Tuesday, February 9, 2016

53. எல்ஸாஸ் சமூக அருங்காட்சியகம் (2), ஸ்ட்ராஸ்போர்க் (2), பிரான்சு

முனைவர்.சுபாஷிணி


​http://www.vallamai.com/?p=66213​

ஸ்ட்ராஸ்பொர்க் படுகொலை நிகழ்வு என்பது ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் வன்முறை சமபவங்களின் பட்டியலில் நிச்சயமாக இடம்பெறும் ஒரு நிகழ்வு. காதலர் தினம் என நாம் இப்போது கொண்டாடும் பெப்ரவரி 14ம் தேதி, 1349ம் ஆண்டில் ஒரு கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதாவது, இதே நாளில் 1349ம் ஆண்டில், ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்தில் வசித்து வந்த யூதமக்களை அவ்வூர் மக்கள் உயிருடன் பிடித்து கொளுத்தி கொன்ற கருப்பு நாள் இது என்றும் குறிப்பிடலாம். யூதர்களில் பலர் கொல்லப்பட்டும், இருந்த ஏனையோர் அந்த நகரத்தை விட்டே அகற்றப்பட்ட நிகழ்வும் இந்த நாளிலும் அதன் தொடர்ச்சியான நாட்களிலும் இந்த நகரில் நடந்தது.



1348ம் ஆண்டின் வசந்தகாலம் தொட்டே யூதர்களின் மீதான வெறுப்புணர்ச்சி என்பது இப்பகுதியிலும் அதன் சுற்றுப் புறத்திலும் பரவி வர ஆரம்பித்தது. இதன் அடிப்படையில் இப்போது சுவிஸர்லாந்தின் ஒரு முக்கிய நகரமான பாசலிலும், இன்றைய ஜெர்மனியின் தென்மெற்கு நகரங்களில் ஒன்றான ஃப்ரைபுர்க் நகரிலும் அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் யூதர்களை உயிருடன் பிடித்துக் கொல்லும் நிகழ்வுகள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக 1349ம் ஆண்டில் பெப்ரவரி 14ம் தேதி ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்திலிருந்து ஒட்டு மொத்தமாக யூதர்கள் அகற்றப்பட்டார்கள்.

இந்த வன்கொடுமைகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது யூதர்களின் பொருளாத மேண்மை தான். ஐரோப்பாவின் அன்றைய நகரங்கள் பலவற்றில் பணம் வட்டிக்குக்கொடுத்துப் பெறும் வகையில் செல்வாக்குடன் யூதர்கள் இருந்தார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது யூதர்களுக்கும் ஏனைய பிற சமூகங்களுக்குமிடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டை ஒத்ததாக அமைந்த நிலை, பொருளாதார ஆதிக்க நிலை ஆகிய யூதர்கள் மீதான பரவலான வெறுப்புணர்ச்சியை ஏனைய சமூகத்தினரிடம் உருவாக்கியது. இதே நிலை தான். 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால சூழலில் ஜெர்மனியில் யூதர்களின் இன அழிப்பு நிகழ்வுக்கும் நாஸி சிந்தனை எழுச்சிக்கும் காரணமாக அமைந்தது என்பது மறுக்கப்பட முடியாத ஒன்றே.

ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்தில் 1349ம் ஆண்டு வாக்கில் ஏற்கனவே இருந்த யூதர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியோடு அப்போது மிக வேகமாகப் பரவி பலரது உயிரைக் கொன்ற ப்ளேக் நோயும் ஒரு முக்கிய காரணமாகவே அமைந்தது. யூதர்கள் தான் இந்த ப்ளேக் நோய் பரப்பும் நச்சை கிணற்று நீரில் கலந்து விட்டதாகச் சொல்லி அதனையே ஒரு காரணமாக வைத்து யூதர்களைப் பிடித்து வந்து உயிரோடு கொளுத்திக் கொன்றனர். இந்த ப்ளேக் நோய், அது ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் ஐரோப்பாவின் பல நகரங்களில் பெப்ரவரி மாதம் திருவிழாக்கள் நடைபெறும் அதில் மக்கள் கொடூரமான வகையில் முக அலங்காரம் செய்து கொண்டு அசுரன், பேய் பூதம், அங்கவீன மனிதர்கள் என்ற வகையில் ஆடையலங்காரம் செய்து கொண்டு தெருக்களில் ஊர்வலம் வருவர். இன்று கேளிக்கை நிகழ்வுகளில் ஒன்றாகிப்போன ப்ளேக் நோய் திருவிழா ஐரோப்பாவை கடந்த 1000 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அவ்வப்போது தாக்கி மக்கள் தொகை எண்ணிக்கையில் மிகப் பெரிய எண்ணிக்கை குறைய ஒரு காரணமாக அமைந்ததை மறந்து விட முடியாது.



இப்படி பல வரலாற்று சம்பவங்கள் ஸ்ட்ராஸ்போர்க் நகரிலே நடந்துள்ளன. அப்படியான பல தகவல்களை உள்ளடக்கிய எளிமையான ஒரு அருங்காட்சியகமாகவே இந்த எல்சாஸ் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. எல்சாஸ் மக்களின் வரலாற்றையும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் 5000க்கும் மேற்பட்ட காட்சிப்பொருட்கள் இங்குள்ளன.



ஆண் பெண், குழந்தைகளுக்கான பாரம்பரிய உடை, காலணிகள் தலையலங்காரப் பொருட்கள் ஆகியன ஒரு பகுதியில் உள்ளன. வீட்டு பொருட்களான படுக்கை அறை அமைப்பு, அலமாரி, சாப்பாட்டு மேசை, சமையல் பொருட்கள், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், ஆகியன ஒரு தளத்தில் சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இப்பகுதியின் வரலாற்றுச் சம்பவங்களைச் சொல்லும் பட்டயங்கள், ஆவணங்கள், நில வரைபடங்கள் ஆகியன ஒரு பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.



​இந்த அருங்காட்சிகத்திற்கு உள்ளே சென்று பார்த்து வர கட்டணம் தேவையில்லை. இது மையச் சாலை பகுதியிலேயே அமைந்திருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தின் முகவரி 23-25 quai Saint-Nicolas, 67000 Strasbourg. எல்சாஸ் சமூகத்தினரின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ள விரும்புவோரும், ஆய்வு செய்ய விரும்புவோரும் நிச்சயம் சென்று பார்த்து வர வேண்டிய அருங்காட்சியகங்களில் இது முக்கியமானது.



ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்தில் மேலும் சில முக்கிய அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியும் பிரிதொரு முறை எழுதுகின்றேன்.

அடுத்த பதிவில் மேலும் ஒரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். தொடர்ந்து வரவும்.!

No comments:

Post a Comment