Friday, April 21, 2017

84. விவேகாநந்தர் உரையாற்றிய கலை அருங்காட்சியகம், சிக்காகோ, வட அமெரிக்கா


முனைவர் சுபாஷிணி
http://www.vallamai.com/?p=76464


வியக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமான ஒரு கோத்திக் வகை கட்டிடத்திற்குள் 300,000 கலைப்பொருட்கள், பத்து வெவ்வேறு பகுதிகளில் தன்னகத்தே கொண்ட Art Institute of Chicago உலகின் முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்று.  1879ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் வட அமெரிக்காவின் மிகப் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 1.5 மில்லியன் வருகையாளர்கள் வந்து பார்த்துச் செல்லும் ஒரு வரலாற்றுக் கூடம் என்ற சிறப்பு கொண்டது இந்த அருங்காட்சியகம். இதன் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதாய் இங்குள்ள முதல் தளத்தில் அமைந்துள்ள ஒரு கருத்தரங்க வளாகம் அமைந்திருக்கின்றது.  ஆம். இங்குதான் இந்தியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராக, இந்து சமயத்தைப் பிரதிநிதித்து  உலக சமயங்களின் பார்லிமெண்டில் கலந்து கொள்ளச் சென்ற சுவாமி விவேகாநந்தரின் 1893ம் ஆண்டு நிகழ்ந்த உலகப் பிரசித்தி பெற்ற சொற்பொழிவு அமைந்தது.


உலக சமயங்களின் பார்லிமண்ட் என்ற நிகழ்வு முதல் முதலாக நடைபெற்றதும் அந்த ஆண்டில் தான். 1893ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 11ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை இந்த உலகப் பிரசித்தி பெற்ற மாநாடு நடைபெற்றது.  சுவாமி விவேகாநந்தரின் உரை,  நிகழ்வின் முதல் நாளான செப்டம்பர் 11ம் தேதி நிகழ்த்தப்பட்டது.


Sisters and Brothers of America...
என தொடங்கிய அவரது உரையின் தொடக்கமே அந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைத்து கருத்தரங்கப் பேராலர்களையும் திகைக்க வைத்தது. இதற்குக் காரணம், பொதுவாக சொற்பொழிவாளர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் 'பெருமதிப்பிற்குறிய ஆண்களே பெண்களே'  என விளிக்காமல், வந்திருந்தோரைத் தனது சகோதர சகோதரிகளாக நினைத்து அவர் தனது உரையைத் தொடங்கிய விதம் ஏனையோரை திகைக்க வைத்தது.


உலகப்பிரசித்தி பெற்ற அந்தத் தனது உரையில் அவர் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. தான் பிரதிநிதித்து வந்திருக்கும் இந்தியா உலகளாவிய வகையில் சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மையும் கொண்ட மக்களைக் கொண்ட நாடு, நாங்கள் எல்லா மதங்களும் உண்மையே சொல்கின்றன என்று நம்புகின்றோம்.  இத்தகைய நாட்டில் பிறந்து வளர்ந்தமைக்காக நான் பெருமைப்படுகின்றேன், எனச் சொல்லி இந்தியாவை திறந்த மனத்துடன் எல்லா மதத்தினரையும் ஆதரித்து, வந்தாரை வாழவைக்கும் ஒரு நாடு என்று சொல்லி பேராளர்களுக்கு அன்று தனது நாட்டை அறிமுகப்படுத்தினார் சுவாமி விவேகாநந்தர்.  அன்றைய நிலையில் சுவாமி விவேகாநந்தர் விவரித்த அதே வகையிலான சிந்தனைப்போக்கு இன்று உள்ளதா என்று கேள்வி கேட்காமல் இருக்க இயலவில்லை. இந்திய நாட்டின் ஒரு சாரார் உயர் வகுப்பினரென்றும், மறு சாரார் நடுத்தர வகுப்பென்றும், ஒரு சாரார் தீண்டத்தகாதார் என்றும், ஒரு சாரார் பார்க்கவே தகாதார் என்றும், பிரித்து வகுத்து வைத்திருக்கும் நிலையை சுவாமி விவேகாநந்தர் அன்றே பார்க்கத்தவறினாரா?  அல்லது அவரது பார்வைக்கு இந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் எட்டவே இல்லையா? என்ற கேள்வியும் எழுத்தான் செய்கின்றது.

சுவாமி விவேகாநந்தரின் சிக்காகோ பயணம் ஒரு நீண்ட பயணம்.  அவரது இப்பயணத்திற்கு மிக முக்கியக் காரணமாக அமைபவர் தமிழகத்தின் இராமநாதபுரத்தின் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியாவார்.  இவரது  ஏற்பாட்டில்  சுவாமி விவேகாநந்தரின் அமெரிக்க பயணம் அமைந்தது.  இன்று போல அன்று கடல் பயணங்கள் எளிமையானவை அல்ல. நீண்ட தூரப் பயணம் அது. ஆக 1893ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி தனது பயணத்தை பாம்பேயிலிருந்து தொடங்கினார். அமெரிக்காவை அடைவதற்கு முன்னர் இந்தப் பயணத்தில் சீனா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளுக்கும் சென்று பின்னர் அங்கிருந்து அமெரிக்கா சென்றடைந்தார். சீனாவிலும் ஜப்பானிலும் புத்த விகாரைகளைத் தரிசித்து பின் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

சுவாமி விவேகாநந்தரை உலக மக்கள்  அறியச் செய்த நிகழ்வாக இந்த சிக்காகோ உலக சமயங்களின் கருத்தரங்கம் அமைந்தது. அதே வேளை இந்த கருத்தரங்கம் தனிப்பட்ட வகையில் சுவாமி விவேகாநந்தருக்கும் புதிய பல அனுபவங்களை வழங்கிய நிகழ்வாக அமைந்ததையும் மறுக்க இயலாது.


இன்று வட அமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்தில் உள்ள இந்தக் கலை அருங்காட்சியகத்தில் உள்ள இந்த அறை அவரது நினைவாக அமைந்துள்ளது. அங்கே அருகாமையில் உள்ள விவேகாநந்தா வேதாந்த மையம் (Vivekananda Vedanta Society of Chicago) சுவாமி விவேகாநந்தரின் பெயரில் இயங்கி வரும் ஒரு அமைப்பு. இங்கே வேதாந்த வகுப்புக்கள், பஜனைகள், பூஜைகள் ஆகியனவற்றோடு சுவாமி ராமகிருஷ்ணர், சாரதா அம்மையார் பூஜைகளும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் உள்ள இந்த கருத்தரங்க வளாகத்திற்கென்று தனிக்கட்டணம் ஏதும் கிடையாது. அருங்காட்சியகத்திற்கு மட்டும்  நுழைவுக்கட்டணத்தைச் செலுத்தி விட்டால் இந்த கருத்தரங்க அறையையும் சென்று காணலாம். இந்த அறை பூட்டியே இருக்கின்றது. 1893ம் ஆண்டில் எப்படி இருந்ததோ அதே வடிவத்தில்  எந்த வகை மாற்றமும் செய்யாமல் இந்த அறையை அப்படியே வைத்திருக்கின்றார்கள்.  வருகின்ற சிறப்பு வருகையாளர்களுக்கு ஒரு அதிகாரியின் துணையுடன் திறந்து காட்டுகின்றனர்.நான் சென்றிருந்த வேளையில் எனக்கும் அந்த அரும் வாய்ப்பு கிட்டியது.
சுவாமி விவேகானந்தர் நின்று உரை நிகழ்த்திய இடத்தில் நின்று அந்த மண்டபத்தின் அமைதியான சூழலில் அதன் சிறப்பையும் தெய்வீகத்தையும் உணர்ந்தேன். உலக மாந்தர்கள் அனைவரும் ஒன்றே எனும் குரலில் தெள்ளத்தெளிவாக, ”எனது அமெரிக்க சகோதரியரே, சகோதரர்களே” என அழைத்து, வந்திருந்த மற்ற அனைத்து பேச்சாளர்களையும் சிறப்பு வருகையாளர்களையும் அன்பினால் கட்டிப் போட்ட அந்த நிகழ்வு இன்று இந்தியர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகத்தான் அமைந்துள்ளது. 

No comments:

Post a Comment