Monday, May 23, 2016

63. இஸ்லாமிய கலைகள் அருங்காட்சியகம், மலேசியா


முனைவர்.சுபாஷிணி


தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய இஸ்லாமிய கலைப்பொருட்களுக்கான அருங்காட்சியகம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் நகரில் உள்ளது. 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் இருக்கும் இடம் கோலாலம்பூரின் மையப் பகுதி. 30,000 சதுர அடி பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் கட்டிடங்கள் கட்டட அமைப்பு. அல்குரான் மற்றும் ஆவணங்கள், இந்தியாவில் இஸ்லாம், சீனாவில் இஸ்லாம், மலேசியாவில் இஸ்லாம், ஆபரணங்கள், துணி வகைகள், போர் கருவிகள், காசுகள், இரும்பு கருவிகள், இஸ்லாமிய கலையில் மரங்களின் பயன்பாடு, களிமண்பாண்டங்கள் ஆகிய பணிரெண்டு வகைகளில் இங்கே காட்சிப்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய ஏழாயிரம் அரும்பொருட்களும் இஸ்லாமிய சமய தொடர்பான நூல்களும் இந்த அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கின்றன.

ஒவ்வொரு தளத்திலும் பார்த்து குறிப்பெடுத்துக்கொள்ள ஏராளமான அரும்பொருட்கள் இருப்பதால்  இங்கு செல்ல விரும்புவோர் ஏறக்குறைய நான்கு மணி நேரங்களையாவது இந்த அருங்காட்சியகத்திற்காக ஒதுக்கி விடுவது நல்லது. நான் சென்றிருந்த சமயத்தில் இதற்கு நுழைவுக்கட்டணமாக 14 ரிங்கிட் வசூலித்தார்கள். ஆக செல்லும் முன் இதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை ஒரு முறை பார்த்து தகவல்களை அறிந்து கொண்டு செல்வதும் உதவும்.



இஸ்லாமிய கலைகள் எனும் போது அதிலும் கட்டட கட்டுமானம் எனும் போது யந்திர வடிவங்களின் இணைப்பில் உருவாக்கப்பட்ட அமைப்புக்களை உலகம் முழுவதிலும் காணலாம். உலகில் இஸ்லாம் பரவிய நாடுகளில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களின் மாடல்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஸ்பெயினின் புகழ் மிக்க அல்ஹம்ரா, மாலியில் உள்ள ஜேனா பள்ளிவாசல், வட அமெரிக்கவின் நியூ மெக்சிக்கோ மானிலத்தில் உள்ள டார் அல் இஸ்லாம் பள்ளிவாசல், திருக்கியில் உள்ள செலிமியே பள்ளிவாசல், சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகர் பல்ளிவாசல் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.



அல்குரான் மற்றும் ஆவணங்கள் உள்ள பகுதியில்  அரிய ஆவனங்களும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அல்குரான் நூல்களும் இருக்கின்றன. உதாரணமாக 12 அல்லது 13ம் நூற்றாண்டு  அல்குரான் நூல் ஒன்று இங்குள்ளது. அனேகமாக இது ஸ்பெயின் அல்லது வட ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற குறிப்புடன் இந்த நூல் உள்ளது. வட இந்தியாவில் உருவாக்கப்பட்ட காஷ்மீரிய தாளைக் கொண்டு உருவாக்கப்பட்ட 19ம் நூற்றாண்டு அல்குரான் ஒன்றும் இங்குள்ளது.



இந்தியாவில் இஸ்லாம் எனும் பகுதியில் கண்களைக் கவரும் பல அரும்பொருட்களைக் காண முடிகின்றது. வட இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்கு அதாவது கி.பி.1526-1828 வரையிலான காலகட்டத்திற்கு முன்னரே பரவலாக இந்தியாவிற்கான அரேபியர்களின் வருகை என்பது விரிவானது. முகலாய கலைப்பொருட்கள் அரேபிய இஸ்லாமிய கலைகளிலிருந்து மாறுபட்ட வடிவத்தில் தனித்துவத்துடன் திகழ்வது. அதனை வெளிப்படுத்தும் அரும்பொருட்கள் சில இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஓவியங்கள், கைவினைப்பொருட்கள், ஆடை ஆபரணங்கள், மன்னர்களின் கோட்டைகளை அலங்கரித்த பொருட்கள் என்பனவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். இந்திய இஸ்லாமிய கலையை வெளிப்படுத்தும் வகையிலான  1850ம் ஆண்டு தங்கத்தில் வைரம் படித்த கழுத்தணி ஒன்றும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



மலேசியாவிற்கு இஸ்லாமிய மதம் சிறிது சிறிதாக 14ம் நூற்றாண்டு வாக்கில் பரவியது. அரேபிய வணிகர்கள் மலாயா தீபகற்பம் வர ஆரம்பித்து பின்னர் படிப்படியாக உள்ளூர் மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய நிலையில் பின்னர் மலாக்காவில் மன்னராக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட மன்னர் பரமேஸ்வரர் இரு நாடுகளுக்கான நல்லிணக்கத்திற்காக அரேபிய இஸ்லாமிய பெண்ணை மணந்து இஸ்லாமிய மதத்தை தாமும் தழுவியதால் மலாயா முழுமையாக இஸ்லாமிய நாடாக கி.பி15ம் நூற்றாண்டில் உருமாற்றம் கண்டது. படிப்படியாக நாடு முழுமைக்கும் இஸ்லாமிய கலைகள் வளர்ச்சியுற்றன.  இஸ்லாமிய கட்டுமானக் கலைகள் கடந்த சில ஆண்டுகளில் மேலும் பரவலாக வளர்ச்சியுறுவதை  நாடெங்கிலும் நன்கு காணலாம்.  இதனை வெளிப்படுத்தும் நூல்கள், ஆவணங்கள், கைவினைப்பொருட்கள், ஆடை ஆபரணங்கள் ஆகியனவும் இங்கே சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.




இந்த அருங்காட்சியகத்தைப் பற்றியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிரந்தர  கண்காட்சிகளைப்பற்றியும் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படுகின்ற தற்காலிக கண்காட்சிகளைப்பற்றியும் இதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் தகவல் அறியலாம். http://www.iamm.org.my/ இப்பக்கத்தில் அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரம், கட்டணம், முகவரி ஆகிய தகவல்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

மிகப் புதுமையான கட்டுமான அமைப்பில் அமைக்கப்பட்டு ஏராளமான காட்சிப்பொருட்களுடன் நாட்டின் மையப்பகுதியில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது. மலேசியா செல்பவர்கள் இங்கே சென்று பார்த்து வருவதை உங்கள் பயணத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Monday, May 2, 2016

62. கெல்ட்டன் அருங்காட்சியகம், ஹோஹ்டோர்ஃப், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி


ஏறக்குறைய இன்றைக்கு 2500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியின் பாடன் ஊர்ட்டென்பெர்க் எனும் மானிலத்தில் உள்ள ஹோஹ்டோர்ஃப், எனும் பகுதியில் இறந்த தங்களின் மன்னனுக்காக கெல்ட் மக்கள் குன்று ஒன்றை உருவாக்கி அதில் நினைவாலயம் ஒன்றை உருவாக்கினார்கள். நாளடையில் அப்பகுதியில் பல்வேறு பூகோள நில மாற்றங்களினாலும் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளினாலும்  அந்தக் குன்று சற்றே தாழ்நிலமாக வடிவம் பெற்றது. 1968ம் ஆண்டில் ஒரு தன்னார்வத் தொண்டூழிய தொல்லியல் ஆய்வாளர் சில வித்தியாசமான கற்களை அப்பகுதியில் கண்டெடுக்கவே, அப்பகுதியைத் தொல்லியல் ஆய்விற்கு உட்படுத்த  முயற்சிகள் எடுக்க, அங்கு ஆய்வுகள் தொடங்கின. உயர்தரமான அகழ்வாய்வு முறைகளைப் பயன்படுத்தி இப்பகுதியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைத்தது.




2500 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன தம் மன்னனைப் புதைத்து வைத்து அவன் சென்றிருக்கும் மறு உலகத்தில் அவனுக்குத்தேவை எனத் தாம் கருதிய பொருட்களையும் கூடவே வைத்து மிக அழகிய அறை ஒன்ற அந்தக் குன்றிற்குள் அம்மக்கள் உருவாக்கியிருக்கின்றனர். அகழ்வாராய்ச்சியின் போது இறந்த மன்னனுக்காக அம்மக்கள் கட்டிய அறை, அந்த அறையில் அம்மன்னனை அவர்கள் உறங்க வைத்திருந்த தங்கக்கட்டில், அவன் உடலின் மேல் அவர்கள் அணிவித்திருந்த தங்கத்தினாலான அணிகணலன்களான கால் வளையங்கள், கை வளையங்கள் நெற்றிப்பகுதி அலங்காரம் என்பனவற்றோடு அவன் மேற்குலகில் பயணம் செய்வான் என்ற நம்பிக்கையில் அவனுக்காக உயர்தரமான  ஒரு தேரும் அவன் நீர் அருந்தும் வகையில் பெரிய தங்கத்தினாலான ஒரு கூஜாவையும் தயாரித்து அந்த அறையில் அம்மக்கள் வைத்திருந்தனர் என்பது இந்த அகழ்வாயில் கண்டுபிடிக்கப்பட்டது.

டோனாவ் நதிக்கறையில் கண்டெடுக்கப்பட்ட ஏனைய சில இறந்தோருக்கான ஈமச்சடங்கு நினைவாலயங்களை ஒத்த வடிவிலேயே இந்த கெல்ட் நினைவாலயக் குன்றும் அதில் கிடைத்த ஈமச்சடங்குச் சின்னங்களும் அமைந்திருக்கின்றன, இந்த ஆய்வு ஜெர்மனியில் எந்தெந்த பகுதிகளில் கெல்ட் இன மக்கள் விரிந்து பரந்து வாழ்ந்தனர் என்பதை அடையாளம் காண உதவும் வகையில் இருக்கின்றது என்பது மிக முக்கிய அம்சமாக அமைகின்றது.


மன்னன் புதைக்கபப்ட்ட பகுதியில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிகழ்த்திய அகழ்வாய்வுகளில் அதே பகுதியில் கெல்ட் இன மக்கள் வாழ்ந்ததற்கானத் தடயங்களாக அமையும் பல பொருட்களை அகழ்வாய்வுக் குழுவினர் கண்டெடுத்திருக்கின்றனர். அதில்  கெல்ட் சமூகத்தினர் தமது அன்றாட வாழ்க்கை உபயோகத்திற்காகப் பயன்படுத்திய பொருட்கள், இரும்புப் பட்டறை, மண்பாண்டங்கள், குதிரை வண்டிகள், சமையல் அடுப்புக்கள், சமையல் பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள். தொழிற்கருவிகள், போருக்கான கருவிகள் என பலதரப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மனித  எலும்புக்கூடுகளும்  இதில் அடங்கும்.




இந்தப் பொருட்களை எல்லாம் காட்சி வைக்கும் பொருட்டு ஜெர்மனியின் பாடர்ன் ஊர்ட்டெம்பெர்க் மானிலத்தில் உள்ள ஹோஹ்டோர்ஃப் பகுதியில் ஒரு பிரத்தியேக அருங்காட்சியகத்தை உருவாக்கி, அது  1991ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் கி.மு540 வாக்கில் வாழ்ந்து இறந்த அம்மன்னனின் ஈமச்சடங்கு அறை, அவனது முழு உடலின் எலும்புக்கூடு ஆகியவற்றோடு  அங்கே கண்டெடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் காட்சிக்கு வைத்திருக்கும் ஒர் இடமாகத் திகழ்கின்றது.

அருங்காட்சியகத்தின் உள்ளே பட விவரனைகள் உள்ளன. ஆங்கிலம், டோய்ச் ஆகிய இரு மொழிகளிலும் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. முதல்  தளத்தில் கெல்ட் சமூகத்து மக்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களோடு விரிவான அகழ்வாய்வுப் பணி தொடர்பான செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. மன்னனின் எலும்புக்கூடும் முதல் தளத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.




கீழ்தளத்தில் ஒரு தனிப்பகுதியில் மன்னனின் அறை, அவனது தங்கக் கட்டில், அவனது தேர், அவனது அணிகலண்கள், தண்ணீர் கூஜா ஆகியன மிகச்சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனைக் கடந்து சென்றால் ஒரு தனி அறை வருகின்றது. அங்கே இந்த அருங்காட்சியகம் பற்றியும் இங்கு படிப்படியாக நிகழ்ந்த  தொல்லியல் ஆய்வுகள் பற்றிய விளக்கமும் ஆவணப்படமாக காட்டப்படுகின்றது.  பார்வையாளர்கள் இங்கு வந்து அமர்ந்து முழு தகவல்களையும் திரைக்காட்சியாகப் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

இப்பகுதியில் நிகழ்ந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய சிலை ஒன்றும் இதே அருங்காட்சியகத்தில் உள்ளது. அது ஒரு போர் வீரனின் சிற்பம். இது மிகத் தனித்துவம் வாய்ந்த கெல்ட் இன போர் வீரர்கள், அதிலும் குறிப்பாக ஆல்ப்ஸ் பகுதியை பிரதினிதிக்கும் வகையில் அமைந்த ஒரு மிகப் பெரிய ஆள் உயர சிற்பம்.



இந்த அருங்காட்சியகத்திற்கு வருபவர்கள் கெல்ட் மக்களைப் பற்றி அறிந்து கொள்ள பல தகவல்கள் உள்ளன. புத்தகங்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் கெல்ட் மக்களின் பண்டைய வாழ்க்கை முறையை சித்தரிக்கும் மாதிரி குடியிறுப்புக்களை உருவாக்கியுள்ளனர். இது கெல்ட் மக்களின் பண்டைய இல்ல அமைப்பு,  பட்டறை அமைப்பு, விவசாய அமைப்பு ஆகியவற்றைப் பார்வையாளர்களுக்கு விளக்குவதாகவும் அமைகின்றது.




நான் வசிக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து 27கிமூ தூரத்தில் தான் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது என்றாலும் இந்த ஆண்டு தான் இதற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கெல்ட் இன மக்களைப் பற்றி ஒரு நூலில் வாசித்த போது இந்த நகர் பற்றி  தற்செயலாக அறிய வர மேலதிகத் தகவலை இணையத்தில் தேடிய போது இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது.  இங்கே நேரில் சென்று இங்குள்ள அரும்பொருட்களை அதிலும் குறிப்பாக இறந்த மன்னனின் ஈமச்சடங்கு அறை, தேர், அவனது தங்கக் கட்டில், அணிகலன்கள்   என பார்த்தபோது ஆச்சரியத்தில்  மூழ்கினேன்.

அருங்காட்சியகத்தின் முகவரி
Keltenmuseum Hochdorf/Enz
Keltenstraße 2, 71735 Eberdingen.

இப்படித்தான் பக்கத்திலே  இருந்தாலும் கூட பல முக்கிய இடங்களை நாம் காணத்தவறுவது என்பது பலருக்கும் நிகழ்ந்திருக்கும். ஆக நமது சுற்றுப்புறத்தில் இருக்கின்ற முக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தேடி அவற்றைச் சென்று பார்த்து வருவது நமது வரலாற்று அறிவை மேலும் பெறுக்கிக் கொள்ள உதவும்.

சரி. அடுத்த பதிவில் ஐரோப்பாவில் உள்ள மேலும் ஒரு அருங்காட்சியகத்தை  அறிமுகம் செய்கின்றேன். எந்த ஊரில் உள்ள எந்த அருங்காட்சியகமாக இருக்கும் என்று யோசித்து வையுங்கள்!