Monday, November 25, 2013

15 - ப்ரான்ஸ் அருங்காட்சியகம்: ஓர் அறிமுகம்


முனைவர்.சுபாஷிணி 

மட்ரிட் நகரிலிருந்து புறப்பட்டு வெகு தூரமான ஒரு நாட்டிற்கு நாம் இப்போது செல்லப்போவதில்லை. ஸ்பெயினின் எல்லை நாடான ப்ரான்ஸுக்குத் தான் உங்களை அழைத்துச் செல்லப் போகின்றேன். :-)

ப்ரான்ஸில் இருக்கும் அருங்காட்சியகங்கள் அனைத்தையும் பார்ப்பதென்றால் அதற்கு நமக்கு ஒரு வருடம் கூட ஆகலாம். அவ்வளவு அருங்காட்சியகங்கள் நிறைந்த ஒரு நாடு ப்ரான்ஸ். ப்ரான்ஸின் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருக்கும் நகரங்களான ஆவியோன், லியோன், நீட்ஸா, தூலூஸ், காண்ட், க்ராஸ், தலநகரமான பாரிஸ் என இந்த நகரங்களெல்லாம் வரலாற்று பழமை வாய்ந்த  நகரங்கள். ஐரோப்பாவின் முழுமைக்கும் ப்ரெஞ்சு  தாக்கம் என்பது மிக விரிவானது. ஐரோப்பாவுடன் நின்று விடாமல் ஆப்பிரிக்க, அமெரிக்க கண்டம் வரை தனது ஆளுமையை விரிவாக்கியது ப்ரான்ஸ்.ப்ரான்ஸ் என்றதுமே பலருக்கும் அறிமுகமாக மனதில் தோன்றுவது பாரிஸ் நகரம் தான். பாரிஸின் பெயரைக் கேட்டதுமே ப்ரமாண்ட கட்டிடங்களும், புதுமை உலகமும், கேளிக்கைகள் நிரம்பிய சொர்க்கபுரி என்பதுமாக நமது மனம் கற்பனையில் சிறகடிக்கும். இந்த தோற்றத்தின் இடையே பாரிஸின் உண்மையான வரலாற்று முகம் மறைந்தும் கூட போகலாம். ஆனால் ஒரு வகையில் பாரிஸை விட்டு தூரம் சென்று ப்ரான்ஸின் ஏனைய பகுதிகளுக்குச் சென்றோமேயானால் ப்ரான்ஸின் விரிவான அறிமுகத்தை நாம் நன்கு பெற முடியும். பாரிஸின் தற்போதைய சூழலில் அதன் பண்டைய வரலாற்று சிறப்புக்களையும் விட இன்றைய பொருளாதார சூழல், அதனால் மக்கள் நிறைந்து வழியும் இந்த நகரத்தின் சீர்குலையும் நிலை தான் பெரும்பாலும் கண்களுக்குத் தென்படுவதாக இருக்கின்றது. பாரிஸை பார்த்து விட்டு இது தான் ப்ரான்ஸ் என நம்பிக் கொண்டிருந்தோமேயானால் உண்மையான ப்ரான்ஸின் முழு வடிவத்தை நாம் அறிந்து கொள்ளவே முடியாது என்பதை ப்ரான்ஸின் ஏனைய இடங்களுக்குச் சென்று பார்த்து வரும் வாய்ப்பு அமைந்தமையினால் நான் நேரடியாக அதனை உணரும் வாய்ப்பு பெற்று அறிந்து கொண்டேன். இதனால் ஓரளவிற்கு ப்ரான்ஸ் அதன் பண்டைய சிறப்புக்களும், பொருளாதார வளமும், மக்களின் வாழ்வியலும் என்ற ரீதியில் எனக்கு ஓரளவு அறிமுகமாக அமைந்தது எனச் சொல்லலாம்.

ஐரோப்பாவிற்கு நான் வந்த ஆரம்ப காலகட்டத்தில், அதாவது 1999ம் ஆண்டு வாக்கில் ஜெர்மனியில் தமிழ் இலக்கிய சந்திப்புக்களின் போது எனக்கு அறிமுகமான, பாரிஸில் இருந்த சில நண்பர்களின் அறிமுகம் ஏற்பட்டது. அந்த வகையில் திரு.அரவிந்தன்,  மறைந்த திரு.புஷ்பராஜா, மறைந்த திரு.கலைச்செல்வன் ஆகியோரையும் ஏனைய சில நண்பர்களையும் சந்திக்க என் நான் சில முறை பாரிஸ் சென்று வந்துள்ளேன். இலக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்ளவும் ஒரு முறை தமிழ் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றவும் சென்று வந்திருக்கின்றேன். பாரிஸின் சரவணபவனில் இந்திய உணவை சுவைத்ததும் மறு நாள் வரை எனது குளிர் ஜாக்கெட் எல்லாம் இந்திய உணவின் வாசனை நிறைந்து இருந்ததும் கூட இன்னமும் மனதில் பசுமையாக இருக்கின்றது.


பாரிஸ் – லா செப்பல் வீதியில் (2010)

மற்றொரு முறை, 2002ம் ஆண்டு வாக்கில், எனது கார் விபத்துக்குள்ளாகிவிட ஜெர்மனியில் அதனை ஓப்பல் விற்பனையாளரிடம் கொடுத்து சரி செய்வதை விட பாரிஸில் பாதி குறைந்த விலையில் சீராக்கலாம் என நண்பர் புஷ்பராஜா சொல்ல 500கிமீ தூரம் பாரிஸுக்கு காரை ஓட்டிச் சென்று காரை சரி செய்து விட்டு தமிழ் நண்பர்களையும் சந்தித்து விட்டு வந்தேன். அப்படி செல்லும் போது அந்த நண்பர்களின் துணையுடன் எனக்கு பாரிஸ் கொஞ்சம் அறிமுகமானது. அப்போது பாரிஸில் தமிழர்கள் நிறைந்திருக்கும் வணிகப்பகுதியான லா செப்பல் பகுதியில் தமிழ்க்கடைகளையெல்லாம் பார்த்து வியந்து போயிருக்கின்றேன். தமிழ்க்கடைகளில் கிடைக்கும் கொத்து ரொட்டி, தோசை என சாப்பிட்டு மகிழ்ந்திருக்கின்றேன். அதன் பின்னர் பல முறை எனது தொழில் சார்ந்த பயணங்களாக பாரிஸுக்கும், க்ரனோபலுக்கும் செல்வது ஏற்பட்டது. அத்தகைய பயணங்களில் நான் பாரிஸில் சில அருங்காட்சியகங்களைக் காணும் வாய்ப்பு பெற்றேன்.பாரிஸ் க்ரனோபல் என்ற இரண்டு நகரங்களைப் பார்த்த எனக்கு ப்ரான்ஸை ஓரளவு அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட நானும் என் கணவருமாக 2009ம் ஆண்டில் 18 நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வாகனத்திலே பயணம் செய்தோம். இந்த பயணத்தின் போது ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டிலிருந்து புறப்பட்டு ஃப்ரைபுர்க் வந்து அங்கிருந்து பெசன்சோன் வந்து அங்கு இரண்டு நாட்கள் தங்கிச் சுற்றிப் பார்த்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு லியோன் வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் மார்செல் வந்து அங்கே செய்ண்ட் ராஃபெல்லில் தங்கியிருந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நைஸ் நகரம் வந்து  பின்னர் மோனாக்கோ சென்று பின்னர் மீண்டும் திரும்பி கான்ஸ் வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் ஆவியோனில் சில நாட்கள் என இருந்து திரும்பினோம். ஏறக்குறைய 2300கிமீ தூரம் வாகனப் பயணம் நானும் என கணவருமாக வாகனத்தை ஓட்டிக் கொண்டு இந்தப் பயணத்தை மேற்கொண்டோம். ப்ரான்ஸின் ஒரு சில நகரங்களை மட்டுமே இந்த பயணத்தின் போது பார்க்க முடிந்தது. ஒரு சில முக்கிய இடங்களுக்கு மட்டுமே சென்று அருங்காட்சியகங்கள் சென்று புதிய விஷயங்களை அறிந்து வர முடிந்தது.  மீண்டும் ஒரு முறை இதே போல ஆனால் இதுவரை செல்லாத ஏனைய நகரங்களையும் சென்று பார்த்து வர வேண்டும் என்ற என்ணமும் மனதில் ஓடிக் கொண்டுதானிருக்கின்றது. இந்த பயணத்தின் போது நான் அறிந்து கொண்ட புதிய விஷயங்கள் ஏராளம் ஏராளம். அவையெல்லாம் வாய்ப்பு கிட்டும் போது தகுந்த பதிவுகளின் வழி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் மனதில் இருக்கவே செய்கின்றது. ப்ரான்ஸின் ஒவ்வொரு நகரமும் தனிச்சிறப்புடனும் பிரமாண்டத்துடனும் தனித்துவத்துடன் விளங்குவது உண்மை.ஸ்பெயினில் உள்ள அருங்காட்சியகங்களின் என்ணிக்கையை விட ப்ரான்ஸில் மிக அதிகம் என்று நிச்சயம் கூறுவேன். பாரிஸ் நகரில் மட்டுமே உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல் ஒன்று இங்கே 150 அருங்காட்சியகங்கள் இருப்பதாக பட்டிபலிட்டிருக்கின்றது (http://en.wikipedia.org/wiki/List_of_museums_in_Paris ).  இவை ஒவ்வொன்றையும் சென்று காண என் வாழ்க்கை நிலை இடம் அளிக்காது என்றாலும் சில பாரிஸிலுள்ள குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்கள் சிலவற்றிற்குச் சென்று வந்திருக்கின்றேன். அவற்றில் சிலவற்றை இத்தொடரில் அறிமுகப்படுத்துவதும் வாசகர்களாகிய உங்களுக்கு சுவாரஸியமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் பாரிஸில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு அடுத்து உங்களை அழைத்துச் செல்லலாம் என நினைக்கின்றேன்.


எந்த அருங்காட்சியகம் செல்லப்போகின்றோம் என்பது அடுத்த வாரம் வரை சஸ்பென்ஸ் :-)​ - 

Monday, November 18, 2013

14. கடல்வழிப்பயண அருங்காட்சியகம் (2) , மட்ரிட், ஸ்பெயின்

முனைவர்.சுபாஷிணி 

மாப்பா முண்டியின் சிறப்புக்களை இத்தொடரின் சென்ற பதிவில் விளக்கினேன். இந்த அருங்காட்சியகத்தின் ஏனைய சிறப்புக்களையும் அறிவது அவசியம் என்பதால் உள்ளே சென்று ஏனைய காட்சிப் பொருட்களையும் காண்போமே.

அருங்காட்சியகத்தின் உள்ளே காட்சிப்பொருட்கள் 24 வெவ்வேறு அறைகளில், ஆண்டுகளின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. 15ம் நூற்றாண்டு தொடக்கமாக இந்தக் காட்சிப்பொருட்களின் கண்காட்சி தொடங்குவதாக அமைந்திருக்கின்றது. முதல் அறையிலேயே அமெரிக்கா வந்த ஐரோப்பிய மாலுமிகள், உள்ளூரில் வாழும் குடிகளைப் பார்க்கும் வகையில் அமைந்த ஒரு காட்சியின் சித்திரம் உள்ளது. இது 18ம் நூற்றாண்டு சித்திரம். அக்காலகட்டத்தில் கடற்போரில் பயன்படுத்தப்பட்ட கருவிகளும், வாட்களும் இதே பகுதியில் உள்ளன. அதனை அடுத்து வருகின்ற அறைகளில் இதே போல ஸ்பெயின் அரசின் முயற்சியில் 15ம் நூற்றாண்டு தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட பற்பல போர்கள் பற்றிய விளக்கங்கள் போர்கருவிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் தொகுப்புகள் இடம்பெறுகின்றன.ஸ்பெயின் கடந்த 600 ஆண்டுகளில் தொடர்ந்து மேற்கொண்ட பல்வேறு கடற்போர்களில் தான் கைப்பற்றிய தீவுகள் பல. ஆப்பிரிக்காவிற்கு வடக்குப் பகுதியில் இருக்கும் கெனரி தீவுகளான லா பல்மா, க்ரான் கனாரியா, லான்ஸ்ரோட்டெ, லா கொமேரா, தெனெரிஃபா, மயோர்க்கா, மெனோர்க்கா, இபீஸா போன்றவற்றின் குறிப்புக்களை உள்ளடக்கிய தகவல்கள் தனித்தனியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. போரை விவரிக்கும் ஓவியங்கள் ஒவ்வொரு பகுதியிலும் அப்போரின் தன்மையை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. போர் என்றாலே உயிர்பலி, கொடூரமான தாக்குதல் என்பது ஒரு புறமிருக்க வெற்றி பெற்ற படைகள் தங்கள் கொடிகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பெருமையுடன் நிற்பதும் படைத்தலைவர் தன் வீரம் பொருந்திய முகத்துடன் கம்பீரமாக காட்சியளிப்பதும் போன்ற காட்சிகள் இந்த சித்திரங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அதே வேளை கடல் பயணம் எளிதானதல்ல என்பதை விளக்கும் சித்திரங்களும், கடலில் கப்பல்கள் தத்தளிக்கும் காட்சிகளும் கூட சித்திரங்களாக வைக்கப்பட்டுள்ளன.


அருங்காட்சியகத்தின் ஒரு அறை (2013)

ஸ்பெயின் கைப்பற்றிய நாடுகளில் பிலிப்பைன்ஸும் அடங்கும். பெர்டினண்ட் மெக்கேலன் 1521ம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் Homonhon Islandக்குள் பிரவேசித்து அங்கு ஸ்பெயின் நாட்டின் கொடியை நட்டு வைத்து இப்பகுதி பிலிப்பன்ஸுக்குச் சொந்தமானது என முதன் முதலில் பிரகடனப்படுத்தினார். படிப்படியாக உள்ளூர் குழுக்களின் ஆதரவை பெற்று பின்னர் முழு பிலிப்பினோ தீவுகளையும் ஸ்பெயின் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட நாடாக மாற்றி வெற்றி கண்டார். போர் உருவாகி பின்னர் படிப்படியாக பல உயிர் சேதங்களைச் சந்தித்து பின்னர் முழு தீவுகளும் ஸ்பெயின் ஆளுமைக்கு உள்ளானது. 2 நூற்றாண்டுகளுக்கு மேல் ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்து பின்னர் இங்கிலாந்து அரசின் காலணித்துவ ஆட்சிக்கு மாறியது பிலிப்பைன்ஸ். இந்த காலத்தில் பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த ஸ்பேனிஷ் தாக்கத்தை இன்றும் நாம் காண்கின்றோம். அப்போது பரவிய கத்தோலிக்க மதம் இன்றளவும் பிலிப்பன்ஸின் 90% மக்கள் கத்தோலிக்க மதத்தை தழுவியோராக இருப்பதற்குக் காரணமாக உள்ளது. பலருக்குப் பெயர்கள் ஸ்பேனிஷ் மொழியிலேயே அமைந்திருக்கின்றன. உதாரணமாக, மைக்கல், ஹூவான், கார்லோஸ், ஹேஸூஸ், ராஃபாஏல், ஹோஸே என்பவை மிகப் பரவலாகக் காணப்படும் ஆண்களின் பெயர்கள். இவை ஸ்பேனிஷ் மொழி பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அருங்காட்சியகத்தின் மேலும் ஒரு மாபெரும் சிறப்பு என்னவென்றால் கடந்த 700 ஆண்டுகளில் கடலில் பயனித்த ஏறக்குறைய எல்லா ஸ்பேனிஷ் போர்த்துக்கீஸிய கப்பல்களின் மாடல்களும், ஐரோப்பாவின் வேறு சில நாடுகளுக்குச் சொந்தமான வரலாற்றில் இடம் பெறும் கப்பல்களின் மாடல்களும் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. ஒரு கப்பல் உருவாக்கப்படுவதற்கு முன்னர் பொதுவாக மாடல் கப்பலை உருவாக்குவது வழக்கமாம். இங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த மாடல்களில் பெரும்பாலானவை அக்கப்பல்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் மாடலாக தயாரிக்கப்பட்டவை. ஏறக்குறை 700லிருந்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கப்பல்களின் மாடல்கள் இங்கு நிறைந்திருப்பது அதிசயத்தைத் தருவதாகத் தான் அமைகின்றது.


ஒரு கப்பலின் மாடல் (2013)

கப்பல்களின் மாடல்கள் மட்டுமன்று நீர்மூழ்கிக் கப்பல்களின் மாடல்களும் இங்கே நிறைந்திருக்கின்றன. உதாரணமாக ஸ்பேனிஷ் விஞ்ஞானி Isaac Peral உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் மாடல் இந்த அருங்காட்சியகத்தில் தான் வீற்றிருக்கின்றது. 1884ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாடல் இது. இதுவே முதன் முதல் அதி நவீன கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே.


கடற்போர்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் (2013)

கடல் பயணங்க்ளின் போது பயன்படுத்தப்பட்ட போர் கருவிகள் அலமாரிகளில் ஆட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மிகப் பழமையான வேல் போன்ற கூர் ஆயுதங்கள் ஒரு பக்கம். துப்பாக்கி, கேனன், என நவீன போர்க்கருவிகள் ஒரு பக்கம் என போரில் பயன்படுத்தப்பட்ட பல நூறு ஆயுதங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பிடித்துள்ளன. மிகச் சுவாரசியமாக 500 ஆண்டுகளின் இடைவெளியில் மாலுமிகள் உடுத்திய ஆடைகளும் சேகரிக்கப்பட்டு இங்கு காட்சிக்கான அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி தனியாக ஒரு அறை, கப்பலுக்குள் வாசிப்பு அறை எப்படி இருக்குமோ அதையே பிரதிபலிப்பதுபோல உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள், சான்றிதழ்கள், கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கருவிகள், ஆவணங்கள் என அருங்காட்சியகம் முழுதும் நூற்றுக்கணக்கான விலைமதிப்பு கூற முடியாத பல பொருட்களைத் தாங்கி இந்த அருங்காட்சியகம் இருக்கின்றது.


கடற்பயணத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் (2013)

இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த உடன் நமக்கு ஏற்படும் வியப்பு ஏனைய அடுத்தடுத்த அறைகளுக்குச் செல்லும் போதும் குறைவதில்லை. ஸ்பெயின் வருபவர்கள், அதிலும் குறிப்பாக மட்ரிட் நகருக்கு வருபவர்கள் கட்டாயம் வந்து பார்த்துச் செல்ல வேண்டிய முக்கிய அருங்காட்சியகம் இது என்பதில் சந்தேகமில்லை.

கடல்வழிப் பயணங்கள் பற்றி இந்த அருங்காட்சியகத்தில் பார்த்தோம். அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மேலும் ஒரு அருங்காட்சியகம் செல்வோமா?

தொடரும்…!​

Tuesday, November 12, 2013

13. கடல்வழிப்பயண அருங்காட்சியகம், மட்ரிட், ஸ்பெயின்


முனைவர்.சுபாஷிணி 

கடல்பயணங்களின் வரலாற்றினை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்கின்ற நாடுகளில் எங்கேனும் அமைந்திருக்கக்கூடிய கடல்பயணத்திற்கென்றே பிரத்தியேகமாக உருவக்கப்பட்டுள்ள அருங்காட்சியகங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். விக்கி பக்கத்தின் இப்பகுதி http://en.wikipedia.org/wiki/Maritime_museum உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற கடல்வழிப்பயண, கப்பல் கட்டுமானம் தொடர்பான அருங்காட்சியகங்களின் பட்டியலை வழங்குகின்றது. இப்பக்கத்தின் பட்டியலில் இருப்பதை விடவும் மேலும் பல அருங்காட்சியகங்கள் நிச்சயம் இருக்கக்கூடும்.

எனது அனுபவத்தில் என் வெவ்வேறு பயணங்களின் போது இத்தகைய வகையிலான ஒரு சில அருங்காட்சியகங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன். பொதுவாக கடல்வழிப்பயணம், கப்பல்கள், அதன் தொழிற்நுட்பம், கடல் பயணங்களை விவரிக்கும் ஆவணங்கள், சித்திரங்கள், கருவிகள்  என்பனவற்றின் தொகுப்பாக இத்தகைய அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். நீர்மூழ்கிக் கப்பலை விளக்கும் ஒரு அருங்காட்சியகத்தை நெதர்லாந்தில் பார்த்த ஞாபகமும் ஒரு அரச கடற்படை கப்பலின் அருங்காட்சியகத்தை மலேசியாவின் பங்கோர் தீவில் பார்த்த ஞாபகமும் இப்போது மனதில் நிழலாடுகின்றன.  இந்த என் அனுபவங்களை விரிவாக்கும் தன்மையுடன் அமைந்தது ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் அமைந்திருக்கும் கடல்வழிப்பயண அருங்காட்சியகம் (Naval Museum)


அருங்காட்சியகத்தின் நுழைவாயில் (ஏப்ரல் 2013)

உலகின் மிக முக்கியமான கடல்வழிப்பயணங்களுக்கான அருங்கட்சியகங்களில் இடம்பிடிக்கும் ஒன்றாக இது திகழ்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சேகரங்கள் ஐபீரிய தீபகற்பத்தின் (ஸ்பெயின்) கடல் பயணங்கள், கடற்படையினர் பயன்படுத்திய கருவிகள், ஆகியவற்றை விளக்குவதாக அமைவதோடு உலக வரலாற்றில் ஸ்பெயின் நாட்டினரின் கடல்பயணங்களை விளக்கும் ஆவணங்களின்  தொகுப்பாகவும் விளங்குகின்றது என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.

இந்த அருங்காட்சியகம் மட்ரிட் நகரின் ஏனைய சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகங்களான, ப்ராடோ, ரைனெ சோஃபியா அருங்காட்சிகங்களின் அருகிலேயே அமைந்திருக்கின்றன. 1792ம் ஆண்டு முதன் முதல் இந்த அருங்காட்சியகம் மட்ரிட் நகரில் ஆரம்பிக்கப்பட்டாலும், 1843ம் ஆண்டில் தான் மட்ரிட் நகரில் இது ஒரு முழுமையான அருங்காட்சியகமாக உருபெற்றது. அதன் பின்னர் இந்த அருங்காட்சியகம் தற்போது அமைந்திருக்கும் இடத்திற்கு 1932ம் ஆண்டில் மாற்றம் செய்யப்பட்டது.  1977ம் ஆண்டு தொடக்கம் இந்த அருங்காட்சியகம் ஸ்பெயின் Ministry of Defense  கட்டிடத்தின் ஒரு பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.


போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (ஏப்ரல் 2013)


இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே செல்லும் முன் காவல் அதிகாரிகளின் சோதனைகளை முடித்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். நான் இங்கு சென்றிருந்த சமயத்தில் இப்படி ஒரு அதிகாரி என் பைகளை சோதிக்க நான் அவரிடம் நான் ஒரு சாதாரண சுற்றுப்பயணி மட்டுமே. ஒரு தீவிரவாதியல்ல என்று கூற அவரும் உடன் இருந்தவர்களும் சிரித்து விட்டனர். இத்தகைய சோதனைக்குப் பிறகு படிகளில் ஏறி முதல் மாடிக்குச் செல்லவேண்டும். இங்குதான் நுழைவாயில் பகுதி உள்ளது. இங்குள்ள அலுவலகப் பகுதியில் கட்டணம் செலுத்தி டிக்கட்டை பெற்றுக் கொண்டு அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையலாம்.

இந்த அருங்காட்சியகத்தின் மிகச் சிறப்பு வாய்ந்ததொரு சேகரிப்பாகக் கருதப்படுவது Mappa Mundi எனப்படும் ஒரு வரைபடம்.  1500 ஆண்டு வரையப்பட்டதாகக் கருதப்படும் இதனை வரைந்தவர் ஹுவான் டி லா கோஸா (Juan de la Cosa). இந்த வரைப்படம் கொலம்பஸ் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தை   படிப்படியாக விளக்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்காவின் முதல் வரைபடம் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.


1500 வரையப்பட்ட மேப்பா முண்டி (அசல்) - அருங்காட்சியகத்தின் உள்ளே (ஏப்ரல் 2013)

1450லிருந்து  1460க்குள் பிறந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படும் ஹுவான் ஒரு வரைபட நிபுண்ர். இவர் அமெரிக்காவிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்பயணங்கள் சிலவற்றை மேற்கொண்டிருக்கின்றார். அதில் கொலம்பஸ்ஸுடன் மூன்று முறை அமெரிக்க பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அத்தகைய பயணங்களின் போது இவரது பணி அமெரிக்க வரைபடத்தை முழுமையாக உருவாக்குவது என்பதாகவே அமைந்தது. பின்னர் கொமாண்டராக பதவி உயர்வு பெற்று அப்படி ஒருமுறை கப்பலில் அமெரிக்காவில் புதிய குடியேற்றத்திற்காக ஸ்பேனிஷ் மக்களை ஏற்றிக் கொண்டு சென்றிருந்தர்.  அப்பணியில் இருக்கும் வேளையில் அமெரிக்க இந்தியர்களால் தாக்கப்பட்டு அமெரிக்காவிலேயே இறந்தார்.


மேப்பா முண்டியின் ரெப்ளிக்கா - வாசல் பகுதி சுவற்றில் இருப்பது.  (ஏப்ரல் 2013)

இவர் தயாரித்த அமெரிக்க வரைபடமான மாப்பா முண்டி ஒரு ஜெர்மானிய அறிஞரான அலெக்ஸாண்டர் ஹும்போல்ட் அவர்களுக்கு தற்செயலாக ஒரு பெர்ஷிய கடையில் 1832ம் ஆண்டு காணக் கிடைத்தது. இதனை Baron Walckenaer  வைத்திருந்தார். அது சமயம் அவர் தொகுத்துக் கொண்டிருந்த அட்லஸ் தொகுப்பில் இது இடம்பெறுவது அவசியம் எனக் கருதி இதனையும் இணைத்துக் கொண்டார் திரு.ஹும்போல்ட்.  முழு உருவாக்கம் பெற்ற Atlas Géographique et Physique இந்த மாப்பா முண்டியையும் இணைத்துக் கொண்டு வெளிவந்தது. இது உலகின் ஆய்வாளர்கள் மத்தியில் திடீர் கவன ஈர்ப்பை பெற்றது.  Baron Walckenaer  இறந்த சமயத்தில் ஸ்பெயின் அரசியார் இந்த வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த வரைபடத்தை வால்க்கனீயர் குடும்பத்தினரிடமிருந்து விலை கொடுத்து வாங்கினார். அது தொடக்கம் இந்த வரைபடம் அருங்காட்சியகத்தின் சேகரத்தில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. தனி மனித சொத்தாக இருப்பதை விட இப்படி அருங்காட்சியகத்தில் இடம்பெறும் போது இங்கு வருகை தருவோர் அனைவரும் இந்த வரைபடத்தைக் காணும் வாய்ப்பு அமைகின்றது.


சற்றே பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட மேலும் ஒரு வரைபடம் - கடல் வழி பயணங்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் முதல் வரைபடம்.. கி.பி.1500 ஆண்டு ஆவணம்.. இது மட்டும் இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பன்று. ஏனைய காட்சிப்பொருட்களையும் காணச் செல்வோமா?