Monday, October 28, 2013

12. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – ஸ்பெயின்


முனைவர்.சுபாஷிணி 

ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை கவனிக்கும் போது ஒவ்வொரு நாடும் அதன் இப்போதைய நாட்டு எல்லையை அடைய குறிப்பிடத்தக்க போர்களை சந்தித்து வெற்றிகளையும் தோல்விகளையும் மாறி மாறி அனுபவித்து அவை கடந்து வந்திருக்கும் பாதையை ஒதுக்கி வைத்துப் பார்த்து விட முடியாது. சரித்திரத்தில் மிகப் பல மாற்றங்களைத் தொடர்ச்சியாக சந்தித்த ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயியினும் அடங்குகின்றது.

ஸ்பெயினின் எல்லை நாடுகளாக இன்று இருப்பவை போர்த்துக்கலும் ப்ரான்ஸும். ஏறக்குறைய 35,000 ஆண்டுகளாக மனித வாழ்க்கை இங்கு இருந்திருப்பதற்கான தடயங்கள்  இங்கு நன்கு தென்படுகின்றன. ரோமானிய பேரரசு தனது ஆளுமையை விரிவாக்கிய போது இன்றைய ஸ்பெயினின் எல்லைக்குள்ளும் வந்தது இந்தப் பேரரசு. சில நூறு ஆண்டுகள் ரோமானிய ஆட்சி, பின்னர் 8ம் நூற்றாண்டு தொடக்கம் மூரிய இஸ்லாமியர்களின் கைக்குள் ஸ்பெயின் வந்துவிட இஸ்லாமிய கலைகள் பெருகி வளர்ந்த ஒரு மேற்கு ஐரோப்பிய நாடாக அக்கால கட்டத்தில் ஸ்பெயின் விளங்கியது. அக்காலகட்டத்தில் நாடெங்கிலும் பதிந்து போன இஸ்லாமியக் கலைகளும் கலாச்சாரமும் கட்டிடக் கலையும் இன்றும் மறையாமல் ஸ்பெயினி சில நகரங்களில் இருக்கின்றன.

12ம் நூற்றாண்டு தொடங்கி, 13, 14ம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற பல போர்களில் ஆயிரக்கணக்கான போர் வீரர்களின் மரணத்தைத் தாண்டி இஸ்லாமிய ஆட்சி முற்றிலுமாக ஸ்பெயினிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டது. மீண்டும் கத்தோலிக்க கிறிஸ்துவ ஆட்சி ஸ்பெயினைக் கைப்பற்றி மிகுந்த ஆளுமையுடனும் தீவிரத்துடனும் நாடு முழுமைக்கும் கத்தோலிக்க மதம் சார்ந்த அரசாக உருவாகியது. மூரிய இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்ட மறைக்கப்பட்ட தனது முந்தைய பாரம்பரியத்தை மீட்டுடெடுத்தது இந்தப் புதிய அரசு. இந்த முயற்சிகளோடு இப்புதிய அரசின் செயல்பாடுகள் நின்று விடவில்லை.


கடல் போரினை விளக்கும் ஒரு 17ம் நூற்றாண்டு ஓவியம் (2013) 

ஸ்பெயின் இப்போதைய போர்த்துக்கலையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்ததோடு உலகம் முழுதும் தனது பராக்கிரமத்தை நிலை நாட்ட கடல் வழி பயணத்தில் கவனம் செலுத்தி மிகத்தீவிரமாக பல மாலுமிகளையும் ஆய்வாளர்களையும் இப்பணியில் அமர்த்தியது.   வணிகம், புதிய நிலப்பரப்பை கண்டு பிடித்தல் அங்கு தனது ஆளுமை விரிவாக்கம் செய்தல் என்பவை இதன் முக்கிய நோக்கமாக இருந்த போதிலும் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதையும் அதன் தலையாய நோக்கமாகக் கொண்டு இயங்கியது இந்தப் புதிய அரசு. ஸ்பெயின் அரச பரம்பரையினர் போர்த்துக்கல் மாலுமிகளுக்கு மிகுந்த பொருளுதவியும் தேவையான அனைத்து ஏற்பாட்டு வசதிகளையும் செய்து கடல் வழி பயணத்தை ஊக்குவித்தது. அந்த முயற்சிகளின் பின்னனியில் அமைந்த பயணத்தின் காரணத்தினால் தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த வரலாற்று முக்கியத்துவம் பொருந்திய நிகழ்வு நடபெற்றது; வாஸ்கோ ட காமா இந்தியா வந்ததும் நிகழ்ந்தது. கடல் வழி பயணத்தில் ஏனைய ஐரோப்பிய முயற்சிகள் மீண்டும் ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியா வந்து பின்னர் மலாயா தீபகற்ப இந்தோனீசிய தீவுகளை அடைந்ததும் பின்னர் மேலும் பயணத்தை விரிவாக்கி கொரியா, சீன வழிப் பயணங்களை மேற்கொண்டதும் என புதிய பாதைக்கு ஆதாரமாக அமைந்தது இந்த முயற்சிகளின் தொடர்ச்சிகள். இந்த மாலுமிகள் ஈடுபட்ட கடல் வழி பயண ஆய்வுகளின் வழியாக ஆய்வு உலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. மிக முக்கியமாக இன்றைய உலகின் பல நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு தாக்கமும் அடிப்படையும் கொடுத்த பெருமை இந்த வகை முயற்சிகளையே சாரும்.

கடல் வழி பயணம் மேற்கொண்டு இந்த மாலுமிகளும் ஆய்வாளர்களும் மேற்கொண்ட பயணங்களினால் ஸ்பானிஷ் மொழி உலகின் சில குறிப்பிடத்தக்க நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழியாக ஆகியிருக்கின்றது. உருளைக்கிழங்கு, மிளகாய்,  முந்திரி, தக்காளி போன்ற தாவர உணவுகள் ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளுக்கு அறிமுகமாகின. கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் அமெரிக்கா முழுமைக்கும்,  ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக இந்தியாவிலும் காலூன்றியது.

ஸ்பேனிஷ் மாலுமிகள் இவ்வகைப் பயணங்களில் செல்லும் போது தமது கப்பலில் கத்தோலிக்க மத குருமார்களையும், போர் வீரர்களையும், அரச பிரதி நிதிகளையும், வணிகர்களையும் சேர்த்தே அழைத்துச் செல்வார்களாம். ஓரிடத்திற்கு வணிக நோக்கமாகச் சென்று, உள்ளூர் அரசியல் பிரமுகர்களிடம் ஸ்பேனிஷ், போர்த்துக்கீஸிய அரச தூதுவர் வழியாக நட்புறவை உருவாக்கிக் கொண்டு பின்னர் அங்கே உள்ளூர் மக்களை ஏதாவது ஒரு காரணத்தினால் கத்தோலிக்க மதத்திற்கு மதம் மாற்றுவதும் பின்னர் தக்க வாய்ப்பு அமைந்தால் அரசியல் ரீதியாக தமது முயற்சிகளைத் துவக்கி நாட்டை கைப்பற்றுவதும் என்பது குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்ந்துள்ளன. இவர்களின் இந்த திட்டமிட்ட பயணத்தினால் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்தது ஸ்பேனிஷ் அரசு. தாம் போரிட்டு வென்றோ அல்லது தந்திரமாகவோ  கைப்பற்றும் நாடுகளிலும் நகரங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பொன்னும் மணியும் வைரங்களும் வைடூரியங்களும் ஸ்பேனிஷ் அரச மாளிகையில் அலங்கரித்துக் கொண்டிருந்தன.  ஸ்பெயின் நாட்டின் வளத்தை இவை பெருக்கிக் கொண்டிருந்தன.

15ம் நூற்றாண்டு தொடங்கி ஸ்பேனிஷ்  அரசின் பொருளாதார உதவியுடன் போர்த்துக்கீஸிய மாலுமிகள் மேற்கொண்ட கடல் பயணங்களின் போது உலகின்  வெவ்வேறு  பூகோளப்பகுதிகளிலிருந்து தேடிக் கொண்டு வந்து சேர்த்த விலை மதிக்க முடியாத  பொருட்கள் அனைத்தும் இப்போது ஸ்பெயினின் பல நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களை நிரப்பியிருக்கின்றன.  இந்த வரலாற்று  தொன்மை மிக்க பொருட்களையெல்லாம் அதன் அருமை பெருமை உணர்ந்து உலகத்தரம் நிறைந்த ஆய்வுத்தரம் பொருந்திய பிரமாண்டமான அருங்காட்சியகங்களை ஸ்பெயின் நிருவியுள்ளது.  தனது ஆளுமை எந்தெந்த நாடுகளிலெல்லாம் நிருவப்பட்டதோ அங்கிருந்தெல்லாம் கொண்டு வரப்பட்டு தனியார் சேகரிப்பாகவும் அரச சேகரிப்பாகவும் அமைந்த அனைத்து பொருட்களும் அதனதன் நோக்கத்திற்கேற்ற வகையில் இனம் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பிரத்தியேக அருங்காட்சியகங்கள் நிருவப்பட்டு இப்பொருட்கள் எல்லாம் இப்பிரமாண்டமான எழில் நிறைந்த கட்டிடங்களில் காட்சிக்கு வைக்கப்ப்பட்டுள்ளன.

ஸ்பெயினில் இதுவரை நான் ரோண்டா, மலாகா, கோர்டோபா, டொலேடோ, ஸ்பெயினின் தலைநகர்  மட்ரிட் ஆகிய பெரும் நகரங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன். ஸ்பெயினுக்குச் சொந்தமான கனேரித் தீவுகளை இங்கு தற்சமயம் குறிப்பிட அவசியவில்லை என்பதாலும் அதன் சிறப்புக்கள் ஸ்பெயின் தீபகற்பத்திலிருந்து வேறுபடுவதாலும் கனேரித் தீவுகளில் உள்ள அருங்காட்சியகங்கள் பற்றி வேறொரு முறை குறிப்பிட நினைத்திருப்பதாலும் இத்தீவுகளின் அருங்காட்சியகங்களை இப்பதிவில் ஒதுக்கிவிடுவது சிறப்பு என்றே கருதுகின்றேன். அந்த வகையில் இந்த நான்கு மிகப் பெரிய நகரங்களிலும் நான் சென்று பார்த்து தகவல் பதிந்து கொண்டு வந்த அருங்காட்சியகங்கள் 30க்கும் மேற்பட்டவை.

இந்த 30க்கும் மேற்பட்ட அருங்காட்சிகங்களில் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பது என்பது எனக்கு ஒரு சோதனைதான். ஆனாலும் ஸ்பெயின் நாட்டினை என் மனதில் நினைத்தால் கடல் பயணமும் அதன் தொடர்பான நிகழ்வுகளும் தான் மனதில் வந்து அலை மோதுகின்றன. ஆக மட்ரிட்டில் அமைந்திருக்கும் Museo Naval  அதாவது (Naval Museum)  கடல்வழிப்பயண அருங்காட்சியகம் முதலாகத் தொடங்கி இந்த நாட்டின் அருங்காட்சியகங்களை அறிமுகப்படுத்துவதே தகும் என்று கருதுகின்றேன்.


அருங்காட்சியகத்தின் வாசல் பகுதி (2013)


பயணம் செல்ல ஆயத்தமாகி விட்டீர்களா..? நம் பயணத்திற்கான கப்பலும் அதன் மாலுமியும் காத்திருக்கின்றார்கள். வாருங்கள் செல்வோம்..!

Monday, October 21, 2013

11. ஊட்ஸி அருங்காட்சியகம், போல்ஸானோ - 3, இத்தாலி.

முனைவர்.சுபாஷிணி 

அண்மையில் வெளிவந்த பி.பி.சி செய்தி ஒன்று குறைந்தது 19 பேர் ஊட்ஸியின் பரம்பரையில் வந்தவர்கள் என்று இத்தாலியின் திரோல் பகுதியில் உள்ளவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/news/world-europe-24477038 தற்கால DNA சோதனைகளின் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் இவ்வகையில் ஆய்வு செய்து ஒரு நபரின் பரம்பரையை இனங்காணும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. இந்த ஆய்வுகளினால் 5300 ஆண்டு பழமையான ஊட்ஸிக்கும் தற்சமயம் உறவினர்கள் இருப்பது நமக்குத் தெரிய வருவதும் ஒரு சுவாரசியமான விஷயம் தானே. இண்டஹ் ஆய்வுகள் மேலும் தொடர்வதால் இன்னும் பலர் கூட அடையாளம் காணப்படலாம்.


ஊட்ஸியை ஆராயும் ஒரு ஆய்வாளர்.
நன்றி:http://www.voanews.comஊட்ஸி எப்படி இறந்திருப்பார்?

ஆய்வாளர்களின் கணக்குப்படி இவர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் இவரை யாரோ தாக்கியிருக்கின்றனர். தாக்குதலால் உண்டான காயம் உடலில் தோல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் எய்திய அம்பினால் தான் இவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. அந்த அம்பு முதுகுப் பகுதியின் வழியாகச் சென்று இருதயத்தைத் தாக்கி அம்பில் இருந்த விஷமும் உடலின் ரத்தத்தில் கலந்து இந்த இறப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே மருத்துவக் கண்டுபிடிப்பு.

ஊட்ஸியின் உடலில் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகள் அவர் உடலுடன் கண்டெடுக்கப்பட்ட சாதனங்கள், எச்சங்கள் அனைத்தும் அவரது வாழ்க்கை நிலையை விளக்குவதற்கு ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவுவனவாக அமைந்திருக்கின்றன. ஊட்ஸி தனது கையில் வைத்திருந்த கோடாறியும் அம்புகளும் ஏனைய சாதனங்களும் அவர் ஒரு வீரராக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றன. அவர் கொண்டிருந்த ஆடை அமைப்பு, ஆயுதங்கள், உடலில் இருந்த தானிய வகைகள் இவையனைத்தும் இவர் ஒரு ஷமான் – shaman (குறி சொல்பவர் ) ஆக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன. இக்கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவது இவர் உடலில் இருக்கும் சில குறிகள்.

ஊட்ஸியின் உடலில் பச்சை குத்தப்பட்டதற்கான அறிகுறிகளை இவரது உடலை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். கால் பகுதியில் புள்ளிகள் பல குத்தப்பட்டிருப்பதையும் இவை ஏதும் நோயினால் ஏற்பட்டதல்ல என்பது பச்சைக் குத்தப்பட்ட குறிகள் என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இத்தாலியின் இப்பகுதியில் வாழ்ந்த பண்டைய மக்களின் நாகரிகத்தில் பச்சைக் குத்திக் கொள்ளுதல் என்பது குறி சொல்பவர்கள் பழக்கத்தில் இருந்து வரும் ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது. பச்சை குத்துதல் என்பது இந்த ஐரோப்பிய மனிதர் சார்ந்திருந்த சமூகத்திலும் இன்றைக்கு 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டே இருந்து வந்தது என்பதை அறியும் போது இதே போன்ற பச்சைக் குத்திக் கொள்ளுதல் நம் இந்திய பண்பாட்டிலும் வழக்கில் இருந்து வருவதும் இவ்விதமான பண்பாட்டு ஒற்றுமைகளும் ஆச்சரியம் கொடுக்கின்றன.

ஊட்ஸியின் உடல் மிகப் பாதுகாப்பாக இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஊட்ஸி மம்மி இருக்கும் பகுதிக்கு பின் பகுதியில் பனிப்பகுதி போல அதிகமான குளிர் தரும் வகையில் குளிர்சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. ஊட்ஸி ஒரு கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். ஆகவே நேராகப் பார்க்க முடியாது. ஒரு கண்ணாடி வழியாகத்தான் காண முடியும். மம்மியின் உடல் எந்த வகையான பாக்டீரியாவினாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் இந்த பாதுகாப்பு அமைந்துள்ளது.


ஊட்ஸி வைக்கப்பட்டிருக்கும் இக்கட்டிடத்தின் முதல் மாடிப்பகுதியின் மாடல் இது. (மே 2013)


ஊட்ஸியின் உடலை புதைப்பதா எரிப்பதா அல்லது இப்படி காட்சிக்கு வைப்பதா என்ற கேள்விகளும் ஆரம்ப நிலையில் எழாமல் இல்லை. ஆனால் இவர் உடல் ஆய்வுலகத்திற்கு அளித்த பல்வேறு தகவல்கள் இவர் உடலின் அமைப்பு, பனியிலே உறைந்து மட்டுமே மம்மியாக்கப்பட்ட ஒரு உடல் என்ற வகையில் மிகத்தனித்துவம் வாய்ந்த மம்மியாக ஊட்ஸி ஆய்வுலகத்தின் கண்களுக்குத் தென்படுவதால் பொதுமக்களும் ஊட்ஸியை காண வேண்டும்; அதற்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று முடிவாகி இப்போது நிரந்தரமாக இங்கே ஊட்ஸி காட்சிக்கு இருக்கின்றார்.


இப்போது இப்படி இருக்கும் ஊட்ஸி..


இப்படித்தான் இருந்திருப்பார் என அண்மைய கண்டுபிடிப்புக்களை வைத்து மாடல் செய்திருக்கின்றனர்.


ஊட்ஸி அருங்காட்சியகத்திற்கு நானும் என் கணவரும் சென்ற போது வசந்த கால தொடக்கம். ஆனால் குளிர் 15 டிகிரி, மழைத்தூரலும் வேறு சேர்ந்து கொண்டது. அருங்காட்சியகத்தினுள்ளே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிப்பதால் நாங்கள் ஏறக்குறைய 1 மணி நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று பார்த்தோம். அந்தக் குளிரில் குடை பிடித்துக் கொண்டு மழையில் நின்று கொண்டிருந்த அசௌகரியங்களெல்லாம் ஊட்ஸியை நேரில் பார்த்து அவர் பற்றிய ஆய்வு விஷயங்களை அறிந்து கொண்ட போது மறைந்து விட்டன.

ஊட்ஸியைப் பற்றி விரிவான விவரங்கள் தரும் நூல் Otzi: The Iceman. இந்த நூல் அருங்காட்சியகத்திலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த நூலை இத்தாலி, டோய்ச், ஆங்கிலம் ப்ரென்ச் ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து அருங்காட்சியகத்தின் மேல் மாடியில் ஒரு வாசிக்கும் பகுதி அமைத்து அங்கு வைத்திருக்கின்றனர். படங்களுடன் கூடிய அனைத்து வயதினரும் வாசித்து மகிழக் கூடிய நூல் இது. ஊட்ஸியைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் அறிந்து கொள்ள விரும்புவோர் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ பக்கமான http://www.iceman.it/ சென்று மேலும் பல படங்களும் விவரங்களும் வாசித்துப் பயனடையலாம்.

இத்தாலியின் திரோல் மாகாணத்திற்குப் பயணம் செல்பவர்கள் மறக்காமல் சென்று பார்த்து வர வேண்டிய ஒரு அருங்காட்சியகம் இது என்பதில் சந்தேகமில்லை!


Monday, October 14, 2013

10. ஊட்ஸி அருங்காட்சியகம், போல்ஸானோ - 2, இத்தாலி.

முனைவர்.சுபாஷிணி 

ஊட்ஸி அருங்காட்சியகக் கட்டிடம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம். முதலாம் உலகப்போர் வரை இத்தாலியின் போல்ஸானோ நகர் ஆஸ்திரியாவிற்குச் சொந்தமாகத்தான் இருந்தது. போரில் ஆஸ்திரியா தோற்றபோது ஏற்பட்ட எல்லை மாற்றங்களில் இப்பகுதி இத்தாலிக்குச் சொந்தமாகியது. பின்னர் 1980ல் இப்போது அருங்காட்சியகம் இருக்கும் கட்டிடம்  போல்ஸானோ மாநகராட்சியினால் வாங்கப்பட்டது. இச்சாலையில் இருக்கும் பல கட்டிடங்கள் அது சமயம் தனியார் வசமாகவும்வங்கிகளாகவும் செயல்பட்டு வந்தன. 1996ல் ஊட்ஸிக்கு அருங்காட்சியகம் தேவை என முடிவாக இந்தக் கட்டிடத்தை ஒரு அருங்காட்சியகமாக உருவாக்கும் கட்டிடப் பணிகள் தொடங்கின. இக்கட்டிடம் புதுப் பொலிவுடன் அருங்காட்சியகமாக 28.3.1998ம் நாள் திறந்து வைக்கப்பட்டது.


ஊட்ஸி அருங்காட்சியகத்தின் உள்ளே (2013)


ஊட்ஸியின் உடல் அளவு, அவரது உடலில் அணிந்திருந்த ஆடைகள் கருவிகள், அவர் இறப்பதற்கு முன்னர் என்ன சாப்பிட்டிருப்பார், எதனால் அவர் இறந்திருக்கக் கூடும் என எல்லா வகை ஆய்வுகளையும் ஆய்வுக் குழு முடித்து இந்த 3 மாடிக் கட்டிடத்தில் பல சிறு பகுதிகளாகப் பிரித்து காட்சிக்கு விளக்கங்களுடன் வைத்திருக்கின்றனர். அக்குறிப்புக்களில் உள்ள தகவல்கள் ஒவ்வொன்றும் ஊட்ஸியை அவர் வாழ்ந்த காலத்தில் இப்பகுதியின் நிலை, மக்கள் நிலை ஆகியவற்றை ஊகித்தறிய உதவுகின்றன என்று நிச்சயம் சொல்லலாம்.

மம்மியாக கண்டெடுக்கப்பட்ட ஊட்ஸியின் உடல் அளவைப் பற்றி முதலில் பார்ப்போம். இவர் ஹோமோ செப்பியன் வகை இனத்து நாகரிக மனிதன். இறக்கும் நாளிலும் நாகரிக உலக மனிதன் போல உடையணிந்தே காட்சியளித்திருக்கின்றார்; இலை தளைகளையும் மரப்பட்டைகளையும் ஆடைகளாகக் கட்டிக் கொண்டல்ல. அவரது உயரம் 1.60மீ, எடை 50கிலோ. இன்றோ ஊட்ஸி 1.54மீ குறைந்து எடை அளவில் 13கிலோ மட்டுமே இருக்கின்றார். உடலின் ரத்தம் சதை நீர் என பிரிந்த பின்னர் எடையிலும் உயரத்திலும் இந்த மாற்றம் நிகழ்வது சகஜம்தான். ஊட்ஸியின் கண்னின் மணிகள் ஐரோப்பிய இனத்தின் பொதுவான வர்ணமாகிய நீல நிறத்தவை.

இறப்பதற்கு முன்னர் இவர் என்ன வகை உணவை சாப்பிட்டிருப்பார் என்ற வகையிலான ஆய்வுகளும் இந்த ஆய்வுகள் வழங்கியிருக்கும் தகவல்களும் எனக்கு தற்கால விஞ்ஞான வளர்ச்சியை நினைத்து வெகுவாக ஆச்சரியப்படுத்தியது.   தனது இறப்புக்கு 12 மணி நேரத்திற்கு முன்னர் ஊட்ஸி இறைச்சி உணவும் தானியவகை உணவுகளையும் உண்டிருக்கின்றார். சமைக்க உருவாக்கிய அனலின் கரியின் சில துகள்கள் இவரது உணவுப்பையில் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் அவர் இறைச்சியையும் தானியத்தையும் கரி அனலில் வாட்டி உண்டிருக்கின்றார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டையாடி தனது உணவை பிடித்து அதனை அனலில் சமைத்து சாப்பிட்டு விட்டு வரும் வேளையிலேயே அவரது  மரண சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.

ஊட்ஸி இறப்பதற்கு முன்னர் அவரது உடல் நிலையில் அவர் நோயுற்றிருந்தமைக்கான அறிகுறிகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவரது எலும்புகள் வலுவிழந்தும், அவரது நோய் எதிர்ப்புச்சக்தி குன்றியும் காணப்பட்டிருக்கின்றது. அவரது உடலின் உள்ளே காணப்பட்ட சில பொருட்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் இவர் அனேகமாக ஒரு கோடைகாலத்தில் ஆரம்ப காலத்தில்தான் இறந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

ஊட்ஸியின் உடைகளும் அவர் அணிந்திருந்த அணிகலன்களும் இன்றைக்கு 5500 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் எவ்வகையில் வாழ்ந்தனர் என்பதை நமக்கு அடையாளம் காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. இவர் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது தான் தக்கப்பட்டு இறந்திருக்கின்றார். அப்படி சென்று கொண்டிருக்கும் வேளையில் அவர் இப்போது நாமெல்லாம் அணியும் Bag Pack, அதில் நிறைய சறுகுகள் என வைத்து முதுகில் தூக்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்திருக்கின்றார்.

தலையில் ஒரு தோலினாலான தொப்பி அணிந்திருந்திருக்கின்றார். தன் உடலை வெயிலிலோ அல்லது குளிரிலோ பாதுகாக்க ஆட்டுத் தோலினாலானா ஒரு மேல் ஆடை தரித்திருந்திருக்கின்றார். வெவ்வேறு வகையான கருவிகளைக் கொண்டு அந்தத் தோலை சுத்தப்படுத்தி உடை தயாரித்து அணிந்திருக்கின்றார் என்பதும் தோலின் மேல் உள்ள பல கீறல்களின் அடிப்படையில் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆடையின் கைப்பகுதி கிடைக்காமையினால் அவரது ஆடை கையுடன் தைக்கப்பட்டதா அல்லது கையின்றி அமைக்கப்பட்டதா என்ற தகவல் அறியப்படவில்லை.

இப்போதெல்லாம் பெண்கள் பேஷனாக நினைத்து அணியும் லெகிங் அப்போதே ஊட்ஸி அணிந்திருந்திருக்கின்றார். இது ஒரு வகையான காலிணை ஒட்டிய வகையில் அமைந்த ஒரு காலுறை எனலாம். குளிருக்குப் பாதுகாப்பாக இருக்க அணிந்திருக்கலாம். அவரது கால்பகுதியோடு ஒட்டிக் கிடைத்த லெகிங்கைப் பத்திரப்படுத்தி அது எவ்வாறு இருந்தது என்பதை இதனால் அறிந்து கொள்ள முடிகின்றது.  இந்த லெகிங் எப்படி அணிந்திருந்தார் என்பதைக் காட்டும் படத்தைக் கீழே காண்கின்றோம்.


ஊட்ஸி அணிந்திருந்த லெகிங் (மே 2013)


பனியிலேயே மூழ்கிக் கிடந்தமையால் இந்த லெகிங் தோல் ஆடை முழுமையாக சேதம் அடையாமல் 5500 ஆண்டுகளுக்குப் பின்னர் நம் பார்வைக்கு வருகின்றது என்பது எவ்வளவு ஆச்சரியம் தருகின்றது? இந்த லெகிங் ஆடைகளை ஆராய்ந்த போது பலமுறை பயன்படுத்தப்பட்ட ஆடைதான் இது என்பதனையும் கண்டுபிடித்திருக்கின்றார்கள். ஆக அக்காலகட்டத்து நிலமையில் ஆடைகளை மீண்டும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் நிலைதான் மனிதர்களுக்கு இருந்திருந்திருக்கின்றது.
ஊட்ஸி அணிந்திருந்த காலணி பாதுகாப்பாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றது (மே 2013)

ஊட்ஸி நாகரிகமான மனிதர் அல்லவா? அதனால் காலனி அணிந்து சென்றிருக்கின்றார். அவர் அணிந்திருந்த தோலினால் செய்யப்பட்ட 2 காலணிகளும் மிக நேர்த்தியாக காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன. தனது தோலாடைக்கு மேல் பெல்ட் ஒன்றும் கட்டியிருந்திருக்கின்றார். முழு உடை அணிந்திருந்த நிலையிலே  ஆல்ப்ஸ் மலையில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையிலே. ஏறக்குறைய தனது 50வது வயதில் ஊட்ஸி என்று நாம் இன்று பெயரிட்டு அழைக்கும் அம்மனிதரின் இறப்பு  நிகழ்ந்திருக்கின்றது. இவர் எப்படி இறந்தார்?

இதற்கான விடையை அடுத்த வாரம் சொல்கின்றேன்!

தொடரும்..

Monday, October 7, 2013

9. ஊட்ஸி அருங்காட்சியகம், போல்ஸானோ, இத்தாலி.முனைவர்.சுபாஷிணி 

1991ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் நாள். மதியம் 1.30 நற்பகல்.  ஜெர்மனியின் தென்கிழக்கு நகரான நுர்ன்பெர்க்கை சேர்ந்த எரிக்கா சிமோன், அவர் கணவர் ஹெல்முட் சிமோன் இருவரும் இத்தாலி நகரின் ஊட்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கள் மலையேறும் கருவிகளுடன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நடந்து கொண்டிருந்தனர். இவர்களது இப்பயணம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறப்போகும் ஒரு பயணமாக அமையப் போகின்றது என அவர்கள் கணவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். இவர்கள் இருவரும் சுற்றுலா முன்னிட்டு தங்கள் ஓய்வு நேரத்தை மலைப்பகுதியில் நடந்து ஆல்ப்ஸ் மலையின் அழகை ரசித்துக் கொண்டே இயற்கையை மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு இங்கு பயணித்தவர்கள்.  ஆல்ப்ஸ் மலையின் திசெஞ்ஞோ (Tisenjoch)  மலையில், கடல் பரப்பிலிருந்து 3210 அடி உயரத்தில் அவர்கள் நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் கண்களில் ஒரு பொருள் தென்பட்டது.  பனிப்பாறைப் பகுதியான அங்கே ஒரு பகுதியில் பனி கறைந்து நீர் நிலை தென்பட அந்த சிறு குளம் போன்று தெரிந்த குழியில் இருந்த ஒரு பொருள் அவர்கள் கவனத்தை ஈர்த்தது.  முதலில் குப்பை மூட்டையாக இருக்குமோ என நினைத்த அவர்கள் அருகில் சென்று பார்த்த போது அது ஒரு மனித சடலம் என்பதை அறிந்த போது அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அச்சடலத்தின் பின்னுடல் பகுதி, தலைமுழுவதும் முதுகுப் பகுதி மட்டும் வெளியே தெரிய கீழ் பகுதி பனிப்பாறைக்குள் பாதி மூழ்கிய வண்ணம் இந்தச் சடலம்  இவர்கள் கண்களில் தென்பட்டது.


ஊட்ஸி - சிமோன் தம்பதியர் எடுத்த முதல் படம்

அங்கிருந்து செல்வதற்கு முன்னர் அவர்கள் அச்சடலத்தைப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மலையில் தங்களைப் போல நடக்க வந்த ஒரு இயற்கை விரும்பியோ சுற்றுப்பயணியோ இங்கு தவறி விழுந்து இறந்து போய் உறைந்து கிடக்கின்றாரோ என் அவர்கள் சிந்தனையில் எண்ணம் எழும்பியது.  அப்போது கூட அவர்கள் இச்சடலம் சில வாரங்களில் உலகப்புகழ் பெறப்போகும் ஒன்று என்றோ தங்கள் பெயரை இந்தச் சடலத்தின் பெயரோடு மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்றோ சிறிதும் நினைக்கவில்லை.

இச்சடலத்தை தாங்கள் பார்த்த செய்தியை அவர்கள் காவல்துறையிடம் தெரிவிக்க முதலில் ஒரு ஆஸ்திரிய மலையேறிகள் பாதுகாப்புக் குழு மறுநாள் 20ம் தேதி இப்பகுதிக்கு விரைந்தது. இத்தாலியின் போல்ஸானோ ஆஸ்திரியாவின் எல்லை நகரம். ஆக மலைப்பகுதி இருந்த இடம் ஆஸ்திரிய எல்லை என்பதால் முதலில் இப்பணியை இக்குழு தொடங்கியது. அன்றைய நாள் பனி அதிகமாகிவிட, இக்குழுவினரால் சடலத்தை நீரை உருக்கி வெளியே எடுக்க முடியவில்லை. இந்த முயற்சியில் சடலத்தின் இடுப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டு விடவே முயற்சியை இவர்கள் கைவிட்டனர்.

மறு நாள் 21ம் தேதி இப்பகுதிக்குச் செல்ல ஹெலிகாப்டர்கள் கிடைக்கவில்லை. ஆனால் உலகப் புகழ்பெற்ற மலையேறும் பிரபலங்களான ஹான்ஸ் காமர்லாண்டரும் ரைன்ஹோல்ட் மெஸ்னரும் இப்பகுதிக்கு விரைந்து வந்து இந்த மனித சடலத்தின் மேல் ஆங்காங்கே தென்பட்ட உடை கருவிகள் ஆகியவற்றை கண்ணுற்றனர்.


ஹான்ஸ் காமர்லாண்டரும் ரைன்ஹோல்ட் மெஸ்னரும் 

மறு நாள் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பாதுகாப்பு அதிகாரி அலோஸ் பிர்ப்பாமர் தனது குழுவினருடன் இங்கு சென்று இச்சடலத்தை மீட்க முயற்சித்தார். பனி மிக இறுகிப் போயிருந்தமையால் சடலத்தை பனிக்குளத்திலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை. ஆக, இச்சடலத்தின் அருகில் கிடைத்த அனைத்து பொருட்களை மட்டும் ஒரு குப்பை எடுக்கும் ப்ளாஸ்டிக பையில் நுழைத்து பத்திரப்படுத்தி தனது தோளில் தூக்கிக் கொண்டு தனது ஹோட்டலுக்குச் சென்றார்.  மறு நாள் மீண்டும் இச்சடலத்தை எடுக்கும் பணி தொடர்ந்தது.

23ம் தேதி திங்கட்கிழமை வானிலையும் ஓரளவு சீதோஷ்ணமும் ஒத்துழைக்க பனியிலிருந்து இச்சடலம் மீட்கப்பட்டது. அன்று இன்ஸ்பூர்க் பல்கலைக்கழக மருத்துவத் துறையைச் சார்ந்த திரு.ரைனார் ஹென் அவர்களின் மேற்பார்வையில் இந்தச் சடலத்தை மலைப்பகுதியிலிருந்து மீட்டெடுத்தனர். இந்த மீட்புப் பணி முழுமையாக கேமராவில் பதிந்து வைக்கப்பட்டது.  இந்த மீட்புப் பணியின் போது தொல்லியல் அறிஞர்கள் உடன்வரவில்லை. இதற்கு முக்கியக்காரணம் அதுவரை இம்மனிதன் யாரோ விழுந்து இறந்த சுற்றுப்பயணி என்ற சிந்தனையே அனைவர் என்ணத்திலும் ஓடிக் கொண்டிருந்தது. பனியிலிருந்து இந்த மனித சடலத்தை வெளியே எடுத்தபோது அம்மனித உடலில் ஒட்டியிருந்த ஆடைகள் அவரோடிருந்த தோலினால் செய்யப்பட்ட கருவிகளின் பகுதிகள் அனைத்தும் சிதைந்தும் பாதியுமாகக் கிடைத்தன. இந்த மனித சடலத்தை எடுத்துக் கொண்டு ஆஸ்திரிய ஊட்ஸ் பள்ளத்தாக்குக்கு இந்தக் குழு விரைந்தது. சட்ட ஆலோசகரின் ஆணைப்படி இந்த மனித சடலமும் ஏனைய பொருட்களும் இன்ஸ்ப்ருக் பல்கலைக்கழக மருத்துவத்துறையில் ஆயவகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இம்மனிதச் சடலம் கண்டெடுக்கப்பட்ட ஆறு நாட்களுக்குள் இம்மனிதன் இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவரல்ல என்பது உறுதியாகிவிட இது பல்கலைக்கழக மருத்துவத்துறையினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  பின்னர் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ஆய்வு செய்வது தகும் என முடிவாக தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் கோன்ராட் ஸ்பிண்ட்லெர் இச்சடலத்தை ஆய்வு செய்யத் தொடங்கினார். அவரது ஆய்வு இச்சடலம் குறைந்தது 4000 ஆண்டுகள் பழமையானது என்று காட்டி ஆய்வுத்துறையினரை ஆச்சிரியத்தில் மூழ்கடித்தது. இந்த மனித சடலத்தைப் போல இதுவரை நன்கு உடையணிந்த, கருவிகளுடனான வேறெந்த சடலமும் இதுவரை உலகில் எங்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இச்சடலத்தை C-14  கார்பன் டேட்டிங் ஆய்வு முறைக்கு உட்படுத்தி இன்ஸ்ப்ருக் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வகம் தவிர்த்து வெவ்வேறு நான்கு ஆய்வகங்கள் ஆய்வு செய்தன. இந்த ஆய்வுகளின் கணக்குப்படி இந்த மனிதன் கி.மு 3350 முதல் 3100 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த மனிதன் என்பது, அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 5500 ஆண்டுகள் முன் வாழ்ந்த மனிதன் என்பது புலனாகியது. இச்செய்தி உலகம் முழுவதும் செய்தி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

ஊட்ஸி என இம்மனித சடலத்திற்கு முதலில் பெயரிட்டவர் கார்ல் வெண்டி என்ற ஒரு செய்தியாளர். ஊட்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனிதனாகையால் அப்பகுதிப்பெயரை தொடர்புபடுத்தி தனது செய்திகளில் இச்சடலத்தை ஊட்ஸி என பெயரிட்டு இவ்வாய்வுகள் தொடர்பான விஷயங்களை எழுதி வந்தார்.   இப்பகுதி ஊராட்சி மன்றத்தின் சட்டக்குறிப்புப்படி இச்சடலத்திற்கு முதலில் வழங்கப்பட்டதும் அதிகாரப்பூர்வமான பெயரும் “Der Mann aus dem Eis” – “L’Uomo venuto dal ghiaccio” அதாவது பனியிலிருந்து தோன்றிய மனிதன்  என்பதாகும். அது வழக்கில் இன்று இல்லை. ஊட்ஸி என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.


ஊட்ஸி கண்டெடுக்கப்பட்ட இடம் - வரைபடத்தில்

ஆஸ்திரிய ஊட்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் தேடுதல் முயற்சிகள் தொடங்கி ஆஸ்திரிய இன்ஸ்ப்ரூக் பல்க்லைக்கழகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் எப்படி ஊட்ஸி இத்தாலியின் போல்ஸானோ பகுதிக்கு வந்து இத்தாலிக்குச் சொந்தமானார் என்பது ஒரு முகிய விஷயம். இந்த ஊட்ஸி மம்மி கண்டெடுக்கப்பட்ட சில நாட்களில் இச்செய்தி பரவ, இது இத்தாலிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒன்று என அறிந்த பின் எல்லைக்கோட்டினை மீள்பார்வைய் செய்யும் முயற்சியில் இரண்டு நாடுகளுமே இறங்கின. 1919ம் ஆண்டு செய்து கொண்ட செயிண்ட் ஜெர்மானான் எல்லை ஒப்பந்தத்தின் படி (St. Germain-en-Laye) எல்லைக்கோடு இன்-எட்ச் (Inn-Etsch) பள்ளத்தாக்கு நீரெல்லை ஓரத்தினதாக அமைந்திருக்கின்றது. திசெஞ்ஞோ (Tisenjoch)  மலைப்பகுதியிலோ எல்லைக்கோடு சரியாகத் குறிப்பிடும் வகையில் அமையவில்லை. ஆக, அக்டோபர் மாதம் 2ம் தேதி மீண்டும் ஒரு நில அளவைப் பணி இங்கு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ஊட்ஸி கண்டெடுக்கப்பட்ட பகுதி ஆஸ்திரிய தெற்கு எல்லையிலிருந்து 92.56மீ தூரம் கீழே இத்தாலியில் இருப்பதால் ஊட்ஸி இத்தாலிக்குச் சொந்தம் என அதிகாரப்பூர்வமாக முடிவாகியது.

இத்தாலிக்கு ஊட்ஸி சொந்தமென்று ஆகிய பின்னரும் தொடர்ந்து ஆய்வுகள் அனைத்துமே இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்திலேயே தடைகளின்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. ஊட்ஸியின் உடல் முழுமையும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அவர் அணிந்திருந்த ஆடையின் பகுதிகளும் கருவிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஆய்வு முடிவுகள் அனைத்தும் ஒவ்வொன்றாகக் கிடைக்க ஊட்ஸியையும் இவ்வாய்வினையும் பொதுமக்கள் காணும் பொருட்டு ஒரு அருங்காட்சியகம் தேவை என முடிவாக இத்தாலியின் போல்ஸானோ நகரில் ஊட்ஸிக்கு ஒரு அருங்காட்சியகம் அமைந்தது.


ஊட்ஸி தொல்லியல் அருங்காட்சியகம் (மே 2013)


இவ்வாண்டு (2013) மேமாதம் நான் இந்த அருங்காட்சியகம் சென்றிருந்த போது நேரில் பார்த்து எழுதிக் கொண்டு வந்த குறிப்புக்களைத் தொடர்ந்து அடுத்த பதிவில் வழங்குகின்றேன். ஆக, ஊட்ஸியைப் பார்க்க அருங்காட்சியகத்தின் உள்ளே செல்வோமா?