அருங்காட்சியகத்தின் கீழ்தளத்தில் படங்களுடன் கூடிய விவரணைகள் நிறைந்துள்ளன. அத்தோடு அக்கால சூழலை விளக்கும் சில மாடல்கள் (models) இப்பகுதியில் இடம்பெறுகின்றன. இந்த மாடல்களைப் போர்க்கைதிகள் நினைவாக ஆஸ்திரேலியா, ஹாலந்து, இங்கிலாந்திலிருந்து தனியாரும் அரசாங்கமும் வழங்கியிருக்கின்றன. குறிப்பாக இந்த ரயில் பாதை அமைத்த வேளையில் அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் எத்தகைய முறையில் நோயாளிகளுக்கு மருத்துவம் வழங்கப்பட்டது? பணியாளர்கள் தங்கும் வீடுகள், பணியாளர்கள் ஜப்பானியப் படைகளால் தண்டிக்கப்படும் காட்சி என்பன இதில் இடம்பெறுகின்றன. அதை பார்த்து முடித்து கீழ்தளத்திலிருந்து படிகள் ஏறி முதல் மாடிக்குச் சென்றால் அங்கு தொடர்ச்சியாக பல அரும்பொருட்களை நாம் காணலாம்.
இப்பகுதியில் ஜப்பானியப் படைகள் பயன்படுத்திய ரகஸிய தொலைத் தொடர்பு கருவிகள், ஆங்கிலேய, டச்சு போர்கைதிகள் பயன்படுத்திய தொலைத்தொடர்பு கருவிகள், தட்டச்சுக் கருவி, பணியாளர்கள் அடையாள அட்டை, ஜப்பானியப் படையினர் உடைகள் போன்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு ரகசியமாகக் கையாளப்பட்ட சில ஆவனங்களும் இங்குள்ளன. அதுமட்டுமல்ல.. இந்த மரண ரயில் பாதை அமைப்பைப் பற்றி விளக்கும் இரண்டு நூல்களையும் இங்கு கண்டேன். இந்த அருங்காட்சியகத்தில் புகைப்படமும் வீடியோ பதிவும் செய்வதை தடைசெய்திருப்பதால் இவையனைத்தையும் புகைப்படங்களாகப் பதிய முடியாததில் எனக்கு சற்று வருத்தமே.
செக்ஷன் 277
போர்க்கைதிகளும் மலாயாவின் கூலிகளும் கட்டி முடித்த இந்த முழு ரயில் பாதையில் பாலம் செக்ஷன் 277 மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது க்வாய் நதியைக் கடக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாலம். 1943ம் ஆண்டில் இதன் முழு பணியும் முடிக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கப் படைகள் இந்த பாலத்தை குண்டுகள் போட்டு தகர்த்து. இது ஜப்பானியப் படைகளைப் பலமிழக்கச் செய்தது என்பது மிக முக்கியமான ஒன்று. அதுமட்டுமல்லாமல் ஒரு கால கட்டத்தில் இப்பாலத்தின் தொடர்ச்சியான தண்டவாளப் பகுதியில் 3.9 கிமீ அளவு பகுதியை ஆங்கிலேய படைகள் நீக்கின. ஆனால் பின்னர் மீண்டும் இவை கட்டிமுடிக்கப்பட்டன. ஆயினும் பர்மாவை இணைக்கும் பகுதிகள் மீண்டும் சீரமைக்கப்படாமலேயே இருந்தன என்பதால் இன்று வரை இப்பாலம் பர்மா-சியாமை முழுமையாக இணைக்காத நிலையிலேயே இருக்கின்றது.
இந்த பர்மா-சியாம் மரண ரயில்பாதை பற்றி ஒரு திரைப்படம் வெளிவந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ப்ரென்ச் நாவலாசிரியர் Pierre Boulle அவர்களின் 1952ம் ஆண்டு நாவலான Le Pont de la Rivière Kwai நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அது. இந்த நாவல் ஆங்கிலத்தில் The Bridge over the River Kwai என்ற பெயரில் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்தத் திரைப்பட்டம் இங்கிலாந்து-அமெரிக்க கூட்டு படைப்பாக உருவாக்கப்பட்டது. பர்மா-சியாம் மரண ரயில் பாதை என்றாலும் இந்த முழுப்படமும் தாய்லாந்து பர்மாவில் இல்லாமல் இலங்கையில் படமாக்கப்பட்டதாம். மரண ரயில்பாதையாக இப்படத்தில் காட்டப்பட்ட பகுதி இலங்கையில் `கிட்டுல்கால` என்ற பகுதியில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தைத் தாய்லாந்து காஞ்சனாபுரியில் என்றில்லாமல் இலங்கையில் படமாக்கியதற்கு என்ன காரணம் எனப் புரியவில்லை.
இந்தத் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் ஒருவகையில் இது மிகப் பெரிய கவன ஈர்ப்பை செய்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. 7 அக்காடெமி அவார்டுகளைத் தட்டிச் சென்றிருக்கின்றது இந்தத் திரைப்படம். அதில் அவ்வாண்டின் சிறந்த படத்திற்கான பரிசும் அடங்கும். ஆனால் முழு மரணப்பாதை கொடுமைகளையும் பிரச்சனைகளையும் சரியாக வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனமும் இந்தப் படத்திற்கு இருக்கின்றது.
காஞ்சனாபுரிக்கு நான் சென்றிருந்த போது அருங்காட்சியகத்தைப் பார்த்ததோடு அதன் எதிர்புறம் இருக்கும் போர்க்கைதிகள் நினைவு மண்டபத்திற்கும் சென்று அங்கிருக்கும் நினைவுக்கற்களைப் பார்வையிட்டேன். நாடு வாரியாக இவர்களது பெயர்கள் வரிசைக் கிரமமாக புல் தரையில் இங்கு செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நினைவுக் கற்கள் மீதும் போர்க் கைதியாக இருந்து மரணப்பாதை அமைப்பில் பணியாற்றி மரணித்தவர்களின் பெயர், அவர்களது நாடு, சில பொன்மொழிகள் ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தின் வாசலில் (டிசம்பர் 2013)
எங்கள் பயண வழிகாட்டி இந்த அருங்காட்சியகத்தை நாங்கள் பார்த்த பிறகு இம்மரணப்பாதையில் ஓடும் ரயிலில் பயணம் செய்யும் வகையில் எங்களுக்கு டிக்கட்களையும் ஏற்பாடு செய்திருந்தார். காஞ்சனாபுரியிலிருந்து ரயில் எடுத்து 1 மணி நேரப் பயணத்தை இந்த மரணப் பாதையில் மேற்கொண்டோம். மறக்க முடியாத ஒரு அனுபவம் அது என்று தயங்காமல் கூறுவேன். அதுமட்டுமல்லாமல் மறு நாள் காலையில் இந்த ரயில் பாதையின் ஒரு பகுதில் 30 நிமிடங்கள் நடந்து வர எங்கள் பயண வழிகாட்டி ஏற்பாடு செய்திருந்தார். அருங்காட்சியகத்தைப் பார்த்து பின்னர் இந்த ரயில் பயணம் செய்து, ரயில் தண்டவாளத்திலும் நடந்து வந்தது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே அமைந்தது.
காலங்கள் கடந்து விட்ட நிலையிலும் 2ம் உலகப்போர் விட்டுச் சென்றிருக்கும் தடையங்கள் இன்று வரலாற்றினை நாம் புரிந்து கொள்ள உதவுகின்றன. என் அருங்காட்சியகத் தேடல்களில் விதம் விதமான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண்கின்றேன். அதில் இது ஒரு வகை.
தாய்லாந்திலிருந்து புறப்பட்டு அடுத்து நாம் வேறொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோம். அடுத்து நாம் செல்லவிருப்பது வித்தியாசமான ஓர் அருங்காட்சியகம். சற்றே ஆச்சரியத்தைக்கொடுக்கக் கூடிய ஒன்று தான். எங்கு செல்லப் போகின்றோம் என ஊகிக்க முடிகிறதா..?
No comments:
Post a Comment