உலகச் செய்திகளை உடனுக்குடன் வாசித்தால் தான் நம்மில் பலருக்கு அன்றாட கடமைகளைச் செய்த மன திருப்தி ஏற்படும். அந்த அளவிற்கு நமது சிந்தனையானது உலக விசயங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் இணைந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்றைய சூழலில் உலகச் செய்திகளாகட்டும், உள்ளூர் செய்திகளாகட்டும். எதுவாகினும் செய்தித்தாட்களை வாசிக்கின்றோமோ இல்லையோ. இணையத்தின் வழியாகச் செய்தி ஊடகங்கள் பலவற்றிலிருந்து உலக நடப்புக்களை அறிந்து கொள்வது போலவே சமூக ஊடகங்களின் வழியாகவும் தகவல் பரிமாற்றம் நிகழ்வதை நாம் சாத்தியப்படுத்தியிருக்கின்றோம். இதுதான் இன்றைய தகவல் தொழில்நுட்பம் அளித்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு.
உலக நாடுகள் சிலவற்றில் செய்தித்தாட்களின் சேகரிப்புக்கள் கொண்ட அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. சில, தனியார் ஏற்படுத்தியிருக்கும் அருங்காட்சியகங்கள். ஏனைய சில அரசாங்கமே அமைத்த அருங்காட்சியகங்களாக உள்ளன. ஜெர்மனியின் ஆகன் நகரிலும் ஒரு அனைத்துலக செய்தித்தாட்கள் அருங்காட்சியகம் உள்ளது. இது தனியார் ஒருவரின் சேகரிப்பில் உருவான பிரமாண்டமான சேகரிப்புக்கள் நிறைந்த ஒரு அருங்காட்சியகம்.
ஆகன் நகரம் ஜெர்மனியின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இதன் முக்கிய வரலாற்றுச் சிறப்பு இது பேரரசர் கார்ல் அவர்கள் வாழ்ந்த நகர் என்பது தான். பேரரசின் தலைநகராக முன்னர் இருந்ததன் அடையாளமாக இன்றும் இங்குள்ள பெரிய தேவாலயத்தில் மட்டுமல்ல இங்குள்ள பல மூலைகளிலும் பேரரசர் கார்ல் அவர்களை நினைவு கூறும் சின்னங்களைக் காணலாம்.
இந்த அனைத்துலக செய்தித்தாட்கள் அருங்காட்சியகம் ஆகன் பழைய நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கின்றது. அதாவது நகரின் மாநகர மையம் அமைந்துள்ள Pontstrasse சாலையிலேயே கட்டிடங்களின் வரிசையிலேயே ஒரு கட்டிடமாக இருக்கின்றது. ஆகன் நகரிலேயே பிறந்தவரான திரு.ஓஸ்கார் ஃபோன் ஃபோர்க்கென்பெக் (1822 - 1898) அவர்களது சேகரிப்புக்கள் தான் இங்குள்ளவை. உள்ளூர் சேகரிப்புக்களோடு அவரது பல்வேறு பயணங்களின் போது அவர் சேகரித்து வந்த செய்தித்தாட்களின் ஏடுகள் இங்கே மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. உலகின் மிக அதிகமான செய்தித்தாட்களின் சேகரிப்பு உள்ள ஒரு அருங்காட்சியகமாகவும் இது திகழ்கின்றது என்பது ஒரு சிறப்பல்லவா? அதாவது, 17ம் நூற்றாண்டு தொடங்கி 21ம் நூற்றாண்டு வரையிலான செய்தித்தாட்கள் 200,000க்கும் மேற்பட்டவை இங்கிருக்கின்றன.
இங்கே உள்ளே நாம் நுழையும் போது முதலில் நம்மை வரவேற்பது பவுல் ஜூலியஸ் ரோய்ட்டர் அவர்களது பெரிய புகைப்படமும் அவரைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்புமாகும். ரோய்ட்டர் என்ற பெயரைச்க் கேட்டாலே உலகம் முழுமைக்கும் செய்தி அனுப்பும் ரோய்ட்டர் சேவை நம் நினைவுக்கு வரலாம். அந்தச் சேவையை உருவாக்கிய நிறுவனத்தை உருவாக்கியவர் தான் திரு. ரோய்ட்டர். இவர் முதலில் 1850ம் ஆண்டு ஜெர்மனியின் இந்த ஆகன் நகரில் தனது செய்தி சேகரித்துப் பரிமாறும் ஒரு சோதனை முயற்சியைத் தொடங்கி ரோய்ட்டர் நிறுவனத்தை உருவாக்கினார்.
பின்னர் அடுத்த ஆண்டு, 1851ல் ரோய்ட்டர் ஏஜென்சியை லண்டன் நகரில் விரிவாக்கினார். ஆரம்பத்தில் புத்தக வெளியீட்டாளர்களாகவும் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரவலாக்கும் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வந்த ரோய்ட்டர் ஏஜென்சி பின்னர் ரோய்ட்டர் டெலிக்ராம் நிறுவனமாக 1851ம் ஆண்டிலேயே விரிவடைந்தது. இந்த நிறுவனத்துக்கு முதல் உறுப்பினராக லண்டன் மோர்னிங் அட்வடைசர் பத்திரிக்கை அமைந்தது. பின்னர் படிப்படியாக இந்த நிறுவனத்தின் சேவையை உலகளாவிய நிலையில் பல பத்திரிக்கைகள் பயன்படுத்தத் தொடங்கின. இந்தச் செய்திகளை வாசித்தவாறே நாம் இந்த அருங்காட்சியகத்தின் ஏனைய பகுதிகளுக்குச் செல்லலாம்.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப்பொருட்கள் ஐந்து வெவ்வேறு வகைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.
முதலில் செய்தி சேகரிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள், நிருபர்களின் செயல்பாடுகள் என்பது பற்றி விளக்கும் காட்சிப்பொருட்கள் உள்ளன. இந்தப்பகுதியில் வருகையாளர்கள் ஒரு நிகழ்வு என்பது எவ்வாறு ஒரு செய்தியாக வடிவமைக்கப்படுகின்றது என்ற விசயத்தை அறிந்து கொள்ளலாம்.
அடுத்ததாகச் செய்தி ஊடகங்களின் பண்பு, பலன்கள் ஆகியவற்றோடு அவற்றினால் ஏற்படும் சமுதாயத் தாக்கங்கள் யாவை என்பதை விளக்கும் காட்சிப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கடுத்தார்போல எழுதுவதும் வாசித்தலும் என்பது பற்றிய வரலாற்றுப் பார்வையில் அமைந்த காட்சிப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கடுத்து, செய்திகளில் உள்ள நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பும் விசயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செய்தி தயாரிப்பில் உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் என்றும், எவ்வாறு முக்கியச் செய்திகள் திரிக்கப்பட்டு அவை மக்களைச் சென்றடைகின்றன என்ற விசயத்தைத் தக்க ஆதாரங்களோடு காட்சிப்படுத்தியிருக்கின்றனர். மிகச் சுவாரசியமான தகவல்கள் இப்பகுதியில் உள்ளன. இறுதியாக வருவது செய்தி ஊடகங்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதைக் காட்டும் கண்காட்சிப் பகுதி.
இந்தக்காட்சிப்பொருட்கள் மட்டுமன்றி இங்குள்ள செய்தித்தாட்களின் சேகரிப்புக்களும் வருகைதருவோர் பார்வையிடக் கூடிய வகையில் உள்ளன.
இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும் போது சிறிய கட்டிடத்திற்குள்ளே நுழைகின்றோமோ என்ற சிந்தனை வந்தாலும் இங்குள்ள எல்லாப் பகுதிகளையும் பார்த்து முடித்து வருவதற்குள் குறைந்தது மூன்று மணி நேரங்களாவது ஆகிவிடும். வரலாற்றுப்பிரியர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மிகப்பல தகவல்களை வழங்கக்கூடிய ஒரு அனைத்துலக அருங்காட்சியகம் இது. ஜெர்மனிக்கு வருபவர்கள், அதிலும் குறிப்பாக ஆகன் நகருக்கு வருவோர் தவறாமல் இந்த அருங்காட்சியகத்தையும் சென்று பார்த்து வர மறக்க வேண்டாம்.
No comments:
Post a Comment