Wednesday, September 7, 2016

71. தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (3)

முனைவர்.சுபாஷிணி

ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலம் என்பது ஐரோப்பிய வரலாற்றுக்கு மட்டுமன்றி உலகின் ஏனைய கண்டங்களில் உள்ள நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சரித்திர நிகழ்வு. ரெனைசான்ஸ், அதாவது மறுமலர்ச்சிக்காலம் எனக்கூறப்படுவது, 1400 தொடங்கி 1600 வரை எனக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் தீவிரமான மாற்றங்கள் பல நிகழ்ந்தன. அதில் குறிப்பாக, சமயம், கலை, அறிவியல், கட்டுமானக் கலை, மருத்துவம், தத்துவங்கள், சிற்ப வடிவமைப்புக்கள், கடல் பயணங்கள் எனப் பன்முகத் தன்மையில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் குறிப்பிடத்தக்க ஒரு விசயமாக அமைவது இதுகாறும் ஐரோப்பிய கலாச்சாரமாகவும் கலை வளங்களாகவும் தத்துவக் கருத்துக்களாகவும் இருந்த விசயங்கள் இக்காலகட்டத்தில் தான் பெருமளவில் கேள்விக்குட்பட்டுத்தப்பட்டன. இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட கலைவடிவங்களும், தத்துவங்களும், தத்துவச்சிந்தனைகளும் கூட கேள்விக்குட்படுத்தப்பட்டு அவற்றினில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு அவை மக்கள் முன்னிலையிலும், சிந்தனையிலும் பொதுவாரியாக முன் வைக்கப்பட்டன. நீண்ட காலங்களாக அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களின் மேல் கலந்துரையாடல்கள் முன் வைக்கப்பட்டன. அக்காலத்தில் ஐரோப்பவைத் தாக்கிய ப்ளேக் நோய் ஏற்படுத்திய மரண இழப்பின் உயர்ந்த எண்ணிக்கையின் பயங்கரமும் சேர்ந்து கொண்டு மக்கள் சிந்தனையை வேறு கோணத்தில் செலுத்தியது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

ஐரோப்பிய மறுமலர்ச்சி காலம் இத்தாலியில் தான் தொடங்கியது. சிற்ப வடிவமைப்பு, ஓவியங்கள் கட்டிடக் கட்டுமானங்கள் ஆகியவற்றில் முந்தைய வகையிலான ஆக்கங்களுக்கு மாற்றாக புதிய கோணத்தில் இக்கலைப்படைப்புகளைப் படைக்கும் முயற்சிகள் தொடங்கி விரிவடைந்தன. ஒரு சாராரின் ஆதரவைப் பெற்ற அதே வேளையில் பழமைவாத சித்தாந்தங்களில் ஊறிப்போனோருக்கு அதிலும் குறிப்பாக சமய ஸ்தாபனங்களுக்கு, இது கடும் எதிர்ப்பாகவே அமைந்தது.

புதிய கலைப்படைப்புகளை வடித்த சிற்பிகள் தம் புதிய கருத்துகளை, வரைபடங்களாக வரைந்து வைத்த கையெழுத்து படிவங்கள் ஐரோப்பாவின் பல நாடுகளில் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் சில சூரிச் தேசிய அருங்காட்சிகத்தில் உள்ளன.



ரோம் நகரின் கொலீசியத்தைச் சுற்றி வடிவமைத்து உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளை அதனை மண்ணும் கற்களும் கொண்டு உருவாக்கும் முன்னர், கையெழுத்துப் பிரதியாக வடித்திருக்கின்றனர். இத்தாலியின் ரோம் நகருக்குச் சென்றவர்களுக்கு அங்கே கொலீசியம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே உள்ள கட்டிடங்கள், சிற்பங்கள் ஆகியன நினைவில் இருக்கலாம். அவற்றை உருவாக்கியபோது தயாரித்த அடிப்படை வரைபடங்கள் தொகுக்கப்பட்டு ஒரு நூலாக உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் 1400களில் உருவாக்கப்பட்டவையே. இந்த வரைப்படங்களை மாடலாக வைத்துக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகளையும், கட்டிடங்களையும் உருவாக்கினர். இந்த நூலில் இருக்கும் வரைப்படங்களில் சில 15ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் ஸ்பெயினுக்குக் கொண்டு செல்லப்பட்டன . இதில் உள்ள வரைபடங்கள் காட்டும் கட்டிட மாடல்களின் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு அவ்வகையில் புதுமையாக கலை வேலைப்பாட்டுடன் அமைந்த கட்டிட கட்டுமானக் கலை ஸ்பெயின் நாட்டிலும் உருவாக்கம் கண்டது. இதற்கு நல்லதொரு உதாரணமாக அமைவது, க்ரானாடாவுக்கு அருகே உள்ள காலாஹோரா அரண்மனை.



இங்கிருக்கும் மற்றுமொரு அரிய நூல் 1513ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதனை சுவிச்சர்லாந்தின் பாசல் நகரில் நீதிபதியாக பணியாற்றிய போனிஃபாஷியஸ் ஆம்மெர்பாக் என்பவர் உருவாக்கினார். இந்த நூலில் இருப்பவை அனைத்தும் ரோமன் கல்வெட்டுகளின் படியெடுத்த பிரதிகள் போன்றவையே. ரோமன் கல்வெட்டுகளில் மிகவும் ஈர்க்கப்பட்டு ஸ்ட்ராஸ்பூர்க் நகரின் தோமஸ் வூல்ஃப் என்பவர் சேகரித்து வைத்திருந்த கல்வெட்டுகளைப் பார்த்து அதனை நூலில் படியெடுத்து தயாரித்தார். இந்தச் சேகரிப்புகள் அனைத்தும் ரோம் நகரின் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கல்வெட்டுகள் பதிக்கப்பட்ட கற்களாகும். இந்த ஆவணப்படுத்துதல் பணியை அவரது மறைவுக்குப் பின்னர் திரு.ஆம்மர்பாஹ் அவர்களின் மகன் தொடர்ந்து செய்து வந்தார்.



5ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் அக்காலகட்டத்தில் ரோமானிய நகரில் உருவாக்கப்பட்ட நூல்கள் பல காணாமல் போயின. ஆயினும் ஆங்காங்கே கிடைத்த சில பழம் நூல்களை அக்காலத்தில் இயங்கி வந்த ரோமன் கத்தோலிக்க மடாலயங்கள் எடுத்து படியெடுத்து பாதுகாத்து வந்தன. இவை ஒவ்வொன்றும் கிடைத்தற்கரிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. இந்த மடாலயங்கள் அவற்றை ஏதோ ஒரு வகையில் பாதுகாத்திராவிட்டால் அதில் கூறப்பட்ட, பதியப்பட்ட எண்ணற்ற வரலாற்றுத் தகவல்கள் இன்று ஆய்வாளர்களுக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.


ரெனைசான்சு என்னும் சொல்லிற்கு உள்ள மற்றொரு பொருள் மறுபிறப்பு என்பதாகும். அதாவது கலைப்படைப்புகள், தத்துவச் சிந்தனைகள் ஆகியன மீள்பார்வை செய்யப்பட்டும் அல்லது வேறொரு கோணத்தில் புதுப்படைப்பாக பிரசவிக்கப்பட்ட காலகட்டம் அது என்றும் சொல்லலாம்.

சூரிச் தேசிய அருங்காட்சியகம் இத்தகைய விலைமதிக்க இயலாத பல்வேறு ஆவணங்களைப் பாதுகாத்து வருகின்றது. இங்கே சென்று இங்குள்ள ஆவணங்களையும், பாதுகாக்கப்படும் அரும்பொருட்களையும் பார்த்து வருபவர்களுக்கு ஐரோப்பிய வரலாற்றின் சில பரிமாணங்களைப் புரிந்து கொள்ள முடியும்.




நான் பார்க்க வேண்டும் என பல நாட்கள் காத்திருந்து பார்த்து மிக ரசித்து, பல விசயங்களை அறிந்து கொண்ட ஒரு அருங்காட்சியகம் இந்த சூரிச் தேசிய அருங்காட்சியகம்.

சரி.அடுத்த பதிவில் மேலும் ஒரு நாட்டில் மேலும் ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

No comments:

Post a Comment