முனைவர்.சுபாஷிணி
இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள் இன்றளவும் மறையவில்லை. ஊடகங்கள் வழியாக அவ்வப்போது போர் சம்பந்தப்பட்ட ஏதாகினும் தகவல்கள் அவ்வப்போது நமக்கு கிடைத்துக் கொண்டு தானிருக்கின்றன. இந்த இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் ஏற்படுத்திய அழிவுகள் பற்றி நினைத்துப் பார்த்தால் இன்றும் நம் மனம் அதிர்ச்சிக்குள்ளாவதைத் தவிர்க்க இயலாது. ஜப்பானியப் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் அவர்கள் அங்கு வாழ்ந்த மக்களையும், எதிரிப்படைகளிலிருந்து பிடித்து வந்த போர் கைதிகளையும் இப்படையினர் நடத்திய விதமானது போர் குற்றவியல் வரலாற்றிலேயே மிகக் கொடூரமானவை என்பதில் மறுப்பில்லை.
எனது அன்மைய தாய்லாந்து பயணத்தில் நான் ஒரு சில அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு பெற்றேன். அதில் என்னை திடுக்கிட வைத்த தகவல்களை வழங்கிய ஒரு அருங்காட்சியகம் என்றால் அது பர்மா ரயில்வே அல்லது சியாம்-பர்மா ரயில்வே அல்லது பர்மா-சியாம் மரணப் பாதை (Death Railway) என அழைக்கப்படும் ரயில் பாதை வரலாற்றை விளக்கும் ஜீத் போர் அருங்காட்சியகம் (JEATH War Museum) தான். இந்த அருங்காட்சியகம் 1977ம் ஆண்டு தாய்லாந்தின் மேற்குப் பகுதி மாநிலமான காஞ்சனாபுரி நகரில் வாட் சாய்சும்போல் புத்த விகாரைக்கு அருகே அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டது.
அருங்காட்சியகத்தின் முன்பகுதியில் பரந்த புல்வெளியில் போர்கைதிகளாக இருந்து இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் மாண்டு போன மனிதர்களுக்கான மயானமும் நினைவு மண்டபமும் அமைந்திருக்கின்றன. அருங்காட்சியகமோ அதன் எதிர் புறமாக அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தின் உள்ளே புகைப்படங்களோ வீடியோ பதிவுகளோ செய்ய அனுமதி இல்லை. நுழைவாயிலில் கட்டணத்தைக் கட்டி உள்ளே செல்லும் முன் அமைந்துள்ள விற்பனைப் பொருட்கள் கடையில் இந்த அருங்காட்சியகம் பற்றியும் மேலும் க்வாய் பாலம், ரயில் பாதை தொடர்பான நூற்களையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த நூல்கள் தாய் மொழி தவிர்த்து ஆங்கிலம், ஜெர்மன், ப்ரென்ச், ஜப்பானிய மொழிகளில் கிடைக்கின்றன.
இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இந்த அருங்காட்சியகம். கீழ்த்தளத்தில் உள்ளே நுழையும் போதே ஜப்பானியப் படைகள் சியாம் நாட்டில் (தாய்லாந்து) அரசருடன் உடன்படிக்கை செய்து கொண்டு, இந்த பர்மா-சியாம் ரயில் பாதையை அமைத்த விவரங்களை வரிசைக் கிரமமாக வழங்கியிருக்கின்றனர். விளக்கங்களுக்கு விரிவான புரிதலைக் கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளின் வழியாக சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொரு விளக்கக் குறிப்புகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன. இவை விளக்கங்கள் தரும் தகவல்களுக்கு வலு சேர்ப்பனவாக அமைந்திருக்கின்றன என்றே கூறுவேன்.
இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்துவிட்ட காலம் அது. ஜப்பானிலிருந்து சிங்கப்பூர் வந்து பின்னர் சிங்கப்பூரிலிருந்து தங்கள் படைகளையும் பொருட்களையும் பர்மா தலைநகர் ரங்கூனுக்கு கொண்டு செல்வது ஜப்பானியப் படைகளுக்குச் சாதாரண காரியமாக அமையவில்லை. ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்த பர்மாவை ஜப்பானியப் படைகள் 1942ல் கைப்பற்றின. படிப்படியாக முழுமையாக பர்மாவை ஆக்கிரமித்து இந்தியா செல்லவும் இப்படைகள் திட்டமிட்டன. ஆங்கிலேய-டச்சு படைகள், இந்த ஜப்பானியப் படைகள் மலாக்கா நீரிணை வழியாகக் கடல் பயணம் மேற்கொண்டு பர்மா செல்வதை மிகத் தீவிரமாக தடுத்து வந்தன. இதற்காக ஆங்கிலேய-டச்சு படைகள் நீர்மூழ்கிக் கப்பலை இப்பகுதியில் இயக்கியும் வான்படைகளைக் கொண்டும், ஜப்பானியப் படைகள் இவ்வழியாக முன்னேறுவதைத் தடுத்துக் கொண்டு தீவிரமாகக் கண்காணித்து வந்தன. இந்தத் தடைகளைக் கடந்து பர்மா செல்ல மாற்று வழி ஒன்று ஜப்பானியப் படைகளுக்கு மிக அவசியமாகப் பட்டது. சியாமிலிருந்து ரங்கூனுக்குச் செல்ல அப்போது ஒரே ஒரு சாலை மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. அது ராஹேங் (Raheng) நகரிலிருந்து கவ்காரேய்க் வழியாகச் சென்று மாவ்ல்மெய்ன்(Maulmein) சென்றடையும் வழி. இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே ஒரு சாலைப் பாதையை சியாமின் பாங்காக் நகரிலிருந்து மாவ்ல்மெய்ன் வரை அமைக்க சியாமும் பர்மாவும் திட்டமிட்டன. ஆனால் அது செயல்முறைப் படுத்தப்படவில்லை. ஆக, இருந்த ஒரே சாலைப் பாதை ராஹேங்கிலிருந்து செல்லும் பாதைதான். அதுவும் தரமான ஒரு பாதையாக அமைந்திருக்கவில்லை.
இந்தச் சூழலில் கட்டாயமாக ஒரு மாற்று வழி பர்மாவிற்குச் செல்ல தேவைப்பட ஜப்பானியப் படைகளின் தளபதிகள் திடமிடுதலில் ஈடுபட்டனர். ஜப்பானியப் படைகள் ரயில் பாதை அமைக்க திட்டமிடுவதற்கு முன்னரே பர்மாவில் ஆட்சி செலுத்தி வந்த ஆங்கிலேய அரசு இப்பகுதில் சியாமிலிருந்து ரங்கூனை இணைக்கும் ஒரு ரயில் பாதையை உருவாக்கும் திட்டத்தை வைத்திருந்தனர். முழு திட்டமும் உருவாகியது. ஆனால் அது திட்டத்துடனேயே நின்று விட்டது. இதற்குக் காரணமாக அமைந்தவை இரண்டு விஷயங்கள். முதலாவதாக, காஞ்சனாபுரியிலிருந்து ரங்கூன் செல்லும் பாதை என்பது அடர்ந்த காடுகள் அமைந்த நீண்ட மலைப்பகுதி. இதில் ரயில் பாதை தண்டவாளம், பாலம் என அமைப்பது என்பது சாத்தியமான ஒரு காரியம் அல்ல. இரண்டாவது காரணம் இதற்குத் தேவைப்படும் வேலையாட்களைத் தேடுவது. ரயில் பாதை அமைப்பது, அதிலும் அடர்ந்த காட்டுப்பகுதியில் என்பது எளிமையான ஒன்றல்ல என்பதால் இப்பணிக்கு முன்வர பணியாளர்கள் தயங்கினர். அதோடு எத்தனை பேரை வைத்து இதனை சாதிப்பது? இவர்களுக்கான கூலியை எப்படி சமாளிப்பது என்பன இந்தத் திட்டம் திட்டமாக மட்டுமே இருந்து முடிந்ததற்கானக் காரணங்களாகிப் போகின.
ஆனால் ஜப்பானியப் படைகளோ இந்த காரணங்களைத் தடைகளாக எண்ணவில்லை. இங்கிலாந்தில் ரயில் பாதை அமைக்கும் என்ஜீனியர் துறையில் கல்வி கற்ற ஜப்பானியர்களைப் பணித்திட்டத்தில் இணைத்துக் கொண்டு முழு தீவிரத்துடன் ஒரு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் ஜப்பானியப் படைகள் இயங்கின. திட்டம் உறுதியாகி முடிவாக, 1942ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானியப் படைத் தலைமையகம் தம் படைகளுக்கு பான் போங் (Ban Pong ) நகரிலிருந்து பர்மாவின் எல்லையில் உள்ள மூன்று பகோடாக்களைக் கடந்து தான்புஸாயாட் (Thanbyuzayat) செல்லும் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை அறிவித்து உடன் துவங்க கட்டளையிட்டது. இப்பணிக்கு வேலைக்கு பணியாட்கள் என்பதோடு ஜப்பானியப் படைகளால் கைது செய்யப்பட்ட போர் கைதிகளைக் கொண்டு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
சியாமையும் பர்மாவையும் இணைக்கும் ரயில் பாதை
இந்த ரயில்பாதை அமைப்புப் பணியில் போர் கைதிகள் மட்டுமன்றி மலாயாவிலிருந்து 180,000 கூலிகளும் அழைத்து வரப்பட்டனர் என்று குறிப்புக்கள் காட்டுகின்றன. அப்படி மலாயாவிலிருந்து வந்தவர்களில் அதிகமானோர் தமிழர்களும், சீனர்களும் ஆவர். இவர்களுடன் மலாய்காரர்கள், இந்தோனிசியர்களும் அடக்கம். ஆங்கிலேய, ஆஸ்திரேலிய, டச்சு, அமெரிக்க போர்க்கைதிகள் 60,000 பேரும் இவர்களுடன் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். (குறிப்பு: ஆஸ்திரேய அரசாங்கக் குறிப்புக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் காணப்படுகின்றது. அக்குறிப்புக்களின் படி 250,000 ஆசிய தொழிலாளர்களும் 61,000 போர் கைதிகளும் இப்பணியில் ஈடுபட்டனர் என உள்ளது)
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய போர் கைதிகள் – உடல் இளைத்து மிகப் பரிதாபமானநிலையிலும் பணி செய்யும் நிலைக்கு உட்படுத்தப்பட்டனர்
இவர்களில் 90,000 கூலிகளும் 12,399 போர் கைதிகளும் இந்த ரயில்பாதைக் கட்டுமானப் பணியின் போது சரியான சுகாதாரம் இல்லாமை, போதிய உணவு இல்லாமை, அதிகப்படியான உடல் உழைப்பு, ஜப்பானியப் படைகளின் கடுமையானத் தண்டனைகள், திடீரென்று பரவிய மலேரியா நோய் போன்ற காரணங்களால் இறந்தனர்.
மலாயாவிலிருந்து வந்த கூலிகள்
அந்த நினைவுகளை அருங்காட்சியகம் வழங்கும் குறிப்புகளின் வழி வாசிக்கும் போதே நம் மனம் அச்சத்தில் உறைந்து போகின்றது. நினைத்தாலே உடலை நடுங்க வைக்கும் பயங்கரமான ஒரு கால கட்டம் அது. அக்காலச் சூழலை மேலும் விவரிக்கிறேன்.. அடுத்த கட்டுரையில்.
தொடரும்..!
குறிப்பு: படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
நாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் பாதை” என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் ஒரு சோகம் தோய்ந்த கலை வடிவம் தான் “சயாம் பர்மா மரணரயில் பாதை (PG)” ஆவணப்படம்.
ReplyDeleteFacebook : https://www.facebook.com/Nadodigalcreations
IMDB : http://www.imdb.com/title/tt3883834/
ஆவணப்படம் பற்றிய சில தகவல்கள் :
தமிழுலகம் அதிகம் அறிந்திடாத ஒரு துயரம் சயாம்(தாய்லாந்து) – பர்மா மரணரயில் பாதை. சிங்கப்பூர் – மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட ரயில்பாதை ஒன்றை அமைத்தது. அதை அமைக்கும் பணியில் 30,000 பிரிட்டீஷ் – ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை இலட்சம் (மலாயாவின் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தொனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.
ஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இக்கொடியச்சம்பவத்தில் 80,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் குறித்து 64 நிமிடங்கள் கொண்ட ஒரு ஆவணப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
மரணரயில்பாதையில் பணியாற்றி உயிருடன் மீண்டு, இன்று தங்களது வாழ்நாளின் இறுதிக்கணங்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவர்கள் பலர் அந்த நினைவலைகளை இப்படத்தில் பகிர்ந்துள்ளனர். மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படும் எவரின் உள்ளத்திலும் ஆழமான காயங்களை உருவாக்கும் பல சம்பவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் பங்கேற்க உரிய ஆவணங்கள்/ஆதாரங்களோடு இப்படம் நிறைவடந்துள்ளது.
பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகளில் படப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இந்த இரயில்பாதையில் தம் அரிய பிறவியைத் தியாகம் செய்த இலட்சக்கணக்கான ஆசியத்தொழிலாளர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே அமைந்துள்ளது. இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக்காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
இப்பணியில் இறந்த (இழப்பீடு உள்ளிட்டச் சலுகைகளைப் பெற்ற) பிரிட்டீஷ்-டச்சு-அமெரிக்காவைச் சேர்ந்த 16000 வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC DAY என்ற பெயரில் நினைவுத்தினங்கள் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகின்றன. 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் பற்றி எவரும் கவலை கொண்டதில்லை.
SIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
நன்றி.
இப்படிக்கு,
ராஜ்சங்கர்