Monday, May 28, 2018

109. அங்கோர் தேசிய அருங்காட்சியகம், சியாம் ரீப், கம்போடியா

http://www.vallamai.com/?p=85445

முனைவர் சுபாஷிணி 


உலகின் பிரமாண்டங்களில் தனக்கெனத் தனியிடம் பெறுவது கம்போடியாவின் அங்கோர்வாட். க்மேர்(Kymer) கலை பண்பாட்டு விழுமியங்கள் ஏனைய ஆசிய கலை வடிவங்களிலிருந்து வேறுபடுபவை. கி.பி.802ல் மாமன்னன் 2ம் ஜெயவர்மன் கம்போடியாவின் அரசாட்சியைக் கைப்பற்றினான். வைணவ பாரம்பரியத்தைப் பின்பற்றியது இந்த அரசு. கி.பி.12ம் நூற்றாண்டில் மன்னன் 2ம் சூரியவர்மன் அங்கோர் வாட் எனும் இந்த விஷ்ணு கோயிலை எடுப்பித்தான். விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்ட இக்கோயில் 2ம் சூரியவர்மனின் மறைவுக்குப் பின் சம்பா பேரரசின் தாக்குதலால் பாதிப்பைச் சந்தித்தது. அதன் பின்னர் 7ம் ஜெயவர்மன் புதிய தலைநகரை உருவாக்கி அங்கோர் தோம், பாயோன் என்ற இரு கோயிகளையும் எடுப்பித்து தனது ஆட்சியைத் தொடர்ந்தான். இக்காலத்தில் கம்போடியா பௌத்தத்தைத் தழுவி, ஒரு பௌத்த நாடாகப் பரிணாமம் பெற்றது. அடுத்த நூற்றாண்டில் பௌத்தக் கோயிலாக மாற்றம் கண்டது அங்கோர் வாட். விஷ்ணுவை மையக்கடவுளாக வைத்து அங்கோர் வாட் அமைக்கப்பட்டது. அங்கோர் பகுதியில் முதன்மை சமயமாக இருந்த வைணவம் அதன் புகழ் மங்கி, கி.பி.12ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு பௌத்தம் செழிக்கத் தொடங்கியது. இன்று கம்போடியாவின் மக்கள் தொகையில் 95% பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களே. தமிழகத்தைச் சில நூற்றாண்டுகள் ஆண்ட பல்லவ மன்னர்களின் தொடர்பு கொண்டவர்கள் பண்டைய கம்போடியாவை ஆட்சி செய்த க்மேர் பேரரசர்கள். பல்லவர்கள் எப்படி தமிழகத்தின் மாமல்லபுரம், காஞ்சி, தொண்டைமண்டலம் ஆகிய பகுதிகளில் தங்கள் நுணுக்கமானக் கட்டுமானக் கலையை வளர்த்தனரோ அதற்குச் சற்றும் குறைவில்லாது கம்போடிய க்மேர் அரசர்களும் பிரமாண்டமான கலை வடிவங்களைப் படைத்திருக்கின்றனர்.


தமிழகத்தைப் போலவே தொடர்ச்சியாகப் பல போர்களைச் சந்தித்திருக்கின்றது கம்போடியா. கம்போடியாவின் நில அமைப்பைக் காணும் போது அது வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய மூன்று பெறும் நாடுகளை எல்லையாகக் கொண்டிருப்பதைக் காணலாம். இதுவே கம்போடியா தொடர்ச்சியாக இந்த நாடுகளை முன்னர் ஆட்சி செய்த பேரரசுகளினால் போர் தொடுக்கப்பட்டு இன்னல்களை எதிர்கொண்ட அமைதியற்ற நிலையை உருவாக்கியிருந்தது. கி.பி18ம் நூற்றாண்டில் தாய்லாந்தும் வியட்நாமும் கம்போடியாவின் மீது யார் ஆட்சி செலுத்துவது என்று பிரச்சனையை கிளப்ப, வியட்நாமிய பண்பாட்டினை கம்போடியர்கள் மீது திணிக்கும் முயற்சிகளும் எழ ஆரம்பித்தன. தாய்லாந்தும் வியட்நாமும் கம்போடியாவை இணைந்து ஆட்சி செய்யும் முடிவையும் எடுத்தன. அப்போது பிரெஞ்சுக் காலணியாக இருந்தது வியட்நாம். 1863ம் ஆண்டு தாய்லாந்தினால் கம்போடியாவில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மன்னர் நொரோடொம் ப்ரோம்போரிராக் தாய்லாந்திடம் தனது நாட்டிற்கான பாதுகாப்பிற்காக உதவி கேட்க, தாய்லாந்து மன்னருக்கும் பிரான்சுக்குமிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆயினும் பிரெஞ்சுக் காலணியாகவே கம்போடியாவின் பெரும் பகுதி இருந்தது. பின்னர் 2ம் உலகப்போரின் காலத்தில் ஜப்பானியப் படைகளின் தாக்கம், அதன் பின்னர் தொடர்ந்த வியட்நாமின் தாக்குதல் என அமைதியின்றி கம்போடிய மக்களின் வாழ்க்கை தொடர்ந்தது. 

1989ம் ஆண்டு அமைதிக்கான முன்னெடுப்புக்கள் தொடங்கின. 1991ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாரீசில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சுதந்திர கம்போடியப் பேரரசின் மன்னராக மன்னர் நோரோடோம் சிகானுக் பொறுப்பேற்றார். மாமன்னர் உள்ள நாடு என்ற போதும் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அரசியல் கட்சிகள் செயல்படும் சட்டமன்ற அமைப்புடன் கூடிய ஆட்சி இன்று தொடர்கின்றது. இப்படி தொடர்ச்சியான பலபல அரசியல் மாற்றங்களைச் சந்தித்திருக்கும் நாடுதான் கம்போடியா. 



கம்போடியாவின் முக்கிய மதமாகத் திகழ்வது பௌத்தம். இலங்கையிலிருந்து தேரவாத புத்தம் கி.பி 12ம் நூற்றாண்டில் கம்போடியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கம்போடியாவின் பல பகுதிகளில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டன. பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிலைகள் வடிக்கப்பட்டன. பிரம்மாண்டமான அங்கோர் தோம் கோயில் வளாகத்தில் வெவ்வேறு திசைகளில் அமைக்கப்பட்டுள்ள போதிசத்துவர் அவலோகதேஷ்வரரின் வடிவங்கள் உலகின் வேறெங்கும் காணக்கிடையாத அரும்பெரும் பொக்கிஷங்கள். இத்தகைய கட்டுமானக் கலை, சிற்பக்கலை ஆகியவற்றினைச் சுற்றி அமைந்த வரலாற்றினைச் சிறப்பாக பதிந்து இன்று கம்போடியா வருகின்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு வரலாற்றுத் தகவல்களை வழங்கும் ஆய்வுக்கூடமாகத் திகழ்கின்றது அங்கோர் தேசிய அருங்காட்சியகம். 




 அங்கோர் தேசிய அருங்காட்சியகம் அங்கோர் நகரைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளின் சேகரிப்புக்களை உள்ளடக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சியாப் ரீப் நகரில் உள்ள இந்த அருங்காட்சியகம் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. கீழ்த்தளம் தவிர்த்து மேலும் இரண்டு தளங்களில், எட்டு தனித்தனியான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை
  • கண்காட்சி அறிமுகம் 
  • க்மேர் நாகரிகம் 
  • சமயமும் நம்பிக்கையும் 
  • க்மேர் பேரரசுகள் 
  • அங்கோர் வாட் 
  • அங்கோர் தோம் 
  • கல்லின் கதை 
  • அப்ஸரசுகளின் அழகு 
என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ளன. 

சமயமும் நம்பிக்கையும் என்ற கருப்பொருளில் அமைந்திருக்கும் காட்சிக்கூடம் இந்த அருங்காட்சியகத்தின் தனிச்சிறப்பு எனலாம். இந்தக் கண்காட்சிப் பகுதியில் மட்டும் ஆயிரம் புத்தர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையில் அமைந்த புத்தரின் வடிவங்கள், நின்ற நிலையில், சாய்ந்த நிலையில், அமர்ந்த நிலையில், யோக நிலையில், ஐந்தலை நாகத்தின் குடையின் கீழ் அமர்ந்த நிலையில் என பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிற்பங்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.




அங்கோர் வாட் கண்காட்சிக் கூடம் அங்கோர் வாட் கோயிலின் வரலாற்றை விளக்கும் பகுதியாக அமைந்துள்ளது. கோயிலின் ஆரம்பகால வரலாறு, பேரரசுகள், மன்னர்கள் பற்றிய தகவல்கள் என்பன போன்ற தகவல்கள் இங்குக் கிடைக்கின்றன.   இதனை அடுத்து வரும் அங்கோர் தோம் கண்காட்சிப் பகுதி அங்கோர் தோம் பற்றியும் பாயோன் கோயிலைப் பற்றியும் விளக்கம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  கல்லின் கதை எனும் பகுதியில்  பல்லவ கிரந்தத்திலும் சமஸ்கிருதத்திலுமான கல்வெட்டுக்கள் பல இங்குள்ளன. பண்டைய தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.  இவை வாசிக்கப்பட வேண்டும்.






இங்குள்ள சேகரிப்பில் புத்தர் சிலைகள் மட்டுமன்றி போதிசத்துவர், அவலோகிதேஷ்வரர், விநாயகர், விஷ்ணு, பிரம்மா, சிவலிங்க சிற்பங்களும் உள்ளன. இவற்றோடு பாயோன், பாந்தே ஸ்ரீ, அங்கோர் சிற்பக் கட்டுமானக் கலைகளை விளக்கும் உடைந்த பகுதிகளில் கண்காட்சிப் பகுதியும் உள்ளது. நுணுக்கமான க்மேர் கலை வடிவத்தின் தனித்தன்மைகளை இப்பகுதியில் கண்டு மகிழலாம். 


வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடம் அளப்பரியது. கம்போடிய மண்ணின் கலைத்திறனையும் அந்நாட்டினை ஆண்ட பேரரசுகளின் ஆளுமைத்திறனையும் படைப்புக்களையும் ஒரு சேர அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த அருங்காட்சியகம் அதற்கு நிச்சயம் உதவும். சியாம் ரீப் நகரில் தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வினை இங்கு செல்கின்ற ஒவ்வொருவருக்கும் தருகின்றது கம்போடியாவின் கோயிற்கலை.

அருங்காட்சியகத்தின் முகவரி:
No. 968, Vithei Charles de Gaulle, Khrum 6, 
Phoum Salakanseng, Khom Svaydangum, 
Siem Reap District, Siem Reap Province, 
Kingdom of Cambodia 

1 comment:

  1. நன்றி சகோதரி.., அரிய தகவல்கள்,. வரலாறும் தமிழும், தங்களை வணங்கிப் போற்றும்., மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete