Friday, December 21, 2018

115.​​ இந்தியப்​ பாரம்பரிய அருங்காட்சியகம், பினாங்கு, மலேசியா


முனைவர். க.சுபாஷிணி

மலேசியாவிற்கான தமிழ்மக்கள் புலம்பெயர்வு என்பது நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டது. தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு பல்வேறு காலகட்டங்களில் குடிபெயர்ந்த தமிழ்மக்கள் மலேசிய பூர்வகுடி மக்களுடன் அச்சூழலை ஏற்றுக் கொண்டு  மலேசியத் தமிழர்கள் என்ற சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். பன்னெடுங்கால தீபகற்ப மலேசியாவிற்கும் தமிழகத்திற்குமான தொடர்பு இன்று அகழ்வாய்வுகளில் கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில் நிரூபணமாகி இருக்கின்றன. இத்தகைய நீண்ட பண்பாட்டுத்தொடர்ச்சி என்பது ஒருபுறமிருக்க, கடந்த 300 ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் குடிபெயர்ந்தவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி வைக்கும் வகையில் ஒரு புதிய முயற்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதன் அடிப்படையில் இன்று பினாங்கு இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட இந்தியப் பாரம்பரிய அருங்காட்சியகம் காட்சியளிக்கின்றது.



மலேசியத் தமிழர் ஒருவரது சேகரிப்பில் இருந்த ஆவணங்களை அவர் பொதுமக்கள் நலனுக்காக வழங்கவே, அது பினாங்கு மாநில இந்து அறநிலையத்துறையின் துணையுடன் ஒரு அருங்காட்சியகமாக இன்றுஉருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆவணங்களும் சின்னங்களும் மலேசிய தமிழர் வரலாற்றில் நடந்த சில முக்கிய விஷயங்களை, அதிலும் குறிப்பாக பினாங்கு மாநிலம் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. அருங்காட்சியக அறையின் சுவர்களிலும் மூலைகளிலும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட வகையில் ஆவணங்கள், பொருட்கள், நூல்கள், விளம்பரங்கள் என பல்வேறு பொருட்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு ஆவணமும் தனித்துவம் வாய்ந்தவை. ஒவ்வொன்றும் மலாயாவில் தமிழர்களின் வாழ்க்கை நிலையை விளக்கும் வகையில் வரலாற்றுச் செய்திகளை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.





மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன், அன்றைய சூழலில் முடி திருத்தும் தொழிலில் அதிகமாக ஈடுபட்டவர்கள் தமிழர்களே. தமிழர்களின் முக்கிய தொழில்களிலொன்றாகிய அத்தகைய ஒரு முடிதிருத்தும் நிலையம் எவ்வாறு இருக்கும் என்பதை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகிறது இங்குள்ள ஒரு பகுதி. இதில் வாடிக்கையாளர் அமரும் பகுதி, சுவர் அலங்காரங்கள், மேசை அலங்கரிப்பு என்பன அவை எப்படி அன்னாளில் இருந்தன என்பதை அறியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 



இங்குள்ள மிக முக்கியமான ஆவணமாகப் பல நமக்குத் தென்பட்டாலும் மிகவும் தனித்துவத்துடன் இருப்பது இங்கு நாம் காணும் தமிழில் உருவாக்கப்பட்ட மலாயா தீபகற்பத்தின் நிலவரைபடமாகும். முழுதும் தமிழில் அமைந்த வகையில் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடம் இது. இத்தகைய ஒரு வரைபடத்தை இன்று நாம் தேடி கண்டுபிடிப்பது எளிதன்று. மலாயா தீபகற்பம் முழுமையாக, அதன் தென்மேற்கு பகுதியான இந்தோனியாவின் சுமத்ரா தீவு, மலாக்கா ஜலசந்தி, கடல் சூழல் சயாம் குடாபகுதி ஆகியவை தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரைபடத்தில் மலேசியாவின் மாநிலங்களின் பெயர்கள், நதிகளின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள், மலைகளின் பெயர்கள் என அனைத்துமே தமிழில் எழுதப்பட்ட வகையில் மிகச் சிறந்த ஒரு ஆவணமாக இது அமைந்திருக்கின்றது. இதனைக் காணும்போது இன்றைக்கு ஏறக்குறைய அரை நூற்றாண்டிற்கு முன்பு இத்தகைய வரைபடங்கள் உருவாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைகின்ற அதேவேளை, புவியியல் தொடர்பான கல்வி அன்றைய நிலையில் தமிழில் அமைந்திருந்தது என்பதை அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக இதுஅமைகின்றது. இன்றைக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்திய மலேசியா இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தமிழ்மொழி முக்கிய மொழியாக இருக்கின்றது என்பதற்கும் இது ஒரு சான்றாகவே அமைகின்றது எனலாம்.



இவை தவிர மேலும் பல முக்கிய ஆவணங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து கப்பலில் பயணம் செய்து வரும் பயணிகள் கொண்டு வரும் பயணத்திற்கான தகரப்பெட்டிகளையும் இங்குக் காணலாம். அவற்றின் உள்ளே ஒட்டப்பட்ட செய்திகள் அடங்கிய காகிதங்கள், அன்றைய தமிழக பயணிகள் கொண்டு வந்த பொருட்கள் என்பன இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மலேயா வந்த அன்றைய தமிழர்கள் பல்வேறு வகை வணிகப் பகுதிகளில் அன்று பணிபுரிந்தார்கள். முக்கியமாக உணவுக்கடைகளைக் குறிப்பிடலாம். இன்றும் கூட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் உணவு கடைகளை தமிழர்கள் நிர்மாணிப்பதைக் காணலாம். அந்த வகையில், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தேநீர் தயாரிக்கும் பாத்திரம் இன்றும் கூட ஒரு சில கடைகளில் காணக் கூடியதாக உள்ளன. அத்தகைய தேநீர் தயாரிக்கும் பாத்திரங்களும் தேயிலை கொதிக்க வைக்கும் பாத்திரங்களும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இறந்தபோது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் அவருக்கு நடத்தப்பட்ட அஞ்சலிக்கூட்டம் பற்றிய ஒரு துண்டு காகிதம் இந்த ஆவணச் சேகரிப்பில் இருக்கின்றது. ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில், அதாவது இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை விவரிக்கும் பத்திரிக்கைச் செய்தி ஒன்றும் இந்த சேகரிப்பில் இடம்பெறுகின்றது. தமிழ் மக்கள் பயன்பாட்டில் வீடுகளில் புழங்கப்படும் பொருட்கள், சமையல் உபகரணப் பொருட்கள், ஆடைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவையும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அன்றைய மலாயாவிற்கு வந்த தமிழ் மக்கள் தொழில் புரிவதில் மாத்திரம் தங்கள் கவனத்தைச் செலுத்த வில்லை. மாறாக சமூக செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அந்த வகையில் கலைகளில் நாட்டம் உடையவர்களாக தம்மை வளர்த்துக் கொண்டு நாடகங்கள், கூத்து, இசை என பல்வேறு துறைகளில் தங்கள் திறனை அவர்கள் வெளிப்படுத்தினர். இத்தகைய செய்திகளை விளக்கும் சில ஆவணங்களும் இங்கு காணப்படுகின்றன. தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் உள்ள சிலர் இலக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த வகையில் சில சஞ்சிகைகள் பினாங்கிலிருந்து 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் வெளிவந்திருக்கின்றன. நூல்களை எழுதி வெளியிட்ட செய்திகளையும் அறிகின்றோம்.



இப்படி பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய வகையில் பினாங்கு தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மலேசியர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய இடமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து தமது சேகரிப்புக்களை வழங்கி இந்த அருங்காட்சியகம் தொடங்க தொடக்கப்புள்ளி உருவாக்கிய திரு.பிரகாஷ், திருமதி புனிதா பிரகாஷ் இருவரையும் பாராட்டுவது நமது கடமை. பினாங்கில் தமிழர் வரலாற்றைச் சொல்லும் ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கும் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் மாண்புமிகு.டாக்டர்.ராமசாமி அவர்களையும் பாராட்டுவதோடு இந்தச் சிந்தனைக்கு உறுதுணையாக இருந்து அலுவலக அறையை ஒதுக்கிக் கொடுத்து இந்த அருங்காட்சியகத்தைப் பாதுகாக்கும் பினாங்கு இந்து அறநிலையத்துறையினருக்கும் உலகத் தமிழர்களின் பாராட்டுக்கள்பொறுந்தும். 

Wednesday, November 28, 2018

114. தேயிலை தோட்ட தொழிலாளர் அருங்காட்சியகம், இலங்கை

முனைவர். க.சுபாஷிணி
http://www.vallamai.com/?p=89321

தென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழக மக்களின் வாழ்வின் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகம் இது. இந்த அருங்காட்சியகம்  இருப்பது ராமன்துறை தோட்டமாகும். இது  நுவரலியாவிலிருந்து நியூ பீக்கோக் எஸ்டேட் செல்லும் பகுதியில் சோகம் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ளது. இந்த அருங்காட்சியகம்  மத்திய மாகாண கண்டி பகுதியில் அமைந்துள்ளது.




அருங்காட்சியகத்தின் வாசலில் சிறிய பூந்தோட்டம் ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது.வரவேற்பு பகுதியில் தமிழிலும், சிங்கள மொழியிலும், ஆங்கிலத்திலும் அருங்காட்சியகத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, உள்ளே நுழையும் பொழுது முதலில் நமக்கு தென்படுவது ஒரு சிறிய குடில். இந்தக் குடில் இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலையக பகுதிக்குத் தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழ் மக்களின் வாழ்விட கட்டுமாணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.


ஒரு குடில்அதில் ஒரு அறை மட்டுமேறை என்ற பிரிவு இல்லாமல் முழு பகுதியும் வெவ்வேறு மூலைகளில் அதன் பொருட்கள் வைக்கப்பட்டு காட்சி அளிக்கின்றன. சிறிய சமையல் பகுதியில் விகை வைத்துக் கொள்ளும் பகுதி, பானைகளை அடுக்கி வைக்கும் பகுதி, சமையல் பாத்திரங்களை, அம்மி குழவி போன்றவற்றை வைக்கும் பகுதி, என சிறு பகுதியும்படுத்து உறங்கும் பகுதியாக ஒரு பகுதியும் காட்சியளிக்கின்றன. மற்றொரு பகுதியில் துணிகளை உலர்த்தும் மூலை தென்படுகின்றது. சுவற்றில் இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவர்கள் புகைப்படங்கள் உள்ளன.   பண்டித ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் போன்றோரின் புகைப்படங்கள் சுவற்றில் தென்படுகின்றன.இவை இம்மக்கள் இந்தியாவின் சமகால நிலையை இலங்கையிலும் பிரதிபலித்தமையைவெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த குடிசைவீட்டின் உள்ளே அருங்காட்சியக நிர்வாகம் காட்சிப்படுத்தியிருக்கும் பொருள்கள் 1820-களில் தமிழ் மக்கள் பயன்படுத்திய சமையலறைப் பொருட்கள் ஆகும்.



காப்பித் தோட்டத்தில் பணிபுரிய 1820 வாக்கில் தொடங்கி தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு வந்தவர்கள் தற்காலிகமாக தங்கி கொள்வதற்காக  கூரைவேய்ந்த இத்தகைய குடிசைகளை அமைத்து அவற்றில் தங்கியிருந்தனர். ஆறு மாதங்கள் காபித் தோட்டங்களில் அவர்கள் பணிபுரிவார்கள். பின்னர் காபி செடிகள் வளரும் பருவத்தில் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த கூலியைப் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு அதாவது தமிழகத்திற்கு திரும்பிவிடுவார்கள். இக்காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து மலையகப்பகுதிக்கு வந்தவர்களில் ஆண்களே அதிகமாக இருந்தனர்.தோட்டத்தில் 1880 வாக்கில் காப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக காப்பி விளைச்சல் நிறுத்தப்படவே தேயிலைத் தோட்டங்கள் உருவாகத் தொடங்கின. தேயிலைத் தோட்டப்பணி வருடம் முழுவதும் வேலை பார்க்கக் கூடிய ஒரு தொழில் ஆகையால் 1860 தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் இருந்து தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு ஆண்களும் பெண்களுமாக குடும்பம் குடும்பமாக பயணித்து வந்து தோட்டங்களில் தொழிலாளர்களாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.

மலையகப் பகுதியில் காபி தோட்டங்களில் கொக்கோ   மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரிய வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். முறையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை இரண்டு ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றி அழைத்து வந்து ஆனால் ஒரு ரூபாய் சம்பளம் கிடைப்பது கூட சிரமமாக அமைந்த நிகழ்வுகளும் உண்டு தினக்கூலி என்பது இல்லாமல் வருடத்திற்கு மூன்று முறை மாத்திரம் சம்பளம் என்ற வகையிலும் சிலவேளைகளில் சம்பளம் கிடைக்காத சூழலும் கூட ஏற்பட்டு மலையக மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்கள் ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் மலையகத்தில் பணிபுரிய வந்த தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகள் செய்தமையும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும் அதன் பின்னர் படிப்படியாக ஆங்கிலேயர்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கிய பின்னர் இந்த பிரச்சினைகள் குறைந்தாலும் தமிழ் மலையக கங்காணிகள் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது பெருவாரியாகத் ஆகவே தொடர்ந்தது.

இலங்கையின் தோட்டங்களில் பணி புரிவதற்காக கி.பி.1800களின் ஆரம்பங்களில் இருந்து தமிழக மக்கள் தூத்துக்குடியிலிருந்து கடற்கரை பகுதிக்கு வந்து அங்கிருந்து கொழும்புவிற்கும் தமிழகத்தின் வடக்கு பகுதியின் பல்வேறு நகர்களில் இருந்து ராமேஸ்வரம் வந்து பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடி வந்து பின்னர் அங்கிருந்து மன்னார் தலைமன்னார் போன்ற பகுதிகளுக்கு வந்து கால்நடையாகவே ஏறக்குறைய 140 மைல் தூரம் நடந்து பயணித்து இலங்கையின் மத்திய பகுதியான மலையகப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். தோட்டங்களில் பணிபுரிய வருகின்றோம் என்று ஆவலுடன் வந்த மக்கள் இங்கு முதலில் காடுகளையே காணக் கூடிய நிலை இருந்தது. மிக அடர்ந்த காடுகள் அவை. அந்தக் காடுகளில் பயணிக்கும் போது பல்வேறு விலங்குகளாலும் பூச்சிகளினாலும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகளினாலும்   தாக்கப்பட்டு உயிர் இழந்தோர் மிகப் பலர். பயணிக்கும் போதே  கொசுக்கடி ஏற்பட்டு தொடர்ந்து பெய்து வரும் அடை மழையில் நனைந்து மலேரியா நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களும் அதிகம். இப்படி பல துன்பங்களைக் கடந்து வந்த மக்கள் கடுமையான உழைப்பைச் செலுத்தி காடுகளை தூய்மைப்படுத்தி காப்பி தோட்டங்களையும் கொக்கோ பயிர்களையும் தேயிலை தோட்டங்களையும் உருவாக்கினார்கள்.


மலையக மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத்தொழிற்சங்கங்கள் ஆற்றிய பணி மிக முக்கியமானது. மலையக சமூக நல ஆர்வலர்கள்உழைப்பால் சில தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. மலையகத்தில் மாத்தளை,ஹட்டன், நுவரெலியா, கண்டி, பேராதனை போன்ற பகுதிகளிலும் மற்றும் ஏனைய மலையக பகுதிகளிலும் தொழிற்சங்கங்களின் சமூக நலன் நடவடிக்கைகள் தொடங்கின.அதில் குறிப்பிடத்தக்கவர்களாக பத்திரிகையாளரும் தொழிற்சங்கவாதியுமாகிய கோ.நடேசய்யர் மற்றும் அவரது துணைவியார் மீனாட்சியம்மா போன்றோரைக் குறிப்பிடலாம். ஆங்கிலேயர்கள் அறிய விரும்பாத பல பிரச்சினைகளை மக்கள் மத்தியில் நேரில் சென்று  அப்பிரச்சினைகளைக் கேட்டு அவற்றிற்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை இத்தகையோர் செயல்படுத்தினர்.பத்திரிகைகள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் வழியாகவும் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் பெற உதவும் வகையிலான நடவடிக்கைகளை தொழிற்சங்க தலைவர்கள் அக்காலகட்டத்தில் செயல்படுத்தினர். பிரச்சாரங்கள்   மட்டுமன்றி  பாடல்கள், நாடகங்கள், கூத்துகள் வழியாகவும் எளிய மலையக தமிழ் மக்களுக்குத்தங்கள் உரிமைகளை அவர்கள் உணர்ந்துகொள்ள  தொழிற்சங்க தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் முன்னெடுத்தனர். அத்தகைய தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படங்களும் குறிப்பிடத்தக்க ஆவணங்களும் இந்த அருங்காட்சியத்தில் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள.

1948ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிட்டியது. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க சில தலைவர்களின் தொடர் முன்னெடுப்புக்களினால் இலங்கைக்குப் பணியாற்ற வந்த தமிழக மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை  முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட  சட்ட வரையறைகளின்படி, மலையக பெருந்தோட்ட மக்கள் குறிப்பிடத்தக்க பெரிய எண்ணிக்கையில் நாடற்றவர்களாக ஆகும் நிலை உருவானது. அதன்பின்னர் தொடர்ச்சியான பல முயற்சிகள், அதிகாரப்பூர்வ சந்திப்புகள் என்பன இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நிகழ்ந்தாலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமிழ் மக்களுக்கு சரியான, முறையான குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டே வந்தது. 1964ஆம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி ஏறக்குறைய ஐந்தரை லட்சம் தமிழ் மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும்,ஏறக்குறைய மூன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இலங்கை குடியுரிமை பெறுவார்கள் என்றும், ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் நாடற்றவர்கள் என்றும் வகைப் படுத்தப் பட்டார்கள்இப்படி வகைப்படுத்தப்பட்ட பின்னரும்கூட அனைத்து மக்களுமே பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர். 


இலங்கையில் வாழ்ந்த தமிழ் பெருந்தோட்ட தொழிலாளர்கள் 2003ஆம் ஆண்டு வரை தங்கள் குடியுரிமை பிரச்சினைகளில் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொண்டனர். இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்களும் தமிழகத்திற்குத் திரும்பியபின் தாங்கள் விட்டுச் சென்ற காணிகளை இழந்து,சொத்துக்களை இழந்து, பொருளாதார பிரச்சினைகளைப் பெருவாரியாகச் சந்தித்து தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.. இவ்வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தும் பல்வேறு கையெழுத்து ஆவணங்கள் இந்த மலையக தோட்டத் தொழிலாளர்  அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடந்த 200 ஆண்டுகளாக மிகுந்த பொருள் வளத்தை தரும் ஒரு துறையாக இருப்பது தேயிலைத் தோட்டங்கள். இலங்கைக்கு பெரும் வளத்தை உருவாக்கித் தந்ததோடு, உலக அளவில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எல்லா உயர்தர தங்கும் விடுதிகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் மிக முக்கிய பானமாக கருதி பயன்பாட்டில் இருக்கின்றதுஇலங்கையில் உற்பத்தியாகும் தேயிலை. இலங்கையின் மலையகப் பகுதிக்கு இன்று நாம் செல்லும்போது நாம் காணும் காட்சி இயற்கை அழகின்   எல்லை இல்லா பேரழகு.இது சுவர்க்கலோகம் என்று இங்கு வருகின்ற ஒவ்வொருவரும் எண்ணும் வகையில் மலையகத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள் காட்சியளிக்கின்றன. இதனை உருவாக்கிய மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையோ இன்றளவும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் வகையிலேயே தொடர்கின்றது. 



முறையான சுகாதார நலன் இன்றி இம்மக்களின் அன்றாட வாழ்க்கைத் தொடர்கின்றது. கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களிலும்  இம்மக்களுக்கு மேம்பாடு தேவைப்படுகின்றது.  குடியிருக்க  சொந்த வீடுகள் இன்றியும்,தேயிலைத் தோட்டங்களிலேயே அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரை நிரந்தரமற்ற ஒரு வாழ்க்கையாகவே முடிந்து விடும் அவலமும் தொடர்கிறது. இத்தகைய செய்திகள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சியின்வெளிப்பாடாக நியூ பீக்கோக் எஸ்டேட் அருகாமையிலிருக்கும் ராமன்துறை தோட்ட ”மலையக மக்கள் அருங்காட்சியகம்” ன்று நமக்குக் காட்சி அளிக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் பணிபுரிகின்ற அருங்காட்சியக அதிகாரி திரு.சந்தனம் சத்தியநாதன் மற்றும்   ஏனைய அதிகாரிகளுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழ் மக்களின் சார்பில் நன்றியினையும் பாராட்டுக்களையும் பதிகின்றோம்.

Monday, September 24, 2018

113. புனித அன்னை தேவாலய அருங்காட்சியகம், ஹாலே, ஜெர்மனி

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் - 
113. புனித அன்னை தேவாலய அருங்காட்சியகம், ஹாலே, ஜெர்மனி

முனைவர். க.சுபாஷிணி 
கிருத்துவ சமயத்தில் உள்ள உட்பிரிவுகளில் மிக முக்கியமானது சீர்திருத்தக் கிருத்துவம். கி.பி.1706ம் ஆண்டு தமிழகத்தின் தரங்கம்பாடி எனும் கடற்கரையோர நகரத்திற்கு ஜெர்மனியிலிருந்து வந்திறங்கிய இரண்டு லூத்தரன் பாதிரிமார்களே தமிழகத்தில் இந்தச் சமய சித்தாந்தம் காலூன்ற அடிப்படையை வகுத்தவர்கள். அவ்விருவரும் பாதிரியார் பார்த்தலோமஸ் சீகன்பால்க் மற்றும் பாதிரியார் ப்ளெட்சோ ஆவர். தமிழகத்தின் தரங்கம்பாடியில் பள்ளிக்கூடம் அமைத்தது, அச்சுக்கூடத்தை அமைத்து தமிழ், போர்த்துகீசிய, ஆங்கில மொழி நூல்களை அச்சிட்டது எனத் தொண்டாற்றியது என்பதோடு இவர்களுக்குப் பின் ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த ஏனைய பாதிரிமார்கள் கடலூர், திருநெல்வேலி, மெட்ராஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்தச் சீர்திருத்த கிருத்துவ சமயத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டதோடு சமூக கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர் என்பது வரலாறு. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமைவது லூத்தரேனிய ப்ரோட்டஸ்டன் கிருத்துவம் அல்லது சீர்திருத்த கிருத்துவம் என அழைக்கப்படும் ஒரு மத அமைப்பாகும். இந்த மதத்தைத் தோற்றுவித்தவர் மார்ட்டின் லூதர் ஆவார். 



மார்ட்டின் லூதர் (Martin Luther) ஜெர்மனியின் தென் கிழக்கு மாநிலமான சாக்சனி (Saxony) மாநிலத்தில் உள்ள ஐஸ்லேபன் (Eisleben) என்னும் சிற்றூரில் 1483ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி பிறந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் இவர். இவரது தந்தையார் கரி ஆலையில் பணிபுரிந்தவர். மார்ட்டின் லூதர் தன்னைப் போல் ஒரு தொழிலாளியாக இல்லாமல் கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் எனக் கனவு கண்டவர் இவர். தனது மகன் கல்வியில் தேர்ச்சி பெற்ற ஒரு வழக்கறிஞராகப் பணி புரிந்து வளமாக வாழ வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது . 1490ம் ஆண்டு மான்ஸ்ஃபெல்ட் (Mansfeld) நகரப் பள்ளியில் லத்தின் மொழியில் பாடங்கள் கற்று, பின்னர் 1497ல் மெக்டபர்க்கிலும் (Magdeburg) 1498ல் ஐசெனாஹ் (Eisenach) நகரிலும் உயர்கல்வியைத் தொடர்ந்தார் மார்ட்டின். 1501ம் ஆண்டு எர்ஃபூர்ட் பல்கலைக்கழகத்தில் (Erfurt University) இளங்கலை கல்வி கற்கப் பதிவு செய்துகொண்டார். 1502ம் ஆண்டில் அவருக்குக் கலைத்துறையில் இளங்கலை பட்டம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைக் கல்வியையும் முடித்து 1505ம் ஆண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார் மார்ட்டின் லூதர். அதே ஆண்டு சட்டத்துறை மாணவராகவும் தன்னைப் பதிந்து கொண்டார் மார்ட்டின் லூதர். இந்தக் காலகட்டத்தில் அவரது வாழ்வில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் அவருக்கு சமயத்துறையின் பால் தீவிரமான நாட்டத்தை வளர்த்தன. சமயத்துறையில் ஆர்வம் கொண்டு தன் கல்வியை ஒரு கத்தோலிக்க மடாலயத்தில் தொடர விரும்பினார். 

ஜூலை மாதம் 1505ம் ஆண்டில் மார்ட்டின் லூதர்,செயிண்ட் ஆஸ்டின் (St.Austin) மடாலயத்தில் துறவியாக இணைந்தார். மிகுந்த கடமை உணர்ச்சியுடனும் கட்டுப்பாடுகளுடனும் கல்வி கற்று கத்தோலிக்க சமய குருவாக 1507ம் ஆண்டில் இவர் தேர்ச்சி பெற்றார். 




அன்றைய கத்தோலிக்க தலைமைப்பீடத்தின் தலைவராக இருந்த போப் 10ம் லியோ அவர்கள் ரோம் நகரில் இருக்கும் செயிண்ட் பீட்டர் பாசிலிக்கா (St. Peter’s Basilica) தேவாலயத்தைக் கட்டும் பணிக்காக சில செயற்பாடுகளை முன்னெடுத்தார். இந்த நடவடிக்கையில் செயல்படுத்தப்பட்ட பாவமன்னிப்பு தொடர்பான நடவடிக்கைகள் மார்ட்டின் லூதருக்குப் பெருத்த கோபத்தை உருவாக்கியது. தனது சிந்தனைகளைக் கட்டளைகளாக எழுதினார். இந்த 95 கட்டளைகளைத் தான் இறையியல் பேராசிரியராகப் பணிபுரிந்த அதே விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தின் உள்ளே இருக்கும் தேவாலயத்தின் வாசல் கதவில் ஆணி அடித்து அதனைத் தொங்க வைத்தார். இந்த 95 கட்டளைகளாவன பாவமன்னிப்பு என்ற கொள்கையை ஊழல் நிறைந்த வகையில் சமய நிறுவனம் பயன்படுத்துவதைச் சாடும் வகையில் இருப்பதை எதிர்க்கும் வாசகங்களாகும். அக்கால அச்சுத்தொழில் வளர்ச்சியும் மார்ட்டின் லூதரின் எதிர்மறை கருத்துக்கான பிரச்சாரத்திற்குத் துணை கொடுக்கும் வகையில் அமையவே, இரண்டே வார இடைவெளியில் மார்ட்டின் நூதரின் இந்த 95 கட்டளைகள் அடங்கிய துண்டுப் பிரச்சாரங்கள் பரவலாக ஐரோப்பா முழுமையும் விநியோகப்படுத்தப்பட்டன. 

மக்கள் நம்பிக்கையுடன் வாசித்து இறைவனை உணரப் பயன்படுத்தும் நூல் மக்கள் பேசும் மொழியிலேயே இருக்க வேண்டும் என சிந்தித்ததோடு, லத்தீன் மொழி பைபிளின் புதிய ஏற்பாட்டை, ஜெர்மானிய மக்கள் பேசும் டோய்ச் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார் மார்ட்டின் லூதர். இதன் தொடர்ச்சியாகப் படிப்படியாக லூத்தரன் கொள்கைகள் இவரால் வளர்க்கப்பட்டன. பலர் இவரது சீர்திருத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இவரது பெயரில் உருவாகிக் கொண்டிருந்த லூத்தரேனிய திருச்சபையை பின்பற்றுவோராகினர். 1525ம் ஆண்டில் இவர் கத்தரினா ஃபோன் போரா (Katharina von Bora ) என்ற பெண்மணியை மணந்தார். கத்தரினா முன்னாள் கன்னிகாஸ்திரியாக இருந்து கத்தோலிக்க திருச்சபையிலிருந்து வெளிவந்து விட்டன்பெர்க் லூத்தரன் திருச்சபையில் இணைந்தவர். இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தனர். 



மார்ட்டின் லூதர் 1533 முதல் தனது மறைவு வரை, அதாவது 1546 வரை, விட்டர்ன்பெர்க் பல்கலைக்கழகத்திலேயே இறையியல் துறை தலைமைப் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார். 1546ம் ஆண்டு பெப்ரவரி 18ம் தேதி விட்டன்பெர்க் நகரிலிருந்து ஐஸ்லேபன் நகர் வந்திருந்தபோது அவர் காலமானார். 

மார்ட்டின் லூதர் 1546ம் ஆண்டு ஐஸ்லேபன் நகரில் இறந்தபோது அவரது உடல் ஹாலே நகருக்குக் கொண்டு வரப்பட்டு இங்குள்ள தேவாலயத்தில் (market church) மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. புகைப்படக்கருவிகள் இல்லாத அக்காலகட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் நினைவாக அவர்களது உருவங்களை ஓவியங்களாகத் தீட்டுவது ஒரு நடைமுறை. அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு மெழுகு முகமூடி தயாரித்தல் என்பது மற்றுமொரு நடைமுறை. இது பண்டைய எகிப்தில் ஃபாரோக்காளுக்கு இறக்கும் போது அளிக்கப்படும் மரியாதையை ஒத்த ஒரு கலை என்றே கருத இடமுண்டு. ஏனெனில் பண்டைய எகிப்தில் இறந்த மாமன்னர்களுக்கு பிரமிட்களை எழுப்பி அங்கு பதப்படுத்தப்பட்ட (மம்மி) அவர்களது உடலை ஒரு மரத்தாலான அல்லது தங்கப் பேழைக்குள் வைத்து முகத்தில் தங்கத்தாலான முகமூடியை அணிவித்து அவர்களுக்கு மேலுலகத்தில் தேவைப்படும் எனக் கருதி விலையுயர்ந்த ஆபரணங்களையும் மற்ற பொருட்களையும் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்தது. 



இதுவும் கூட பழங்குடி மக்களின் பண்பாட்டு எச்சம் என்றே காணத்தோன்றுகிறது. முகமூடிகளணிந்து சடங்குகளில் பங்கெடுக்கும் கலையை இன்றும் கூட  ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடையே நாம் காணலாம். 

இத்தகைய முகமூடி அமைக்கும் ஒரு கலை ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது என்பதை கடந்த ஓரிரு நூற்றாண்டு வரை நாம் காணலாம். அந்த வகையில் மார்ட்டின் லூதருக்கு முகமூடி (Death Mask) அமைக்கப்பட்டது. மார்ட்டின் லூதரின் நண்பரும் அவருடைய முன்னாள் மாணவருமான, முதல் ப்ரோட்டஸ்டன் சமய போதகரும் மார்க்கெட் தேவாலயத்தின் குருவுமான ஜூஸ்டூஸ் யோனாஸ் மார்ட்டின் லூதர் காலமான போது அவருடன் இருந்தார். அவர் மறைந்த மறுநாள் அதாவது 19ம் தேதி காலையின் லூக்காஸ் ஃபூர்ட்டெனாகல் (Luckas Furtenagel) மரணப் படுக்கையில் இருந்த மார்ட்டின் லூதரின் உருவத்தை வரைந்தார். அவரே இந்த மெழுகினால் ஆன முகமூடியையும் செய்ய அமர்த்தப்பட்டார் எனக் கருதப்படுகிறது. அதற்குப் பின்னர் மார்ட்டின் லூதரின் சவப்பெட்டி மூடப்பட்டு அவரது பூத உடல் விட்டன்பெர்க் கொண்டு செல்லப்பட்டு அங்குப் புதைக்கப்பட்டது. இதனால் மார்ட்டின் லூதரின் இறுதி நிகழ்வு நடைபெற்ற சிறப்பினைப் பெறுகின்ற தேவாலயமாக இது கருதப்படுகின்றது. 

இந்தத் தேவாலயத்தில் மார்ட்டின் லூதர் 1545லும், இரு முறை 1546லும் வந்து பிரசங்கம் செய்தார். அவர் நின்று பிரசங்கம் செய்த பல்பிட் எனப்படும் பிரசங்க மேடை இதே அறையில் உள்ளது. 




இந்தத் தேவாலயம் 1529ம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் 1554ம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றன என்றும் அறிகின்றோம். இக்கட்டிடத்தைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றியவர் பிராண்டென்புர்க் மற்றும் மக்டெபுர்க் கத்தோலிக்க அமைப்பின் தலைவராக இருந்த கார்டினல் அல்ப்ரெட். இவருக்கும் மார்ட்டின் லூதருக்கும் சமய தத்துவ அடிப்படையில் இருந்த கடும் போட்டியின் இறுதியில் மார்ட்டின் லூதரின் கருத்துக்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பதோடு கார்டினல் அல்ப்ரெட் தமது பதவியைத் துறந்து மாநிலத்திலிருந்தே வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர் இம்மாநிலம் முழுமையாக லூதரேனிய ப்ரோட்டஸ்டன் மதத்தை ஏற்ற ஒரு மாநிலமாக படிப்படியாக மாற்றம் கண்டது. 

மார்ட்டின் லூதரின் வாழ்க்கையில் ஐஸ்லேபனும் விட்டன்பெர்க் நகரங்களும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றனவோ அதே அளவிற்கு ஹாலே நகரமும் முக்கியத்துவம் வகிக்கின்றது. மார்ட்டின் லூதரை ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகள் கடந்தும் நாம் நேரில் காணும் அனுபவத்தை ஹாலே நகரிலுள்ள மார்க்கெட் தேவாலய அருங்காட்சியக அறை நமக்கு வழங்குகின்றது. ஒவ்வொரு நாளும் இந்தத் தேவாலயம் திறந்திருக்கின்றது. அருங்காட்சியகத்திற்குச் செல்ல சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்தத் தேவாலயத்தின் முகவரி Marktkirche Unser Lieben Frauen, An der Marienkirche 2, 06108 Halle (Saale) என்பதாகும். ஹாலே நகரின் புகழை மட்டுமல்ல, ஜெர்மனியின் புகழையும் உயர்த்தும் ஒரு அருங்காட்சியகம் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை!

துணைநூல்கள் -

Monday, September 3, 2018

112. ஃப்ராம் அருங்காட்சியகம், ஓஸ்லோ, நோர்வே

முனைவர். க.சுபாஷிணி

http://www.vallamai.com/?p=87387

மிக அண்மையில் நான் பயணம் மேற்கொண்ட நாடு நோர்வே. நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்ல்லோவில் 106 அருங்காட்சியகங்கள் பதிவு செய்யப்பட்ட அருங்காட்சியகங்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. அதில் ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றிய செய்திகளை இந்தப் பதிவில் வழங்குகின்றேன்.

ஃப்ராம் அருங்காட்சியகம் (Fram Museum) பொதுவான அருங்காட்சியகங்களிலிருந்து மாறுபட்டதொரு அமைப்பைக் கொண்டது. 1936ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் உலகின் வடக்கு-தெற்கு துருவங்களுக்குப் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்த மூவரைச் சிறப்பிப்பதற்காகவும் உலகின் வடக்கு தெற்கு துருவங்களுக்குப் பயணம் செல்லப் பயன்படுத்திய ஃப்ராம் என்ற பெயர்கொண்ட மரக்கலத்தைச் சிறப்பிப்பதற்காகவும் அமைக்கப்பட்டது.



இந்த அருங்காட்சியகத்தின் அமைப்பை முதலில் காண்போம். அருங்காட்சியகத்தின் மையப்பகுதியில் ஃப்ராம் மரக்கலம் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று தளங்களில் கண்காட்சி சுவர்ப்பகுதியை ஒட்டியவாறு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஃப்ராம் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்று அதனை முழுமையாகப் பார்த்த பின்னர் படிகளில் இறங்கி கப்பலின் இரண்டாம் தளத்திற்கு வரலாம். அங்கு மாலுமிகள், ஆராய்ச்சியாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் தங்குவதற்கான அறைகள் உள்ளன. அங்கேயே சமையலறை, உணவருந்தும் பகுதி, ஓய்வெடுக்கும் பகுதி, நூலகப் பகுதி ஆகியன அமைந்திருக்கின்றன. இதற்கு அடுத்த கீழ்த்தளத்தில் கப்பலின் இயந்திரம் உள்ளது. இங்கு சமையல் பொருட்கள், பயணத்தில் தேவைப்படும் கருவிகள், போன்றவை வைக்கும் பகுதி உள்ளது.



உலகின் வடதுருவத்திற்குப் பயணம் சென்று அறிந்து வரவேண்டும் என்ற எண்ணத்துடன்1891ம் ஆண்டு நோர்வே அரசும் தனியாரும் சேர்ந்து இவ்வாய்வுப் பயணத்திற்கானப் பொருளாதாரத்தைச் சேகரித்துக் கொடுக்க, திரு.நான்சன் ( Fridtjof Nansen ), கோலின் ஆர்ச்சர் (Colin Archer) என்ற கப்பல் கட்டும் பொறியியலாளரை அமர்த்தி இக்கப்பலை உருவாக்கச் செய்தார். இந்தப் பிரத்தியேகக் கப்பலே உலகின் துருவங்களுக்குச் சென்ற ஆய்வுப்பயணங்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட கப்பல் என்ற பெருமையைப் பெறுகின்றது.



உலகின் துருவங்களுக்குப் பயணித்தோர் என்று குறிப்பிடும் போது இதில் முதன்மையாகப் பட்டியலில் இடம் பெறுவோர் நோர்வே நாட்டினர் மூவர். அவர்கள் திரு. பிரிட்ஜோவ் நான்சன் ( Fridtjof Nansen ), திரு.ஓட்டோ சுவேதுருப் (Otto Sverdrup) மற்றும் திரு. ரோல்ட் அமுண்ட்சன் ( Roald Amundsen) ஆகியோர்.

திரு. பிரிட்ஜோவ் நான்சன் (10 அக்டோபர் 1861 – 13 மே 1930) நோர்வே நாட்டைச் சேர்ந்தவர். ஒரு ஆய்வாளர், சமூக நல செயற்பாட்டாளர், அரசப்பிரதிநிதி, விஞ்ஞானி என்ற பன்முக ஆளுமையாக அறியப்படுபவர். இவரது சாதனைகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசினை 1922ம் ஆண்டு இவர் பெற்றார் என்பதை நினைவு கூர்வது தகும்.



திரு.நான்சன் இன்று உலக வரைபடத்தில் நாம் அறியும் க்ரீன்லாந்து எனும் நாட்டின் உட்பகுதியை ஸ்கீ பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யச் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கியவர். ஆயினும் 1893லிருந்து 1896 வரையிலான ஆய்வுப்பயனத்தில் வடதுருவத்தின் 86°14′ அடைந்து செய்த சாதனை இவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. இந்தப் பயணத்திற்குப் பின்னர் பயணங்களிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு தனது ஆய்வுகளிலும் தனது சமூக நலப்பணிகளிலும் நோர்வே நாட்டின் அரசியல் அமைப்புப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.


திரு. ஓட்டோ சுவேதுருப் (31 அக்டோபர்1854 – 26 நவம்பர் 1930) வடதுருவத்திற்கான திரு.நான்சனின் முதல் பயணத்தில் அவரோடு இணைந்து ஆய்வில் ஈடுபட்டவர்களுள் ஒருவர். அப்பயணத்தின் முக்கிய அதிகாரிகளுள் ஒருவராக அமர்த்தப்பட்டு பின் திரு.நான்சன் கப்பலை விட்டு ஸ்கீ செய்து வடதுருவத்திற்குச் சென்ற போது ஃப்ராம் கப்பலை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். 1898ம் ஆண்டு திரு. ஓட்டோ சுவேதுருப் வடதுருவத்திற்கான இரண்டாவது பயணத்தை நிகழ்த்தினார். ஃப்ராம் கப்பலிலேயே இந்த இரண்டாவது பயணமும் நிகழ்ந்தது. இப்பயணம் 1902ம் ஆண்டு வரை நீடித்தது. க்ரீண்லாந்து நாட்டைக் கடந்து மேலும் பல தீவுகளைக் கண்டுபிடித்து அவற்றை வரைபடத்தில் இணைக்கும் பணியைச் செய்தார். இவற்றுள் பல சிறு தீவுகள் கண்டறியப்பட்டன, பெயரிடப்பட்டன, வரைபடத்தில் இணைக்கப்பட்டன. இந்தத் தீவுத் தொகுதிகளுக்கு இவரது பெயரிலேயே சுவேதுரூப் தீவுகள் (Sverdrup Islands) என்ற பெயரும் வழங்கப்பட்டது. இவருக்கு அந்நாளைய ஜெர்மனியின் பெரூசியன் அரசின் விருது 1917ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் 2ம் உலகப்போரில் ஜெர்மானியப் படை நோர்வேயின் மீது தாக்குதல் நடத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமையை எதிர்த்து இந்த விருதை திரு. ஓட்டோ சுவேதுருப் ஜெர்மனிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். பல தனியார் அமைப்புக்களினாலும் பல்கலைக்கழகங்களினாலும் இவர் கவுரவிக்கப்பட்டார். இவரது பிறந்த ஊரான சாண்ட்விகா நகரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



திரு. ரோல்ட் அமுண்ட்சன் (16 ஜூலை1872 -18 ஜூன் 1928) வரலாற்றில் தனக்கெனத் தனியிடத்தைப் பெறுபவர். இவரே உலக வரைபடத்தில் தென்துருவத்தை முதலில் அடைந்து ஆராய்ந்து அதனைப் பதிவு செய்தவர் என்ற பெருமையைப் பெறுகின்றார். இவரது தென் துருவத்திற்கானப் பயணத்திலும் ஃப்ராம் மரக்கலமே பயன்படுத்தப்பட்டது. இவர் 1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் நாள் தென்துருவத்தை அடைந்து சாதனை நிகழ்த்தினார். கடல் மார்க்கமாகவும் நில மார்க்கமாகவும் வடதுருவத்தை இவருக்கு முன்னரே திரு.நான்சன் சென்றடைந்து சாதனைப் படைத்திருந்தார். இவர் விமானம் வழிப்பயணித்து வடதுருவத்தை 1926ம் ஆண்டு சென்றடைந்தவர் என்ற சிறப்பும் பெறுகின்றார். முதலில் ஆர்க்டிக் பகுதியில் அதாவது வடமேற்குப் பகுதிப் பயணத்தை (1903-1906) நிகழ்த்தியவர் என்ற சிறப்பும் இவருக்குச் சேர்கின்றது. இத்தகைய ஒரு பயணத்தில் 1928ம் ஆண்டு ஈடுபட்டிருக்கும் போது காணாமல் போன தமது குழுவின் சிலரை கண்டுபிடிக்கச் சென்றபோது இவர் சென்ற அவசரக்கால பாதுகாப்பு விமான தொலைந்து போனதில் இவரும் காணாமல் போய்விட்டதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.


வட துருவம் என்பது உலக உருண்டையின் வடக்கின் கடைக்கோடியில் உள்ள புள்ளி. அதே போல தென்துருவம் என்பது உலக உருண்டையின் தெற்கே கடைக்கோடியில் உள்ள புள்ளி. இப்பகுதிகள் பனிக்கட்டிகளாலும் பனித்துகள்களாலும் சூழப்பட்டு கடுங்குளிருடன் ஆண்டு முழுக்க இருக்கும் நிலப்பகுதிகளாக அறியப்படுபவை. இவற்றிற்குப் பயணம் மேற்கொள்வது என்பது ஒரு அசாதாரணக் காரியமே. கடலில் பயணிக்கலாம் என்றால் நீர்மட்டம் பனிக்கட்டிகளால் இறுக்கமாகச் சூழப்பட்டு கப்பல் பயணத்தைத் தடுத்துவிடும் சூழல் உண்டு. ஆக இப்பகுதிகளில் ஆய்வு செய்யச் சொல்வோர் ஓரளவிற்குக் கடலில் கப்பல் வழி பயணித்து பின்னர் பனியில் சருக்கிச் செல்லும் ஸ்கீ வகை கருவிகளைப் பயன்படுத்திச் சென்றே ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இதே போன்று பிரத்தியேக விமானங்களின் வழி பயணம் மேற்கொள்வதும் இவ்வகைப் பயணங்களைச் சாத்தியப்படுத்துகின்றன.



வடதுருவங்களிலும் தென் துருவங்களிலும் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இன்று நமக்குக் கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் வடதுருவத்தில் இன்றைக்கு ஏறக்குறைய 4500 ஆண்டுகள் வாக்கிலேயே மனித இனம் இங்கு வாழ்ந்துள்ளது என்ற தகவல்கள் ஆராய்ச்சிகளின் வழி கிடைத்துள்ளன. குளிரான தட்பவெட்ப நிலையினால் இங்கு மக்கள் குடியேற்றம் என்பது மிகக் குறைவாகவே அமைந்திருக்கின்றது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது. இக்குளிரான தட்பவெட்ப சூழலிலும் இங்குள்ள சூழலுக்கேற்ற வகையில் தாவரங்களும் விலங்குகளும் இங்கு உயிர்வாழ்கின்றன. இவற்றைப்பற்றிய தொடர் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. இவ்வகை ஆய்வுகளில் குறிப்பாக ஸ்கேண்டினேவியன் நாடுகள் என நாம் குறிப்பிடும் நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகியவற்றோடு கனடா, வட அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

மனிதனின் தேடுதல் எல்லைகள் அற்றது. அத்தகைய ஒரு செயலே மனிதன் உலக உருண்டையின் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் பயணம் மேற்கொண்டு நிகழ்த்திய சாதனை. உலகின் அறியப்படாத விடயங்கள் பல இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அறிவதில் அறிவியல் முயற்சிகள் ஒவ்வொரு நாளும் முன்நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றது. அத்தகைய அறிவியல் சாதனைகளில் பங்கு எடுத்துக் கொண்ட ஃப்ராம் கப்பல் பாதுகாக்கப்படும் ஃப்ராம் அருங்காட்சியகம் உலகப் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது!

Monday, August 20, 2018

111. நூபியன் அருங்காட்சியகம், அசுவான், எகிப்து


முனைவர். க.சுபாஷிணி

எனது எகிப்துக்கான பயணத்தில் அதன் தலைநகராகிய கைரோவில் உள்ள பிரமிட்களைப் பார்க்க சில ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தேன். கட்டணம் செலுத்தும் இடத்தில் இருந்த இளம் வயது எகிப்திய ஆண்கள் ஓரிருவர் என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நூபியன், நூபியன் என எகிப்திய மொழியில் என்னிடம் ஏதோ பேசினர். அப்போது எனக்கு அவர்கள் என்னைப் பார்த்து என்ன சொல்லி பேசி சிரித்துக் கொள்கின்றனர் எனப் புரியவில்லை. அதே பயணத்தில் நைல் நதியில் பயணித்து எகிப்தின் தெற்கு எல்லையை அடைந்து வடக்கு சூடான் நாட்டின் எல்லைப்பகுதியில் இருக்கும் அசுவான் அணைப்பகுதிக்கு வந்த போது நூபியன் என்பதன் பொருளை ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.





நூபியன் என்னும் இனத்தோர் இன்றைய சூடான் நாட்டிலும் தெற்கு எகிப்திலும் தோன்றிய இனம். மனித இனத்தின் நாகரிகக்காலம் தொடங்கியபோதிலிருந்து அடையாளம் காட்டப்படும் சில இனக்குழுக்களில் நூபியன் இனமும் ஒன்று. எகிப்தில் பாயும் நைல் நதியினை ஒட்டியவாறு வாழ்ந்த ஒரு இனம் நூபியன் இனம். பண்டைய எகிப்தில் ஆட்சி செலுத்திய இனம் என்றும் கி.மு.7000 ஆண்டில் இன்றைய வடக்கு சூடான் நகரான வாடிஹல்வா (Wadi Halfa) நகரில் பேரரசினை நிறுவிய ஒரு இனக்குழு என்றும் அறிகின்றோம் (http://www.ancientsudan.org). கி.மு 8ம் நூற்றாண்டு வரை எகிப்திலும் அதன் பின்னர் படிப்படியாக சூடான் நாட்டில் மட்டிலுமே என்ற வகையிலும் நூபியன் இனக்குழுவின் ஆளுமை விளங்கியது. இன்று நூபியன் இனக்குழு மக்கள் எகிப்தின் தெற்குப் பகுதி நகர்களான லுக்சூர், அசுவான் ஆகிய பகுதிகளிலும் சூடானிலும் வாழ்கின்றனர்.




சூடான்-எகிப்து எல்லைப் பகுதிக்குப் படகுப் பயணம் மேற்கொண்டு வந்த போது கைரோவில் ஏன் அந்த இளைஞர்கள் என்னைப் பார்த்து நூபியன் என்று அழைத்து கேலி பேசி சிரித்தனர் என்பது எனக்குப் புரிந்தது. இங்கு வசிக்கும் நூபியன் இன மக்களின் தோற்றம் எனது தோற்றத்தை ஒத்திருந்ததைக் காண முடிந்தது. எங்கள் பயண வழிகாட்டியும் அப்பயணத்தில் இணைந்து வந்திருந்த ஏனைய ஜெர்மானிய சுற்றுப் பயணிகளும் என்னிடம் இதையே கூறினர். ஆப்பிரிக்க கண்டத்து மக்களில் அதிலும் குறிப்பாக, சூடான், எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாட்டு மக்களின் உடல் கூறுகள் தமிழ் மக்களின் உடற்கூறுகளுடன் ஒத்திருப்பதைப் பலமுறை அவதானித்திருக்கின்றேன். நேரில் சூடான் நாட்டின் எல்லையில் இருந்த போது நானும் அந்நாட்டு மக்களின் தோற்றத்துடனேயே இருப்பதை ஆழமாக உணர்ந்தேன்.



இந்த நூபிய இனக்குழுவின் பிரத்தியேக செய்திகளைக் காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் தான் நூபியன் அருங்காட்சியகம். இது சூடான் நாட்டின் எல்லையில் அசுவான் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரத்தியேகமானதொரு அருங்காட்சியகம். நூபிய மக்களின் வரலாற்று, பண்பாட்டுச் செய்திகளை விவரிப்பதற்காகவும், நூபிய இனக்குழுவின் நாகரிகத்தையும் தொன்மைச் சிறப்புக்களையும் பதிந்து வைப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அருங்காட்சியகமாகும்.




எகிப்து ஒரு பாலைவனம். எங்கு நோக்கினாலும் வெளிர் ஆரஞ்சு நிறத்து மணல் துகள்கள் தான் நிறைந்திருக்கும். இங்கு குன்றுகளைப் பார்ப்போம். ஆனால் அவை மணல் குன்றுகளாகத்தான் இருக்குமே தவிர மரங்களை அங்கு காண்பது அரிது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பேரீச்சம் பழ மரங்களைக் காண்போம். ஆனால் இந்த அருங்காட்சியகத்தினைச் சுற்றி பசுமையை உருவாக்கியிருக்கின்றனர். நல்லதொரு பூந்தோட்டம் இந்த அருங்காட்சியகத்திற்கு அழகு சேர்க்கின்றது.




வறண்டப் பாலைவனத்தில் மணலின் நிறத்திலேயே எழுப்பப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் இந்த அருங்காட்சியகம். அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான புராதனச் சின்னங்கள் இங்குக் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு ஒரு நூலகமும் இந்த அருங்காட்சியக வளாகத்தின் உள்ளே இயங்கி வருகின்றது. வரலாற்று ஆர்வலர்களுக்கும். ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கும், மாணவர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் சிறந்த சூழலை ஏற்படுத்தி வழங்கியிருக்கின்றது என்பதை இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்த்த சில நிமிடங்களில் அறிந்து கொண்டேன். எகிப்து பழமையான பாரம்பரியத்திற்குச் சொந்தமான ஒரு நாடு. வரலாற்றுச் செழுமை எனும் போது உலக நாடுகளில் முதல் இடம் வகிக்கும் அளவிற்கு மிக நீண்ட மனித நாகரிகத்திற்கும், பேரரசுகளுக்கும், அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்களுக்கும், புராணக் கதைகளுக்கும், பிரமிடுகளுக்கும், மம்மிக்களுக்கும் புகழ் பெற்ற நாடு எகிப்து. இன்று அயல் நாட்டு அருங்காட்சியகங்களிலேயே ஏராளமான எகிப்திய அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்களை காண்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் எகிப்திலேயே இருக்கும் அருங்காட்சியகங்களில் சொல்லவும் வேண்டுமா?






இந்த நூபியன் அருங்காட்சியகத்தில் நான் சென்றிருந்த 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மூவாயிரத்திற்கும் குறையாத நூபியன் இனக்குழு தொடர்பான புராதன சின்னங்கள் சேகரிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தன. நூபியன் பண்பாட்டு வரலாற்றுச் சின்னங்கள் தவிர இப்பகுதியில் ஆளுமை செலுத்திய கிரேக்க, இசுலாமிய சின்னங்களும் இங்குச் சேகரிப்பில் இடம்பெறுகின்றன.




நூபியன் அருங்காட்சியகத்தினைப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது என்பதோடு இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் பகுதியில் பயணிப்பதற்கும் இப்பகுதியின் இயற்கை அழகை ரசிப்பதற்கும் குறைந்தது ஒரு வார காலம் நிச்சயம் தேவை. நைல் நதியிலேயே பயணம் செய்து இந்த அருங்காட்சியகப் பகுதிக்கு வந்து விடலாம். நைல் நதியில் சிறு படகில் பயணம் மேற்கொள்ளும் போது நாம் பயணம் செய்யும் படகுகளை நோக்கி வியாபாரிகள் படகிலேயே வந்து தங்கள் விற்பனைப் பொருட்களை விலை பேசி விற்கின்றனர். வாசனை திரவியங்கள், துணி வகைகள், மருந்துகள், மசாலா பொடிகள் என்பன இத்தகைய படகு வியாபாரிகள் கொண்டு வருகின்ற பொருட்களில் முக்கியமானவை.



1997ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூபியன் அருங்காட்சியகம் வார நாட்கள் அனைத்திலும் திறந்திருக்கின்றது. எகிப்தில் இருக்கின்ற முக்கிய அருங்காட்சியகங்களின் பட்டியலில் இணைந்திருக்கும் ஒரு அருங்காட்சியகம் இது. இதன் முகவரி Assuan, Sheyakhah Oula, Qism Aswan, Aswan Governorate, Egypt. எகிப்திற்குப் பயணம் செய்பவர்கள் குழுவாக பயணம் செய்வதே சாலச் சிறந்தது. தீவிரவாத நடவடிக்கைகள் எகிப்தில் தொடர்ந்து நிகழ்வதால் குழுவாகப் பயணிப்பது சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பிற்கு மிக அவசிமானதாகும் என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த அருங்காட்சியகத்திற்கான உங்கள் பயணத்தை திட்டமிடலாம்.

Monday, August 6, 2018

110. ஸ்மித்சோனியன் நிறுவன அருங்காட்சியகம், வாஷிங்டன் டிசி, வட அமெரிக்கா.

Vallamai - http://www.vallamai.com/?p=86698

முனைவர் சுபாஷிணி

ஒரு மனிதரால் பல காரியங்களில் ஈடுபாடு காட்டமுடியுமா? பல விஷயங்களில் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்ய முடியுமா? தன் சுய வாழ்க்கையில் பல இறக்கங்களையும் தாக்குதல்களையும் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் எதிர்நீச்சல் போட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த முடியுமா? ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு என மாறி மாறிப் பயணித்து அனுபவங்களைச் சேகரிக்கும் போதே சிறைவாசங்களையும் அனுபவித்து, பின் அவற்றிலிருந்தெல்லாம் மீறி வந்து ஆய்வுலகில் இன்பம் காண முடியுமா? இவை சாத்தியமே என்பதற்கு உதாரணம் தான் ஜேம்ஸ் ஸ்மித்சன் (James Smithson).





இவர் பிறந்த போது இவருக்கு பிரஞ்சு பெயர் அளிக்கப்பட்டது. Jacques-Louis Macie என்பது அவரது தந்தையாரால் அவருக்கு அளிக்கப்பட்ட பெயர். பழமைவாதம் முழுமையாகக் குடிகொண்டிருந்த அன்றைய ஐரோப்பாவில், இங்கிலாந்தின் விதவைப்பென்ணான James Macieக்கும் பிரஞ்சு பிரபு Hugh Percyக்கும் மகனாக 1765ம் ஆண்டு பாரீஸ் நகரில் இவர் பிறந்தார். இவரது பிறந்த தேதியும் மாதமும் ஆவணப்படுத்தப்படாமல் ரகசியமாக மறைக்கப்பட்டது. இளம் வயதிலேயே பெற்றோரை இழக்கும் நிலை இவருக்கு ஏற்பட்டது. பெற்றோரின் குடும்பச் சொத்துக்கள் இளம்வயதிலேயே இவருக்குச் சொந்தமாகின. தனது குடும்பப்பெயரை இவரது தந்தையின் குடும்பப்பெயரான ஸ்மித்சன் என்ற பெயருக்கு மாற்றிக் கொண்டு ஜேம்ஸ் ஸ்மித்சன் என அமைத்துக் கொண்டார். பாரீசிலிருந்து இங்கிலாந்திற்குத் தனது தாயாரின் குடும்பத்தினர் பாதுகாப்பில் தம் இளம் பிராயத்திலேயே குடிபெயர்ந்தார்.




இங்கிலாந்தில் இவரது கல்வி தொடர்ந்தது. 1782ம் ஆண்டு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தின் பெம்ப்ரோக் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடங்கி, 1786ம் ஆண்டு முதுகலைப்பட்டமும் பெற்று வெளிவந்தார். கல்விப்படிப்பு மட்டும் தனது சுயவளர்ச்சிக்குப் போதாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இவர் புவியியல் சார்ந்த துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்தார். பிரஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டமது. நெப்போலியன் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை பயணத்தில் இருக்கும் போதே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது உறவினர்கள் நண்பர்களின் உதவியால் சிறையிலிருந்து மீண்டு வந்தார்.





இங்கிலாந்து தாயாருக்கும் பிரஞ்சு தந்தைக்கும் பாரீஸில் பிறந்து, பின் இங்கிலாந்தில் உயர்கல்வி பெற்று, ஐரோப்பாவெங்கும் சுற்றிய ஸ்மித்சன், இத்தாலியில் 1829ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி காலமானார். பல பிரபுக்களைப் போல இவரது வாழ்க்கையும் பொருளாதார வளத்துடன் அமைந்திருந்தது. ஆனால் இவரது கவனமும் ஆர்வமும் பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் மூழ்கிப்போய் கிடந்தது. எளிய விசயமானாலும் சரி, மிக நுணுக்கமான புவியியல், வானியல் சார்ந்த ஆய்வானாலும் சரி, இவர் முழு கவனத்துடன் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார்.

ஸ்மித்சன் தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகள் இல்லாமையால் இவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. தனது எல்லா சொத்துக்களையும் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசி நகரில் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என தனது உயிலை ஏற்பாடு செய்து வைத்தார் ஸ்மித்சன். அவரது இறப்புக்குப் பிறகு அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் அனைத்தும் அமெரிக்காவில் ஆய்வுக்குப் பயன்படும் வகையில் அருங்காட்சியகத் தொகுதியினை அமைக்கப் பயன்படுத்தப்பட்டது.




அவர் தனது உயிலில் "I then bequeath the whole of my property, . . . to the United States of America, to found at Washington, under the name of the Smithsonian Institution, an Establishment for the increase & diffusion of knowledge among men." என எழுதி வைத்தார். ஸ்மித்சன் இறந்தபோது அவரது உடல் இத்தாலியின் கெனோவா நகரிலேயே புதைக்கப்பட்டது. ஆனால் அலெக்சாண்டர் க்ரஹெம் பெல் அவர்கள் ஸ்மித்சன் அவர்களின் உடல் வாஷிங்டன் டிசியில் ஸ்மித்சனின் சொத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மித்சோனியன் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட வேண்டும் என முயற்சி மேற்கொண்டு இத்தாலியிலிருந்து அவரது உடலைக் கொண்டு வந்து இந்த ஆய்வுக்கூடத்திலேயே அவ்வுடலைப்பதித்து வைத்து ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்பினார்.

ஸ்மித்சனின் சொத்துக்களைக் கொண்டு வாஷிங்டன் டிசியில் உருவாக்கப்பட்ட ஸ்மித்சோனியன் நிறுவனம் 1846ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ம் தேதி தொடங்கப்பட்டது. மனிதகுலத்தின் அறிவுப் பரவலை அதிகரிக்கும் நோக்கத்துடன் பல்வேறு அருங்காட்சியகங்களையும் ஆய்வுக்கூடங்களையும் உள்ளடக்கிய வகையில் ஸ்மித்சோனியன் வளாகம் அமைக்கப்பட்டது. ஜேம்ஸ் ஸ்மித்சனின் பெயரை நினைவூட்டும் வகையில் ஸ்மித்சோனியன் நிறுவனம் என்றே இது அன்று முதல் அழைக்கப்படுகின்றது.




ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அருங்காட்சியகங்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் மேற்பார்வையில் இதன் தலைமை அலுவலக வளாகத்தைச் சுற்றி பத்தொன்பது அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் மேற்பார்வையில் இயங்குகின்றன. இதைத் தவிர்த்து அரிசோனா, மேரிலாண்ட், மெசாசூசெட்ஸ், நியூயோர்க், பிட்ஸ்பெர்க், டெக்ஸாஸ், விர்ஜீனியா மாநிலங்களில் என அமெரிக்காவின் 45 மாநிலங்களில் 200 நிறுவனங்கள் ஸ்மித்சோனியன் பெயரால் இந்த ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றன. வட அமெரிக்கா மட்டுமன்றி பனாமா, போர்டோ ரிக்கோ ஆகிய நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் சேவை இயங்கி வருகின்றது.

இந்த நிறுவனங்களில் வந்து பார்த்து பயன்படுவோரின் எண்ணிக்கை ஒரு ஆண்டிற்கு 30மில்லியனாகும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்மித்சோனியன் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் வாஷிங்டன் டிசி சென்றிருந்த போது இந்நிறுவனத்தின் பல அருங்காட்சியகங்களை நேரில் சென்று பார்த்து குறிப்பெடுத்து வரும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன். ஸ்மித்சோனியன் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஸ்மித்சனின் கைப்பட எழுதிய ஆவணங்களை நேரில் பார்த்ததும் ஸ்மித்சனைன் வரலாற்றை புகைப்படங்களோடு வாசித்ததும், அவரது சேகரிப்புக்களை நேரில் கண்டதும் எனக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.



கி.பி.18ம் நூற்றாண்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு மாமனிதராக ஸ்மித்சன் நமக்குக் காட்சியளிக்கின்றார். ஆராய்ச்சியும் ஆய்வுத்தகவல்களும் மனித குலத்தை மேம்படுத்தும் என்பதை அவர் முழுமையாக நம்பினார். அவர் காலத்தைய எல்லா ஆய்வறிஞர்களையும் அவர் அறிந்திருந்தார். அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் அவருக்கிருந்த ஆர்வம் விரிவான நட்புச் சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. மக்களின் மேம்பாட்டிற்கு ஆய்வுகள் அடிப்படை என்பதை அவர் உணர்ந்திருந்தார். தனது வாழ்க்கையை மட்டுமன்றி தனது சொத்துக்கள் அனைத்துமே மனித குல அறிவு மேம்பாட்டிற்குப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே வாழ்ந்து செயல்பட்டவர் ஸ்மித்சன்.  பூவுலகை விட்டு மறைந்தாலும் ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் செயல்பாடுகளால் அழியா புகழ்பெற்று வாழ்கின்றார் ஸ்மித்சன்!

Monday, May 28, 2018

109. அங்கோர் தேசிய அருங்காட்சியகம், சியாம் ரீப், கம்போடியா

http://www.vallamai.com/?p=85445

முனைவர் சுபாஷிணி 


உலகின் பிரமாண்டங்களில் தனக்கெனத் தனியிடம் பெறுவது கம்போடியாவின் அங்கோர்வாட். க்மேர்(Kymer) கலை பண்பாட்டு விழுமியங்கள் ஏனைய ஆசிய கலை வடிவங்களிலிருந்து வேறுபடுபவை. கி.பி.802ல் மாமன்னன் 2ம் ஜெயவர்மன் கம்போடியாவின் அரசாட்சியைக் கைப்பற்றினான். வைணவ பாரம்பரியத்தைப் பின்பற்றியது இந்த அரசு. கி.பி.12ம் நூற்றாண்டில் மன்னன் 2ம் சூரியவர்மன் அங்கோர் வாட் எனும் இந்த விஷ்ணு கோயிலை எடுப்பித்தான். விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்ட இக்கோயில் 2ம் சூரியவர்மனின் மறைவுக்குப் பின் சம்பா பேரரசின் தாக்குதலால் பாதிப்பைச் சந்தித்தது. அதன் பின்னர் 7ம் ஜெயவர்மன் புதிய தலைநகரை உருவாக்கி அங்கோர் தோம், பாயோன் என்ற இரு கோயிகளையும் எடுப்பித்து தனது ஆட்சியைத் தொடர்ந்தான். இக்காலத்தில் கம்போடியா பௌத்தத்தைத் தழுவி, ஒரு பௌத்த நாடாகப் பரிணாமம் பெற்றது. அடுத்த நூற்றாண்டில் பௌத்தக் கோயிலாக மாற்றம் கண்டது அங்கோர் வாட். விஷ்ணுவை மையக்கடவுளாக வைத்து அங்கோர் வாட் அமைக்கப்பட்டது. அங்கோர் பகுதியில் முதன்மை சமயமாக இருந்த வைணவம் அதன் புகழ் மங்கி, கி.பி.12ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு பௌத்தம் செழிக்கத் தொடங்கியது. இன்று கம்போடியாவின் மக்கள் தொகையில் 95% பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களே. தமிழகத்தைச் சில நூற்றாண்டுகள் ஆண்ட பல்லவ மன்னர்களின் தொடர்பு கொண்டவர்கள் பண்டைய கம்போடியாவை ஆட்சி செய்த க்மேர் பேரரசர்கள். பல்லவர்கள் எப்படி தமிழகத்தின் மாமல்லபுரம், காஞ்சி, தொண்டைமண்டலம் ஆகிய பகுதிகளில் தங்கள் நுணுக்கமானக் கட்டுமானக் கலையை வளர்த்தனரோ அதற்குச் சற்றும் குறைவில்லாது கம்போடிய க்மேர் அரசர்களும் பிரமாண்டமான கலை வடிவங்களைப் படைத்திருக்கின்றனர்.


தமிழகத்தைப் போலவே தொடர்ச்சியாகப் பல போர்களைச் சந்தித்திருக்கின்றது கம்போடியா. கம்போடியாவின் நில அமைப்பைக் காணும் போது அது வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய மூன்று பெறும் நாடுகளை எல்லையாகக் கொண்டிருப்பதைக் காணலாம். இதுவே கம்போடியா தொடர்ச்சியாக இந்த நாடுகளை முன்னர் ஆட்சி செய்த பேரரசுகளினால் போர் தொடுக்கப்பட்டு இன்னல்களை எதிர்கொண்ட அமைதியற்ற நிலையை உருவாக்கியிருந்தது. கி.பி18ம் நூற்றாண்டில் தாய்லாந்தும் வியட்நாமும் கம்போடியாவின் மீது யார் ஆட்சி செலுத்துவது என்று பிரச்சனையை கிளப்ப, வியட்நாமிய பண்பாட்டினை கம்போடியர்கள் மீது திணிக்கும் முயற்சிகளும் எழ ஆரம்பித்தன. தாய்லாந்தும் வியட்நாமும் கம்போடியாவை இணைந்து ஆட்சி செய்யும் முடிவையும் எடுத்தன. அப்போது பிரெஞ்சுக் காலணியாக இருந்தது வியட்நாம். 1863ம் ஆண்டு தாய்லாந்தினால் கம்போடியாவில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மன்னர் நொரோடொம் ப்ரோம்போரிராக் தாய்லாந்திடம் தனது நாட்டிற்கான பாதுகாப்பிற்காக உதவி கேட்க, தாய்லாந்து மன்னருக்கும் பிரான்சுக்குமிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆயினும் பிரெஞ்சுக் காலணியாகவே கம்போடியாவின் பெரும் பகுதி இருந்தது. பின்னர் 2ம் உலகப்போரின் காலத்தில் ஜப்பானியப் படைகளின் தாக்கம், அதன் பின்னர் தொடர்ந்த வியட்நாமின் தாக்குதல் என அமைதியின்றி கம்போடிய மக்களின் வாழ்க்கை தொடர்ந்தது. 

1989ம் ஆண்டு அமைதிக்கான முன்னெடுப்புக்கள் தொடங்கின. 1991ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாரீசில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சுதந்திர கம்போடியப் பேரரசின் மன்னராக மன்னர் நோரோடோம் சிகானுக் பொறுப்பேற்றார். மாமன்னர் உள்ள நாடு என்ற போதும் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அரசியல் கட்சிகள் செயல்படும் சட்டமன்ற அமைப்புடன் கூடிய ஆட்சி இன்று தொடர்கின்றது. இப்படி தொடர்ச்சியான பலபல அரசியல் மாற்றங்களைச் சந்தித்திருக்கும் நாடுதான் கம்போடியா. 



கம்போடியாவின் முக்கிய மதமாகத் திகழ்வது பௌத்தம். இலங்கையிலிருந்து தேரவாத புத்தம் கி.பி 12ம் நூற்றாண்டில் கம்போடியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கம்போடியாவின் பல பகுதிகளில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டன. பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிலைகள் வடிக்கப்பட்டன. பிரம்மாண்டமான அங்கோர் தோம் கோயில் வளாகத்தில் வெவ்வேறு திசைகளில் அமைக்கப்பட்டுள்ள போதிசத்துவர் அவலோகதேஷ்வரரின் வடிவங்கள் உலகின் வேறெங்கும் காணக்கிடையாத அரும்பெரும் பொக்கிஷங்கள். இத்தகைய கட்டுமானக் கலை, சிற்பக்கலை ஆகியவற்றினைச் சுற்றி அமைந்த வரலாற்றினைச் சிறப்பாக பதிந்து இன்று கம்போடியா வருகின்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு வரலாற்றுத் தகவல்களை வழங்கும் ஆய்வுக்கூடமாகத் திகழ்கின்றது அங்கோர் தேசிய அருங்காட்சியகம். 




 அங்கோர் தேசிய அருங்காட்சியகம் அங்கோர் நகரைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளின் சேகரிப்புக்களை உள்ளடக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சியாப் ரீப் நகரில் உள்ள இந்த அருங்காட்சியகம் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. கீழ்த்தளம் தவிர்த்து மேலும் இரண்டு தளங்களில், எட்டு தனித்தனியான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை
  • கண்காட்சி அறிமுகம் 
  • க்மேர் நாகரிகம் 
  • சமயமும் நம்பிக்கையும் 
  • க்மேர் பேரரசுகள் 
  • அங்கோர் வாட் 
  • அங்கோர் தோம் 
  • கல்லின் கதை 
  • அப்ஸரசுகளின் அழகு 
என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ளன. 

சமயமும் நம்பிக்கையும் என்ற கருப்பொருளில் அமைந்திருக்கும் காட்சிக்கூடம் இந்த அருங்காட்சியகத்தின் தனிச்சிறப்பு எனலாம். இந்தக் கண்காட்சிப் பகுதியில் மட்டும் ஆயிரம் புத்தர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையில் அமைந்த புத்தரின் வடிவங்கள், நின்ற நிலையில், சாய்ந்த நிலையில், அமர்ந்த நிலையில், யோக நிலையில், ஐந்தலை நாகத்தின் குடையின் கீழ் அமர்ந்த நிலையில் என பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிற்பங்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.




அங்கோர் வாட் கண்காட்சிக் கூடம் அங்கோர் வாட் கோயிலின் வரலாற்றை விளக்கும் பகுதியாக அமைந்துள்ளது. கோயிலின் ஆரம்பகால வரலாறு, பேரரசுகள், மன்னர்கள் பற்றிய தகவல்கள் என்பன போன்ற தகவல்கள் இங்குக் கிடைக்கின்றன.   இதனை அடுத்து வரும் அங்கோர் தோம் கண்காட்சிப் பகுதி அங்கோர் தோம் பற்றியும் பாயோன் கோயிலைப் பற்றியும் விளக்கம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  கல்லின் கதை எனும் பகுதியில்  பல்லவ கிரந்தத்திலும் சமஸ்கிருதத்திலுமான கல்வெட்டுக்கள் பல இங்குள்ளன. பண்டைய தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.  இவை வாசிக்கப்பட வேண்டும்.






இங்குள்ள சேகரிப்பில் புத்தர் சிலைகள் மட்டுமன்றி போதிசத்துவர், அவலோகிதேஷ்வரர், விநாயகர், விஷ்ணு, பிரம்மா, சிவலிங்க சிற்பங்களும் உள்ளன. இவற்றோடு பாயோன், பாந்தே ஸ்ரீ, அங்கோர் சிற்பக் கட்டுமானக் கலைகளை விளக்கும் உடைந்த பகுதிகளில் கண்காட்சிப் பகுதியும் உள்ளது. நுணுக்கமான க்மேர் கலை வடிவத்தின் தனித்தன்மைகளை இப்பகுதியில் கண்டு மகிழலாம். 


வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடம் அளப்பரியது. கம்போடிய மண்ணின் கலைத்திறனையும் அந்நாட்டினை ஆண்ட பேரரசுகளின் ஆளுமைத்திறனையும் படைப்புக்களையும் ஒரு சேர அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த அருங்காட்சியகம் அதற்கு நிச்சயம் உதவும். சியாம் ரீப் நகரில் தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வினை இங்கு செல்கின்ற ஒவ்வொருவருக்கும் தருகின்றது கம்போடியாவின் கோயிற்கலை.

அருங்காட்சியகத்தின் முகவரி:
No. 968, Vithei Charles de Gaulle, Khrum 6, 
Phoum Salakanseng, Khom Svaydangum, 
Siem Reap District, Siem Reap Province, 
Kingdom of Cambodia 

Monday, February 19, 2018

108. கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி

முனைவர் சுபாஷிணி

 Published in Vallamai : http://www.vallamai.com/?p=83470

என்ன.. ? கசாப்புக்கடைக்கு ஒரு அருங்காட்சியகமா என ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். கசாப்புக் கடைக்கென்றே பிரத்தியேகமாக அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றியது தான் இந்தப் பதிவு.




ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இறைச்சி உணவு பற்றி விவரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. ஜெர்மனியில் மட்டுமே மூன்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் கசாப்புக் கடை பற்றிய தகவல்கள் சொல்லும் அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில், ஒரு 16ம் நூற்றாண்டு அழகிய மரவேலைப்பாட்டு கட்டிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கசாப்புக்கடை அருங்காட்சியகம்.





பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் இறைச்சி உணவே மக்களின் முக்கிய உணவாக அமைகின்றது. தென் அமெரிக்காவிற்கான கடல்வழிப்பயணங்கள் 14ம், 15ம் நூற்றாண்டு வாக்கில் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர்தான் ஐரோப்பாவில் உருளைக்கிழங்கும், தக்காளியும், குடை மிளகாயும், பிற ஏனைய காய்கறிகளும் அறிமுகமாகின. அதற்கு முன்னர் கோதுமை, சோளம், பயிர்கள், குறிப்பிடத்தக்க முட்டைகோஸ் வகை காய்கறிகளும், பழங்களும், ஓரிரண்டு வகை தாவரங்களும் மட்டுமே மரக்கறி உணவு வகையில் சாப்பிடப்படுவனவாக இருந்தன. இவற்றை விட ஐரோப்பிய மக்களின் மிக முக்கியமான உணவாக அமைந்தது இறைச்சி உணவு தான். அதிலும் ஜெர்மானியர்களை எடுத்துக் கொண்டால், பண்டைய ஜெர்மானிய மக்களின் உணவு கலாச்சாரத்தில் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, மான்கள், காட்டுப்பன்றி, பைசன் போன்றவை வேட்டையாடி விரும்பிச் சாப்பிடப்பட்ட உணவாக அமைந்தன.

கோதுமை, சோளம் போன்ற தானியங்களைக் கொண்டு ரொட்டி தயாரிப்பது பண்டைய காலம் தொட்டு ஐரோப்பா முழுமைக்கும் வழக்கில் இருந்தது. பயிர்களும், காய்களும் பழங்களும் கோடைக்காலத்தில் விளைவதால் அவற்றைக் குளிர்காலத்திலும் இளவேனிர் காலத்திலும் பயன்படுத்தும் வகையில் இவற்றைப் பாடம் செய்து வைக்கும் கலையை பெருவாரியாக வளர்த்தனர். இதில் இறைச்சியைப் பாடம் செய்து பத்திரப்படுத்தும் வகை, உப்புக் கண்டம் போட்டுக் காய வைத்துப் பாதுகாக்கும் முறை, அரைத்து வெவ்வேறு பொருட்களுடன் கலந்து அவற்றைப் பதனிட்டு பாதுகாத்து ஆண்டு முழுமைக்கும் தேவைப்படும் உணவுத்தேவைக்குப் பயன்படுத்தும் முறை என இம்மக்கள் பெருவாரியாக ஆராய்ந்து இக்கலையை வளர்த்தனர்.



இன்றைய காலகட்டத்தில் உலகின் பல நாடுகளுக்கான தொடர்புகள் எல்லா நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது மக்களின் கலாச்சாரத்திலும் ஊடுருவத் தொடங்கிவிட்டது. சீனர்கள், கொரியர்கள், இலங்கையர்கள், இந்தியர்கள், தாய்லாந்துக்காரர்கள், வியட்நாமியர்கள், தென் அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள், மத்திய கிழக்காசிய மக்கள் என பல கலாச்சாரப் பின்னனி கொண்டவர்கள் ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து உள்ளூர் மக்களுடன் வாழ்கின்றனர். வந்து விட்டுச் செல்லும் விருந்தாளிகளாக இல்லாமல் ஐரோப்பாவையே தங்கள் வாழ்விடமாக இந்த மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்றாலும் கூட தங்கள் தாயகத்தின் உணவு முறைகளை இத்தகைய மக்கள் தொடர்ந்து இந்தப் புதிய நிலத்திலும் கடைப்பிடிப்பதால் ஐரோப்பாவின் பல மூலை முடுக்குகளிலும் ஆப்பிரிக்க உணவு, சீன உணவு, தாய்லாந்து உணவு, மெக்சிக்கன் உணவு, இந்திய உணவு, அரேபிய உணவு என்பவை பரவி விட்டதை இங்குக் காணப்படும் உணவகங்களைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம். இப்படி நிலமை மாற்றம் கண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட இறைச்சி உணவையே பிரதான உணவாக ஐரோப்பியர்கள் தொடர்கின்றனர் என்பதை இங்குள்ள பெருவாரியான உணவகங்களும் அங்காடிக் கடைகளும் கசாப்புக் கடைகளும் நமக்கு வெளிப்படுத்துகின்றன,

ஜெர்மனியைப் பொருத்தவரை இறைச்சி விற்பனை என்பது நான்கு வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. பெருவாரியான சூப்பர்மார்க்கெட்டுகளில் பாக்கெட் செய்யப்பட்ட இறைச்சிகள், வாரச் சந்தையில் கசாப்புக் கடைக்காரர் விற்கும் இறைச்சி, பதப்படுத்தி சோசேஜ் வகையில் விற்கப்படும் இறைச்சி, கிராமப்பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வீட்டோடு அண்டிய வகையில் உருவாக்கியிருக்கும் கடைகளில் விற்கப்படும் இறைச்சி எனப் பிரிக்கலாம். ஜெர்மனியில் வாழும் துருக்கியரும் தங்கள் கடைகளில் மாடு, கோழி, வாத்து, போன்ற இறைச்சி வகைகளை விற்கின்றனர். இறைச்சி வகையோடு மீன்களும் கடல் உணவுகளும் இதே ரீதியில் விற்கப்படுகின்றன.






கசாப்புக் கடைக்காரர்கள் மெட்ஸ்கர் (Metzger) என்ற ஜெர்மானியச் சொல்லால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இது தொழில் பெயர். பண்டைய காலத்தில் இது குலத்தொழிலாக இருந்தது. இவ்வகை குலத்தொழில் பண்பாடு என்பது ஜெர்மனியில் கடந்த ஐந்நூறு அறுநூறு ஆண்டுக்கால கட்டத்தில் இல்லாது மறைந்து விட்டது. இன்று மெட்ஸ்கர் என்ற குடும்பப்பெயரை வைத்திருப்பவர்கள் மருத்துவராகவும், கால்பந்து விளையாட்டாளராகவும். ஆசிரியராகவும், பஸ் ஓட்டுநராகவும், பொறியியலாளராகவும் என பல்வேறு தொழிலைப் புரிவோராக உள்ளனர். இதேபோன்ற நிலைதான் ஏனைய குலத்தொழில்களுக்கும் ஏற்பட்டுள்ளன.

இறைச்சி உணவினைத் தயாரித்தலில் பயன்படுத்தப்படும் கருவிகள் பற்றிய தகவல்களைப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்தவும், பண்டைய காலம் தொட்டு இன்று வரை கசாப்புக் கடைத் தொழிலாளர்களின் தொழில் வாழ்க்கை எப்படி அமைகின்றது என்பதை விவரிக்கும் வகையிலும்  இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளனர். ஏனைய அருங்காட்சியகங்களைப் போல இவை காலை முதல் மாலை வரை திறக்கப்படுவதில்லை. மாறாக நண்பகல் 12க்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு இந்த அருங்காட்சியகம் மூடப்படுகின்றது. பொது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் ஒரு விவசாயி வாழ்க்கையை விளக்கும் வகையில் காய்கறிகள், முட்டைகள், இறைச்சி போன்றவற்றை சந்தையிலிருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்தியும் வைக்கின்றனர்.





போப்லிங்கன் நகரின் பழைய கிராமத்தின் மையப்பகுதியிலேயே பழமையான ஒரு அழகிய கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மாறுபட்ட கோணத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை இங்கு வருபவர்கள் கண்டு செல்வது இறைச்சி பதனிடும் முறைகளைப் பற்றியும் கசாப்புக் கடைக்காரர்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்குவதாகவும் நிச்சயம் அமையும்.
இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
Address: Fleischer Museum Boeblingen,   Marktpl. 27, 71032 Böblingen
Phone: 07031 6691691

அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா?

Wednesday, February 14, 2018

107. கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம், கரூர், இந்தியா

முனைவர் சுபாஷிணி


கருவூர், கரூர், வஞ்சி என அழைக்கப்படும் கரூர் நகரம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம் ஆகிய ஆறு வட்டங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டமாக கரூர் மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த கரூர் 1995ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.

தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சிறப்பினைக் கொண்ட நகரங்களில் கரூர் நகரமும் ஒன்று. கடந்த நூறாண்டில் கரூர் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும், அமராவதி நதிக்கரையில் கிடைத்த தொல்லியல் சான்றுகளும் தமிழகத்தின் பழம் பெரும் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் கண்டுபிடிப்புகளாக அமைந்துள்ளன. அது மட்டுமன்றி, தமிழகத்தோடு அன்றைய கிரேக்க, ரோமானியப் பேரரசு கொண்டிருந்த வணிகத் தொடர்புகளைத் துல்லியமாகச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டும் வகையிலும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி இன்றளவும் முழுமையாக தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத நிலைத் தொடர்கிற அதே வேளை, இதுவரை கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகள் அளித்திருக்கும் தகவல்கள் தரும் செய்திகளான சங்ககாலம், மற்றும் அதன் தொடர்ச்சியான காலத்து வரலாற்றினை, நாம் புரிந்து கொள்ள உதவும் முக்கிய அளவு கோலாக இந்த ஆய்வு முடிவுகள் திகழ்வதை நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.




கரூர் நகரின் மையத்தில் ஒரு சாலையின் ஒரு பக்கத்தில் வரிசையாகக் கடைகள் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள ஒரு பழமையான கட்டிடத்தில் கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும் போது நமக்கு ஏற்படும் உணர்வு ஒரு கிராமத்துப் பலசரக்குக் கடைக்குள் நுழைவது போன்ற உணர்வினைத் தருவதாக இருக்கின்றது. அருங்காட்சியகத்தின் உள்ளே பாதுகாக்கப்படுகின்ற அரும்பொருட்களோ தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கானச் சான்றுகளாக அமைந்து நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றன. வரிசை வரிசையாகக் கண்ணாடி அலமாரிகளுக்குள் வைத்துப் பாதுகாக்கப்படும் சங்க காலத்தைய ரோமானியர்கள் தொடர்பினை வெளிப்படுத்தும் காசுகள், கரூரின் வீரர் மரபை வெளிப்படுத்தும் புலிக்குத்திக்கல் நடுகற்கள், பண்டைய தமிழர் மரபில் ஈமக்கிரியைச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழி, ஓலைச்சுவடி நூல்கள் ஆகியன இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்களுக்குக் கரூர் பகுதியின் மீது கவனம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது அமராவதி நதிக்கரையில் 1806ம் ஆண்டு வாக்கில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தில் அமைந்த பண்டைய ரோமானிய காசுகள் எனலாம். கிடைத்த குறுகிய காலத்திலேயே அவற்றில் பல காணாமல் போயின. அவற்றுள் ஒரு சில நாணயங்கள் மட்டும் அருங்காட்சியக அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டன. இப்படி சேகரித்துப் பாதுகாக்கப்பட்ட காசுகளை அறிஞர்கள் ஆராயத்தொடங்கியமைதான் இப்பகுதியில் சங்க காலத்தில் பண்டைய ரோமானிய அரசு கடல் வழி வணிகத்தை மேற்கொண்டிருந்தமையும், ரோமானியர்கள் இப்பகுதிக்கு வந்து தங்கியிருந்து வர்த்தக முயற்சிகளை மேற் கொண்ட செய்திகளையும் வெளிப்படுத்திய ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. தொடர்ச்சியாக கரூர் பகுதியில் பண்டைய ஆபரணங்களும் புராதனச் சின்னங்களும் மேலும் கிடைக்கவே, இப்பகுதி தொல்லியல் அறிஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் ஒரு பகுதியாக மாறியது. உலக வரைபடத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய நகரமாகவும் கரூர் நகரின் புகழ் உயர்ந்தது.

தொடர்ச்சியாக நிகழ்ந்த ஆய்வுகள் கரூர் நகரின் பண்டைய முக்கியத்துவம் பற்றிய ஆய்வுகளை ஆராய்வதாக அமைந்தன. சேர மன்னர்களின் செயல்பாடுகள், சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடும் இலக்கியச் செய்திகள் ஆகியன கரூர் நகரம் சேரப் பேரரசின் ஆட்சி காலத்தில் மிக முக்கியப் பங்கு வகித்த ஒரு நகரமாகத் திகழ்ந்தமையை உறுதி செய்வதாக அமைந்தது. படிப்படியாக நிகழ்ந்த இலக்கிய, தொல்லியல்,புராதனச் சின்னங்களின் ஆய்வுகள் கரூர் நகரமே பண்டைய சோழப் பேரரசின் தலைநகரமாக ‘வஞ்சி’ என்ற பெயருடன் திகழ்ந்த நகரமே இந்தக் கரூர் என்ற செய்தியையும் உலகத்திற்கு வழங்கியது. வஞ்சி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நகரம் தாம் கரூர் என்பதில் ஆய்வாளர்களிடையே இன்னமும் கருத்து வேறுபாடுகள் நிலவுவது தொடர்கின்றது. ஆயினும், கரூர் சேர பேரரசு புகழோடு இருந்த காலத்தில் அதன் தலைநகரமாக விளங்கிய ஒரு நகரமே என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.



கல்வெட்டு ஆய்வாளர் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் புகழூர் கல்வெட்டினை வாசித்து ஆய்வு செய்து அதனை வெளியிட்டார். சங்க காலத்தின் மூன்று கட்டங்களிலான சேரப் பேரரசு பற்றிய விளக்கங்களில் கரூர் என ஆவணங்களில் குறிப்பிடப்படும் பகுதி புகழூரிலிருந்து ஏறக்குறைய பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஒரு பகுதியே என்றும், சேரர்களின் தலைநகரம் கரூர் நகரமே என்றும் உறுதி படுத்துவதாக அமைந்தன அவரது ஆய்வு முடிவுகள். இது மட்டுமன்றி அன்றைய தமிழக தொல்லியல் துறையினரால் இப்பகுதியில் அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்பட்டு, கரூரின் வரலாற்று முக்கியத்துவத்தினை உலகுக்குச் சொல்லும் பல அரும்பொருட்கள் இந்த ஆய்வுகளின் போது  அகழ்ந்தெடுக்கப்பட்டன. டாக்டர். நாகசாமியின் தலைமையில் 1974ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில், சேரப் பேரரசின் சின்னமும் ‘கொல்லிரும்புறை’ என்ற எழுத்தும் பொறித்த காசு கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாணயவியல் ஆய்வாளர் தினமலர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டெடுக்கப்பட்ட பல காசுகளில் மேலும் இரண்டு காசுகளில் முறையே ”மாக்கோட்டை”, ”கூட்டுவன் கோட்டை” என்ற தமிழ்ச்சொற்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேரப் பேரரசுகள் வெளியிட்ட காசுகள் இவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் மகுடம் வைப்பது போல அமைந்தது கரூர் நகரில் ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களின் கண்டுபிடிப்பான ஒரு மோதிரம். இந்த மோதிரம் 1991ம் ஆண்டு அமராவதி ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பும் அதனைத் தொடர்ந்து டாக்டர். நாகசாமியின் இந்த மோதிரம் பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரையும் அன்று வெளியிடப்பட்டபோது தொல்லியல் அகழ்வாய்வில் மட்டுமன்றி பெருமளவில் தமிழ் ஆய்வாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட வரலாற்றுச் செய்தியாக  இது அமைந்தது. 15.6 கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் அது. முகப்புப் பகுதி 5.5 மிமீட்டர் அளவுடன் அமைந்தது. அந்த மோதிரத்தின் முகப்புப் பகுதியில் கலை அழகின் உச்சம் என வர்ணிக்கத்தக்க வகையில் அமைந்த மிதுனச் சின்னம், அதாவது ஒரு ஆணும்-பெண்ணும் அன்புடன் நளினமாக நிற்கும் வகையில் அமைந்த சின்னம் ஒன்று பொறிக்கப்பட்ட வகையில் இந்த மோதிரம் அமைக்கப்பட்டிருந்தது. அச்சிறிய மோதிரத்தில் இத்தகைய ஒரு நளினம் மேலோங்கிய படைப்பினைப் படைத்த தமிழக பொற்கொல்லர்களின் நுணுக்கமான கலைத்திறனுக்கு உதாரணமாக பாராட்டுக்களுக்குரிய வகையில் இந்த மோதிரம் உருவாக்கப்பட்டிருந்தது. ஐயத்திற்கு இடமின்றி கி.பி.1 நூற்றாண்டின் சேரப் பேரரசின் அதிகாரப்பூர்வ அரச மோதிரம் இது என உறுதி செய்யப்பட்டது .




இந்த மோதிரத்தின் மேலுள்ள சங்க கால வாழ்வியலின் அடிப்படையான காதல் அன்பினைக் குறிக்கும் இந்தச் சின்னமே தமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ சின்னமாக இந்த அமைப்பு உருவான 2001ம் ஆண்டு முதல் திகழ்கின்றது. அன்பினை வலியுறுத்தும் மாண்பினை வாழ்வியல் நெறியாகக் கொண்டிருந்த பண்டைய தமிழரின் மரபினையும் மாண்பினையும் பிரதிநிதிக்க இச்சின்னத்தை விட வேறெதுவும் பொருந்தாது என்பது அன்று எனக்கும் பேரா.நா.கன்ணன் அவர்களுக்கும் மனதில் எழுந்த எண்ணமாக அமைந்ததன் விளைவே இந்த முத்திரை தமிழ் மரபு அறக்கட்டளையின் சின்னமாக அமையக் காரணமாகியது.

தமிழகத்தின் பல பகுதிகளில் வீரர்களின் வீரச்செயலைப் பிரதிபலிக்கும் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதை அவ்வப்போது ஊடகங்களின் வழி அறிகின்றோம். கரூர் நகரில் கண்டெடுக்கப்பட்ட, கரூருக்குப் புகழ்ச்சேர்க்கும் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டு, அவை இந்தக் கருவூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. கரூரில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.பி.8ம் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட இரண்டு நடுகற்களில் ஒரு நடுகல் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டும், ஒரு நடுகல் வட்டெழுத்துப் பொறித்த வகையிலும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுக்களே கரூர் நகரம் வஞ்சி என்றும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அழைக்கப்பட்டது என்பதை உறுதிசெய்வதாகவும் அமைகின்றன.

கரூரில் இதுவரை அடையாளம் காணப்பட்ட வரலாற்று அரும்பொருட்கள் கூறும் தமிழர் பண்டைய வரலாற்றுச் செய்திகள் ஏராளம். இதுவரை கண்டெடுக்கப்படாமல் கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் காணப்படும் தொல்லியல் புராதனச் சின்னங்களோ ஏராளம் ஏராளம். இவற்றை எப்போது நாம் அடையாளம் காணப்போகின்றோம்? இவற்றைக் கண்டெடுத்து எப்போது நாம் அவற்றை ஆய்வுக்குட்படுத்தி தமிழர் பண்டைய வரலாற்றுச் செய்திகளையும் வாழ்வியலையும் உலகுக்கு எடுத்துரைக்கப் போகின்றோம்? இவற்றிற்கும் மேலாக, இன்று கரூர் நகரில் இருக்கும் கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகத்தைப் புதுப்பித்து அதில் பாதுகாக்கப்படும் அரும்பொருட்களை மிகச் சிறப்பான முறையில் உலகுக்குக் காட்சிப்படுத்தி பெருமை கொள்ளப் போகின்றோம்?




இவையெல்லாம் இன்று நம் முன் நிற்கும் மிக முக்கியமான கேள்விகள் அல்லவா?

​துணை நூல்:
"Roman Karur", Dr.R.Nagasamy, 1995​