Wednesday, August 27, 2014

36. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம் (3), வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

வல்லமை மின்னிதழில் வெளியான என் அருங்காட்சியகத் தொடர் 

முனைவர்.சுபாஷிணி 
I much prefer the sharpest criticism of a single intelligent man to the thoughtless approval of the masses.
-Johannes Kepler

கெப்லரின் சமகாலத்தவர் கலிலியோ. இருவரது ஆய்வுகளும் விண்வெளி ஆய்வுத் துறையில் அளப்பரிய கண்டுபிடிப்புக்களை உலகுக்கு வழங்கின. ஐசேக் நியூட்டனின் கோளங்களின் அசைவு தொடர்பான கண்டுபிடிப்புக்களுக்கு அடிப்படையை அமைத்து தந்தவையும் கெப்லரின் ஆய்வுத்தரவுகள் தாம். இன்று வரை தொடர்ந்து நிகழும் விண்வெளித்துறை ஆய்வுகள் கெப்லர் அமைத்துக் கொடுத்த ஆதாரங்களை மையமாகக் கொண்டே தொடர்கின்றன என்பது விண்வெளி ஆய்வுத் துறையில் கெப்லரின் பங்கை நாம் நன்கு உணர உதவும்.
jk7
கெப்லரின் ப்ளாடோனிக் சோலிட் மாடல் (Platonic solid model of the Solar system from Mysterium Cosmographicum) (1596)
1591ம் ஆண்டில் டுயூபிங்கன் பல்கலைகழகத்தில் தமது பட்டப்படிப்பை முடித்தார் கெப்லர். தத்துவமும் கணிதமும் படித்த அவருக்கு அக்கால கட்டத்தில் வானியல் ஆய்வுகளில் ஆர்வம் ஈடுபட ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக இந்த பூமி உருண்டையானது, சூரியனை சுற்றி வருகின்றது என்ற நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸின் (1473- 1543) கருத்துக்கள் இவரது கவனத்தை ஈர்த்தன. டியூபிங்கன் பல்கலைக்கழகம் அப்போது யொஹான்னஸ் கெப்லருக்கு ஆஸ்திரிய நாட்டில் உள்ள க்ராஸ் பகுதியில் கணித ஆய்வாளர் பணி ஒன்றினை அமைத்துக் கொடுத்தது. 1954ல் இப்பணியை மேற்கொள்ள இவர் க்ராஸ் சென்றடைந்தார். இங்கிருந்த போது தமது ஆய்வுகளில் கவனத்தைச் செலுத்தி மிகக் கடுமையாக உழைத்து வந்தார். அக்கால கட்டத்தில் தான் இவர் பார்பரா மூலெக் என்ற மங்கையை மணந்தார். இது 1597ல் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தாலும் இறுதியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை மட்டுமே உயிர் பிழைத்தனர்.
தைக்கோ ப்ராஹா என்ற ஜோதிட வானியல் ஆய்வாளர் ஒருவரிடம் பணி புரிய கெப்லருக்கு ஆர்வம் ஏற்பட்டது. தைக்கோ டென்மார்க்கின் ஒரு முழு தீவையுமே வாங்கி அங்கே குடிபெயர்ந்து தனது ஆய்வுகளை அத்தீவில் செய்து வந்தார். அதோடு அவர் ப்ராக், அதாவது இப்போதைய செக் நாட்டில் மன்னர் இரண்டாம் ரூடோல்ஃபுக்கு கணிதமேதையாக அமைந்திருந்தார் என்பதும் அவரது தகுதியை நாம் அறிந்து கொள்ள உதவும்.
jk6
​ஹ்வென் தீவு வரைபடம் – இங்கு தான் தைக்கோ ப்ராஹா தமது ஆய்வுக்கூடத்தை அமைத்திருந்தார்
அவரிடம் உதவியாளராக விரும்பி, வின்ணப்பித்து 1600ம் ஆண்டு அப்பணியில் அமர்ந்தார் கெப்லர். 1601ம் ஆண்டு ப்ராஹா தற்செயலாக இறந்து போக அப்பதவி கெப்லருக்கு வழங்கப்பட்டது. 1611ம் ஆண்டில் மன்னர் ரூடோல்ப் பதவியிறங்க வேண்டிய நிலையில் கெப்லர் தாமும் அப்பதவியைத் துறந்து வேறொரு பகுதியில் பணியாற்ற நாட்டம் கொண்டார். தனக்கு பொருத்தமான ஒரு பணியை தேடும் வேலையிலும் ஈடுபட்டார். அப்போது ஆஸ்திரியாவின் லின்ஸ் நகரில் ஒரு தேவை இருக்கவே அங்கே தமது குடும்பத்தாருடன் சென்று சேர்ந்து தமது புதிய பணியை 1612ம் ஆண்டில் தொடங்கினார். லின் நகரில் தான் கெப்லர் அதிக ஆண்டுகள் பணியாற்றியிருக்கின்றார், அதாவது 14 ஆண்டுகள். இக்கால கட்டத்தில் இவரது மனைவி பார்பரா இறக்கவே, சில காலங்களுக்குப் பிறகு இவர் சூசன் ரோய்ட்டிங்கர் என்ற மாதுவை மணந்து கொண்டார் என்ற தகவல்களையும் அறிகின்றோம்.
கெப்லர் அறிவியல் நம்பிக்கையோடு ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவராகத் திகழ்ந்தார். இவர் தமது ஆய்வுகள் அனைத்துமே தாம் ஒரு கிறிஸ்துவர் என்ற அடிப்படையில் தமது பிறப்பின் கடமையைச் சரியாகச் செய்ய வந்ததாக நினைத்தே செய்வதாக தமது எழுத்துக்களில் குறிப்பிடுகிறார். கடவுள் உருவாக்கிய இந்த அண்ட கோளங்களை புரிந்து கொள்ள தாம் முயல்வதாக இவர் தமது எழுத்துக்களில் தன் கருத்தை பதிந்து வைக்கின்றார்.
யொஹான்னஸ் கெப்லர் ஐரோப்பாவின் சில நகரங்களுக்கு தொழில் நிமித்தம் பயணித்து தமது ஆய்வு தொடர்பான உரைகளை நிகழ்த்தியும் வாதங்களில் ஈடுபட்டும் வந்தவர். அதிலும் குறிப்பாக தனது இறுதி காலகட்டங்களில் இவரது வாழ்க்கை இப்படியே அமைந்திருந்தது. நவம்பர் மாதம் 15ம் தேதி 1630ம் ஆண்டில் இந்த அறிவியல் வல்லுநர் இவ்வுலகை விட்டு மறைந்தார். அப்போது அவர் ரேகன்ஸ்புர்க் நகரத்தில் வசித்து வந்தார். ஜெர்மனியின் ரேகன்ஸ்புர்க் நகரின் தேவாலயத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் நிகழ்ந்த 30 ஆண்டுகள் தொடர் போரின் போது இந்த தேவாலயப் பகுதி அழித்து சேதமாக்கப்பட்ட நிலையில் இந்த நினைவுச்சின்னமும் அவர் சமாதியும் முற்றாக அழிந்தன.
ஒரு தனி மனிதராக யொஹான்னஸ் கெப்லர் உலகுக்கு வழங்கிய ஆய்வுக் கொடைகள் தொடர்ந்து இவரை நம்மிடையே மறக்காமல் நிலைத்திருக்கச் செய்திருக்கின்றன. இத்தகைய பல அறிய தகவல்களை நமக்கு வழங்கும் இந்த யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகத்துக்கு ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் வருவோர் வந்து இங்குள்ள தகவல்களையும், இவர் பயன்படுத்திய, உருவாக்கிய கருவிகளையும், இவரது எழுத்தில் அமைந்த நூல்களையும், ஆவணங்களையும் நேரில் பார்த்துச் செல்லலாம்.
 jk5
​அருங்காட்சியகத்தின் வாசல் பகுதியில்
​Truth is the daughter of time, and I feel no shame in being her midwife.
-Johannes Kepler​
உதவிய குறிப்புக்கள்

Wednesday, August 20, 2014

35. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி 
பிரச்சனைகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது உண்டா? அதிலும் குறிப்பாக சாதனைகள் பல படைப்போர் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்து கடந்து வந்த பாதைகள் கரடு முரடானவையாகத் தான் அமைந்திருக்கின்றன. வாழ்க்கை பாடம் கொடுக்கும் அனுபவங்களே ஒரு படி நிலையிலிருது மற்றொரு படி உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றது.யொஹான்னஸ் கெப்லரின் வாழ்க்கை இத்தகைய கடினமான தடைகள் பல நிறைந்த வாழ்க்கையாகத்தான் அமைந்தது.
jk2
யொஹான்னஸ் கெப்லர்
யொஹான்னஸின் தாயார் காத்தரினா ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் பிறந்தவர். இவருக்கும் ஒரு பிரபலமான வர்த்தகராக அந்த வட்டாரத்தில் திகழ்ந்த ஒரு வர்த்தகரின் மகனான ஹைன்ரிக் கெப்லருக்கும் திருமணம் நடந்தது. ஹைன்ரிக் பாடன் உர்ட்டென்பெர்க் பகுதி பிரபுவிடம் சற்று அனுக்கமாகப் பழகும் சூழல் அமைந்திருந்தாலும் தனது குடிப்பழக்கத்தால் வறுமை நிலையை அடைந்து குடும்பத்தையும் வறுமை வாட்ட காரணமாகிவிட்டார். யொஹான்னஸின் தாயார் காத்தரினா ஒரு முன்கோபம் படைத்தவர் என்றும் சிடுசிடு என்று எல்லோரிடமும் பழகுபவர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார். இதனால் இவர்களின் சுற்றத்தார் மற்றும் அவர்கள் சூழலில் நல்ல நட்புறவும் அமையாத நிலையே அப்போது சிறுவன் யொஹான்னஸுக்கு அமைந்தது. புதிய இடம் புதிய பாதையைக் காட்டலாம் என்ற முடிவில் ஹைன்ரிக் தன் மனைவியுடனும் யொஹான்னஸுடனும் நெதர்லாந்துக்குப் பயணமானார். ஆனால் அங்கும் இவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல மாற்றம் அமையவில்லை. மனம் உடைந்து இவர்கள் மீண்டும் தங்கள் கிராமமான ஜெர்மனியின் வைல் டெர் ஸ்டாட் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர்.
இந்த காலகட்டத்தில் தான் காத்தரீனாவின் அத்தை ஒருவர் விஷம் வைத்து ஒருவரை கொன்று விட்டார் என்று கைதாகி விசாரணைக்குப் பின் ஒரு சுனியக்காரி என்று அறிவிக்கப்பட்டு உயிருடன் எரிக்கும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இது அவர்கள் குடும்பத்தில் எவ்வகை துயர சூழலை உருவாக்கியிருக்கும் என்று நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகின்றது. இந்த பிரச்சனைகளுக்கு இடையில் யொஹான்னஸின் கவனமும் கல்வியின் மீதான ஆர்வமும் அதிகரித்துக் கொண்டேயிருந்ததே தவிர குறையவில்லை. தனது திறமையின் காரணமாக மானில பிரபுவின் பிரியத்துக்குள்ளான சிறுவர்களில் ஒருவராக யொஹான்னஸ் திகழ்ந்தார். இதனால் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்தில் உபகாரச் சம்பளம் பெற்று படிக்கும் நல்வாய்ப்பையும் இவர் பெற்றார்.
jk1
கெப்லர் வாழ்க்கை குறிப்பு
இத்தருணத்தில் தான் யொஹான்னஸின் தந்தை யாரிடமும் சொல்லாமல் தன் வீட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரிய நாட்டின் படையில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது துருக்கிக்கு எதிராக போர் நிகழ்ந்து கொண்டிருந்தமையால் அதற்குப் படையில் உழைக்க ஆட்கள் தேவைப்பட, வீட்டில் சொல்லாமலேயே புறப்பட்டு போய்விட்டார் ஹென்ரிக். தந்தையை இழந்தாலும் யொஹான்னஸின் கல்வி முயற்சிகள் பாதிப்படையவில்லை. தமது 20 வயதிற்குள்ளேயே பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்று சிறந்த ஆய்வாளராக உருவாகிக் கொண்டிருந்தார் யொஹான்னஸ்.
வின்வெளி ஆராய்ச்சி, சோதிட ஆராய்ச்சி இவையிரண்டும் தனித்தனி துறைகளாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. இந்த இரண்டு துறைகளிலும் தக்க பாண்டித்தியம் பெற்றிருந்தார் யொஹான்னஸ். 17ம் நூற்றாண்டின் உலகின் தலைச் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் யொஹான்னஸ். அறிவியல் புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கியமானவர்களில் ஒருவர் இவர் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. இவரது ஆய்வின் கண்டுபிடிப்புக்களான Mysterium cosmographicum, Astronomia nova, Harmonice Mundi அனைத்துமே மிக முக்கிய அறிவியல் ஆய்வுகளின் பட்டியலில் இடம் பெறுபவையாக அமைகின்றன. வானியல் துறை நிபுணராக இருந்தாலும் ஜோதிட குறிப்புக்களைக் கணித்துக் கொடுக்கும் வழக்கத்தையும் தொழிலாகவும் இவர் செய்து வந்தார். இந்த ஜோதிடக் கணிப்பு செய்யும் வேலையே இவரது ஜீவனத்துக்கும் வழியாக சில காலங்கள் அமைந்தது.
jk4
16ம் நூற்றாண்டு லத்தின் மொழி வகுப்பு – பள்ளி வகுப்பறை
வானியல் ஆய்வுக் கோட்பாடுகளை வெளியிட்டு யொஹான்னஸ் அறிவியல் புரட்சி செய்யத் தொடங்கியிருந்த சமயத்தில் தான் இவரது தாயாரின் தொடர்பில் ஒரு பிரச்சனை எழுந்தது. ஒரு சிறிய பூசலில் இவரது தாயாரை அக்கிராமத்துப் பெண் ஒருவர் விஷம் கொடுத்து இவர் கொல்லப்பார்க்கின்றார் எனக் குற்றம் சாட்ட அது அப்போதைய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு காத்தரினா ஒரு விட்ச் என வழக்காடு மன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர் சிறைப்படுத்தப்பட்டார். இது 1620 ஆண்டு நடந்தது. மூலிகை தாவரங்களை உடல் நோய் தீர்க்க உபயோகித்தல், நாட்டு வைத்திய மருந்து தயாரித்தல், அதனை பிறருக்கு கொடுத்து சோதித்தல், நோயை இத்தகைய மூலிகைகளைக் கொண்டு குணமாக்க முயற்சி செய்தல் போன்றவை அக்காலத்தில் மிகக் கடினமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய சட்டமாக இருந்தது. இப்படி செய்வோர் விட்ச் என அறிவிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கிடைப்பது வழக்கம். தண்டனைகள் பொதுவாக உயிருடன் எரித்துக் கொல்வது அல்லது இவர்களை ஒரு மரத்தில் வைத்து கட்டி ஓடும் ஆற்று வெள்ளத்தில் தூக்கிப் போட்டு விடுவது என்பதாக இருக்கும்.
jk3 (1)
16ம் நூற்றாண்டு லத்தீன் வகுப்பில் மாணர்கள் ஆசிரியரிடம் பாடம் கேட்பதைக் காட்டும் ஓவியம்
ஆக தன் தாய்க்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கைப் பற்றி அறிந்து, இதனைக் கேள்விப்பட்டு பதைத்துப் போய் யோஹான்னஸ் லின்ஸ் நகரில் தான் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சிப் பணிகளை விட்டு வைல் டெர் ஸ்டாட் நகருக்கு திரும்பி வந்து தனது தாயாரை குற்றத்திலிருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொண்டார். தனது பல்கலைக்கழக நண்பர் கிறிஸ்தஃபர் பெசோல்டஸின் உதவியால் தனது தாயார் மூலிகை மருந்து தயாரித்து விஷம் கொடுத்து கொல்லும் விட்ச் அல்ல என நிரூபித்து அவருக்கு தண்டனையிலிருந்து விடுதலையும் பெற்று தந்தார். ஏறக்குறைய ஓராண்டுகள் இந்த வழக்கு நடைபெற்று அதாவது 1621ம் ஆண்டு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் கத்தரீனா. ஆயினும் பல மனக் குழப்பங்கள் இவருக்கு நீடித்துக் கொண்டிருந்ததால் அடுத்த ஆண்டே இவர் இறந்தார் என்றும் அறிகின்றோம்.
யோஹான்னஸ் கெப்லெர் அறிவியல் உலகுக்கு அளித்த கொடைகள் ஏராளம் என்றாலும் தனது வாழ் நாள் முழுமைக்கும் வருமையிலே தான் அவரது வாழ்க்கை நிலை அமைந்தது.
தொடரும்..
குறிப்புகள்

Friday, August 15, 2014

34. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

வல்லமை மின்னிதழில் இன்று வெளியிடப்பட்ட என் பதிவு. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி 

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வின்கலங்களில் ஒன்றின் பெயர் கெப்லர்-22பி. வின்வெளி ஆராய்ச்சியில் புதிய தடம் பதித்து புதிய பாதையை வகுத்த ஜெர்மானியரான யோஹான்னஸ் கெப்லரின் ஞாபகார்த்தமாகவும், அவரது ஆய்வுகளைச் சிறப்பிப்பதற்காகவும் பூமியைப் போல ஏனைய வின்மீன்களைச் சுற்றி வரும் ஒரு வின்கலனுக்குக் கெப்லரின் பெயர் வழங்கப்பட்டது.
 k5
யோஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகத்தில் அவரது உருவச் சித்திரத்துடன் (ஜூலை 2014)​

இத்தகைய சிறப்புப் பெறும்  கெப்லர் யார் என்பதை அறிய நமக்கு ஆர்வம் இருக்கும் அல்லவா? அதனை அறிந்து கொள்ள இன்றைய அருங்காட்சியகப் பதிவில் உங்களுக்கு  நான் அறிமுகப்படுத்தவிருப்பது ஜெர்மனியின் பாடன் உர்ட்டென்பெர்க் மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமமான வைல் டெர் ஸ்டாட் மாநிலத்தில் இருக்கும் யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகமே. இந்த அருங்காட்சியகம் வார நாட்களில் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்வையாளர்களுக்காகத் திறக்கபப்ட்டிருக்கும். ஆகையால் அருங்காட்சியக வலைப்பக்கத்தில் திறக்கும் நேரத்தை அறிந்து இங்கு சென்று வருவது நல்லது.

கணித மேதை, வின்வெளி ஆய்வாளர் என்ற சிறப்புக்களுக்கு மட்டும் உரியவரல்ல கெப்லர். வானியல் ஆய்வில் மிக முக்கிய திருப்பு முனையை வழங்கிய மூன்று கோட்பாடுகளைத் தனது ஆய்வில் தெளிவாகக் கண்டு உலகுக்கு வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. 1609 லிருந்து 1619 வரையிலான காலகட்டங்களில் இவர் வெளியிட்ட மூன்று வானவியல் ஆய்வுக் கோட்பாடுகள் இத்துறை ஆய்வுகளுக்குப் புதிய பாதையை அமைத்துக் கொடுத்தன. இது மட்டுமல்லாது. கணிதத்துறையிலும் வெவ்வேறு பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க முத்திரைப் பதித்த ஒரு பன்முக ஆளுமை யொஹான்னஸ் கெப்லர்.

 k4
​யோஹான்னஸ் கெப்லரின் கண்டுபிடிப்பு – டெலிஸ்கோப் (ஜூலை 2014)

யோஹான்னஸ் கெப்லர் பிறந்து வளர்ந்த கால கட்டத்தில் அறிவியல் உலக ஆய்வாளர்கள், ஏனைய கோள்கள் அனைத்தும் பூமியைச் சுற்றி வருவன என்ற சிந்தனையைக் கொண்டிருந்தனர். சூரியனை மையமாக கொண்டு  இயங்குவது இந்த வான்வெளி என்ற சிந்தனை அப்போது பிறக்காத காலம். இந்த காலகட்டத்தில் தான் கெப்லர் தன் ஆய்வின் வழி, பூமியோடு ஏனைய கோள்களும் சூரியனைத் தான் சுற்றி வருகின்றன என்ற விஞ்ஞான உண்மையைக் கண்டுபிடித்து உலகுக்கு கொடுத்தவர் என்பதை நிச்சயம் நாம் நினைவு கூர வேண்டும்.
இந்தச் சிந்தனையை முன்வைத்து அறிவியல் ஆய்வு உலகத்தை ஏற்க வைப்பது என்பது மிகச் சாதாரண விஷயம் அல்ல.. அதிலும் அந்த 17ம் நூற்றாண்டில்! ஆயினும் தனது விடா முயற்சியாலும் கடுமையான தொடர் ஆய்வுகளின் வழியாகவும் நிறைந்த சான்றுகளின் வழியும் இந்த உண்மையை உலகுக்குப் புலப்படுத்தினார் கெப்லர்.  இது மட்டுமன்று. கோள்கள் சூரியனைச் சுற்றி பயணித்துச் செல்லும் பாதை  முழுமையான வட்ட வடிவ பாதையல்ல என்ற உண்மையையும் தன் ஆய்வுகளின் வழி கண்டறிந்து நிறுவிய பெருமையும் கெப்லரையே சாரும்.
k3
கெப்லரின் ஆய்வுக் குறிப்புக்கள் அடங்கிய நூல் 17ம் நூற்றாண்டு வெளியீடு

வைல் டெர் ஸ்டாட் ஒரு பசுமை அழகு நிறைந்த ஒரு  சிறு கிராமம். இக்கிராமத்தில் 1571ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் நாள் யொஹான்னஸ் கெப்லர் பிறந்தார். வறுமையான குடும்ப சூழலில் வளர்ந்தவர் திரு.கெப்லர். இளம் வயதிலே கல்வியில் நல்ல ஆர்வம் உள்ளவர் இவர். அருகாமையில் இருக்கும் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க இவருக்கு  உபகாரச் சம்பளம் கிடைத்தது. இந்தப் பல்கலைக்கழக வாழ்க்கையின் போது நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் அவர்களின் ஆய்வுக் குறிப்புக்களையெல்லாம் ஆர்வத்தோடு படித்து கோள்களைப் பற்றிய ஆய்வுகளில் தம்மை தீவிரமாக இவர் ஈடுபடுத்திக் கொண்டார்.
​1596ம் ஆண்டில் கெப்லர் தனது மு​தல்  ஆய்வுப் படைப்பை முன் வைத்தார்.  காப்பர் நிக்கஸ் கட்டளை தொடர்பான ஒரு ஆய்வு. இது ஜெர்மனியில் மட்டுமன்று, ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலும் மார்ட்டின் லூதர் ஏற்படுத்தி விட்டிருந்த பயங்கர கருத்தலைக ​ள்​ எழுந்து கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. 1539ம் ஆண்டில் தான்  மார்ட்டின் லூதர் கத்தோலிக்க மதத்திதிற்கு எதிரான தனது கருத்துக்களை வெளியிட்டார். அக்கால கட்டத்தில் லூதருக்கு ஆதரவாக டேனீஷ் அரசு செயல்பட்டது. லூதரின் கருத்துக்கள் பரவ குழுக்கள் ஆங்காங்கே உருவாகி முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.  மார்ட்டின் லூதரின் புதிய கருத்தாக்கம் உருவாக்கிய சிந்தனை மாற்றத்தை ஏற்றுக் கொள்ள இயலாது தத்தளித்துக் கொண்டிருந்த கத்தோலிக்க மத ஆதிக்க சக்திகள் கெப்லர் அடுத்தடுத்து ​வெளியிட்ட கண்டுபிடிப்புக்களை ஏற்றுக்கொள்வதில் ​த​டைகளை முன் வைத்தன என்ற போதிலும் ஆய்வுத் திறமையினால் ஏனைய ஆய்வாளர்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவராகத் திகழ்ந்தார் கெப்லர்​.

k2
​ட்யூபிங்கன் கிராமம் – கோப்பர்னிக்கஸ் உருவச் சித்திரம்

இந்தக் காலகட்டத்தில் தான் மூலிகை மருத்துவத்தில் ஈடுபட்டு மக்களுக்கு நோய் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட உழைத்த அறிவார்ந்த முறையில் செயல்பட்ட பெண்களை  Witches  என்று சொல்லி அவர்களை உயிரோடு எரிக்கும் கொடூரமான ஒரு பழக்கமும் ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது. கெப்லரின் தாயாரும் இப்படி ஒரு சூனியக்காரி என்று அடையாளம் காணப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும் சூழ்நிலை எழுந்தது என்பதும் ஆச்சரியமான ஒரு உண்மை. அவருக்கு என்ன நேர்ந்தது.. கெப்லரின் கண்டுபிடிப்புகள் .. அவரது குடும்ப வாழ்க்கை, பயணங்கள் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

தொடரும்…