Monday, August 6, 2018

110. ஸ்மித்சோனியன் நிறுவன அருங்காட்சியகம், வாஷிங்டன் டிசி, வட அமெரிக்கா.

Vallamai - http://www.vallamai.com/?p=86698

முனைவர் சுபாஷிணி

ஒரு மனிதரால் பல காரியங்களில் ஈடுபாடு காட்டமுடியுமா? பல விஷயங்களில் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்ய முடியுமா? தன் சுய வாழ்க்கையில் பல இறக்கங்களையும் தாக்குதல்களையும் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் எதிர்நீச்சல் போட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த முடியுமா? ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு என மாறி மாறிப் பயணித்து அனுபவங்களைச் சேகரிக்கும் போதே சிறைவாசங்களையும் அனுபவித்து, பின் அவற்றிலிருந்தெல்லாம் மீறி வந்து ஆய்வுலகில் இன்பம் காண முடியுமா? இவை சாத்தியமே என்பதற்கு உதாரணம் தான் ஜேம்ஸ் ஸ்மித்சன் (James Smithson).





இவர் பிறந்த போது இவருக்கு பிரஞ்சு பெயர் அளிக்கப்பட்டது. Jacques-Louis Macie என்பது அவரது தந்தையாரால் அவருக்கு அளிக்கப்பட்ட பெயர். பழமைவாதம் முழுமையாகக் குடிகொண்டிருந்த அன்றைய ஐரோப்பாவில், இங்கிலாந்தின் விதவைப்பென்ணான James Macieக்கும் பிரஞ்சு பிரபு Hugh Percyக்கும் மகனாக 1765ம் ஆண்டு பாரீஸ் நகரில் இவர் பிறந்தார். இவரது பிறந்த தேதியும் மாதமும் ஆவணப்படுத்தப்படாமல் ரகசியமாக மறைக்கப்பட்டது. இளம் வயதிலேயே பெற்றோரை இழக்கும் நிலை இவருக்கு ஏற்பட்டது. பெற்றோரின் குடும்பச் சொத்துக்கள் இளம்வயதிலேயே இவருக்குச் சொந்தமாகின. தனது குடும்பப்பெயரை இவரது தந்தையின் குடும்பப்பெயரான ஸ்மித்சன் என்ற பெயருக்கு மாற்றிக் கொண்டு ஜேம்ஸ் ஸ்மித்சன் என அமைத்துக் கொண்டார். பாரீசிலிருந்து இங்கிலாந்திற்குத் தனது தாயாரின் குடும்பத்தினர் பாதுகாப்பில் தம் இளம் பிராயத்திலேயே குடிபெயர்ந்தார்.




இங்கிலாந்தில் இவரது கல்வி தொடர்ந்தது. 1782ம் ஆண்டு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தின் பெம்ப்ரோக் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடங்கி, 1786ம் ஆண்டு முதுகலைப்பட்டமும் பெற்று வெளிவந்தார். கல்விப்படிப்பு மட்டும் தனது சுயவளர்ச்சிக்குப் போதாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இவர் புவியியல் சார்ந்த துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்தார். பிரஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டமது. நெப்போலியன் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை பயணத்தில் இருக்கும் போதே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது உறவினர்கள் நண்பர்களின் உதவியால் சிறையிலிருந்து மீண்டு வந்தார்.





இங்கிலாந்து தாயாருக்கும் பிரஞ்சு தந்தைக்கும் பாரீஸில் பிறந்து, பின் இங்கிலாந்தில் உயர்கல்வி பெற்று, ஐரோப்பாவெங்கும் சுற்றிய ஸ்மித்சன், இத்தாலியில் 1829ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி காலமானார். பல பிரபுக்களைப் போல இவரது வாழ்க்கையும் பொருளாதார வளத்துடன் அமைந்திருந்தது. ஆனால் இவரது கவனமும் ஆர்வமும் பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் மூழ்கிப்போய் கிடந்தது. எளிய விசயமானாலும் சரி, மிக நுணுக்கமான புவியியல், வானியல் சார்ந்த ஆய்வானாலும் சரி, இவர் முழு கவனத்துடன் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார்.

ஸ்மித்சன் தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகள் இல்லாமையால் இவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. தனது எல்லா சொத்துக்களையும் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசி நகரில் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என தனது உயிலை ஏற்பாடு செய்து வைத்தார் ஸ்மித்சன். அவரது இறப்புக்குப் பிறகு அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் அனைத்தும் அமெரிக்காவில் ஆய்வுக்குப் பயன்படும் வகையில் அருங்காட்சியகத் தொகுதியினை அமைக்கப் பயன்படுத்தப்பட்டது.




அவர் தனது உயிலில் "I then bequeath the whole of my property, . . . to the United States of America, to found at Washington, under the name of the Smithsonian Institution, an Establishment for the increase & diffusion of knowledge among men." என எழுதி வைத்தார். ஸ்மித்சன் இறந்தபோது அவரது உடல் இத்தாலியின் கெனோவா நகரிலேயே புதைக்கப்பட்டது. ஆனால் அலெக்சாண்டர் க்ரஹெம் பெல் அவர்கள் ஸ்மித்சன் அவர்களின் உடல் வாஷிங்டன் டிசியில் ஸ்மித்சனின் சொத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மித்சோனியன் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட வேண்டும் என முயற்சி மேற்கொண்டு இத்தாலியிலிருந்து அவரது உடலைக் கொண்டு வந்து இந்த ஆய்வுக்கூடத்திலேயே அவ்வுடலைப்பதித்து வைத்து ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்பினார்.

ஸ்மித்சனின் சொத்துக்களைக் கொண்டு வாஷிங்டன் டிசியில் உருவாக்கப்பட்ட ஸ்மித்சோனியன் நிறுவனம் 1846ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ம் தேதி தொடங்கப்பட்டது. மனிதகுலத்தின் அறிவுப் பரவலை அதிகரிக்கும் நோக்கத்துடன் பல்வேறு அருங்காட்சியகங்களையும் ஆய்வுக்கூடங்களையும் உள்ளடக்கிய வகையில் ஸ்மித்சோனியன் வளாகம் அமைக்கப்பட்டது. ஜேம்ஸ் ஸ்மித்சனின் பெயரை நினைவூட்டும் வகையில் ஸ்மித்சோனியன் நிறுவனம் என்றே இது அன்று முதல் அழைக்கப்படுகின்றது.




ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அருங்காட்சியகங்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் மேற்பார்வையில் இதன் தலைமை அலுவலக வளாகத்தைச் சுற்றி பத்தொன்பது அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் மேற்பார்வையில் இயங்குகின்றன. இதைத் தவிர்த்து அரிசோனா, மேரிலாண்ட், மெசாசூசெட்ஸ், நியூயோர்க், பிட்ஸ்பெர்க், டெக்ஸாஸ், விர்ஜீனியா மாநிலங்களில் என அமெரிக்காவின் 45 மாநிலங்களில் 200 நிறுவனங்கள் ஸ்மித்சோனியன் பெயரால் இந்த ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றன. வட அமெரிக்கா மட்டுமன்றி பனாமா, போர்டோ ரிக்கோ ஆகிய நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் சேவை இயங்கி வருகின்றது.

இந்த நிறுவனங்களில் வந்து பார்த்து பயன்படுவோரின் எண்ணிக்கை ஒரு ஆண்டிற்கு 30மில்லியனாகும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்மித்சோனியன் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் வாஷிங்டன் டிசி சென்றிருந்த போது இந்நிறுவனத்தின் பல அருங்காட்சியகங்களை நேரில் சென்று பார்த்து குறிப்பெடுத்து வரும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன். ஸ்மித்சோனியன் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஸ்மித்சனின் கைப்பட எழுதிய ஆவணங்களை நேரில் பார்த்ததும் ஸ்மித்சனைன் வரலாற்றை புகைப்படங்களோடு வாசித்ததும், அவரது சேகரிப்புக்களை நேரில் கண்டதும் எனக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.



கி.பி.18ம் நூற்றாண்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு மாமனிதராக ஸ்மித்சன் நமக்குக் காட்சியளிக்கின்றார். ஆராய்ச்சியும் ஆய்வுத்தகவல்களும் மனித குலத்தை மேம்படுத்தும் என்பதை அவர் முழுமையாக நம்பினார். அவர் காலத்தைய எல்லா ஆய்வறிஞர்களையும் அவர் அறிந்திருந்தார். அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் அவருக்கிருந்த ஆர்வம் விரிவான நட்புச் சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. மக்களின் மேம்பாட்டிற்கு ஆய்வுகள் அடிப்படை என்பதை அவர் உணர்ந்திருந்தார். தனது வாழ்க்கையை மட்டுமன்றி தனது சொத்துக்கள் அனைத்துமே மனித குல அறிவு மேம்பாட்டிற்குப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே வாழ்ந்து செயல்பட்டவர் ஸ்மித்சன்.  பூவுலகை விட்டு மறைந்தாலும் ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் செயல்பாடுகளால் அழியா புகழ்பெற்று வாழ்கின்றார் ஸ்மித்சன்!

No comments:

Post a Comment