Wednesday, February 17, 2016

55. டாஹாவ் நாஸி சித்ரவதை முகாம் அருங்காட்சியகம்(2), பாயார்ன், ஜெர்மனி.

http://www.vallamai.com/?p=66441


முனைவர்.சுபாஷிணி

இனவெறி, மதவெறி, மொழிவெறி ஆகியன மனிதரை மனிதப்பண்புகளை இழக்கச் செய்வன. தன் இனம், சமயம், மொழி ஆகியவற்றின் மீது மனிதருக்கு ஆர்வமும், ஈடுபாடும், பற்றும் இருக்கலாம். ஆனால் அது வெறியாக மாறும் தன்மையைப் பெறும் போது தன்னைப் போன்ற சக மனிதரையே, தன் கொள்கையை நிலைநாட்டுவதற்காக வதைத்து துன்புறுத்தி கொல்லும் கொடும்மனமும் மனிதருக்கு வாய்த்துவிடும் அபாயம் இருக்கின்றது. நாம் அறிந்த உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் இனம், மதம், மொழி ஆகியவற்றிற்காக இதுகாறும் இந்த உலகம் சந்தித்திருக்கும் மனித குல கொடூரங்கள் என்பது மிக அதிகம். பசுமை நிறைந்த புல்வெளிகள் ரத்தக்காடாக இருந்த வரலாற்று நிகழ்வுகள் கற்பனைகள் அல்ல. அவை உண்மை சம்பவங்கள். இந்த இன, மத, மொழி வெறியோடு தமிழர்களை இருக்கப்பற்றிக்கொண்டிருக்கும் மேலும் ஒரு வெறித்தனமான பொருள் ஒன்று உண்டு என்றால் அது தான் சாதி என்பது. சாதிக்காக தன் சக இன மனிதரையே மனதாலும் உடலாலும் வதைத்து துன்புறுத்தும் மனிதர்கள் நம்மிடையே ஏராளமானோர் உலவத்தான் செய்கின்றனர். இந்த வெறித்தனங்களெல்லாம் எவ்வகையிலும் யாருக்கும் நன்மையைத்தராதவை. கொடுமைகளும் கொடூரங்களும் வன்முறைகளும் அழிக்கும் தன்மையுடயவை அன்றி எந்த நற்பலனும் மனித குலத்திற்கு தராதவை.

அன்று, ஐரோப்பா முழுமையையும் ஆரிய ஜெர்மானிய இனம் ஆளவேண்டும் என்னும் பேராசை அடோல்ஃப் ஹிட்லரின் மனதை ஆக்கிரமித்திருந்தது. அவரது கொள்கையைச் சித்தாந்தமாக்கி அதனைப் பரப்பினர் அவரது தளபதிகள். ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை வாசிக்கும் பொழுது அவரை விட அவரது சகாக்களும் அவர் கட்சியின் அரசியல் பொறுப்பாளர்களும், ஆரியரல்லாதோர், அதிலும் குறிப்பாக யூதர்களுக்கு மிக அதிகமாக கொடுமைகள் செய்தவர்கள் என்ற தகவலை அறிய முடியும்.

ஜெர்மனியில் நாஸி கொடுமையைப் பற்றி பேசும் பலர் அதே வேளையில் இன்னும் சற்று வட மேற்கே பால்டிக் நாடுகளான, லித்துவானியா போன்ற நாடுகளில் அதே காலகட்டத்தில் இவர்கள் யூதர்களுக்கு இழைத்த கொடுமைகளைப் பற்றி பேசுவதில்லை.

இதுமட்டுமா..? நாஸி கொடுமையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட மிகப் பெரிது என அறியப்படுவது துருக்கி ஆர்மேனியர்களை ஒன்றாம் உலகப்போர் காலகட்டத்தில் கொன்று குவித்த சம்பவம். ஜெர்மனியின் நாஸி கொடுமை பேசப்படும் அளவிற்கு இந்தக் கொடும் நிகழ்வு உலக அளவில் பேசப்படுவதில்லையே என்ற வியப்பு எனக்கு மட்டுமல்ல, பொதுவாக ஐரோப்பிய வரலாற்றில் ஆர்வம் உள்ளோருக்கு மனதில் எழும் கேள்வியே.

வன்முறைகள் என்று தொடர்ந்தால் இப்படி யோசித்துக் கொண்டே செல்லலாம். சரி..டாஹாவ் மனித சித்ரவதை முகாம் பற்றி மேலும் தொடர்வோம்.


சித்ரவதை செய்யப்படும் பங்கர் பகுதியின் வெளித்தோற்றம்

இந்த முகாம் இயங்கிய 12 ஆண்டுகாலத்தில் அரசியல் கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருந்த பங்கர் இருக்கும் பகுதி SS என்ற குறியீட்டுப் பெயரால் அழைக்கப்பட்டது. இங்கு அடைத்து வைக்கக்கொண்டு வரப்படும் கைதிகள் இங்கிருக்கும் பங்கரின் மற்றொரு பகுதியில் பல அடுக்கு படுக்கைகள் வைத்த நீண்ட அறையில் தங்கி வருவர். ஆனால் பங்கர் பகுதியில் தான் தனித்தனியாக இவர்களைக் கொண்டு வந்து அடித்து துன்புறுத்தி தகவல்களைப் பெறும் கொடூரங்கள் நிகழும்.



பங்கர் உள்ளே

ஒவ்வொரு நாள் காலையும் வரிசையாக எல்லா கைதிகளும் வெளிப்புற பகுதிக்கு வந்து விடவேண்டும். இவர்கள் அங்கே வெயிலோ மழையோ, பனியோ எதுவாகினும் 1 மணி நேரம் காலையில் நிற்க வேண்டும். அப்போது கைதிகள் எண்ணிக்கை எடுக்கப்படும். யாரேனும் தப்பி ஓடியிருந்தால் ஏனையோர் மேலும் பல மணி நேரங்கள் தண்டனையாக அங்கேயே நிற்க வேண்டும். மின்சாரம் பொருத்தப்பட்ட கம்பிகளையும் மீறி ஒரு சிலர் தப்பித்துச் சென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. இப்படி பல மணி நேரங்கள் இங்கே நிற்கும் வேளையில் சிலர் அங்கே யே மயங்கி விழுந்து இறந்தும் போயிருக்கின்றனர்.



பங்கர் அறையின் முன்

தற்சமயம் பங்கர் முழுதுமே அருங்காட்சியமாக்கப்பட்டிருப்பதால் இங்கு இறந்தோர் பட்டியல் அவர்களது விபரங்கள் ஆகியன இங்கே புகைப்படங்களோடு வழங்கப்பட்டுள்ளன. அப்படி இறந்தோரில் ஜோர்ஸ் எல்சர் என்பவரும் ஒருவர். இவர் 1939ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி அடோல்ஃப் ஹிட்லரை வெடிகுண்டு வைத்து கொல்ல முயற்சித்தார். அது தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக இவர் சிறைபிடித்து வந்து இந்த டாஹாவ் சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டார். ஏப்ரல் 9ம் தேதி 1945ம் வருடம் இவர் சித்ரவதை செய்யப்பட்டு இதே முகாமில் கொலை செய்யப்பட்டார். இவரைப்போல இறந்தோர் ஏராளம்.



விசாரனைக்கு அழைத்து வரப்படும் இக்கைதிகள் பலவகை சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இப்படி சித்ரவதை செய்யப்பட்டு ஆனால் பின்னர் உயிருடன் இங்கிருந்து வெளியேறியவர் பூசன்கைகர். இவரை சிறை அதிகாரிகள் 1934ம் ஆண்டில் பெப்ரவரி முதல் அக்டோபர் வரை ஒரு இருட்டு அறையில் காலில் இரும்பு சங்கிலி கட்டி அடைத்து வைத்து சித்ரவதைச் செய்தனர். இவர் அதனை படமாக வரைந்து கொடுக்க அந்தப் படம் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



இதே போன்ற மற்றொரு புகைப்படம். கொலைசெய்யப்பட்ட யூத சிறைக்கைதி லூயுஸ் ஸ்லோஷ் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை விளக்கும் வகையில் இங்குள்ளது. இவர் இறந்த போது கொலைசெய்யப்பட்டாலும் அறிக்கையில் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்றே எழுதப்பட்டதாகவும் இங்குள்ள குறிப்பு சொல்கின்றது.



இப்படி ஏராளமான நிகழ்வுகள் வன்கொடுமைகள் இங்கே நிகழ்ந்துள்ளன.

அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் இங்கு வந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட போது அடைபட்ட சில சாமான்கள் வைக்கும் அறைகளில் கொத்து கொத்தாக இறந்த மனிதர்களின் சடலங்களைப் பார்த்து அதிர்ச்சியுற்றனர். நாஸி அரசியல் சித்தாந்தத்திற்கு எதிர் குரல் எழுப்புவோரையெல்லாம் பிடித்து வந்து துன்புறுத்துவதோடு அவர்களைக் கொலை செய்து குவித்து வைத்த்திருந்தனர் இந்த முகாமின் அதிகாரிகள் சிலர்.



அவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். அடுத்த பதிவில் தொடர்ந்து வாருங்கள்!

தொடரும்…

சுபா​

No comments:

Post a Comment