Wednesday, March 9, 2016

58. கைரோ அருங்காட்சியகம் (2), எகிப்து

​http://www.vallamai.com/?p=66951​


முனைவர்.சுபாஷிணி

கைரோ அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் எகிப்திய அருங்காட்சியகம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது. ஏறக்குறைய 120,000 அரும்பொருட்களைச் சேகரித்து வைத்துள்ளது இந்த அருங்காட்சியகம். உலகிலேயே ஃபாரோக்களைப் பற்றிய மிக அதிகமான தகவல்களைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் என்றால் அது இந்த கைரோ அருங்காட்சியகம் தான்.


எங்கள் குழுவினருக்குப் பயண வழிகாட்டி விளக்கம் தருகின்றார்


கைரோ அருங்காட்சியகத்தில் மம்மிக்களைப் போல கவரும் இன்னொரு விடயம் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள இறந்த பண்டைய அரச குடும்பத்தினரின் ஈமச்சடங்குப் பொருட்கள். ஈமச்சடங்குப் பொருட்கள் என்றவுடன் உடனே தூபக்கால், சிறிய மண்பாண்டம், மணிகள், கைவினைப் பொருட்கள், சாமி வடிவங்கள் என்று எண்ணி விடவேண்டாம்.

ஒவ்வொரு அரச குடும்பத்தினரது புதைக்கப்பட்ட வீடுகளிலிருந்து வெளிக்கொணரப்பட்டவை அனைத்தும் விலைமதிக்கமுடியாதவை. தங்கம், வெள்ளி, வைடூரியம், விதம் விதமான மணிகள், வைரக்கற்கள் என ஒவ்வொரு அரச குடும்பத்தினரின் அவரது தகுதி, முக்கியத்துவத்திற்கேற்ற வகையில் இறந்தவரின் மம்மி செய்யப்பட்ட உடலோடு இணைத்து வைக்கப்பட்டிருக்கும். அது மட்டுமா ?

இறந்த அந்த அரச குடும்பத்தினரின் இறப்புக்குப் பின்னர் அவர் வாழ்கின்ற உலகத்தில் அவர் பயன்படுத்துவதற்காகத் தேர், வாகனங்கள், பெட்டிகள், மிக நுணுக்கமாகச் செய்யப்பட்ட ஆடைகள், சாப்பிடுவதற்கான பாத்திரங்கள், இன்னும் அவர் என்னென்னவெல்லாம் பயன்படுத்துவார் என்று நினைத்தார்களோ அத்தனையையும் தங்கத்தினாலும் வெள்ளியாலும், விலை உயர்ந்த பொருட்களினாலும் செய்திருக்கின்றனர். தேர்கள், படுக்கை கட்டில்கள் எல்லாம் தங்கமுலாம் பூசப்பட்டு கண்களை கூசச் செய்வதாக இருக்கின்றன. புதைக்கப்பட்ட வீடுகள் என்று குறிப்பிட்டேன். ஆம். புதைக்கப்பட்ட ஒவ்வொரு அரச குடும்பத்தினருக்கும் பல அறைகளைக் கொண்ட குகை வீடுகள் உருவாக்கப்பட்டன. இந்த குகை வீடுகள் எகிப்திய பாலைவனப் பகுதியில் நைல் நதியின் இரு பக்கங்களிலும் அமைந்திருக்கின்றன.ஒரு பக்கத்தில் அரசர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings), மறு பகுதியில் அரசியர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Queens).


கர்னாக் ஆலய வாசலில்

நான் கைரோ அருங்காட்சியகம் சென்ற சமயத்தில் இளம் வயதில் இறந்த மன்னன் தூத்தான்சாமூனின் ஈமச்சடங்குப் பொருட்கள் அனைத்தும் அங்கு அன்றைக்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்பகுதி மிகுந்த பாதுகாப்புகளோடு கண்காணிக்கப்படும் பகுதி. தூத்தான்சாமூனின் மம்மிபடுத்தப்பட்ட உடல் ஏனைய அரசர்களது உடலைப் போல நல்ல நிலையில் இல்லை. இதற்குக் காரணம் இந்த இளம் அரசன் ஒரு சதிச்செயலால் மிக இளமையிலேயே வெட்டி கொல்லப்பட்டவர். இவரது உடல் மிகுந்த சேதப்படுத்தப்பட்ட நிலையில் மம்மியாக்கப்பட்டு ஏதோ ஒரு வகையில் பாதுகாத்துவிட்டார்கள். தாக்குதலில் அவரது தலைப்பகுதி மிகச்சிதைந்து போனதால் அவரது உடலின் மேல் தங்கத்தாலான கவசம் ஒன்றினைச் செய்து வைத்திருக்கின்றனர். தூத்தான்சாமூனுக்காகச் செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளையும் பார்த்து அதிசயத்தில் திகைத்துப் போய் நின்றேன்.

கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கும் பல ஒரு விலை மதிக்க முடியாத பொருட்களில் என் மனதைக் கவர்ந்த மேலும் ஒன்று என்னவென்றால் இங்கிருக்கும் அரசி ஹட்செப்சத் அவர்களது மம்மி என்று கூறலாம்.

கைரோ அருங்காட்சியகம் வருவதற்கு முன்னர் கட்சிப்சத் தனக்காக நினைவு மண்டபமாகக் கட்டிய கோயிலை பெனி ஹசான் பகுதியில் பார்த்து விட்டுத்தான் கைரோ அருங்காட்சியகம் வந்திருந்தேன். ஆகையால் பேரரசியார் ஹட்செப்சத் அவர்களது பராக்கிரமங்களை ஓரளவு அருங்காட்சியகம் வரும் முன்னரே தெரிந்து கொள்ள முடிந்தது.



பேரரசியார் ஹட்செப்சத் தானே தனக்குக் கட்டிய நினைவாலயம்


இவர் அரசியாக முடிசூடிக் கொண்டு பண்டைய எகிப்தின் பதினெட்டாவது பரம்பரையின் ஐந்தாவது ஃபாரோவாக (மாமன்னனாக அல்லது பேரரசியாக) ஆட்சி செய்தவர். இவரது காலம் கி.மு 1507 – 1458. அதாவது மாமன்னன் ராம்ஸசுக்கு முன்னரே ஆட்சி செய்தவர் என்பதோடு பண்டைய எகிப்தில் மிகப் பிரமாதமான பல கட்டுமானங்களைச் செய்வித்தவர் என்ற பெரும் புகழ் பெற்றவர். இவர் பேரரசர் முதலாம் தூத்மோசிசின் மகள். முதலாம் தூத்மோசிசின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். அதே முதலாம் தூத்மோசிசின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த இரண்டாம் தூத் மோசிசை மணந்தவர்.

பேரரசியார் ஹட்செப்சத் தன் ஆட்சிக் காலத்தில் மிக விரிவாக நாடெங்கிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். முடங்கிக்கிடந்த சாலை சீரமைப்புப் பணிகளை செம்மைப்படுத்தி பிற நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் செழிப்புற வகை செய்தார். குறிப்பிடத்தக்க கோயில்களை இவர் எகிப்தில் கட்டினார். இவர் காலத்தில் சிற்பக்கலை செழித்தது. இவர் காலத்து சிற்பங்கள் உலகின் பல அருங்காட்சியகங்களைச் சிறப்பு செய்கின்றன. அதில் குறிப்பாக நியூயோர்க் மெட்ரோபோலிட்டன் அருங்காட்சியகத்தில் பேரரசியார் ஹட்செப்சத் கால சிற்பத் தொகுதிகளுக்கென்றே ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது குறைப்பிடப்படவேண்டிய ஒன்றே.


கர்னாக் கோயில் ஒபிலிஸ்க்


இவர் காலத்தில் கார்னாக் கோயிலில் மேலும் சில சிற்பங்களை இவர் இணைத்திருக்கின்றார். பண்டைய பெண் தெய்வமான முட் தெய்வத்தின் கற்பக்கிருக பகுதியைச் சீர் செய்தார். அது மட்டுமன்றி இரட்டை ஒபில்ஸ்குகளை இக்கோயிலின் வாசலில் பிரதிஷ்டை செய்தார். அதில் ஒன்று உடைந்து விழுந்து விட்டது. ஆனால் மற்றொன்று இன்னமும் அதே கோயிலில் இருக்கின்றது. இதுவே உலகின் மிக உயரமான ஒபிலிஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபிலிஸ்க் என்பது செலிண்டர் போன்ற அமைப்பில் மிக உயரமாக அமைந்து அதன் நுனிப்பாகத்தில் சூரியக் கதிர்போல் கூர் முனையைக் கொண்டிருக்கும் ஒரு வடிவம். இது சூரியக் கடவுளை பிரதிபலிக்கும் ஒரு வடிவம் என்றும் குறிப்பிடலாம். பேரரசியார் ஹட்செப்சத் தனது 22வது ஆட்சிக் காலத்தில் இறந்தார். கிடைக்கின்ற ஆவணங்களின்படி இவர் ஜனவரி மாதம் 16ஆம் தேதி கி.மு 1458ஆம் ஆண்டு இறந்தார் எனத் தெரிகின்றது.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னெவென்றால் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மன்னர்கள் தாடி வைத்திருப்பது வழக்கம். அதனை பிரதிபலிக்க பேரரசியார் ஹட்செப்சத் தானும் செயற்கை தாடி ஒன்றினை செய்து அணிந்து கொண்டு அரசவைக்கு வருவாராம்.



பேரரசியார் ஹட்செப்சத் உருவச்சிலை தாடியுடன்


இந்தப் பேரரசியார் ஹட்செப்சத் அவர்களின் மம்மியும் இந்த கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. இவரது ஆட்சிக் காலத்து விடயங்களை அறிந்து கொண்டு நேரில் இப்பேரரசியார் ஹட்செப்சத்தை பார்த்தபோது உண்மையிலேயே பிரமிப்பில் உறைந்து போனேன்.



​பேரரசியார் ஹட்செப்சத்தின் மம்மியாக்கப்பட்ட உடல்

இப்படி சொல்லிச் சொல்லி விளக்க எத்தனை எத்தனையோ அரும்பொருட்கள் இந்த கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் விலை மதிக்க முடியாத அரும்பொருட்கள்.

உலக வரலாற்றிற்கு உன்னத சரித்திரத்தை எகிப்து வழங்கியுள்ளது. அந்த பழைய காலத்தை மீட்டுக்கொண்டுவந்து நம் கண்முன்னே அனுபவமாகத் தருவதாக இந்த கைரோ அருங்காட்சியகம் திகழ்கின்றது.

சரி.. அடுத்த பதிவில் மேலும் ஒரு அருங்காட்சியகத்துடன் உங்களைச் சந்திக்கின்றேன். இந்த ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து பெயர்ந்து வேறு எங்கு உங்களை அழைத்துச் செல்லப்போகின்றேன் என ஊகித்து வையுங்கள்.​

No comments:

Post a Comment