Monday, February 17, 2014

25. க்ருவெயர் சீஸ் அருங்காட்சியகம் (2), சுவிஸர்லாந்து

க்ருவெயர் சீஸ் எவ்வகையில் மக்களின் உணவுப் பயன்பாட்டில் இடம்பெருகின்றது எனப் பார்ப்போம். 

க்ருவெயர் சீஸ்  மெலிதான இனிப்புச் சுவையுடன் சிறு துவர்ப்பும், க்ரீம் சுவையும் கலந்தது. இதனை தனித்தனி துண்டுகளாக, வட்ட வடிவில் சற்றே பெரிதாக, ப்ளாஸ்டிக் சுற்றப்பட்டு தனித்தனியாக வெட்டிய சான்வீட்சில் பயன்படுத்தக் கூடிய துண்டுகளாக என விதம் விதமாகவே சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றது. காலை, மதிய, மாலை, இரவு உணவு என அனைத்துக்குமே பயன்படுத்தக் கூடிய ஒரு சீஸ் இது. 

சிலர் இரவு உணவு சாப்பிட்டு முடிந்து டிஸெர்ட்டாகவும்  இதனைச் சாப்பிடுவதுண்டு. அப்படி சாப்பிடும் போது அதனுடன் சிவப்பு வைன் அருந்துவதும் வழக்கம். க்ருவெயர் சீஸ் சமையலிலும் பயன்படுத்தக்கூடியதே. உதாரணமாக நூடல்ஸ், அல்லது காய்கறி பேக்கிங் செய்யும் போது அக்கலவையில் இதனைச் சேர்க்கலாம். உணவில் உள்ள ஏனைய பொருட்களின் சுவையையும் வாசனையையும் மறைக்காது இது உணவிற்கு மேலும் சுவை கூட்டும் தன்மை கொண்டது.

பண்டைய காலத்திலிருந்து சீஸ் என்பது ஐரோப்பியர்களின் உணவுப் பழக்கத்தில் இருப்பது. அதிலும் பண்டைய ரோமானியர்களின் சீஸ் தயாரிப்புக் கலை என்பது புகழ்பெற்றது. இதற்கு உதாரணமாக அதிலும் இந்த க்ருவெயர் சீஸை தொடர்பு படுத்தி ஒரு கதையும் சொல்வர். 2ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு ஆட்சி செய்த மன்னன் அந்தோன்,  சீஸை சாப்பிடும் தன் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் சாப்பிட்டதால் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இறந்தாராம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே.

1115ம் ஆண்டில் க்ருவெயர் பகுதி அமைந்திருக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட அரசைப் பற்றி சில ஆவணங்கள் உள்ளன. அதில் ஆட்சியாளர்களுக்கு அனுப்பப்பட என பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களில் க்ருவெயர் சீஸின் பெயரும் அடங்குகின்றது. இந்த க்ருவெயர் இருக்கும் ஃப்ரைபோக் கண்டோனில் இந்த சீஸ் விற்பனை 1249 வாக்கில் நடந்தைக் குறித்த ஆவணங்களும் கிடைத்துள்ளன.  போர் காலங்களில் இந்த சீஸ் வணிகம் என்பது சற்றே தடைபெற்றிருக்கின்றது. உதாரணமாக 1618-1648 வாக்கில் நடைபெற்ற முப்பது ஆண்டு கால போர் சமயத்தில் க்ருவெயர் மட்டுமல்ல, ஏனைய பொருட்களின் விற்பனையும் கூட இக்கால கட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம்.


Inline image 1
அருங்காட்சியகத்தில் உள்ள தகவல்களில் ஒன்று  ஒரு கிலோ க்ருவெயர் சீஸ் தயாரிக்க12 லிட்டர் பால் தேவைப்படுவதைக் காட்டுகிறது (2009)


மேலும் கிடைக்கின்ற ஆவணங்களின் படி 1740ம் ஆண்டில் இதன் தயாரிப்பாளர்கள் இந்த சீஸிற்கு பிரத்தியேக லேபல் அதாவது G  லேபல் கேட்டு அரசாங்கத்திற்கு மனு அனுப்பி இதனைப் பெற்றிருக்கின்றனர். அக்கால கட்டத்திலேயே 2,500லிருந்து 3,000 டன் சீஸ் உற்பத்தி இருந்ததாக அறிய முடிகிறது. 1762ம் ஆண்டில் l'Académie Française அகராதி இந்தச் சீஸின் பெயரை (Gruyere) அகராதி சொற்பட்டியலில் இணைத்தது. மேலும் முக்கியமாக 1864ல் பாரீஸ் நகரில் நடைபெற்ற உணவு விற்பனையாளர்கள் சந்தையில் இந்த  Gruyere சீஸ் கடைக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன. 

இந்தச் சீஸின் வணிக வளர்ச்சி சுவிஸர்லாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே நிகழ்ந்த ஒப்பந்தத்தின் வழி உயர்வடைய ஆரம்பித்தது. இதன் வழி வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் சீஸிற்குத் தேவையான மாற்றங்களை உட்புகுத்தி  குருவெயர் சீஸ் தன் வளர்ச்சிப் பயணத்தில் மேலும் ஒரு படி வளர்ந்தது. 1860ம் ஆண்டு வாக்கில் ஃப்ரைபோக் கண்டோன் 254 க்ருவெயர் சீஸ் தயாரிப்பு தொழிற்சாலைகளைக் கொண்டிருந்தது என அறியும் போது ஒரு நாளைக்கு எவ்வளவு க்ருவெயர் சீஸ்கள் தயாரிக்கப்பட்டன என்று யூகித்துக் கொள்ளலாம். 

க்ருவெயர் சீஸின் தயாரிப்பு இப்போது ஃப்ரைபெர்க் கண்டோனோடு நின்று விடவில்லை. அமெரிக்காவின் விஸ்கான்ஸின்னிலும் இதன் தயாரிப்பு நடைபெறுகின்றது. அடிப்படை தயாரிப்பு முறையிலிருந்து சற்றே மாற்றப்பட்ட வடிவத்தில் ப்ரான்ஸ், கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் இப்போது க்ருவெயர் சீஸ் தயாரிப்புக்கள் நடைபெறுகின்றன. 

Inline image 2
தயாரிப்புப் பணிகள் (2009)

க்ருவெயர்  சீஸை தயாரிக்க முதலில் நன்கு சேகரிக்கப்பட்ட மாட்டுப் பாலினை  34 °C (93 °F) சீதோஷ்ணத்தில்  வெண்கல பாத்திரத்தில் சூடாக்க வேண்டும். அதில் சேர்க்கப்பட வேண்டிய ஏனைய பொருட்களைச் சேர்த்து தயிரையும் சேர்த்து பின்பு பதப்படுத்த வேண்டும்.  பிறகு அச்சுக்களில் இந்தக் கலவை ஊற்றப்பட்டு கட்டியாகும்படி தயார் செய்ய வேண்டும். 

பின்னர் இவை அறை சீதோஷ்ணத்தில் இரண்டு மாதங்கள் மரப்பலகையின் மேல் வைக்கப்பட வேண்டும். சில நாட்கள் இடைவெளி என்ற வகையில் இந்த சீஸ் திருப்பி வைக்கப்பட வேண்டும். இப்படி மூன்றிலிருந்து பத்து மாதங்கள் இந்த சீஸ்கள் இப்படி பதப்படுத்தப்படும் .பின்னர் இவை வெவ்வேறு தேவைக்கேற்ப வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்படும் வகை என்று விற்பனைக்குத் தயார் செய்யப்படும்.

நான் நேரில் சென்று பார்த்து வந்த க்ருவெயர் சீஸ் அருங்காட்சியகத்திலேயே உணவகமும் சீஸ் விற்பனை நிலையமும் இணைத்திருக்கின்றார்கள். ஆக வரும் பொழுது எங்களுக்குப் பயன்படுத்த சில சீஸ்பேக்கட்களையும் வாங்கிக் கொண்டோம். 

Inline image 3
அருங்காட்சியக உணவகத்தில் (2009)

இப்போதும் சூப்பர்மார்க்கெட்களில் க்ருவெயர் சீஸ் நான் வாங்கும் போது எனக்கு இந்த அருங்காட்சியகம் சென்று வந்த நினைவுகள் என் மணக்கண்முன் வந்து செல்லும். அங்கு பார்த்த காட்சிகளும் க்ருவாயெர் நகரின் பசுமையும் அங்கு புல் தின்று நடைபயிலும் மாடுகளும் இன்றும் பசுமையாகவே என் நினைவில் இருக்கின்றன.

இத்தொடரின் அடுத்த பதிவில் வாசகர்கள் உங்களை மேலும் ஒரு  அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். நாம் அடுத்து செல்லவிருக்கும் அருங்காட்சியகம் கூட வித்தியாசமான ஒன்று தான். 

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ஒரு அருங்காட்சியகம் இது. வருடத்தின் 365 நாட்களில் ஒரு நாள் மட்டுமே பார்க்கக் கூடிய இந்த அருங்காட்சியகத்தைக் காண உங்களுக்கும் ஆவல் இருக்கின்றது தானே..?

Monday, February 10, 2014

24. க்ருவெயர் சீஸ் அருங்காட்சியகம், சுவிஸர்லாந்து

முனைவர்.சுபாஷிணி 


அருங்காட்சியகங்கள் என்றாலே சில பல நூற்றாண்டுகள் பழமை கொண்ட கருவிகளும், விலங்குகளின் மனிதர்களின் எலும்புக் கூடுகளும், ஆவணங்களும், கட்டிடங்களின் உடைந்த பகுதிகளும் சிறபங்களும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் என பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். உணவுப் பொருட்களுக்காகவும் அருங்காட்சியகங்கள் இருக்கின்றன என நான் சொன்னால் நம்புவீர்கள் தானே? அப்படி ஒரு அருங்காட்சியகத்திற்கு செல்வோமா?
க்ருவெயர் நகர் (2009)
க்ருவெயர் நகர் (2009)
பச்சை பசேல் என்ற பசுமை… அதில் மஞ்சள் வெள்ளை, ஊதா என வர்ணங்களில் மலர்ந்திருக்கும் மலர்கள். அந்தப் பசுமையான புல்வெளியில் துளிர்த்து வளர்ந்திருக்கும் விதம் விதமான மூலிகை செடிகள்.. இங்கே கொழு கொழு என நம் கண்களை ஈர்க்கும் வகையில் கழுத்தில் மணியை கட்டிக் கொண்டு அசைந்து அசைந்து சுவைத்து ரசித்து புற்களைத் தின்று கொண்டிருக்கும் மாடுகளைப் பார்த்தவாறே சாலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இப்போது நாம் பயணம் செய்து கொண்டிருப்பது சுவிஸர்லாந்தில். இங்கே ஆல்ப்ஸ் மலைத் தொடர்களின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் எழில் நிறைந்த க்ருவெயர் நகரில் தாம் நாம் இருக்கின்றோம். இங்கிருக்கும் க்ருவெயர் சீஸ் அருங்காட்சியககத்திற்குத் தான் நான் இன்று உங்களை அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றேன்.
சீஸ் ஐரோப்பிய உணவில் பிரதான இடம் பிடிக்கும் ஒன்று. ஐரோப்பா என்று மட்டுமல்லாமல் ஐரோப்பியர்கள் பரவிய வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க கண்டங்களில் விரிவாகப் பரவிய சீஸ் பயன்பாடு தற்சமயம் ஆசிய நாடுகளுக்கும் அறிமுகமாகிவிட்டது. ஆசிய நாடுகளில் கூட சூப்பர் மார்க்கெட்டுகளில் இப்போது சீஸ் கிடைக்கின்றது.
சீஸ் என்பது அடிப்படையில் பாலைக் கொண்டு செய்யும் ஒரு பதார்த்தம் என்றாலும் அதில் சேர்க்கப்படும் பாக்டீரியா, தயாரிப்பு முறை, பதப்படுத்தும் முறை ஆகியன பொருத்து ஒவ்வொன்றும் அதன் தன்மையில் மாறுபடுகின்றன. ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க வகையில் சீஸ் வகையிலேயே நாட்டுக்கு நாடு வித்தியாசமாக, நகருக்கு நகர் வித்தியாசமாக சீஸ்கள் தயாரிப்பதும் விற்பனை செய்யப்படுவதும் நிகழ்கின்றது. உதாரணமாக இத்தாலி, ப்ரான்ஸ், ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், டச்சு, டென்மார்க், க்ரீஸ், ஆகியவை தங்களின் பிரத்தியேக சீஸ்களுக்காகப் புகழ் பெற்று விளங்குகின்றன. இவை ஒன்றிலிருந்து ஒன்று சுவையிலும் அதன் கெட்டித்தன்மையிலும், அமைப்பிலும், வர்ணத்திலும், வாசத்திலும் மாறுபடுகின்றன.
அப்படி சிறப்புத்தன்மை வாய்ந்த ஒரு சீஸ் தான் க்ருவெயர் சீஸ். இந்தச் சீஸ் பற்றிய முழு விபரங்களையும் தரும் ஒரு அருங்காட்சியகம் தான் க்ருவெயர் நகரில் அமைந்திருக்கும் இந்த La Maison du Gruyère a Pringy (House of Gruyère) அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே சென்று பார்வையிட கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற வேண்டும்.
இந்த அருங்காட்சியகம் வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஆக சுவிஸர்லாந்து செல்பவர்கள் தாங்கள் சென்று பார்த்து வர வேண்டிய அம்சங்களில் இதனையும் ஒன்றாக மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த அருங்காட்சியகத்தில் முதலில் நமக்கு க்ருவேயர் சீஸ் உருவான வரலாறு விளக்கப்படுகின்றது. அதனை விளக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், விளக்கத் தகவல்கள் ஆகியவை வரிசையாக வழங்கப்பட்டிருக்கின்றன. எவ்வகை மூலிகைகள் இந்தப் புற்களில் விளைகின்றன? அதனால் கிடைக்கும் மாட்டின் பால் இந்தச் சுவையைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது என்பன போன்ற விளக்கங்கள் இதில் அடங்கும். பின்னர் படிப்படியாக க்ருவெயர் சீஸ் எப்படி பிரபலமடைந்து இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது என்ற தகவலை விளக்கும் வகையில் விபரங்களை அமைத்திருக்கின்றனர்.
சீஸ்கள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன (2009)
சீஸ்கள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன (2009)
அங்கிருந்து தொடர்ந்து சென்றால் க்ருவெயர் சீஸ் தயாரிக்கப்படும் இடத்திற்கு வந்து சேர்வோம். முதலில் நம்மை மலைக்க வைப்பது வரிசை வரிசையாக ஏறக்குறைய 10 மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் ராட்ஷ்சஷ அளவிலான உருண்டை வடிவிலான சீஸ்கள்.
இவற்றில் நாள் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். சீஸ் தயாரிப்பில் எத்தனை நாட்கள் சீஸ் பதப்படுத்தப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். குறிப்பிட்ட நாட்கள் சீஸ் முறையாகப் பதப்படுத்தப்படும் போதே அது சரியான சுவையைப் பெறுகின்றது.
சீஸ் தயாரிப்பை பார்வையிடும் ஊழியர் (2009)
சீஸ் தயாரிப்பை பார்வையிடும் ஊழியர் (2009)
அங்கிருந்து சற்று தள்ளிச் செல்லும் போது ஒரு ராட்சச அளவிலான பாணையில் அமைக்கப்பட்டிருக்கும் படியின் மேல் ஏறி நின்று கொண்டு ஒருவர் பெரிய துணியால் பால் கலவையை வடித்து எடுப்பதையும் இன்னொரு ராட்சச அளவிலான பானையில் ஒருவர் மரக்கம்பு கொண்டு திரண்டு வரும் பாலை கிளறுவதையும் இன்னொரு இடத்தில் வரிசை வரிசையாக ராட்சச அளவிலான பானைகளில் பால் நிறைந்து நிற்பதும் என வெவ்வேறு நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் காண்போம். பார்க்கவே வியப்பூட்டுவதாக இருக்கும் இவை அனைத்தும்.
இப்படி மிகப் பெரிய அளவில் வணிக நோக்கோடு இன்று தயாரிக்கப்படும் இந்த க்ருவெயர் சீஸின் வரலாறு பற்றியும் சிறிது அறிந்து கொள்வது இந்தச் சீஸ் எத்தனை காலமாக மக்கள் உணவுப் பயன்பாட்டில் இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள நிச்சயம் உதவும். இன்று கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் உள்ள குறிப்புகளில், கி.பி.1115 ஆண்டின் ஒரு ஆவணத்தில் இந்த க்ருவெயர் சீஸ் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆக அதற்கும் முந்தைய பழமை வாய்ந்த ஒரு சீஸ் தான் க்ருவெயர் என்ற விஷயத்தை இதன் வழி அறியமுடிகின்றது. இதன் வரலாற்றை மேலும் பல தகவல்களோடு தொடர்ந்து அடுத்த பதிவில் வழங்குகின்றேன். தொடர்ந்து வாருங்க​ள்!​

Monday, January 27, 2014

23. பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம் (3),தாய்லாந்து

அருங்காட்சியகத்தின் கீழ்தளத்தில் படங்களுடன் கூடிய விவரணைகள் நிறைந்துள்ளன. அத்தோடு அக்கால சூழலை விளக்கும் சில மாடல்கள் (models) இப்பகுதியில் இடம்பெறுகின்றன. இந்த மாடல்களைப் போர்க்கைதிகள் நினைவாக ஆஸ்திரேலியா, ஹாலந்து, இங்கிலாந்திலிருந்து தனியாரும் அரசாங்கமும் வழங்கியிருக்கின்றன. குறிப்பாக இந்த ரயில் பாதை அமைத்த வேளையில் அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் எத்தகைய முறையில் நோயாளிகளுக்கு மருத்துவம் வழங்கப்பட்டது? பணியாளர்கள் தங்கும் வீடுகள், பணியாளர்கள்  ஜப்பானியப் படைகளால் தண்டிக்கப்படும் காட்சி என்பன இதில் இடம்பெறுகின்றன. அதை பார்த்து முடித்து கீழ்தளத்திலிருந்து படிகள் ஏறி முதல் மாடிக்குச் சென்றால் அங்கு தொடர்ச்சியாக பல அரும்பொருட்களை நாம் காணலாம்.

இப்பகுதியில் ஜப்பானியப் படைகள் பயன்படுத்திய ரகஸிய தொலைத் தொடர்பு கருவிகள், ஆங்கிலேய, டச்சு போர்கைதிகள் பயன்படுத்திய தொலைத்தொடர்பு கருவிகள், தட்டச்சுக் கருவி, பணியாளர்கள் அடையாள அட்டை, ஜப்பானியப் படையினர் உடைகள் போன்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு ரகசியமாகக் கையாளப்பட்ட சில ஆவனங்களும் இங்குள்ளன. அதுமட்டுமல்ல.. இந்த மரண ரயில் பாதை அமைப்பைப் பற்றி விளக்கும் இரண்டு நூல்களையும் இங்கு கண்டேன். இந்த அருங்காட்சியகத்தில் புகைப்படமும் வீடியோ பதிவும் செய்வதை தடைசெய்திருப்பதால் இவையனைத்தையும் புகைப்படங்களாகப் பதிய முடியாததில் எனக்கு சற்று வருத்தமே. 


Inline image 2
செக்‌ஷன் 277

போர்க்கைதிகளும் மலாயாவின் கூலிகளும் கட்டி முடித்த இந்த முழு ரயில் பாதையில் பாலம் செக்‌ஷன் 277 மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது க்வாய் நதியைக் கடக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாலம். 1943ம் ஆண்டில் இதன் முழு பணியும் முடிக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கப் படைகள் இந்த பாலத்தை குண்டுகள் போட்டு தகர்த்து. இது ஜப்பானியப் படைகளைப் பலமிழக்கச் செய்தது என்பது மிக முக்கியமான ஒன்று. அதுமட்டுமல்லாமல் ஒரு கால கட்டத்தில் இப்பாலத்தின் தொடர்ச்சியான தண்டவாளப் பகுதியில் 3.9 கிமீ அளவு பகுதியை ஆங்கிலேய படைகள் நீக்கின. ஆனால் பின்னர் மீண்டும் இவை கட்டிமுடிக்கப்பட்டன. ஆயினும் பர்மாவை இணைக்கும் பகுதிகள் மீண்டும் சீரமைக்கப்படாமலேயே இருந்தன என்பதால் இன்று வரை இப்பாலம் பர்மா-சியாமை முழுமையாக இணைக்காத நிலையிலேயே இருக்கின்றது. 

இந்த பர்மா-சியாம் மரண ரயில்பாதை பற்றி ஒரு திரைப்படம் வெளிவந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? 

Inline image 1

ப்ரென்ச் நாவலாசிரியர் Pierre Boulle அவர்களின் 1952ம் ஆண்டு நாவலான Le Pont de la Rivière Kwai நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அது.  இந்த நாவல் ஆங்கிலத்தில் The Bridge over the River Kwai என்ற பெயரில் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்தத் திரைப்பட்டம் இங்கிலாந்து-அமெரிக்க கூட்டு படைப்பாக உருவாக்கப்பட்டது. பர்மா-சியாம் மரண ரயில் பாதை என்றாலும் இந்த முழுப்படமும் தாய்லாந்து பர்மாவில் இல்லாமல் இலங்கையில் படமாக்கப்பட்டதாம். மரண ரயில்பாதையாக இப்படத்தில் காட்டப்பட்ட பகுதி இலங்கையில் `கிட்டுல்கால` என்ற  பகுதியில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தைத் தாய்லாந்து காஞ்சனாபுரியில் என்றில்லாமல் இலங்கையில் படமாக்கியதற்கு  என்ன காரணம்  எனப் புரியவில்லை. 

இந்தத் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் ஒருவகையில் இது மிகப் பெரிய கவன ஈர்ப்பை செய்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. 7 அக்காடெமி அவார்டுகளைத் தட்டிச் சென்றிருக்கின்றது இந்தத் திரைப்படம். அதில் அவ்வாண்டின் சிறந்த படத்திற்கான பரிசும் அடங்கும்.  ஆனால் முழு மரணப்பாதை கொடுமைகளையும் பிரச்சனைகளையும் சரியாக வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனமும் இந்தப் படத்திற்கு இருக்கின்றது. 

காஞ்சனாபுரிக்கு நான் சென்றிருந்த போது அருங்காட்சியகத்தைப் பார்த்ததோடு அதன் எதிர்புறம் இருக்கும் போர்க்கைதிகள் நினைவு மண்டபத்திற்கும் சென்று அங்கிருக்கும் நினைவுக்கற்களைப் பார்வையிட்டேன். நாடு வாரியாக இவர்களது பெயர்கள் வரிசைக் கிரமமாக புல் தரையில் இங்கு செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நினைவுக் கற்கள் மீதும் போர்க் கைதியாக இருந்து மரணப்பாதை அமைப்பில் பணியாற்றி மரணித்தவர்களின் பெயர், அவர்களது நாடு, சில பொன்மொழிகள் ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன.

Inline image 3
அருங்காட்சியகத்தின் வாசலில் (டிசம்பர் 2013)

எங்கள் பயண வழிகாட்டி இந்த அருங்காட்சியகத்தை நாங்கள் பார்த்த பிறகு இம்மரணப்பாதையில் ஓடும் ரயிலில் பயணம் செய்யும் வகையில் எங்களுக்கு டிக்கட்களையும் ஏற்பாடு செய்திருந்தார். காஞ்சனாபுரியிலிருந்து ரயில் எடுத்து 1 மணி நேரப் பயணத்தை இந்த மரணப் பாதையில் மேற்கொண்டோம். மறக்க முடியாத ஒரு அனுபவம் அது என்று தயங்காமல் கூறுவேன். அதுமட்டுமல்லாமல் மறு நாள் காலையில் இந்த ரயில் பாதையின் ஒரு பகுதில் 30 நிமிடங்கள் நடந்து வர எங்கள் பயண வழிகாட்டி ஏற்பாடு செய்திருந்தார். அருங்காட்சியகத்தைப் பார்த்து பின்னர் இந்த ரயில் பயணம் செய்து, ரயில் தண்டவாளத்திலும் நடந்து வந்தது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே அமைந்தது. 

காலங்கள் கடந்து விட்ட நிலையிலும் 2ம் உலகப்போர் விட்டுச் சென்றிருக்கும் தடையங்கள் இன்று வரலாற்றினை நாம் புரிந்து கொள்ள உதவுகின்றன. என் அருங்காட்சியகத் தேடல்களில் விதம் விதமான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண்கின்றேன். அதில் இது ஒரு வகை. 

தாய்லாந்திலிருந்து புறப்பட்டு அடுத்து நாம் வேறொரு அருங்காட்சியகத்திற்குச்  செல்வோம். அடுத்து நாம் செல்லவிருப்பது வித்தியாசமான ஓர் அருங்காட்சியகம். சற்றே ஆச்சரியத்தைக்கொடுக்கக் கூடிய ஒன்று தான். எங்கு செல்லப் போகின்றோம் என ஊகிக்க முடிகிறதா..?

Monday, January 20, 2014

22. பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம் (2),தாய்லாந்து

 பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம் (2),தாய்லாந்து

முனைவர்.சுபாஷிணி 

போர்க் கைதிகளை வைத்து இந்த மரணப் பாதையை அமைக்க ஜப்பானியப் படையினர் திட்டம் தீட்டினர்  என்பதையும் அவர்களோடு மலாயா இந்தோனீசியாவிலிருந்து ஏராளாமானோர் கூலிகளாக இந்தப் பணியில் வேலைக்கு கொண்டு வரப்பட்டார்கள் என்ற விபரத்தையும் இக்கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இந்த இரண்டு வகை பணியாட்கள் குழுக்களிலும் வித்தியாம் இருப்பதை கட்டாயம் காணாமல் இருக்க முடியாது.

போர்கைதிகளாக இப்பணியில் ஈடுபடுத்த அழைத்துக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆஸ்திரேலிய, ஆங்கிலேய டச்சு படைகளில் போர் வீரர்களாப் பணியாற்றியவர்கள். போர் விபரங்களும் தந்திரங்களும், காட்டிற்குள் வாழும் பயிற்சியும் நீண்ட கால அவஸ்தைகளையும் துன்புறுத்தல்களையும் உடல் ரீதியாகத் தாங்கும் மன பலத்தையும் கொண்டவர்கள் இவர்கள். பலர் உயர்ந்த கல்வியறிவும் கொண்டவர்கள். இராணுவத்தில் இயந்திரங்களை இயக்கவும், மருத்துவர்களாகவும், போர்க் கருவிகளைப் பயன்படுத்தவும், கடுமையான சூழலில் வாழ்வதற்குத் தீவிர பயிற்சியும் தங்கள் பணியின் ஒரு அங்கமாகக் கற்றவர்கள்.



காஞ்சனாபுரியிலிருந்து செல்லும் மலைப்பாதை. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட பாதையில் ரயில் செல்கின்றது. (டிசம் 2013)

ஆனால் கூலிகளாக இப்பணிக்கு அமர்த்தப்பட்ட மலாயாவின் இந்திய சீன, மலாய் மக்களும் இந்தோனீசிய மக்களும் மிக எளிய மக்கள். மிகச் சாதாரண மனிதர்கள். போதிய கல்வியறிவு பெறாத இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் கப்பலில் கூலிகளாக வேலை செய்ய வந்த தமிழர்களும், சீனாவிலிருந்து வணிகம் செய்ய வந்த சீனர்களும், விவசாயிகளாக தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த மலாய் மக்களுமாவர். இத்தகையோரே பெரும்பான்மையினராக  இந்த மரணப்பாதையில் பணியாற்ற கொண்டுவரப்பட்டனர். இவர்களுக்கு ஆங்கிலமும், ஜப்பானிய மொழியும் தெரியாது. கல்வி அறிவு என்பதும் மிகக் குறைவு. ஏழைகளான இவர்களில் பெரும்பாலோர் மெலிந்த உடம்பினர்.

முதலில் ஜப்பானியப் படைகள் இப்போர் கைதிகளையும் ஆசிய கூலிகளையும் இப்பணியில் ஈடுபடுத்த அறிவித்து இவர்களைக் கொண்டுவந்தபோது இவர்கள் எல்லோருக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று சொல்லி அவர்களை நம்ப வைத்து அழைத்து வந்தனர். தரமான இருப்பிடம், நல்ல உணவு ஆகியவையும் ஆரோக்கியமான வேலை சூழலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை தந்திருந்தனர். ஆனால் மிக விரைவிலேயே ஜப்பானியப் படைகளின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்து விட்டது.



டச்சு போர்க் கைதிகள் – பல நாட்கள் போதிய உணவு இல்லாமையினாலும் கடுமையான உழைப்பினாலும் மெலிந்து காணப்படுகின்றனர்

இப்போது நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின் படி இந்த மரணப்பாதை அமைப்பிற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த 180,000 ஆசிய கூலிகளில் 90,000 பேர் 1942லிருந்து 1943க்குள் இறந்து போயினர். இந்த கொடூர நிகழ்விற்கு முழுக்காரணமும் ஜப்பானியப் படைகளின் கொடுமையான பணியிட நடைமுறைகள் தாம்.

சுகாதாரமற்ற குடிசைகளில்  நூற்றுக்கணக்கானோரை திணித்து தங்க வைத்து அவர்களது உடல் நிலை மோசமான நிலையிலும் பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டனர் என்பதை அருங்காட்சியகத்தின் குறிப்புக்குக்களிலிருந்து காணமுடிகின்றது. சுகாதார கேடு விரைவாகப் பரவிய நிலையில் ஒரு காலகட்டத்தில் மலேரியா நோய் பரவ,  கூட்டம் கூட்டமாக இவர்கள் இறந்து போயிருக்கின்றனர் இந்த 2 வருட காலத்தில் (1942-1943).

வேலை.. வேலை வேலை.. இதுவே முக்கிய நோக்கம். மழை வெயில் என்ற பாரபட்ஷம் இல்லாமல் நேரம் காலம் வரையறை இல்லாமல் உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே. பலர் காலரா வந்தும், கடுமையாகத் தண்டிக்கப்பட்டும் இறந்து போன போது அவர்களை முறையாகப் புதைக்காமல் காடுகளில் தூக்கிப் போட்டு விட்டு செல்வார்களாம். அந்தப் பிணத்தின் நாற்றம் அழுகிப் போன சடலத்தைச் சுற்றி மொய்க்கும் ஈக்களும் உயிருடன் வாழும் ஏனைய கூலிகளின் கூடாரத்தையும் வந்து பார்த்து நோய்களைப் பரப்பிச் சென்றதன் விளைவாக வரிசை வரிசயாக இம்மக்கள் இறந்து போயினர். இவர்களது சடலங்களை மரணப்பாதை வழியில் சில இடங்களில் கூட்டமாகக் கொட்டி புதைத்து வைத்து தங்கள் பணியைத் தொடர்ந்தது ஜப்பானியப் படை.



நினைவு மண்டபத்தில் உள்ள தனித்தனி நினைவுக் கற்கள் (டிசம் 2013)

இறந்து போன 12,399 ஆங்கிலேய, ஆஸ்திரேலிய, அமெரிக்க, டச்சு போர் கைதிகளுக்காவது இப்போது அவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் நினைத்துப் பார்க்க என்று காஞ்சனாபுரியில் மிகப்பெரிய நினைவு மண்டபமே உள்ளது. இங்கு இறந்த இவர்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுக் கல் அமைத்து வைத்திருக்கின்றனர். அந்த நிலை கூட ஆசிய கூலிகளுக்கு இல்லை.

அதிகாலை, மதியம், மாலை இரவு என ஓய்வு என்பதே இல்லாமல் ரயில் பாதை அமைக்கும் பணியில் போர் கைதிகளும் கூலிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்குப் போதிய உணவு கிடைப்பதில் சிரமமே ஏற்பட்டிருக்கின்றது. பல வேளைகளில் கொஞ்சம் அரிசி சாதம் மட்டுமே என்ற நிலையிலேயே இவர்கள் நாட்களை கடக்க வேண்டிய சூழல். இது  2 ஆண்டுகாலம் தொடர்ந்திருக்கின்றது. நோயால் வாடியவர்களுக்கு மருத்துவ உதவிகளோ அதனை வழங்க எந்த வசதிகளுமோ கூட ஏற்பாடு செய்யப்படவில்லை.



போர் கைதிகளாக வந்த பணியாளர்கள், போர் கைதிகள் விதிப்படி தங்கள் குடும்பத்தாருக்கு தங்கள் நலனை விவரித்துக் கூறி கடிதம் அனுப்பி வைக்க சட்டப்படி அனுமதி உள்ளது.  அப்படி கடிதம் அனுப்ப செய்த முயற்சிகளில் அஞ்சல் அட்டைகளை ஜப்பானியப் படைகளே இவர்களை உண்மை நிலமையைக் கூற விடாத படி செய்து பொய் விபரங்களை உட்புகுத்தி இவர்கள் இங்கு நலமாக இருப்பது போல  எழுத வைத்து அனுப்பி வைப்பார்களாம். இப்படி அஞ்சல் செய்யப்பட்ட அஞ்சல்அட்டைகளில் சில இப்போர் கைதிகளின் குடும்பத்தாரிடமிருந்து பெறப்பட்டு இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. நல்ல உடல் நிலையில் இருப்பதாக வந்த அஞ்சல் அட்டையை பெற்றவர்கள் கூட அதே நபர் இறந்து போனசெய்தியறியாது இருந்திருக்கின்றனர் 2ம் உலகப் போர் முடியும் வரை. எவ்வளவு கொடுமையான நிலை ? நினைக்கும் போதே திகைப்பாகத்தான் இருக்கின்றது.

மலாயாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பணியாளர்கள் உண்மையாகவே தாம் எங்கே செல்கின்றோம் என்ற விபரங்கள் கூட மறைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு தாய்லாந்திற்குக் கொண்டுவரப்பட்டவர்களே. மலேசியாவின் கெடா மானிலத்திலுள்ள அலோர் ஸ்டார் காடுகளில் பணிபுரிய அழைத்துச் செல்வதாகச் சொல்லி ஏமாற்றி ஜப்பானியப் படை ஏஜெண்டுகள் இவர்களைத் தாய்லாந்தின் காஞ்சனாபுரிக்கு அழைத்து வந்தது. இப்புதிய வேலையில்  நல்ல தங்கும் வசதி, நல்ல உணவு உயர்ந்த  வருமானம் எல்லாம் கிடைக்கும் என்று ஏமாற்றியே இவர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் உண்மை அதுவல்லவே!

தொடரும்…

Monday, January 6, 2014

21. பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம்,தாய்லாந்து



முனைவர்.சுபாஷிணி 

இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள் இன்றளவும் மறையவில்லை.  ஊடகங்கள் வழியாக அவ்வப்போது போர் சம்பந்தப்பட்ட ஏதாகினும் தகவல்கள் அவ்வப்போது நமக்கு கிடைத்துக் கொண்டு தானிருக்கின்றன. இந்த இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் ஏற்படுத்திய அழிவுகள் பற்றி நினைத்துப் பார்த்தால் இன்றும் நம் மனம் அதிர்ச்சிக்குள்ளாவதைத் தவிர்க்க இயலாது.  ஜப்பானியப் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் அவர்கள் அங்கு வாழ்ந்த மக்களையும், எதிரிப்படைகளிலிருந்து பிடித்து வந்த போர் கைதிகளையும் இப்படையினர் நடத்திய விதமானது  போர் குற்றவியல் வரலாற்றிலேயே மிகக் கொடூரமானவை என்பதில் மறுப்பில்லை.

எனது அன்மைய தாய்லாந்து பயணத்தில் நான் ஒரு சில அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு பெற்றேன். அதில் என்னை திடுக்கிட வைத்த தகவல்களை வழங்கிய ஒரு அருங்காட்சியகம் என்றால் அது பர்மா ரயில்வே அல்லது சியாம்-பர்மா ரயில்வே அல்லது பர்மா-சியாம் மரணப் பாதை (Death Railway) என அழைக்கப்படும் ரயில் பாதை வரலாற்றை விளக்கும் ஜீத் போர் அருங்காட்சியகம் (JEATH War Museum) தான்.  இந்த அருங்காட்சியகம் 1977ம் ஆண்டு தாய்லாந்தின் மேற்குப் பகுதி மாநிலமான காஞ்சனாபுரி நகரில் வாட் சாய்சும்போல் புத்த விகாரைக்கு அருகே அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டது.

அருங்காட்சியகத்தின் முன்பகுதியில் பரந்த புல்வெளியில் போர்கைதிகளாக இருந்து இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் மாண்டு போன மனிதர்களுக்கான மயானமும் நினைவு மண்டபமும் அமைந்திருக்கின்றன. அருங்காட்சியகமோ அதன் எதிர் புறமாக அமைந்துள்ளது.  அருங்காட்சியகத்தின் உள்ளே புகைப்படங்களோ வீடியோ பதிவுகளோ செய்ய அனுமதி இல்லை.  நுழைவாயிலில் கட்டணத்தைக் கட்டி உள்ளே செல்லும் முன் அமைந்துள்ள விற்பனைப் பொருட்கள் கடையில் இந்த அருங்காட்சியகம் பற்றியும் மேலும் க்வாய் பாலம், ரயில் பாதை தொடர்பான நூற்களையும் பெற்றுக் கொள்ளலாம்.  இந்த நூல்கள் தாய் மொழி தவிர்த்து ஆங்கிலம், ஜெர்மன், ப்ரென்ச், ஜப்பானிய மொழிகளில் கிடைக்கின்றன.

இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இந்த அருங்காட்சியகம். கீழ்த்தளத்தில் உள்ளே நுழையும் போதே ஜப்பானியப் படைகள் சியாம் நாட்டில் (தாய்லாந்து)  அரசருடன் உடன்படிக்கை செய்து கொண்டு,  இந்த பர்மா-சியாம் ரயில் பாதையை அமைத்த விவரங்களை வரிசைக் கிரமமாக வழங்கியிருக்கின்றனர். விளக்கங்களுக்கு விரிவான  புரிதலைக் கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளின் வழியாக சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொரு விளக்கக் குறிப்புகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன.  இவை விளக்கங்கள் தரும் தகவல்களுக்கு வலு சேர்ப்பனவாக அமைந்திருக்கின்றன என்றே கூறுவேன்.

இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்துவிட்ட காலம் அது.  ஜப்பானிலிருந்து சிங்கப்பூர் வந்து பின்னர் சிங்கப்பூரிலிருந்து தங்கள் படைகளையும் பொருட்களையும் பர்மா தலைநகர் ரங்கூனுக்கு கொண்டு செல்வது ஜப்பானியப் படைகளுக்குச் சாதாரண காரியமாக அமையவில்லை.  ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்த பர்மாவை ஜப்பானியப் படைகள் 1942ல் கைப்பற்றின. படிப்படியாக முழுமையாக பர்மாவை ஆக்கிரமித்து இந்தியா செல்லவும் இப்படைகள் திட்டமிட்டன. ஆங்கிலேய-டச்சு படைகள், இந்த ஜப்பானியப் படைகள் மலாக்கா நீரிணை வழியாகக் கடல் பயணம் மேற்கொண்டு பர்மா செல்வதை மிகத் தீவிரமாக தடுத்து வந்தன.  இதற்காக ஆங்கிலேய-டச்சு படைகள் நீர்மூழ்கிக் கப்பலை இப்பகுதியில் இயக்கியும் வான்படைகளைக் கொண்டும், ஜப்பானியப் படைகள் இவ்வழியாக முன்னேறுவதைத் தடுத்துக் கொண்டு தீவிரமாகக் கண்காணித்து வந்தன. இந்தத் தடைகளைக் கடந்து பர்மா செல்ல மாற்று வழி ஒன்று ஜப்பானியப் படைகளுக்கு மிக அவசியமாகப் பட்டது.  சியாமிலிருந்து ரங்கூனுக்குச் செல்ல அப்போது ஒரே ஒரு சாலை மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. அது ராஹேங் (Raheng) நகரிலிருந்து கவ்காரேய்க் வழியாகச் சென்று மாவ்ல்மெய்ன்(Maulmein)  சென்றடையும் வழி.   இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே ஒரு சாலைப் பாதையை சியாமின் பாங்காக் நகரிலிருந்து மாவ்ல்மெய்ன் வரை அமைக்க சியாமும் பர்மாவும் திட்டமிட்டன. ஆனால் அது செயல்முறைப் படுத்தப்படவில்லை.  ஆக, இருந்த ஒரே சாலைப் பாதை ராஹேங்கிலிருந்து செல்லும் பாதைதான்.  அதுவும் தரமான ஒரு பாதையாக அமைந்திருக்கவில்லை.

இந்தச் சூழலில் கட்டாயமாக ஒரு மாற்று வழி பர்மாவிற்குச் செல்ல தேவைப்பட ஜப்பானியப் படைகளின் தளபதிகள் திடமிடுதலில் ஈடுபட்டனர்.  ஜப்பானியப் படைகள் ரயில் பாதை அமைக்க திட்டமிடுவதற்கு முன்னரே பர்மாவில் ஆட்சி செலுத்தி வந்த ஆங்கிலேய அரசு இப்பகுதில்  சியாமிலிருந்து ரங்கூனை இணைக்கும் ஒரு ரயில் பாதையை உருவாக்கும் திட்டத்தை வைத்திருந்தனர். முழு திட்டமும் உருவாகியது. ஆனால் அது திட்டத்துடனேயே நின்று விட்டது. இதற்குக் காரணமாக அமைந்தவை இரண்டு விஷயங்கள். முதலாவதாக, காஞ்சனாபுரியிலிருந்து ரங்கூன் செல்லும் பாதை என்பது அடர்ந்த காடுகள் அமைந்த நீண்ட மலைப்பகுதி. இதில் ரயில் பாதை தண்டவாளம், பாலம் என அமைப்பது என்பது சாத்தியமான ஒரு காரியம் அல்ல.  இரண்டாவது காரணம் இதற்குத் தேவைப்படும் வேலையாட்களைத் தேடுவது. ரயில் பாதை அமைப்பது, அதிலும் அடர்ந்த காட்டுப்பகுதியில் என்பது எளிமையான ஒன்றல்ல என்பதால் இப்பணிக்கு முன்வர பணியாளர்கள் தயங்கினர். அதோடு எத்தனை பேரை வைத்து இதனை சாதிப்பது? இவர்களுக்கான கூலியை எப்படி சமாளிப்பது என்பன இந்தத் திட்டம் திட்டமாக மட்டுமே இருந்து முடிந்ததற்கானக் காரணங்களாகிப் போகின.

ஆனால் ஜப்பானியப் படைகளோ இந்த காரணங்களைத் தடைகளாக எண்ணவில்லை.  இங்கிலாந்தில் ரயில் பாதை அமைக்கும் என்ஜீனியர் துறையில் கல்வி கற்ற ஜப்பானியர்களைப் பணித்திட்டத்தில் இணைத்துக் கொண்டு முழு தீவிரத்துடன் ஒரு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் ஜப்பானியப் படைகள் இயங்கின. திட்டம் உறுதியாகி முடிவாக,  1942ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானியப் படைத் தலைமையகம் தம் படைகளுக்கு பான் போங் (Ban Pong ) நகரிலிருந்து பர்மாவின் எல்லையில் உள்ள மூன்று பகோடாக்களைக் கடந்து தான்புஸாயாட் (Thanbyuzayat)  செல்லும் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை அறிவித்து உடன் துவங்க கட்டளையிட்டது. இப்பணிக்கு வேலைக்கு பணியாட்கள் என்பதோடு ஜப்பானியப் படைகளால் கைது செய்யப்பட்ட போர் கைதிகளைக் கொண்டு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.



சியாமையும் பர்மாவையும் இணைக்கும் ரயில் பாதை

இந்த ரயில்பாதை அமைப்புப் பணியில் போர் கைதிகள் மட்டுமன்றி மலாயாவிலிருந்து 180,000 கூலிகளும் அழைத்து வரப்பட்டனர் என்று குறிப்புக்கள் காட்டுகின்றன. அப்படி மலாயாவிலிருந்து வந்தவர்களில் அதிகமானோர் தமிழர்களும், சீனர்களும் ஆவர்.  இவர்களுடன் மலாய்காரர்கள், இந்தோனிசியர்களும் அடக்கம்.  ஆங்கிலேய, ஆஸ்திரேலிய, டச்சு, அமெரிக்க  போர்க்கைதிகள் 60,000 பேரும் இவர்களுடன் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். (குறிப்பு: ஆஸ்திரேய அரசாங்கக் குறிப்புக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் காணப்படுகின்றது. அக்குறிப்புக்களின் படி 250,000 ஆசிய தொழிலாளர்களும் 61,000 போர் கைதிகளும் இப்பணியில் ஈடுபட்டனர் என உள்ளது)


 இங்கிலாந்து, ஆஸ்திரேலிய போர் கைதிகள் – உடல் இளைத்து மிகப் பரிதாபமானநிலையிலும் பணி செய்யும் நிலைக்கு உட்படுத்தப்பட்டனர்

இவர்களில் 90,000 கூலிகளும் 12,399 போர் கைதிகளும் இந்த ரயில்பாதைக் கட்டுமானப் பணியின் போது சரியான சுகாதாரம் இல்லாமை, போதிய உணவு இல்லாமை, அதிகப்படியான உடல் உழைப்பு, ஜப்பானியப் படைகளின் கடுமையானத் தண்டனைகள், திடீரென்று பரவிய மலேரியா நோய் போன்ற காரணங்களால் இறந்தனர்.



மலாயாவிலிருந்து வந்த கூலிகள்

அந்த நினைவுகளை அருங்காட்சியகம் வழங்கும் குறிப்புகளின் வழி வாசிக்கும் போதே நம் மனம் அச்சத்தில் உறைந்து போகின்றது. நினைத்தாலே உடலை நடுங்க வைக்கும் பயங்கரமான ஒரு கால கட்டம் அது. அக்காலச் சூழலை மேலும் விவரிக்கிறேன்.. அடுத்த கட்டுரையில்.

தொடரும்..!

குறிப்பு: படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.​

Monday, December 30, 2013

20. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் - தாய்லாந்து

முனைவர்.சுபாஷிணி 


இந்த அருங்காட்சியகம் பற்றிய தொடரில் உங்களை நான் இன்று அழைத்துச் செல்லவிருப்பது தாய்லாந்திற்குத்தான்!

பொருளாதாரப் பிரச்சனைகள்; அரசியலில் நேர்மையற்ற நிலை; சிறுபாண்மையினர் சமூகத்தின் தேவைகள் வாக்களித்தபடி நிறைவேற்றப்படாத ஏமாற்றம்; ஐரோப்பிய ஆஸ்திரேலிய சுற்றுப் பயணிகளின் வரவை மையமாக வைத்து இயங்கும் விபச்சார விடுதிகள் – இவை தற்போதைய தாய்லாந்தைப் பற்றி அடிக்கடி ஊடகங்களின் வழி நாம் கேள்விப்படும் செய்திகள்.  ’இது மட்டுமா தாய்லாந்து?’ என நினைப்பதே கூட தவறு என நம்மை திகைக்க வைக்கின்றது நேரடியாக இங்கு பார்க்கும் போது.

இந்தப் பதிவு ஒரு வகையில் வித்தியாசமானதொரு பதிவு என்றே சொல்வேன். ஏனெனில், இப்பதிவை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் தாய்லாந்தின் தெற்குப் பகுதி  நகர் ஒன்றிலிருந்து தான் என்பதால்.

இந்தியா, சீனா என்ற இரண்டு பெரிய பண்பாட்டு, நாகரிக செழுமை நிறைந்த நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கின்றது தாய்லாந்து. இவ்விரண்டு பெரிய நாடுகளின் சமய, பண்பாட்டு, வாழ்வியல் தாக்கங்களின் விளைவாகவும், அதனால் விளைந்த ஒரு கலவையாகவும், ஆனால், அதே வேளை ஒரு தெளிவான தனித்துவம் ஒன்றினையும் பேணும் ஒரு கலாச்சாரத்தைக் கொண்டதாகவும் தாய்லாந்து திகழ்கின்றது.

இன்னொரு சிறப்பும் இந்த நாட்டிற்கு இருப்பதை குறிப்பாகக் காண்கின்றேன். காலனித்துவ ஆட்சியில் சிக்கி சில நூற்றாண்டுகள் தவித்த ஏனைய அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனிசியா போலல்லாது ஐரோப்பியர் வசம் தம் நாட்டை  இழக்காத ராஜ்ஜியத்தைக் கொண்டிருந்த நாடு இது.  அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஹாலந்து ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க கைப்பற்றும் முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து ஐரோப்பிய காலனித்துவ ஆட்சி என்பதே இல்லாமல் சுய ஆட்சியிலேயே தொடரும் ஒரு பெரும் நாடு இது என்பதே ஒரு தனிப் பெருமை.

இன்றைய இந்தோனிசியாவின் ஒரு தீவான சுமத்ராவிலிருந்து தாய்லாந்தின் தென் பகுதி வரை ஸ்ரீவிஜயா அரசு 10ம் நூற்றாண்டு வரை பரந்து விரிந்திருந்தது. அப்பேரரசும் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க அதனைப் பயன்படுத்திக் கொண்டு,  போரிட்டு வெற்றி பெற்ற தாய் அரசு இப்போதைய அயோத்யாவில் தனது நாட்டின் முதல் தலைநகரை அமைத்து ஆட்சியைத் தொடங்கியது.  அதன் பின்னரும் கூட பற்பல போர்கள்,  குறிப்பாக பர்மா மற்றும் சீன மலைப்பகுதி அரசுகள் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தினாலும் கூட, தாய் அரசாட்சி என்பது மட்டும் மறையாமல்,  இன்றும் மன்னராட்சியுடன் கூடிய மக்களாட்சி தொடர்கின்றது.

இந்த ஆண்டு இறுதியையும் 2014ம் ஆண்டின் தொடக்க நாட்கள் சிலவற்றையும் தாய்லாந்தின் சில நகரங்களுக்குப் பயணித்து இந்நாட்டின் வரலாற்று கலாச்சார பின்னனியை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தாய்லாந்தின் இயற்கை சூழலில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு நானும் என் கணவரும் தாய்லாந்து வந்தோம்.  மிக அன்பான ஒரு சுற்றுலா பயண வழிகாட்டி தாய் பெண்மணி ஒருவருடன் 22 பேர் கொண்ட ஜெர்மானிய சுற்றுலா குழுவில் இணைந்து பாங்கோக் தொடங்கி அயோத்யா, சுக்கோத்தை, லம்பாங், சாங் ராய், சாங் மை, லோக் புரி, காஞ்சனாபுரி, சா ஆம் ஆகிய இடங்களுக்கு இப்பயணக்குழுவினருடன் 15 நாட்கள், 2800 கிலோமீட்டர் தூரம் வடக்கு மேற்கு தெற்குப் பகுதிகளில் பயணித்து விட்டு தற்சமயம் கோ சாமூய் தீவிலிருந்து இப்பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தாய்லாந்தின் அருங்காட்சியகங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன்னர் இந்த நாட்டின் வரலாற்றுப் பின்னணியைப் பற்றியும், நாட்டினைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்வது உதவலாம் என்பதால் ஒரு சிறு குறிப்பு.

பௌத்தம் தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மதம்.  அதிலும் நாட்டின் மக்கள் தொகையில் 80% பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் தாவோயிசம், ஹிந்து சமயம், கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம் என்ற வகையில் அமைந்துள்ள நாடு இது. இந்த 80% பௌத்தர்களில் ஏறக்குறைய 96 விழுக்காட்டினர் தேரவாத புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் மஹாயானா பௌத்தத்தைப் பின்பற்றுவோர்.

தாய்லாந்து ஒரு அதிசயமான நாடு.

தேரவாத பௌத்தம் என்றாலும் மிகக் கட்டுப்பாடான வகையில் இந்த வகை பௌத்தத்தை கடைப்பிடிப்பது என்பது இங்கு நடைமுறையில் இல்லை.  பல வழக்குகளை இணைத்துக் கொண்டு புதுமையான ஒரு பௌத்த நெறியாக இங்கே பௌத்தம் நடைமுறையில் திகழ்கின்றது.



இரண்டு பௌத்த பிக்குகள் – சந்தையில்

இங்கு பிறக்கும் பௌத்த குடும்பத்து ஒவ்வொரு ஆணும் தம் திருமணத்திற்கு முன்னர் குறைந்தது மூன்று மாதங்களாவது ஒரு பௌத்த ஆலயத்தில் இணைந்து புத்த பிக்குவாக நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பது வழக்காக உள்ளது. சமூகத்தளத்தில் அதி உயரத்தில் இருக்கும் மன்னர் முதல் சாதாரண மக்கள் வரை அனைவருக்கும் உள்ள ஒரு விதி இது. இன்றைய மன்னர் பூமிபோல் அவர்களும் புத்த பிக்குவாக சில காலம் இருந்தார் என்பது குறிப்பிடப்பட  வேண்டிய ஒன்று. பெண்களும் வெள்ளை ஆடை உடுத்தி பெண் பிக்குணிகளாக தாம் விரும்பும் எக்காலத்திலும் ஒரு பௌத்த சங்கத்தில் தம்மை இணைத்துக் கொள்ளலாம். ஆணோ பெண்ணோ, தாங்கள் விரும்பும் வரை புத்த பிக்கு, பிக்குணிகளாக இருந்து விட்டு மீண்டும் சங்கத்திலிருந்து வெளியேறி சம்சார வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொண்டு தம் வாழ்க்கையைத் தொடரலாம். இதற்கு சங்கத்திலும் சரி குடும்பத்திலும் சரி எத்தடையும் இல்லை. புத்த பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்கும் உணவு வழங்குவதையும் ஆலயங்களுக்கு நன்கொடை கொடுப்பதையும் மனதார அன்போடு செய்கின்றனர் தாய் மக்கள்.  அனாதையாகத் திரியும் பிராணிகளை எங்கேனும் கண்டால் அவற்றை அருகில் உள்ள புத்த விகாரைகளுக்குக் கொண்டு சென்று சேர்க்கின்றனர். அங்கே அப்பிராணிகள் பாதுகாக்கப்படுகின்றன.

இங்கு என்னை அதிசயத்தில் ஆழ்த்திய ஒன்று…

பௌத்த ஆலயங்களாகட்டும் கட்டிடங்களின் முன்புற வாசலாகட்டும், தனியார் வீடுகளாகட்டும், தங்கும் விடுதிகளாகட்டும், சாலையின் சந்திகளாகட்டும் – எங்கு நோக்கினும் விநாயகரின் மாபெரும் சிலைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. புன்னகை பூத்த முகத்துடன் நர்த்தனமாடிக் கொண்டும் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டும் அழகாகக் காட்சியளிக்கும் விநாயகர் சிலைகள் ஒரு அதிசயம் என்றால் இன்னும் வியப்பில் ஆழ்த்துவது தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் வாசலில் இருக்கும் சிவபெருமான் சிலைகள் தாம். தாய் மக்கள் சிவபெருமானையும் விநாயகரையும் அதிர்ஷ்டத்தை தரும் தெய்வங்களாக இங்கே கருதுகின்றார்கள்.  அதே போல எல்லா இடங்களிலும் பிரம்மாவின் சிலைகள்.  விஷ்ணுவின் ஒரு அவதாரமாக புத்தரை தாய் மக்கள் கருதுவதால் இங்கு தனியாக விஷ்ணுவுக்கு சிலைகள் இல்லை. ஹிந்து சமயத்தின் மும்மூர்த்திகளே இங்கே தாய்லாந்தின் பௌத்த வழிபாட்டு நடைமுறையில் வித்தியாசமான முறையில் கலந்து விட்டனர் என்பதே ஆச்சரியமளிக்கின்றது அல்லவா?


விநாயகர் ஒய்யாரமாய் ஒரு உணவு விடுதியின் முன்னே

தாய்லாந்தில் நான் பார்த்த பெரிய சிறிய நகரங்கள் அனைத்திலும் புத்த விகாரைகள் எண்ணற்றவை உள்ளன.  ஒவ்வொரு கோயில்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தர் சிலை வடிவங்கள் நிறைந்திருக்கின்றன.  கோயிலைச் சுற்றி பல புத்தர் சிலை வடிவங்கள் தியான நிலையில் இருப்பது போல அமைந்திருந்தாலும்,  கோயில் மூலஸ்தானத்தில் ஏதாகினும் ஒரு வடிவில் சிறப்பான புத்தர் சிலை என்பது அமைந்திருக்கின்றது. சில ஆலயங்களில் இருபது கோண தங்க நிற ஸ்தூபம் தனிக் கோயில் போன்று வடிக்கப்பட்டு மைய வழிபாட்டு அம்சமாக கோயிலில் அமைந்திருக்கின்றது.

புத்தரின் உருவச் சிலைகள் எனும் போது பொதுவாக ஐந்து வகைகள் இருக்கின்றன. தியான வடிவில் புத்தர்; அனந்த சயனத்தில் புத்தர்; நின்ற வடிவில் புத்தர்; நடக்கும் வடிவில் புத்தர்; ஞானம் வழங்கும் வடிவில் புத்தர் இப்படி.

கி.பி. 3ம் நூற்றாண்டு தொடக்கம் பௌத்தம் இங்கு பரவி காலூன்றி செழித்தது என்று அறிந்து கொண்டேன். அதிலும் குறிப்பாக ஸ்ரீ லங்கா, பர்மா, தீபெத் ஆகிய நாடுகளிலிருந்து சியாம் (அப்போதைய தாய்லாந்து)  வந்த பிக்குகளின் முயற்சியால் இங்கு பௌத்தம் அறிமுகமாகியது. இப்படி பல நாடுகளின் தாக்கம் என்பது இருந்தாலும் இங்கு புழக்கத்தில் உள்ள பௌத்தம் பல வழிபாட்டு முறைகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு பரிமாணத்தில் தாய்லாந்து பௌத்தம் என்ற தனித்துவத்துடன் விளங்குகின்றது. இதில் விநாயகர், பிரம்மா, சிவன் ஆகிய ஹிந்துக் கடவுள்களும் இணைந்து விடுகின்றனர்.  பௌத்த மார்க்க சிந்தனைகளை உபதேசம் கேட்பதும் தியானிப்பதும் பிக்கு, பிக்குணிகளின் தலையாய நெறியாக அமைந்திருக்கின்றது. சாதாரண மக்கள் வழிபாடு, சடங்குகள் என்பனவற்றோடு தியான நெறி​யையும் அனுஷ்டிப்பது வழக்கமாக இருக்கின்றது.

ஆக,  ஒரு வகையில் இங்கு நாம் காணும் ஏறக்குறைய 80 விழுக்காட்டு அருங்காட்சியகங்கள் பௌத்த விகாரைகளுடனோ (Wat) பௌத்த சமயத்துடனோ சம்பத்தப்படுத்தப்பட்டவைகளாகவே இருப்பதைக் காண முடிகின்றது.

தாய்லாந்து தொடர்ச்சியாக பல போர்களை சந்தித்த நாடு என்பதும் உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்நாட்டிற்கு வணிகப் போக்கு வரத்து என்பது தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்பதாலும் அத்தகைய வரலாற்று விஷயங்களும் இங்குள்ள அருங்காட்சியகங்களில் கிடைக்கின்றன. ஆனாலும் ஒரு குறை இருப்பதை மறுக்க முடியாது. பெரும்பாலும் அனைத்து அருங்காட்சியகங்களிலும் தாய் எழுத்தில் மட்டுமே விளக்கங்கள் அமைந்திருக்கின்றன. இது அரும்பொருட்களின் தனிச்சிறப்புக்களை தாய் மொழி அறியாதோர் அறிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுத்துகின்றது.


சுக்கோத்தை – பர்மிய படையினரால் 13ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்ட அரச மாளிகை வாசலில் (டிசம்பர் 2013)

சரி.  அடுத்த வாரம் வித்தியாசமான ஒர் அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?

Monday, December 23, 2013

19. லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (4), பாரிஸ், ப்ரான்ஸ்

முனைவர்.சுபாஷிணி 


சொல்ல வரும் ஒரு விஷயத்தை மறைபொருளாக உருவகப்படுத்தி வைப்பதில் சித்திரக்கலை படைப்பாளர்களுக்கு உதவத் தவறுவதில்லை. நேரடியாகக் காணும் ஒரு காட்சி தானே, அல்லது ஒருவரின் உருவகப் படம் தானே, அல்லது ஒரு நிகழ்வின் காட்சி தானே, அல்லது ஏதோ புரியாத கோடுகளின் சங்கமிப்பில் ஒரு படைப்பு என்பது தானே என ஒரு சித்திரத்தை எடைபோட முடியாது. பல நுணுக்கமான விஷயங்களை, ஒரு சரித்திர நிகழ்வை, சமூக நிகழ்வை அல்லது சமகால சிந்தனையை, ஒரு படைப்பாளியின் சிந்தனையை, கற்பனையை பிரதிபலிக்கும் கருவியாக சித்திரம் அமைந்து விடுகின்றது.

ஐரோப்பாவில் சித்திரங்களின் அமைப்பில் புதிய பாணியும் அணுகு முறையும் 14ம் நூற்றாணடு தொடங்கி பின்னர் 15ம் நூற்றாண்டில் மிக வலுவடைந்தது. அரசர்களின், பிரபுக்களின் ஆதரவைப் பெற்று குறிப்பிடத்தக்க சித்திர வல்லுனர்கள் பல சித்திரங்களை இக்காலகட்டங்களில் படைத்தனர். குறிப்பிடத்தக்க வகையில் இக்கலை இத்தாலியில் சிறப்புடன் வளர்ந்தது. பல  சித்திரக்கூடங்களும் சித்திரங்கள் வரையும் பயிற்சி வழங்கும் பள்ளிகளும் இக்கால கட்டத்தில் உருவாகின. இப்படி எழுந்த முயற்சிகளின் விளைவாக குறிப்பிடத்தக்க கலைஞர்கள் தங்கள் ஓவியத்திறனைக் கொண்டு கருத்துகளுக்கு உருவம் வழங்கும் பணியை செய்து வந்தனர்.

பொதுவாக ஐரோப்பா முழுமைக்கும், 13ம் நூற்றாண்டு தொடங்கி உருவாக்கப்பட்ட சித்திரங்களின் தன்மை கிறிஸ்துவ மறையான கத்தோலிக்க சமயத்தைப் பிரதிபலிக்கும் ஏதாகிலும் ஒரு அம்சத்தைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதில் ஏசு சிறிஸ்துவின் இறுதித் தீர்ப்பு நாள்,  இரவு உணவு, ஏசுவின் சிலுவையில் ஏற்றப்பட்ட வடிவம், தேவதைகள் ஏசுவின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கும் நிலை, இறந்த ஏசு பிரானின் உடலை அன்னை மேரியும் ஏனையோரும் சுற்றி நின்று கண்ணீர் உகுத்து மடியில் கிடத்தி வருந்தும் காட்சி என்பதாக ஒரு வகை; அடுத்ததாக, பைபிளில் உள்ள கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள். உதாரணமாக ஆதாம் ஏவாள் இவர்களுடன் பாம்பு மரத்தில் தொங்க ஆப்பிளைப் பறிக்கும் சூழல், நரகத்தின் நிலை, தேவதைகள் சுவர்க்கத்தில் மகிழ்ந்திருக்கும் காட்சி என அமைந்திருக்கும். இவையல்லாது ஏனையன, போர்களை விவரிப்பதாக, மன்னனின் அல்லது மன்னனின் குடும்பத்தோர் உருவங்களை மையமாக வைத்து வரையப்பட்டதாக இருக்கும். இவற்றில் பைபிளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள் பல நேரடி விளக்கத்தைத் தருவன அல்ல. மறைமுக கருத்துக்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்டவை பல.

லூவ்ரே அருங்காட்சியகத்தில் இப்பதிவில் நாம் காணவிருப்பது இங்குள்ள சித்திரக்கூடத்தைத் தான்.   எண்ணற்ற விலைமதிக்க முடியாத பல சித்திரச் சேகரிப்புக்களின் கூடம் லூவ்ரே.  டெனோன் (Denon) பகுதியில் முதல் மாடியிலும் இரண்டாம் மாடியிலுமாக இச்சித்திரங்களின் சேகரிப்புக்கள் இடம்பெறுகின்றன. முதலாம் மாடியில் இத்தாலி, ஸ்பெயின் கலைஞர்கள் உருவாக்கிய சித்திரங்கள் இடம்பெறுகின்றன. இரண்டாம் மாடியில்  ப்ரான்ஸ் பெல்ஜியம், ஜெர்மனி, ஹாலந்து, வடக்கு ஐரோப்பாவின் ஏனைய நாட்டு கலைஞர்களின் படைப்புக்கள் என இடம் பெறுகின்றன.

மன்னன் முதலாம் ப்ரான்ஸிஸ் முதலில் இத்தாலியின் அரச மாளிகையில் இருக்கும் சித்திரங்களைப் போல தனது மாளிகை ஒன்றில் சித்திரக்கூடம் ஒன்று அமைக்க திட்டமிட்டார். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட முயற்சியின் பலனாகச் சேர்ந்தவைதான் இன்று லூவ்ரேவில் இருக்கும் இப்பகுதி சேகரிப்புகள். இந்த மன்னன் இத்தாலியில் புகழ்பெற்ற கலைஞர்களான மைக்கல் ஏஞ்சலோ,  ரஃபேல் ஆகியோரது கலைப் படைப்புக்களை வாங்கி தனது மாளிகையில் அவற்றை இணைத்துக் கொண்டார். அது மட்டுமில்லாது சித்திரக் கலைஞர்களையும் தனது மாளிகைக்கு சிறப்பு அழைப்பில் அழைத்தார். லியோனார்டோ டா வின்சி இந்த வகையில் மன்னன் முதலாம் ப்ரான்ஸிஸின் அழைப்பின் பேரில் இங்கு  அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வகை முயற்சிகளின் வழி சித்திரச் சேகரிப்புகள் பெருகின.

மன்னன் 14ம் லூய்ஸ் மேலும் தொடர்ந்து தனது சேகரிப்பிற்காக இத்தாலிய சித்திரங்களை வாங்கி இணைத்தார். அதுமட்டுமில்லாது ஸ்பேனிஷ் கலைஞர்களின் ஓவியங்களையும் தனது சேகரிப்பில் இடம்பெறச் செய்யும் முயற்சியில் இறங்கி முரியோ (Murillo)  வின் கலைப்படைப்புகளை வாங்கி இணைத்தார்.  அதன் பின்னர் பல ப்ரென்ஞ்ச் சித்திரக் கலைஞர்களின் ஓவியங்கள் இச்சேகரிப்பில் இணைந்தன.

இனி இங்குள்ள சில ஓவியங்களை மட்டும் அதன் விளக்கத்துடன் காண்போம்.

Alexander in Babylon (1665)

இது ப்ரெஞ்ச்  ஓவியக் கலைஞர் சார்ல்ஸ் லெ ப்ரூன் (Charles Le Brun ) வரைந்த சித்திரம்.

கி.மு 333ல், பெர்ஸிய மன்னன் மூன்றாம் டார்ஸியுஸை போரில் தேற்கடித்து வெற்றிக் கொடி ஏந்திக் கொண்டு பாபிலோன் நகரத்திற்கு வருகின்றான் மாவீரன் அலெக்ஸாண்டர். அங்கே அவனுக்கு நகரின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நல்வரவு நல்கப்படுகின்றது.  இது அவனை திகைக்க வைக்கின்றது. 3ம் டாரியுஸின் படையிலிருந்து பிடிக்கப்பட்ட 2 யானைகள் ஓட்டி வரும் வாகனத்தில் வலம் வருகின்றான் அலெக்ஸாண்டர். இக்காட்சியில் பாபிலோனின் தொங்கும் தோட்டம் பின்புறக்காட்சியாக அமைந்திருக்கின்றது.  1665ம் ஆண்டில் இந்த ஓவியம் வாங்கப்பட்டு சித்திரக் கூடத்தில் இணைக்கப்பட்டது.

மன்னன் 14ம் லூய்ஸ் ஐரோப்பாவில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க போர்களில் சிறந்த வெற்றி பெற்றவன். தன் பெருமைகளை வீரன் அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இந்த ஓவியம் அமைந்திருப்பதால் இதனை தன் சேகரிப்பில் இணைத்திருக்கின்றார்.  அது இப்போது லூவ்ரேவின் அருங்காட்சியகத்திற்குச் சிறப்பு சேர்க்கிறது.


A Table of Desserts (1640)

இது ஒரு டச்சு கலைஞனின் படைப்பு. மாட்டிசே Matisse இதன் 1635 அசலான டி ஹீம் வரைந்த ஓவொயத்தின் அடிப்படையில் இதனை உருவாக்கி  அதில் அதிகப்படியான பிரமாண்டத்தைச் சேர்க்க பாரோக் கலைவடிவத்தை இணைத்து உருவாக்கிய ஒன்று இது.

இது உணவு உண்ணல் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட படைப்பு.  விசித்திரமான இச்சித்திரத்தில் வெவ்வேறு சீதோஷ்ணத்தில் கிடைக்கும் பழங்களையும் க்ளாஸில் உள்ள வைன்,  அதோடு ஆங்காங்கே இசைக் கருவிகள் என பல அமசங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் ஒரு ஒழுங்கற்ற முறை தென்படுவதையும் காணமுடியும். ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு பொருள் இருப்பதாக குறியியல் அறிஞர்கள் (symbologist)  கருதுவதாகவும் குறிப்பு உள்ளது.  பைபிளில் குறிப்பிடப்படும் fruit if paradise  ஆகிய செர்ரி,  மறுக்கப்பட்ட பழங்களான ஆப்பிள், பீச் ஆகியவை தென்படுவதால் மறைமுக கருத்துக்கள் கொண்ட ஒரு கலைப்படைப்பு இது என்பது அவர்களின் விளக்கம்.


Allegory of Fortune (1729)

இது ஒரு ப்ளெமிஷ் (பெல்ஜியம்)  படைப்பு

ரோமன் கடவுள் ஃபோர்ச்சுனா இதில் ஒரு உலக உருண்டையின் மேல் இருப்பதாகக் காணலாம். நிலையற்ற தன்மை கொண்டது அதிர்ஷ்டம். இந்த உலக உருண்டை ஒரு கப்பலில் இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.  கடலில் பயணிக்கும் பயணம் போன்றது வாழ்க்கை; நிறைய எதிர்பாராத விஷயங்கள் நேரலாம், என்ற வகையில் பொருள் கொள்ளலாம்.

மண்னன் 14ம் லூயிஸின் சேகரிப்பிலிருந்து பெறப்பட்ட ஓவியம் இது. இதன் அசலை உருவாக்கியவர் 2ம் ப்ரான்ஸ் எனப் பெயர்கொண்ட பெல்ஜிய ஓவியக் கலைஞர்.


Charles VII (1403-1461), King of France (1445)

1445ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சித்திரம் இது. பேரரசன் 7ம் சார்ல்ஸின் உருவப்படம் கொண்ட ஓவியம். இந்த மன்னன் அச்சமயத்தில் இங்கிலாந்துக்கும் ப்ரான்ஸுக்கும் இடையே நிகழ்ந்த நூறாண்டுப் போரில் மாபெரும் வெற்றியை ப்ராஸிற்கு பெற்று வந்ததன் பின்னர் உருவாக்கப்பட்ட படைப்பு.  ப்ரெஞ்சுப் படைப்பான இதனை வரைந்தவர் Jean Fouquet. ஆரம்பத்தில் யாரால் உருவாக்கப்பட்ட ஓவியம் இது என்பதில் சரியான தகவல் கிடைக்காவிடினும் பல ஒப்பீடுகளுக்குப் பிறகு இவை ப்ரெஞ்சு ஓவியர் Jean Fouquet உருவாக்கிய சித்திரம் என்பது அறியப்பட்டது.

இப்படி இங்கு இன்னும் பல ஓவியங்கள்.. அவற்றையும் அடுத்தடுத்து என பார்த்துக் கொண்டே செல்லலாம்.  அதோடு உலகின் பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆவணங்களும் கலைப்பொருட்கலும் அரும்பொருட்களும் அடங்கியிருக்கும் மாபெரும் பொக்கிஷம் இம்மண்டபம். ஆனால் நாம் ஏனைய அருங்காட்சியகங்களுக்கும் செல்ல வேண்டுமல்லவா?

அடுத்ததாக உங்களை மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். ஐரோப்பாவை விட்டு சற்றே நெடுந்தூரம் செல்வோம்.

வேறொரு நாட்டிற்கு வேறொரு அருங்காட்சியகத்திற்கு!​

குறிப்பு: படங்களில் சில http://www.louvre.fr/en