Monday, May 25, 2015

41 நியாண்டர்தால் அருங்காட்சியகம் - டூசல்டோர்ஃப், ஜெர்மனி (2)

  • ரங்கு விலங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி கண்டு வளர்ந்த இனம் தான் மனித இனமா?
  • நியாண்டர்தால் எனக்குறிப்பிடப்படும் மனித இனக்குழு இன்று காணப்படும் ஐரோப்பிய நிலப்பரப்பில் மட்டும் தான் இருந்தனரா?
  • உலகின் எல்லா பாகங்களிலும் மனித இனம் ஒரே நேரத்தில் தோன்றியதா?
  • ஆப்பிரிக்கா தான் மனித இனத்தோற்றத்தின் முதல் நிலப்பகுதியாக அமைந்திருந்ததா?
  • விவசாயம் என்பதும், உலக நாகரிகம் என்பதும் உலகின் பல இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றினவா?
​மனித குலத்தை ஆக்கிரமித்திருக்கும் உலகத்தோற்றம், மனித குலத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய பற்பல கேள்விகளில் மேற்குறிப்பிட்ட இவையும் அடங்குவன.




​ஆதி மனிதனின் வாழ்க்கை முறையைக் காட்டும் மெழுகு வடிவங்கள்

இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தியரியின் படி மனித குலத்தின் ஆரம்பம் என்பது, அதாவது மரத்திலிருந்து தாவிச்செல்லும் குரங்கினத்திலிருந்து மனித இனத்திற்கான மாற்றம் என்பது ஆப்பிரிக்காவில் நிகழ்ந்தது. குரங்கினத்திலிருந்து மனித இனத்திற்கான பரிணாம மாற்றம் என்பது உடன் ஒரு குறிப்பிட்ட கால அளவில் நிகழ்ந்ததல்ல என்றும் பல்வேறு சமகால நிகழ்வுகளில் சூழலியல், தட்பவெப்ப சீதோஷ்ண நிலை மாற்றங்களாலும் நீண்ட கால அளவிலேயே இம்மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்பது ஆய்வறிஞர்களின் கூற்று.



​முழுமையான ஒரு நியாண்டர்தால் எலும்புக்கூடு

குரங்கினத்திற்கு வாழ்க்கையை நடத்த ஆயுதங்களும் கருவிகளும் தயாரிக்கும் திறன் இல்லை. மனித இனமோ தனது சிந்தனைத்திறத்தை பயன்படுத்தி கற்களால் ஆயுதங்களையும் கருவிகளையும்  செய்யும் திறமையை வளர்த்துக் கொண்டது. கருவிகள் வருவதால் வேட்டையாடுதல், உணவை தேடுதல் இனையைத் தேடுதல், குழுவாக வாழ்தல், என்ற திறனையும் படிப்படியாக மனித இனம் பெருக்கிக் கொண்டது. உணவுத்தேவையும் இனப்பெருக்கத்தேவையும் மட்டுமே அடிப்படை என்ற நிலையிலிருந்து படிப்படியாக மாறி குடும்பம், சமூகம், விவசாயம், குழு தலைமைத்துவம், கிராமம், நகரம், நாடு, அரசியல், வியாபாரம், கல்வி எனப்படிப்படியாக மனித இனம் தன து சிந்தனை வளர்ச்சியைப் பெருக்கிக் கொண்டே வந்துள்ளது. மாற்றத்தை ஏற்றுக் கொண்டு புதுமையை   உட்புகுத்திக் கொண்டு வசதிகளை மேலும் மேலும் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள மனித இனம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. உலகியல் தேவைகளோடு மட்டும் நின்றுவிடாமல் உள நிலை தேடலையும் மனித இனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணத்தினால் பல்வேறு சடங்குகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் தோன்றுவதற்கும், தத்துவங்கள் பிறப்பதற்கும்  காரணமாகின்றது.



நியாண்டர்தால் ​பள்ளத்தாகில் கண்டெடுக்கப்பட்ட கருவிகள்

நியாண்டர்தால் அருங்காட்சியகத்தில் உள்ளே நுழையும் போதே அங்கே நம்மை வரவேற்க ஒரு நியாண்டதால் மனித உருவச்சிலை உள்ளது. ஒருவருக்கு 8 யூரோ கட்டணம் கட்டி டிக்கைட்டை பெற்றுக் கொள்வதோடு விளக்கம் கொடுக்கும் கருவியையும் பெற்றுக் கொள்ளலாம். 6 தளங்களில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் முதன் முதலாக நியாண்டர்தால் மனித எலும்புகளும் அதன் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பற்றிய தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் ஒலிப்பதிவு இருப்பதால் அவ்வொலிப்பதிகளைக் கேட்டுக் கொண்டே தொடர்ந்து செல்லலாம். ஒலிப்பதிவுகள் அனைத்தும் டோய்ச் மொழியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.




​நியாண்டர்தால் ​பள்ளத்தாகில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த எலும்புகளில் எச்சம்

அதனை அடுத்து வரும் தளத்தில் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள், உலோகக் கருவிகள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  இங்குள்ள சில கருவிகள் 50,000லிருந்து 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்ற குறிப்புக்களைப் பார்த்து வியந்து போனேன். மனித குல கண்டுபிடிப்புக்களில் அடங்கும் கற்கருவிகள் பல, விலங்குகளின் உடலைக் கொல்லவும், அப்படிக் கொன்ற உடலை கீறி இரைச்சியைக் கிழித்து எடுக்கவும் பயன்படுத்தப்பட்ட கருவிகள்.  படிப்படியான இந்த வளர்ச்சியில் கற்கருவிகளிலிருந்து பின்னர் உலோகக் கருவிகளை மனித குலம் கண்டுபிடிப்பதும் பின்னர் மட்பாண்டங்களை உருவாக்கி சமைத்தல், சேகரித்தல்  என்ற  நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் இந்த மனித குல வளர்ச்சியில் ஒரு முக்கிய வளர்ச்சியாகத்தான் காண வேண்டும்.




​அருங்காட்சியகக் கூடத்தின் உள்ளே

தொடர்ந்து மேலே செல்லும் போது எலும்புக் கூடுகளும், மனித எலும்புகளில் சில பகுதிகளும் இங்கு அறிவியல் தகவல்களோடு வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை மிகச் சிறப்பான வகையில் இந்த அருங்காட்சியகத்தில் 2 மாடித்தளங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி ஆங்காங்கே நியாண்டர்தால் மனிதர்களின் முந்தைய கால நிலையை விளக்கும் வகையில் சில்லிகானில் செய்யப்பட்ட உருவ வடிவங்களை காட்சியாக வைத்திருக்கின்றனர்.




​புலி மனிதன் (ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்புர்க் மானிலத்தில் கண்டெடுக்கப்பட்டது. 40,000 ஆண்டு பழமையான வடிவம்)

மேல் தளத்தில் இந்த நியாண்டதால் அருங்காட்சியகத்தின் அதி முக்கியசேகரிப்பு வைக்கப்பட்டுள்ளது. இங்குதான் இந்த நியாண்டர்தால் மனித இனத்தின் DNA  க்கள் கன்ணாடி அலமாரிக்குள் மிகப்பாதுகாப்பாக அதே வேளை பொது மக்கள் சிரமமின்றி பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.



​நியாண்டர்தால் அசல்  DNA 

இந்த DNA  சேகரிப்பைக் குடுவையில் பார்க்கும் போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு வியப்பு கலந்த பிரத்தியேக உணர்வு காண்போர் அனைவருக்கும் நிச்சயம் உண்டாகும் என்பதில் சந்தேகவில்லை.

தொடரும்.

No comments:

Post a Comment