”கவ் போய்” (Cow Boy) படங்களை இளைமை காலத்தில் பார்த்து அவர்கள் ஓட்டி வரும் குதிரையும், வேகமாகப் பறக்கும் அக்குதிரையின் மேல் அமர்ந்து வரும் கதாநாயகர்களையும் பார்த்து வியந்திருக்கின்றேன். என் மனதில் அவர்கள் பெரிய வீரர்களாக அச்சமயத்தில் பதிந்திருந்தார்கள். பின்னர் Cow Boy எனப்படுவோர் மாடுகளைப்பராமரிக்கும் இளைஞர்கள் என்பதும் அமெரிக்காவின் டெக்சாஸ் போன்ற வறண்ட நிலப்பகுதிகளில் குதிரைகளில் சென்று தங்கள் கால்நடைகளான மாடுகளை வளர்ப்போர் என்பது பற்றியும் அறிந்து கொண்ட பின்னர் ”கவ் போய்”கள் பற்றிய பிரமிப்பு என்பது கறைந்து போனது. இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு வார காலம் நான் டெக்சாஸ் மாநிலம் சென்றிருந்த போது அங்கே டல்லாஸ் நகருக்கு அருகே உள்ள Fort Worth என்ற சிறு நகருக்கும் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அது டெக்சஸ் நகரின் பழமையான வாழ்வியல் கூறுகளை இன்றும் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கிராமியச் சூழலை மையமாக வைத்து காட்சியளிக்கும் ஒரு சுற்றுலா தளம். அங்கு சென்றிருந்த போது டெக்சாஸ் கவ்போய் அருங்காட்சியகம் ஒன்று இருக்கின்றது என்று அறிந்த போது அங்கு சென்று Cow Boyகள் பற்றி தகவல்கள் அறிந்து வந்தேன்.
அமெரிக்காவிற்கு ”கவ் போய்”கள் கலாச்சாரம் என்பது ஸ்பெயின் நாட்டிலிருந்து தான் வந்தது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த பின்னர் ஐரோப்பாவிலிருந்து அதிலும் குறிப்பாக ஸ்பெயினிலிருந்து ஏராளமானோர் அமெரிக்காவிற்கு குடியேறினர். ஸ்பெயின் நாட்டிலிருந்து சற்று மாறுபட்ட தட்பவெட்ப நிலை என்றாலும், அவர்கள் தங்கள் வாழ்வில் இடம்பிடிக்கும் பல அம்சங்களை இங்கே தொடர்ந்தனர். அதில் முக்கிய அம்சமாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலும் அடங்கும்.
டெக்ஸஸ் லோங்ஹோர்ன் (Texas Longhorn) என்னும் நீளமான பெரிய வளைந்த கொம்புகளைக் கொண்ட மாடுகள் ஸ்பெயினிலிருந்து 17, 18ம் நூற்றாண்டுகளில் மெக்சிக்கோவிற்கு கொண்டுவரப்பட்டவை. இன்றைய டெக்சாஸ் மாநிலம் முன்னர் மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். வேறு வகை மாடுகள் இன்று டெக்சஸ் மாநிலத்தில் அதன் பால், மற்றும் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வளர்க்கப்பட்டாலும், கலாச்சார நிகழ்வுகளில் இந்த டெக்ஸஸ் லோங்ஹோர்ன் வகை மாடுகள் தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு காட்சிக்கும் ஊர்வலங்களுக்கும் அழைத்து வரப்படுகின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் மிகச்சிறப்பான இரண்டு விசயங்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். முதலாவது, இங்குள்ள வெவ்வேறு வகையான குதிரை வண்டிகள். விவசாயம் இப்பகுதியில் செழித்து விரிவடைய ஆரம்பித்த பின்னர் மக்கள் வாழ்வியல் நிலை மேம்பாடு அடையத்தொடங்கியது. இந்த சூழலில் ஓரிடத்திலிருந்து காய்கறி கொண்டு சென்று விற்பனை செய்யவும், பால் வண்டிகளில் ஏற்றிச் சென்று விற்பனை செய்யவும், தபால் தலை கொண்டு செல்லவும், மக்கள் போக்குவரத்துக்காகவும் என வெவ்வேறு வகையிலான வண்டிகளை இங்கு மக்கள் உருவாக்கியிருக்கின்றார்கள். இந்த வண்டிகளில் பெரும்பாலானவை குதிரைகள் பூட்டி ஓட்டப்படுபவையே. சில, மனிதர்களே கைகளால் இழுத்துச் சென்று விற்பனை செய்யும் வகையில் அமைந்தவை. விவசாயிகள் தங்கள் கற்பனைத்திறனையும் கைத்தொழில் திறனையும் கொண்டு தங்கள் விளைப் பொருட்களை சந்தை செய்ய மேற்கொண்ட முயற்சிகளின் வெளிப்பாடாக இந்த வண்டிகளைக் காண முடிகின்றது. இத்தனை வகை வண்டிகளா என இந்த அருங்காட்சியகம் வருவோரை வியக்க வைக்கின்றது இங்குள்ள வண்டிகள் சேகரிப்பு.
இதனை அடுத்து ”கவ் போய்”கள் தங்கள் ஓய்வு நேரத்தில் தயாரித்த வெவ்வேறு வகை தோல் கருவிகள், ஆடைகள், மற்றும் அவர்களது இசை ஆர்வத்தினால் அவர்கள் உருவாக்கிய பாடல் ஆல்பம், அவர்களின் வீர விளையாட்டுகள் தொடர்பான புகைப்படங்கள், விருதுகள், பரிசுகள் எல்லாம் வரிசையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியைச் சொல்லலாம். Texas Cow Boy Hall of Fame எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பகுதியில் இத்தகைய பல ”கவ் போய்”களின் சாதனைகளைக் கண்டு வியக்கலாம்.
இந்த அருங்காட்சியகம் தொடர்பான செய்திகள், இது அமைந்திருக்கும் இடம், கட்டணம், திறந்திருக்கும் நேரம், சிறப்பு கண்காட்சிகள் என எல்லா விசயங்களையும் http://texascowboyhalloffame.org/contact.php என்ற வலைப்பக்கத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment