Wednesday, February 26, 2020

116. தொல்பொருள் காட்சி சாலை​,​ யாழ்ப்பாணம்​, இலங்கை

யாழ்ப்பாணம் தொல்பொருட் காட்சிசாலை யாழ்ப்பாணத்தில் நல்​லூ​ர்  நகரில் அமைந்திருக்கின்றது. இது 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் ​ மேற்பார்வையில் இந்தத் தொல்லியல் அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது என்பதோடு, தற்போதைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை மற்றும் தொல்லியல் துறை​யின்​ தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் ​ஆக்ககரமான​​முயற்சிகளினால் ​  தொல்லியல் அகழாய்வுப் பொருட்கள் ​இ​ங்கு சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் நடவடிக்கைகள் சீராகச் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.



2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது​,​ யாழ்ப்பாணம் நல்லூரில் இருக்கும் இந்தத் தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு​ப்​ பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் அழைத்துச் சென்றிருந்தார். போருக்குப் பின்னான சூழலில்​,​ ​யாழ்ப்பாணம் மட்டுமன்றி இலங்கையின் மரபுரிமை சிறப்புக்களைக் கூறும் ​அரும்பொருள்கள் ​இ​ங்கு ​பாதுகாக்கப்பட்டிருக்கும் சூழலை நேரில் சென்று காணும் அனுபவம் கிட்டியது. வெளியிலிருந்து காணும்போது மிகச்சாதாரணமான எளிய கட்டிடத்திலேயே இந்த அருங்காட்சியகம் இருக்கின்றது​ என்பதைக் காணலாம்​. ஆயினும்​,​ இதில் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் அரும்பொருட்கள் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவன​​.




​விதம் விதமான அலங்கார​ச் சங்குகள், பனையோலை​ கீற்றினாலும்​, எலுமிச்சை மரத்தின் வேரினா​லும் செய்யப்பட்ட அலங்கார விசிறிகள், பல்வேறு வடிவங்களிலான மண்பாண்டங்கள் போன்றவற்றை​ இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்​. ஏழு வாய்களை​க்​ கொண்ட வகையில் அமைக்கப்பட்ட மண்பானை ஒன்று இங்கு உள்ளது​.​ இது ஒரு வகையான இசைக்கருவி​ என்ற தகவல் அங்கு வழங்கப்பட்டிருக்கின்றது. நாகர்கள் பண்பாட்டினை விளக்கும் சான்றாக​,​ நாகங்கள் பொறிக்கப்பட்ட பண்டைய சின்னங்களின் சேகரிப்பு​க்​களும்​, மரத்தினால் ஆன அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளும்  ​காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த காசுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கி​.​பி​.​ 16லிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த கண்டி பேரரசின் வெள்ளிக்காசுகள், அரச சின்னம் அழுத்திச் செதுக்கப்பட்ட வெள்ளிக்காசுகள், பண்டைய சேரர் கால நாணயங்கள், கி​.​பி​.​ ​11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜசோழன் காலத்தில் தயாரிக்கப்பட்டு புழக்கத்திலிருந்த சோழர்கால நாணயங்கள், பொலநறுவை​யில் ​ கி​.​பி​.​ 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு​ காலகட்டத்தில்​ அரசு வெளியிட்ட நாணயங்கள், மாமன்னன் ஸ்ரீ பராக்கிரமபாகு வெளியிட்ட நாணயங்கள் போன்றவை இங்குக் காணக்கிடைக்கின்றன.

தமிழர் பண்பாட்டில் தனியிடம் பெறுவது மரபு விளையாட்டுக​ளாகும். நெடுங்காலமாக மக்கள் வாழ்வியலில் முக்கிய இடம்பெற்றிருக்கும் மரபு விளையாட்டுக்களான பல்லாங்கு​ளி, ​ தாயம் ​ஆகிய விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் விளையாட்டுக்கருவிகளும் ​ இங்கு​க்​ காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையை ஆண்ட இறுதி மன்னன் எனக் கருதப்படும் கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனு​டைய​ (கி.பி. 1798 - கி.பி.1815)​ மனைவி வெங்கடராஜம்மாள் தேவி​யு​டைய உருவப்படமும் இங்குக் காட்சிக்கு உள்ளது. அக்காலத்தில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னரின் வாரிசான இவர் கண்டி மன்னனை மணந்து மகாராணியாக 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியத்தை வரைந்தவர் வில்லியம் டேனியல்​ (William Daniel ​1769 - 1837) என்பவர்​. ​ இதன் முதல் பிரதி 1800களில் வரையப்பட்டதாகும். ​இங்கு அந்த ஓவியம் பாதுகாக்கப்படுகின்றது. நேரில் ஒருவரைக் காண்பதுபோல அச்சு அசல் மாறாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஓவியமாகத் திகழ்கின்றது.

​பரிசாக வழங்கப்பட்ட ​பிஜி நாட்​டின் பண்பாட்டுச் சடங்கில் பயன்படுத்தப்படும் சடங்கு​ப்​ பொருள்​ ஒன்றும் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றது.​ ​  இரு புறமும் ​கயிறு இணைக்கப்பட்டுள்ள கடற்பன்றியின்  தந்தத்தினால் ​ செய்யப்பட்ட ​ஒரு கலைப்படைப்பாகும் இது.  இது பிஜி நாட்​டில் ​அரசுத்தலைமைப்பொறுப்பில்  இருப்பவர்களால் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு பொருளாகும். இதனை பிஜித் தீவின் திருமதி லின் புறூகன்​ என்பவர்​ 30.9.1950 அன்று பரிசாக வழங்கி இருக்கின்றார்​ என்ற தகவலும் ​இங்குள்ளது.





இங்குள்​ள ​அரும்பொருள் ​சேகரிப்புகளில்​  மனிதர்களை​த்​ தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்ட ​ பயன்பாட்டிலிருந்த மரப்பபல்லக்குகளும்  இருக்கின்றன. யாழ்ப்பாணத்தி​ன் நமச்சிவாயம் மாரிமுத்து என்பவர் பயன்படுத்திய மரப்பலகை இது​. ​ இவர் மூளாய் யாழ்ப்பாணம் பகுதியில் வாழ்ந்தவர் என்றும்​,​ யாழ்ப்பாணம் திரு.வி.தாமோதரம் பிள்ளை என்பவரிடமிருந்து 16.9.1963 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டது என்றும் குறிப்புகள் சொல்கின்றன. இங்குள்ள இன்னொரு பல்லக்கு பெண்களை​த்​ தூக்கி செல்ல பயன்படுத்​தப்பட்ட பல்லக்கு. இதனைப் பயன்படுத்தியவர் அச்சுவேலி மாப்பாண முதலியார்​ என்பவர் என்றும்,​ யாழ்ப்பாணத்தில் 1720 ஆம் ஆண்டு பயன்பாட்டிலிருந்த ஒரு பல்லக்​கு என்ற குறிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனை அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாப்பாண முதலியாரின் கொள்ளுப்பேரன் திக்கம் செல்லையா என்பவர் 1948ஆம் ஆண்டு அருங்காட்சியகத்திற்கு வழங்கியிருக்கின்றார். ​ இப்படி இன்னும் சில அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்திலே உள்ளன. ​




யாழ்ப்பாணத்தின் மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் இந்த​த்​ தொல்பொருள் அருங்காட்சியகம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. ​ ​ இங்குள்ள அரும் பொருட்கள் அனைத்திற்கும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் விளக்கக் குறிப்புகள் அமைந்திருக்கின்றன. ​ இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு எதிரான நீண்ட கால போரின் போது ஏற்பட்ட சேதங்களின் போதும் போருக்குப் பின்னரும்   சீர்செய்யப்பட்டு இந்தத் தொல்பொருட்காட்சி சாலையைப் பராமரித்த ஒவ்வொருவரது தன்னலமற்ற செயலும் வரலாற்றில் போற்றுதலுக்குரியது. ​இதன்​ இப்போதைய​ கட்டடம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, தொழில்நுட்ப மேம்பாடுக​ளும் செய்யப்பட்டு இந்த அருங்காட்சியகம் மேம்படுத்தப்பட வேண்டும்​.