Monday, January 27, 2014

23. பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம் (3),தாய்லாந்து

அருங்காட்சியகத்தின் கீழ்தளத்தில் படங்களுடன் கூடிய விவரணைகள் நிறைந்துள்ளன. அத்தோடு அக்கால சூழலை விளக்கும் சில மாடல்கள் (models) இப்பகுதியில் இடம்பெறுகின்றன. இந்த மாடல்களைப் போர்க்கைதிகள் நினைவாக ஆஸ்திரேலியா, ஹாலந்து, இங்கிலாந்திலிருந்து தனியாரும் அரசாங்கமும் வழங்கியிருக்கின்றன. குறிப்பாக இந்த ரயில் பாதை அமைத்த வேளையில் அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் எத்தகைய முறையில் நோயாளிகளுக்கு மருத்துவம் வழங்கப்பட்டது? பணியாளர்கள் தங்கும் வீடுகள், பணியாளர்கள்  ஜப்பானியப் படைகளால் தண்டிக்கப்படும் காட்சி என்பன இதில் இடம்பெறுகின்றன. அதை பார்த்து முடித்து கீழ்தளத்திலிருந்து படிகள் ஏறி முதல் மாடிக்குச் சென்றால் அங்கு தொடர்ச்சியாக பல அரும்பொருட்களை நாம் காணலாம்.

இப்பகுதியில் ஜப்பானியப் படைகள் பயன்படுத்திய ரகஸிய தொலைத் தொடர்பு கருவிகள், ஆங்கிலேய, டச்சு போர்கைதிகள் பயன்படுத்திய தொலைத்தொடர்பு கருவிகள், தட்டச்சுக் கருவி, பணியாளர்கள் அடையாள அட்டை, ஜப்பானியப் படையினர் உடைகள் போன்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு ரகசியமாகக் கையாளப்பட்ட சில ஆவனங்களும் இங்குள்ளன. அதுமட்டுமல்ல.. இந்த மரண ரயில் பாதை அமைப்பைப் பற்றி விளக்கும் இரண்டு நூல்களையும் இங்கு கண்டேன். இந்த அருங்காட்சியகத்தில் புகைப்படமும் வீடியோ பதிவும் செய்வதை தடைசெய்திருப்பதால் இவையனைத்தையும் புகைப்படங்களாகப் பதிய முடியாததில் எனக்கு சற்று வருத்தமே. 


Inline image 2
செக்‌ஷன் 277

போர்க்கைதிகளும் மலாயாவின் கூலிகளும் கட்டி முடித்த இந்த முழு ரயில் பாதையில் பாலம் செக்‌ஷன் 277 மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது க்வாய் நதியைக் கடக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாலம். 1943ம் ஆண்டில் இதன் முழு பணியும் முடிக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கப் படைகள் இந்த பாலத்தை குண்டுகள் போட்டு தகர்த்து. இது ஜப்பானியப் படைகளைப் பலமிழக்கச் செய்தது என்பது மிக முக்கியமான ஒன்று. அதுமட்டுமல்லாமல் ஒரு கால கட்டத்தில் இப்பாலத்தின் தொடர்ச்சியான தண்டவாளப் பகுதியில் 3.9 கிமீ அளவு பகுதியை ஆங்கிலேய படைகள் நீக்கின. ஆனால் பின்னர் மீண்டும் இவை கட்டிமுடிக்கப்பட்டன. ஆயினும் பர்மாவை இணைக்கும் பகுதிகள் மீண்டும் சீரமைக்கப்படாமலேயே இருந்தன என்பதால் இன்று வரை இப்பாலம் பர்மா-சியாமை முழுமையாக இணைக்காத நிலையிலேயே இருக்கின்றது. 

இந்த பர்மா-சியாம் மரண ரயில்பாதை பற்றி ஒரு திரைப்படம் வெளிவந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? 

Inline image 1

ப்ரென்ச் நாவலாசிரியர் Pierre Boulle அவர்களின் 1952ம் ஆண்டு நாவலான Le Pont de la Rivière Kwai நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அது.  இந்த நாவல் ஆங்கிலத்தில் The Bridge over the River Kwai என்ற பெயரில் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்தத் திரைப்பட்டம் இங்கிலாந்து-அமெரிக்க கூட்டு படைப்பாக உருவாக்கப்பட்டது. பர்மா-சியாம் மரண ரயில் பாதை என்றாலும் இந்த முழுப்படமும் தாய்லாந்து பர்மாவில் இல்லாமல் இலங்கையில் படமாக்கப்பட்டதாம். மரண ரயில்பாதையாக இப்படத்தில் காட்டப்பட்ட பகுதி இலங்கையில் `கிட்டுல்கால` என்ற  பகுதியில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தைத் தாய்லாந்து காஞ்சனாபுரியில் என்றில்லாமல் இலங்கையில் படமாக்கியதற்கு  என்ன காரணம்  எனப் புரியவில்லை. 

இந்தத் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் ஒருவகையில் இது மிகப் பெரிய கவன ஈர்ப்பை செய்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. 7 அக்காடெமி அவார்டுகளைத் தட்டிச் சென்றிருக்கின்றது இந்தத் திரைப்படம். அதில் அவ்வாண்டின் சிறந்த படத்திற்கான பரிசும் அடங்கும்.  ஆனால் முழு மரணப்பாதை கொடுமைகளையும் பிரச்சனைகளையும் சரியாக வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனமும் இந்தப் படத்திற்கு இருக்கின்றது. 

காஞ்சனாபுரிக்கு நான் சென்றிருந்த போது அருங்காட்சியகத்தைப் பார்த்ததோடு அதன் எதிர்புறம் இருக்கும் போர்க்கைதிகள் நினைவு மண்டபத்திற்கும் சென்று அங்கிருக்கும் நினைவுக்கற்களைப் பார்வையிட்டேன். நாடு வாரியாக இவர்களது பெயர்கள் வரிசைக் கிரமமாக புல் தரையில் இங்கு செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நினைவுக் கற்கள் மீதும் போர்க் கைதியாக இருந்து மரணப்பாதை அமைப்பில் பணியாற்றி மரணித்தவர்களின் பெயர், அவர்களது நாடு, சில பொன்மொழிகள் ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன.

Inline image 3
அருங்காட்சியகத்தின் வாசலில் (டிசம்பர் 2013)

எங்கள் பயண வழிகாட்டி இந்த அருங்காட்சியகத்தை நாங்கள் பார்த்த பிறகு இம்மரணப்பாதையில் ஓடும் ரயிலில் பயணம் செய்யும் வகையில் எங்களுக்கு டிக்கட்களையும் ஏற்பாடு செய்திருந்தார். காஞ்சனாபுரியிலிருந்து ரயில் எடுத்து 1 மணி நேரப் பயணத்தை இந்த மரணப் பாதையில் மேற்கொண்டோம். மறக்க முடியாத ஒரு அனுபவம் அது என்று தயங்காமல் கூறுவேன். அதுமட்டுமல்லாமல் மறு நாள் காலையில் இந்த ரயில் பாதையின் ஒரு பகுதில் 30 நிமிடங்கள் நடந்து வர எங்கள் பயண வழிகாட்டி ஏற்பாடு செய்திருந்தார். அருங்காட்சியகத்தைப் பார்த்து பின்னர் இந்த ரயில் பயணம் செய்து, ரயில் தண்டவாளத்திலும் நடந்து வந்தது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே அமைந்தது. 

காலங்கள் கடந்து விட்ட நிலையிலும் 2ம் உலகப்போர் விட்டுச் சென்றிருக்கும் தடையங்கள் இன்று வரலாற்றினை நாம் புரிந்து கொள்ள உதவுகின்றன. என் அருங்காட்சியகத் தேடல்களில் விதம் விதமான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண்கின்றேன். அதில் இது ஒரு வகை. 

தாய்லாந்திலிருந்து புறப்பட்டு அடுத்து நாம் வேறொரு அருங்காட்சியகத்திற்குச்  செல்வோம். அடுத்து நாம் செல்லவிருப்பது வித்தியாசமான ஓர் அருங்காட்சியகம். சற்றே ஆச்சரியத்தைக்கொடுக்கக் கூடிய ஒன்று தான். எங்கு செல்லப் போகின்றோம் என ஊகிக்க முடிகிறதா..?

Monday, January 20, 2014

22. பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம் (2),தாய்லாந்து

 பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம் (2),தாய்லாந்து

முனைவர்.சுபாஷிணி 

போர்க் கைதிகளை வைத்து இந்த மரணப் பாதையை அமைக்க ஜப்பானியப் படையினர் திட்டம் தீட்டினர்  என்பதையும் அவர்களோடு மலாயா இந்தோனீசியாவிலிருந்து ஏராளாமானோர் கூலிகளாக இந்தப் பணியில் வேலைக்கு கொண்டு வரப்பட்டார்கள் என்ற விபரத்தையும் இக்கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இந்த இரண்டு வகை பணியாட்கள் குழுக்களிலும் வித்தியாம் இருப்பதை கட்டாயம் காணாமல் இருக்க முடியாது.

போர்கைதிகளாக இப்பணியில் ஈடுபடுத்த அழைத்துக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆஸ்திரேலிய, ஆங்கிலேய டச்சு படைகளில் போர் வீரர்களாப் பணியாற்றியவர்கள். போர் விபரங்களும் தந்திரங்களும், காட்டிற்குள் வாழும் பயிற்சியும் நீண்ட கால அவஸ்தைகளையும் துன்புறுத்தல்களையும் உடல் ரீதியாகத் தாங்கும் மன பலத்தையும் கொண்டவர்கள் இவர்கள். பலர் உயர்ந்த கல்வியறிவும் கொண்டவர்கள். இராணுவத்தில் இயந்திரங்களை இயக்கவும், மருத்துவர்களாகவும், போர்க் கருவிகளைப் பயன்படுத்தவும், கடுமையான சூழலில் வாழ்வதற்குத் தீவிர பயிற்சியும் தங்கள் பணியின் ஒரு அங்கமாகக் கற்றவர்கள்.காஞ்சனாபுரியிலிருந்து செல்லும் மலைப்பாதை. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட பாதையில் ரயில் செல்கின்றது. (டிசம் 2013)

ஆனால் கூலிகளாக இப்பணிக்கு அமர்த்தப்பட்ட மலாயாவின் இந்திய சீன, மலாய் மக்களும் இந்தோனீசிய மக்களும் மிக எளிய மக்கள். மிகச் சாதாரண மனிதர்கள். போதிய கல்வியறிவு பெறாத இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் கப்பலில் கூலிகளாக வேலை செய்ய வந்த தமிழர்களும், சீனாவிலிருந்து வணிகம் செய்ய வந்த சீனர்களும், விவசாயிகளாக தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த மலாய் மக்களுமாவர். இத்தகையோரே பெரும்பான்மையினராக  இந்த மரணப்பாதையில் பணியாற்ற கொண்டுவரப்பட்டனர். இவர்களுக்கு ஆங்கிலமும், ஜப்பானிய மொழியும் தெரியாது. கல்வி அறிவு என்பதும் மிகக் குறைவு. ஏழைகளான இவர்களில் பெரும்பாலோர் மெலிந்த உடம்பினர்.

முதலில் ஜப்பானியப் படைகள் இப்போர் கைதிகளையும் ஆசிய கூலிகளையும் இப்பணியில் ஈடுபடுத்த அறிவித்து இவர்களைக் கொண்டுவந்தபோது இவர்கள் எல்லோருக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று சொல்லி அவர்களை நம்ப வைத்து அழைத்து வந்தனர். தரமான இருப்பிடம், நல்ல உணவு ஆகியவையும் ஆரோக்கியமான வேலை சூழலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை தந்திருந்தனர். ஆனால் மிக விரைவிலேயே ஜப்பானியப் படைகளின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்து விட்டது.டச்சு போர்க் கைதிகள் – பல நாட்கள் போதிய உணவு இல்லாமையினாலும் கடுமையான உழைப்பினாலும் மெலிந்து காணப்படுகின்றனர்

இப்போது நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின் படி இந்த மரணப்பாதை அமைப்பிற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த 180,000 ஆசிய கூலிகளில் 90,000 பேர் 1942லிருந்து 1943க்குள் இறந்து போயினர். இந்த கொடூர நிகழ்விற்கு முழுக்காரணமும் ஜப்பானியப் படைகளின் கொடுமையான பணியிட நடைமுறைகள் தாம்.

சுகாதாரமற்ற குடிசைகளில்  நூற்றுக்கணக்கானோரை திணித்து தங்க வைத்து அவர்களது உடல் நிலை மோசமான நிலையிலும் பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டனர் என்பதை அருங்காட்சியகத்தின் குறிப்புக்குக்களிலிருந்து காணமுடிகின்றது. சுகாதார கேடு விரைவாகப் பரவிய நிலையில் ஒரு காலகட்டத்தில் மலேரியா நோய் பரவ,  கூட்டம் கூட்டமாக இவர்கள் இறந்து போயிருக்கின்றனர் இந்த 2 வருட காலத்தில் (1942-1943).

வேலை.. வேலை வேலை.. இதுவே முக்கிய நோக்கம். மழை வெயில் என்ற பாரபட்ஷம் இல்லாமல் நேரம் காலம் வரையறை இல்லாமல் உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே. பலர் காலரா வந்தும், கடுமையாகத் தண்டிக்கப்பட்டும் இறந்து போன போது அவர்களை முறையாகப் புதைக்காமல் காடுகளில் தூக்கிப் போட்டு விட்டு செல்வார்களாம். அந்தப் பிணத்தின் நாற்றம் அழுகிப் போன சடலத்தைச் சுற்றி மொய்க்கும் ஈக்களும் உயிருடன் வாழும் ஏனைய கூலிகளின் கூடாரத்தையும் வந்து பார்த்து நோய்களைப் பரப்பிச் சென்றதன் விளைவாக வரிசை வரிசயாக இம்மக்கள் இறந்து போயினர். இவர்களது சடலங்களை மரணப்பாதை வழியில் சில இடங்களில் கூட்டமாகக் கொட்டி புதைத்து வைத்து தங்கள் பணியைத் தொடர்ந்தது ஜப்பானியப் படை.நினைவு மண்டபத்தில் உள்ள தனித்தனி நினைவுக் கற்கள் (டிசம் 2013)

இறந்து போன 12,399 ஆங்கிலேய, ஆஸ்திரேலிய, அமெரிக்க, டச்சு போர் கைதிகளுக்காவது இப்போது அவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் நினைத்துப் பார்க்க என்று காஞ்சனாபுரியில் மிகப்பெரிய நினைவு மண்டபமே உள்ளது. இங்கு இறந்த இவர்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுக் கல் அமைத்து வைத்திருக்கின்றனர். அந்த நிலை கூட ஆசிய கூலிகளுக்கு இல்லை.

அதிகாலை, மதியம், மாலை இரவு என ஓய்வு என்பதே இல்லாமல் ரயில் பாதை அமைக்கும் பணியில் போர் கைதிகளும் கூலிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்குப் போதிய உணவு கிடைப்பதில் சிரமமே ஏற்பட்டிருக்கின்றது. பல வேளைகளில் கொஞ்சம் அரிசி சாதம் மட்டுமே என்ற நிலையிலேயே இவர்கள் நாட்களை கடக்க வேண்டிய சூழல். இது  2 ஆண்டுகாலம் தொடர்ந்திருக்கின்றது. நோயால் வாடியவர்களுக்கு மருத்துவ உதவிகளோ அதனை வழங்க எந்த வசதிகளுமோ கூட ஏற்பாடு செய்யப்படவில்லை.போர் கைதிகளாக வந்த பணியாளர்கள், போர் கைதிகள் விதிப்படி தங்கள் குடும்பத்தாருக்கு தங்கள் நலனை விவரித்துக் கூறி கடிதம் அனுப்பி வைக்க சட்டப்படி அனுமதி உள்ளது.  அப்படி கடிதம் அனுப்ப செய்த முயற்சிகளில் அஞ்சல் அட்டைகளை ஜப்பானியப் படைகளே இவர்களை உண்மை நிலமையைக் கூற விடாத படி செய்து பொய் விபரங்களை உட்புகுத்தி இவர்கள் இங்கு நலமாக இருப்பது போல  எழுத வைத்து அனுப்பி வைப்பார்களாம். இப்படி அஞ்சல் செய்யப்பட்ட அஞ்சல்அட்டைகளில் சில இப்போர் கைதிகளின் குடும்பத்தாரிடமிருந்து பெறப்பட்டு இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. நல்ல உடல் நிலையில் இருப்பதாக வந்த அஞ்சல் அட்டையை பெற்றவர்கள் கூட அதே நபர் இறந்து போனசெய்தியறியாது இருந்திருக்கின்றனர் 2ம் உலகப் போர் முடியும் வரை. எவ்வளவு கொடுமையான நிலை ? நினைக்கும் போதே திகைப்பாகத்தான் இருக்கின்றது.

மலாயாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பணியாளர்கள் உண்மையாகவே தாம் எங்கே செல்கின்றோம் என்ற விபரங்கள் கூட மறைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு தாய்லாந்திற்குக் கொண்டுவரப்பட்டவர்களே. மலேசியாவின் கெடா மானிலத்திலுள்ள அலோர் ஸ்டார் காடுகளில் பணிபுரிய அழைத்துச் செல்வதாகச் சொல்லி ஏமாற்றி ஜப்பானியப் படை ஏஜெண்டுகள் இவர்களைத் தாய்லாந்தின் காஞ்சனாபுரிக்கு அழைத்து வந்தது. இப்புதிய வேலையில்  நல்ல தங்கும் வசதி, நல்ல உணவு உயர்ந்த  வருமானம் எல்லாம் கிடைக்கும் என்று ஏமாற்றியே இவர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் உண்மை அதுவல்லவே!

தொடரும்…

Monday, January 6, 2014

21. பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம்,தாய்லாந்துமுனைவர்.சுபாஷிணி 

இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள் இன்றளவும் மறையவில்லை.  ஊடகங்கள் வழியாக அவ்வப்போது போர் சம்பந்தப்பட்ட ஏதாகினும் தகவல்கள் அவ்வப்போது நமக்கு கிடைத்துக் கொண்டு தானிருக்கின்றன. இந்த இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் ஏற்படுத்திய அழிவுகள் பற்றி நினைத்துப் பார்த்தால் இன்றும் நம் மனம் அதிர்ச்சிக்குள்ளாவதைத் தவிர்க்க இயலாது.  ஜப்பானியப் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் அவர்கள் அங்கு வாழ்ந்த மக்களையும், எதிரிப்படைகளிலிருந்து பிடித்து வந்த போர் கைதிகளையும் இப்படையினர் நடத்திய விதமானது  போர் குற்றவியல் வரலாற்றிலேயே மிகக் கொடூரமானவை என்பதில் மறுப்பில்லை.

எனது அன்மைய தாய்லாந்து பயணத்தில் நான் ஒரு சில அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு பெற்றேன். அதில் என்னை திடுக்கிட வைத்த தகவல்களை வழங்கிய ஒரு அருங்காட்சியகம் என்றால் அது பர்மா ரயில்வே அல்லது சியாம்-பர்மா ரயில்வே அல்லது பர்மா-சியாம் மரணப் பாதை (Death Railway) என அழைக்கப்படும் ரயில் பாதை வரலாற்றை விளக்கும் ஜீத் போர் அருங்காட்சியகம் (JEATH War Museum) தான்.  இந்த அருங்காட்சியகம் 1977ம் ஆண்டு தாய்லாந்தின் மேற்குப் பகுதி மாநிலமான காஞ்சனாபுரி நகரில் வாட் சாய்சும்போல் புத்த விகாரைக்கு அருகே அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டது.

அருங்காட்சியகத்தின் முன்பகுதியில் பரந்த புல்வெளியில் போர்கைதிகளாக இருந்து இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் மாண்டு போன மனிதர்களுக்கான மயானமும் நினைவு மண்டபமும் அமைந்திருக்கின்றன. அருங்காட்சியகமோ அதன் எதிர் புறமாக அமைந்துள்ளது.  அருங்காட்சியகத்தின் உள்ளே புகைப்படங்களோ வீடியோ பதிவுகளோ செய்ய அனுமதி இல்லை.  நுழைவாயிலில் கட்டணத்தைக் கட்டி உள்ளே செல்லும் முன் அமைந்துள்ள விற்பனைப் பொருட்கள் கடையில் இந்த அருங்காட்சியகம் பற்றியும் மேலும் க்வாய் பாலம், ரயில் பாதை தொடர்பான நூற்களையும் பெற்றுக் கொள்ளலாம்.  இந்த நூல்கள் தாய் மொழி தவிர்த்து ஆங்கிலம், ஜெர்மன், ப்ரென்ச், ஜப்பானிய மொழிகளில் கிடைக்கின்றன.

இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இந்த அருங்காட்சியகம். கீழ்த்தளத்தில் உள்ளே நுழையும் போதே ஜப்பானியப் படைகள் சியாம் நாட்டில் (தாய்லாந்து)  அரசருடன் உடன்படிக்கை செய்து கொண்டு,  இந்த பர்மா-சியாம் ரயில் பாதையை அமைத்த விவரங்களை வரிசைக் கிரமமாக வழங்கியிருக்கின்றனர். விளக்கங்களுக்கு விரிவான  புரிதலைக் கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளின் வழியாக சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொரு விளக்கக் குறிப்புகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன.  இவை விளக்கங்கள் தரும் தகவல்களுக்கு வலு சேர்ப்பனவாக அமைந்திருக்கின்றன என்றே கூறுவேன்.

இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்துவிட்ட காலம் அது.  ஜப்பானிலிருந்து சிங்கப்பூர் வந்து பின்னர் சிங்கப்பூரிலிருந்து தங்கள் படைகளையும் பொருட்களையும் பர்மா தலைநகர் ரங்கூனுக்கு கொண்டு செல்வது ஜப்பானியப் படைகளுக்குச் சாதாரண காரியமாக அமையவில்லை.  ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்த பர்மாவை ஜப்பானியப் படைகள் 1942ல் கைப்பற்றின. படிப்படியாக முழுமையாக பர்மாவை ஆக்கிரமித்து இந்தியா செல்லவும் இப்படைகள் திட்டமிட்டன. ஆங்கிலேய-டச்சு படைகள், இந்த ஜப்பானியப் படைகள் மலாக்கா நீரிணை வழியாகக் கடல் பயணம் மேற்கொண்டு பர்மா செல்வதை மிகத் தீவிரமாக தடுத்து வந்தன.  இதற்காக ஆங்கிலேய-டச்சு படைகள் நீர்மூழ்கிக் கப்பலை இப்பகுதியில் இயக்கியும் வான்படைகளைக் கொண்டும், ஜப்பானியப் படைகள் இவ்வழியாக முன்னேறுவதைத் தடுத்துக் கொண்டு தீவிரமாகக் கண்காணித்து வந்தன. இந்தத் தடைகளைக் கடந்து பர்மா செல்ல மாற்று வழி ஒன்று ஜப்பானியப் படைகளுக்கு மிக அவசியமாகப் பட்டது.  சியாமிலிருந்து ரங்கூனுக்குச் செல்ல அப்போது ஒரே ஒரு சாலை மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. அது ராஹேங் (Raheng) நகரிலிருந்து கவ்காரேய்க் வழியாகச் சென்று மாவ்ல்மெய்ன்(Maulmein)  சென்றடையும் வழி.   இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே ஒரு சாலைப் பாதையை சியாமின் பாங்காக் நகரிலிருந்து மாவ்ல்மெய்ன் வரை அமைக்க சியாமும் பர்மாவும் திட்டமிட்டன. ஆனால் அது செயல்முறைப் படுத்தப்படவில்லை.  ஆக, இருந்த ஒரே சாலைப் பாதை ராஹேங்கிலிருந்து செல்லும் பாதைதான்.  அதுவும் தரமான ஒரு பாதையாக அமைந்திருக்கவில்லை.

இந்தச் சூழலில் கட்டாயமாக ஒரு மாற்று வழி பர்மாவிற்குச் செல்ல தேவைப்பட ஜப்பானியப் படைகளின் தளபதிகள் திடமிடுதலில் ஈடுபட்டனர்.  ஜப்பானியப் படைகள் ரயில் பாதை அமைக்க திட்டமிடுவதற்கு முன்னரே பர்மாவில் ஆட்சி செலுத்தி வந்த ஆங்கிலேய அரசு இப்பகுதில்  சியாமிலிருந்து ரங்கூனை இணைக்கும் ஒரு ரயில் பாதையை உருவாக்கும் திட்டத்தை வைத்திருந்தனர். முழு திட்டமும் உருவாகியது. ஆனால் அது திட்டத்துடனேயே நின்று விட்டது. இதற்குக் காரணமாக அமைந்தவை இரண்டு விஷயங்கள். முதலாவதாக, காஞ்சனாபுரியிலிருந்து ரங்கூன் செல்லும் பாதை என்பது அடர்ந்த காடுகள் அமைந்த நீண்ட மலைப்பகுதி. இதில் ரயில் பாதை தண்டவாளம், பாலம் என அமைப்பது என்பது சாத்தியமான ஒரு காரியம் அல்ல.  இரண்டாவது காரணம் இதற்குத் தேவைப்படும் வேலையாட்களைத் தேடுவது. ரயில் பாதை அமைப்பது, அதிலும் அடர்ந்த காட்டுப்பகுதியில் என்பது எளிமையான ஒன்றல்ல என்பதால் இப்பணிக்கு முன்வர பணியாளர்கள் தயங்கினர். அதோடு எத்தனை பேரை வைத்து இதனை சாதிப்பது? இவர்களுக்கான கூலியை எப்படி சமாளிப்பது என்பன இந்தத் திட்டம் திட்டமாக மட்டுமே இருந்து முடிந்ததற்கானக் காரணங்களாகிப் போகின.

ஆனால் ஜப்பானியப் படைகளோ இந்த காரணங்களைத் தடைகளாக எண்ணவில்லை.  இங்கிலாந்தில் ரயில் பாதை அமைக்கும் என்ஜீனியர் துறையில் கல்வி கற்ற ஜப்பானியர்களைப் பணித்திட்டத்தில் இணைத்துக் கொண்டு முழு தீவிரத்துடன் ஒரு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் ஜப்பானியப் படைகள் இயங்கின. திட்டம் உறுதியாகி முடிவாக,  1942ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானியப் படைத் தலைமையகம் தம் படைகளுக்கு பான் போங் (Ban Pong ) நகரிலிருந்து பர்மாவின் எல்லையில் உள்ள மூன்று பகோடாக்களைக் கடந்து தான்புஸாயாட் (Thanbyuzayat)  செல்லும் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை அறிவித்து உடன் துவங்க கட்டளையிட்டது. இப்பணிக்கு வேலைக்கு பணியாட்கள் என்பதோடு ஜப்பானியப் படைகளால் கைது செய்யப்பட்ட போர் கைதிகளைக் கொண்டு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.சியாமையும் பர்மாவையும் இணைக்கும் ரயில் பாதை

இந்த ரயில்பாதை அமைப்புப் பணியில் போர் கைதிகள் மட்டுமன்றி மலாயாவிலிருந்து 180,000 கூலிகளும் அழைத்து வரப்பட்டனர் என்று குறிப்புக்கள் காட்டுகின்றன. அப்படி மலாயாவிலிருந்து வந்தவர்களில் அதிகமானோர் தமிழர்களும், சீனர்களும் ஆவர்.  இவர்களுடன் மலாய்காரர்கள், இந்தோனிசியர்களும் அடக்கம்.  ஆங்கிலேய, ஆஸ்திரேலிய, டச்சு, அமெரிக்க  போர்க்கைதிகள் 60,000 பேரும் இவர்களுடன் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். (குறிப்பு: ஆஸ்திரேய அரசாங்கக் குறிப்புக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் காணப்படுகின்றது. அக்குறிப்புக்களின் படி 250,000 ஆசிய தொழிலாளர்களும் 61,000 போர் கைதிகளும் இப்பணியில் ஈடுபட்டனர் என உள்ளது)


 இங்கிலாந்து, ஆஸ்திரேலிய போர் கைதிகள் – உடல் இளைத்து மிகப் பரிதாபமானநிலையிலும் பணி செய்யும் நிலைக்கு உட்படுத்தப்பட்டனர்

இவர்களில் 90,000 கூலிகளும் 12,399 போர் கைதிகளும் இந்த ரயில்பாதைக் கட்டுமானப் பணியின் போது சரியான சுகாதாரம் இல்லாமை, போதிய உணவு இல்லாமை, அதிகப்படியான உடல் உழைப்பு, ஜப்பானியப் படைகளின் கடுமையானத் தண்டனைகள், திடீரென்று பரவிய மலேரியா நோய் போன்ற காரணங்களால் இறந்தனர்.மலாயாவிலிருந்து வந்த கூலிகள்

அந்த நினைவுகளை அருங்காட்சியகம் வழங்கும் குறிப்புகளின் வழி வாசிக்கும் போதே நம் மனம் அச்சத்தில் உறைந்து போகின்றது. நினைத்தாலே உடலை நடுங்க வைக்கும் பயங்கரமான ஒரு கால கட்டம் அது. அக்காலச் சூழலை மேலும் விவரிக்கிறேன்.. அடுத்த கட்டுரையில்.

தொடரும்..!

குறிப்பு: படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.​