Monday, May 4, 2015

37.பெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 1

http://www.vallamai.com/?p=57107

தமிழகத்தின் கொங்கு நாட்டிற்கு இதுவரை நான்கு முறை பயணம் செய்திருக்கின்றேன். அதிலும் குறிப்பாக ஈரோட்டிற்கு 3 முறை பயணம் மேற்கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவாக்கங்களைச் செய்திருக்கின்றேன். முதல் இரு முறைகளும் குறுகிய கால பயணத்தில் முடிந்த அளவு தமிழ் மொழி, வரலாறு பண்பாடு ஆகிய விசயங்கள் தொடர்பான பதிவுகளைச் செய்யமுடிந்தாலும் ஈரோட்டிலேயே நான் எப்போது வந்தாலும் என்னை வரவேற்று உபசரித்து தங்கவைத்து பார்த்துக் கொள்ளும் தோழி பவளா-திரு.திருநாவுக்கரசு தம்பதிகள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பெரியார் நினைவகம் போகக்கூடிய வாய்ப்பும் நேரமும் கிட்டாமலேயே இருந்தது. சென்ற ஆண்டு, 2014 ஜூன் மாதம் மீண்டும் ஈரோட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது பெரியார் நினைவகம் செல்வதை, செய்ய வேண்டிய முக்கிய விசயங்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டதோடு காட்டாயம் சென்றே ஆக வேண்டுமென்று என்னுடன் வந்திருந்த டாக்டர்.நா.கண்ணனையும் பவளாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.ஈரோட்டின் மத்தியிலேயே அமைந்திருக்கும் ஒரு சாலையில் பெரியார்-அண்ணா நினைவகம் இருக்கின்றது. இந்தக் கட்டிடம் 17.9.1975ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மை தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.இந்த அருங்காட்சியகத்தை மிகத் தூய்மையாகப் பராமரிக்கும் பொறுப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களை நான் நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். நினைவகமே அருங்காட்சியம் என்ற வகையில் பெரியார் தொடர்பான பல முக்கியத்தகவல்களை வரலாற்றுத் தொடர்ச்சியை வரும் பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வாய்ப்பினை வழங்குகின்றது இந்த நினைவகம். இதன் பின்பகுதி அண்ணாவின் நினைவகமாக  அமைக்கப்பட்டிருக்கின்றது.

தந்தை பெரியார் என மதிப்பும் மரியாதையுடனும் அழைக்கப்படும் திரு.ஈ.வெ.ரா அவர்களது இளமைக் கால வரலாற்றுச் செய்திகள் புகைப்படங்களுடன் வழங்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. உள்ளே நுழையும் போதே மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் பெரியாருடனும் அண்ணாவுடனும் இருக்கும் நிகழ்வுகளின் காட்சிகளின் புகைப்படங்கள் உள்ளன. அவற்றோடு தொடர்ச்சியாக பெரியாரின் பயணங்கள், குழுவாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், பெற்றோர் பற்றிய தகவல்கள் ஆகியன புகைப்படங்களுடன் செய்தியாக வழங்கப்பட்டிருக்கின்றன.பெரியாரின் வாழ்க்கைப் பாதையின் 94 ஆண்டுகால பயணம் என்பது பல தரப்பட்ட திருப்பு முனைகளைச் சந்தித்த ஒன்றாக அமைந்தது என்பதை இங்குள்ள புகைப்படங்களே ஆதாரமாகக் காட்டுகின்றன. ஒரு வணிகராக வளர்ந்த திரு.ஈ.வெ.ரா அவர்கள் படிப்படியாக தமிழ் மக்களின் சமூக நலனில் அக்கறை கொண்டு தனது வாழ்க்கை நோக்கத்தை மக்கள் நலனுக்காகவும் சிந்தனை மாற்றத்திற்காகவும் என மாற்றிக் கொண்டு தனது இறுதி காலம் வரை அதற்காகவே உழைத்ததன் அடையாளமாகவும் சான்றுகளாகவும் இருக்கும் பல ஆதாரங்களை இந்த அருங்காட்சியகத்தில் வருகையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.இங்கு வைக்கப்பட்டுள்ள ஒரு தகவல் பலகையில் உள்ள குறிப்புகள் பெரியார் பற்றி அறிமுகம் பெற விரும்புவோருக்கு பயன்தரும் வகையில் அமைந்துள்ளது. அதில் உள்ள குறிப்புகள் கீழ்வருமாறு:

தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
1. பிறப்பு: 17.9.1879
இறப்பு: 24.12.1973

2. சுற்றுப் பயணம் செய்த மொத்த நாட்கள்: 8,600 நாட்கள் (26 ஆண்டுகள், 6 மாதம், 25 நாட்கள்)

3. சுற்றுப் பயணம் செய்த மொத்த தூரம் : 13,12,000 கிலோ மீட்டர்கள் (பதின்முன்று லட்சத்து பனிரண்டாயிரம் கிலோ மீட்டர்கள்)

4. சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: 10,700 (பத்தாயிரத்து எழுநூறு நிகழ்ச்சிகள்)

5. சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றிய நேரம்: 21,400 மணிகள் (இருபத்து ஒன்றாயிரத்து நானூறு மணிகள்)

6. தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவை ஒலி நாடாவில் பதிவு செய்து ஒலி பரப்பினால் ஒலிக்கும் நாட்கள்: – இரவு பகலாக: 2 வருடம், 5 மாதம், 11 நாட்கல்.

7.வாழ்ந்த காலங்கள்: 94 வருடம், 3 மாதம், 7 நாட்கள்

நான் யார்?
ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன் – ஈ.வெ.ரா.

தொடரும்..

1 comment:

  1. http://vijayakumara.blogspot.in/2015/05/dravidiaa-iraniya.html?m=1

    ReplyDelete