Monday, February 19, 2018

108. கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி

முனைவர் சுபாஷிணி

 Published in Vallamai : http://www.vallamai.com/?p=83470

என்ன.. ? கசாப்புக்கடைக்கு ஒரு அருங்காட்சியகமா என ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். கசாப்புக் கடைக்கென்றே பிரத்தியேகமாக அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றியது தான் இந்தப் பதிவு.




ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இறைச்சி உணவு பற்றி விவரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. ஜெர்மனியில் மட்டுமே மூன்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் கசாப்புக் கடை பற்றிய தகவல்கள் சொல்லும் அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில், ஒரு 16ம் நூற்றாண்டு அழகிய மரவேலைப்பாட்டு கட்டிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கசாப்புக்கடை அருங்காட்சியகம்.





பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் இறைச்சி உணவே மக்களின் முக்கிய உணவாக அமைகின்றது. தென் அமெரிக்காவிற்கான கடல்வழிப்பயணங்கள் 14ம், 15ம் நூற்றாண்டு வாக்கில் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர்தான் ஐரோப்பாவில் உருளைக்கிழங்கும், தக்காளியும், குடை மிளகாயும், பிற ஏனைய காய்கறிகளும் அறிமுகமாகின. அதற்கு முன்னர் கோதுமை, சோளம், பயிர்கள், குறிப்பிடத்தக்க முட்டைகோஸ் வகை காய்கறிகளும், பழங்களும், ஓரிரண்டு வகை தாவரங்களும் மட்டுமே மரக்கறி உணவு வகையில் சாப்பிடப்படுவனவாக இருந்தன. இவற்றை விட ஐரோப்பிய மக்களின் மிக முக்கியமான உணவாக அமைந்தது இறைச்சி உணவு தான். அதிலும் ஜெர்மானியர்களை எடுத்துக் கொண்டால், பண்டைய ஜெர்மானிய மக்களின் உணவு கலாச்சாரத்தில் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, மான்கள், காட்டுப்பன்றி, பைசன் போன்றவை வேட்டையாடி விரும்பிச் சாப்பிடப்பட்ட உணவாக அமைந்தன.

கோதுமை, சோளம் போன்ற தானியங்களைக் கொண்டு ரொட்டி தயாரிப்பது பண்டைய காலம் தொட்டு ஐரோப்பா முழுமைக்கும் வழக்கில் இருந்தது. பயிர்களும், காய்களும் பழங்களும் கோடைக்காலத்தில் விளைவதால் அவற்றைக் குளிர்காலத்திலும் இளவேனிர் காலத்திலும் பயன்படுத்தும் வகையில் இவற்றைப் பாடம் செய்து வைக்கும் கலையை பெருவாரியாக வளர்த்தனர். இதில் இறைச்சியைப் பாடம் செய்து பத்திரப்படுத்தும் வகை, உப்புக் கண்டம் போட்டுக் காய வைத்துப் பாதுகாக்கும் முறை, அரைத்து வெவ்வேறு பொருட்களுடன் கலந்து அவற்றைப் பதனிட்டு பாதுகாத்து ஆண்டு முழுமைக்கும் தேவைப்படும் உணவுத்தேவைக்குப் பயன்படுத்தும் முறை என இம்மக்கள் பெருவாரியாக ஆராய்ந்து இக்கலையை வளர்த்தனர்.



இன்றைய காலகட்டத்தில் உலகின் பல நாடுகளுக்கான தொடர்புகள் எல்லா நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது மக்களின் கலாச்சாரத்திலும் ஊடுருவத் தொடங்கிவிட்டது. சீனர்கள், கொரியர்கள், இலங்கையர்கள், இந்தியர்கள், தாய்லாந்துக்காரர்கள், வியட்நாமியர்கள், தென் அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள், மத்திய கிழக்காசிய மக்கள் என பல கலாச்சாரப் பின்னனி கொண்டவர்கள் ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து உள்ளூர் மக்களுடன் வாழ்கின்றனர். வந்து விட்டுச் செல்லும் விருந்தாளிகளாக இல்லாமல் ஐரோப்பாவையே தங்கள் வாழ்விடமாக இந்த மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்றாலும் கூட தங்கள் தாயகத்தின் உணவு முறைகளை இத்தகைய மக்கள் தொடர்ந்து இந்தப் புதிய நிலத்திலும் கடைப்பிடிப்பதால் ஐரோப்பாவின் பல மூலை முடுக்குகளிலும் ஆப்பிரிக்க உணவு, சீன உணவு, தாய்லாந்து உணவு, மெக்சிக்கன் உணவு, இந்திய உணவு, அரேபிய உணவு என்பவை பரவி விட்டதை இங்குக் காணப்படும் உணவகங்களைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம். இப்படி நிலமை மாற்றம் கண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட இறைச்சி உணவையே பிரதான உணவாக ஐரோப்பியர்கள் தொடர்கின்றனர் என்பதை இங்குள்ள பெருவாரியான உணவகங்களும் அங்காடிக் கடைகளும் கசாப்புக் கடைகளும் நமக்கு வெளிப்படுத்துகின்றன,

ஜெர்மனியைப் பொருத்தவரை இறைச்சி விற்பனை என்பது நான்கு வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. பெருவாரியான சூப்பர்மார்க்கெட்டுகளில் பாக்கெட் செய்யப்பட்ட இறைச்சிகள், வாரச் சந்தையில் கசாப்புக் கடைக்காரர் விற்கும் இறைச்சி, பதப்படுத்தி சோசேஜ் வகையில் விற்கப்படும் இறைச்சி, கிராமப்பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வீட்டோடு அண்டிய வகையில் உருவாக்கியிருக்கும் கடைகளில் விற்கப்படும் இறைச்சி எனப் பிரிக்கலாம். ஜெர்மனியில் வாழும் துருக்கியரும் தங்கள் கடைகளில் மாடு, கோழி, வாத்து, போன்ற இறைச்சி வகைகளை விற்கின்றனர். இறைச்சி வகையோடு மீன்களும் கடல் உணவுகளும் இதே ரீதியில் விற்கப்படுகின்றன.






கசாப்புக் கடைக்காரர்கள் மெட்ஸ்கர் (Metzger) என்ற ஜெர்மானியச் சொல்லால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இது தொழில் பெயர். பண்டைய காலத்தில் இது குலத்தொழிலாக இருந்தது. இவ்வகை குலத்தொழில் பண்பாடு என்பது ஜெர்மனியில் கடந்த ஐந்நூறு அறுநூறு ஆண்டுக்கால கட்டத்தில் இல்லாது மறைந்து விட்டது. இன்று மெட்ஸ்கர் என்ற குடும்பப்பெயரை வைத்திருப்பவர்கள் மருத்துவராகவும், கால்பந்து விளையாட்டாளராகவும். ஆசிரியராகவும், பஸ் ஓட்டுநராகவும், பொறியியலாளராகவும் என பல்வேறு தொழிலைப் புரிவோராக உள்ளனர். இதேபோன்ற நிலைதான் ஏனைய குலத்தொழில்களுக்கும் ஏற்பட்டுள்ளன.

இறைச்சி உணவினைத் தயாரித்தலில் பயன்படுத்தப்படும் கருவிகள் பற்றிய தகவல்களைப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்தவும், பண்டைய காலம் தொட்டு இன்று வரை கசாப்புக் கடைத் தொழிலாளர்களின் தொழில் வாழ்க்கை எப்படி அமைகின்றது என்பதை விவரிக்கும் வகையிலும்  இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளனர். ஏனைய அருங்காட்சியகங்களைப் போல இவை காலை முதல் மாலை வரை திறக்கப்படுவதில்லை. மாறாக நண்பகல் 12க்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு இந்த அருங்காட்சியகம் மூடப்படுகின்றது. பொது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் ஒரு விவசாயி வாழ்க்கையை விளக்கும் வகையில் காய்கறிகள், முட்டைகள், இறைச்சி போன்றவற்றை சந்தையிலிருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்தியும் வைக்கின்றனர்.





போப்லிங்கன் நகரின் பழைய கிராமத்தின் மையப்பகுதியிலேயே பழமையான ஒரு அழகிய கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மாறுபட்ட கோணத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை இங்கு வருபவர்கள் கண்டு செல்வது இறைச்சி பதனிடும் முறைகளைப் பற்றியும் கசாப்புக் கடைக்காரர்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்குவதாகவும் நிச்சயம் அமையும்.
இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
Address: Fleischer Museum Boeblingen,   Marktpl. 27, 71032 Böblingen
Phone: 07031 6691691

அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா?

Wednesday, February 14, 2018

107. கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம், கரூர், இந்தியா

முனைவர் சுபாஷிணி


கருவூர், கரூர், வஞ்சி என அழைக்கப்படும் கரூர் நகரம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம் ஆகிய ஆறு வட்டங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டமாக கரூர் மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த கரூர் 1995ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.

தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சிறப்பினைக் கொண்ட நகரங்களில் கரூர் நகரமும் ஒன்று. கடந்த நூறாண்டில் கரூர் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும், அமராவதி நதிக்கரையில் கிடைத்த தொல்லியல் சான்றுகளும் தமிழகத்தின் பழம் பெரும் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் கண்டுபிடிப்புகளாக அமைந்துள்ளன. அது மட்டுமன்றி, தமிழகத்தோடு அன்றைய கிரேக்க, ரோமானியப் பேரரசு கொண்டிருந்த வணிகத் தொடர்புகளைத் துல்லியமாகச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டும் வகையிலும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி இன்றளவும் முழுமையாக தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத நிலைத் தொடர்கிற அதே வேளை, இதுவரை கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகள் அளித்திருக்கும் தகவல்கள் தரும் செய்திகளான சங்ககாலம், மற்றும் அதன் தொடர்ச்சியான காலத்து வரலாற்றினை, நாம் புரிந்து கொள்ள உதவும் முக்கிய அளவு கோலாக இந்த ஆய்வு முடிவுகள் திகழ்வதை நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.




கரூர் நகரின் மையத்தில் ஒரு சாலையின் ஒரு பக்கத்தில் வரிசையாகக் கடைகள் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள ஒரு பழமையான கட்டிடத்தில் கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும் போது நமக்கு ஏற்படும் உணர்வு ஒரு கிராமத்துப் பலசரக்குக் கடைக்குள் நுழைவது போன்ற உணர்வினைத் தருவதாக இருக்கின்றது. அருங்காட்சியகத்தின் உள்ளே பாதுகாக்கப்படுகின்ற அரும்பொருட்களோ தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கானச் சான்றுகளாக அமைந்து நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றன. வரிசை வரிசையாகக் கண்ணாடி அலமாரிகளுக்குள் வைத்துப் பாதுகாக்கப்படும் சங்க காலத்தைய ரோமானியர்கள் தொடர்பினை வெளிப்படுத்தும் காசுகள், கரூரின் வீரர் மரபை வெளிப்படுத்தும் புலிக்குத்திக்கல் நடுகற்கள், பண்டைய தமிழர் மரபில் ஈமக்கிரியைச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழி, ஓலைச்சுவடி நூல்கள் ஆகியன இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்களுக்குக் கரூர் பகுதியின் மீது கவனம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது அமராவதி நதிக்கரையில் 1806ம் ஆண்டு வாக்கில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தில் அமைந்த பண்டைய ரோமானிய காசுகள் எனலாம். கிடைத்த குறுகிய காலத்திலேயே அவற்றில் பல காணாமல் போயின. அவற்றுள் ஒரு சில நாணயங்கள் மட்டும் அருங்காட்சியக அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டன. இப்படி சேகரித்துப் பாதுகாக்கப்பட்ட காசுகளை அறிஞர்கள் ஆராயத்தொடங்கியமைதான் இப்பகுதியில் சங்க காலத்தில் பண்டைய ரோமானிய அரசு கடல் வழி வணிகத்தை மேற்கொண்டிருந்தமையும், ரோமானியர்கள் இப்பகுதிக்கு வந்து தங்கியிருந்து வர்த்தக முயற்சிகளை மேற் கொண்ட செய்திகளையும் வெளிப்படுத்திய ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. தொடர்ச்சியாக கரூர் பகுதியில் பண்டைய ஆபரணங்களும் புராதனச் சின்னங்களும் மேலும் கிடைக்கவே, இப்பகுதி தொல்லியல் அறிஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் ஒரு பகுதியாக மாறியது. உலக வரைபடத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய நகரமாகவும் கரூர் நகரின் புகழ் உயர்ந்தது.

தொடர்ச்சியாக நிகழ்ந்த ஆய்வுகள் கரூர் நகரின் பண்டைய முக்கியத்துவம் பற்றிய ஆய்வுகளை ஆராய்வதாக அமைந்தன. சேர மன்னர்களின் செயல்பாடுகள், சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடும் இலக்கியச் செய்திகள் ஆகியன கரூர் நகரம் சேரப் பேரரசின் ஆட்சி காலத்தில் மிக முக்கியப் பங்கு வகித்த ஒரு நகரமாகத் திகழ்ந்தமையை உறுதி செய்வதாக அமைந்தது. படிப்படியாக நிகழ்ந்த இலக்கிய, தொல்லியல்,புராதனச் சின்னங்களின் ஆய்வுகள் கரூர் நகரமே பண்டைய சோழப் பேரரசின் தலைநகரமாக ‘வஞ்சி’ என்ற பெயருடன் திகழ்ந்த நகரமே இந்தக் கரூர் என்ற செய்தியையும் உலகத்திற்கு வழங்கியது. வஞ்சி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நகரம் தாம் கரூர் என்பதில் ஆய்வாளர்களிடையே இன்னமும் கருத்து வேறுபாடுகள் நிலவுவது தொடர்கின்றது. ஆயினும், கரூர் சேர பேரரசு புகழோடு இருந்த காலத்தில் அதன் தலைநகரமாக விளங்கிய ஒரு நகரமே என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.



கல்வெட்டு ஆய்வாளர் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் புகழூர் கல்வெட்டினை வாசித்து ஆய்வு செய்து அதனை வெளியிட்டார். சங்க காலத்தின் மூன்று கட்டங்களிலான சேரப் பேரரசு பற்றிய விளக்கங்களில் கரூர் என ஆவணங்களில் குறிப்பிடப்படும் பகுதி புகழூரிலிருந்து ஏறக்குறைய பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஒரு பகுதியே என்றும், சேரர்களின் தலைநகரம் கரூர் நகரமே என்றும் உறுதி படுத்துவதாக அமைந்தன அவரது ஆய்வு முடிவுகள். இது மட்டுமன்றி அன்றைய தமிழக தொல்லியல் துறையினரால் இப்பகுதியில் அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்பட்டு, கரூரின் வரலாற்று முக்கியத்துவத்தினை உலகுக்குச் சொல்லும் பல அரும்பொருட்கள் இந்த ஆய்வுகளின் போது  அகழ்ந்தெடுக்கப்பட்டன. டாக்டர். நாகசாமியின் தலைமையில் 1974ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில், சேரப் பேரரசின் சின்னமும் ‘கொல்லிரும்புறை’ என்ற எழுத்தும் பொறித்த காசு கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாணயவியல் ஆய்வாளர் தினமலர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டெடுக்கப்பட்ட பல காசுகளில் மேலும் இரண்டு காசுகளில் முறையே ”மாக்கோட்டை”, ”கூட்டுவன் கோட்டை” என்ற தமிழ்ச்சொற்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேரப் பேரரசுகள் வெளியிட்ட காசுகள் இவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் மகுடம் வைப்பது போல அமைந்தது கரூர் நகரில் ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களின் கண்டுபிடிப்பான ஒரு மோதிரம். இந்த மோதிரம் 1991ம் ஆண்டு அமராவதி ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பும் அதனைத் தொடர்ந்து டாக்டர். நாகசாமியின் இந்த மோதிரம் பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரையும் அன்று வெளியிடப்பட்டபோது தொல்லியல் அகழ்வாய்வில் மட்டுமன்றி பெருமளவில் தமிழ் ஆய்வாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட வரலாற்றுச் செய்தியாக  இது அமைந்தது. 15.6 கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் அது. முகப்புப் பகுதி 5.5 மிமீட்டர் அளவுடன் அமைந்தது. அந்த மோதிரத்தின் முகப்புப் பகுதியில் கலை அழகின் உச்சம் என வர்ணிக்கத்தக்க வகையில் அமைந்த மிதுனச் சின்னம், அதாவது ஒரு ஆணும்-பெண்ணும் அன்புடன் நளினமாக நிற்கும் வகையில் அமைந்த சின்னம் ஒன்று பொறிக்கப்பட்ட வகையில் இந்த மோதிரம் அமைக்கப்பட்டிருந்தது. அச்சிறிய மோதிரத்தில் இத்தகைய ஒரு நளினம் மேலோங்கிய படைப்பினைப் படைத்த தமிழக பொற்கொல்லர்களின் நுணுக்கமான கலைத்திறனுக்கு உதாரணமாக பாராட்டுக்களுக்குரிய வகையில் இந்த மோதிரம் உருவாக்கப்பட்டிருந்தது. ஐயத்திற்கு இடமின்றி கி.பி.1 நூற்றாண்டின் சேரப் பேரரசின் அதிகாரப்பூர்வ அரச மோதிரம் இது என உறுதி செய்யப்பட்டது .




இந்த மோதிரத்தின் மேலுள்ள சங்க கால வாழ்வியலின் அடிப்படையான காதல் அன்பினைக் குறிக்கும் இந்தச் சின்னமே தமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ சின்னமாக இந்த அமைப்பு உருவான 2001ம் ஆண்டு முதல் திகழ்கின்றது. அன்பினை வலியுறுத்தும் மாண்பினை வாழ்வியல் நெறியாகக் கொண்டிருந்த பண்டைய தமிழரின் மரபினையும் மாண்பினையும் பிரதிநிதிக்க இச்சின்னத்தை விட வேறெதுவும் பொருந்தாது என்பது அன்று எனக்கும் பேரா.நா.கன்ணன் அவர்களுக்கும் மனதில் எழுந்த எண்ணமாக அமைந்ததன் விளைவே இந்த முத்திரை தமிழ் மரபு அறக்கட்டளையின் சின்னமாக அமையக் காரணமாகியது.

தமிழகத்தின் பல பகுதிகளில் வீரர்களின் வீரச்செயலைப் பிரதிபலிக்கும் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதை அவ்வப்போது ஊடகங்களின் வழி அறிகின்றோம். கரூர் நகரில் கண்டெடுக்கப்பட்ட, கரூருக்குப் புகழ்ச்சேர்க்கும் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டு, அவை இந்தக் கருவூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. கரூரில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.பி.8ம் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட இரண்டு நடுகற்களில் ஒரு நடுகல் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டும், ஒரு நடுகல் வட்டெழுத்துப் பொறித்த வகையிலும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுக்களே கரூர் நகரம் வஞ்சி என்றும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அழைக்கப்பட்டது என்பதை உறுதிசெய்வதாகவும் அமைகின்றன.

கரூரில் இதுவரை அடையாளம் காணப்பட்ட வரலாற்று அரும்பொருட்கள் கூறும் தமிழர் பண்டைய வரலாற்றுச் செய்திகள் ஏராளம். இதுவரை கண்டெடுக்கப்படாமல் கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் காணப்படும் தொல்லியல் புராதனச் சின்னங்களோ ஏராளம் ஏராளம். இவற்றை எப்போது நாம் அடையாளம் காணப்போகின்றோம்? இவற்றைக் கண்டெடுத்து எப்போது நாம் அவற்றை ஆய்வுக்குட்படுத்தி தமிழர் பண்டைய வரலாற்றுச் செய்திகளையும் வாழ்வியலையும் உலகுக்கு எடுத்துரைக்கப் போகின்றோம்? இவற்றிற்கும் மேலாக, இன்று கரூர் நகரில் இருக்கும் கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகத்தைப் புதுப்பித்து அதில் பாதுகாக்கப்படும் அரும்பொருட்களை மிகச் சிறப்பான முறையில் உலகுக்குக் காட்சிப்படுத்தி பெருமை கொள்ளப் போகின்றோம்?




இவையெல்லாம் இன்று நம் முன் நிற்கும் மிக முக்கியமான கேள்விகள் அல்லவா?

​துணை நூல்:
"Roman Karur", Dr.R.Nagasamy, 1995​ 

Monday, February 12, 2018

106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி

முனைவர் சுபாஷிணி
மனித உடல் ஆச்சரியங்கள் பல நிறைந்த ஒரு அதிசயப் பொருள். தாயின் கருமுட்டையில் தந்தையின் விந்துக் கலப்பு நிகழ்ந்து கருத்தரிக்கும் போது ஒரு குழந்தையின் உருவாக்கம் தொடங்குகின்றது. சிறு அணுவாக உருவாகி படிப்படியாக நரம்புமண்டல வளர்ச்சி, இருதய வளர்ச்சி, உடல் உருப்புக்கள் வளர்ச்சி எனப்படிப்படியாக வளர்ந்து 10 மாதங்கள் முடிந்து முழு குழந்தையாக தாயின் கருப்பையில் இருந்து குழந்தை வெளிவருவது நிகழ்கின்றது.
தொல்பழங்காலத்தில் பெண்ணின் வயிறு பெரிதாகி பின்னர் ஒரு மனிதக்குழந்தைப் பிறப்பதைப் பார்த்த மனிதர்கள் தம்மைப் போன்ற இன்னொரு விலங்கினை உருவாக்கும் சக்தி படைத்த பெண்ணையே தெய்வமாகச் சிலை வடித்து வழிபடும் வழக்கத்தை உருவாக்கித் தொடர்ந்தனர். உலகின் பல சமுதாயங்களில் மிகப்பழமையான தாய் தெய்வச் சிலைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் காலம் ஆராயப்பட்டு, அச்சிலைகள் உருவான பகுதிகளில் மக்கள் கொண்டிருந்த பண்பாட்டுக் கூறிகளை ஆராயும் ஆய்வுகள் பல நடந்திருக்கின்றன. இத்தகைய ஆய்வுகள் மனிதன் ஒரு குழந்தை பிறப்பை அவதானித்த தன்மைகளைக் கண்டறியும் வழிகளை ஆய்வுலகத்திற்கு வழங்கியிருக்கின்றன.
1
இன்று நமக்குக் கிடைக்கின்ற மிகப் பழமையான தாய் தெய்வ சிற்பங்கள் எனும் போது இன்றைய ஆஸ்திரியாவின் வில்லண்டோர்ஃப் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கிட்டிய Venus of Willendorf என்ற தாய் தெய்வத்தைக் குறிப்பிடலாம். இதன் காலம் கி.மு. 28,000லிருந்து 25,000 எனக்கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல இன்றைய துருக்கியின் காத்தாலோயுக் (Çatalhöyük ) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Çatalhöyük எனப்படும் தாய் தெய்வம் கி.மு. 5500லிருந்து 6000 எனக் கண்டறியப்பட்டுள்ளது, இதேபோல சிரியா, ஜெர்மனி, ஐக்கிய அரபு நாடுகள், பண்டைய பெர்சியா போன்ற நாடுகளிலும் இத்தகைய தெய்வ வடிவங்கள் பண்டைய மக்களின் வழிபாட்டில் இருந்தமையைக் காண்கின்றோம்.

மனித உடலை ஆராயும் முயற்சி பன்னெடுங்காலமாக அறிவியல் ஆய்வு நோக்கம் கொண்ட பலரால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. பல்வேறு காலகட்டங்களில் உடல்கூறு ஆய்வுகள் பல்வேறு சமூகங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று மேற்கத்திய ஆய்வுமுறைகள் உலகாளவிய அளவில் உடற்கூறு ஆய்வில் துரித வளர்ச்சியை அறிமுகப் படுத்தி செயல்படுத்தியிருப்பதால் மருத்துவத்துறை பன்மடங்கு வேகத்தில் வளர்ந்திருக்கும் சூழலை நாம் காண்கின்றோம். தமிழகச் சூழலில் உடல்கூறு ஆய்வுகள் என்பன இன்று நமக்கு அறிமுகமான புதியதொரு ஆய்வுத்துறை அல்ல. மாறாகச் சித்த வைத்திய முறையில் எப்படி மூலிகைகளை ஆராய்ந்து நோய்களுக்குத் தீர்வைக்கண்டு பிடித்தனரோ அதே போல உடலைக் கூறு செய்து பாகங்களை ஆராய்ந்து சோதனை மேற்கொண்டிருந்தனர் நம் மூதாதையர் என்பதனை நாம் மறந்து விடலாகாது. இத்தகைய ஆய்வுகளைச் செய்தோரை நமது சமூகத்தில் சித்தர்கள் என அடையாளப்படுத்தினர். இவர்கள் ஆய்ந்தறியும் விஞ்ஞானிகள் எனக் காண்பதை விடுத்து புனிதத்துவத்தை ஏற்றி வைத்தமையால் இவர்களது ஆய்வுகளை பொது மக்கள் பெருவாரியாகக் கற்றுப் பலனடைய வாய்ப்பு கிட்டாமல் போனது ஒரு துரதிட்டமே.
3
4 வார வளர்ச்சியில் குழந்தை
ஆனால் ஐரோப்பாவிலோ உடற்கூறு ஆய்வில் ஈடுபட்டோர் அவற்றை அறிவியலாகவும் அழகியலாகவும் காணும் முயற்சியைப் புகுத்தியமை உடற்கூறுகளை அறிந்து கொள்ளும் துறையில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டு இதனை மருத்துவ அறிவியல் துறையாக வளர்த்துள்ளது.
மேற்கத்திய உலகில் உடற்கூறு ஆய்வுகள் எனக் குறிப்பிடும் போது நமக்கு நன்கறிந்த லியோனார்டோ டாவின்சியின் பங்களிப்புக்கள் மிகச் சிறப்பானவை. மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு இறந்த மனிதர்களின் உடல்களைப் பெற்று, அவ்வுடல்களை கூறு செய்து, உடலின் பாகங்களைத் தனித்தனியாக எடுத்து அவற்றை ஓவியமாக வரைந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஓவியங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவருக்கு அடுத்தார் போல மேலும் பலர் தொடர்ந்தனர் என்றாலும், டாவின்சி இத்தகைய மனித உடற்கூறு பற்றிய ஓவியங்களை வழங்கி அறிவியலைக் கலைப்படப்பாக்கியதில் முன்னோடியாகத் திகழ்கின்றார் என்று குறிப்பிட வேண்டியது மிக அவசியமாகும்.
இன்று மருத்துவ உலகம் துரித வளர்ச்சி கண்டுள்ளது. ஒவ்வொரு வினாடியும் ஏராளமான புதிய நோய்கள் உருவாகிக்கொண்டேயிருக்கின்ற அதே வேளையில் ஒவ்வொரு விநாடியும் உலகின் பல மூலைகளில் நோய்களுக்கான நிவாரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருவதும் நிகழ்கின்றது.
4
மென்மையான தோல் போர்த்திய மனித உடலின் மேல் அழகிய ஆடைகளும் அணிகலன்களும் போட்டு அழகு பார்க்கின்றோம். அந்த தோலுக்குக் கீழ் உள்ள பாகங்களையும் அவை செயற்படும் முறைகளையும் பொதுவாக நாம் எண்ணிப் பார்ப்பது கிடையாது. இந்த பொது நிலை இருப்பதால் நமது சிந்தனையில் மனித உடல் என்பது ஒரு புனிதப் பொருளாகவோ, அல்லது காமப் பொருளாகவோ மட்டுமே பார்க்கும் மனம் வாய்த்து விடுகின்றது. அந்தக் கோணத்திலிருந்து விடுபட்டு தோலுக்குக் கீழே மறைந்திருக்கும் தசைகள், உடல் உறுப்புகள், நரம்புகள், இரத்த நாளங்கள், எலும்புகள், எனக் காணத்தொடங்கும் போது நமக்குக் கிடைக்கும் பார்வை ஒரு மாற்றுப் பார்வையாகவே அமையும். இந்தப் பார்வையை வழங்கும் வகையில் உலகின் சில நாடுகளில் மனித உடலைக் கூறு செய்து பாடம் செய்து அவற்றை ஆய்வில் ஆர்வம் உள்ளோருக்குக் கண்காட்சியாக ஏற்படுத்தியிருக்கின்றார்கள். ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், வட அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இத்தகைய உடற்கூறு கண்காட்சிக் கூடங்கள் அமைந்திருக்கின்றன. அத்தகைய ஒரு கண்காட்சிக் கூடம் தான் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் நகரில் இருக்கும் ”உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம்”.

”மகிழ்ச்சியளிக்கும் உடலின் பாகங்கள்” என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்திருக்கின்றனர். இதனை வடிவமைத்தவர்கள் டாக்டர்.குந்தர் வோன் ஹாகென்ஸ் மற்றும் டாக்டர்.அஞெலினா வேலி ஆகிய இருவருமாகும்.
இந்த அருங்காட்சியகத்தில் 200க்கும் குறையாத மனித உடலின் பாகங்கள் முழுமை யாகவும் பகுதிகளாகவும் எனக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்கனவாக, இங்குள்ள தாயின் கருப்பையில் வளர்ந்த 4 வாரம் தொடங்கி 8 வாரம் வரையிலான குழந்தைகளின் பாடம் செய்யப்பட்ட உடல்கள், கருகொண்ட தாயின் உடலில் குழந்தை முழுமையாக இருக்கும் வகையிலான ஒரு உடல், புகைபிடிப்பதனால் சேதப்பட்ட நுரையீரல், ரத்த நாளங்கள் பாயும் மனித முகம், தலை, மூளை, கால்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம். இங்குள்ள அனைத்து மாடல்களுமே மனிதர்களது உடலுறுப்புக்களேயாகும். இறப்பதற்கு முன்னர் தங்கள் உடலை மருத்துவ சோதனைக்காக அளித்த மனிதர்களின் உடல்களே இங்குப் பாடம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்திற்கு வருபவர்களுக்கு மனித உடலைப் பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கின்றன. உடல் உறுப்புக்களைக் கண்டு அஞ்சுவோரும், உடலை பாவப்பொருளாகவும் புனிதப் பொருளாகவும் நினைப்போரும் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்தால் உடலைப்பற்றி கொண்டிருக்கும் சிந்தனையில், தெளிவு தரும் வகையிலான அறிவியல் பூர்வமான தெளிவினை நிச்சயம் பெற முடியும்.
எத்தனையோ அதிசயங்களை நம் மனம் ஆசைப்பட்டுத் தேடி ஓடுகிறது. நாமே ஒரு அதிசயம் தான், நம் உடலும் ஒரு அதிசயம் தான், நம் உடலில் இயங்கும் உறுப்புக்களின் செயற்பாடுகளும் அதிசயம் தான் எனப் புரிந்து கொண்டால் பொய்யான அதிசயங்களில் நம் மனம் நாட்டம் கொள்ளாது.
போலித்தனத்தை துடைத்தொழிப்பதற்கும், மூட நம்பிக்கைகளை மனதிலிருந்து அகற்றுவதற்கும் அறிவியல் அறிவு ஒன்று தான் ஒரே வழி. அத்தகைய அறிவியல் பார்வையை வழங்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு ஜெர்மனிக்கு வருகை தருவோர் அனைவரும் வந்து பார்த்துச் செல்ல வேண்டும். இந்த அருங்காட்சியகத்தைப் பற்றிய முழு விபரங்களையும் https://bodyworlds.com/ என்ற வலைப்பக்கத்தில் பெறலாம்.