Wednesday, September 7, 2016

71. தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (3)

முனைவர்.சுபாஷிணி

ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலம் என்பது ஐரோப்பிய வரலாற்றுக்கு மட்டுமன்றி உலகின் ஏனைய கண்டங்களில் உள்ள நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சரித்திர நிகழ்வு. ரெனைசான்ஸ், அதாவது மறுமலர்ச்சிக்காலம் எனக்கூறப்படுவது, 1400 தொடங்கி 1600 வரை எனக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் தீவிரமான மாற்றங்கள் பல நிகழ்ந்தன. அதில் குறிப்பாக, சமயம், கலை, அறிவியல், கட்டுமானக் கலை, மருத்துவம், தத்துவங்கள், சிற்ப வடிவமைப்புக்கள், கடல் பயணங்கள் எனப் பன்முகத் தன்மையில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் குறிப்பிடத்தக்க ஒரு விசயமாக அமைவது இதுகாறும் ஐரோப்பிய கலாச்சாரமாகவும் கலை வளங்களாகவும் தத்துவக் கருத்துக்களாகவும் இருந்த விசயங்கள் இக்காலகட்டத்தில் தான் பெருமளவில் கேள்விக்குட்பட்டுத்தப்பட்டன. இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட கலைவடிவங்களும், தத்துவங்களும், தத்துவச்சிந்தனைகளும் கூட கேள்விக்குட்படுத்தப்பட்டு அவற்றினில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு அவை மக்கள் முன்னிலையிலும், சிந்தனையிலும் பொதுவாரியாக முன் வைக்கப்பட்டன. நீண்ட காலங்களாக அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களின் மேல் கலந்துரையாடல்கள் முன் வைக்கப்பட்டன. அக்காலத்தில் ஐரோப்பவைத் தாக்கிய ப்ளேக் நோய் ஏற்படுத்திய மரண இழப்பின் உயர்ந்த எண்ணிக்கையின் பயங்கரமும் சேர்ந்து கொண்டு மக்கள் சிந்தனையை வேறு கோணத்தில் செலுத்தியது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

ஐரோப்பிய மறுமலர்ச்சி காலம் இத்தாலியில் தான் தொடங்கியது. சிற்ப வடிவமைப்பு, ஓவியங்கள் கட்டிடக் கட்டுமானங்கள் ஆகியவற்றில் முந்தைய வகையிலான ஆக்கங்களுக்கு மாற்றாக புதிய கோணத்தில் இக்கலைப்படைப்புகளைப் படைக்கும் முயற்சிகள் தொடங்கி விரிவடைந்தன. ஒரு சாராரின் ஆதரவைப் பெற்ற அதே வேளையில் பழமைவாத சித்தாந்தங்களில் ஊறிப்போனோருக்கு அதிலும் குறிப்பாக சமய ஸ்தாபனங்களுக்கு, இது கடும் எதிர்ப்பாகவே அமைந்தது.

புதிய கலைப்படைப்புகளை வடித்த சிற்பிகள் தம் புதிய கருத்துகளை, வரைபடங்களாக வரைந்து வைத்த கையெழுத்து படிவங்கள் ஐரோப்பாவின் பல நாடுகளில் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் சில சூரிச் தேசிய அருங்காட்சிகத்தில் உள்ளன.



ரோம் நகரின் கொலீசியத்தைச் சுற்றி வடிவமைத்து உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளை அதனை மண்ணும் கற்களும் கொண்டு உருவாக்கும் முன்னர், கையெழுத்துப் பிரதியாக வடித்திருக்கின்றனர். இத்தாலியின் ரோம் நகருக்குச் சென்றவர்களுக்கு அங்கே கொலீசியம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே உள்ள கட்டிடங்கள், சிற்பங்கள் ஆகியன நினைவில் இருக்கலாம். அவற்றை உருவாக்கியபோது தயாரித்த அடிப்படை வரைபடங்கள் தொகுக்கப்பட்டு ஒரு நூலாக உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் 1400களில் உருவாக்கப்பட்டவையே. இந்த வரைப்படங்களை மாடலாக வைத்துக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகளையும், கட்டிடங்களையும் உருவாக்கினர். இந்த நூலில் இருக்கும் வரைப்படங்களில் சில 15ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் ஸ்பெயினுக்குக் கொண்டு செல்லப்பட்டன . இதில் உள்ள வரைபடங்கள் காட்டும் கட்டிட மாடல்களின் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு அவ்வகையில் புதுமையாக கலை வேலைப்பாட்டுடன் அமைந்த கட்டிட கட்டுமானக் கலை ஸ்பெயின் நாட்டிலும் உருவாக்கம் கண்டது. இதற்கு நல்லதொரு உதாரணமாக அமைவது, க்ரானாடாவுக்கு அருகே உள்ள காலாஹோரா அரண்மனை.



இங்கிருக்கும் மற்றுமொரு அரிய நூல் 1513ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதனை சுவிச்சர்லாந்தின் பாசல் நகரில் நீதிபதியாக பணியாற்றிய போனிஃபாஷியஸ் ஆம்மெர்பாக் என்பவர் உருவாக்கினார். இந்த நூலில் இருப்பவை அனைத்தும் ரோமன் கல்வெட்டுகளின் படியெடுத்த பிரதிகள் போன்றவையே. ரோமன் கல்வெட்டுகளில் மிகவும் ஈர்க்கப்பட்டு ஸ்ட்ராஸ்பூர்க் நகரின் தோமஸ் வூல்ஃப் என்பவர் சேகரித்து வைத்திருந்த கல்வெட்டுகளைப் பார்த்து அதனை நூலில் படியெடுத்து தயாரித்தார். இந்தச் சேகரிப்புகள் அனைத்தும் ரோம் நகரின் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கல்வெட்டுகள் பதிக்கப்பட்ட கற்களாகும். இந்த ஆவணப்படுத்துதல் பணியை அவரது மறைவுக்குப் பின்னர் திரு.ஆம்மர்பாஹ் அவர்களின் மகன் தொடர்ந்து செய்து வந்தார்.



5ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் அக்காலகட்டத்தில் ரோமானிய நகரில் உருவாக்கப்பட்ட நூல்கள் பல காணாமல் போயின. ஆயினும் ஆங்காங்கே கிடைத்த சில பழம் நூல்களை அக்காலத்தில் இயங்கி வந்த ரோமன் கத்தோலிக்க மடாலயங்கள் எடுத்து படியெடுத்து பாதுகாத்து வந்தன. இவை ஒவ்வொன்றும் கிடைத்தற்கரிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. இந்த மடாலயங்கள் அவற்றை ஏதோ ஒரு வகையில் பாதுகாத்திராவிட்டால் அதில் கூறப்பட்ட, பதியப்பட்ட எண்ணற்ற வரலாற்றுத் தகவல்கள் இன்று ஆய்வாளர்களுக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.


ரெனைசான்சு என்னும் சொல்லிற்கு உள்ள மற்றொரு பொருள் மறுபிறப்பு என்பதாகும். அதாவது கலைப்படைப்புகள், தத்துவச் சிந்தனைகள் ஆகியன மீள்பார்வை செய்யப்பட்டும் அல்லது வேறொரு கோணத்தில் புதுப்படைப்பாக பிரசவிக்கப்பட்ட காலகட்டம் அது என்றும் சொல்லலாம்.

சூரிச் தேசிய அருங்காட்சியகம் இத்தகைய விலைமதிக்க இயலாத பல்வேறு ஆவணங்களைப் பாதுகாத்து வருகின்றது. இங்கே சென்று இங்குள்ள ஆவணங்களையும், பாதுகாக்கப்படும் அரும்பொருட்களையும் பார்த்து வருபவர்களுக்கு ஐரோப்பிய வரலாற்றின் சில பரிமாணங்களைப் புரிந்து கொள்ள முடியும்.




நான் பார்க்க வேண்டும் என பல நாட்கள் காத்திருந்து பார்த்து மிக ரசித்து, பல விசயங்களை அறிந்து கொண்ட ஒரு அருங்காட்சியகம் இந்த சூரிச் தேசிய அருங்காட்சியகம்.

சரி.அடுத்த பதிவில் மேலும் ஒரு நாட்டில் மேலும் ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

Friday, September 2, 2016

70. தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (2) (ஜோஹான்னஸ் குட்டன்பெர்க்)

முனைவர்.சுபாஷிணி

அச்சுப்பதிப்பாக்கம் உலக மக்கள் வாழ்வியலில் மாபெரும் சிந்தனைப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. மிகக்கடினமான எழுதும் முறையும், ஒரு நூலை உருவாக்க எடுத்துக் கொள்ளப்பட்ட நீண்ட நேரம் என்பதும் கல்வியை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும்தான் ஏதுவானதான ஒரு சூழலை இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே ஏற்படுத்தியிருந்தன. அச்சு இயந்திரங்கள் படிப்படியாக பயன்பாட்டில் பரவத் தொடங்கியபின்னர் ஒரு தனி நூல் தயாரிப்பு என்பதற்கு பதிலாக ஒரே அச்சுக்கூடத்தில் ஒரு தயாரிப்பினை மட்டும் கொண்டு பல நூல்களை உருவாக்கலாம் என்ற நிலை உருவானது. இது அதிக அளவில் நூல்கள்பதிப்பாக்கம் பெறுவதற்கு அடித்தளம் அமைத்தது. இதுவே ஐரோப்பாவில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி அது உலகம் முழுவதும் பரவும் நிலையையும் உருவாக்கியது. இப்புரட்சிக்கு ஆதாரமாக அமைந்த அச்சு இயந்திரம் உருவாகி நூற்கள் எண்ணிக்கையில் பலவாக அச்சிடப்பட உருவான காலம் 15ம் நூற்றாண்டாகும்.



அச்சு இயந்திரத்தின் தந்தை என அறியப்படும் ஜொஹான்னஸ் குட்டன்பெர்க் 1436ம் ஆண்டில் அச்சு இயந்திரத்தைப்பற்றி தனது சூழலில் இருந்த ஏனைய சில ஆர்வலர்களுடன் சேர்ந்து தொடங்க முயன்றார். கடும் ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, 1439ம் ஆண்டில் இம்முயற்சி வெற்றி பெற ஆரம்பித்தது. பதிப்புத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய இந்த முயற்சி தோன்றியபோது முதலில் ஜெர்மனியில் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் நகரமான மைன்ஸ் நகரில் தான் ஒரு அச்சு ஆலை உருவாக்கப்பட்டது. இதனை ஜொகான்னஸ் குட்டன்பெர்க் தொடங்கி நடத்தி வந்தார். அச்சுப்பதிப்பாக்கத்திற்கு வரவேற்பு கூடியபோது, அதாவது 1480ஆம் ஆண்டில் ஜெர்மனி தவிர்த்து ஏறக்குறைய் 270 இடங்களில் ஐரோப்பாவின் பல இடங்களில் அச்சு ஆலைகள் உருவாகின.


அச்சு ஆலைகள், கல்வியும், உலக அறிவும் சமூகத்தில் உள்ள ஒரு சாராருக்கு மட்டுமானதல்ல. அவை எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற புரட்சியை உருவாக்கி வெற்றியும் கண்டது. அச்சு இயந்திரங்கள் இல்லாத ஒரு நிலையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது அல்லவா?

சுவிச்சர்லாந்தைப் பொறுத்தவரை அங்கு குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை வாங்கி சூரிச் நகரில் அச்சு ஆலையை உருவாக்கியவர் கிறிஸ்தோவ் ஃப்ரோஷாவர் (1490 – 1564). ஆரம்ப காலத்தில் அச்சு ஆலைகளில் பைபிள்களே மிக அதிக அளவில் அச்சிடப்பட்டன. இவரது பெயரிலேயே தற்சமயம் சூரிச் நகரின் மையப்பகுதியில் ஒரு சாலையும் இருக்கின்றது. இவர் பைபிள் மட்டுமன்றி, மார்ட்டின் லூதரின் எழுத்துக்கள், சுவிங்லியின் எழுத்துக்கள் ஆகியனவற்றோடு யுராஸ்மூஸ் ஃபோன் ரோட்டர்டாம் அவர்களின் எழுத்துக்களையும் அச்சிட்டவர் என்ற சிறப்பினைப் பெறுகின்றார். இவரது அச்சுப்பணிக்குப் பயன்படுத்தப்பட்ட தாட்கள் அங்கே சூரிச் நகரிலேயே உள்ள லிம்மாட் தாள் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டன.



சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்புக்களில் ஜொகான்னஸ் குட்டன்பெர்கின் அச்சு இயந்திரம் ஒன்றும் உள்ளது. ஒரு முழு அச்சு இயந்திரம். மரத்தால் உருவாக்கப்பட்ட, இன்னமும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் அச்சு இயந்திரத்தை இங்கே பாதுகாப்பான ஒரு பகுதியில் இங்கே காட்சிக்கு வைத்துள்ளார்கள்.. இங்கே காட்சிக்கு இருக்கும் இந்த அச்சு இயந்திரம் போன்ற வடிவில் உள்ள ஒரு அச்சு இயந்திரம்தான் 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து அங்கே கொல்லத்தில் தமிழின் முதல் தமிழ் அச்சு நூல் உருவாகக் காரணமாகவும் இருந்தது என்பதை நாம் இவ்வேளையில் நினைவுகூரத்தான் வேண்டும்.



இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த அச்சு இயந்திரத்தோடு 16, 17ஆம் நூற்றாண்டு அச்சு நூல்கள் சிலவற்றையும் காட்சிக்கு வைத்துள்ளனர். உலக வரலாற்றில் அறிவுத்தளத்தில், பெரும் புரட்சியை ஏற்படுத்திய இவ்வகைப் பணிகளைப் பற்றி அறிந்து கொள்ளும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.



சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கும் ஏனைய சில அரும்பொருட்களைப் பற்றி மேலும் சொல்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

Monday, August 29, 2016

69. தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (நிக்கலஸ் கோப்பர்னிக்கஸ்)

முனைவர்.சுபாஷிணி

உலக அருங்காட்சியகங்களில் மிக முக்கியமான அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம் பெறும் ஒன்று சுவிச்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள நேஷனல் மியூசியம். பொதுவான அருங்காட்சியக அமைப்பு அல்லது புது உலகக்கட்டிட கட்டுமான அமைப்பு, அல்லது கிரேக்க அக்ரோபோலிஸ் வகை கட்டுமான அமைப்பு என்றில்லாமல், பிரஞ்சு மறுமலர்ச்சிக்கால கட்டுமான வடிவில், ஒரு மாளிகையைப் போன்ற அமைப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குட்டி அரண்மனையோ என வியக்க வைக்கும் அழகிய கட்டிடம் இது. இக்கட்டிடத்தை 1898ம் ஆண்டில் கட்டுமானக் கலைஞர் குஸ்தாவ் கல் (Gustav Gull ) வடிவமைத்துள்ளார். இவர் 19ம் நூற்றாண்டின் சுவிச்சர்லாந்தின் புகழ்மிக்க கட்டிடக்கலைஞர்களில் ஒருவர். இக்கட்டிடம் தவிர்த்து சூரிச் நகரில் அமைந்திருக்கும் உரானியா கட்டிடம், லிண்டன்கோஃவ் மலை, மூன்ஸ்டர்ஹோவ், வைசன்கோவ் சூரிச், சூரிச் பிரேடிகெர் தேவாலயம் ஆகிய சூரிச் நகரின் மையக் கட்டிடங்களை வடிவமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.



ஏனைய அருங்காட்சியகங்களைப் போன்றே, நிரந்தரக் கண்காட்சியும் சிறப்புக் கண்காட்சியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் கடற்பயணங்கள், புவியியல் துறை, வானவியல் ஆராய்ச்சி, புதுயுகத்தை உருவாக்கிய புத்தகப் பதிப்புத்துறை புரட்சி, என மட்டுமல்லாது ஐரோப்பிய கலை வளர்ச்சி, கிறிஸ்துவ சமய வரலாற்றுச் சின்னங்கள் என பல்வேறு வகையான சேகரிப்புக்களுடன் வருவோருக்குத் தகவல் களஞ்சியமாகத் திகழ்கின்றது இந்த அருங்காட்சியகம். இங்கிருக்கின்ற ஆவணங்களும் வரலாற்றுச் சின்னங்களும் உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவை என்பதால் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களைத் தனித்தனிப் பதிவாக விவரித்து எழுதுவது வாசிப்போருக்கு உதவும் எனக் கருதுகின்றேன்.



அந்த வகையில் இந்தப் பதிவில் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ் அவர்களைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நிக்கோலஸ் காப்பர்னிக்கஸ் (1473 – 1543) இன்றைய போலந்து நாட்டில் பிறந்தவர். இலத்தீன், போலந்து, ஜெர்மனி, இத்தாலி, கிரீக் மொழிகளைப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். தனது கல்வியைப் போலந்து தலைநகரம் கிராக்கோவிலும், இத்தாலியிலும் கற்று பின்னர் வெகு தீவிரமாக வானவியல் துறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டவர். அவரது நூலான On the Revolutions of the Celestial Spheres மிகப்புகழ்பெற்ற நூல் என்பதுடன், இத்துறையில் மிக முக்கிய ஆய்வு நூல் என்ற சிறப்புத்தகுதியைப் பெறுவதும் இந்நூல்தான். பூமியைச் சுற்றி ஏனைய கோள்கள் வலம் வருகின்றன என ஏனையோர் நினைத்து ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்தபோது அச்சிந்தனைக்கு மாற்றாக, சூரியனைச் சுற்றித்தான் பூமியும் ஏனைய கோள்களும் வலம் வருகின்றன என்று கூறி வானவியல் ஆய்வில் முத்திரைப்பதித்தவர் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ்.



புதிய சிந்தனைகளை உலகுக்குப் படைப்போரையும், மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போரையும் உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அவர்களின் கருத்துக்களையும் ஆய்வுகளையும் திட்டித்தீர்ப்பதும், குறைகூறி மறுப்பதும் உலக வரலாற்றில், அதிலும் குறிப்பாக கருத்துக்களத்திலும் இயல்பே. இதே நிலை இன்றும் தொடர்வதுதான். நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸின் ஆய்வு வெளியீடுகள் அவரது காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 17ம் நூற்றாண்டில் கலீலியோவின் ஆய்வுகளுக்குப் பின்னரும் ஜொகான்னெஸ் கெப்லரின் வானவியல் ஆய்வுகளுக்குப் பின்னரும் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ் புவியியல் கோட்பாடு அதாவது சூரியனை மையமாக வைத்து கோள்கள் வலம் வருதல் எனும் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.



இந்த சூரிச் அருங்காட்சியகத்தின் வானவியல் ஆய்வுக்கூடப்பகுதியில் நிக்கோலஸ் காப்பர்னிக்கஸின் இந்த குறிப்பிட்ட வானவியல் ஆய்வுத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஆய்வினை விளக்கும் அவரது கையெழுத்துப் பிரதியைக் கொண்ட 17ம் நூற்றாண்டு நூல் பாதுகாக்கப்படுகின்றது. அதே போல மேலும் நிக்கோலஸ் காப்பர்னிக்கஸின் தன் கையில் ஒரு மூலிகைச் செடியை வைத்திருப்பது போன்று தோற்றமளிக்கும் அவரது வரைபடமும், அவரது வரலாற்றுச்செய்தியும் ஆய்வுச் செய்தியும் அடங்கிய 17ம் நூற்றாண்டு நூல் ஒன்றும் இங்கே பாதுகாக்கப்படுகின்றது. இவை இரண்டும் எவ்வகையில் இந்த அருங்காட்சியகத்திற்குக் கிடைக்கப்பெற்றன என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.



இந்த சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள மேலும் சில அரும்பொருட்களையும் ஆவணங்களையும் பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் தொடர்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

Friday, August 12, 2016

68. பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா (2)

முனைவர்.சுபாஷிணி

பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பு மிகப் பிரமாண்டமானது. அடித்தளத்தில் நான் சென்ற போது ஆசிய, அதிலும் தெற்காசிய சிற்பங்களின் கண்காட்சி வைத்திருந்தனர். இதில் அறிய புத்தர் சிற்பங்களும் திபேத்திய அருங்கலைப் படைப்புக்களும் நிறைந்திருந்தன. உள்ளே கட்டணம் கட்டி டிக்கட் பெற்றுக் கொண்ட உடன் முதல் தளத்திலேயே அங்குள்ள ரோமானிய, கிரேக்க சேகரிப்புக்களைப் பார்வையிடத் தொடங்கலாம். ஆனால், நான் அங்கே தொடங்காமல் அடித்தளத்தில் இருந்த சிறப்புக் கண்காட்சியை பார்வையிட ஆரம்பித்தேன்.



கி.பி.11ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் கருங்கல் சிற்பம் ஒன்று இந்தியாவின் நியூ டெல்லி அருங்காட்சியகத்திலிருந்து வாங்கப்பட்ட சிற்பம் இங்கு காட்சிக்கு உள்ளது. இந்த சிற்பத்தை விலை கொடுத்து பிலடெல்ஃபியா அருங்காட்சியகத்திற்கு பொருளுதவி செய்தவர்கள் திரு. திருமதி ரோலண்ட் என்ற செய்தியையும் இங்கு காணலாம். இது 1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வாங்கப்பட்டது. கல்லால் ஆன மிக நேர்த்தியான வகையில் அமைந்த சிற்பம் இது. பாதப்பகுதியில் மட்டும் சேதம் ஏற்பட்ட வகையில் உள்ளது.

இதே போல விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம வடிவத்தின் சிற்பம் ஒன்றும் இங்குள்ளது. இது கி.பி. 4ஆம் நூற்றாண்டு சிற்பம் என்றும் மதுரா, அதாவது இன்றைய உத்திர பிரதேசம் பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்றது, இதுவும் இந்தியாவிலிருந்து வாங்கப்பட்ட சிலைதான். அதற்கு பொருளுதவி செய்தோர் பற்றிய குறிப்புகளும் அருங்காட்சியகத்தில் உள்ளது.



இங்குள்ள மற்றுமொரு அற்புத சேகரிப்பு இந்தியாவின் மத்திய பிரதேசத்திலிருந்து வாங்கப்பட்ட 11 ஆம் நூற்றாண்டு அர்த்தநாரீஸ்வரர் சிற்பம். இதுவும் கருங்கல்லில் செய்யப்பட்ட சிற்பமே. இந்திய சிற்பக்கலைக்கு உதாரணமாகத் திகழும் வகையில் இந்த சிற்பத்தின் அமைப்பு அமைந்திருக்கின்றது.

இந்த அருங்காட்சியகத்தில் சேகரிப்பில் சிறப்பானவற்றுள் ஒன்றாகக் கருதப்படும் சுவர்க்கத்தின் நாயகனான இந்திரனின் சிலை ஒன்றும் இங்குள்ளது. இது நேப்பாளின் காட்மண்டு நகரிலிருந்து வாங்கப்பட்ட தனியார் சேகரிப்பிலிருந்து அருங்காட்சியகத்திற்குக் கிடைத்த 12ஆம் நூற்றாண்டுச் சிற்பம்.



இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே இருக்கும் மிகப் பிரம்மாண்டமான அமைப்புகளில் 14ஆம் நூற்றாண்டு மூரோமாச்சி காலத்து கோயில் ஒன்றையும் குறிப்பிடலாம். இது ஜப்பானின் நாரா என்ற பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு அருங்காட்சியகத்தின் உள்ளேயே வைக்கப்பட்டுள்ளது. மூங்கிலால் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்ட கோயில் வளாகம். அதனுள்ளே பலகையால் ஆன கோயில் அமைக்கபப்ட்டு ஆலயத்தின் மத்தியில் புத்தர் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இங்கே நின்று பார்க்கும் போது அருங்காட்சியகத்தில் தான் இருக்கின்றோமா அல்லது ஒரு ஜப்பானிய புத்தர் கோயிலில் இருக்கின்றோமா என குழம்பித்தான் போய்விடுவோம்.



இந்த ஜப்பானிய புத்தர் கோயில் இருக்கும் அதே தளத்திலேயே மற்றுமொரு பிரமாண்டமான கோயில் இருக்கின்றது. இது ஸ்பெயினின் கட்டாலானியா பகுதி, அதாவது இன்றைய பார்செலோனா இருக்கும் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட செயிண்ட் ஓத்தோ – செயிண்ட் போனவென்சோ தேவாலயத்தின் ஒரு மண்டபத்தின் ஒரு பகுதி. கிபி 1490 வாக்கில் கட்டப்பட்டது என அறியப்படும் இந்தக் கோயில் கல்லால் கட்டப்பட்டது. இதன் சில பகுதிகள் மரத்தால் ஆனவை. தங்க முலாம் பூசப்பட்ட வகையில் அமைக்கப்பட்டவை. இதுவும் ஒரு தனியார் கொடுத்த நன்கொடையின் வழி கிடைக்கப்பெற்றது. செயிண்ட் ஒத்தோ என்பவர் கத்தோலிக்க சமய குருமாராக இருந்து அங்கு ப்ரான்சிச்கான் அமைப்பில் இருந்து சமயம் பரப்பும் சேவையைச் செய்தவர்கள். அவர்கள். சமயம் பரப்பும் பணிக்காக மரோக்கோ நாட்டிற்குச் செய்ன்று அங்குள்ள மசூதி ஒன்றில் கத்தோலிக்க சமயம் பரப்பும் நடவடிக்கையைச் செய்ததால் இவர்கள் அங்கேயே சிரச்சேதம் செய்யபப்ட்டு கொல்லபப்ட்டனர். அவர்களின் நினைவாக ஸ்பெயின் நாட்டில் எழுப்பப்பட்ட தேவாலயத்தின் ஒரு பகுதி தான் இங்கிருப்பது.



இப்படி இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சிறப்பானவற்றைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருக்கலாம். ஒரு நாள் முழுவதும் இருந்தால் இந்த அருங்காட்சியகத்தை நன்கு சுற்றிப்பார்த்து இங்குள்ள அரும்பொருட்கள் சேகரிப்புக்கள் பற்றி அரிந்து கொள்ளலாம்.

இந்த அருங்காட்சியகத்துக்கு அருகில் இருக்கும் மேலும் இரண்டு அருங்காட்சியகங்களுக்குச் செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதி. உள்ளது. இந்தப் பேருந்து இலவசம். இது வரும் வேளையில் இதில் ஏறிக் கொண்டால் அடுத்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்று விடும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.



பிலடெல்ஃபியா அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம். மதுரை ஸ்ரீமதனகோபாலசுவாமி மண்டபம் மட்டுமல்லாது ஜப்பான், ஸ்பெயின், பிரான்சு, சீனா, கொரியா, என பல நாடுகளின் வழிபாட்டு வளாகங்கள் இங்கிருப்பது இதன் பெருமையைக் கூறும் வகையில் இருக்கின்றது.

சரி. அடுத்த கட்டுரையில் மேலும் ஒரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றி விவரிக்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

Monday, August 8, 2016

67. பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா

முனைவர்.சுபாஷிணி

மேலை நாடுகளில் தங்கள் நாட்டு அரும்பொருட்களைச் சேகரித்து வைப்பது போல அல்லது அதற்கும் சற்று கூடுதலான ஆர்வத்துடன் ஆசிய, ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளின் அரும்பொருட்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வம் இருப்பது, இந்த நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் போது உணர முடியும். ஆசிய நாடுகளுக்கே உரித்தான இறைவடிவங்கள், எழுத்து முறை வளர்ச்சி தொடர்பானவை, நூல்கள், இலக்கியங்கள் என்பனவோடு விலை உயர்ந்த கற்கள், பொன், வைடூரிய ஆபரணங்கள் என்ற வகையிலும் தங்கள் சேகரிப்புக்களை இத்தகைய அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் எகிப்திய பண்டைய நாகரிகத்தின் சின்னங்களும், இந்திய உபகண்டத்தின் சமயச்சின்னங்களும், சீன தேசத்தின் மன்னர்களின் உடமைப் பொருட்களும், ஆப்பிரிக்க தேசத்தின் ஆதிவாசிகளின் நம்பிக்கைக்கு உரிய பொருட்களும் இவ்வகை சேகரிப்புக்களில் முக்கியமானைவையாக இடம்பெறுகின்றன. ஐரோப்பிய நாடுகளின் பெரும் நகரங்களில் உள்ள ஏறக்குறைய அனைத்து அருங்காட்சியகங்களிலும் இத்தகைய சேகரிப்புக்களைப் பார்த்திருக்கின்றேன்.


அண்மையில் வட அமெரிக்கா சென்றிருந்தபோது நான் சென்று வந்த சில அருங்காட்சியகங்களில் இத்தகைய அரும்பொருட் சேகரிப்புக்களைப் பார்த்தேன். அத்தகைய அருங்காட்சியகங்களில் ஒன்றுதான் பிலடெல்ஃபியா அருங்காட்சியகம்.

திரு.நரசய்யா அவர்கள் எழுதி வெளியிட்ட ஆலவாய் நூலை வாசித்த போது மதுரையிலிருந்த ஒரு கோயிலின் சில பகுதிகள் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டதை அவர் குறிப்பிட்டிருந்தது என் நினைவில் இருந்தது. அதனை நேரில் சென்று பார்ப்பதுடன் இங்குள்ள ஏனைய அரும்பொருட்களையும் காணும் ஆவலுடன் இங்கு சென்றிருந்தேன்.



இந்த அருங்காட்சியகத்தின் மூன்றாம் மாடியில் சில கோயில்களின் மண்டபங்களும் கருவறைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட கோயிலில் ஒரு பகுதியானது ஸ்ரீ மதனகோபாலசுவாமி கோயில் மண்டபம். மதுரையிலிருந்து இந்த கோயில் மண்டபத்தை அமெரிக்காவிற்கு கொண்டு வந்திருக்கின்றனர். 1912ம் ஆண்டில் திருமதி அடலீன் பெப்பர் என்பவர் இதனை மதுரையில் காசு கொடுத்து வாங்கியிருக்கின்றார். பின்னர் அவரது மகள் சூசன் பெப்பர் இந்த மண்டபத்தை பிலடெல்ஃபிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்.


இன்று தான் கோயில் கலைப்பொருட்கள் ஒரு சில சமூக விரோதிகளால் கொள்ளயடிக்கப்பட்டு திருடப்படுகின்றன என்றால் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிப்படையாக காசு கொடுத்து ஒரு அம்மையார் கோயில் மண்டபத்தையே வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது திகைக்க வைக்கின்றது தானே. இந்தக் கோயில் நாயக்கர் காலத்தில் அதாவது கிபி 1550ம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட கோயிலென இங்குள்ள குறிப்பில் காணலாம்.

நான் சென்றிருந்த நேரத்தில் இப்பகுதியை சீரமைப்பு செய்து கொண்டிருந்தமையால் என்னால் சரியாகப் புகைப்படம் எடுக்க இயலவில்லை. இருட்டாக ஒளி வெளிச்சம் குறைந்த நிலையில் இருந்ததால் புகைப்படம் சரியாக எடுக்க இயலவில்லை. இவை கருங்கற்களால் ஆன தூண்கள். நாயக்கர் கால அமைப்புடன் கூடியவை. கோயில்களில் நாம் காணும் கற்தூண்களில் பொறுத்திய சிற்பங்கள் என வரிசையாக இவை இங்கே உள்ளன. அருங்காட்சியகத்திற்குள் நம் கண்கள் பழகிய ஒரு கோயிலைக் காண வியப்பாகத்தான் இருந்தது. 1940ம் ஆண்டு தொடங்கி இந்த மண்டபம் பொது மக்கள் பார்வைக்காக இங்கே இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் வருவோரின் கண்களுக்கு இது விருந்து.

பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம் திங்கள் தவிர ஏனைய நாட்களில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அருங்காட்சியகத்தின் முகவரி, 2600 Benjamin Franklin Parkway, Philadelphia, PA 19130.



ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பழமையானது இந்த அருங்காட்சியகம். 1876ம் ஆண்டில் தொடங்கப்பட்டு பின்னர் இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்கள் படிப்படியாக விரிவாக்கம் கண்டன. இங்குள்ள மேலும் சில அரும்பொருட்கள் பற்றி அடுத்த பதிவில் தொடர்கின்றேன்.

Monday, July 18, 2016

66. சிக்மண்ட் ப்ராய்ட் அருங்காட்சியகம், வியன்னா, ஆஸ்திரியா

http://www.vallamai.com/?p=70393
முனைவர்.சுபாஷிணி

மனிதர்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறு உடல் நோய்களுக்குக் காரணமாக உளவியல் பிரச்சனைகளே அமைகின்றன. வெளிப்படையாக உடலில் தோன்றும் நோய்கள் என்பன சில. மனிதர்களாகிய நமக்கு ஏற்படுகின்ற பல நோய்கள் ஆழ் உள்ளத்தின் தேங்கிக் கிடைக்கின்ற சங்கடங்கள், பீதிகள், அச்சங்கள், வேதனைகள், துயரங்கள், ஏமாற்றங்கள், வலிகள், தோல்விகள் ஆகியவற்றின் தேக்கத்தினால் ஏற்படுபவையாகவே இருக்கின்றன. இவற்றின் மூலத்தை அறியும் முயற்சியில் சமயஞானிகளும் விஞ்ஞானிகளும் ஆய்வில் ஈடுபடுவது என்பது தொன்று தொட்டு நிகழ்வதைக் காண்கின்றோம்.





ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவில் உலகப் புகழ்மிக்க அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கனவற்றுள் ஒன்றாகத் திகழ்வது உளவியல் நிபுணரும் நரம்பியல்துறை வல்லுனரும் சைக்கோ-அனாலிசிச் எனச்சொல்லப்படும் உளவியல் ஆய்வுத்துறைக்கான வழிமுறைகளை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு உலகப்புகழ் பெற்றவருமான சிக்மண்ட் ப்ராய்ட் அருங்காட்சியகம்.

இவரது ஆய்வு முறையானது ஒரு ஆய்வாளர் ஆழ்மனத்தில் படிந்து கிடக்கும்  நினைவுகளின் முரண்பாடுகளை தனித்தனியாகப் பிரித்து அலசி ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆய்வில் ஒரு உளவியல் பாதிப்புக்குள்ளானவரின் மனதில் எழும் கற்பனை உலகங்களும், கனவுகளும் நுணுக்கமான ஆய்வுப் பொருட்களாக கையாளப்படும். இவரது ஆய்வுகளில் மிகக் குறிப்பாக சிறு குழந்தைகளின் தன்னைப்பற்றிய சுய எண்ணம், காமம் தொடர்பான உளப்பிறழ்ச்சிகள், சுயசிந்தனை என்பவை மைய ஆய்வுப் பொருட்களாகக் கையாளப்படுவன என்பது குறிப்பிடத்தக்கது.


​​சிக்மண்ட் ப்ராய்ட் - சில புகைப்படங்களின் தொகுப்பு

வியன்னா நகரின் மையப்பகுதியிலேயே பார்லிமென்ட், அரச அலுவலகங்கள், நூலகம் அனைத்தும் இருக்கும் பகுதியில் சற்று தள்ளி இருந்தாலும் நடக்கும் தூரத்திலேயே அமைந்திருக்கின்றது இந்த அருங்காட்சியகம். அவர் வாழ்ந்து ஆய்வு செய்த கட்டிடமே இன்று அவரது நினைவைப் பறைசாற்றும் நினைவு மாளிகையாகவும் அருங்காட்சியகமாகவும் திகழ்கின்றது.

இன்றைக்கு செக் ரிப்பப்ளிக் நாட்டின் ஒரு நகரமாகத் திகழ்ந்த ஃப்ரைபெர்க் (Freiberg) நகரில் இவர் 1856ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி பிறந்தார். தமக்கு ஐந்து வயதாகும் போது இவரது குடும்பத்தினர் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவிற்கு குடி பெயர்ந்தனர். அது தொடங்கி வியன்னாவிலேயே இவரது வாழ்க்கை அமைந்தது. 1881ம் ஆண்டில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்று திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். இவரது ஆறாவது மகள் அன்னா, இவரைப் போலவே உலகப்புகழ்பெற்ற உளவியல் ஆய்வுத்துறை நிபுணராகத் திகழ்ந்தார். இந்த சிக்மண்ட் ப்ராய்ட் அருங்காட்சியகத்தில் இவர்கள் இருவருடையதுமான ஆவணங்களும் ஆய்வுக் குறிப்புக்களும் பாதுகாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


​சிக்மண்ட் ப்ராய்ட் அமர்ந்து பயன்படுத்திய நாற்காலி

முதலில் இவரது ஆய்வுகள் ஹிஸ்டீரியா நோயாளிகளைப் பற்றியதாக அமைந்தது. பின்னர் அந்த ஆய்வுகளிலிருந்து விடுபட்டு கனவுகள் பற்றிய ஆய்வுகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1900 ஆண்டு, The Interpretation of Dreams என்ற நூலை வெளியிட்டார். தொடர்ச்சியான ஆய்வின் பலனாக 1901ம் ஆண்டில் The Psychopathology of Everyday Life என்ற நூலையும் 1905ம் ஆண்டு Three Essays on the Theory of Sexuality என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். ஆரம்ப நிலையில் இவை பெருமளவிலான வரவேற்பைப் பெறவில்லை. ஆயினும் 1909ம் ஆண்டு அமெரிக்காவில் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவு செய்ய அழைக்கப்பட்டார். அதன் பின்னர் 1916ம் ஆண்டு இவரது Five Lectures on Psycho-Analysis வெளிவந்தது. இவை அவரது புகழை உயர்த்தின.


​​சிக்மண்ட் ப்ராய்ட்  பயன்படுத்திய வருகையாளர் அறை

சிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களின் ஆய்வுகள் உலகளவில் உளவியல் துறையில் நிலையான இடத்தைப் பிடித்தன. எந்த அளவிற்கு அவரது ஆய்வுகள் புகழப்பட்டனவோ அந்த அளவிற்கு அவரது ஆய்வுகள் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாக்கப்பட்டன. ஆயினும் அவரது ஆய்வுகள் எட்டிய ஆழத்தை இத்துறையில் வேறு ஆய்வு முறைகள் எட்டினவா என்பது கேள்விக்குறியே.

சிக்மண்ட் ப்ராய்டின் இறுதிக் காலம் சோகம் நிறைந்ததாகவே அமைந்தது. அவருக்குத் தொண்டைப்புண் நோய் ஏற்பட்டு அது புற்று நோயாக மாறி அவரது உடலில் வலிமையைக் குறைத்தது. மருத்துவர்களிடம் வேண்டிக் கேட்டு அதிகப்படியான மயக்க மருந்து கொண்ட மாத்திரைகளை விழுங்கி அவர் 1939ம் ஆண்டில் தான் நாடு கடந்து வசித்து வந்த இங்கிலாந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இது ஒரு வருந்தத்தக்க நிகழ்வு!



​​சிக்மண்ட் ப்ராய்ட்  அலுவலகம் - தற்சமயம் காட்சிக் கூடமாக உள்ளது

மலேசியாவில் என் இளம் வயதில், மறைந்த உளவியல் அறிஞரும் தமிழறிஞருமான டாக்டர்.லோகநாதன் அவர்களின் இலவச உளவியல் வகுப்புக்களில் பாடம் கேட்ட காலங்களில் சிக்மண்ட் ப்ராய்ட் பற்றி அடிக்கடி நான் அவரது வகுப்புக்களில் கேள்விப்பட்டதுண்டு. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்து மறைந்த டாக்டர்.லோகநாதன் அவர்கள் சிக்மண்ட் ப்ராய்ட் அவர்களின் ஆய்வு முறை வழியில் உளவியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


​​சிக்மண்ட் ப்ராய்ட் - வீட்டு வாசலில்


சிக்மண்ட் ப்ராய்ட் அவர்களது ஆய்வு முறைகள் மனிதக்குல உளவியல் சிக்கல்களை ஆராய்ந்து தீர்வுகாணும் வழிமுறையை உலகுக்கு வழங்கியுள்ளம . இவர் போற்றப்பட வேண்டிய உலக ஆய்வாளர்களின் வரிசையில் தனியிடத்தைப் பெறுபவர்!



Monday, June 27, 2016

65. அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம், லுக்ஸம்பர்க்

http://www.vallamai.com/?p=69926
முனைவர்.சுபாஷிணி

லுக்ஸம்பர்க் ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ஜெர்மனியோடு, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய இரண்டு நாடுகளையும் எல்லையாகக் கொண்டது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1940ம் ஆண்டில் மே10ம் தேதி ஹிட்லர் தலைமையிலான நாஸி படைகள் லுக்ஸம்பர்க் நாட்டிற்குள் ஊடுருவின. ஒரே நாலில் லுக்ஸம்பர்க் நாட்டைக் கைப்பற்றியது ஜெர்மனியின் அப்போதையை நாஸி அரசு. 1944ம் ஆண்டின் இறுதி வாக்கிலும் 1945ம் ஆணில் 2ம் உலகப்போரின் முடிவிலும் நாஸி அரசிடமிருந்து லுக்ஸம்பர்க் விடுதலைப் பெற்றது.

இரண்டாம் உலகப்போர் தொடங்கும் முன்னர் லுக்ஸம்பர்க் நாட்டில் ஏறக்குறைய 3500 யூதமக்கள் குடியிருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் ஜெர்மனியிலிருந்து வெளியேறி இங்கே வந்து குடியேறியவர்கள். நாஸி அரசு லுக்ஸம்பர்க்கை கைப்பற்றிய பின்னர் அங்குக் குடியிருந்த யூத மக்களை அருகாமையில் இருக்கும் பிரான்சுக்கு சென்று விடும்படி கட்டாயப்படுத்தியது. ஏறக்குறைய 2500 மக்கள் அந்த வகையில் பிரான்சுக்கு குடிபெயர்ந்து விட்டனர். எஞ்சியவர்கள் கதி தான் பரிதாபம். எஞ்சிய ஏறக்குறைய 800 யூதர்களை நாஸி அரசு ஜெர்மனியில் ஏற்படுத்தப்பட்ட கெத்தோக்களுக்கு கொண்டு வந்து விட்டனர். கெத்தோ என்பது ஜெர்மனியின் அப்போதைய நாஸி அரசுக்கு எதிரானோரை வைத்து சித்ரவதை செய்யும் வதை முகாம்.

மறைந்தும் ஒளிந்தும் சில யூத மக்கள் இருந்தவர்கள். ஆயினும் எஞ்சிய 800 யூதர்களையும் கெத்தோக்களுக்கு கொண்டு சென்ற பின்னர் ஜெர்மனியின் நாஸி அரசு லுக்ஸம்பர்கை யூதர்கள் வெளியேற்றப்பட்ட தூய்மை செய்யப்பட்ட நாடாக பிரகடனப்படுத்தியது.

தூய்மைவாத, இனவாத சிந்தனையின் எத்தனைப் பெரிய கொடுங்கோலாட்சியின் சிந்தனை இது என்று நினைக்கும் போதே மனிதம் தொலைத்த மக்கள் சிந்தனையின் கொடூர சிந்தனைப் போக்கினை காண முடிகின்றது. சமூக நல்லிணக்கத்திற்கு மதவாதமும் இனவாதமும் தூய்மைவாதமும் என்றுமே நன்மை செய்ய முடியாது. அது எத்தகைய தன்மை உடையதாக இருப்பினும் தூய்மை வாதம் மக்கள் வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும் ஒரு சிந்தனை தான். பொதுமைப்பண்பிலிருந்து மக்கள் விலகும் நிலை ஏற்படும் தருணம் அது சமூகச் சீரழிவுக்கு நிச்சயமாக வழிவகுக்கும் என்பதில் ஐயமிலை.!



இந்த அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம் 1944ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் நாள் முதன் முதலில் ஒரு தற்காலிக இடுகாடாக அமைக்கப்பட்டது. இரண்டாம் புலகப்போரில் உயிர்நீத்த போர்ப்படை வீரர்களில் சிலரது உடல்கள் இங்கே அச்சமயம் புதைக்கப்பட்டன. இங்கே புதைக்கப்பட்டோரில் 116 யூத இனத்தைச்சார்ந்த போர்ப்படை வீரர்களும் அடங்குவர். இவர்களது கல்லறையின் மேல் நட்சத்திர வடிவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.



தற்சமயம் இந்த அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றி 33.5 ஏக்கர் காடுகள் சூழ்ந்துள்ளன.

இந்த மயானப் பகுதிக்கு முன்னர் வாகனம் நிறுத்தும் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் உயர்ந்த இரும்புக் கம்பிகள் பூட்டப்பட்ட நுழைவாயிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் நமக்குத் தென்படுவது இந்த மயானத்தை மையப்படுத்தும் வகையில் இங்கே புதைக்கப்பட்டிருக்கும் ஆண் பெண் போர்ப்படை வீரர்களை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னம். இதற்கு முன்னர் வலது புறத்தில் சிறிய அலுவலகமாக அருங்காட்சியகப் பகுதி அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தினுள்ளே, அமெரிக்க சான்றிதழ்கள், கொடிகள், புகைப்படங்கள், கடிதங்கள் என அரும்பொருட்கள் சில காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது மிகச் சிறிய ஒரு பகுதி தான்.



இந்த அறையை விட்டு வெளியே வந்தால் வலது இடது என இரு புறங்களிலும் பளிங்குக் கற்களால் எழுப்பப்பட்ட சுவரில் இரண்டாம் உலகப்போரை நினைவுறுத்தும் வகையில் அமைந்த விளக்கக் குறிப்புக்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. இந்த விளக்கப்படங்களும் குறிப்புக்களும் போர்ப்படைகள் மேற்கு ஐரோப்பாவில் போரின் போது சென்ற வழித்தடங்களை விவரிக்கும் வகையில் உள்ளன. ஒரு பகுதியில் இந்தப் போரின் போது காணாமல் போன 371 போர்ப்படை வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.



இந்த இடத்திலிருந்து மையப்பகுதியில் தான் உயர்ந்த கோபுரம் போன்ற நினைவாலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த நினைவாலயத்தினுல் விளக்கு எறிந்து கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே அமெரிக்க கொடி பிரம்மாண்டமான அளவில் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கத்தோலிக்க தேவாலயம் போன்ற அமைப்பில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து கீழே இறங்கு நடக்க ஆரம்பித்தால் பச்சைக் கம்பளம் விரித்தார் போல இருக்கும் புல்வெளியில் வெள்ளை நிறச் சிலுவைகள் நிறைந்த மயானக் காட்சியைக் காணலாம். இங்கே 5076 இறந்து போன போர் வீரர்கள் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பளிங்கு சிலுவைபோன்ற அமைப்பிலான கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறை அமைக்கப்பட்டுள்ள பகுதி ஆர்டென் (Ardennes) என அழைக்கப்பட்ட, 2ம் உலகப்போரின் போது மிக முக்கிய போர் நடைபெற்ற இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இறுக்கமான காடுகள் நிறைந்த ஒரு பகுதி. லுக்ஸம்பர்க் நாட்டின் தலைநகரான லுக்ஸம்பர்க் நகரம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்தின் போர்ப்படை தலைமையகமாகத் திகழ்ந்தது. இங்கே பணியில் இருந்த ஜெர்னரல் ஜோர்ஜ். எஸ்.. பாட்டர்ன் அவர்களது உடலும் இங்கேதான் புதைக்கப்பட்டது.


கல்லறைகள் நிறைந்த இந்தப் புல்வெளியில் அங்குச் சென்றிருந்த போது உலகப்போரின் நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டே நெடுந்தூரம் நடந்தேன். மனிதர்களின் சுயநலமே பல சமூகக் கோளாறுகளுக்கு மூல காரணமாக அமைகின்றன. இது பெறுமளவில் அரசியல் ஆதரவும் பெறும் போது பெரும் சமூகப் பேரழிவை ஏற்படுத்துகின்றன. சுயநலத்தோடு இனவாதமும் தூய்மைவாதமும் பேசிய எவரும் இன்று இந்த உலகில் நிலைக்கவில்லை.

உலகமே பல இயற்கைப் பொருட்கள்ன் கலவையில் தான் புதுப்புது பரிணாம மாற்றத்தையும் வளர்ச்சியும் பெற்றுள்ளது. மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை. சுயநலப்போக்கை விட்டு பொதுநலப்பண்பை வளர்த்து மானுடம் தழைக்க அனைவரும் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதை நினைவுறுத்துவதாகவே இந்த வகை சின்னங்கள் நம் முன்னே காட்சிப்பொருளாய் நிற்கின்றன. அதனைப் புரிந்து அன்பையும் நேசத்தையும் வளர்க்கும் மனிதர்களாக நாம் இருப்போம்.

அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்!