Monday, May 25, 2015

41 நியாண்டர்தால் அருங்காட்சியகம் - டூசல்டோர்ஃப், ஜெர்மனி (2)

 • ரங்கு விலங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி கண்டு வளர்ந்த இனம் தான் மனித இனமா?
 • நியாண்டர்தால் எனக்குறிப்பிடப்படும் மனித இனக்குழு இன்று காணப்படும் ஐரோப்பிய நிலப்பரப்பில் மட்டும் தான் இருந்தனரா?
 • உலகின் எல்லா பாகங்களிலும் மனித இனம் ஒரே நேரத்தில் தோன்றியதா?
 • ஆப்பிரிக்கா தான் மனித இனத்தோற்றத்தின் முதல் நிலப்பகுதியாக அமைந்திருந்ததா?
 • விவசாயம் என்பதும், உலக நாகரிகம் என்பதும் உலகின் பல இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றினவா?
​மனித குலத்தை ஆக்கிரமித்திருக்கும் உலகத்தோற்றம், மனித குலத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய பற்பல கேள்விகளில் மேற்குறிப்பிட்ட இவையும் அடங்குவன.
​ஆதி மனிதனின் வாழ்க்கை முறையைக் காட்டும் மெழுகு வடிவங்கள்

இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தியரியின் படி மனித குலத்தின் ஆரம்பம் என்பது, அதாவது மரத்திலிருந்து தாவிச்செல்லும் குரங்கினத்திலிருந்து மனித இனத்திற்கான மாற்றம் என்பது ஆப்பிரிக்காவில் நிகழ்ந்தது. குரங்கினத்திலிருந்து மனித இனத்திற்கான பரிணாம மாற்றம் என்பது உடன் ஒரு குறிப்பிட்ட கால அளவில் நிகழ்ந்ததல்ல என்றும் பல்வேறு சமகால நிகழ்வுகளில் சூழலியல், தட்பவெப்ப சீதோஷ்ண நிலை மாற்றங்களாலும் நீண்ட கால அளவிலேயே இம்மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்பது ஆய்வறிஞர்களின் கூற்று.​முழுமையான ஒரு நியாண்டர்தால் எலும்புக்கூடு

குரங்கினத்திற்கு வாழ்க்கையை நடத்த ஆயுதங்களும் கருவிகளும் தயாரிக்கும் திறன் இல்லை. மனித இனமோ தனது சிந்தனைத்திறத்தை பயன்படுத்தி கற்களால் ஆயுதங்களையும் கருவிகளையும்  செய்யும் திறமையை வளர்த்துக் கொண்டது. கருவிகள் வருவதால் வேட்டையாடுதல், உணவை தேடுதல் இனையைத் தேடுதல், குழுவாக வாழ்தல், என்ற திறனையும் படிப்படியாக மனித இனம் பெருக்கிக் கொண்டது. உணவுத்தேவையும் இனப்பெருக்கத்தேவையும் மட்டுமே அடிப்படை என்ற நிலையிலிருந்து படிப்படியாக மாறி குடும்பம், சமூகம், விவசாயம், குழு தலைமைத்துவம், கிராமம், நகரம், நாடு, அரசியல், வியாபாரம், கல்வி எனப்படிப்படியாக மனித இனம் தன து சிந்தனை வளர்ச்சியைப் பெருக்கிக் கொண்டே வந்துள்ளது. மாற்றத்தை ஏற்றுக் கொண்டு புதுமையை   உட்புகுத்திக் கொண்டு வசதிகளை மேலும் மேலும் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள மனித இனம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. உலகியல் தேவைகளோடு மட்டும் நின்றுவிடாமல் உள நிலை தேடலையும் மனித இனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணத்தினால் பல்வேறு சடங்குகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் தோன்றுவதற்கும், தத்துவங்கள் பிறப்பதற்கும்  காரணமாகின்றது.நியாண்டர்தால் ​பள்ளத்தாகில் கண்டெடுக்கப்பட்ட கருவிகள்

நியாண்டர்தால் அருங்காட்சியகத்தில் உள்ளே நுழையும் போதே அங்கே நம்மை வரவேற்க ஒரு நியாண்டதால் மனித உருவச்சிலை உள்ளது. ஒருவருக்கு 8 யூரோ கட்டணம் கட்டி டிக்கைட்டை பெற்றுக் கொள்வதோடு விளக்கம் கொடுக்கும் கருவியையும் பெற்றுக் கொள்ளலாம். 6 தளங்களில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் முதன் முதலாக நியாண்டர்தால் மனித எலும்புகளும் அதன் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பற்றிய தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் ஒலிப்பதிவு இருப்பதால் அவ்வொலிப்பதிகளைக் கேட்டுக் கொண்டே தொடர்ந்து செல்லலாம். ஒலிப்பதிவுகள் அனைத்தும் டோய்ச் மொழியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
​நியாண்டர்தால் ​பள்ளத்தாகில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த எலும்புகளில் எச்சம்

அதனை அடுத்து வரும் தளத்தில் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள், உலோகக் கருவிகள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  இங்குள்ள சில கருவிகள் 50,000லிருந்து 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்ற குறிப்புக்களைப் பார்த்து வியந்து போனேன். மனித குல கண்டுபிடிப்புக்களில் அடங்கும் கற்கருவிகள் பல, விலங்குகளின் உடலைக் கொல்லவும், அப்படிக் கொன்ற உடலை கீறி இரைச்சியைக் கிழித்து எடுக்கவும் பயன்படுத்தப்பட்ட கருவிகள்.  படிப்படியான இந்த வளர்ச்சியில் கற்கருவிகளிலிருந்து பின்னர் உலோகக் கருவிகளை மனித குலம் கண்டுபிடிப்பதும் பின்னர் மட்பாண்டங்களை உருவாக்கி சமைத்தல், சேகரித்தல்  என்ற  நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் இந்த மனித குல வளர்ச்சியில் ஒரு முக்கிய வளர்ச்சியாகத்தான் காண வேண்டும்.
​அருங்காட்சியகக் கூடத்தின் உள்ளே

தொடர்ந்து மேலே செல்லும் போது எலும்புக் கூடுகளும், மனித எலும்புகளில் சில பகுதிகளும் இங்கு அறிவியல் தகவல்களோடு வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை மிகச் சிறப்பான வகையில் இந்த அருங்காட்சியகத்தில் 2 மாடித்தளங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி ஆங்காங்கே நியாண்டர்தால் மனிதர்களின் முந்தைய கால நிலையை விளக்கும் வகையில் சில்லிகானில் செய்யப்பட்ட உருவ வடிவங்களை காட்சியாக வைத்திருக்கின்றனர்.
​புலி மனிதன் (ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்புர்க் மானிலத்தில் கண்டெடுக்கப்பட்டது. 40,000 ஆண்டு பழமையான வடிவம்)

மேல் தளத்தில் இந்த நியாண்டதால் அருங்காட்சியகத்தின் அதி முக்கியசேகரிப்பு வைக்கப்பட்டுள்ளது. இங்குதான் இந்த நியாண்டர்தால் மனித இனத்தின் DNA  க்கள் கன்ணாடி அலமாரிக்குள் மிகப்பாதுகாப்பாக அதே வேளை பொது மக்கள் சிரமமின்றி பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.​நியாண்டர்தால் அசல்  DNA 

இந்த DNA  சேகரிப்பைக் குடுவையில் பார்க்கும் போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு வியப்பு கலந்த பிரத்தியேக உணர்வு காண்போர் அனைவருக்கும் நிச்சயம் உண்டாகும் என்பதில் சந்தேகவில்லை.

தொடரும்.

Friday, May 22, 2015

40 நியாண்டர்தால் அருங்காட்சியகம் - டூசல்டோர்ஃப், ஜெர்மனி (1)

சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதகுல வரலாற்றில் ஒரு வளர்ச்சி பதியப்பட்டது. ஹோமோ குழுவகை மனித குலம் கற்களாலும் பாறைகளாலும் உபகரணப் பொருட்களை உருவாக்கும் திறனைப் படிப்படியாக வளர்த்துக் கொண்ட காலகட்டம் அது. இன்று நமக்கு கிடைத்திருக்கும் சில சான்றுகளின் அடிப்படையில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் (Homo Errectus) மனித இனத்தின் உடற்கூறுகளை ஒத்திருப்பதை அறியமுடிகின்றது. இந்த வகையினர் விலங்கினத்திலிருந்து மாறுபட்ட, அறிவு வளர்ச்சி பெற்ற  ஒரு இனக்குழுவாக இருப்பதை கிடைத்திருக்ககூடிய சான்றுகளின் அடிப்படையில், அதிலும் குறிப்பாக மூளைப்பகுதியில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். ஏனைய விலங்கினங்களிலிருந்து மாறுபடும் வகையில் இவர்களது கால்களின் அமைப்பு, ஓடும் தன்மை ஆகியவையும், இவர்களின் பற்கள் அளவில் சிறியதாக மாற்றம் கண்டதையும், உடலின் மேல் அமைந்திருக்கும் மயிர் மெல்லிதாக மாற்றம் கண்டமையையும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஹோமோ இரெக்டஸ் குழுவினர் அடிப்படையில் விலங்கினங்களிலிருந்து மாறுபட்ட வகையில்  கற்களையும் பாறைகளையும் கொண்டு அவர்களின் அன்றாட வாழ்க்கைத்தேவைக்கு அடிப்படையான கருவிகளை உருவாக்கும் திறனை படிப்படியாக வளர்த்துக் கொண்ட இனமாகத் திகழ்கின்றனர்.

ஜெர்மனியின் எஸ்ஸன் மானிலத்தில் டூசல்டோர்வ் அருகே, ஆகஸ்டு மாதம் 1856ம் ஆண்டு, ஒரு சாதாரண நாளில்,  காடுகளைத் தூய்மை செய்யும் ஊழியர்கள் ஃபெல்தோவ் குகைப்பகுதியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது 16 எலும்புகள் ஒரு பகுதியில் இருப்பதைக் கண்டனர்.  இக்கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பி பரிசோதனைச் செய்தனர். இந்த எலும்புகளை ஆய்வு செய்த யோஹான் கார்ல் ஃபூல்ரோத் அவர்கள் இவை மனித எலும்புகள் தாம் என உறுதி செய்தார். கண்டெடுக்கப்பட்ட போது அக்குகையில் உள்ளே முதுகுப்புறத்தைக்காட்டியபடி  படுத்த நிலையில் இந்த எலும்புக்கூடு குகையின் முன்பகுதியை நோக்கியபடி தலைவைத்து கிடந்ததாக இதனைக் கண்டெடுத்தோர் தெரிவித்த குறிப்பு மட்டுமே உள்ளது.


எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட குகைப்பகுதி (மே 2015)

இது மட்டுமே முதல் முறையாக கண்டெடுக்கப்பட்ட பழமையான மனித எலும்புகள் அல்ல என்பது உண்மை. ஏற்கனவே பெல்ஜியம், கிப்ரால்டா போன்ற நாடுகளிலும் பண்டைய மனித குலத்தின் எலும்புகள் கிடைக்கப்பட்டன என்ற போதும் அவற்றிற்கு இந்த எலும்புக்கூட்டிற்கு செய்யப்பட்ட விரிவான ஆய்வுகளைப் போல ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது முக்கிய விஷயம். 

தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளும் அதனைத் தொடர்ந்தார் போல  செப்டம்பர் 1959ம் ஆண்டில் வெளியான சார்ல்ஸ் டார்வினின்  "On the Origin of Species by Means of Natural Selection"  என்ற நூலும் இந்த நியாண்டர்தால் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை மானுடவியல் ஆய்வுலகில் மிக துரிதமாகப் பிரபலமடைய உதவின.  அப்போதிருந்த பழமை வாத உலகச் சிந்தனையைத் திருப்பிப் போடும் சார்ல்ஸ் டார்வினின் இந்த அதி அற்புத கோட்பாடு, இந்த புதிய கண்டுபிடிப்பை மையப்படுத்தி தொடர் ஆய்வுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட அடிப்படையை அமைத்துக் கொடுத்தன. மனித இனம் அதன் பழமையான முன்னோர் இனத்திலிருந்து பரிமாணம் பெற்று வளர்ச்சி பெற்று வந்த ஒரு இனம் என்னும் கோட்பாடு இந்த விஞ்ஞான ஆய்வோடு இணைந்து செயலாற்றத் தொடங்கியது.​அருங்காட்சியகத்தின் முகப்புப் பகுதியில்  (மே 2015)

அதன் பின்னர் இந்த ஆய்வுகள் தொடரப்படவில்லை. இந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட குகைப்பகுதி இருக்கும் இடமும் பதியப்படாத நிலையில் அடுத்தடுத்து ஜெர்மனியில் நிகழ்ந்த யுத்தம், அரசியல் மாற்றம் என்ற வகையில் இந்த ஆய்வு தொடரப்படாமல் மறக்கப்பட்ட ஒன்றாக இருந்த நிலையில்,  1997லும் 2000லும் இரண்டு அகழ்வாய்த்துறையினர் இந்த இடத்தை கண்டுபிடித்தே தீரவேண்டும் என முயற்சி செய்து ஆய்வில் இறங்கினர். ரால்ஃப் ஸ்மித், யூர்கன் தீஸன் ஆகிய இருவருமே அவர்கள். இவர்கள் ஆய்வு தோல்வியில் முடியவில்லை. நிலத்தின் மேல்பரப்பிற்கு 4 அடி கீழே மண்ணையும் பாறைகளியும் தோண்டி எடுத்து ஆய்வு செய்ததில் கற்கருவிகள், விலங்குகளின் எலும்புக்கூடுகள் ஆகியன கிடைத்தன. அவை மட்டுமல்ல மனித இனத்தின் உடல்கூறுகளைக் கொண்ட எலும்புக்கூடுகளும் கிடைத்தன. அதில் முன்பு 1856ல் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் மிச்சப்பகுதியும் அடங்கி இருந்தமை ஆய்வாளர்களுக்கு வெற்றிப்பாதயைக் காட்டியது. 


அருங்காட்சியகத்தின் முகப்பு பகுதி (மே 2015)

ஜெர்மனியின் டூசல்டொர்ஃப் நகரில் பசுமையான சூழலில் ஃபெல்தோவ் குகைப்பகுதி அமைந்திருக்கின்றது. அங்கு தான் அழைத்துச் செல்கின்றேன். அருக்காட்சியகத்தைக் காண தொடர்ந்து வருக!

Monday, May 11, 2015

39. பெரியார்-அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் - பகுதி 3

பெயரில் குறிப்பிட்டிருப்பது போலவே இந்த நினைவகம் பெரியாரின் நினைவுகளோடு அண்ணாவை நினைத்துப் பார்க்கவும் வைக்கும் ஒரு இடமாக அமைந்திருக்கின்றது. தந்தை பெரியார் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் இக்கட்டிடத்தின் முற்பகுதியில் இடம்பெறுகின்றன. இக்கட்டிடத்தின் பின்பகுதியில் அண்ணா நினைவகம் உள்ளது. இப்பகுதியே பேரறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது வாழ்ந்த இடம் என்ற குறிப்பையும் காண்கின்றோம். இது அலுவலகம் என்ற நிலையின்றி வீடு போலவே உள்ளது. இக்கட்டிடத்தைப் பார்ப்பவர்கள் 20ம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி கட்டிட அமைப்பை இவ்வீட்டினைப் பார்த்து நன்கு ஒருவர் அறிந்து கொள்ள முடியும்.


நினைவகத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா சிலையுடன் நான்

சமையல் அறை, உறங்கும் அறை, திறந்த விசாலமான வீட்டின் நடுப்பகுதி, குட்டையான மேற்கூறை பகுதி ஆகியவை அதன் வடிவம் மாறாமல் இங்கே அவ்வாறே வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியிலும் சுவரில் கண்ணாடி போடப்பட்ட அலமாரிகளுக்குள் அண்ணா தொடர்பான பல தகவல்கள், பத்திரிக்கைச் செய்திகள் ஆகியன இருக்கின்றன. உள்ளே உள்ள ஆவணங்களை புகைப்படம் எடுக்க எனக்கு அனுமதி கிடைக்காததால் அவற்றை இப்பதிவில் பயன்படுத்த முடியவில்லை.


​அறிஞர் அண்ணா வாழ்ந்த பகுதியில் தோழியர் பவளா, டாக்டர்.பத்மாவதி

பேரறிஞர் அண்ணா தந்தை பெரியாருக்கு மிக அணுக்கமாக இணைந்திருந்தவர். தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று அவரோடு சமூகப் பணிகளில் தம்மைப் பல ஆண்டுகள் ஈடுபடுத்திக் கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த இவருக்கு அங்கு ஒரு நினவைகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலைப் பற்றி பலரும் அறிந்திருப்பர். தமிழ் மொழி மட்டுமன்றி ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு என வேற்று மொழிகளிலும் புலமை பெற்றவர் இவர். 

அரசியல் தலைவர், பேச்சாளர் என்பது மட்டுமன்றி கலைத்துறையிலும் ஈடுபட்டவர். முற்போக்கு சீர்திருத்த கருத்துக்களையும் கொள்கைகளையும் நாடகங்களின் வழியாகவும் திரைப்படங்களின் வழியாகவும் தமது எழுத்துக்களால் வெளிப்படுத்தி மக்களிடையே முற்போக்கு சிந்தனைகள் வளரச் செய்ததில் முக்கியப் பங்கு இவருக்கு உளளதை மறுக்க முடியாது.  ​​

தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது நீதிக்கட்சியில் இணைந்து பின்னர் திராவிடர் கழகத்திலும் இணைந்து சமூக விழிப்புணர்வு தரும் பல நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பெரியாருடன் கொண்ட கருத்து வேறுபாட்டினால் திராவிடர் கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் சிலருடன் 1949ம் ஆண்டு விலகி திராவிடர் முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை இவர் நிறுவினார்.  தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சராகவும் அறிஞர் அண்ணா பொறுப்பேற்றிருந்தார். தமது இறுதிக்காலத்தில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பிப்ரவரி 2ம் தேதி 1969ம் ஆண்டில் அறிஞர் அண்ணா மறைந்தார்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இருவருமே தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் ஏற்பட உழைத்தவர்கள். இருவருமே தமிழ்ச்சமூகத்திலே அக்கால கடத்தில் நிறைந்திருந்த மூட நம்பிக்கைகள், பெண் விடுதலை, சாதிக் கொடுமைகள், தீண்டாமை கொடுமை ஆகியன ஒழிய மக்கள் மத்தியில் பல்வேறு வகையில் சிந்தனையைத் தூண்டும் செயல் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.பெரியார் அண்ணா நினைவகம்

இவர்கள் இருவரையும் நினைவு கூறும் வகையில் அமைந்திருக்கும் இந்த ஈரோடு பெரியார் அண்ணா நினைவகம் நல்லதொரு வகையில் பராமரிக்கப்படும் ஒரு அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. ஈரோடு செல்பவர்களும் தந்தைபெரியார் பற்றி அறிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களும் இந்த அருங்காட்சியகம் சென்று பார்த்து வரலாம்.​ஈரோட்டில் இருக்கும் பெரியார் புத்தகக்கடை

ஈரோட்டில் இந்த நினைவகத்தின் அடுத்த பகுதியிலேயே தந்தை பெரியார் நூலகம் ஒன்றும் இருக்கின்றது. பெரியார் எழுதிய நூல்களும் பெரியாரைப் பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களும் இப்புத்தகக் கடையில் கிடைக்கின்றன. நான் சென்ற போது தந்தை பெரியாரின்  11 சிறு நூல்களை வாங்கிக் கொண்டேன். 

சரி..ஈரோட்டிலிருந்து புறப்பட்டு விட்டோம். அடுத்த கட்டுரையில் உங்களை வேறொரு நாட்டில் உள்ள மேலும் ஒரு அருங்காட்சியகம் அழைத்துச் செல்கிறேன்.. புதிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன... பகிர்ந்து கொள்ள..!

Friday, May 8, 2015

38.பெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 2

சுபாஷிணி


 • போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.
 • கம்பியில்லாத தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப்பையிலும் இருக்கும்.
 • ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
 • உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து -ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.

இனிவரும் உலகம்  – தந்தை பெரியார்
‘ஆகா.. இன்றைய சூழலின் நிலையை அன்றே சொல்லிய தீர்க்கதரிசி’ என யாரேகினும் அதிசயத்தையும் மாய உணர்வுகளையும் இவர் மேல் வலியத்திணித்தால் நிச்சயம் கோபம் கொள்வார் தந்தை பெரியார். நிகழ்கால நிலையை உலகக்கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையையும் உருவாக்கக் கூடிய சாத்தியங்களைக் கற்பனை செய்து பார்த்து சுய அறிவைக் கொண்டு செயல்படும் போது மனித சிந்தனை வருங்கால நிகழ்வுகளையும் ஓரளவு திட்டமிடக்கூடிய வல்லமையைப் பெறும். ஆயினும் மூட நம்பிக்கையிலும் மூடப் பழக்க வழக்கங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாது அல்லலுறும் பல மனிதர்களுக்கு அதிசயங்களும் மாயஜாலங்களும் மாய மந்திரங்களுமே உலகை நடத்துவதானதாக ஒரு எண்ணம் உறுதியாக இருக்கின்றது.மக்கள் பெரும்பாலும் பழமை வாதத்தைப் பிடித்துக் கொண்டு, மாறி வரும் புதிய உலகிற்கு ஏற்றவர்களாக தம்மை தயார்படுத்திக் கொள்ள ஒப்பற்ற பரிசாக இருக்கும் கல்வியினைப் பெற்று ஆண் பெண் பேதமின்று இருபாலரும் சிந்தனை வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் அனுபவிக்கும் திறன் கொண்டோரோக இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்காக மக்களை சந்தித்து தமது சொற்பொழிவுகளின் வழியாகவும் பத்திரிக்கைகளின் வழியாகவும் தமது கருத்துக்களை பரப்பியவர் திரு.ஈ.வெ.ரா அவர்கள்.

இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் பெரியார் எழுதிய சில கடிதங்களும், பெரியாருக்கு ஏனைய சிலர் எழுதிய கடிதங்களும் இருக்கின்றன. திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை 6.6.1928ம் தேதியிட்டு எழுதிய கடிதம் ஒன்று இங்கு காட்சிக்கு உள்ளது. அது போல பேரறிஞர் அண்ணா எழுதிய ஒரு கடிதமும், மூதறிஞர் திரு.இராஜாஜி 8.1.1925ம் தேதியிட்டு எழுதிய கடிதம் ஒன்றும் இங்கே உள்ளது.

பெரியார் பயன்படுத்திய சில பொருட்கள், நாற்காலி, உடைகள் என்பனவும் பாதுகாப்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.பெரியார் ஆரம்பித்து நடத்திய பத்திரிக்கைகள் குறிப்பிடத்தக்க என்ணிக்கையில் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள தகவலின் படி கீழ்க்காணும் தினசரி, வார மாத இதழ்கள் தந்தை பெரியார் அவர்களால் தொடக்கப்பட்டவையாக அறிய முடிகின்றது.


 1. குடியரசு வார ஏடு – துவக்கிய நாள் 2.5.1925
 2. திராவிடன் தினசரி ஏடு – துவக்கிய நாள் செப்டம்பர் 1927
 3. ரிவோல்ட் வார ஏடு (ஆங்கிலம்) – துவக்கிய நாள் 6.11.1928
 4. புரட்சி வார ஏடு – துவக்கிய நாள் 20.11.1933
 5. பகுத்தறிவு வார ஏடு – துவக்கிய நாள் 15.3.1934
 6. விடுதலை நாளேடு – துவக்கிய நாள்1.6.1935
 7. திராவிட நாடு வார ஏடு – துவக்கிய நாள் 7.3.1942
 8. லிபரேட்டர் (ஆங்கிலம்) நாளேடு – துவக்கிய நாள்7.12.1942
 9. உண்மை (மாதம் இரு முறை) இதழ் – துவக்கிய நாள் 14.1.1970
 10. தி மாடர்ட் ரேசனாலிஸ்ட் (ஆங்கில மாத இதழ்) – துவக்கிய நாள் செப்டம்பர் 1971எழுத்துக்களின் வழி சமூகப்புரட்சியைச் செய்வது என்பது சாதாரண மக்களையும் சென்றடையக்கூடிய ஒரு யுக்தி. பொதுமக்களின் சிந்தனையில் படிப்படியாக தெளிவினை கொடுத்து சிந்திக்கச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு மிக முக்கியமானது மக்களை பலதரப்பட்ட நாட்டு நிலவரங்கள் அடங்கிய, விழிப்புணர்வினைத் தரக்கூடிய பத்திரிக்கை செய்திகள் தாம்.


இன்றைய காலகட்டத்தில் பத்திரிக்கை துறை என்பது மிக விரிவாக வளர்ந்துவிட்டது. பத்திரிக்கைகள் மக்களுக்கு உள்ளூர் மற்றும் உலக விஷயங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது ஒரு புறம் இருக்க தேவையற்ற மலிவான தரமற்ற விசயங்களையும் வழங்கி பொது மக்களின் வாசிப்பு நோக்கத்தினை திசை திருப்பும் பணியையும் மேற்கொள்வது ஒரு விதமான சமூக சீர்கேடு என்றே கருதத் தூண்டுகின்றது. ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பத்திரிக்கைகள் என்பன மக்கள் மத்தியில் சுதந்திர தாகத்தை உருவாக்கவும், சமூக சீர்கேட்டினைச் சரி செய்யவும், தொழிலாளர் நலனுக்காகவும் என்ற வகையில் சமூகப் பார்வையை முன் வைத்து தொடங்கப்பட்டன. அதன் நோக்கம் மிக உயரியதாக இருந்ததால் அதன் விளைவாக பொது மக்கள் மத்தியிலே கல்விச் சிந்தனை, புதுமை சிந்தனை, பொது நலச்சிந்தனை, விரிவான மாற்றம் புரட்சிகரமான சிந்தனை ஆகியற்றிற்கு வித்திட்ட பங்கினையும் பத்திரிக்கைகள் ஆற்றின.

தொடரும்…

Monday, May 4, 2015

37.பெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 1

http://www.vallamai.com/?p=57107

தமிழகத்தின் கொங்கு நாட்டிற்கு இதுவரை நான்கு முறை பயணம் செய்திருக்கின்றேன். அதிலும் குறிப்பாக ஈரோட்டிற்கு 3 முறை பயணம் மேற்கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவாக்கங்களைச் செய்திருக்கின்றேன். முதல் இரு முறைகளும் குறுகிய கால பயணத்தில் முடிந்த அளவு தமிழ் மொழி, வரலாறு பண்பாடு ஆகிய விசயங்கள் தொடர்பான பதிவுகளைச் செய்யமுடிந்தாலும் ஈரோட்டிலேயே நான் எப்போது வந்தாலும் என்னை வரவேற்று உபசரித்து தங்கவைத்து பார்த்துக் கொள்ளும் தோழி பவளா-திரு.திருநாவுக்கரசு தம்பதிகள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பெரியார் நினைவகம் போகக்கூடிய வாய்ப்பும் நேரமும் கிட்டாமலேயே இருந்தது. சென்ற ஆண்டு, 2014 ஜூன் மாதம் மீண்டும் ஈரோட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது பெரியார் நினைவகம் செல்வதை, செய்ய வேண்டிய முக்கிய விசயங்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டதோடு காட்டாயம் சென்றே ஆக வேண்டுமென்று என்னுடன் வந்திருந்த டாக்டர்.நா.கண்ணனையும் பவளாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.ஈரோட்டின் மத்தியிலேயே அமைந்திருக்கும் ஒரு சாலையில் பெரியார்-அண்ணா நினைவகம் இருக்கின்றது. இந்தக் கட்டிடம் 17.9.1975ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மை தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.இந்த அருங்காட்சியகத்தை மிகத் தூய்மையாகப் பராமரிக்கும் பொறுப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களை நான் நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். நினைவகமே அருங்காட்சியம் என்ற வகையில் பெரியார் தொடர்பான பல முக்கியத்தகவல்களை வரலாற்றுத் தொடர்ச்சியை வரும் பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வாய்ப்பினை வழங்குகின்றது இந்த நினைவகம். இதன் பின்பகுதி அண்ணாவின் நினைவகமாக  அமைக்கப்பட்டிருக்கின்றது.

தந்தை பெரியார் என மதிப்பும் மரியாதையுடனும் அழைக்கப்படும் திரு.ஈ.வெ.ரா அவர்களது இளமைக் கால வரலாற்றுச் செய்திகள் புகைப்படங்களுடன் வழங்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. உள்ளே நுழையும் போதே மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் பெரியாருடனும் அண்ணாவுடனும் இருக்கும் நிகழ்வுகளின் காட்சிகளின் புகைப்படங்கள் உள்ளன. அவற்றோடு தொடர்ச்சியாக பெரியாரின் பயணங்கள், குழுவாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், பெற்றோர் பற்றிய தகவல்கள் ஆகியன புகைப்படங்களுடன் செய்தியாக வழங்கப்பட்டிருக்கின்றன.பெரியாரின் வாழ்க்கைப் பாதையின் 94 ஆண்டுகால பயணம் என்பது பல தரப்பட்ட திருப்பு முனைகளைச் சந்தித்த ஒன்றாக அமைந்தது என்பதை இங்குள்ள புகைப்படங்களே ஆதாரமாகக் காட்டுகின்றன. ஒரு வணிகராக வளர்ந்த திரு.ஈ.வெ.ரா அவர்கள் படிப்படியாக தமிழ் மக்களின் சமூக நலனில் அக்கறை கொண்டு தனது வாழ்க்கை நோக்கத்தை மக்கள் நலனுக்காகவும் சிந்தனை மாற்றத்திற்காகவும் என மாற்றிக் கொண்டு தனது இறுதி காலம் வரை அதற்காகவே உழைத்ததன் அடையாளமாகவும் சான்றுகளாகவும் இருக்கும் பல ஆதாரங்களை இந்த அருங்காட்சியகத்தில் வருகையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.இங்கு வைக்கப்பட்டுள்ள ஒரு தகவல் பலகையில் உள்ள குறிப்புகள் பெரியார் பற்றி அறிமுகம் பெற விரும்புவோருக்கு பயன்தரும் வகையில் அமைந்துள்ளது. அதில் உள்ள குறிப்புகள் கீழ்வருமாறு:

தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
1. பிறப்பு: 17.9.1879
இறப்பு: 24.12.1973

2. சுற்றுப் பயணம் செய்த மொத்த நாட்கள்: 8,600 நாட்கள் (26 ஆண்டுகள், 6 மாதம், 25 நாட்கள்)

3. சுற்றுப் பயணம் செய்த மொத்த தூரம் : 13,12,000 கிலோ மீட்டர்கள் (பதின்முன்று லட்சத்து பனிரண்டாயிரம் கிலோ மீட்டர்கள்)

4. சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: 10,700 (பத்தாயிரத்து எழுநூறு நிகழ்ச்சிகள்)

5. சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றிய நேரம்: 21,400 மணிகள் (இருபத்து ஒன்றாயிரத்து நானூறு மணிகள்)

6. தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவை ஒலி நாடாவில் பதிவு செய்து ஒலி பரப்பினால் ஒலிக்கும் நாட்கள்: – இரவு பகலாக: 2 வருடம், 5 மாதம், 11 நாட்கல்.

7.வாழ்ந்த காலங்கள்: 94 வருடம், 3 மாதம், 7 நாட்கள்

நான் யார்?
ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன் – ஈ.வெ.ரா.

தொடரும்..