானக் கலை, சிற்பக்கலை ஆகியவற்றினைச் சுற்றி அமைந்த வரலாற்றினைச் சிறப்பாக பதிந்து இன்று கம்போடியா வருகின்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு வரலாற்றுத் தகவல்களை வழங்கும் ஆய்வுக்கூடமாகத் திகழ்கின்றது அங்கோர் தேசிய அருங்காட்சியகம். 
 அங்கோர் தேசிய அருங்காட்சியகம் அங்கோர் நகரைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளின் சேகரிப்புக்களை உள்ளடக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சியாப் ரீப் நகரில் உள்ள இந்த அருங்காட்சியகம் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. கீழ்த்தளம் தவிர்த்து மேலும் இரண்டு தளங்களில், எட்டு தனித்தனியான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை
  • கண்காட்சி அறிமுகம் 
  • க்மேர் நாகரிகம் 
  • சமயமும் நம்பிக்கையும் 
  • க்மேர் பேரரசுகள் 
  • அங்கோர் வாட் 
  • அங்கோர் தோம் 
  • கல்லின் கதை 
  • அப்ஸரசுகளின் அழகு 
என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ளன. 

சமயமும் நம்பிக்கையும் என்ற கருப்பொருளில் அமைந்திருக்கும் காட்சிக்கூடம் இந்த அருங்காட்சியகத்தின் தனிச்சிறப்பு எனலாம். இந்தக் கண்காட்சிப் பகுதியில் மட்டும் ஆயிரம் புத்தர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையில் அமைந்த புத்தரின் வடிவங்கள், நின்ற நிலையில், சாய்ந்த நிலையில், அமர்ந்த நிலையில், யோக நிலையில், ஐந்தலை நாகத்தின் குடையின் கீழ் அமர்ந்த நிலையில் என பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிற்பங்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கோர் வாட் கண்காட்சிக் கூடம் அங்கோர் வாட் கோயிலின் வரலாற்றை விளக்கும் பகுதியாக அமைந்துள்ளது. கோயிலின் ஆரம்பகால வரலாறு, பேரரசுகள், மன்னர்கள் பற்றிய தகவல்கள் என்பன போன்ற தகவல்கள் இங்குக் கிடைக்கின்றன.   இதனை அடுத்து வரும் அங்கோர் தோம் கண்காட்சிப் பகுதி அங்கோர் தோம் பற்றியும் பாயோன் கோயிலைப் பற்றியும் விளக்கம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  கல்லின் கதை எனும் பகுதியில்  பல்லவ கிரந்தத்திலும் சமஸ்கிருதத்திலுமான கல்வெட்டுக்கள் பல இங்குள்ளன. பண்டைய தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.  இவை வாசிக்கப்பட வேண்டும்.


இங்குள்ள சேகரிப்பில் புத்தர் சிலைகள் மட்டுமன்றி போதிசத்துவர், அவலோகிதேஷ்வரர், விநாயகர், விஷ்ணு, பிரம்மா, சிவலிங்க சிற்பங்களும் உள்ளன. இவற்றோடு பாயோன், பாந்தே ஸ்ரீ, அங்கோர் சிற்பக் கட்டுமானக் கலைகளை விளக்கும் உடைந்த பகுதிகளில் கண்காட்சிப் பகுதியும் உள்ளது. நுணுக்கமான க்மேர் கலை வடிவத்தின் தனித்தன்மைகளை இப்பகுதியில் கண்டு மகிழலாம். 


வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடம் அளப்பரியது. கம்போடிய மண்ணின் கலைத்திறனையும் அந்நாட்டினை ஆண்ட பேரரசுகளின் ஆளுமைத்திறனையும் படைப்புக்களையும் ஒரு சேர அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த அருங்காட்சியகம் அதற்கு நிச்சயம் உதவும். சியாம் ரீப் நகரில் தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வினை இங்கு செல்கின்ற ஒவ்வொருவருக்கும் தருகின்றது கம்போடியாவின் கோயிற்கலை.

அருங்காட்சியகத்தின் முகவரி:
No. 968, Vithei Charles de Gaulle, Khrum 6, 
Phoum Salakanseng, Khom Svaydangum, 
Siem Reap District, Siem Reap Province, 
Kingdom of Cambodia 

Monday, February 19, 2018

108. கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி

முனைவர் சுபாஷிணி

 Published in Vallamai : http://www.vallamai.com/?p=83470

என்ன.. ? கசாப்புக்கடைக்கு ஒரு அருங்காட்சியகமா என ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். கசாப்புக் கடைக்கென்றே பிரத்தியேகமாக அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றியது தான் இந்தப் பதிவு.
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இறைச்சி உணவு பற்றி விவரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. ஜெர்மனியில் மட்டுமே மூன்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் கசாப்புக் கடை பற்றிய தகவல்கள் சொல்லும் அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில், ஒரு 16ம் நூற்றாண்டு அழகிய மரவேலைப்பாட்டு கட்டிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கசாப்புக்கடை அருங்காட்சியகம்.

பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் இறைச்சி உணவே மக்களின் முக்கிய உணவாக அமைகின்றது. தென் அமெரிக்காவிற்கான கடல்வழிப்பயணங்கள் 14ம், 15ம் நூற்றாண்டு வாக்கில் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர்தான் ஐரோப்பாவில் உருளைக்கிழங்கும், தக்காளியும், குடை மிளகாயும், பிற ஏனைய காய்கறிகளும் அறிமுகமாகின. அதற்கு முன்னர் கோதுமை, சோளம், பயிர்கள், குறிப்பிடத்தக்க முட்டைகோஸ் வகை காய்கறிகளும், பழங்களும், ஓரிரண்டு வகை தாவரங்களும் மட்டுமே மரக்கறி உணவு வகையில் சாப்பிடப்படுவனவாக இருந்தன. இவற்றை விட ஐரோப்பிய மக்களின் மிக முக்கியமான உணவாக அமைந்தது இறைச்சி உணவு தான். அதிலும் ஜெர்மானியர்களை எடுத்துக் கொண்டால், பண்டைய ஜெர்மானிய மக்களின் உணவு கலாச்சாரத்தில் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, மான்கள், காட்டுப்பன்றி, பைசன் போன்றவை வேட்டையாடி விரும்பிச் சாப்பிடப்பட்ட உணவாக அமைந்தன.

கோதுமை, சோளம் போன்ற தானியங்களைக் கொண்டு ரொட்டி தயாரிப்பது பண்டைய காலம் தொட்டு ஐரோப்பா முழுமைக்கும் வழக்கில் இருந்தது. பயிர்களும், காய்களும் பழங்களும் கோடைக்காலத்தில் விளைவதால் அவற்றைக் குளிர்காலத்திலும் இளவேனிர் காலத்திலும் பயன்படுத்தும் வகையில் இவற்றைப் பாடம் செய்து வைக்கும் கலையை பெருவாரியாக வளர்த்தனர். இதில் இறைச்சியைப் பாடம் செய்து பத்திரப்படுத்தும் வகை, உப்புக் கண்டம் போட்டுக் காய வைத்துப் பாதுகாக்கும் முறை, அரைத்து வெவ்வேறு பொருட்களுடன் கலந்து அவற்றைப் பதனிட்டு பாதுகாத்து ஆண்டு முழுமைக்கும் தேவைப்படும் உணவுத்தேவைக்குப் பயன்படுத்தும் முறை என இம்மக்கள் பெருவாரியாக ஆராய்ந்து இக்கலையை வளர்த்தனர்.இன்றைய காலகட்டத்தில் உலகின் பல நாடுகளுக்கான தொடர்புகள் எல்லா நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது மக்களின் கலாச்சாரத்திலும் ஊடுருவத் தொடங்கிவிட்டது. சீனர்கள், கொரியர்கள், இலங்கையர்கள், இந்தியர்கள், தாய்லாந்துக்காரர்கள், வியட்நாமியர்கள், தென் அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள், மத்திய கிழக்காசிய மக்கள் என பல கலாச்சாரப் பின்னனி கொண்டவர்கள் ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து உள்ளூர் மக்களுடன் வாழ்கின்றனர். வந்து விட்டுச் செல்லும் விருந்தாளிகளாக இல்லாமல் ஐரோப்பாவையே தங்கள் வாழ்விடமாக இந்த மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்றாலும் கூட தங்கள் தாயகத்தின் உணவு முறைகளை இத்தகைய மக்கள் தொடர்ந்து இந்தப் புதிய நிலத்திலும் கடைப்பிடிப்பதால் ஐரோப்பாவின் பல மூலை முடுக்குகளிலும் ஆப்பிரிக்க உணவு, சீன உணவு, தாய்லாந்து உணவு, மெக்சிக்கன் உணவு, இந்திய உணவு, அரேபிய உணவு என்பவை பரவி விட்டதை இங்குக் காணப்படும் உணவகங்களைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம். இப்படி நிலமை மாற்றம் கண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட இறைச்சி உணவையே பிரதான உணவாக ஐரோப்பியர்கள் தொடர்கின்றனர் என்பதை இங்குள்ள பெருவாரியான உணவகங்களும் அங்காடிக் கடைகளும் கசாப்புக் கடைகளும் நமக்கு வெளிப்படுத்துகின்றன,

ஜெர்மனியைப் பொருத்தவரை இறைச்சி விற்பனை என்பது நான்கு வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. பெருவாரியான சூப்பர்மார்க்கெட்டுகளில் பாக்கெட் செய்யப்பட்ட இறைச்சிகள், வாரச் சந்தையில் கசாப்புக் கடைக்காரர் விற்கும் இறைச்சி, பதப்படுத்தி சோசேஜ் வகையில் விற்கப்படும் இறைச்சி, கிராமப்பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வீட்டோடு அண்டிய வகையில் உருவாக்கியிருக்கும் கடைகளில் விற்கப்படும் இறைச்சி எனப் பிரிக்கலாம். ஜெர்மனியில் வாழும் துருக்கியரும் தங்கள் கடைகளில் மாடு, கோழி, வாத்து, போன்ற இறைச்சி வகைகளை விற்கின்றனர். இறைச்சி வகையோடு மீன்களும் கடல் உணவுகளும் இதே ரீதியில் விற்கப்படுகின்றன.


கசாப்புக் கடைக்காரர்கள் மெட்ஸ்கர் (Metzger) என்ற ஜெர்மானியச் சொல்லால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இது தொழில் பெயர். பண்டைய காலத்தில் இது குலத்தொழிலாக இருந்தது. இவ்வகை குலத்தொழில் பண்பாடு என்பது ஜெர்மனியில் கடந்த ஐந்நூறு அறுநூறு ஆண்டுக்கால கட்டத்தில் இல்லாது மறைந்து விட்டது. இன்று மெட்ஸ்கர் என்ற குடும்பப்பெயரை வைத்திருப்பவர்கள் மருத்துவராகவும், கால்பந்து விளையாட்டாளராகவும். ஆசிரியராகவும், பஸ் ஓட்டுநராகவும், பொறியியலாளராகவும் என பல்வேறு தொழிலைப் புரிவோராக உள்ளனர். இதேபோன்ற நிலைதான் ஏனைய குலத்தொழில்களுக்கும் ஏற்பட்டுள்ளன.

இறைச்சி உணவினைத் தயாரித்தலில் பயன்படுத்தப்படும் கருவிகள் பற்றிய தகவல்களைப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்தவும், பண்டைய காலம் தொட்டு இன்று வரை கசாப்புக் கடைத் தொழிலாளர்களின் தொழில் வாழ்க்கை எப்படி அமைகின்றது என்பதை விவரிக்கும் வகையிலும்  இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளனர். ஏனைய அருங்காட்சியகங்களைப் போல இவை காலை முதல் மாலை வரை திறக்கப்படுவதில்லை. மாறாக நண்பகல் 12க்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு இந்த அருங்காட்சியகம் மூடப்படுகின்றது. பொது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் ஒரு விவசாயி வாழ்க்கையை விளக்கும் வகையில் காய்கறிகள், முட்டைகள், இறைச்சி போன்றவற்றை சந்தையிலிருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்தியும் வைக்கின்றனர்.

போப்லிங்கன் நகரின் பழைய கிராமத்தின் மையப்பகுதியிலேயே பழமையான ஒரு அழகிய கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மாறுபட்ட கோணத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை இங்கு வருபவர்கள் கண்டு செல்வது இறைச்சி பதனிடும் முறைகளைப் பற்றியும் கசாப்புக் கடைக்காரர்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்குவதாகவும் நிச்சயம் அமையும்.
இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
Address: Fleischer Museum Boeblingen,   Marktpl. 27, 71032 Böblingen
Phone: 07031 6691691

அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா?

Wednesday, February 14, 2018

107. கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம், கரூர், இந்தியா

முனைவர் சுபாஷிணி


கருவூர், கரூர், வஞ்சி என அழைக்கப்படும் கரூர் நகரம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம் ஆகிய ஆறு வட்டங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டமாக கரூர் மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த கரூர் 1995ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.

தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சிறப்பினைக் கொண்ட நகரங்களில் கரூர் நகரமும் ஒன்று. கடந்த நூறாண்டில் கரூர் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும், அமராவதி நதிக்கரையில் கிடைத்த தொல்லியல் சான்றுகளும் தமிழகத்தின் பழம் பெரும் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் கண்டுபிடிப்புகளாக அமைந்துள்ளன. அது மட்டுமன்றி, தமிழகத்தோடு அன்றைய கிரேக்க, ரோமானியப் பேரரசு கொண்டிருந்த வணிகத் தொடர்புகளைத் துல்லியமாகச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டும் வகையிலும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி இன்றளவும் முழுமையாக தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத நிலைத் தொடர்கிற அதே வேளை, இதுவரை கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகள் அளித்திருக்கும் தகவல்கள் தரும் செய்திகளான சங்ககாலம், மற்றும் அதன் தொடர்ச்சியான காலத்து வரலாற்றினை, நாம் புரிந்து கொள்ள உதவும் முக்கிய அளவு கோலாக இந்த ஆய்வு முடிவுகள் திகழ்வதை நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.
கரூர் நகரின் மையத்தில் ஒரு சாலையின் ஒரு பக்கத்தில் வரிசையாகக் கடைகள் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள ஒரு பழமையான கட்டிடத்தில் கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும் போது நமக்கு ஏற்படும் உணர்வு ஒரு கிராமத்துப் பலசரக்குக் கடைக்குள் நுழைவது போன்ற உணர்வினைத் தருவதாக இருக்கின்றது. அருங்காட்சியகத்தின் உள்ளே பாதுகாக்கப்படுகின்ற அரும்பொருட்களோ தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கானச் சான்றுகளாக அமைந்து நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றன. வரிசை வரிசையாகக் கண்ணாடி அலமாரிகளுக்குள் வைத்துப் பாதுகாக்கப்படும் சங்க காலத்தைய ரோமானியர்கள் தொடர்பினை வெளிப்படுத்தும் காசுகள், கரூரின் வீரர் மரபை வெளிப்படுத்தும் புலிக்குத்திக்கல் நடுகற்கள், பண்டைய தமிழர் மரபில் ஈமக்கிரியைச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழி, ஓலைச்சுவடி நூல்கள் ஆகியன இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்களுக்குக் கரூர் பகுதியின் மீது கவனம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது அமராவதி நதிக்கரையில் 1806ம் ஆண்டு வாக்கில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தில் அமைந்த பண்டைய ரோமானிய காசுகள் எனலாம். கிடைத்த குறுகிய காலத்திலேயே அவற்றில் பல காணாமல் போயின. அவற்றுள் ஒரு சில நாணயங்கள் மட்டும் அருங்காட்சியக அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டன. இப்படி சேகரித்துப் பாதுகாக்கப்பட்ட காசுகளை அறிஞர்கள் ஆராயத்தொடங்கியமைதான் இப்பகுதியில் சங்க காலத்தில் பண்டைய ரோமானிய அரசு கடல் வழி வணிகத்தை மேற்கொண்டிருந்தமையும், ரோமானியர்கள் இப்பகுதிக்கு வந்து தங்கியிருந்து வர்த்தக முயற்சிகளை மேற் கொண்ட செய்திகளையும் வெளிப்படுத்திய ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. தொடர்ச்சியாக கரூர் பகுதியில் பண்டைய ஆபரணங்களும் புராதனச் சின்னங்களும் மேலும் கிடைக்கவே, இப்பகுதி தொல்லியல் அறிஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் ஒரு பகுதியாக மாறியது. உலக வரைபடத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய நகரமாகவும் கரூர் நகரின் புகழ் உயர்ந்தது.

தொடர்ச்சியாக நிகழ்ந்த ஆய்வுகள் கரூர் நகரின் பண்டைய முக்கியத்துவம் பற்றிய ஆய்வுகளை ஆராய்வதாக அமைந்தன. சேர மன்னர்களின் செயல்பாடுகள், சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடும் இலக்கியச் செய்திகள் ஆகியன கரூர் நகரம் சேரப் பேரரசின் ஆட்சி காலத்தில் மிக முக்கியப் பங்கு வகித்த ஒரு நகரமாகத் திகழ்ந்தமையை உறுதி செய்வதாக அமைந்தது. படிப்படியாக நிகழ்ந்த இலக்கிய, தொல்லியல்,புராதனச் சின்னங்களின் ஆய்வுகள் கரூர் நகரமே பண்டைய சோழப் பேரரசின் தலைநகரமாக ‘வஞ்சி’ என்ற பெயருடன் திகழ்ந்த நகரமே இந்தக் கரூர் என்ற செய்தியையும் உலகத்திற்கு வழங்கியது. வஞ்சி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நகரம் தாம் கரூர் என்பதில் ஆய்வாளர்களிடையே இன்னமும் கருத்து வேறுபாடுகள் நிலவுவது தொடர்கின்றது. ஆயினும், கரூர் சேர பேரரசு புகழோடு இருந்த காலத்தில் அதன் தலைநகரமாக விளங்கிய ஒரு நகரமே என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.கல்வெட்டு ஆய்வாளர் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் புகழூர் கல்வெட்டினை வாசித்து ஆய்வு செய்து அதனை வெளியிட்டார். சங்க காலத்தின் மூன்று கட்டங்களிலான சேரப் பேரரசு பற்றிய விளக்கங்களில் கரூர் என ஆவணங்களில் குறிப்பிடப்படும் பகுதி புகழூரிலிருந்து ஏறக்குறைய பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஒரு பகுதியே என்றும், சேரர்களின் தலைநகரம் கரூர் நகரமே என்றும் உறுதி படுத்துவதாக அமைந்தன அவரது ஆய்வு முடிவுகள். இது மட்டுமன்றி அன்றைய தமிழக தொல்லியல் துறையினரால் இப்பகுதியில் அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்பட்டு, கரூரின் வரலாற்று முக்கியத்துவத்தினை உலகுக்குச் சொல்லும் பல அரும்பொருட்கள் இந்த ஆய்வுகளின் போது  அகழ்ந்தெடுக்கப்பட்டன. டாக்டர். நாகசாமியின் தலைமையில் 1974ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில், சேரப் பேரரசின் சின்னமும் ‘கொல்லிரும்புறை’ என்ற எழுத்தும் பொறித்த காசு கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாணயவியல் ஆய்வாளர் தினமலர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டெடுக்கப்பட்ட பல காசுகளில் மேலும் இரண்டு காசுகளில் முறையே ”மாக்கோட்டை”, ”கூட்டுவன் கோட்டை” என்ற தமிழ்ச்சொற்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேரப் பேரரசுகள் வெளியிட்ட காசுகள் இவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் மகுடம் வைப்பது போல அமைந்தது கரூர் நகரில் ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களின் கண்டுபிடிப்பான ஒரு மோதிரம். இந்த மோதிரம் 1991ம் ஆண்டு அமராவதி ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பும் அதனைத் தொடர்ந்து டாக்டர். நாகசாமியின் இந்த மோதிரம் பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரையும் அன்று வெளியிடப்பட்டபோது தொல்லியல் அகழ்வாய்வில் மட்டுமன்றி பெருமளவில் தமிழ் ஆய்வாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட வரலாற்றுச் செய்தியாக  இது அமைந்தது. 15.6 கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் அது. முகப்புப் பகுதி 5.5 மிமீட்டர் அளவுடன் அமைந்தது. அந்த மோதிரத்தின் முகப்புப் பகுதியில் கலை அழகின் உச்சம் என வர்ணிக்கத்தக்க வகையில் அமைந்த மிதுனச் சின்னம், அதாவது ஒரு ஆணும்-பெண்ணும் அன்புடன் நளினமாக நிற்கும் வகையில் அமைந்த சின்னம் ஒன்று பொறிக்கப்பட்ட வகையில் இந்த மோதிரம் அமைக்கப்பட்டிருந்தது. அச்சிறிய மோதிரத்தில் இத்தகைய ஒரு நளினம் மேலோங்கிய படைப்பினைப் படைத்த தமிழக பொற்கொல்லர்களின் நுணுக்கமான கலைத்திறனுக்கு உதாரணமாக பாராட்டுக்களுக்குரிய வகையில் இந்த மோதிரம் உருவாக்கப்பட்டிருந்தது. ஐயத்திற்கு இடமின்றி கி.பி.1 நூற்றாண்டின் சேரப் பேரரசின் அதிகாரப்பூர்வ அரச மோதிரம் இது என உறுதி செய்யப்பட்டது .
இந்த மோதிரத்தின் மேலுள்ள சங்க கால வாழ்வியலின் அடிப்படையான காதல் அன்பினைக் குறிக்கும் இந்தச் சின்னமே தமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ சின்னமாக இந்த அமைப்பு உருவான 2001ம் ஆண்டு முதல் திகழ்கின்றது. அன்பினை வலியுறுத்தும் மாண்பினை வாழ்வியல் நெறியாகக் கொண்டிருந்த பண்டைய தமிழரின் மரபினையும் மாண்பினையும் பிரதிநிதிக்க இச்சின்னத்தை விட வேறெதுவும் பொருந்தாது என்பது அன்று எனக்கும் பேரா.நா.கன்ணன் அவர்களுக்கும் மனதில் எழுந்த எண்ணமாக அமைந்ததன் விளைவே இந்த முத்திரை தமிழ் மரபு அறக்கட்டளையின் சின்னமாக அமையக் காரணமாகியது.

தமிழகத்தின் பல பகுதிகளில் வீரர்களின் வீரச்செயலைப் பிரதிபலிக்கும் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதை அவ்வப்போது ஊடகங்களின் வழி அறிகின்றோம். கரூர் நகரில் கண்டெடுக்கப்பட்ட, கரூருக்குப் புகழ்ச்சேர்க்கும் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டு, அவை இந்தக் கருவூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. கரூரில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.பி.8ம் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட இரண்டு நடுகற்களில் ஒரு நடுகல் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டும், ஒரு நடுகல் வட்டெழுத்துப் பொறித்த வகையிலும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுக்களே கரூர் நகரம் வஞ்சி என்றும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அழைக்கப்பட்டது என்பதை உறுதிசெய்வதாகவும் அமைகின்றன.

கரூரில் இதுவரை அடையாளம் காணப்பட்ட வரலாற்று அரும்பொருட்கள் கூறும் தமிழர் பண்டைய வரலாற்றுச் செய்திகள் ஏராளம். இதுவரை கண்டெடுக்கப்படாமல் கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் காணப்படும் தொல்லியல் புராதனச் சின்னங்களோ ஏராளம் ஏராளம். இவற்றை எப்போது நாம் அடையாளம் காணப்போகின்றோம்? இவற்றைக் கண்டெடுத்து எப்போது நாம் அவற்றை ஆய்வுக்குட்படுத்தி தமிழர் பண்டைய வரலாற்றுச் செய்திகளையும் வாழ்வியலையும் உலகுக்கு எடுத்துரைக்கப் போகின்றோம்? இவற்றிற்கும் மேலாக, இன்று கரூர் நகரில் இருக்கும் கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகத்தைப் புதுப்பித்து அதில் பாதுகாக்கப்படும் அரும்பொருட்களை மிகச் சிறப்பான முறையில் உலகுக்குக் காட்சிப்படுத்தி பெருமை கொள்ளப் போகின்றோம்?
இவையெல்லாம் இன்று நம் முன் நிற்கும் மிக முக்கியமான கேள்விகள் அல்லவா?

​துணை நூல்:
"Roman Karur", Dr.R.Nagasamy, 1995​ 

Monday, February 12, 2018

106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி

முனைவர் சுபாஷிணி
மனித உடல் ஆச்சரியங்கள் பல நிறைந்த ஒரு அதிசயப் பொருள். தாயின் கருமுட்டையில் தந்தையின் விந்துக் கலப்பு நிகழ்ந்து கருத்தரிக்கும் போது ஒரு குழந்தையின் உருவாக்கம் தொடங்குகின்றது. சிறு அணுவாக உருவாகி படிப்படியாக நரம்புமண்டல வளர்ச்சி, இருதய வளர்ச்சி, உடல் உருப்புக்கள் வளர்ச்சி எனப்படிப்படியாக வளர்ந்து 10 மாதங்கள் முடிந்து முழு குழந்தையாக தாயின் கருப்பையில் இருந்து குழந்தை வெளிவருவது நிகழ்கின்றது.
தொல்பழங்காலத்தில் பெண்ணின் வயிறு பெரிதாகி பின்னர் ஒரு மனிதக்குழந்தைப் பிறப்பதைப் பார்த்த மனிதர்கள் தம்மைப் போன்ற இன்னொரு விலங்கினை உருவாக்கும் சக்தி படைத்த பெண்ணையே தெய்வமாகச் சிலை வடித்து வழிபடும் வழக்கத்தை உருவாக்கித் தொடர்ந்தனர். உலகின் பல சமுதாயங்களில் மிகப்பழமையான தாய் தெய்வச் சிலைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் காலம் ஆராயப்பட்டு, அச்சிலைகள் உருவான பகுதிகளில் மக்கள் கொண்டிருந்த பண்பாட்டுக் கூறிகளை ஆராயும் ஆய்வுகள் பல நடந்திருக்கின்றன. இத்தகைய ஆய்வுகள் மனிதன் ஒரு குழந்தை பிறப்பை அவதானித்த தன்மைகளைக் கண்டறியும் வழிகளை ஆய்வுலகத்திற்கு வழங்கியிருக்கின்றன.
1
இன்று நமக்குக் கிடைக்கின்ற மிகப் பழமையான தாய் தெய்வ சிற்பங்கள் எனும் போது இன்றைய ஆஸ்திரியாவின் வில்லண்டோர்ஃப் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கிட்டிய Venus of Willendorf என்ற தாய் தெய்வத்தைக் குறிப்பிடலாம். இதன் காலம் கி.மு. 28,000லிருந்து 25,000 எனக்கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல இன்றைய துருக்கியின் காத்தாலோயுக் (Çatalhöyük ) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Çatalhöyük எனப்படும் தாய் தெய்வம் கி.மு. 5500லிருந்து 6000 எனக் கண்டறியப்பட்டுள்ளது, இதேபோல சிரியா, ஜெர்மனி, ஐக்கிய அரபு நாடுகள், பண்டைய பெர்சியா போன்ற நாடுகளிலும் இத்தகைய தெய்வ வடிவங்கள் பண்டைய மக்களின் வழிபாட்டில் இருந்தமையைக் காண்கின்றோம்.

மனித உடலை ஆராயும் முயற்சி பன்னெடுங்காலமாக அறிவியல் ஆய்வு நோக்கம் கொண்ட பலரால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. பல்வேறு காலகட்டங்களில் உடல்கூறு ஆய்வுகள் பல்வேறு சமூகங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று மேற்கத்திய ஆய்வுமுறைகள் உலகாளவிய அளவில் உடற்கூறு ஆய்வில் துரித வளர்ச்சியை அறிமுகப் படுத்தி செயல்படுத்தியிருப்பதால் மருத்துவத்துறை பன்மடங்கு வேகத்தில் வளர்ந்திருக்கும் சூழலை நாம் காண்கின்றோம். தமிழகச் சூழலில் உடல்கூறு ஆய்வுகள் என்பன இன்று நமக்கு அறிமுகமான புதியதொரு ஆய்வுத்துறை அல்ல. மாறாகச் சித்த வைத்திய முறையில் எப்படி மூலிகைகளை ஆராய்ந்து நோய்களுக்குத் தீர்வைக்கண்டு பிடித்தனரோ அதே போல உடலைக் கூறு செய்து பாகங்களை ஆராய்ந்து சோதனை மேற்கொண்டிருந்தனர் நம் மூதாதையர் என்பதனை நாம் மறந்து விடலாகாது. இத்தகைய ஆய்வுகளைச் செய்தோரை நமது சமூகத்தில் சித்தர்கள் என அடையாளப்படுத்தினர். இவர்கள் ஆய்ந்தறியும் விஞ்ஞானிகள் எனக் காண்பதை விடுத்து புனிதத்துவத்தை ஏற்றி வைத்தமையால் இவர்களது ஆய்வுகளை பொது மக்கள் பெருவாரியாகக் கற்றுப் பலனடைய வாய்ப்பு கிட்டாமல் போனது ஒரு துரதிட்டமே.
3
4 வார வளர்ச்சியில் குழந்தை
ஆனால் ஐரோப்பாவிலோ உடற்கூறு ஆய்வில் ஈடுபட்டோர் அவற்றை அறிவியலாகவும் அழகியலாகவும் காணும் முயற்சியைப் புகுத்தியமை உடற்கூறுகளை அறிந்து கொள்ளும் துறையில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டு இதனை மருத்துவ அறிவியல் துறையாக வளர்த்துள்ளது.
மேற்கத்திய உலகில் உடற்கூறு ஆய்வுகள் எனக் குறிப்பிடும் போது நமக்கு நன்கறிந்த லியோனார்டோ டாவின்சியின் பங்களிப்புக்கள் மிகச் சிறப்பானவை. மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு இறந்த மனிதர்களின் உடல்களைப் பெற்று, அவ்வுடல்களை கூறு செய்து, உடலின் பாகங்களைத் தனித்தனியாக எடுத்து அவற்றை ஓவியமாக வரைந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஓவியங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவருக்கு அடுத்தார் போல மேலும் பலர் தொடர்ந்தனர் என்றாலும், டாவின்சி இத்தகைய மனித உடற்கூறு பற்றிய ஓவியங்களை வழங்கி அறிவியலைக் கலைப்படப்பாக்கியதில் முன்னோடியாகத் திகழ்கின்றார் என்று குறிப்பிட வேண்டியது மிக அவசியமாகும்.
இன்று மருத்துவ உலகம் துரித வளர்ச்சி கண்டுள்ளது. ஒவ்வொரு வினாடியும் ஏராளமான புதிய நோய்கள் உருவாகிக்கொண்டேயிருக்கின்ற அதே வேளையில் ஒவ்வொரு விநாடியும் உலகின் பல மூலைகளில் நோய்களுக்கான நிவாரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருவதும் நிகழ்கின்றது.
4
மென்மையான தோல் போர்த்திய மனித உடலின் மேல் அழகிய ஆடைகளும் அணிகலன்களும் போட்டு அழகு பார்க்கின்றோம். அந்த தோலுக்குக் கீழ் உள்ள பாகங்களையும் அவை செயற்படும் முறைகளையும் பொதுவாக நாம் எண்ணிப் பார்ப்பது கிடையாது. இந்த பொது நிலை இருப்பதால் நமது சிந்தனையில் மனித உடல் என்பது ஒரு புனிதப் பொருளாகவோ, அல்லது காமப் பொருளாகவோ மட்டுமே பார்க்கும் மனம் வாய்த்து விடுகின்றது. அந்தக் கோணத்திலிருந்து விடுபட்டு தோலுக்குக் கீழே மறைந்திருக்கும் தசைகள், உடல் உறுப்புகள், நரம்புகள், இரத்த நாளங்கள், எலும்புகள், எனக் காணத்தொடங்கும் போது நமக்குக் கிடைக்கும் பார்வை ஒரு மாற்றுப் பார்வையாகவே அமையும். இந்தப் பார்வையை வழங்கும் வகையில் உலகின் சில நாடுகளில் மனித உடலைக் கூறு செய்து பாடம் செய்து அவற்றை ஆய்வில் ஆர்வம் உள்ளோருக்குக் கண்காட்சியாக ஏற்படுத்தியிருக்கின்றார்கள். ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், வட அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இத்தகைய உடற்கூறு கண்காட்சிக் கூடங்கள் அமைந்திருக்கின்றன. அத்தகைய ஒரு கண்காட்சிக் கூடம் தான் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் நகரில் இருக்கும் ”உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம்”.

”மகிழ்ச்சியளிக்கும் உடலின் பாகங்கள்” என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்திருக்கின்றனர். இதனை வடிவமைத்தவர்கள் டாக்டர்.குந்தர் வோன் ஹாகென்ஸ் மற்றும் டாக்டர்.அஞெலினா வேலி ஆகிய இருவருமாகும்.
இந்த அருங்காட்சியகத்தில் 200க்கும் குறையாத மனித உடலின் பாகங்கள் முழுமை யாகவும் பகுதிகளாகவும் எனக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்கனவாக, இங்குள்ள தாயின் கருப்பையில் வளர்ந்த 4 வாரம் தொடங்கி 8 வாரம் வரையிலான குழந்தைகளின் பாடம் செய்யப்பட்ட உடல்கள், கருகொண்ட தாயின் உடலில் குழந்தை முழுமையாக இருக்கும் வகையிலான ஒரு உடல், புகைபிடிப்பதனால் சேதப்பட்ட நுரையீரல், ரத்த நாளங்கள் பாயும் மனித முகம், தலை, மூளை, கால்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம். இங்குள்ள அனைத்து மாடல்களுமே மனிதர்களது உடலுறுப்புக்களேயாகும். இறப்பதற்கு முன்னர் தங்கள் உடலை மருத்துவ சோதனைக்காக அளித்த மனிதர்களின் உடல்களே இங்குப் பாடம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்திற்கு வருபவர்களுக்கு மனித உடலைப் பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கின்றன. உடல் உறுப்புக்களைக் கண்டு அஞ்சுவோரும், உடலை பாவப்பொருளாகவும் புனிதப் பொருளாகவும் நினைப்போரும் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்தால் உடலைப்பற்றி கொண்டிருக்கும் சிந்தனையில், தெளிவு தரும் வகையிலான அறிவியல் பூர்வமான தெளிவினை நிச்சயம் பெற முடியும்.
எத்தனையோ அதிசயங்களை நம் மனம் ஆசைப்பட்டுத் தேடி ஓடுகிறது. நாமே ஒரு அதிசயம் தான், நம் உடலும் ஒரு அதிசயம் தான், நம் உடலில் இயங்கும் உறுப்புக்களின் செயற்பாடுகளும் அதிசயம் தான் எனப் புரிந்து கொண்டால் பொய்யான அதிசயங்களில் நம் மனம் நாட்டம் கொள்ளாது.
போலித்தனத்தை துடைத்தொழிப்பதற்கும், மூட நம்பிக்கைகளை மனதிலிருந்து அகற்றுவதற்கும் அறிவியல் அறிவு ஒன்று தான் ஒரே வழி. அத்தகைய அறிவியல் பார்வையை வழங்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு ஜெர்மனிக்கு வருகை தருவோர் அனைவரும் வந்து பார்த்துச் செல்ல வேண்டும். இந்த அருங்காட்சியகத்தைப் பற்றிய முழு விபரங்களையும் https://bodyworlds.com/ என்ற வலைப்பக்கத்தில் பெறலாம்.

Monday, January 22, 2018

105. மார்க்கோ போலோ அருங்காட்சியகம், வெனிஸ், இத்தாலி

http://www.vallamai.com/?p=82926

முனைவர் சுபாஷிணி
மார்க்கோ போலோ என்ற பெயர் இன்று வணிக நிறுவனங்கள் சில தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர்களாக உள்ளன. சுற்றுலாத்துறை, உயர்தர ஆடைகள் என சில வணிக நிருவனங்கள் மார்க்கோ போலோவின் பெயரைத் தாங்கி செயல்படுவதை நாம் அறிந்திருப்போம். அந்தப் பெயருக்கு உரிய மார்க்கோபோலோ பற்றிய செய்திகளோடு இந்த அருங்காட்சியகப் பதிவு அமைகின்றது.
1
மார்க்கோ போலோ கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வணிகர். இவர் பிறந்து வளர்ந்தது இத்தாலியின் அழகு மிகு நகரமான வெனிஸ் நகரில். ஒரு வணிகராக உலகை வலம் வந்தவராக அறியப்பட்டவர் இவர். தன் சமகாலத்து ஏனைய கடலோடிகளை விட மார்க்கோ போலோ பல வகைகளில் சிறப்பித்துக் கூறப்படுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. இவரது பயணத்தில் 24 ஆண்டுகள் முழுமையாக ஆசிய கண்டத்திலேயே தன் வாழ்க்கையைச் செலவழித்திருக்கின்றார். அதுமட்டுமன்றி இவரது பயணக்குறிப்புக்கள் இன்று நம்மில் பலருக்கு ஐரோப்பா மட்டுமன்றி ஆசிய நாடுகளின் வரலாற்றின் சில பகுதிகளை அறிந்து கொள்ள உதவுவனவாக அமைந்துள்ளன எனலாம். மங்கோலிய மாவீரன் குப்ளை கான் தன் ஆளுமைக்குக் கீழ் வைத்திருந்த சீனாவிற்கு வருகை தந்து அங்கு குப்ளை கானின் விருந்தினராகவும் பல ஆண்டுகள் இருந்தார் என்பது மார்க்கோ போலோவுக்குள்ள தனிச்சிறப்பு.
மார்க்கோபோலோ பிறந்த இத்தாலியின் வெனிஸ் நகரம் ஐரோப்பாவின் வணிக மையமாகத் திகழ்ந்த காலமது. 1254ம் ஆண்டு இவர் பிறந்தார். இவரது தந்தையாரும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கூட வணிகத்திற்காகச் செல்வது என்று மட்டுமல்லாது நாடுகளைச் சுற்றிப்பார்த்து வருவதை இயல்பாகக் கொண்டிருந்தனர். இவர்கள் குடும்பத்தினருக்கு கான்ஸ்டண்டினோப்பல் (Constantinople), அதாவது இன்றைய துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் ஒரு வர்த்தக அலுவலகம் இருந்தது. மார்க்கோபோலோவுக்கு 15 வயது இருக்கும் போது இவரது தந்தையார் நிக்கோலோவும், இவர் சிற்றப்பா மாஃபியோவும் ஒன்பது ஆண்டுகள் கிழக்கு நோக்கி அவர்கள் சென்றிருந்த பயணத்தை முடித்துக் கொண்டு வெனிஸ் திரும்பியிருந்தனர். இவ்வகை குடும்பப்பின்னணி மார்க்கோபோலோவிற்கு வணிகப் பயணங்களைப் பற்றிய இயல்பான ஒரு அறிமுகத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தியிருந்தது.
3
ஒன்பது ஆண்டுகள் பயணத்திற்குப் பின்னர் வீடு திரும்பிய மார்க்கோபோலோவின் தந்தையும் சிற்றப்பாவும் ஆசிய கண்டத்தை நோக்கிய பயணத்தைத் திட்டமிட்டனர். இம்முறை ஆசியாவை நோக்கிய பயணமாக இது அமைந்தது. ஆசியப்பயணத்தைத் தொடங்கிய போதே இவர்களுக்குப் பயணம் நிறைவளிப்பதாக அமைந்தது. செங்கிஸ்கானின் மகன் பர்கா கானின் அரண்மனைக்குச் சென்று அங்கு இவர்கள் கொண்டு வந்திருந்த விலையுயர்ந்த ஆபரணங்களைக் காட்டி அவற்றை நல்ல லாபத்திற்கு விற்றனர். அந்தக் காலகட்டத்தில் அப்பகுதியில் போர் மூண்டது. பர்கா கானின் உதவியுடன் அங்கேயே தங்கியிருந்தனர். அந்த வேளையில் இவர்கள் தாத்தார் மொழியைக் கற்றனர். இது இன்றைய ரஷ்யாவின் ஒரு பகுதி. அக்காலகட்டத்தில் செங்கிஸ்கான் கைப்பற்றிய பல பகுதிகள் அடங்கிய பேரரசுக்குள் அடங்கிய ஒரு பகுதி எனலாம். தாத்தார் மொழியையும் பண்பாட்டையும் மார்க்கோ போலோ குடும்பத்தினர் கற்றுக் கொண்டதால் இவர்கள் பயணம் மேலும் எளிதானது. அப்போது சீனாவையும் மங்கோலியப் பேரரசு கைப்பற்றியிருந்தது அதனை குப்ளை கான் ஆட்சி செய்துகொண்டிருந்தார். போலோ சகோதரர்களுக்குத் தாத்தார் பண்பாட்டு அறிமுகம் இருந்தமையால் குப்ளை கானை சென்று காணும்படி சிலர் தூண்டவே, இவர்கள் குப்ளை கானின் அரசவைக்குச் சென்றனர்.


குப்ளை கானுக்கு ஐரோப்பாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவல் இருந்தது. தாத்தார் மொழி தெரிந்த போலோ சகோதரர்களைச் சந்தித்தபோது மேலும் ஐரோப்பாவை அறிந்து கொள்ள இது வாய்ப்பாகும் என அவர் எண்ணினார். மார்க்கோ போலோவின் தந்தையையும் சிற்றப்பாவையும் தனது தூதுவர்களாக நியமித்து வாட்டிக்கன் நகருக்குச் சென்று அங்கு போப்பை சந்தித்து தனக்கு 100 கிறிஸ்துவ பாதிரிமார்களையும், விஞ்ஞானிகளையும் அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டார் குப்ளை கான். நிக்கோலோவும் மாஃபியோவும் குப்ளை கான் கொடுத்த தங்கத் தட்டில் தகவல் பொறித்த ஆவணத்தையும், பயணத்தில் பாதுகாப்பிற்காகக் கொடுத்த சான்றிதழையும் எடுத்துக் கொண்டு 1269ம் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 1271ம் ஆண்டில் இவர்கள் மீண்டும் குப்ளை கானைச் சந்திக்க வெனிஸிலிருந்து புறப்பட்டனர். அப்போது 17 வயது நிரம்பிய மார்க்கோ போலோவையும் தம்முடன் அழைத்துக் கொண்டனர். இப்பயணம் இவரது வாழ்க்கையின் முதல் பயணம் மட்டுமல்லாது முக்கியப் பயணமாகவும் அமைந்தது. குப்ளை கானின் அரசவையில் இவர்களுக்கும் இவர்கள் உடன் வந்த பாதிரிமார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மன்னரின் அரண்மனையிலேயே இவர்கள் தங்கினர் என்றும் 25கிமீ தூர அளவிலான வனத்தில் மன்னர் தன் ஓய்வு நாட்களைக் கழித்ததைப் பற்றியும் மார்க்கோ போலோ தன் குறிப்புக்களில் எழுதியிருக்கின்றார். வெனிஸிலிருந்து குப்ளை கான் அரண்மனைக்கு வந்தவர்கள் அங்கேயே 17 ஆண்டுகள் தங்கியிருந்தனர் என்றும் இக்குறிப்புக்களால் அறிய முடிகின்றது. நில மார்க்கமாகப் பட்டுப் பாதை வழியாக முதலில் சென்று, பின்னர் கடல்மார்க்கமாக சீனாவின் ஷங்டு நகரிலிருந்து மீண்டும் தமது பயணத்தை மார்க்கோ போலோவின் குழு தொடங்கியது.
கடல் பயணத்தின் போது இவர்கள் இந்தியாவின் தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் இறங்கி அங்கு வணிகம் செய்தனர் என்றும் பின்னர் கேரள கடற்கரை துறைமுகப் பகுதிகளிலும் மிளகு போன்றவற்றை வாங்கிக் கொண்டு வெனிஸ் நகரம் திரும்பினர் என்றும் இவரது நூல் குறிப்புக்களும் வரைபடங்களும் ஓவியக் குறிப்புக்களும் குறிப்பிடுகின்றன. ஏறக்குறைய 20,000 கிலோமீட்டர் தூரம் மார்க்கோ போலோவின் ஆசியப் பயணம் அமைந்தது. ஒரு வணிகராக, நாடோடியாக, கடலோடியாக, இவர் தன் வாழ்க்கையை, பயணத்திலேயே பல ஆண்டுகளைக் கழித்திருக்கின்றார்.
4
தனது 24 ஆண்டுகள் பயணத்தை முடித்து வெனிஸ் திரும்பிய மார்க்கோபோலோ, வெனிஸ் நகரில் அப்போது ஆட்சி செய்த அரசால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 1299ம் ஆண்டு விடுதலை பெற்று சிறையிலிருந்து வெளிவந்து வெனிஸ் நகரில் தன் வர்த்தகத்தொழிலை விரிவாக்கினார். அங்கேயே ஒரு பெண்ணை மணந்து அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர். 1324ம் ஆண்டு தனது 70ம் வயதில் இவர் காலமானார். வெனிஸ் நகரின் சான் லொரேன்சோ தேவாலயத்தில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மார்க்கோ போலோவின் இல்லம் இன்று ஒரு அருங்காட்சியகமாக செயல்படுகின்றது. உலகின் பல நாடுகளில் உள்ள பெரிய அருங்காட்சியகங்களில் இத்தாலிய அரசு தற்காலிக மார்க்கோ போலோ கண்காட்சியையும் ஏற்படுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
5
மார்க்கோ போலோவின் நூல் The Travels of Marco Polo அல்லது The Description of the World இவரது இளம் வயது பயணக் குறிப்புக்களுடன் தொடங்குகின்றது. இன்றும் முக்கிய வரலாற்றுத் தகவல்களை வழங்கும் முக்கிய ஆவணமாக இந்த நூல் திகழ்கின்றது. மார்க்கோ போலோ ஐரோப்பாவிலிருந்து ஆசிய பயணம் மேற்கொண்டு சீனாவை அடைந்த முதல் ஐரோப்பியர் அல்ல. ஆயினும், மிக விரிவான பயணக் குறிப்பை விட்டுச் சென்ற ஒரு பயணி என்ற சிறப்புதான் அவரது புகழுக்குக் காரணமாக இருக்கின்றது. இவரது பயணக் குறிப்புக்களையும் வரைபடங்கள் மற்றும் அவற்றின் குறிப்புக்களையும் வாசித்து, அதனால் ஈர்க்கப்பட்டு தான் கிறிஸ்டஃபர் கொலம்பஸ் போன்ற கடலோடிகள் புதிய நாடுகளைத் தேடித் தங்கள் தேடும் பயணத்தைத் தொடங்கினர் என்பதில் சந்தேகமில்லை.

Friday, January 5, 2018

104. கோத்தே (Goethe) அருங்காட்சியகம், டூசல்டோர்வ், ஜெர்மனி

http://www.vallamai.com/?p=82556

முனைவர் சுபாஷிணி
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று. 
(திருக்குறள்)
உலகில் மனிதர்கள் பிறக்கின்றோம். வாழ்கின்றோம். மறைகின்றோம். மனிதன் தான் வாழும் இப்பூமிக்கு தன் வாழ்வின் பயனாக விட்டுச் செல்லும் படைப்புக்கள் தான் உலகில் நிகழும் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வித்தாகின்றன. உலகுக்கு நற்காரியங்களைச் செய்து நன்மைகள் படைத்துச் செல்வோரால் தான் பூமி செழிக்கின்றது. அறிவியல் கண்டுபிடிப்புக்களையும், கலைப்படைப்புக்களையும், இலக்கியப் படைப்புக்களையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்துச் செல்வோரே இவ்வுலகம் மேன்மையை நோக்கிச் செல்ல உதவும் கருவிகளாக இயங்குகின்றனர். அத்தகையோரில் ஒருவர் தான் கோத்தே (Johann Wolfgang von Goethe).
as1
யோஹான் வோல்வ்காங் கோத்தே 1749ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ம் நாள் ஜெர்மனியின் ப்ராங்பர்ட் நகரில் பிறந்தவர். கவிஞர், இலக்கியவாதி. தத்துவ அறிஞர், அரசியல் பிரமுகர், அறிவியல் ஆய்வறிஞர், தாவரவியல் அறிஞர் என்ற பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர். ஜெர்மனி மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றில் பரவலாக அறியப்பட்டவர் இவர். ஆம், கோத்தே கல்விக்கழகம் (Goethe Institute) என்ற பெயரில் உலக நாடுகள் பலவற்றில் ஜெர்மானிய மொழி பாடங்களை நடத்தும் நிறுவனத்தைப் பற்றி பலர் அறிந்திருக்கலாம். மொழித்துறை என்று மட்டுமல்லாது உலகளாவிய அளவில் இலக்கியப் படைப்புக்களை அங்கீகரிக்கும் செயல்பாடுகளைச் செயல்படுத்தி வரும் ஒரு நிறுவனமாகவும் Goethe Institute செயல்பட்டு இன்று செயல்பட்டு வருகின்றது.
as2
தனது 25வது வயதிலேயே இளம் படைப்பாளியாக அறிமுகம் பெற்று சிறப்பு பெற்றவர் கோத்தே. இவரது முதல் நாவல் The Sorrows of Young Werther இன்றளவும் இலக்கிய உலகில் மிக உயர்வாகப் பேசப்படும் ஒரு படைப்பாகத் திகழ்கின்றது.
ஆரம்பக் காலத்தில் கோத்தே லைப்ஸிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சட்டத்துறை பட்டதாரியாக 1768ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர். சட்ட நுணுக்கங்களை அறிந்ததில் இருந்த நாட்டம் போலவே கவிதை எழுதுவதிலும் அவருக்குத் தீவிர நாட்டம் இருந்தது. லைப்ஸிக் பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்து பிரான்சின் எல்ஸாஸ் பகுதியில் உள்ள ஸ்ட்ராஸ்புர்க் பல்கலைக்கழகத்தில் இவர் கல்வியைத் தொடர்ந்தார். எல்ஸாஸ் நகரம் அவருக்கு விரிவான உலகத்தைக் காட்டியது. இவரது இலக்கியப் படைப்புக்கள் இக்காலகட்டத்தில் செம்மை பெற்றன. பல கவிதைகளை எழுதினார். பல கவிஞர்களின் நட்பும் இவருக்கு ஏற்பட்டது.
வைமாருக்குச் சென்று அங்கே அந்த நகரத்தின் பிரபுவினது அமைச்சகத்தில் உயர் நிலை அதிகாரியாகப் பணியாற்றினார். உலகப்பிரசித்தி பெற்ற யேனா பல்கலைக்கழகத்தைச் சீரமைக்கும் முயற்சியில் பங்கெடுத்து கொண்டு சீரமைப்புக்குத் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தினார். வைமார் நகரின் தாவரப் பூங்கா அமைப்பில் இவரது பங்களிப்பு மிகப்பெரிது. இன்று இந்தப் பூங்கா ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருக்கும் புராதனச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றது என்பதும் இவரது சிறப்பை உலகுக்கு எடுத்துக் கூறும் சான்றாக அமைகின்றது.
as3
கோத்தே அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பு ”தாவரங்களின் பரிணாமம்” ( Metamorphosis of Plants) என்ற தலைப்பில் அவர் எழுதி வெளியிட்ட தாவரவியல் ஆய்வு நூலாகும். இத்தாலியில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு வந்ததன் பின்னணியில் இந்த நூலை எழுதி 1788ம் ஆண்டு வெளியிட்டார். தாவரவியல் அறிவியலில் ஈடுபட்டதைப் போல நிறங்களைப் பற்றிய ஆய்விலும் உடற்கூறு ஆய்விலும் இவருக்கு நாட்டமிருந்தது. இத்துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றார். வைமார் நகரில் இவர் நாடக சபையின் இயக்குநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் வழி அவருக்கு ஜெர்மனியின் மிகப் பிரசித்ஹ்டி பெற்ற கவிஞராகிய ஃப்ரெடெரிக் ஷில்லர் அவர்களது நட்பு கிட்டியது. இந்த நட்பு நெடுங்காலம் நீடித்தது. வைமார் அரும்பொருள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள கல்லறையில் கோத்தேயின் சவப்பெட்டிக்குப் பக்கத்தில் ஷில்லரின் சவப்பெட்டி உள்ளது என்பதைக் கவனிக்கும் போது இந்த இரு பெரும் ஆளுமைகளும் கொண்டிருந்த நல்ல நட்பை நாம் உணர முடியும்.
கோத்தே அவர்கள் தனது நெடுநாள் காதலியான கிறிஸ்டினாவை 1806ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 18 ஆண்டுகள் இணைந்தே வாழ்த்து பின்னர் திருமணம் முடித்துக் கொண்டனர். திருமணத்திற்கு முன்னரே இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் 4 குழந்தைகள் இறந்து போயினர்.
1793க்குப் பிறகுத் தனது வாழ்க்கையை முழுமையாக இலக்கியப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தார் கோத்தே. பல துறைகளில் சீரிய பணியாற்றிய இவர் 1832ம் ஆண்டு வைமார் நகரில் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.
உலக அரங்கில் ஜெர்மனிக்குச் சிறப்பு சேர்க்கும் கோத்தே அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஜெர்மனியின் டூசல்டோர்வ் நகரில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
Jacobistrasse 2, Schloss Jägerhof, 40211 Düsseldorf . இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை
http://www.goethe-museum.com/de என்ற இணையமுகவரியில் காணலாம்.
as4
இன்று நாம் காணும் கோத்தே அருங்காட்சியகம், பெரூசிய பேரரசுக்கு (ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் தொடங்கிப் பரவலான பகுதிகளை உள்ளடக்கிய பேரரசு இது) சொந்தமான ஒரு அரண்மனை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் புகழ்பெற்ற பதிப்பாசிரியர்களுள் ஒருவரான ஆண்டோன் கிப்பன்பெர்க் சேகரித்த கோத்தேயின் படைப்புக்கள், சேகரிப்புக்கள் அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சேகரங்கள் ஒவ்வொன்றும் கோத்தேயின் வாழ்க்கை, அவர் மேற்கொண்ட பயணங்கள், ஈடுபட்ட ஆய்வுகள், அரசில் அவர் ஆற்றிய பணி, எழுத்துலகில் அவர் எழுதி வெளியிட்ட படைப்புக்கள், அறிவியல் ஆய்வுகள், அவரது சிறந்த படைப்புக்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
as5
இங்குள்ள அறைகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக அவரது ஆரம்பக்கால வாழ்க்கையின் நிகழ்வுகளைச் சொல்லும் நிகழ்வுகள் கொண்ட அறை, வைமார் நகரில் அவரது வாழ்க்கை நிகழ்வுகள், இத்தாலி பயணம் அளித்த அனுபவங்கள் சொல்லும் ஆவணங்கள் கொண்ட அறை என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் அவரது எழுத்துப்படைப்புக்கள் கண்ணாடி அலமாரிகளுக்குள் வைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் கோத்தே அவர்களின் சேகரிப்புக்கள், மற்றும் அவரது ஆய்வுப்பணி, இலக்கியப்பணி தொடர்பான ஏறக்குறைய 35,000 அரும்பொருட்கள் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தின் நூலகத்தில் 25,000 நூல்களும், ஏறக்குறைய 35,000 ஆவணங்களும் பாதுகாக்கப்படுகின்றன.
ஜெர்மனி உலகுக்குப் பல அறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும், இசைக்கலைஞர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் இலக்கியவாதிகளையும் வழங்கிய நாடு. அத்தகைய அறிஞர்களுள் ஒருவராய் உலகில் ஜெர்மனியின் புகழை உயர்த்தும் ஆளுமையாகக் கோத்தே அவர்கள் திகழ்கின்றார்கள். உலக நாடுகளில் 159 இடங்களில் இன்று கோத்தே கல்விக்கூடம் செயல்பட்டு வருகின்றது. உலகின் பல நாடுகளில் ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவிக்கும் கல்விக்கூடமாகவும், கலை, இலக்கிய பண்பாட்டு புரிதல்களுக்காகவும் இந்த அமைப்பு பங்காற்றி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது!

Friday, December 29, 2017

103. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 102

http://www.vallamai.com/?p=82406

முனைவர் சுபாஷிணி
அப்ரோடைட் தெய்வத்தின் பெயரில் அப்ரோடையாஸிஸ் என்ற ஒரு நகரம் துருக்கியின் அனாத்தோலியா பகுதியில் உள்ளது. மிகப் பழமையானதொரு நகரம் என இது இப்பகுதியில் நிகழ்ந்த விரிவான அகழ்வாராய்ச்சிகளின் வழி கண்டறியப்பட்டது. கி.மு. 5800 வாக்கில் இங்கு ஒரு கோயில் இருந்திருக்கின்றது. அக்காலத்தில் இப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்த குடியானவ மக்கள் இங்கு இக்கோயிலுக்கு வந்து வழிபாடுகள் நடத்தியிருக்கின்றனர். அதிலும் மிக முக்கியமாகத் தாய் தெய்வம் இங்கே தலைமை தெய்வமாக வழிபடப்பட்டது என்றும் தாய்மை, மக்கள் பெருக்கம், பயிர்களின் விளைச்சல் ஆகியவற்றிற்காக இங்கே வழிபாடுகள் செய்யப்பட்டன. படிப்படியாக ஏறக்குறைய கி.மு. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தக் கோயில் கிரேக்க தெய்வமான அப்ரோடைட் தெய்வத்திற்கான ஆலயமாக படிப்படியாக உருமாற்றம் கண்டது.


அப்ரோடைட் (Aphrodite) கிரேக்கத்தின் காதல் தெய்வம். இத்தெய்வம் அழகுக்கும் காதலுக்கும் இலக்கணமானவள். இவளே அழகு . இந்தத் தெய்வத்தின் பெயரில் ஓர் ஊர். அப்படியென்றால் எத்தனை அழகு நிரம்பியதாக அந்த ஊர் இருக்க வேண்டும் என்று நம்மால் ஊகிக்க முடிகின்றதா?
unnamed (2)
பல ஆண்டுகளாக இப்பகுதியில் இருந்த அப்ரோடைட் தெய்வத்திற்கான இக்கோயில் கி.மு.74 வாக்கில் ரோமானியர்கள் துருக்கியின் இப்பகுதிக்கு வந்து தங்கள் ஆளுமையைச் செலுத்த ஆரம்பித்தப் பின்னர் மேலும் செழிப்புற்றது. அப்ரோடையாஸிஸ் நகரம் ஒரு கலாச்சார மையமாக படிப்படியாக விரிவாக்கம் கண்டது. அடுத்த சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பைசண்டைன் காலத்தில், இந்த அப்ரோடையாஸிஸ் நகரின் அப்ரோடைட் தெய்வம் வீழ்ச்சி கண்டது. அப்ரோடைட் கோயில் கிருத்துவ தேவாலயமாக மாற்றம் பெற்றது. அதற்கு அடுத்த காலகட்டத்தில் இதன் சிறப்பும் புகழும் மங்கிக் குறையத்தொடங்கின. துருக்கி முழுமையான இஸ்லாமிய மத நாடாக உருமாற்றம் கண்டது. இன்று அப்ரோடையாஸிஸ் ஒரு கிராமமாகவே அறியப்படுகின்றது. ஆயினும் இங்கு நிகழ்த்தப்பட்ட விரிவான அகழ்வாராய்ச்சியின் வழி அறியப்பட்ட பண்டைய நகரம் இன்று இப்பகுதியைத் துருக்கியின் முக்கியமானதொரு சுற்றுலா தளங்களில் ஒன்றாகப் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது.
நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியின் அண்டாலியா நகர் சென்றிருந்தபோது ஒரு நாள் பயணமாக அப்ரோடையாஸிஸ் நகருக்கும் அதன் அருகே உள்ள பமுக்காலே நீரூற்று பகுதிக்கும் சென்று வந்தேன். உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக இடம்பெறுவது பமுக்காலே. இதனைப் பார்த்து விட்டு அப்ரோடையாஸிஸ் நகர் வந்து அங்கு காணப்படும் சிதிலமடைந்த அப்ரோடைட் காதல் தெய்வத்தின் கோயிலைப் பார்த்து அங்கிருக்கும் அருங்காட்சியகம் வந்து இங்கு சேகரிக்கப்பட்டுள்ள அரும்பொருட்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது.
அப்ரோடைட் ஆலயம் இருக்கும் அப்பெரும் வளாகம் முழுமையும் அருங்காட்சியகம் பகுதியில் அடங்குகின்றது. இன்று நாம் காணும் அப்ரோடைட் கோயிலின் சிதிலமடைந்த பகுதிகள் அனைத்துமே கி.பி.1ஆம் நூற்றாண்டில் விரிவாக்கிக் கட்டப்பட்ட அப்ரோடைட் ஆலயத்தின் பகுதிகளாகும்.
unnamed (3)
அப்ரோடையாஸிஸ் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக 1979ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்ரோடையாஸிஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கிடைத்த அரும்பொருட்களே இங்கே ஆவணப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடங்கப்பட்டபோது பதியப்பட்ட ஆவணக்குறிப்பின் அடிப்படையில் ஏறக்குறைய 13,000 அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் இதன் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். இவற்றுள் கி.மு.5000 வாக்கில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களும் அடங்கும் என்பது இப்பகுதி மிகப்பழமையானதொரு மக்கள் குடியிருப்பாக இருந்தது என்பதற்குச் சான்றாகின்றது அல்லவா?
அனாத்தோலியாவில் உள்ள இப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் அகழ்வாராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சுற்றுப்பயணிகள் சிலர் இப்பகுதியை அடையாளங்கண்டு இதனைப்பற்றிய செய்திகளை இங்கிலாந்தில் வெளியிட்டனர். வில்லியம் ஷெரார்ட் என்பவர் அப்ரோடையாஸிஸ் ஆலயத்தின் சிதலமடைந்த பகுதிகளின் சுவர்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகளை 1705ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளியிட்டார். 1812ஆம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து சென்ற ஒரு குழு இப்பகுதியை ஓவியமாக வரைந்து வந்தது.

அதன் பின்னர் பிரெஞ்சுக்குழு ஒன்றும் இப்பகுதிக்குச் சென்று இங்குள்ள ஆவணங்களைப் பற்றிய ஆய்வுகளை நிகழ்த்தி அறிக்கைகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டது. இங்கு முதல் அகழாய்வுப் பணி 1904ஆம் ஆண்டு ஒரு பிரஞ்சுக்குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட குளியல் தொட்டிகள், கி.மு.27ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக அறியப்படும் நாடக மேடை (Theater) ஆகியவற்றை ஆலய வளாகத்தில் வெளிப்புறத்தில் இன்றும் காணலாம். முதல் அகழாய்வுப்பணிக்குப் பின்னர் மீண்டும் பல அகழ்வாய்வுப் பணிகள் இங்கேயும் இதன் அருகாமை நகர்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, இன்றைய தேதி வரை. ஒவ்வொரு ஆய்வும் பண்டைய நாகரிகங்களை அடையாளப்படுத்தும் சான்றுகளாகத் திகழும் பலப் பல அரும்பொருட்களை நமக்கு வெளிக்காட்டுவனவாக அமைகின்றன.
இந்த அருங்காட்சியகத்தின் முகவரி
Geyre Mahallesi, 09385 Karacasu/Aydın Province, Turkey


வார நாட்களில் திங்கட்கிழமை தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கின்றது. இப்பகுதிக்குச் சென்று கோயில் வளாகம், நாடகமேடை, அருங்காட்சியகம் என அனைத்தையும் பார்த்து விட்டு வரும்போது இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற உணர்வுகளுடன் தான் திரும்பி வருவோம். சில ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட இன்றும் என் மனதில் பசுமையாகக் காட்சியளிக்கின்றது அப்ரோட்டைட் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த அப்ரோடையாஸிஸ் கிராமம்.