Wednesday, August 27, 2014

36. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம் (3), வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

வல்லமை மின்னிதழில் வெளியான என் அருங்காட்சியகத் தொடர் 

முனைவர்.சுபாஷிணி 
I much prefer the sharpest criticism of a single intelligent man to the thoughtless approval of the masses.
-Johannes Kepler

கெப்லரின் சமகாலத்தவர் கலிலியோ. இருவரது ஆய்வுகளும் விண்வெளி ஆய்வுத் துறையில் அளப்பரிய கண்டுபிடிப்புக்களை உலகுக்கு வழங்கின. ஐசேக் நியூட்டனின் கோளங்களின் அசைவு தொடர்பான கண்டுபிடிப்புக்களுக்கு அடிப்படையை அமைத்து தந்தவையும் கெப்லரின் ஆய்வுத்தரவுகள் தாம். இன்று வரை தொடர்ந்து நிகழும் விண்வெளித்துறை ஆய்வுகள் கெப்லர் அமைத்துக் கொடுத்த ஆதாரங்களை மையமாகக் கொண்டே தொடர்கின்றன என்பது விண்வெளி ஆய்வுத் துறையில் கெப்லரின் பங்கை நாம் நன்கு உணர உதவும்.
jk7
கெப்லரின் ப்ளாடோனிக் சோலிட் மாடல் (Platonic solid model of the Solar system from Mysterium Cosmographicum) (1596)
1591ம் ஆண்டில் டுயூபிங்கன் பல்கலைகழகத்தில் தமது பட்டப்படிப்பை முடித்தார் கெப்லர். தத்துவமும் கணிதமும் படித்த அவருக்கு அக்கால கட்டத்தில் வானியல் ஆய்வுகளில் ஆர்வம் ஈடுபட ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக இந்த பூமி உருண்டையானது, சூரியனை சுற்றி வருகின்றது என்ற நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸின் (1473- 1543) கருத்துக்கள் இவரது கவனத்தை ஈர்த்தன. டியூபிங்கன் பல்கலைக்கழகம் அப்போது யொஹான்னஸ் கெப்லருக்கு ஆஸ்திரிய நாட்டில் உள்ள க்ராஸ் பகுதியில் கணித ஆய்வாளர் பணி ஒன்றினை அமைத்துக் கொடுத்தது. 1954ல் இப்பணியை மேற்கொள்ள இவர் க்ராஸ் சென்றடைந்தார். இங்கிருந்த போது தமது ஆய்வுகளில் கவனத்தைச் செலுத்தி மிகக் கடுமையாக உழைத்து வந்தார். அக்கால கட்டத்தில் தான் இவர் பார்பரா மூலெக் என்ற மங்கையை மணந்தார். இது 1597ல் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தாலும் இறுதியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை மட்டுமே உயிர் பிழைத்தனர்.
தைக்கோ ப்ராஹா என்ற ஜோதிட வானியல் ஆய்வாளர் ஒருவரிடம் பணி புரிய கெப்லருக்கு ஆர்வம் ஏற்பட்டது. தைக்கோ டென்மார்க்கின் ஒரு முழு தீவையுமே வாங்கி அங்கே குடிபெயர்ந்து தனது ஆய்வுகளை அத்தீவில் செய்து வந்தார். அதோடு அவர் ப்ராக், அதாவது இப்போதைய செக் நாட்டில் மன்னர் இரண்டாம் ரூடோல்ஃபுக்கு கணிதமேதையாக அமைந்திருந்தார் என்பதும் அவரது தகுதியை நாம் அறிந்து கொள்ள உதவும்.
jk6
​ஹ்வென் தீவு வரைபடம் – இங்கு தான் தைக்கோ ப்ராஹா தமது ஆய்வுக்கூடத்தை அமைத்திருந்தார்
அவரிடம் உதவியாளராக விரும்பி, வின்ணப்பித்து 1600ம் ஆண்டு அப்பணியில் அமர்ந்தார் கெப்லர். 1601ம் ஆண்டு ப்ராஹா தற்செயலாக இறந்து போக அப்பதவி கெப்லருக்கு வழங்கப்பட்டது. 1611ம் ஆண்டில் மன்னர் ரூடோல்ப் பதவியிறங்க வேண்டிய நிலையில் கெப்லர் தாமும் அப்பதவியைத் துறந்து வேறொரு பகுதியில் பணியாற்ற நாட்டம் கொண்டார். தனக்கு பொருத்தமான ஒரு பணியை தேடும் வேலையிலும் ஈடுபட்டார். அப்போது ஆஸ்திரியாவின் லின்ஸ் நகரில் ஒரு தேவை இருக்கவே அங்கே தமது குடும்பத்தாருடன் சென்று சேர்ந்து தமது புதிய பணியை 1612ம் ஆண்டில் தொடங்கினார். லின் நகரில் தான் கெப்லர் அதிக ஆண்டுகள் பணியாற்றியிருக்கின்றார், அதாவது 14 ஆண்டுகள். இக்கால கட்டத்தில் இவரது மனைவி பார்பரா இறக்கவே, சில காலங்களுக்குப் பிறகு இவர் சூசன் ரோய்ட்டிங்கர் என்ற மாதுவை மணந்து கொண்டார் என்ற தகவல்களையும் அறிகின்றோம்.
கெப்லர் அறிவியல் நம்பிக்கையோடு ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவராகத் திகழ்ந்தார். இவர் தமது ஆய்வுகள் அனைத்துமே தாம் ஒரு கிறிஸ்துவர் என்ற அடிப்படையில் தமது பிறப்பின் கடமையைச் சரியாகச் செய்ய வந்ததாக நினைத்தே செய்வதாக தமது எழுத்துக்களில் குறிப்பிடுகிறார். கடவுள் உருவாக்கிய இந்த அண்ட கோளங்களை புரிந்து கொள்ள தாம் முயல்வதாக இவர் தமது எழுத்துக்களில் தன் கருத்தை பதிந்து வைக்கின்றார்.
யொஹான்னஸ் கெப்லர் ஐரோப்பாவின் சில நகரங்களுக்கு தொழில் நிமித்தம் பயணித்து தமது ஆய்வு தொடர்பான உரைகளை நிகழ்த்தியும் வாதங்களில் ஈடுபட்டும் வந்தவர். அதிலும் குறிப்பாக தனது இறுதி காலகட்டங்களில் இவரது வாழ்க்கை இப்படியே அமைந்திருந்தது. நவம்பர் மாதம் 15ம் தேதி 1630ம் ஆண்டில் இந்த அறிவியல் வல்லுநர் இவ்வுலகை விட்டு மறைந்தார். அப்போது அவர் ரேகன்ஸ்புர்க் நகரத்தில் வசித்து வந்தார். ஜெர்மனியின் ரேகன்ஸ்புர்க் நகரின் தேவாலயத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் நிகழ்ந்த 30 ஆண்டுகள் தொடர் போரின் போது இந்த தேவாலயப் பகுதி அழித்து சேதமாக்கப்பட்ட நிலையில் இந்த நினைவுச்சின்னமும் அவர் சமாதியும் முற்றாக அழிந்தன.
ஒரு தனி மனிதராக யொஹான்னஸ் கெப்லர் உலகுக்கு வழங்கிய ஆய்வுக் கொடைகள் தொடர்ந்து இவரை நம்மிடையே மறக்காமல் நிலைத்திருக்கச் செய்திருக்கின்றன. இத்தகைய பல அறிய தகவல்களை நமக்கு வழங்கும் இந்த யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகத்துக்கு ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் வருவோர் வந்து இங்குள்ள தகவல்களையும், இவர் பயன்படுத்திய, உருவாக்கிய கருவிகளையும், இவரது எழுத்தில் அமைந்த நூல்களையும், ஆவணங்களையும் நேரில் பார்த்துச் செல்லலாம்.
 jk5
​அருங்காட்சியகத்தின் வாசல் பகுதியில்
​Truth is the daughter of time, and I feel no shame in being her midwife.
-Johannes Kepler​
உதவிய குறிப்புக்கள்

Wednesday, August 20, 2014

35. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி 
பிரச்சனைகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது உண்டா? அதிலும் குறிப்பாக சாதனைகள் பல படைப்போர் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்து கடந்து வந்த பாதைகள் கரடு முரடானவையாகத் தான் அமைந்திருக்கின்றன. வாழ்க்கை பாடம் கொடுக்கும் அனுபவங்களே ஒரு படி நிலையிலிருது மற்றொரு படி உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றது.யொஹான்னஸ் கெப்லரின் வாழ்க்கை இத்தகைய கடினமான தடைகள் பல நிறைந்த வாழ்க்கையாகத்தான் அமைந்தது.
jk2
யொஹான்னஸ் கெப்லர்
யொஹான்னஸின் தாயார் காத்தரினா ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் பிறந்தவர். இவருக்கும் ஒரு பிரபலமான வர்த்தகராக அந்த வட்டாரத்தில் திகழ்ந்த ஒரு வர்த்தகரின் மகனான ஹைன்ரிக் கெப்லருக்கும் திருமணம் நடந்தது. ஹைன்ரிக் பாடன் உர்ட்டென்பெர்க் பகுதி பிரபுவிடம் சற்று அனுக்கமாகப் பழகும் சூழல் அமைந்திருந்தாலும் தனது குடிப்பழக்கத்தால் வறுமை நிலையை அடைந்து குடும்பத்தையும் வறுமை வாட்ட காரணமாகிவிட்டார். யொஹான்னஸின் தாயார் காத்தரினா ஒரு முன்கோபம் படைத்தவர் என்றும் சிடுசிடு என்று எல்லோரிடமும் பழகுபவர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார். இதனால் இவர்களின் சுற்றத்தார் மற்றும் அவர்கள் சூழலில் நல்ல நட்புறவும் அமையாத நிலையே அப்போது சிறுவன் யொஹான்னஸுக்கு அமைந்தது. புதிய இடம் புதிய பாதையைக் காட்டலாம் என்ற முடிவில் ஹைன்ரிக் தன் மனைவியுடனும் யொஹான்னஸுடனும் நெதர்லாந்துக்குப் பயணமானார். ஆனால் அங்கும் இவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல மாற்றம் அமையவில்லை. மனம் உடைந்து இவர்கள் மீண்டும் தங்கள் கிராமமான ஜெர்மனியின் வைல் டெர் ஸ்டாட் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர்.
இந்த காலகட்டத்தில் தான் காத்தரீனாவின் அத்தை ஒருவர் விஷம் வைத்து ஒருவரை கொன்று விட்டார் என்று கைதாகி விசாரணைக்குப் பின் ஒரு சுனியக்காரி என்று அறிவிக்கப்பட்டு உயிருடன் எரிக்கும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இது அவர்கள் குடும்பத்தில் எவ்வகை துயர சூழலை உருவாக்கியிருக்கும் என்று நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகின்றது. இந்த பிரச்சனைகளுக்கு இடையில் யொஹான்னஸின் கவனமும் கல்வியின் மீதான ஆர்வமும் அதிகரித்துக் கொண்டேயிருந்ததே தவிர குறையவில்லை. தனது திறமையின் காரணமாக மானில பிரபுவின் பிரியத்துக்குள்ளான சிறுவர்களில் ஒருவராக யொஹான்னஸ் திகழ்ந்தார். இதனால் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்தில் உபகாரச் சம்பளம் பெற்று படிக்கும் நல்வாய்ப்பையும் இவர் பெற்றார்.
jk1
கெப்லர் வாழ்க்கை குறிப்பு
இத்தருணத்தில் தான் யொஹான்னஸின் தந்தை யாரிடமும் சொல்லாமல் தன் வீட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரிய நாட்டின் படையில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது துருக்கிக்கு எதிராக போர் நிகழ்ந்து கொண்டிருந்தமையால் அதற்குப் படையில் உழைக்க ஆட்கள் தேவைப்பட, வீட்டில் சொல்லாமலேயே புறப்பட்டு போய்விட்டார் ஹென்ரிக். தந்தையை இழந்தாலும் யொஹான்னஸின் கல்வி முயற்சிகள் பாதிப்படையவில்லை. தமது 20 வயதிற்குள்ளேயே பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்று சிறந்த ஆய்வாளராக உருவாகிக் கொண்டிருந்தார் யொஹான்னஸ்.
வின்வெளி ஆராய்ச்சி, சோதிட ஆராய்ச்சி இவையிரண்டும் தனித்தனி துறைகளாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. இந்த இரண்டு துறைகளிலும் தக்க பாண்டித்தியம் பெற்றிருந்தார் யொஹான்னஸ். 17ம் நூற்றாண்டின் உலகின் தலைச் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் யொஹான்னஸ். அறிவியல் புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கியமானவர்களில் ஒருவர் இவர் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. இவரது ஆய்வின் கண்டுபிடிப்புக்களான Mysterium cosmographicum, Astronomia nova, Harmonice Mundi அனைத்துமே மிக முக்கிய அறிவியல் ஆய்வுகளின் பட்டியலில் இடம் பெறுபவையாக அமைகின்றன. வானியல் துறை நிபுணராக இருந்தாலும் ஜோதிட குறிப்புக்களைக் கணித்துக் கொடுக்கும் வழக்கத்தையும் தொழிலாகவும் இவர் செய்து வந்தார். இந்த ஜோதிடக் கணிப்பு செய்யும் வேலையே இவரது ஜீவனத்துக்கும் வழியாக சில காலங்கள் அமைந்தது.
jk4
16ம் நூற்றாண்டு லத்தின் மொழி வகுப்பு – பள்ளி வகுப்பறை
வானியல் ஆய்வுக் கோட்பாடுகளை வெளியிட்டு யொஹான்னஸ் அறிவியல் புரட்சி செய்யத் தொடங்கியிருந்த சமயத்தில் தான் இவரது தாயாரின் தொடர்பில் ஒரு பிரச்சனை எழுந்தது. ஒரு சிறிய பூசலில் இவரது தாயாரை அக்கிராமத்துப் பெண் ஒருவர் விஷம் கொடுத்து இவர் கொல்லப்பார்க்கின்றார் எனக் குற்றம் சாட்ட அது அப்போதைய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு காத்தரினா ஒரு விட்ச் என வழக்காடு மன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர் சிறைப்படுத்தப்பட்டார். இது 1620 ஆண்டு நடந்தது. மூலிகை தாவரங்களை உடல் நோய் தீர்க்க உபயோகித்தல், நாட்டு வைத்திய மருந்து தயாரித்தல், அதனை பிறருக்கு கொடுத்து சோதித்தல், நோயை இத்தகைய மூலிகைகளைக் கொண்டு குணமாக்க முயற்சி செய்தல் போன்றவை அக்காலத்தில் மிகக் கடினமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய சட்டமாக இருந்தது. இப்படி செய்வோர் விட்ச் என அறிவிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கிடைப்பது வழக்கம். தண்டனைகள் பொதுவாக உயிருடன் எரித்துக் கொல்வது அல்லது இவர்களை ஒரு மரத்தில் வைத்து கட்டி ஓடும் ஆற்று வெள்ளத்தில் தூக்கிப் போட்டு விடுவது என்பதாக இருக்கும்.
jk3 (1)
16ம் நூற்றாண்டு லத்தீன் வகுப்பில் மாணர்கள் ஆசிரியரிடம் பாடம் கேட்பதைக் காட்டும் ஓவியம்
ஆக தன் தாய்க்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கைப் பற்றி அறிந்து, இதனைக் கேள்விப்பட்டு பதைத்துப் போய் யோஹான்னஸ் லின்ஸ் நகரில் தான் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சிப் பணிகளை விட்டு வைல் டெர் ஸ்டாட் நகருக்கு திரும்பி வந்து தனது தாயாரை குற்றத்திலிருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொண்டார். தனது பல்கலைக்கழக நண்பர் கிறிஸ்தஃபர் பெசோல்டஸின் உதவியால் தனது தாயார் மூலிகை மருந்து தயாரித்து விஷம் கொடுத்து கொல்லும் விட்ச் அல்ல என நிரூபித்து அவருக்கு தண்டனையிலிருந்து விடுதலையும் பெற்று தந்தார். ஏறக்குறைய ஓராண்டுகள் இந்த வழக்கு நடைபெற்று அதாவது 1621ம் ஆண்டு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் கத்தரீனா. ஆயினும் பல மனக் குழப்பங்கள் இவருக்கு நீடித்துக் கொண்டிருந்ததால் அடுத்த ஆண்டே இவர் இறந்தார் என்றும் அறிகின்றோம்.
யோஹான்னஸ் கெப்லெர் அறிவியல் உலகுக்கு அளித்த கொடைகள் ஏராளம் என்றாலும் தனது வாழ் நாள் முழுமைக்கும் வருமையிலே தான் அவரது வாழ்க்கை நிலை அமைந்தது.
தொடரும்..
குறிப்புகள்

Friday, August 15, 2014

34. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

வல்லமை மின்னிதழில் இன்று வெளியிடப்பட்ட என் பதிவு. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி 

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வின்கலங்களில் ஒன்றின் பெயர் கெப்லர்-22பி. வின்வெளி ஆராய்ச்சியில் புதிய தடம் பதித்து புதிய பாதையை வகுத்த ஜெர்மானியரான யோஹான்னஸ் கெப்லரின் ஞாபகார்த்தமாகவும், அவரது ஆய்வுகளைச் சிறப்பிப்பதற்காகவும் பூமியைப் போல ஏனைய வின்மீன்களைச் சுற்றி வரும் ஒரு வின்கலனுக்குக் கெப்லரின் பெயர் வழங்கப்பட்டது.
 k5
யோஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகத்தில் அவரது உருவச் சித்திரத்துடன் (ஜூலை 2014)​

இத்தகைய சிறப்புப் பெறும்  கெப்லர் யார் என்பதை அறிய நமக்கு ஆர்வம் இருக்கும் அல்லவா? அதனை அறிந்து கொள்ள இன்றைய அருங்காட்சியகப் பதிவில் உங்களுக்கு  நான் அறிமுகப்படுத்தவிருப்பது ஜெர்மனியின் பாடன் உர்ட்டென்பெர்க் மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமமான வைல் டெர் ஸ்டாட் மாநிலத்தில் இருக்கும் யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகமே. இந்த அருங்காட்சியகம் வார நாட்களில் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்வையாளர்களுக்காகத் திறக்கபப்ட்டிருக்கும். ஆகையால் அருங்காட்சியக வலைப்பக்கத்தில் திறக்கும் நேரத்தை அறிந்து இங்கு சென்று வருவது நல்லது.

கணித மேதை, வின்வெளி ஆய்வாளர் என்ற சிறப்புக்களுக்கு மட்டும் உரியவரல்ல கெப்லர். வானியல் ஆய்வில் மிக முக்கிய திருப்பு முனையை வழங்கிய மூன்று கோட்பாடுகளைத் தனது ஆய்வில் தெளிவாகக் கண்டு உலகுக்கு வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. 1609 லிருந்து 1619 வரையிலான காலகட்டங்களில் இவர் வெளியிட்ட மூன்று வானவியல் ஆய்வுக் கோட்பாடுகள் இத்துறை ஆய்வுகளுக்குப் புதிய பாதையை அமைத்துக் கொடுத்தன. இது மட்டுமல்லாது. கணிதத்துறையிலும் வெவ்வேறு பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க முத்திரைப் பதித்த ஒரு பன்முக ஆளுமை யொஹான்னஸ் கெப்லர்.

 k4
​யோஹான்னஸ் கெப்லரின் கண்டுபிடிப்பு – டெலிஸ்கோப் (ஜூலை 2014)

யோஹான்னஸ் கெப்லர் பிறந்து வளர்ந்த கால கட்டத்தில் அறிவியல் உலக ஆய்வாளர்கள், ஏனைய கோள்கள் அனைத்தும் பூமியைச் சுற்றி வருவன என்ற சிந்தனையைக் கொண்டிருந்தனர். சூரியனை மையமாக கொண்டு  இயங்குவது இந்த வான்வெளி என்ற சிந்தனை அப்போது பிறக்காத காலம். இந்த காலகட்டத்தில் தான் கெப்லர் தன் ஆய்வின் வழி, பூமியோடு ஏனைய கோள்களும் சூரியனைத் தான் சுற்றி வருகின்றன என்ற விஞ்ஞான உண்மையைக் கண்டுபிடித்து உலகுக்கு கொடுத்தவர் என்பதை நிச்சயம் நாம் நினைவு கூர வேண்டும்.
இந்தச் சிந்தனையை முன்வைத்து அறிவியல் ஆய்வு உலகத்தை ஏற்க வைப்பது என்பது மிகச் சாதாரண விஷயம் அல்ல.. அதிலும் அந்த 17ம் நூற்றாண்டில்! ஆயினும் தனது விடா முயற்சியாலும் கடுமையான தொடர் ஆய்வுகளின் வழியாகவும் நிறைந்த சான்றுகளின் வழியும் இந்த உண்மையை உலகுக்குப் புலப்படுத்தினார் கெப்லர்.  இது மட்டுமன்று. கோள்கள் சூரியனைச் சுற்றி பயணித்துச் செல்லும் பாதை  முழுமையான வட்ட வடிவ பாதையல்ல என்ற உண்மையையும் தன் ஆய்வுகளின் வழி கண்டறிந்து நிறுவிய பெருமையும் கெப்லரையே சாரும்.
k3
கெப்லரின் ஆய்வுக் குறிப்புக்கள் அடங்கிய நூல் 17ம் நூற்றாண்டு வெளியீடு

வைல் டெர் ஸ்டாட் ஒரு பசுமை அழகு நிறைந்த ஒரு  சிறு கிராமம். இக்கிராமத்தில் 1571ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் நாள் யொஹான்னஸ் கெப்லர் பிறந்தார். வறுமையான குடும்ப சூழலில் வளர்ந்தவர் திரு.கெப்லர். இளம் வயதிலே கல்வியில் நல்ல ஆர்வம் உள்ளவர் இவர். அருகாமையில் இருக்கும் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க இவருக்கு  உபகாரச் சம்பளம் கிடைத்தது. இந்தப் பல்கலைக்கழக வாழ்க்கையின் போது நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் அவர்களின் ஆய்வுக் குறிப்புக்களையெல்லாம் ஆர்வத்தோடு படித்து கோள்களைப் பற்றிய ஆய்வுகளில் தம்மை தீவிரமாக இவர் ஈடுபடுத்திக் கொண்டார்.
​1596ம் ஆண்டில் கெப்லர் தனது மு​தல்  ஆய்வுப் படைப்பை முன் வைத்தார்.  காப்பர் நிக்கஸ் கட்டளை தொடர்பான ஒரு ஆய்வு. இது ஜெர்மனியில் மட்டுமன்று, ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலும் மார்ட்டின் லூதர் ஏற்படுத்தி விட்டிருந்த பயங்கர கருத்தலைக ​ள்​ எழுந்து கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. 1539ம் ஆண்டில் தான்  மார்ட்டின் லூதர் கத்தோலிக்க மதத்திதிற்கு எதிரான தனது கருத்துக்களை வெளியிட்டார். அக்கால கட்டத்தில் லூதருக்கு ஆதரவாக டேனீஷ் அரசு செயல்பட்டது. லூதரின் கருத்துக்கள் பரவ குழுக்கள் ஆங்காங்கே உருவாகி முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.  மார்ட்டின் லூதரின் புதிய கருத்தாக்கம் உருவாக்கிய சிந்தனை மாற்றத்தை ஏற்றுக் கொள்ள இயலாது தத்தளித்துக் கொண்டிருந்த கத்தோலிக்க மத ஆதிக்க சக்திகள் கெப்லர் அடுத்தடுத்து ​வெளியிட்ட கண்டுபிடிப்புக்களை ஏற்றுக்கொள்வதில் ​த​டைகளை முன் வைத்தன என்ற போதிலும் ஆய்வுத் திறமையினால் ஏனைய ஆய்வாளர்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவராகத் திகழ்ந்தார் கெப்லர்​.

k2
​ட்யூபிங்கன் கிராமம் – கோப்பர்னிக்கஸ் உருவச் சித்திரம்

இந்தக் காலகட்டத்தில் தான் மூலிகை மருத்துவத்தில் ஈடுபட்டு மக்களுக்கு நோய் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட உழைத்த அறிவார்ந்த முறையில் செயல்பட்ட பெண்களை  Witches  என்று சொல்லி அவர்களை உயிரோடு எரிக்கும் கொடூரமான ஒரு பழக்கமும் ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது. கெப்லரின் தாயாரும் இப்படி ஒரு சூனியக்காரி என்று அடையாளம் காணப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும் சூழ்நிலை எழுந்தது என்பதும் ஆச்சரியமான ஒரு உண்மை. அவருக்கு என்ன நேர்ந்தது.. கெப்லரின் கண்டுபிடிப்புகள் .. அவரது குடும்ப வாழ்க்கை, பயணங்கள் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

தொடரும்…

Wednesday, July 30, 2014

33. பெரானாக்கான் அருங்காட்சியகம் (2), சிங்கப்பூர்

இன்றைய வலல்மை மின்னிதழில் வெளியிடப்பட்ட பகுதி!
மின்னிதழில் வாசிக்க! http://www.vallamai.com/?p=48607
முனைவர்.சுபாஷிணி 

​மலேசியா-சிங்கை வாழ் மக்களைத் தவிர ​பெரானாக்கான் சமூகத்தைப் பற்றி ஏனைய பலர் அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. இந்தச் சமூகம் ​மலேசியா-சிங்கை கடல் வணிகப் பகுதியை மையமாகக் கொண்ட நிலப்பகுதியில் மட்டுமே அதிகமாக உருவாகி வளர்ந்த ஒரு சமூகம் என்பதே இவர்களின் தனித்துவம்.
14ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின் படிப்படியாக 15ம் நூற்றாண்டில் அன்றைய மலாயாவின் வர்த்தக மையமாக மலாக்கா வளர்ச்சியுற்றது. அரேபிய வணிகர்கள், சீன வணிகர்கள் என இப்பகுதிக்கு வந்து செல்லும் வேற்று நாட்டினர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய காலகட்டமது. சோழ சாம்ராஜ்ஜியம் மலாக்காவுக்கு மேலே வடக்கு மானிலத்தில் கடாரத்தில் மையமிட்டு மலாயா தீபகற்பம் முழுமைக்கும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அதாவது 9ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு ஆரம்பம் வரை ஹிந்து சமயப் பின்னனியுடன் அமைந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்தது. இந்தோனேசிய தீவுகளில் ஆட்சி செய்த ஸ்ரீவிஜயா மன்னர்களும் ஹிந்து சமயம் தழுவி ஹிந்து சமய சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த காலம் அது.
பினாங்கு, மலாக்கா, சிங்கை ஆகிய பகுதிகளில் பெரானாக்கான் மக்களின் குடியிருப்பைக் காட்டும் வரைபடம்பினாங்கு, மலாக்கா, சிங்கை ஆகிய பகுதிகளில் பெரானாக்கான் மக்களின் குடியிருப்பைக் காட்டும் வரைபடம்
ஆயினும் 11ம் நூற்றாண்டில் மலாயா தீபகற்பம் வந்த அரேபியர்களின் தாக்கத்தால் மலாயா இஸ்லாமிய நாடாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டு கொண்டிருந்தது. கடாரப் பகுதியில் அரச பரம்பரையினர் 12ம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாமிய மதத்தைத் தழுவி இஸ்லாமிய சமயம் சார்ந்த அரசாட்சி செலுத்திக் கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களது ஆட்சி என்பது மலாயா முழுமைக்கும் என்றில்லாது இன்றைய பெர்லிஸ், கெடா, பினாங்கு ஆகிய பகுதிகளில் அடங்கியதாக மட்டுமே இருந்தது.
15ம் நூற்றாண்டு மலேசிய வரலாற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுவது. அதுவே ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய ஒரு மலாய் அரசாட்சியின் தொடக்ககாலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலாய் ஆட்சிக்கு வித்திட்டவர் பரமேஸ்வரா.
சிங்கபுரம் என்ற சிங்கப்பூரை ஆட்சி செய்து கொண்டிருந்த ஸ்ரீ மஹாராஜாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு அவரது மகன் பரமேஸ்வரா (1344-1414) தனது ஆட்சியைத் தொடங்கினார். இது நிகழ்ந்த ஆண்டு 1389. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான மஜபாஹிட் தீவில் தனியாட்சி செய்து வந்த ஒரு குழு சிங்கப்பூர் தீவைக் கைப்பற்ற செய்த முயற்சியில் அத்தீவு அவர்கள் வசம் விழ, பரமேஸ்வரா தனது ஆதரவாளர்கள் சிலருடன் தப்பித்து மலாயாவின் மெர்போக் நதிக்கரைக்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்கின்றார். மலாக்கா பசுமை வளம் நிறைந்த கடற்கரை பகுதி நகரம். இத்தகைய அருமையான பகுதியில் தலைமைத்துவம் இன்றி இருக்கும் அப்பகுதிக்கு தானே தன்னை தலைவனாக்கிக் கொண்டு பின்னர் மன்னராக முடிசூட்டிக் கொண்டு அங்கே மலாக்காவின் அரச பரம்பரைக்கு ஒரு தொடக்கத்தை வைக்கின்றார் பரமேஸ்வரா
பரமேஸ்வரா பின்னர் வணிக நோக்கத்துடன் மலாக்கா வரும் பெர்ஷிய குழுவினருடன் அணுக்கமான உறவினை வளர்க்கும் பொருட்டு பெர்ஷிய இளவரசி ஒருவரை மணந்து பின்னர் இஸ்லாமிய மதத்தையும் தழுவுகின்றார். தன் பெயரையும் ஸ்ரீ இஷ்கந்தர் ஷா என மாற்றிக் கொள்கின்றார். இதுவே மலாயா அதிகாரப்பூர்வமாக ஒரு இஸ்லாமிய மதம் சார்ந்த நாடாக உருவாகக் காரணமாக அமைந்த முக்கியச் சம்பவம்.
அதன் பின்னர் சீனாவுடன் சிறந்த வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார் பரமேஸ்வரா. இதன் பொருட்டு சீனாவில் ஒரு பகுதியின் அரச குடும்பத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு இளவரசி ஹங் லீ போவை திருமணம் செய்கிறார். சீனாவிற்கும் வர்த்தகத்தை விரிவாக்கும் பொருட்டு கடல் பயணம் செய்தவர் இவர்.
இக்கால கட்டத்தில் சீனாவிலிருந்து மலாக்காவிற்கு வந்து சேரும் வர்த்தகக் குழுவினரில் பலர் உள்ளூரிலேயே தங்கிவிட அவர்களில் பலரும் படிப்படியாக உள்ளூர் மக்களை மணந்து அங்கேயே ஒரு புதிய இன உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைக்கின்றனர். இதுவே பெரானாக்கான் சமூகம் உருவான சரித்திரம்.
​பெரானாக்கான் இனமக்கள் - ஒரு குடும்பப் படம்: பாரம்பரிய உடையில்
​பெரானாக்கான் இனமக்கள் – ஒரு குடும்பப் படம்: பாரம்பரிய உடையில்
இப்படி உருவான பெரானாக்கன் சமூகத்தினர் குறிப்பாக மலாக்காவிலும் அதற்கடுத்த வகையில் சிங்கையிலும் பினாங்கிலும் மட்டுமே குடியிருந்தனர். கடல் வணிகம் என்பது முக்கியமாக மையம் கொண்டிருந்த துறைமுகப் பகுதிகள் இவை மூன்றும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். மலாக்கா அரச குடும்பத்தின்அரது ஆதரவும் இம்மக்களுக்கு அமைந்திருந்தது. அடிப்படையிலேயே வர்த்தகமே இச்சமூகத்தினரின் அடிப்படை தொழிலாக அமைந்ததால் இச்சமூகத்தினர் ஆரம்ப காலம் தொட்டு செல்வச் செழிப்புடன் வாழும் சமூகமாகத் திகழ்கின்றனர்.
சீன ஹொக்கிய சமூகம் மலாய் இன மக்களோடு திருமண உறவின் வழி கலந்ததின் விளைவாக உணவு, உடை, பேச்சு மொழி ஆகியன மலாய் அடிப்படையிலும் மருத்துவம், பெயர், கலாச்சாரம், பண்பாடு , திருவிழாக்கள் ஆகியன சீன சமூகத்தின் வழக்கத்தின் அடிப்படையிலும் அமைந்திருப்பவை. இவர்களது சமயம் சீனாவில் பாரம்பரியமாக இவரகள் வழிபாட்டு சமயமாக அமைந்த தாவோயிஸம். சிலர் புத்த மத வழிபாடும், கிறிஸ்துவர்களாக மதம் மாறியோர் சிலர் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுவோராகவும் இருக்கின்றனர். திருமணச் சடங்குகள் எனும் போது அது சீன பாரம்பரியத் திருமணச் சடங்கு முறையை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது.
​சிங்கையில் உள்ள பெரானாக்கான் அருங்காட்சியகம் செல்லும் போது படங்களுடன் இம்மக்களைப் பற்றிய மேலும் பல தகவல்களை வருகையாளர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த அருங்காட்சியகம் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை இங்கு காணலாம் http://www.peranakanmuseum.org.sg/. சிங்கை செல்பவர்கள் சென்று கண்டு வர வேண்டிய அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம்பெற வேண்டிய ஒரு அருங்காட்சியகம் இது.
இத்தொடரின் எனது அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். காத்திருங்கள்..!

Wednesday, July 23, 2014

32. பெரானாக்கான் அருங்காட்சியகம், சிங்கப்பூர்

-
முனைவர்.சுபாஷிணி 

மலாயா இந்தோனேசிய நாடுகளுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேற்றம் என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருவது. இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பல்லாண்டுகளாகப் பல காலகட்டங்களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் மக்கள் குடியேற்றம் என்பது நிகழ்ந்துள்ளது.
சீனர்களின் வர்த்தக ஈடுபாடு அவர்கள் உலக உருண்டையின் பல பகுதிகளுக்குச் செல்ல உந்துதலாக அமைந்தது. மலாயா தீபகற்பத்திற்குச் சீனர்களின் குடியேற்றம் என்பது பல காலகட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றது. சீனாவின் பல்வேறு நிலப்பகுதிகளிலிருந்து மக்கள் வியாபாரம் செய்யும் நோக்கத்துடனும், உழைத்துப் பொருள் சேர்க்கும் நோக்கத்துடனும் இப்பகுதிகளுக்குப் புதிய வாழ்வை தேடி வந்திருக்கின்றனர். அப்படி வந்தவர்களில், அதிலும் குறிப்பாக 15ம் நூற்றாண்டு தொடக்கம் மலாக்கா சிங்கை ஆகிய பகுதிகளில் வந்து குடியேறியோர் தனித் தன்மை வாய்ந்தவர்களாகக் கருதப் படுகின்றனர்.
மலேசியாவைப் பொருத்தவரை சீனர்களில் பெரும்பாலானோர் ஹொக்கியான் இனக்குழுவைச் சார்ந்தவர்கள். இதற்கு அடுத்தார்போல அமைவது தியோச்சூ, கண்டனீஸ் இனக்குழு மக்கள்.
​மலேசியா சிங்கை ஆகிய இருநாடுகளும் இரு தனி நாடுகள் என்ற போதும் ​சிங்கப்பூர் ​மலாயா மக்களால் அன்றும் மலேசிய மக்களால் இன்றும் பிரித்துப் பார்க்க முடியாத வகையிலேயே இணைந்தே காணப்படும் நிலை உள்ளது. ஒரு வகையில் சிங்கை மலாயாவின் ஒரு பகுதியாகவே 1965ம் ஆண்டு வரை கருதப்பட்டது. மலாயா சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியில் இடம்பெறுவது தொடர்ந்து, அதன் பின்னர் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுபட்டு 1963ம் ஆண்டு சுதந்திர மலேசியாவுடன் ​சிங்கப்பூர் ​இணைந்தாலும் இந்த நிலை நெடுநாட்கள் நீடிக்கவில்லை. 1965ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகத் தன்னை பிரகட​ன​ப்படுத்திக் கொண்டது சிங்கப்பூர். மலேசிய மக்கள் போலவே சிங்கையின் மக்கள் தொகையில் மலாய், சீன, இந்திய வம்சாவளியினர் பெரும்பான்மையினராக அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நான் அறிமுகம் செய்யும் அருங்காட்சியகம் ​பெரானாக்கன் என அறியப்படும் ​ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியல் விஷயங்களைச் சேகரித்து வைத்துள்ள ​ ​ஓர் அருங்காட்சியகம்.
பெரானாக்கன் அருங்காட்சியகம்
பெரானாக்கன் அருங்காட்சியகம்
சிங்கையில் அமைந்திருக்கும் இந்த பெரானாக்கன் அருங்காட்சியகம் பெரானாக்கான் எனப்படும் பாபா-ஞோஞ்ஞா (baba-Nyonya) மக்களின் வாழ்க்கை முறையை விவரிக்கும் ஒரு அருங்காட்சியகம். இது சிங்கை நகரி ​ன் மையத்தில் முக்கியப் பகுதியில் அதிலும் குறிப்பாக சிங்கை நேஷனல் அருங்காட்சியகம், ஆர்க்கைவ் ஆகியவை உள்ள​ பகுதியில் அமைந்திருக்கின்றது. ​வெளிப்புரத்தில் காலணித்துவ ஆட்சியின் கட்டிட கட்டுமான வடிவத்தை கொண்டு அமைந்திருக்கும் இக்கட்டிடம் உள்ளே ​ கண்ணைக் கவரும் வர்ணங்களில் ஆன அலங்கார​ங்களையும் அரும்பொருட்களின் சேகரிப்புக்களையும் கொண்டுள்ளது. ​ இந்த அருங்காட்சியகம் அடிப்படையில் 1912ம் ஆண்டு தாவ் நான் சீன ​ப்​ பள்ளியை மாற்றி உருவாக்கப்பட்டது. 2005ம் ஆண்டு நான் சிங்கை சென்றிருந்த சமயம் இந்த அருங்காட்சியகம் சென்று பார்த்து வரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.
பாபா என்பது இவ்வினத்து ஆண்களைக் குறிக்கவும், ஞோஞ்ஞா என்பது இவ்வினத்துப் பெண்களைக் குறிக்கவும் பயன்பாட்டில் உள்ள சொல். சீன ஹொக்கியன் சமூகத்தைச் சேர்ந்த இம்மக்கள் தாம் புதிதாக வந்து குடியேறிய மலாயாவில் அங்கிருந்த உள்ளூர் மக்களின் மொழி, பழக்க வழக்கங்களை உள்வாங்கிக் கொண்டும் உள்ளூரில் ​திருமணம் புரிந்து கொண்டும் உள்ளூர் மக்களோடு மக்களாக கலந்து போனவர்கள். இம்மக்களின் முகச் சாயலில் மலாய் சீன இரு ​சமூகங்களின் ​இனக்கலப்பும் மிக நன்கு தெரியும். பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தவர்கள் இவர்கள்.
​பெரானாக்கன் சமூகத்தினர் பயன்படுத்தும் நாற்காலி, கட்டில்கள்
​பெரானாக்கன் சமூகத்தினர் பயன்படுத்தும் நாற்காலி, கட்டில்கள்
​ஆச்சரியப்படத்தக்க வகையில் ​இவர்கள் சீனர்களிடமிருந்து, அதிலும் குறிப்பாக ஹொக்கியான் சமூகத்து சீனர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ஒரு புதிய சமூகமாக உருவானவர்கள் என்பதே இவர்களின் தனிச்சிறப்பு.
சீன மொழியில் ஒன்றான ஹொக்கியான் மொழியின் சொற்கள் கலந்த மலாய் மொழியின் ஒரு வடிவம் இவர்கள் பேசும் மொழி. இம்மொழி இப்போது பயன்பாட்டில் மிகக் குறைந்து வருகின்ற போதிலும் இன்னமும் இல்லங்களில் பெரானாக்கான் சமூக மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றது.
உணவுப் பாத்திரங்கள்
உணவுப் பாத்திரங்கள்
மலேசியாவின் மலாக்கா மானிலத்தி​ன் ​மலாக்கா நகரில் பெரானாக்கன் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. ​அங்கும் இவ்வகை சமூகத்தினர் ஏராளமானோர் இன்றளவும் வாழ்கின்றனர். அங்கிருக்கும் அருங்காட்சியகத்தைவிட பெரியதாக உள்ளது சிங்கையில் இருக்கும் இந்த பெரானாக்கான் அருங்காட்சியகம். இங்கு பாபா-ஞோஞ்ஞா சமூகத்தினரின் புகைப்படங்கள் சில உள்ளன. திருமணச் சடங்குகளைக் காட்டும் புகைப்படங்கள், சமூக நிகழ்ச்சிகளைக் காட்டும் புகைப்படங்கள் ஆகியனவாக இவை அமைந்திருக்கின்றன. அதில் குறிப்பாக ஆண் பெண் உடைகள், திருமண உடைகள், விழாக்களில் எடுத்த புகைப்படங்கள் என இங்குள்ள சேகரிப்புக்கள் இம்மக்களின் உருவத்தோற்றம், உடையலங்காரம் ஆகியனவற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன.

தொடரும்…

Wednesday, May 28, 2014

31. மூஸியோ டி செரா (Museo de Cera), மட்ரிட், ஸ்பெயின்

முனைவர்.சுபாஷிணி 

​மெழுகுச் சிலைகளில் பிரபலமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் உருவத்தை வடித்து வைத்து ​இதனைக் காட்சிக்கு வைப்பதே இத்தகைய அருங்காட்சியகங்களின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு நாட்டின் சூழலிலும் அங்கே பிரபலமாகக் கருதப்படுவோர் இந்த உருவச் சிலை வடிவங்களில் இடம்பெறுகின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற மனிதர்களின் சிலைகளை உருவாக்கும் அதேவேளை உள்ளூர் அரசியல், சினிமா, சமூக, வரலாற்று நிகழ்வுகளில் முக்கியப் பங்கெடுத்தோர் இத்தகைய மெழுகு உருவச் சிலைகளாக இவ்வகை அருங்காட்சியகக் கூடங்களில் காட்சிக்கு நிற்பர். அர்சியல் தலைவர்களில் ஒபாமா, தற்போது இத்தகைய அனேக மெழுகு அருங்காட்சியகங்களில் காட்சி தருகின்றார். நடிகர்களில் ஆஞ்சலினா ஜூலி அவர் கணவர் நடிகர் ப்ராட் பிட் இருவரும் இதே வகையில் நான் பார்த்த வேறு மெழுகு அருங்காட்சியகங்களிலும் காட்சியில் இருக்கின்றனர். இதே போல காந்தியும். இரண்டு வெவேறு அருங்காட்சியகங்களில் காந்தியின் மெழுகுச் சிலையப் பார்த்திருக்கின்றேன்.

மூஸியோ டி செரா, காதலர் தினமாகக் கொண்டாடப்படும் பெப்ரவரி 14ம் தேதி 1972ம் ஆண்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. 2000 சதுர அடி விரிவான கட்டிடத்தில் இரண்டு மாடித்தளங்களில் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் அமைந்துளளது. எந்த அளவிற்கு வரலாற்று பிரபலங்களின் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தை அலங்கரிக்கின்றனவோ அதே அளவு பொழுது போக்கு அம்சங்களான காற்பந்து, சினிமா துறையைச் சார்ந்த பிரபலங்களின் சிலைகளும் இங்கு நிறைந்திருக்கின்றன.

பைரட் ஆஃப் கரீபியன்  ​(ஜூலை 2013)

பல பெண்களின் கனவு நாயகரான ஜோர்ஜ் க்ளூனி, ப்ராட் பிட் ஆகியோரும் இளைஞர்களின் கனவு தேவதைகளான ஆஞ்சலினா ஜூலி, பெனலோப் க்ரூஸ் போன்றோரும் இங்கு காட்சியளிக்கின்றனர். ஸ்பெயினில் இரண்டு உலகத் தரம் வாய்ந்த காற்பந்து குழுக்களான ரியால் மட்ரிட் குழுவின் பிரபலங்களும் எஃப்ஸி பார்ஸலோனா குழுவின் பிரபலங்களும் கூட இந்த அருங்காட்சியகத்தில் மெழுகு வடிவத்தில் உருவச் சிலைகளாக காட்சியளிக்கின்றனர்.

சில பிரபலங்கள் தங்கள் உருவச் சிலைகள் தயாராகி இங்கு காட்சிக்கு வைக்கப்படும் நிகழ்வு நடைபெறும்போது நேரில் மூஸியோ டி செரா வந்து சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் நடக்கின்றது. உதாரணமாக ரியால் மட்ரிட் காற்பந்து குழுவில் பிரபலமான போர்த்துக்கீஸியரான ரொனால்டோ, தனது உருவச் சிலை இந்த அருஙகட்சியகத்தில் இடம் பெறத் தயாரான வேளையில் அந்த நிகழ்வுக்கு நேரடியாக வந்து இவ்விழாவைச் சிறப்பு செய்தார் என்ற செய்தியையும் இணையத்தில் காணலாம்.


​அமெரிக்க ஜனாதிபதிகள்  ​(ஜூலை 2013)
​​
மெழுகுச் சிலைகள்​ (Wax sculptures)  என நாம் அறிந்திருக்கும் இவ்வகை உருவச் சிலைகள் ஐரோப்பாவில்  பண்டைய காலத்தில் அரச குடும்பத்தினரில் யாரேனும் இறக்கும் போது அவர்களை ஒத்த வடிவில் உருவம் அமைத்து மரியாதைச் செலுத்தும் நோக்கில் ஆரம்பகாலத்தில் உருவாகியது. மிகப் பழமையான இவ்வகை உருவச் சிலை எனத் தேடினால் இப்போது நமக்குக் கிடைப்பது இங்கிலாந்தின் லண்டன் நகரில் வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் இருக்கும் British royal wax effigies சேகரிப்புக்களைக் குறிப்பிடலாம். இதில் குறிப்பாக மன்னர் 3ம் எட்வர்ட் (1377) அவர்களின் மெழுகு உருவத்திலான உருவச் சிலையும் உள்ளது. 

​19ம் நூர்றாண்டில் மேடம் தூஸோ ​(Madame Tussauds) இத்துறையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர். அவரது உருவாக்கங்களை காட்சிக்கு வைக்கும் வகையில் ஒரு அருங்காட்சியகத்தை அவர் நிறுவினார். அதுவே லண்டன் பேக்கர் ஸ்ட்ரீட்டில் இருக்கும் மேடம் தூஸோ மெழுகுச் சிலைஅருங்காட்சியகம். இங்கு நடப்பதற்குக் கூட இடம் கூட குறைவு. அந்த அளவிற்கு எல்லா பகுதிகளையும் நிறைத்துக் கொண்டு இவ்வகை சிலைகள் நிறைந்திருக்கின்றன. மேடம் தூஸோ அவர்களின் பெயரிலேயே இங்கிலாந்து தவிர்த்த பல இடங்களில் மெழுகுச் சிலை அருங்காட்சியகங்கள் உருவாகின. சில தனியார், அல்லது அரசாங்க முயற்சிகளினால் உருவான இவ்வகை அருங்காட்சியகங்களும் உலகின் பல நாடுகளில் காணக்கிடைக்கின்றன.

தி லாச்ட் சப்பர்  ​(ஜூலை 2013)
நாம் விரும்பும் பிரபலங்களை நேரில் சந்திக்க வேண்டும், அவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்து அது சாத்தியமல்ல என நினைக்கும் பலருக்கு இவ்வகை அருங்காட்சியகங்கள் மகிழ்ச்சி தருபவை. நேரில் இவ்வகை அருங்காட்சியகங்கள் செல்லும் போது மக்கள் ஆங்காங்கே தமக்கு பிடித்தோரின் சிலைகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாகச் செல்வதைக் கண்டு ரசிக்க முடியும். ஒரு வகையில் மக்களின் மகிழ்ச்சிக்காகத்தானே இவ்வகையிலான அருங்காட்சியகங்களும் அமைக்கப்படுகின்றன!

இத்தகைய அருங்காட்சியகங்கள் சென்று வரும் போது பலரை ஒரே இடத்தில் பார்த்த ஒரு திருப்தியும் ஏற்படும் :-)  அடுத்த பதிவில் உங்களை மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். 

​உசாத்துணை​

Monday, May 19, 2014

30. மூஸியோ டி செரா (Museo de Cera), மட்ரிட், ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மட்ரிட்டில் அருங்காட்சியகங்களுக்குக் குறைவில்லை. முன்னர் மட்ரிட் நகரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகங்களை அறிமுகப்படுத்தும் ஒரு பதிவில் சற்றே விரிவாகவும் விளக்கமாகவும் பொதுவான அறிமுகமாக மட்ரிட் நகர அருங்காட்சியகங்கள் பற்றிய சில தகவல்களை வழங்கியிருந்தேன். இந்தப் பதிவில் மட்ரிட் நகரில் உள்ள மற்றொரு அருங்காட்சியகத்திற்கு வாசகர்களான உங்களை அழைத்துச் செல்கின்றேன்.
இன்று நாம் செல்லவிருப்பது மட்ரின் நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மூஸியோ டி ஸெரா (Museo de Cera). வேக்ஸ் (மெழுகு) மூஸியம் என்றால் முதலில் நம் மணக்கண்னில் தோன்றுவது லண்டன் மாநகரில் இருக்கும் மேடம் தூஸோ வேக்ஸ் அருங்காட்சியகம் தான். ஆனால் லண்டனில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் மெழுகினால் தயாரிக்கப்படும் உருவச் சிலைகள் இருக்கும் அருங்காட்சியகங்கள் பெருகி விட்டன. ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரிலும் ஒரு மெழுகுச் சிலை அருங்காட்சியகம் இருக்கின்றது. இதே போல ஒன்று தான் மட்ரிட் நகரில் இருக்கும் இந்த மூஸியோ டி ஸெரா.
mc1
அறிஞர் குழுவினரது சந்திப்பு ​(ஜூலை 2013)
ஏறக்குறைய 450க்கும் மேற்பட்ட மெழுகு உருவச்சிலைகள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. ஸ்பெயின் முழுமைக்குமுள்ள இவ்வகை அருங்காட்சியகங்களில் அதிகம் மெழுகு உருவச் சிலைகள் நிறைந்த ஒரு அருங்காட்சியகம் என்றால் அது இது மட்டும் தான். நகரின் மத்தியிலேயே இருப்பதால் மெட்ரோ ஸ்டேஷனை விட்டு இறங்கியதுமே நேராக அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து விடலாம்.
கட்டிட அமைப்பில் இந்த அருங்காட்சியகத்தை இரண்டு தளங்களாகப் பிரித்து அமைத்திருகின்றனர். முதலில் கட்டணம் செலுத்தி டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு வெளிவரும் போது நம்மை அழைத்துச் சென்று வழிகாட்ட சில ஊழியர்கள் இருக்கின்றனர். அருங்காட்சியகப் பகுதி மூன்று தனித்தனி பகுதிகளாக இருப்பதால் இந்த ஊழியர்களின் துணையோடு ஒவ்வொரு பகுதிக்கும் செல்வது சிறப்பு.
அச்சமூட்டும் ஒரு ரயில் பயணம், வானவெளிப்பயண சிமியூலேட்டர், அதன் பின்னர் மெழுகுச் சிலைகள் அருங்காட்சியகம் என்ற வகையில் மூன்று தனிப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றது இந்த அருங்காட்சியகம்.
நான் சென்ற போது முதலில் அச்சமூட்டும் ரயில் பயணம் உள்ள பகுதிக்குச் சென்று ரயிலில் பயணித்து குகைகளுக்குள் பயணம் செய்து காட்டு மிருகங்கள், பேய் பிசாசுகளின் உருவங்கள் போல செய்யப்பட்டிருந்த சிலைகளைப் பார்த்து ரசித்து முடித்து விட்டு பின்னர் வானவெளிப் பயண சிமியூலேட்டர் பயணம் மேற்கொண்டு இறுதியாக அருங்காட்சியகப் பகுதிக்கு வந்தேன்.
mc2
க்ளியோபாட்ரா (ஜூலை 2013)
ரயில் பயணத்தில் ஏனைய பார்வையாளர்களுடன் பயணிக்கும் போது குழந்தைகள் அச்சத்துடனும் குதூகலத்துடனும் கூச்சலிட்டு சத்தம் போட்டு சிரித்து மகிழும் போது நாமும் அந்தக் குழந்தைகளோடு குழந்தைகளாகி அவர்களைப் போல குதூகலித்து மகிழலாம். அதே போல வானவெளி பயண சிமியூலேட்டர் வாகனத்தில் உட்கார்ந்து அந்த சிமியூலேட்டர் நம்மை அழைத்துச் செல்லும் போது உண்மையில் நிலத்தில் தான் ஒரு வாகனத்திற்குள் அமர்ந்து இருக்கின்றோம் என்பதை மறந்து வானத்தில் பறப்பது போலவும், பல வின்வெளிக் கப்பல்கள் நம்மை தாக்க வருவது போல வர அங்கிருந்து தப்பித்து செல்ல நாம் முயற்சி எடுப்பது போலவும் மனம் ஒன்றித்துப் போய் இயங்க ஆரம்பித்து விடுகின்றோம். 15 நிமிடம் நீடிக்கும் இந்தப் பயணம் முடிந்து வெளியே வந்தால் .. ஆஹா.. ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தோம் என்று சொல்லி பெருமூச்சு விட்டு மகிழும் நிலைமையை உணர்வோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி .. அருங்காட்சியகம் பார்க்கத்தான் வந்திருக்கின்றோம். வானத்தில் வின்வெளிக் கப்பல் பயணம் மேற்கொள்ள அல்ல, என்பதை நம் மனம் நமக்கு ஞாபகப் படுத்தும் போது சிரித்துக் கொண்டே அடுத்தப் பகுதிக்குச் செல்வது தான் நிகழும்.
மெழுகுச் சிலை அருங்காட்சியகப் பகுதி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருப்பொருளுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உள்ளே முதலில் நுழையும் போது நம்மை வரவேற்பவை எகிப்திய பண்டைய நாகரிகத்தை விவரிக்கும் காட்சிகளே. இங்கே க்ளியோபாட்ரா, ஜூலியஸ் சீஸர், மார்க் அண்டனி உருவச் சிலைகள் தத்ரூபமாக இவர்கள் நம் கண் முன்னே இருந்து காட்சியளிப்பது போன்று அமைத்திருக்கின்றனர். அதனை அடுத்ததாக அரேபிய வரலாறு சொல்லும் பகுதி, அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றை காட்சிப்படுத்திக் காட்டும் மெழுகுச் சிலைகள், அதன் கருப்பொருளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
mc3
​ஸ்பெயின் அரச குடும்பம் (ஜூலை 2013)

இந்த வரிசையில் நம் கண்களையும் கருத்தையும் கவரும் ஒரு பகுதி ஸ்பெயின் அரச குடும்பத்தினர் இருக்கும் ஒரு பகுதி. மன்னர் முதலாம் ஹுவான் கார்லோஸ், அரசியார் ஸோஃபியா, இளவரசர், இளவரசியார் – இவர்கள் நால்வருமே நம் கண் முன்னே புன்னகைப் பூத்த வண்ணம் எழிலாக நின்ற வண்ணம் நம்மை பார்த்தவாறு இருப்பது மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கின்றது.

mc4
உலகத் தலைவர்களது உருவச் சிலைகள் (ஜூலை 2013)
மற்றொரு பகுதியில் உலகத் தலைவர்கள் சிலரது சிலைகள் பல ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ளன, ஜெர்மனியின் தற்போதைய சான்ஸலர் திருமதி.மெர்க்கல், மஹாத்மா காந்தி, மறைந்த இந்தியப் பிரதமர் மஹாத்மா காந்தி, மறைந்த ப்ரிட்ட்ஷ் இளவரசியார் டயானா, யாசீர் அராஃபாட், தெரேசா அன்னையார் ஆகியோரது உருவச் சிலைகளை உதாரணமாக்ச் சொல்லலாம்.
மேலும் இங்குள்ள ஏனைய உருவச் சிலைகளைப் பற்றி அடுத்த பதிவில் காண்போமே!
தொடரும்….

Friday, May 2, 2014

29. லியானார்டோ அருங்காட்சியகம் (2), வின்ச்சி, இத்தாலி

முனைவர்.சுபாஷிணி 

மனித பரி​ணாம​ வளர்ச்சிக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஒரு பாலமாக அமைந்தவர்களில் லியோனார்டோவின் பங்கு அளப்பறியது. அவரது சிந்தனைகளில் உதித்த கருத்துகள் அனைத்தையும் தமது குறிப்பேட்டில் அவர் தொகுத்து வைத்ததனால் அவை இன்று நாம் அறிந்து கொள்ள உதவும் ஆவணங்களாகத் திகழ்கின்றன. தனது கண்டுபிடிப்புக்களில் சிலவற்றை லியோனார்டோ மாடல்களாகச் செய்தும் பார்த்திருக்கின்றார். பல கண்டுபிடிப்புகள் செயல்வடிவம் பெற்றதோடு அவை மென்மேலும் செம்மையாக்கப்பட்டு மனிதகுலத்தின் நாகரிக வளர்ச்சியின் பயன்பாட்டிலும் இடம்பெறுவதாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
இத்தாலியின் வின்ச்சி நகரில் உள்ள இந்த லியோனார்டோ அருங்காட்சியகம் இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கின்றது. ஒன்று நகர மையத்தில் இருக்கும் அருங்காட்சியகம். இங்கே லியோனார்டோவின் கையெழுத்துக் குறிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மாடல்கள் இந்த அருங்காட்சியகத்தை நிறைத்துள்ளன. இந்த மாடல்களை உருவாக்கியதில் பெரும் பங்கு IBM நிறுவனத்தைச் சாறும் என்ற குறிப்பும் அங்கே காணக் கிடைக்கின்றது.
suba 1
அருங்காட்சியகத்தின் உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாடல் வடிவங்கள்
இதைத் தவிர்த்து வின்ச்சி நகர மையத்தைக் கடந்து ஏறக்குறைய 3கிமீதூரத்தில் லியோனார்டோவின் பிறந்த இல்லம் இருக்கின்றது. இதில் ஒரு கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே நவீன தொழில் நுட்பம் கொண்டு ஹோலோக்ராம் வடிவில் நம் கண் முன்னே லியோனார்டோ டா வின்சி தோன்றி தம்மை பற்றியும் தனது சிந்தனைகளை, தன் வாழ்க்கை வரலாறு என இத்தாலி மொழியிலும் ஆங்கிலத்திலும் கூறுவதைக் கேட்கலாம். இது நம் முன்னே லியோனார்டோ நின்று பேசுவதைப் போன்றதொரு உணர்வினை நமக்கு வழங்குகின்றது. இந்தக் கண்காட்சியகத்தில் அவரது இல்ல்லத்தின் கூடம், வாசல் பகுதி, சமையலறை, தூங்கும் அறை போன்ற பகுதிகளில் விளக்கக் குறிப்புக்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.
லியோனார்டோவின் வாழ்க்கைக் குறிப்பை அறிந்து கொள்வதும் இந்த அருங்காட்சியகப் பதிவிற்கு உதவும் எனக் கருதுகின்றேன்.1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி ப்ளோரன்ஸ் நகரில் இருக்கும் வின்ச்சி நகரில் பிறந்தவர் இவர். இவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் வசாரி (Vasari) அவர்களது குறிப்புகளிலிருந்து கிடைக்கின்றன. இது மிக விரிவானதொரு குறிப்பு. இக்குறிப்புகளில் காணப்படும் தகவலின் படி லியோனார்டோ ஒரு சைவை உணவு உண்பவர் என்று அறியமுடிகின்றது. கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் பறவைகளை வாங்கி அவற்றை கூண்டிலிருந்து சுதந்திரமாகப் பறக்க விடுவாராம். சுதந்திர தாகம் அவர் மனதை ஆக்கிரமித்திருக்க வேண்டும் என்றும் விலங்குகள் போன்ற ஏனைய உயிரினங்களின் மீதும் அவற்றின் சுதந்திர வாழ்க்கையின் மேலும் அவருக்கு ஓர் ஈடுபாடு இருந்திருக்க வேண்டும் என்றும் இதனை அறிந்து கொள்ளும் போது எண்ணத் தோன்றுகின்றது.
இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை; குழந்தைகளும் இல்லை. அதிகமான நண்பர்கள் இவருக்கு இருந்திருக்கின்றனர். அதில் ஆண்களும் சில குறிப்பிடத்தக்க என்ணிக்கையில் பெண்களும் அடங்குகின்றனர்.
ஆரம்ப காலத்தில் இவரது புகழ் இவரது கலைப்படைப்புக்களுக்காகவே என அமைந்தது. ஐரோப்பிய கலாச்சரத்திற்குப் புகழ்ச் சேர்க்கும் பல சித்திரங்கள் லியோனார்டோவின் கைவண்ணத்தில் உருவானவை. உதாரணமாக Virgin and Child with St. Anne, John the Baptist,Virgin of the Rocks, Adoration of the Magi, The Last Supper, Mona Lisa ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஓவியராகவும் சிற்பியாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட லியோனார்டோ உடற்கூறுகளை ஆராயும் கலையையும் கற்க எண்ணம் கொண்டு Andrea del Verrocchio என்ற சிற்பக்கலை ஆசிரியரிம் பிரத்தியேகப் பயிற்சி எடுத்துக் கொண்டார். இந்தப் பயிற்சிகள் அவருக்கு மனித உடலின் பாகங்களை ஆராய்ந்து அவற்றை தனித்தனியே விரிவாக விவரிக்கும் வகையில் படைப்புகளை உருவாக்க உதவின. உடலின் அனைத்து பாகங்களையும் மருத்துவர்களைப் போல வெட்டி ஆராய்ந்து அதன் உட் பகுதிகள், தோல், தசை, நரம்பு நாளங்கள், என உடலின் பாகங்களை ஆராய்ந்து அதன் குறிப்புக்களை இவர் உருவாக்கியிருக்கின்றார்.
suba 2
லியோனார்டோவின் கையெழுத்துக் குறிப்புடன் கருப்பையில் வளரும் குழந்தையின் ஆரம்ப நிலைவடிவம்.. ஏறக்குறைய 1510 வாக்கில் எழுதப்பட்ட குறிப்பு (இது இங்கிலாந்தில் உள்ள Royal Library, Windsor Castle லில் உள்ளது)
இவர் ஒரு சிறந்த ஓவியர் என்ற காரணத்தினால் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை வெட்டி அதன் உட்பகுதிகளை வரைந்து குறிப்பெடுக்கும் அனுமதி இவருக்கு அரசினால் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஃப்ளோரன்ஸ் நகரில் இருந்த Hospital of Santa Maria Nuova, மருத்துவமனையிலும் பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மிலான், ரோம் நகர மருத்துவமணைகளிலும் இவ்வகை வாய்ப்புக்கள் அவருக்கு அமைந்தன. மருத்துவர்களுடன் இணைந்து 1510-1511ம் ஆண்டு வாக்கில் ஏறக்குறைய உடல் கூறுகளை விளக்கும் 240 ஓவியப்படைப்புகளை
​ ​
உருவாக்கியிருக்கின்றார். இக்கால நிலை போல கேமராவில் புகைப்படம் எடுப்பதோ, வீடியோ பதிவு செய்வதோ அமையாத காலகட்டம் அது. சித்திரங்களின் வழியே தான் இவ்வகை மருத்துவ குறிப்புகள் உருவாக்கம் பெற்றன. இந்த மருத்துவ ஆவணப் படைப்புக்களை உருவாக்கியோர் வரிசையில் லியோனார்டோவின் பங்களிப்பு சிறப்பிடம் பெறுகின்றது என்பதில் மறுப்பேதுமில்லை.
​இதைத் தவிர்த்து லியோனார்டோவின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் சார்ந்த சிந்தனைகள் நம்மை வியக்க வைப்பன. ​ பாலம் அமைக்கும் என்ஜீனியரிங் அடிப்படைகள், போர்க்கருவிகளின் இயந்திரப் பகுதி, இசைக்கருவிகள், விமானம் போன்ற பறக்கும் கருவி, வீட்டு பயன்பாட்டு கருவிகள் என எண்ணிக்கையில் உயரும் வகையில் இவரது கண்டுபிடிப்புக்கள் அமைந்தன.
suba 3
பறவைகளின் பறக்கும் முறைகளை விவரிக்கும் குறிப்புக்கள். இதன் வழி பறக்கும் கருவி உருவாக்கம் பற்றி லியோனார்டோவின் குறிப்புக்கள் அடங்கிய பக்கம்
​லியோனார்டோவின் அசாதாரண திறமை அவரது புகழ் உயரக் காரணமாக அமைந்தது. ​இத்தாலி மட்டுமன்றி ஐரோப்பாவில் இவர் புகழ் பரவியது. இத்தாலியின் பல நகரங்களில் இவருக்குச் சிற்பங்கள் உருவாக்கும் பணிகள் அமைந்து பள்ளிகளையும் அமைத்து நடத்தி வந்தார். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஐரோப்பாவின் பல இடங்களிலிருந்து இவரிடம் சித்திர சிற்பக்கலையைக் கற்றுக் கொள்ள மாணவர்கள் அமைந்திருந்தனர். ப்ரான்ஸ் மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸ் லியோனார்டோவின் புகழை அறிந்து தனது அரண்மனைக்குச் சிறப்பு விருந்தினராக இவரை அழைத்திருந்து சிறப்புச் செய்தார். நாளடைவில் இவர்களது நட்பு மிக நெருக்கமாக வளர அரசரின் பிரத்தியேகச் சிறப்பு சிற்பக் கலைஞர் என்ற பட்டமும் வழங்கி கௌரவித்ததோடு தம்முடனேயே லியோனார்டோ இருக்கும் படி ஏற்பாடுகளையும் செய்தார் மன்னர். லியோனார்டோ தம் முதுமையில் இறந்த போதும் மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸின் அரவணைப்பில் இறந்ததாக குறிப்பும் ஒரு சித்திரப் படைப்பும் இருக்கின்றது.
suba 4
1818 -ல் ஓவியக் கலைஞர் இங்க்ரெஸ் உருவாக்கிய படைப்பு. மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸின் கைகளில் லியோனார்டோவின் இறுதி மூச்சு செல்வதை உருவகப்படுத்தும் ஓவியம்
இத்தாலியில் சித்திரக் கலைஞர்களின் வாழ்க்கை குறிப்பை தேடி பதிந்து வைத்த பெருமை ஜியோர்ஜியோ வசாரியையே சாரும். டான் ப்ரவ்னின் இன்ஃபெர்னோ நூலில் இந்த வசாரி பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே வருவதை இந்த நாவலை வாசித்தவர்கள் அறிந்திருக்கலாம். வசாரி தனது Lives of the Artists நூலில் லியோனார்டோவை அறிமுகப்படுத்தும் பகுதியில் கீழ்க்காணும் வாசகத்தைக் குறிப்பிடுகின்றார்.
In the normal course of events many men and women are born with remarkable talents; but occasionally, in a way that transcends nature, a single person is marvelously endowed by Heaven with beauty, grace and talent in such abundance that he leaves other men far behind, all his actions seem inspired and indeed everything he does clearly comes from God rather than from human skill. Everyone acknowledged that this was true of Leonardo da Vinci, an artist of outstanding physical beauty, who displayed infinite grace in everything that he did and who cultivated his genius so brilliantly that all problems he studied he solved with ease.
—Giorgio Vasari
​எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றோம்.. பின்னர் இறக்கின்றோம். நித்தம் வாழும் நிலையை உருவாக்கிக் கொள்ளும் மனிதர்கள் காலம் கடந்தும் மனித குலத்தினால் நினைத்துப் பார்க்கும் நிலையை அடைவர். லியோனார்டோ டா வின்சி இந்த வகையில் இடம்பெறுபவர்!
இன்று மே மாதம், 2ம் தேதி 1519ம் நாள் லியோனார்டோ இவ்வுலகை விட்டு மறைந்தார். லியோனார்டோ என்னும் இப்புதுமைச் சிற்பிக்கு என் அஞ்சலிகள்!
உசாத்துணை: