Friday, December 29, 2017

103. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 102

http://www.vallamai.com/?p=82406

முனைவர் சுபாஷிணி
அப்ரோடைட் தெய்வத்தின் பெயரில் அப்ரோடையாஸிஸ் என்ற ஒரு நகரம் துருக்கியின் அனாத்தோலியா பகுதியில் உள்ளது. மிகப் பழமையானதொரு நகரம் என இது இப்பகுதியில் நிகழ்ந்த விரிவான அகழ்வாராய்ச்சிகளின் வழி கண்டறியப்பட்டது. கி.மு. 5800 வாக்கில் இங்கு ஒரு கோயில் இருந்திருக்கின்றது. அக்காலத்தில் இப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்த குடியானவ மக்கள் இங்கு இக்கோயிலுக்கு வந்து வழிபாடுகள் நடத்தியிருக்கின்றனர். அதிலும் மிக முக்கியமாகத் தாய் தெய்வம் இங்கே தலைமை தெய்வமாக வழிபடப்பட்டது என்றும் தாய்மை, மக்கள் பெருக்கம், பயிர்களின் விளைச்சல் ஆகியவற்றிற்காக இங்கே வழிபாடுகள் செய்யப்பட்டன. படிப்படியாக ஏறக்குறைய கி.மு. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தக் கோயில் கிரேக்க தெய்வமான அப்ரோடைட் தெய்வத்திற்கான ஆலயமாக படிப்படியாக உருமாற்றம் கண்டது.


அப்ரோடைட் (Aphrodite) கிரேக்கத்தின் காதல் தெய்வம். இத்தெய்வம் அழகுக்கும் காதலுக்கும் இலக்கணமானவள். இவளே அழகு . இந்தத் தெய்வத்தின் பெயரில் ஓர் ஊர். அப்படியென்றால் எத்தனை அழகு நிரம்பியதாக அந்த ஊர் இருக்க வேண்டும் என்று நம்மால் ஊகிக்க முடிகின்றதா?
unnamed (2)
பல ஆண்டுகளாக இப்பகுதியில் இருந்த அப்ரோடைட் தெய்வத்திற்கான இக்கோயில் கி.மு.74 வாக்கில் ரோமானியர்கள் துருக்கியின் இப்பகுதிக்கு வந்து தங்கள் ஆளுமையைச் செலுத்த ஆரம்பித்தப் பின்னர் மேலும் செழிப்புற்றது. அப்ரோடையாஸிஸ் நகரம் ஒரு கலாச்சார மையமாக படிப்படியாக விரிவாக்கம் கண்டது. அடுத்த சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பைசண்டைன் காலத்தில், இந்த அப்ரோடையாஸிஸ் நகரின் அப்ரோடைட் தெய்வம் வீழ்ச்சி கண்டது. அப்ரோடைட் கோயில் கிருத்துவ தேவாலயமாக மாற்றம் பெற்றது. அதற்கு அடுத்த காலகட்டத்தில் இதன் சிறப்பும் புகழும் மங்கிக் குறையத்தொடங்கின. துருக்கி முழுமையான இஸ்லாமிய மத நாடாக உருமாற்றம் கண்டது. இன்று அப்ரோடையாஸிஸ் ஒரு கிராமமாகவே அறியப்படுகின்றது. ஆயினும் இங்கு நிகழ்த்தப்பட்ட விரிவான அகழ்வாராய்ச்சியின் வழி அறியப்பட்ட பண்டைய நகரம் இன்று இப்பகுதியைத் துருக்கியின் முக்கியமானதொரு சுற்றுலா தளங்களில் ஒன்றாகப் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது.
நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியின் அண்டாலியா நகர் சென்றிருந்தபோது ஒரு நாள் பயணமாக அப்ரோடையாஸிஸ் நகருக்கும் அதன் அருகே உள்ள பமுக்காலே நீரூற்று பகுதிக்கும் சென்று வந்தேன். உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக இடம்பெறுவது பமுக்காலே. இதனைப் பார்த்து விட்டு அப்ரோடையாஸிஸ் நகர் வந்து அங்கு காணப்படும் சிதிலமடைந்த அப்ரோடைட் காதல் தெய்வத்தின் கோயிலைப் பார்த்து அங்கிருக்கும் அருங்காட்சியகம் வந்து இங்கு சேகரிக்கப்பட்டுள்ள அரும்பொருட்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது.
அப்ரோடைட் ஆலயம் இருக்கும் அப்பெரும் வளாகம் முழுமையும் அருங்காட்சியகம் பகுதியில் அடங்குகின்றது. இன்று நாம் காணும் அப்ரோடைட் கோயிலின் சிதிலமடைந்த பகுதிகள் அனைத்துமே கி.பி.1ஆம் நூற்றாண்டில் விரிவாக்கிக் கட்டப்பட்ட அப்ரோடைட் ஆலயத்தின் பகுதிகளாகும்.
unnamed (3)
அப்ரோடையாஸிஸ் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக 1979ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்ரோடையாஸிஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கிடைத்த அரும்பொருட்களே இங்கே ஆவணப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடங்கப்பட்டபோது பதியப்பட்ட ஆவணக்குறிப்பின் அடிப்படையில் ஏறக்குறைய 13,000 அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் இதன் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். இவற்றுள் கி.மு.5000 வாக்கில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களும் அடங்கும் என்பது இப்பகுதி மிகப்பழமையானதொரு மக்கள் குடியிருப்பாக இருந்தது என்பதற்குச் சான்றாகின்றது அல்லவா?
அனாத்தோலியாவில் உள்ள இப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் அகழ்வாராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சுற்றுப்பயணிகள் சிலர் இப்பகுதியை அடையாளங்கண்டு இதனைப்பற்றிய செய்திகளை இங்கிலாந்தில் வெளியிட்டனர். வில்லியம் ஷெரார்ட் என்பவர் அப்ரோடையாஸிஸ் ஆலயத்தின் சிதலமடைந்த பகுதிகளின் சுவர்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகளை 1705ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளியிட்டார். 1812ஆம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து சென்ற ஒரு குழு இப்பகுதியை ஓவியமாக வரைந்து வந்தது.

அதன் பின்னர் பிரெஞ்சுக்குழு ஒன்றும் இப்பகுதிக்குச் சென்று இங்குள்ள ஆவணங்களைப் பற்றிய ஆய்வுகளை நிகழ்த்தி அறிக்கைகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டது. இங்கு முதல் அகழாய்வுப் பணி 1904ஆம் ஆண்டு ஒரு பிரஞ்சுக்குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட குளியல் தொட்டிகள், கி.மு.27ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக அறியப்படும் நாடக மேடை (Theater) ஆகியவற்றை ஆலய வளாகத்தில் வெளிப்புறத்தில் இன்றும் காணலாம். முதல் அகழாய்வுப்பணிக்குப் பின்னர் மீண்டும் பல அகழ்வாய்வுப் பணிகள் இங்கேயும் இதன் அருகாமை நகர்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, இன்றைய தேதி வரை. ஒவ்வொரு ஆய்வும் பண்டைய நாகரிகங்களை அடையாளப்படுத்தும் சான்றுகளாகத் திகழும் பலப் பல அரும்பொருட்களை நமக்கு வெளிக்காட்டுவனவாக அமைகின்றன.
இந்த அருங்காட்சியகத்தின் முகவரி
Geyre Mahallesi, 09385 Karacasu/Aydın Province, Turkey


வார நாட்களில் திங்கட்கிழமை தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கின்றது. இப்பகுதிக்குச் சென்று கோயில் வளாகம், நாடகமேடை, அருங்காட்சியகம் என அனைத்தையும் பார்த்து விட்டு வரும்போது இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற உணர்வுகளுடன் தான் திரும்பி வருவோம். சில ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட இன்றும் என் மனதில் பசுமையாகக் காட்சியளிக்கின்றது அப்ரோட்டைட் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த அப்ரோடையாஸிஸ் கிராமம்.

Friday, December 22, 2017

102. வோல்வோ அருங்காட்சியகம், கோத்தபெர்க், சுவீடன்


http://www.vallamai.com/?p=82238

முனைவர் சுபாஷிணி
உலகின் உயரிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதோடு அவ்வுயரிய தொழில்நுட்பத்தைப் பொதுமக்களும் பயன்படுத்தும் ஒரு நாடு; உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் 6வது இடத்தைப் பிடிக்கும் நாடு; குறைந்த மக்கள் தொகை; தூய்மை; தரமான சுகாதாரம்; மக்கள் வாழ்வதற்கு விரும்பி ஏற்கும் ஒரு நாடு என்ற பெருமைகள் கொண்டது சுவீடன்.
ஸ்கேண்டினேவிய நாடுகள் குழுவில் ஒன்றாக இடம்பெறுகிறது சுவீடன். நார்வே டென்மார்க் பின்லாந்து ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட நாடு. ஐரோப்பிய நாடுகளில் ஆங்கில மொழி பயன்பாட்டை இரண்டாம் மொழி என்ற நிலையில் வைத்திருக்கும் நாடு என்பதும் இதன் சிறப்பு. இதற்கும் மேலாக வாகன உற்பத்தியில் தனித்துவத்துடன் இயங்கும் ஒரு நாடு என்ற பெருமையும் கொண்டது. வோல்வோ கார் என்றால் நம் நினைவுக்கு வருவது சுவீடன் தானே!. ஆம் இந்த வோல்வோ கார் பிறந்தது சுவீடனின் கோத்தபெர்க் நகரில் தான்.
2016ஆம் ஆண்டு எனது அலுவலக பணி நிமித்தமாக கோத்தபர்க் நகரில் நிகழ்ந்த ஒரு வார கால மாநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. வோல்வோ கார் நிறுவனத்தின் தாயகம் கோத்தபெர்க் நகரம் தான் என முன்னரே நான் அறிந்திருந்ததால் இந்த வாய்ப்பைத் தவற விடாமல் இங்கு அமைந்திருக்கும் வோல்வோ வாகன அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தேன். இங்குச் செல்வதற்கு எனக்கு மற்றுமொரு காரணமும் இருந்தது. அது என்னவெனில் நான் முதன் முதலில் கார் ஓட்டப்பழகிக் கொண்ட காலத்தில் நான் வாங்கிய இரண்டாவது கார் ஒரு பழைய வோல்வோ வாகனம். கடல் நீல வர்ணத்தில், ஏறக்குறைய 14 ஆண்டு பழமையான வாகனம் அது. ஏறக்குறைய நான்கைந்து ஆண்டுகள் இந்த வாகனம் என் பயன்பாட்டில் இருந்தது. தூரப் பயணங்கள் மேற்கொள்வதற்கு ஏற்ற வசதியானதொரு வாகனமாக அது இருந்தது. அந்த நினைவும் என் மனதில் பசுமையாக இருந்தது.
unnamed (2)
வோல்வோ அருங்காட்சியகம் உள்ள பகுதிக்குச் செல்வதற்குப் பேருந்து எடுத்துத் தான் சென்றிருந்தேன். அது கடற்கரையைச் சார்ந்த துறைமுகப் பகுதி. ஏறக்குறைய 3 மணி நேரங்கள் இருந்து இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகச் சுற்றிப்பார்த்தேன். வோல்வோ என்றால் நான் அன்றாட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் வாகனங்கள் மட்டுமே என்ற என் சிந்தனையை மாற்றியது இந்த அருங்காட்சியகத்திற்கான என் பயணம். ஏனெனில் வோல்வோ நிறுவனத்தாரின் கனரக தொழில்நுட்பம் என்பது பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் மட்டுமன்று, கனரக வண்டிகள், லாரிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள், விமானப்படை விமானங்கள், என பலதரப்பட்டவையாக இருப்பதை இந்த அருங்காட்சியகம் சென்றிருந்த போது அறிந்து கொள்ள முடிந்தது.
வோல்வோ பிறந்தது 1927ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி. ஏனெனில், அன்றுதான் வோல்வோ தொழிற்சாலையில் “ஜேக்கப்” முழுமையாக்கப்பட்டு இந்த கோத்தபெர்க் தொழிற்சாலையிலிருந்து வெளியிடப்பட்டது. வோல்வோ கார் உற்பத்தி பற்றிய எண்ணம் முதன் முதலில் Assar Gabrielsson மற்றும் Gustaf Larsson ஆகிய இருவருக்கும் எழுந்தது. இந்தக் கனவு நிஜமாகியது. 4 சிலிண்டர்கள் கொண்ட OV4, PV4 வகை வாகனங்களை இந்தத் தொழிற்சாலையில் வடிவமைத்து உருவாக்கினர். 1929ஆம் ஆண்டு 6 சிலிண்டர் கொண்ட இயந்திரத்துடன் PV651 வகை வாகனத்தை உற்பத்தி செய்தனர். இது வாகன உற்பத்தியில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு இருவருக்கும் மிகப் பெரிய இலாபத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

1932ஆம் ஆண்டில் 10,000 வாகனங்களை உற்பத்தி செய்து வாகன தொழில்நுட்பத்தில் தன் தனித் திறமையை வெளிப்படுத்தியது வோல்வோ. இவ்வகை வாகனங்களைப் பணம் படைத்தவர்கள் மட்டுமே வாங்கக்கூடியதாக இருந்தமையால் பலதரப்பட்ட மக்களிடமிருந்து எளிய மக்களும் வாங்கிப் பயன்படுத்தி மகிழும் வண்ணம் குறைந்த பட்ஜெட் வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு பொது மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது. இதன் பலனாக 1936ஆம் ஆண்டில் வோல்வோ தயாரித்து வெளியிட்டதுதான் PV51 மாடல் வகையிலான கார்கள்.
இரண்டாம் உலகப்போர் வாகன உற்பத்தியைப் பாதிக்கச் செய்தது. ஆயினும் 1944ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் வோல்வோ அதன் PV444 வகை வாகனங்களை உற்பத்தி செய்து வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் இவையே சிறிய இரகத்திலான வோல்வோ கார்கள். இந்த இரகக் கார்கள் ஏற்படுத்திய அலை 1960 வரை ஓயவில்லை எனலாம். அந்த அளவிற்கு இந்த இரக வோல்வோ வாகனங்கள் பொது மக்களால் விரும்பி வாங்கப்படும் வாகனமாகத் திகழ்ந்தது. இப்படிப் பலப்பல புதுமைகளை ஏற்படுத்தி மக்களின் தேவைக்கேற்பவும் தொழில்நுட்பத் தேவைக்கேற்பவும் தனது வாகனங்களை வெளியிடுவதில் வோல்வோ சலிக்கவில்லை எனலாம். 1927 ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி முதல் 2017 நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை வோல்வோ கார் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 19,971,128 ஆகும்.
unnamed (4)
வோல்வோ நிறுவனமும் தொழிற்பேட்டையும் அமைந்திருக்கும் கோத்தபர்க் நகரின் துறைமுகப்பகுதியில் தான் வோல்வோ அருங்காட்சியகம் இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பக் கால உற்பத்தியிலிருந்து அதி நவீன தொழில்நுட்பம் பொருந்திய வாகனங்கள் என இங்கே நூற்றுக்கணக்கான வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வோல்வோ நிறுவனம் முதலில் வெளியிட்ட Volvo ÖV4 வகை வாகனமும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படியும் ஒரு அருங்காட்சியகமா என வருவோரைத் திகைக்க வைக்கும் ஒரு பிரம்மாண்டம் இந்த வாகன அருங்காட்சியகம்.
unnamed (5)
இங்கு வரிசை வரிசையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களைப் பார்த்து அவற்றின் தகவல்களை வாசித்து அறிந்து கொண்டே வரும்போது அலுப்பு ஏற்பட்டால் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளவும் ஆங்காங்கே நாற்காலிகளை வைத்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி வோல்வோ நிறுவனத்தின் ஆரம்பக்கால முயற்சிகள், வெளியீடுகளை விவரிக்கும் காட்சிப்படங்கள் ஒரு சிறிய பகுதியில் திரைப்படமாகவும் காட்டப்படும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். ஆக அலுப்பே ஏற்படாமல் நிதானமாக பார்த்து இரசித்து வரலாம்.
வாகன உற்பத்தியில் இன்று முன்னிலை வகிக்கும் நாடுகளாகத் திகழ்பவை ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கொரியா போன்ற நாடுகளாகும். இந்த வரிசையில் சுவீடனும் இடம் பெறுகின்றது. வாகன உற்பத்தியில் மக்களின் தேவைக்கேற்பவும் கால சூழலின் தேவைக்கேற்பவும் தொழில் நுட்பத்தில் மாற்றங்களைச் செய்து புதிய வடிவங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையில் வாகனங்களில் புதுமைகளைச் செய்ய வேண்டிய தேவை வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு இன்று இருக்கும் கட்டாயத் தேவை. இதனை நன்கு கருத்தில் கொண்டு மின்சாரத்தில் இயங்கும் வாகனம், தானியங்கி வாகனம், என காலத்திற்கேற்ற வகையில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றது வோல்வோ. கடுமையான போட்டி நிலவும் இந்த வாகன உற்பத்தித் தொழிலில் இன்றும் முக்கிய இடத்தை வகிக்கின்றன வோல்வோ கார்கள். பலரால் விரும்பி வாங்கப்படும் ஒரு வாகனமாக இது திகழ்கின்றது.
பொது மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் கார்கள் மட்டுமன்றி தனது பயணத்தைக் கடல் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளிலும் செலுத்தியுள்ளது வோல்வோ. வோல்வோவின் சிறிய வடிவிலான நீர்மூழ்கி ஆய்வுக் கப்பல்கள் சிலவற்றை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். அதோடு பனி அடர்ந்த பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களையும் வோல்வோ நிறுவனம் தயாரிக்கின்றது.


சுவீடன் நாட்டிற்குச் செல்பவர்கள் தவறாமல் பார்த்து வர வேண்டிய ஒரு முக்கிய இடமாக இந்த அருங்காட்சியகம் அமைகின்றது. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட செலுத்த வேண்டிய கட்டணம், திறந்திருக்கும் நேரம், சிறப்புக் கண்காட்சிகள் பற்றிய செய்திகள் அதன் அதிகாரத்துவப் பக்கமான http://www.volvomuseum.com/ என்ற பக்கத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

Monday, December 18, 2017

101 பார்த்தோல்டி அருங்காட்சியகம், கோல்மார், பிரான்சு

இன்றைய வல்லமையில் வெளியிடப்பட்டது. - http://www.vallamai.com/?p=82103

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் - 
101. பார்த்தோல்டி அருங்காட்சியகம், கோல்மார், பிரான்சு

முனைவர் சுபாஷிணி



அமெரிக்காவை நினைத்தால் நம் மனதில் முதலில் தோன்றுவது பிரம்மாண்டமாக நியூயோர்க் மாநிலத்தின் லிபர்ட்டி தீவில் உயர்ந்து நிற்கும் சுதந்திர அன்னையின் சிற்பம் என்றால் அதனை மறுக்க முடியாது அல்லவா? இந்தச் சுதந்திர அன்னையின் சிலை உருவாக்கத்தின் பின்னணியை அறிந்து கொள்வதும் சுவாரசியமான ஒன்று தானே. 

Inline image 1

முதன் முதலில் பிரஞ்சுக்காரரான எடுவர்ட் (Edouard de Laboulaye) அமெரிக்காவில் சுதந்திர சிந்தனையைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சின்னம் ஒன்று கட்டப்பட வேண்டும் என்ற தன் கருத்தினை 1865ம் ஆண்டு வெளியிட்டார். இதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரஞ்சு சிற்பியான திரு.பார்த்தோல்டியிடம் (Frederic Auguste Bartholdi) இச்சிலையை வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனைக் கட்டுவதற்குப் போதுமான பொருளாதார பலமின்றி இருந்த சூழலினால் பல கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும், லாட்டரி, கேளிக்கை நிகழ்வுகள் என்ற வகையிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தும் இதனைக் கட்டி முடிக்கத் தேவைப்படும் பணத்தைச் சேகரிக்கும் பணி மிகத் துரிதமாகவும் விரிவாகவும் நடைபெற்றது. 

Inline image 2


சிற்பி பார்த்தோல்டி செம்பினால் உருவாக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவித் தேவைப்பட்டதால் ஐஃபெல் ( Alexandre Gustave Eiffel ) அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் பணியில் இணைந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டார். ஐஃபல் அவர்கள் தான் உலக அதிசயங்களில் ஒன்றாக இன்று பாரீஸ் நகரில் உயர்ந்து நிற்கும் ஐஃபெல் கட்டிடத்தை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்தச் சிற்பம் வடிவம் பெற்று 1884ம் ஆண்டு முழுமை பெற்றது. ப்ரான்ஸிலிருந்து கடல் மார்க்கமாகக் கப்பலில் பயணித்து நியூ யோர்க் நகரை ஜூன் மாதம் 1885ம் ஆண்டு வந்தடைந்தது. தனித்தனி பகுதியாக 350 பாகங்களாக 214 பெட்டிகளில் வைக்கப்பட்டு வந்த இந்தச் சிற்பம் நியூ யோர்க் நகரம் வந்தடைந்த பின்னர் அக்டோபர் மாதம் 1886ம் ஆண்டு முழுமைப்படுத்தப்பட்டது. 



Inline image 4


அமெரிக்க சுதந்திர தேவி சிலையை வடிவமைத்த பிரஞ்சு சிற்பி பார்த்தோல்டி 1834ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி பிரான்சின் கோல்மார் நகரில் பிறந்தார். ”சுதந்திர சிந்தனை உலகிற்கு வெளிச்சம் தரும்” (Liberty Enlightening the World) என்ற கருத்துடன் அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிற்பத்தை ஒரு சின்னமாக உருவாக்கியது  உலகுக்கு இவர் அளித்த முக்கிய பங்களிப்பாகும். 

பார்த்தோல்டி அடிப்படையில் இத்தாலிய, ஜெர்மானிய பின்புலத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். பிரான்சில் இளமை முதலே ஓவியம் சிற்பக்கலை என ஆர்வம் கொண்டிருந்தவர். தனது சிற்பக்கலைப் பயிற்சியைப் புகழ்மிக்க சிற்பிகளிடம் பெற்றவர். தனது சிறந்த படைப்புக்களினால் பாரிஸ் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஏனைய நகர்களிலும் சிற்பக்கலை வடிப்பதற்காக அழைக்கப்பட்டார். அதிலும் குறிப்பாக 1868ம் ஆண்டில் எகிப்தின் சூயஸ் கால்வாயின் கலங்கரை விளக்கத்தை வடிவமைத்துக் கட்டும் பணி இவருக்கே வழங்கப்பட்டது. ”எகிப்து ஆசியாவிற்கான ஒளியை ஏந்திக்கொண்டிருக்கின்றது” (Egypt Carrying the Light to Asia) என்ற தலைப்பில் இக்கலங்கரை விளக்கத்தை  அவர் வடிவமைத்தார். இது தவிர பிரான்சில், அதிலும் குறிப்பாக தான் பிறந்த கோல்மார் நகரில் புகழ்மிக்க சிற்பக்கலைப் படைப்புக்களை இவர் உருவாக்கியுள்ளார். 

Inline image 6

கோல்மார் நகரில் உள்ள பார்த்தோல்டியின் பிறந்த இல்லம் இன்று அவர் பெயரில் இயங்கும் அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. ஒரு சிறிய அரண்மனை போன்ற கட்டிடம் இது. மூன்று மாடிக் கட்டிடத்தில் பார்த்தோல்டி அவர்களின் அனைத்து படைப்புக்களைப் பற்றிய தகவல்களும் சிற்பங்களும் இடம் பெறுகின்றன. அமெரிக்க சுதந்திர தேவி சிலை செய்வதற்காக அவர் செய்த முதல் மாடல் அமைப்பும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

Inline image 5



இந்த அருங்காட்சியகத்தின் முகவரி: 
30 rue des Marchands, 68000 Colmar, France 

அருங்காட்சியகம் பற்றிய மேலதிகத் தகவல்களை www.musee-bartholdi.com என்ற வலைப்பக்கத்தின் வழி அறியலாம். இந்த அருங்காட்சியகம் பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் மூடப்பட்டு ஏனைய நாட்களில் காலை 10 முதல் மாலை 6 வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிற்பத்தை வடித்த பெருமையைப் பிரான்சு பெறுகின்றது.  பார்த்தோல்டியின் ஒளி மிகுந்த சிந்தனையின் சிற்ப வடிவமாக இந்தச் சிலை அமைந்திருக்கின்றது!