Wednesday, November 23, 2016

78. மகாத்மா காந்தி அருங்காட்சியகம்- நினைவு இல்லம், (ஃபீனிக்ஸ்) டர்பன், தென் ஆப்பிரிக்கா

http://www.vallamai.com/?p=73434

முனைவர்.சுபாஷிணி

மகாத்மா காந்தி என பெருமையுடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 1869ஆம் ஆண்டில் இந்தியாவின் போர்பந்தர் என்ற பகுதியில் பிறந்தார். இளம் பிராயத்தில் உள்ளூரில் கல்வி கற்று திருமணமும் முடித்து பின்னர் 1888ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்குச் சென்று அங்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இந்திய கம்பெனிக்குச் சட்டத்துறை உதவிகள் செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்டு 1893ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார். 1914ஆம் ஆண்டுவரை, அதாவது 20 ஆண்டுகள் தன் குடும்பத்துடன் மகாத்மா காந்தியவர்கள் தென்னாப்பிரிக்காவின் டர்பன் புறநகர் பகுதியான ஃபீனிக்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இல்லம் சீரமைக்கப்பட்டு ஒரு அருங்காட்சியகமாகவும் நினைவாலயமாகவும் இருக்கின்றது. அருகிலேயே மகாத்மா காந்தியவர்கள் தொடங்கிய அச்சகமும் இன்னமும் அதன் சிறப்பு குறையாது அமைந்திருக்கின்றது.



டர்பன் நகரிலிருந்து வடக்கு நோக்கிய பயணமாக N2 சாலையில் 177 எக்ஸிட் எடுத்து Kwamashu H’way (M25) Inanda R102 சாலையில் வந்து இடது பக்கம் தொடர்ந்து பயணிக்கும் போது சாலையின் இருபக்கமும் மகாத்மா காந்தி நினைவு இல்லம் பற்றிய விளம்பர அட்டைகள் விளக்குக் கம்பங்களில் இணைத்திருப்பதைக் காணலாம். வழிகாட்டிப் பலகையைப் பார்த்தே உள்ளே நுழைந்தால் அங்கே சுலபமாக இந்த இடத்தை நாம் அடைந்து விடலாம். ஃபீனிக்ஸ் மக்கள் குடியிறுப்புப் பகுதி என இப்பகுதி அழைக்கப்படுகின்றது.

​2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்து நாட்கள் பயணமாக டர்பனுக்குச் சென்றிருந்தேன். இங்கு செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காந்தியின் சத்தியசோதனை நூலை நான் வாசித்திருப்பதால் அவர் ஆப்பிரிக்காவில் சில காலங்கள் வாழ்ந்தார் என்பது நினைவில் இருந்தது. இந்தப் பயணம் அமைந்தபோது கண்டிப்பாகச் சென்று பார்த்து வரவேண்டிய ஒரு இடம் இது என என் பயணக் குறிப்புப் பட்டியலில் இணைத்துக் கொண்டேன்.



காந்தி நினைவு இல்லம் காணச் செல்கின்றோம். இந்திய வம்சாவளியினர் நிறைந்த ஒரு இடமாக இது இருக்கும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் சுற்றிலும் எளிமையான, ஆப்பிரிக்க இனமக்களின் கிராமமாகக் காட்சியளித்தது ஃபீனிக்ஸ். நான் சென்றிருந்த வேளையில் ஆப்பிரிக்க சூலு இன மக்கள் சாலையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் குழந்தைகள் விளையாடிக் கொண்டும் என இருந்தனர்.



உள்ளே செல்லும் போது முதலில் நம்மை வரவேற்பது மகாத்மா காந்தி ஆரம்பித்த அச்சகத்தின் கட்டிடம். இது ஒரு சர்வதேச பத்திரிக்கை அச்சகம் என்ற குறிப்புடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இங்குதான் காந்தி தனது Indian Opinion என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். பின்னர் இந்தப் பத்திரிக்கை Opinion எனப் பெயர் மாற்றம் கண்டது. 1903 முதல் இந்தப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1961ஆம் ஆண்டு இப்பத்திரிக்கை வெளியீடு நின்று போனது.

இங்கு காந்தி வாழ்ந்த இல்லத்திற்கு சர்வோதயா என்ற பெயர் அமைந்திருக்கின்றது. இந்த இல்லம் இருக்கும் இடத்தில் முதலில் காந்திக்கும் அவர் குடும்பத்திற்கும் அமைக்கப்பட்ட இல்லமானது 1985ஆம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்த இனாண்டா கலவரத்தில் தீயில் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அதே இடத்தில் அதே வகையில் புதிய இல்லம் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் தரைப்பகுதிகள் தீயில் சேதமடையாததால் வீட்டின் மேல் பகுதியை மட்டும் புதுப்பித்து நினைவில்லமாக எழுப்பியிருக்கின்றனர். இந்த இல்லத்தின் உள்ளே மிக எளிமையான வகையில் காந்தியை நினைவூட்டும் பல வரலாற்று நிகழ்வுகளின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.



​வீட்டின் முன் புறத்தில் சிறிய பூங்காவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவனத்தின் ஒரு பகுதியில் மிக அழகான சிறிய குடில் ஒன்று அமைக்கப்பட்டு அதில் உள்ளே காந்தியின் சிலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ஒரு சமூக மையம் போன்ற ஒரு கட்டிடம் உள்ளது. இங்கே காந்தியின் பெரிய உருவப் படங்கள் குறிப்புகளுடன் உள்ளன.

​மீண்டும் முன் பகுதிக்கு வந்தால் அச்சகத்தை வந்தடைவோம். அச்சகத்தின் உள்ளே உள்ள அறையில் காந்தி வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இவை வரலாற்றை நினைவூட்டும் ஆவணங்கள். இங்கே விரும்புவோர் காந்தி தொடர்பான நினைவுச் சின்னங்களை வாங்கிச் செல்லலாம். இங்கே வருவோருக்கு இலவசமாக இந்த நினைவு இல்லம் பற்றிய ஒரு சிறு குறிப்பு அட்டையை வழங்குகின்றனர்.



இங்கு, இந்த அச்சகத்தில் தான் காந்தி தனது முதல் நூலான Indian Home Rule நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலில் அவர் இந்தியாவிற்கான தனது அரசியல் சிந்தனைகளையும் பல மதங்களுக்கிடையிலான மத நல்லிணக்கத்தின் தேவை பற்றியும் எழுதியுள்ளார். அண்ணல் காந்தி மதத்தீவிரவாதக் கொள்கை கொண்டோரால் கொல்லப்பட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது சிலைக்கு மரியாதை செய்கின்றோம். ஆனால் நாம் அவரது கொள்கைகளான அகிம்சையைப் போற்றுவதும் இல்லை, அவரது கொள்கையான மத நல்லிணக்கத்தை மதிப்பதும் இல்லை என்ற சூழலே பெருகி வருகின்றது.

மகாத்மா காந்தியடிகளின் வாழ்வில் தென் ஆப்பிரிக்க வாசம் என்பது மிக முக்கியமானது. இங்கிருந்த காலத்தில் அவர் நேரில் சந்தித்த ஆப்பிரிக்க மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையும் தென் இந்தியாவிலிருந்து சென்றிருந்த இந்திய கரும்புத் தோட்டக் கூலித் தொழிலாளருக்கு எதிரான ஒடுக்குமுறையும் அவரை விடுதலை பற்றி சிந்திக்க வைத்தன. இந்த சிந்தனைக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் தமிழகத்திலிருந்து ஆப்பிரிக்காவிற்குக் கூலியாகக் குடியேறிய பெற்றோருக்குப் பிறந்த தில்லையாடி வள்ளியம்மை என்ற போராளிப் பெண். தம் மக்களுக்கு எதிராக ஆங்கிலேய அரசு மேற்கொண்ட கடும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார். மகாத்மா காந்தியடிகள் ஏற்பாடு செய்து நடத்திய போராட்டத்தில் ஈடுபட்ட அவரை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அங்கு மோசமான நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட சில நாளிலேயே இவர் இறந்தார். இவரது மறைவு காந்தியடிகள் மனதில் விடுதலை உணர்வினை ஆழமாகப் பதிய வைத்தது.

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் ஜோன் ரஸ்கின் எழுதிய Unto This Last என்ற நூலின் தாக்கத்தால் டர்பனின் புறநகர்பகுதியான ஃபீனிக்ஸில் ஒரு சமூக நலக்குடியேற்றப்பகுதியை 1904ம் ஆண்டில் இவர் வடிவமைத்தார். இப்பகுதியில் ஒரு அச்சகம், ஒரு மருத்துவமணை, பள்ளிக்கூடம், வீடுகள் என அனைத்தும் இந்த குடியேற்றப்பகுதியிலேயே இருப்பது போல அமைத்தார். கூலிகளாக இருக்கும் மக்களும் எல்லா நலன்களையும் பெற வேண்டும் என்பது அவரது மைய நோக்கமாக இருந்தது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்தக் குடியிறுப்பு பகுதியை அவர் வடிவமைத்து செயல்படுத்தியும் காட்டினார். இன்றும் தென்னாப்பிரிக்காவில் மனித உரிமைக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கும் குறியீடாக மகாத்மா காந்தியடிகளின் இந்த சர்வோதய நினைவில்லம் திகழ்கின்றது.

No comments:

Post a Comment