Friday, March 31, 2017

82. டோஜஸ் அரண்மனை அருங்காட்சியகம், வெனிஸ், இத்தாலி

முனைவர் சுபாஷிணி
http://www.vallamai.com/?p=75942


வெனிஸ் நகரின் மிக முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று டோஞஸ் அரண்மனை. இத்தாலிய மொழியில் இது Palazzo Ducale எனக் குறிப்பிடப்படுகின்றது. கி.பி.9ம் நூற்றாண்டில் ஒரு அரண்மனையாக உருவாக்கம் கண்ட இந்த அரண்மனை தொடர்ச்சியான தாக்குதல்களால் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தற்சமயம் மிஞ்சி இருக்கும் பகுதி என்பது 14ம் மற்றும் 15ம் நூற்றாண்டு வெளிப்புறக் கட்டிடத்தின் ஒரு பகுதி மட்டுமே. மெல்லிய இளஞ்சிவப்பு நிற பளிங்குக்கற்களால் வடிவமைக்கப்பட்ட கோத்திக் அமைப்பிலான கட்டுமானம் கொண்டது இக்கட்டிடம். இவ்வகை அமைப்பு என்பது அக்காலத்து வழமையான கட்டிட அமைப்பிற்கு ஒரு மாற்றாக அமைந்தது.


வெனிஸ் நகர அமைப்பின் ஆரம்பக்காலம் தொட்டு இந்த டோஜஸ் அரண்மனை அரசாங்க அலுவலகமாகவே செயல்பட்டு வந்தது. அது மட்டுமன்றி இதே கட்டிடத்திற்குள் தான் நீதிமன்றமும் வெனிஸ் பிரபுவின் தங்கும் இடமும் அமைந்திருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் பல நூற்றாண்டுகளுக்கு இந்த ஒரு அரண்மனை மட்டும் தான் வெனிஸ் நகரில் அரண்மனை என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தின் உட்பகுதி சுவர் சித்திரங்கள் பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டவை. உலக கலைக் கூடங்களின் உயர் தரக் கலைக்கு உதாரணமாக இந்தக் கட்டிடத்தின் உட்பகுதியில் அமைந்திருக்கும் பிரமாண்டமான ஓவியங்களும் சித்திரங்களும் அமைந்திருக்கின்றன .


கண்காட்சியும் அருங்காட்சியகமும் அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும் முன் நாம் நுழைவாயிலைக் கடந்து செல்வோம். இது 15ம் நூற்றாண்டு கோத்திக் வகை முகப்பு. கோத்திக் அமைப்பு என்றாலே நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் அமைந்த ஒரு அமைப்பு எனக் கொள்ளலாம். உள்ளே நுழைந்த உடன் நாம் அருங்காட்சியகத்தை வந்தடைந்து விடுவோம். இந்த அருங்காட்சியகப் பகுதியில், முன்னர் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களின் போது சேதமடைந்த இந்த அரண்மனையில் தூண்கள், பகுதிகள், ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அப்படி சேதமடைந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான சிற்பங்களின் சிதறிய பகுதிகளும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் மட்டுமன்றி இன்று வருகையாளர்களுக்காகத் திறந்து விடப்படும் அனைத்துப் பகுதிகளுமே சிற்பங்களும் வரலாறுகளும் நிறைந்து ஒவ்வொரு பகுதியும் ஒரு அருங்காட்சியகமாகவே திகழ்கின்றன.​கட்டிடத்தின் முன் பகுதியில் ஆதாம் ஏவாள் ஆகிய இருவரின் சிலையும் நுண்ணிய முறையில் பளிங்கில் செய்யப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இதனை அந்தோனியோ ரிஸோ என்னும் சிற்பி வடிவமைத்தார். அரிய ஒரு சிற்பம் இது. ​ இன்னொரு பக்கத்தில் Torture Chamber என அழைக்கப்படும் சித்ரவதை அறை உள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் நபர்கள் இங்கே தான் விசாரிக்கப்படுவார்களாம். எவ்வகை விசாரணை என்பது இந்த அறையின் பெயரை வாசிக்கும் போதே நம்மால் ஊகித்துக் கொள்ள இயலும் தானே?


இதனைப் பார்த்து விட்டு வரும் போது நம்மைப் பிரமாண்டத்தில் ஆழ்த்தும் சுவர் சித்திரங்கள் நிறைந்த கூடங்கள் வரவேற்கும்.அதில் Sala del Maggior Consiglio என அழைக்கப்படும் மைய அறை சிறப்பு வாய்ந்தது. மலைத்துப் போய் நம்மை நிற்க வைக்கும் வகை ஓவியங்கள் இவை. உலகின் மிகப்பெரிய அரண்மனைச் சுவர் சித்திரம் என அறியப்படும் தி பேரடைஸ் (The Paradise) இங்கு தான் அமைந்துள்ளது. 1557ம் ஆண்டு தொடர்ச்சியாக ஒன்றின் பின் ஒன்றாக இந்த அரண்மனை தீக்கிரையானது. தீயினால் சேதமடைந்த பகுதியைப் புதுப்பிக்கும் சமயத்தில் புதிய சுவர்ச்சித்திரங்களை அரண்மனையில் நிறைக்க வேண்டும் என வெனிஸ் பிரபு முடிவெடுத்து அந்த நூற்றாண்டின் இத்தாலியின் தலைசிறந்த ஓவியக்கலைஞரான டிண்டொரெட்டோ (Tintoretto) அவர்களுக்கு இப்பணியை வழங்கினார். சொர்க்கம் என்ற பொருளில் அந்தப் பிரமாண்டமான சுவரில் நூற்றுக்கணக்கான உருவங்களை நிறைத்து சொர்க்கலோகத்தில் இறையடியார்களும் தேவதைகளும் உலா வருவது போல இந்தச் சித்திரத்தை வடிவமைத்தார். ஆண்டுகள் ஐநூறைக் கடந்தாலும் இன்றளவும் உலகளாவிய அளவில் பேசப்படும் ஒரு கலைப் பொக்கிஷமாக இந்த ஓவியம் காட்சியளிக்கின்றது.


இந்த அரண்மனையின் கீழ்த்தளம் வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. அதில் ஒரு பகுதி சிறைச்சாலையாக கி.பி16ம் நூற்றாண்டு தொடக்கம் இயங்கி வந்துள்ளது. இந்தச் சிறைச்சாலைப் பகுதியில் கொடுமையான தவறிழைத்தவர்கள் சிறை வைக்கப்படவில்லை. சிறிய திருட்டுக்கள், ஏமாற்றுத்தனம் செய்தோர் ஆகியோர் தண்டனை வழங்கப்பட்டு இங்கே கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர் என்ற செய்தியையும் இங்கே அறிய முடிகின்றது. மிகக் குறுகலான அறை. செல்லும் பாதையும் குகைக்குள் செல்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி விடும். ஒவ்வொரு அறையும் சிறிதாக, உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நானூறு வருடம் பழமை வாய்ந்த சிறைச்சாலை இன்றும் சேதமடையாமல் நல்ல நிலையில் இருக்கின்றது. இதில் என்ன வியப்பென்றால், மேல் தளத்தில் வெனிஸ் நகரை ஆளும் பிரபு தங்கியிருக்க, கீழ்த்தளத்தில் சிறைச்சாலைக் கைதிகள் இருந்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வித்தியாசமாகத்தான் இருக்கின்றது.


இதே அரண்மனையின் ஒரு பக்கத்தில் அரசின் ஆயுதக் கிடங்கு உள்ளது. கி.பி.14ம் நூற்றாண்டு தொடங்கி இந்த ஆயுதக்கிடங்கு பயன்பாட்டில் இருக்கின்றது. வாள், துப்பாக்கி வகைகள், பீரங்கிகள், குதிரைப்படையினரின் இரும்புக் கவசங்கள், பல்வேறு வகையான தாக்கும் கருவிகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இந்த ஆயுதக் கிடங்கில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. இதனைப் பேர்க்கும் போது வருகையாளர்களுக்கு இப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த போர்களின் நினைவு நிச்சயம் வந்து செல்லும்.


டோஜஸ் அரண்மனை வெனிஸ் நகரின் ஒரு வரலாற்றுச் சின்னம். அருங்காட்சியகம், அரசாங்கக் கட்டிடம், பிரபுவின் மாளிகை, சிறை, ஆயுதக்கிடங்கு கலைக்கூடம் என வெவ்வேறு வகையில் பல பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியக்கட்டிடமாக இந்த அரண்மனை திகழ்கின்றது. இதன் உள்ளே சென்று அனைத்து விசயங்களையும் நேரில் பார்த்து, ரசித்து, அதன் வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டு குறிப்பெடுத்து வருவதற்கு நிச்சயம் ஒரு நாள் தேவைப்படும். இந்த அருங்காட்சிகத்தின் உள்ளே செல்ல வசூலிக்கப்படும் கட்டணம், மற்றும் சிறப்புக் கண்காட்சிகள் பற்றி அறிந்து கொள்ள இதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் நீங்கள் அலசலாம். http://palazzoducale.visitmuve.it/en/home/ . 

No comments:

Post a Comment