Friday, May 26, 2017

89. பிரித்தானிய அருங்காட்சியகம், லண்டன், இங்கிலாந்து

http://www.vallamai.com/?p=77138

முனைவர் சுபாஷிணி
உலகின் மிகப் பிரசித்தி பெற்ற பத்து அருங்காட்சியகங்களைப் பட்டியலிட்டால் அதில் இடம்பெறும் ஒரு அருங்காட்சியகம் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் அமைந்திருக்கின்ற பிரித்தானிய அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தினுள் நுழைந்ததும் நமக்கு ஏற்படும் முதல் எண்ணம், ஒரு நாள் போதுமா? என்பதுதான். போதாது என நம் மனம் சொன்னாலும், சில வேளைகளில் நம்மை வேறு அலுவல்கள் இழுப்பதால் அவசர அவசரமாகப் பார்த்துவிட்டு வருவது நிகழகத்தான் செய்யும். லண்டனுக்கான பயணங்களில் மூன்று வெவ்வேறு சமயங்களில் இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் கண்களுக்கு அங்குள்ள பொருட்கள் தெரியாத கேள்விப்பட்டிராத செய்திகளைத்தான் சொல்கின்றன. மீண்டும் சென்றாலும் இதுவரை நான் அறிந்திராதா ஏதாவது ஒரு புதிய செய்தியை அறிந்து கொள்வேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இந்த அருங்காட்சியகம் மிகப் பழமையானது. சர் ஹான்ஸ் ஸ்லோன் (Sir Hans Sloane, 1660–1753) என்னும் மருத்துவர் ஒருவரது வாழ்நாள் சேகரிப்புகளான 71,000 அரும்பொருட்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அருங்காட்சியகம். தனது மறைவுக்குப் பின்னர் தான் சேகரித்த அரும்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என இவர் விரும்பினார். அதனால் அன்றைய மன்னர் 2ஆம் ஜோர்ஸ் அவர்களை அணுகி இந்த அரும்பொருட்களை இங்கிலாந்து பவுண்டு £20,000 ஐப் பெற்றுக் கொண்டு கொடுத்தார். இது 1753ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி நிகழ்ந்தது. அதிகாரப்பூர்வமாக அன்று பிரித்தானிய அருங்காட்சியகம் உருவானது.
asu1
ஆரம்பத்தில் இதில் ஏராளமான நூல்கள், ஆவணங்கள், காசுகள், பட்டயங்கள், வரைபடங்கள் தொடர்பான பொருட்கள் நிறைந்திருந்தன. 1757ஆம் ஆண்டு மன்னர் 2ஆம் ஜோர்ஜ் பழைய அரச நூலகத்தை இங்கிலாந்து அரசுக்கு தன் நினைவாகப் பரிசளித்தார். 1759ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ஆரம்பகாலகட்டத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இன்று நுழைவுக்கட்டணம் செலுத்தித்தான் உள்ளே சென்று காண முடியும். அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட நாள் முதல் பொது மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டாலும் முதலாம், இரண்டாம் உலகப்போர் காலங்களில் இது மூடியே வைக்கப்பட்டிருந்தது என்பதை அறியமுடிகிறது.
18ஆம் நூற்றாண்டிலும் அதற்கடுத்த நூற்றாண்டிலும் இந்த அருங்காட்சியகம் விரிவடைந்தது. இது விரிவடைந்ததற்கு முக்கியக் காரணம் இங்கே வாங்கி குவிக்கப்பட்ட அரும்பொருட்களே.
18ஆம், 19ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் இங்கிலாந்தின் தொல்லியல் துறையினர் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டனர். இக்காலகட்டங்களில் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் பல இங்கே கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல. இங்கிலாந்து தனது காலணித்துவ ஆட்சியை விரிவாக்கியிருந்த நாடுகளிலிருந்து ஏராளமான விலைமதிப்பற்ற பொருட்களைத்தன் நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தது. அவற்றில் சில தனியார் சேகரிப்புகளும் அடங்கும். இங்கிலாந்து ஆட்சி செய்த நாடுகளில் தமது காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏராளமான வரலாற்று அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் சற்று பார்ப்போம்.
1826ஆம் ஆண்டு சார்ல்ஸ் மேசன் என்ற ஆங்கிலேய சுற்றுப்பயணி ஒருவர் தனது பயணத்தின் போது ஓரிடத்தில் பழமையான அரண்மனை போன்ற ஒரு அமைப்பினைக் கண்டு அது பற்றி குறிப்பெழுதி வைத்தார். அதற்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் 1856இல் ரயில் பாதை அமைக்கும் வேளையில் பொறியியலாளர்கள் அங்கு மேலும் பல கட்டுமான அமைப்புகள் இருப்பதைக் கண்டனர். 1920ஆம் ஆண்டில் ஆங்கிலேய தொல்லியல் அறிஞர்கள் இப்பகுதியில் அகழ்வாராய்ச்சியினை நிகழ்த்தத் தொடங்கினர். மறைந்து போன சிந்து சமவெளி நாகரிகம் உலகில் வெளிச்சத்திற்கு வந்தது. மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் தொடர்ச்சியாக அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டன. அந்த அகழ்வாராய்ச்சியில் ஏறக்குறைய 3,500 முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த முத்திரைகளை இன்றளவும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகத்தின் ஆரம்ப நிலை என்ற வகையில் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் இன்று வளர்ந்து வந்திருக்கின்றன. தமிழ் மொழியின் திராவிட மொழிக்குடும்பத்தோடு தொடர்புடைய பண்டைய எழுத்து வடிவமாக இது இருக்கலாம் என்ற குறிப்பிடத்தக்க ஆய்வுகளும் மொழியியல் ஆராய்ச்சித் துறையில் பேசப்பட்டு வருகின்றன என்பதை அறிவோம். இந்த பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் இந்த அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய சதுர வடிவில் அமைந்த முத்திரைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இங்கே கண்ணாடி அலமாரியில் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
asu2
எகிப்திய ஹீரோக்லிப்ஸ் எழுத்துருவை வாசிக்க முடியாது ஆய்வுலகம் தவித்துக் கொண்டிருந்த வேளையில் ஆய்வுலக அதிசயமாகக் கிடைத்ததுதான் ரொசேட்டா கல் (Rosetta Stone). எகிப்தின் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் எழுத்து ஹீரோக்ளிப்ஸ். ஓவியங்களே எழுத்துக்கள் என்ற வகையில் இவை அமைந்திருக்கும். எத்தனையோ ஆண்டுகளாக ஹீரோக்ளிப்ஸ் எழுத்துகளை வாசிக்க முடியாமையினால் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்றே அறியமுடியாமல் ஆய்வுலகம் தவித்துக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சனைக்கு வடிகாலாக அமைந்தது இந்த ரொசேட்டா கல். பார்ப்பதற்கு அது ஒரு பெரும் பாறை போன்ற கல் தான். ஆனால் அதில் இருப்பதோ உலகின் மிக முக்கிய ஆவணம். இதில் உள்ள செய்தி மிக சாமானியமானதுதான் ஆனால் அதில் உள்ள எழுத்துருதான் சிறப்பு பெற்றது. ஏனெனில் மூன்று மொழிகளின் எழுத்துருக்கள் ஒரே கல்லில் ஒரே செய்தியை வழங்கும் வகையில் இந்தக் கல் அமைக்கப்பட்டுள்ளது. கி.மு 196இல் 5ஆம் தாலமி முடிசூடிக்கொண்ட நிகழ்வை இந்தக் கல் ஹீரோக்ளிப்ஸ், எகிப்திய டெமோட்டிக் எழுத்துரு, கிரேக்கம் ஆகிய மூன்று மொழி எழுத்துருக்களில் காட்டுகின்றது. இதில் உள்ள கிரேக்க, எகிப்திய டெமோட்டிக் எழுத்துருக்களைக் கொண்டு ஹீரோக்ளிப்ஸ் எழுத்துக்களை ஆய்வாளர்கள் உடனே மொழிபெயர்த்து ஒலியை அறிந்தனர். இதுவே விடைகாணாது இருந்த பல எகிப்திய ஆராய்ச்சிகளுக்கு விடையளிக்கும் மந்திரக்கோலாக அமைந்தது. இந்த ரொசேட்டா கல் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் தான் உள்ளது.
asu3
இறந்தோர் புதைக்கப்படுவர் அல்லது எரிக்கப்படுவர். ஆனால் எகிப்திய நாகரிகமோ அரச குடும்பத்தினரையும் முக்கியஸ்தர்களையும் பாடம் செய்து மம்மியாக்கி அவர்களது உடலை நீண்ட காலம் பாதுகாக்க வழி செய்தது. அந்த வகையில் இந்த பிரித்தானிய அருங்காட்சியகத்தில் கி.மு 1250ஆம் ஆண்டில் எகிப்தில் புகழ்பெற்ற பாடகியாகத் திகழ்ந்த கத்தேபெத் (Katebet) என்ற பெண்மணியின் உடல் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 3250 ஆண்டுகள் பழமையான இந்த மனித உடல் இந்த அருங்காட்சியகத்திற்குப் புகழ்சேர்க்கும் அரும்பொருட்களில் ஒன்றாக இருக்கின்றது.
asu4
கிரேக்க சிற்பக்கலை வியக்கத்தக்கது. மேற்குலகின் எல்லா பெரிய அருங்காட்சியகங்களிலும் கிரேக்க சிற்பங்கள் இல்லாத காட்சிப்பகுதி இருக்காது என உறுதியாகச் சொல்லலாம். ஆக, பிரித்தானிய அருங்காட்சியகம் மட்டும் விதிவிலக்கா என்ன? கிரேக்கத்தில் செதுக்கப்பட்ட ஏராளமான சிற்பங்கள், சிதைக்கப்பட்ட சிலைகளின் எச்சங்கள் ஆகியவற்றோடு, கட்டப்பட்ட ஒரு கோயிலையும் அருங்காட்சியகத்தின் உள்ளே நாம் காணலாம். கி.மு.5ஆம் நூற்றாண்டில் ஏதன்ஸ் நகரின் அக்ரோபோலிஸ் பகுதியில் சிதைந்த பார்தேனோன் (Parthenon) கோயிலின் சுவர்களும் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரான கிரேக்க மனிதர்களின் தத்ரூபமான வடிவங்களை இந்த சுவர் சிற்பங்கள் நமக்கு வழங்குகின்றன.
asu5
மேலே குறிப்பிட்ட அரும்பொருட்கள் மட்டுமன்றி இந்திய, சீன, கிழக்காசிய, ஐரோப்பிய, தென் அமெரிக்க அரும்பொருட்கள் ஏராளமாக இந்த அருங்காட்சியகத்திற்குள் உள்ளன. வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கு பிரித்தானிய அருங்காட்சியகம் ஒரு சுவர்க்கலோகம் தான். ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல. பொது மக்களுக்கும் ஏராளமான தகவல்களை வழங்கும் ஒரு ஆய்வுக்களஞ்சியமாக இது திகழ்கின்றது. என்றென்றும் மக்கள் கூட்டம் வெள்ளமெனத் திகழும் ஒரு அருங்காட்சியகம் இது. நுழைவுக்கட்டணம் பெருவதற்கு நிற்கின்ற நீண்ட வரிசையைப் பார்த்தாலே நமக்கு தலைசுற்றிவிடும் என்றாலும் வரிசையில் நின்று கட்டணம் கட்டி டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும்போது உலக நாகரிகத்தின் பன்முகப் பரிமாணங்களைக் கண்டு வந்த மன திருப்தி நிச்சயம் ஏற்படும்.

Friday, May 19, 2017

88. டெ வாக் விண்ட்மீல் அருங்காட்சியகம், லைடன், நெதர்லாந்து

http://www.vallamai.com/?p=77011
-முனைவர் சுபாஷிணி
விண்ட்மில் என்பவை காற்றின் மூலம் கிடைக்கக்கூடிய சக்தியைக் காற்றாடிகளின் சுழற்சியின் வழி உருவாக்கி, அதன் வழி கிடைக்கும் சக்தியை ஒரு குறிப்பிட்ட வகைப் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. பண்டைய காலத்தில் விண்ட்மில்கள் பயிர்களை அரைத்துத் தூளாக்கி மாவாக்கவும் தேங்கிய தண்ணீரை வெளியே எடுத்துக் கொட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. நாளடைவில் விண்ட்மில்கள் உருவாக்கும் சக்தியை மின்சார சக்தியாக மாற்றலாம் என்பதை அறிவியல் துறை ஆய்வுகள் கண்டுபிடித்ததன் விளைவாகப் பெருவாரியாக விண்ட்மில்கள் உலகளாவிய அளவில் மின்சார உற்பத்திக்குப் பயன்படுகின்றன. 


விண்ட்மில் ஒன்றினை நம் மனக்கண்ணில் நாம் நிறுத்திப் பார்த்தால் உடனே நம் சிந்தனைக்கு வரும் நாடு நெதர்லாந்து தானே. நெதர்லாந்து நாட்டை ஹோலந்து என்ற பெயரிலும் அழைப்பது வழக்கம். இதற்குக் காரணம் உண்டு. தாழ்மையான நிலப்பரப்பு என்பதைப் பிரதிபலிப்பதாகவே இந்தப் பெயர் அமைந்தது. நெதர்லாந்துக்குச் சென்றிருப்பவர்கள் இந்த நாட்டின் நில அமைப்பினை நன்கு கவனித்திருந்தால், நிலப்பகுதி தாழ்வாக இருப்பதையும் எங்கெங்கு காணினும் குட்டைகளும், குளங்களும், ஏரிகளும், ஆறுகளும் என ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஆக, இப்படித் தேங்கிப் போய் இருக்கும் நீரை வெளியேற்றி நிலத்தைச் சமப்படுத்தும் கருவியாகப் பெரும்பாலான விண்ட்மில்கள் முன்னர் அமைக்கப்பட்டன. இது மட்டுமல்ல… விளை நிலங்களில் விவசாயத்தின் வழி கிடைக்கின்ற தானியங்களை உடைத்து மாவாக்கும் இயந்திரத்தை விண்ட்மில்லுடன் பொருத்தி அதனை மாவு அரைக்கும் இயந்திர ஆலையாகவும் நெதர்லாந்து நாட்டில் புழக்கத்தில் கொண்டு வந்தனர். இன்றளவும் நெதர்லாந்தில் தானியங்களை மாவாக அரைக்கவும், நீரைத் தாழ் நிலங்களிலிருந்து வெளியேற்றவும் விண்ட்மில்கள் பயன்படுத்தப் படுகின்றன. 

இதே முறை ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் புழக்கத்தில் இருந்தன, இன்றும் இருக்கின்றன. உதாரணமாக ஜெர்மனியின் லியோன்பெர்க்கில் எனது இல்லம் இருக்கும் பகுதியில் ஓடும் க்ளெம்ஸ் நதி பாயும் பகுதியில் இந்த ஆற்று நீரில் இத்தகைய இயந்திரங்களை அமைத்து தானியங்கள் அரைக்கும் ஆலைகளை உருவாக்கியிருக்கின்றார்கள். ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மாவு அரைக்கும் ஆலைகள் இவை. இப்படி ஆற்றங்கரையோரத்தில் ஐரோப்பாவின் பல இடங்களில் இவ்வகை இயந்திரங்களையோ அல்லது பழமையான விண்ட்மில்களையோ காணலாம். இன்று பரவலாக மின்சாரம் உற்பத்தி செய்யும் விண்ட்மில்கள் ஏராளமாக வந்துவிட்டன. ஆயினும் இந்தப் பழமையான மரத்தால் ஆன விண்ட்மில்களுக்குள்ள அழகும் நேர்த்தியும் அந்த இயந்திரத்தன்மை கொண்ட விண்ட்மில்களுக்கு இல்லை என்றே சொல்லலாம். 
நெதர்லாந்தை எடுத்துக் கொண்டால், அந்தச் சிறிய நாட்டில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ட்மில்கள் இருக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா? இந்த விண்ட்மில்களில் ஒன்றுதான் அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. ’டெ வாக் விண்ட்மில்’ என அழைக்கப்படும் இந்த விண்ட்மில் நெதர்லாந்தின் தெற்குப் பகுதி நகரான லைடன் நகரில் அமைந்துள்ளது. நீராவி எந்திரம் 19ம் நூற்றாண்டில் பரவலான பயன்பாட்டிற்கு வந்த பின்னர் விண்ட்மில் இயந்திரத்தைப் பயன்படுத்தி தானியங்களை அரைப்பது என்பது குறைந்து விட்டது. லைடன் நகரை எடுத்துக் கொண்டால், நீராவி இயந்திரங்களின் வருகைக்குப் பின்னர் எஞ்சி நிற்கும் ஒரே ஒரு பழமையான, பயன்பாட்டில் இருந்த ஒரு விண்ட்மில் இது எனச் சொல்லலாம். 


1883ம் ஆண்டில் லைடன் நகரில் De Sleutels என்ற பெயர் கொண்ட மாவு உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவர் இந்த டெ வாக் விண்ட்மில்லின் உரிமையாளராவார். இந்த De Sleutels தான் லைடனிலேயே மிகப் பெரிய மாவு உற்பத்திசாலை என்ற சிறப்புடன் திகழ்வது. 
லைடன் நகரை எடுத்துக் கொண்டால் 16ம் நூற்றாண்டு தொடக்கம் வரை விண்ட்மில் மாவு ஆலைகள் அனைத்தும் நகருக்கு வெளிப்புறத்தில் தான் அமைக்கப்பட்டிருந்தன. ஆக, மாவு அரைத்துக் கொண்டு வருவதற்கோ அல்லது வாங்குவதற்கோ மக்கள் நகருக்கு வெளியே சென்று வாங்கி வரும் நிலையே இருந்தது. பின்னர் 1573 வாக்கில் நகருக்கு உள்ளேயே புதிய விண்ட்மில்கள் கட்டப்பட்டன. இதற்கு மக்களின் பாதுகாப்பு அம்சங்களே முக்கியக் காரணமாக அமைந்தன. லைடன் நகர் போரில் வெற்றிபெற்றுத் தனி நகரமாக வளரத் தொடங்கிய 1574ம் ஆண்டில் இந்த நகரம் புதுப் பொலிவுடன் வளர்ச்சியைக் காணத்துவங்கியது. சோள மாவு ஆலை, தானிய ஆலை எனப் பல தொழிற்கூடங்கள் முளைக்கத் தொடங்கின. ஆலைகளுடன் துணிகளும் ஆடைகளும் தயாரிக்கும் தொழிற்கூடங்களும் உருவாக்கம் கண்டன. 


1611ம் ஆண்டில் லைடன் மாநகரம் சீரமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட சமயத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த டெ வாக் விண்ட்மில். பயன்பாட்டில் இருந்த இந்த விண்ட்மில் 1743ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. மரத்தால் செய்யப்பட்ட விண்ட்மில் காற்றாடிகள் மட்டும் இருக்க, அதன் உடல் பகுதி முழுமையும் மரத்திற்குப் பதிலாக கற்களைக் கொண்டு கட்டப்பட்டன. இப்பணி இரண்டரை மாதத்தில் நிறைவு பெற்றது. 1869ம் ஆண்டு வரை இரண்டு குடும்பங்கள் இந்த விண்ட்மில்லின் உரிமையாளராக இருந்திருக்கின்றனர். அதன் பின்னர் இது வான் ரெயின் குடும்பத்தாருக்குச் சொந்தமாகியது. பீட்டர் வான் ரெயின் இந்த ஆலையைத் திறமையுடன் நடத்தி வந்தார். இங்கு முக்கியமாகச் சோளம் உடைத்து மாவாகச் செய்யும் பணி நடந்து வந்தது. அவரது மேற்பார்வையில் இருந்த சமயத்தில், அதாவது 1869 முதல் 1889 வரை மிகுந்த லாபத்தை ஈட்டித்தந்த மாவு ஆலையாக இந்த விண்ட்மில் இருந்தது. 
இந்தக் காலகட்டத்தில் தான் மாவு உற்பத்தி செய்யும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் பல நிறுவப்பட்டன. இது டெ வாக் போன்ற விண்ட்மில் மாவு அரைக்கும் இயந்திரங்களுக்குப் போட்டியை உருவாக்க ஆரம்பித்தது. இந்தப் போட்டியைச் சமாளிக்க எலெக்ட்ரிக் இயந்திரங்கள் இந்த டெ வாக் மாவு இயந்திரத்தில் 1923ம் ஆண்டு முதல் இணைக்கப்பட்டது. ஆனால் அது நல்ல பலனை உருவாக்கவில்லை. 


முழுமையான புது வடிவமைப்புப் பணிகள் 1947ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.இதன் தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் இந்த மாவு ஆலை பயன்பாட்டில் இருந்து வந்தது. 1965ம் ஆண்டு இதன் உரிமையாளர் வில்ஹெல்ம் வான் ரெயின் காலமான பின்னர் இந்த டெ வாக் விண்ட்மில் அருங்காட்சியகமாக உருபெற்றது. 
ஆறு தளங்களில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது. உள்ளே நுழைந்தால் முதலில் வருவது அலுவலகம். அங்குக் கட்டணம் செலுத்திவிட்டு டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொரு தளமாக மரப்படிகளில் ஏறிச் சென்று இதனை முழுமையாகக் காணலாம். முதல் தளத்தில் நல்லதொரு தங்கும் விடுதி அறை போல ஓர் அறை அமைந்திருக்கின்றது. ஒரு விண்ட்மில்லின் உள்ளே இருக்கின்றோம் என்ற சிந்தனையே எழாதவாறு இந்தத் தளத்தின் அமைப்பு அமைந்துள்ளது. மேசை நாற்காலிகள், சுவர் சித்திரங்கள், அதன் உரிமையாளரின் பழைய புகைப்படங்கள் என இங்குள்ள அனைத்துமே இத்தகைய சிந்தனையை எழுப்புவதாக உள்ளன. 
அடுத்தடுத்த தளங்களில் இந்த அருங்காட்சியகத்தில் மாவு அரைக்கப் பயன்படுத்தப்பட்ட கல் இயந்திரங்கள், மற்றும் பல கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்படியே படிப்படியாக விளக்கக்குறிப்புக்களை வாசித்துக் கொண்டே ஆறாவது தளத்தைக் கடந்து சென்றால் விண்ட்மில் காற்றாடி இருக்கும் தளத்தின் வெளிப்புறத்திற்கு அங்குள்ள கதவினைத் திறந்து அதன் வழியே வரலாம். வெளியே நின்று காற்றாடியின் முழுப் பரிமாணத்தையும் மிக அண்மையில் நின்று நாம் காண முடியும். காற்றின் வேகத்தைப் பொறுத்து காற்றாடிச் சுற்றிக்கொண்டிருப்பதை மிக அண்மையில் இருந்தவாறு நாம் பார்த்து ரசிக்கலாம். மேலிருந்து நோக்கும் போது லைடன் நகரையும் கண்களுக்கு எட்டிய தூரம் வரைப் பார்த்து ரசிக்கலாம். 
நெதர்லாந்து நாட்டிற்கு வருபவர்கள் தவறாமல் சென்று பார்க்க வேண்டிய ஓர் அருங்காட்சியகம் இது என்று சொல்வேன். ஏனெனில் நெதர்லாந்துக்கே சின்னமாகத் திகழும் விண்ட்மில் பற்றிய தெளிவான விளக்கங்களைத் தரக்கூடிய, இன்றைக்கு ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அருங்காட்சியகம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

Wednesday, May 10, 2017

87. செயிண்ட் தோமஸ் கல்லறை அருங்காட்சியகம், சென்னை, தமிழகம், இந்தியா

-முனைவர் சுபாஷிணி
ஏசு நாதருடன் துணையாக இருந்த 12 இறை தூதர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் செயிண்ட் தோமஸ் அவர்கள். செயிண்ட் தோமஸ் அன்றைய ஜெருசலத்தின்  ரோமானியப் பேரரசிலிருந்து வெளியேறி ஆசிய நாடுகள் பக்கம் வந்ததாகவும், அவர் தமிழகத்தில் வந்திறங்கி வாழ்ந்து பின் மறைந்ததாகக் கிறித்துவ மதத்தினரால் நம்பப்படுகின்றது.   இன்று நமக்குக் கிடைக்கின்ற பாரம்பரியச் செய்திகளின் தொடர்பில் பார்க்கும்போது, செயிண்ட் தோமஸ் அவர்கள், அன்று தென் இந்தியாவின் மிக முக்கிய மேற்குக் கடற்கரை துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்த முசிறிக்கு கி.பி.52ம் ஆண்டில் வந்ததாகவும், அங்கே ஏசு கிறித்துவின் பொன்மொழிகளைக் கூறி அங்கு வாழ்ந்த உள்ளூர் மக்களுக்கு ஞானஸ்நானம் அளித்ததாகவும் நம்பப்படுகின்றது. அப்படி அவரால் ஞானஸ்நானம் அளிக்கப்பட்டவர்கள் செயிண்ட் தோமஸ் கிறித்துவர்கள், அல்லது நஸ்ரானியர்கள் என அறியப்படுகின்றார்கள்.

இன்று நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின்படி அன்றைய தமிழகத்தில் வாழ்ந்து வந்த செயிண்ட் தோமஸ் சிலரால் கொலை செய்யப்பட்டதாக அறிகின்றோம். மக்களால் பரங்கிமலை என அழைக்கப்படும் செயிண்ட் தோமஸ் குன்றில் இன்று மிக அழகான தேவாலயம் ஒன்று கட்டப்பட்டிருப்பதைப் பலரும் அறிந்திருப்பார்கள். கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி எல்லோரும் சென்று பார்த்து வழிபட்டு வரும் தலமாக இந்தத் தேவாலயம் அமைந்திருக்கின்றது.  தேவாலய அமைப்பு  மட்டுமன்றி இந்தத் தேவாலயம் அமைந்திருக்கும் மலைப்பாங்கான சூழலும் இயற்கைக் காட்சிகளும் இந்த இடத்தின் சிறப்பினைக்கூட்டும் வகையில் உள்ளன.
இந்தத் தேவாலயத்தின் ஒரு பகுதியில் செயிண்ட் தோமஸ் அவர்கள் கொல்லப்பட்டதாக அறியப்படும் இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. செயிண்ட் தோமஸ் அவர்கள் அக்குறிப்பிட்ட இடத்தில் கொல்லப்பட்டார் என்றபோதிலும், அவரது உடல் புதைக்கப்பட்ட கல்லறை சென்னையில் மயிலாப்பூரில் இருக்கும் செயிண்ட் தோமஸ் தேவாலயத்தின் பின்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் இருக்கின்றது. பொது மக்களால் பேச்சு வழக்கில் ‘சாந்தோம் சர்ச்’ என அழைக்கப்படும் இந்தத் தேவாலயத்தின் சரியான பெயர் செயிண்ட் தோமஸ் பசிலிக்கா என்பதாகும். செயிண்ட் தோமஸ் என்பதே பேச்சு வழக்கில் மருவி சாந்தோம் என மாற்றம் பெற்றுவிட்டது.
கி.பி.16ம் நூற்றாண்டு முதல் எல்லா மதத்தைச் சார்ந்தோரும் வந்து வழிபட்டுச் செல்லும் வழிபாட்டுத்தலமாக பரங்கிமலை செயிண்ட் தோமஸ் குன்று இருந்து வருகின்றது. இன்று செயிண்ட் தோமஸ் கல்லறை இருக்கும் இடத்தில்  அமைக்கப்பட்ட தேவாலம் கி.பி 16ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகும். இதனை போர்த்துக்கீசியர்கள் கட்டி அமைத்தார்கள். இந்த தேவாலயத்தின் பின்பகுதியில்  ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சான்றுகள் பல மிக நேர்த்தியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள், இலத்தீன் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள் ஆகியனவற்றோடு கிறித்துவ வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் பல சின்னங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செயின்ட் தோமஸ் அவர்களின் இறைத்தன்மைகளை விளக்கும் சித்திரங்கள் இங்கு சேகரிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  இங்குள்ள தமிழ்க் கல்வெட்டு ஒன்று கி.பி.12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்ரம சோழன் காலத்து கல்வெட்டாகும்.



இன்று நாம் காண்கின்ற செயிண்ட் தோமஸ் தேவாலயம் 19ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும். இதன் முந்தைய, அதாவது அது முதன் முதலில் போர்த்துக்கிசியர்களால் கட்டப்பட்டபோது இருந்த தோற்றத்தைக் காட்டும் ஓவியம் ஒன்றும் இங்குள்ளது.
முதல் தளத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், சின்னங்கள், புகைப்படங்கள், வரைப்படங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தளத்தின் கீழ்ப்பகுதியில், அதாவது நிலத்துக்கு அடியில் தான் செயின்ட் தோமஸ் அவர்களின் கல்லறை உள்ள பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் காண, படிகளில் இறங்கி இந்த அடித்தளப்பகுதிக்குச் செல்லவேண்டும். அங்கு இருபக்கமும் இந்தக் கல்லறைக்கு வந்து வழிபட்டு மரியாதைச் செலுத்திச் சென்ற முக்கியமானவர்களது புகைப்படங்கள்  சுவரில் மாட்டப்பட்டுள்ளதைக் காணலாம். மரியாதைக்குரிய போப்  2ம் ஜோன் பவுல்  அவர்கள் இங்குவந்து வழிபட்டுச் சென்றமையைக் குறிக்கும் புகைப்படங்களும் அவற்றில் அடங்கும். அதனைத் தாண்டி உள்ளே சென்றால் அங்கே செயிண்ட் தோமஸ் சமாதியைக் காணலாம்.


செயிண்ட் தோமஸ் தேவாலயம் 1956ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி சிறிய பசிலிக்கா என்ற நிலைக்கு மரியாதைக்குரிய போப்  2ம் ஜோன் பவுல்  அவர்களால் உயர்த்தப்பட்டது. இந்த பசிலிக்காவின் கருவரையில் அன்னை மேரியின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.  Our Lady of Mylapore  என இந்த பசிலிக்காவின்  புனித மேரியார் அழைக்கப்படுகின்றார்.


பொதுமக்கள் வந்தவண்ணம் இருக்கும் இந்த அருங்காட்சியகம் வரலாற்று ஆர்வலர்கள் வந்து சென்று காண ஒரு சிறந்த அருங்காட்சியகம் எனக் கூறலாம். சென்னையின் மத்தியிலேயே தேவாலயத்தின் பின் இப்படி ஓர் அருங்காட்சியகமா என என்னை வியக்கவைத்த அருங்காட்சியகம் இது. சென்னையிலே வசித்தாலும், மயிலாப்பூரின் வீதிகளில் தினம் தினம் சுற்றி வந்தாலும் கூட இத்தகைய ஓர் அருங்காட்சியகம் இருக்கின்றது எனப் பலர் அறியாமல் இருக்கலாம். உள்ளேசென்று பார்க்க இங்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

Wednesday, May 3, 2017

86. அனைத்துலக வாசனை திரவிய அருங்காட்சியகம், க்ராஸ், பிரான்சு

முனைவர் சுபாஷிணி
http://www.vallamai.com/?p=76674
The Perfume என்ற ஒரு திரைப்படம் பற்றி பலர் கேள்விப்பட்டிருக்கலாம். அடிப்படையில் ஒரு நாவலைத் தழுவிய ஒரு திரைப்படைப்பு இது. இதில் பிரான்சின் க்ராஸ் நகரத்தில் நிகழும் ஒரு திகில் சம்பவத்தை கதையாக்கிக் காட்டியிருப்பார்கள். இலைகளிலிருந்தும், செடிகளிலிருந்தும், மரப்பட்டைகளிலிருந்தும் வாசனை திரவியங்களை உருவாக்கும் கலையையும் மிஞ்சியதாக அழகிய இளம் பெண்ணின் உடலிலிருந்து வாசனை திரவியம் எடுக்கும், சிந்தனை பேதலித்த ஒரு ஆராய்ச்சியாளனைப் பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தத் திரைப்படம். இந்தக்கதையின் மையக்கரு ஒரு கற்பனைதான் என்றாலும், க்ராஸ் நகரின் உலகப்பிரசித்தி பெற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பு பற்றிய செய்திகளைப் பிரபலப்படுத்தி பேச வைத்தது இந்தத் திரைப்படம் எனலாம்.
as1
வாசனை திரவியங்கள் என்றாலே பலருக்கும் முகத்தில் மலர்ச்சி ஏற்படும். இயற்கையில் மலர்கள் ஏற்படுத்துகின்ற வாசனைகளை விரும்பாதார் யார்?
மலர்கள் இல்லாத வேளையில் ஊதுபத்தியை ஏற்றி வைத்து அது தரும் சுகந்தத்தை ரசிப்பதையும் பலரும் செய்கின்றோம். புறத்திலே வாசனையை விரும்பும் நாம் நம் உடலும் நல்ல வாசனையுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உடலுக்கு வாசனை திரவியங்களை வாங்கிப் பயன்படுத்துகின்றோம். வாசனை திரவியங்களில் உலகப்புகழ்பெற்றவை பிரான்சு நாட்டின் வாசனை திரவியங்களின் தயாரிப்பு எனலாம். பிரான்சில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் தயாரிப்பாளர்கள் இயங்கி வருகின்றார்கள். வாசனை திரவியங்கள் நம் வாழ்வில் பண்டைய காலந்தொட்டே முக்கியத்துவம் வகித்துவருகின்றன. மனித நாகரிகத்தின் ஒரு பகுதியாக வாசனை திரவியங்களின் பயன்பாடு இருந்திருக்கின்றது என்பதை பண்டைய சமுதாயங்களைப் பற்றி ஆராயும்போது அறிந்துகொள்ள முடிகின்றது. உதாரணமாக, எகிப்தில், இறந்தோரின் உடலை மம்மியாக்கி பதப்படுத்தி வைக்கும் வேளையில் வாசனை திரவியங்களை உடலில் பூசுவதும் ஒரு சடங்காகின்றது. எகிப்து மட்டுமல்ல. ஏனைய பண்டைய சமூகங்களிலும் வாசனை திரவியங்கள் நீண்ட நெடுங்காலம்தொட்டே வழக்கில் இருந்து வந்துள்ளன.
as
பிரான்சின் க்ராஸ் நகருக்கு நான் 2010ஆம் ஆண்டு சென்றிருந்தபோது அந்த நகரில் பார்க்கவேண்டிய மிக முக்கியமான ஒரு இடமாக இந்த அருங்காட்சியகத்தை எனது டைரியில் குறித்து வைத்திருந்தது இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது. முதலில் வேறு விதமான ஒரு எண்ணமே மனதை ஆக்கிரமித்திருந்தது. வாசனை திரவியத்திற்குக்கூட ஒரு அருங்காட்சியகமா? ஒரு வேளை பிரான்சில் தயாராகும் எல்லா வாசனை திரவியங்களையும் காட்சிக்கு வைத்திருக்கும் இடமோ என்ற எண்ணமும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே சென்று கட்டணம் கட்டி டிக்கெட் பெற்றுக்கொண்டு நுழைந்த முதல் நிமிடமே ஒரு ஆராய்ச்சிக்கூடத்தில் நிற்கின்ற உணர்வே எனக்கு மேலிட்டது.
இன்று நாம் காண்கின்ற இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது 1918ஆம் ஆண்டு. பிரான்சின் பிரபலமான நபர்களில் ஒருவரும் அப்போதைய பிரான்சின் ஜனாதிபதியின் மகனுமாகிய ஃப்ரான்சிஸ் கானோ (Francois Carnot) தனியார் அருங்காட்சியகம் ஒன்றினை ஆரம்பித்தார். பிறகு படிப்படியாக இது விரிவடைய ஆரம்பித்தது.
as2
க்ராஸ் நகர் வாசனை திரவியங்கள் உற்பத்திக்காக உலகப் புகழ்பெற்ற ஒரு நகரம். பிரான்சின் கிராஸ் நகரில் வயல்களில் விளையும் லவெண்டர் பூக்களைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும். வயல் முழுதும் ஊதா நிறக்கம்பளம் விரித்தார் போல விளைந்திருக்கும் லவெண்டர் செடிகளை விரிவாக இந்த நகரின் வயல்களில் காணலாம். லவெண்டர் பூக்கள் பெருவாரியாக வாசனை திரவிய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டாலும், இங்கே விளையும் பல வகையான மலர்களிலிருந்தும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. பூக்கள் மட்டுமல்ல. மூலிகைச் செடிகளிலிருந்தும், சில மரங்களின் தோல் பட்டைகளிலிருந்தும் கூட வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.
as3
இந்த அருங்காட்சியகத்தில் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் குடுவைகளும், இயந்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை எவ்வாறு இயக்கப்படுகின்றன என்றும் விளக்கக் குறிப்புக்கள் கணினி வழி குறும்படங்களாகக் காட்டப்படுகின்றன. ஒரு தனிப்பகுதியில் பண்டைய காலத்தில் எவ்வாறு வாசனை திரவியங்கள் உருவாக்கப்பட்டன என்ற செய்திகள் படங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.முந்தைய நூற்றாண்டுகளில் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட சில பழைய பாண்டங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஒரு தனிப்பகுதியில் பிரான்சில் தயாரிக்கப்படும் பிரபலமான அனைத்து வாசனை திரவியங்களின் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளன. வண்ண வண்ண குடுவைகளில் இவற்றைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. வாசனை திரவியங்கள் மட்டுமன்றி மனிதர்கள் நாம் பயன்படுத்தும் சோப்பு, அலங்கார வாசனைப்பொருட்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் உள்ளடக்கி விரிவான தகவல் களஞ்சியமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகின்றது.
as4
இந்த அருங்காட்சியகம் தற்போது இருக்கும் இடத்தின் முகப்புப் பகுதியானது 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது இந்த நகரிலுள்ள 14ஆம் நூற்றாண்டு டோமினிக்கன் மடாலயத்தின் பின்புறச்சுவற்றை ஒட்டியதாக அமைந்திருக்கின்றது. வெவ்வேறு தளங்களில் கண்காட்சி அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். ஒரு தளத்தில் மூலிகைகள் தனித்தனியாக வகைப்படுத்தி வளர்க்கப்படுவதையும் காணலாம்.
யாருக்குத்தான் அழகாகவும் கவர்ச்சியாகவும் மனதைக் கவரும் நறுமணத்துடனும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்காது?
மனிதர்கள் நாம் எல்லோருமே அழகியலை விரும்புபவர்களாகத்தானே இருக்கின்றோம். அந்த மனித உள்ளத்தின் தேவையை படம் பிடித்துச் செயல்வடிவில் காட்டுகின்றது இந்த அருங்காட்சியகம்.
க்ராஸ் வாசனை திரவியங்கள் அருங்காட்சியகம், அருங்காட்சியகப் பிரியர்கள் அனைவருமே கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு அருங்காட்சியகமே!