Monday, September 3, 2018

112. ஃப்ராம் அருங்காட்சியகம், ஓஸ்லோ, நோர்வே

முனைவர். க.சுபாஷிணி

http://www.vallamai.com/?p=87387

மிக அண்மையில் நான் பயணம் மேற்கொண்ட நாடு நோர்வே. நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்ல்லோவில் 106 அருங்காட்சியகங்கள் பதிவு செய்யப்பட்ட அருங்காட்சியகங்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. அதில் ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றிய செய்திகளை இந்தப் பதிவில் வழங்குகின்றேன்.

ஃப்ராம் அருங்காட்சியகம் (Fram Museum) பொதுவான அருங்காட்சியகங்களிலிருந்து மாறுபட்டதொரு அமைப்பைக் கொண்டது. 1936ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் உலகின் வடக்கு-தெற்கு துருவங்களுக்குப் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்த மூவரைச் சிறப்பிப்பதற்காகவும் உலகின் வடக்கு தெற்கு துருவங்களுக்குப் பயணம் செல்லப் பயன்படுத்திய ஃப்ராம் என்ற பெயர்கொண்ட மரக்கலத்தைச் சிறப்பிப்பதற்காகவும் அமைக்கப்பட்டது.



இந்த அருங்காட்சியகத்தின் அமைப்பை முதலில் காண்போம். அருங்காட்சியகத்தின் மையப்பகுதியில் ஃப்ராம் மரக்கலம் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று தளங்களில் கண்காட்சி சுவர்ப்பகுதியை ஒட்டியவாறு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஃப்ராம் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்று அதனை முழுமையாகப் பார்த்த பின்னர் படிகளில் இறங்கி கப்பலின் இரண்டாம் தளத்திற்கு வரலாம். அங்கு மாலுமிகள், ஆராய்ச்சியாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் தங்குவதற்கான அறைகள் உள்ளன. அங்கேயே சமையலறை, உணவருந்தும் பகுதி, ஓய்வெடுக்கும் பகுதி, நூலகப் பகுதி ஆகியன அமைந்திருக்கின்றன. இதற்கு அடுத்த கீழ்த்தளத்தில் கப்பலின் இயந்திரம் உள்ளது. இங்கு சமையல் பொருட்கள், பயணத்தில் தேவைப்படும் கருவிகள், போன்றவை வைக்கும் பகுதி உள்ளது.



உலகின் வடதுருவத்திற்குப் பயணம் சென்று அறிந்து வரவேண்டும் என்ற எண்ணத்துடன்1891ம் ஆண்டு நோர்வே அரசும் தனியாரும் சேர்ந்து இவ்வாய்வுப் பயணத்திற்கானப் பொருளாதாரத்தைச் சேகரித்துக் கொடுக்க, திரு.நான்சன் ( Fridtjof Nansen ), கோலின் ஆர்ச்சர் (Colin Archer) என்ற கப்பல் கட்டும் பொறியியலாளரை அமர்த்தி இக்கப்பலை உருவாக்கச் செய்தார். இந்தப் பிரத்தியேகக் கப்பலே உலகின் துருவங்களுக்குச் சென்ற ஆய்வுப்பயணங்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட கப்பல் என்ற பெருமையைப் பெறுகின்றது.



உலகின் துருவங்களுக்குப் பயணித்தோர் என்று குறிப்பிடும் போது இதில் முதன்மையாகப் பட்டியலில் இடம் பெறுவோர் நோர்வே நாட்டினர் மூவர். அவர்கள் திரு. பிரிட்ஜோவ் நான்சன் ( Fridtjof Nansen ), திரு.ஓட்டோ சுவேதுருப் (Otto Sverdrup) மற்றும் திரு. ரோல்ட் அமுண்ட்சன் ( Roald Amundsen) ஆகியோர்.

திரு. பிரிட்ஜோவ் நான்சன் (10 அக்டோபர் 1861 – 13 மே 1930) நோர்வே நாட்டைச் சேர்ந்தவர். ஒரு ஆய்வாளர், சமூக நல செயற்பாட்டாளர், அரசப்பிரதிநிதி, விஞ்ஞானி என்ற பன்முக ஆளுமையாக அறியப்படுபவர். இவரது சாதனைகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசினை 1922ம் ஆண்டு இவர் பெற்றார் என்பதை நினைவு கூர்வது தகும்.



திரு.நான்சன் இன்று உலக வரைபடத்தில் நாம் அறியும் க்ரீன்லாந்து எனும் நாட்டின் உட்பகுதியை ஸ்கீ பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யச் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கியவர். ஆயினும் 1893லிருந்து 1896 வரையிலான ஆய்வுப்பயனத்தில் வடதுருவத்தின் 86°14′ அடைந்து செய்த சாதனை இவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. இந்தப் பயணத்திற்குப் பின்னர் பயணங்களிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு தனது ஆய்வுகளிலும் தனது சமூக நலப்பணிகளிலும் நோர்வே நாட்டின் அரசியல் அமைப்புப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.


திரு. ஓட்டோ சுவேதுருப் (31 அக்டோபர்1854 – 26 நவம்பர் 1930) வடதுருவத்திற்கான திரு.நான்சனின் முதல் பயணத்தில் அவரோடு இணைந்து ஆய்வில் ஈடுபட்டவர்களுள் ஒருவர். அப்பயணத்தின் முக்கிய அதிகாரிகளுள் ஒருவராக அமர்த்தப்பட்டு பின் திரு.நான்சன் கப்பலை விட்டு ஸ்கீ செய்து வடதுருவத்திற்குச் சென்ற போது ஃப்ராம் கப்பலை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். 1898ம் ஆண்டு திரு. ஓட்டோ சுவேதுருப் வடதுருவத்திற்கான இரண்டாவது பயணத்தை நிகழ்த்தினார். ஃப்ராம் கப்பலிலேயே இந்த இரண்டாவது பயணமும் நிகழ்ந்தது. இப்பயணம் 1902ம் ஆண்டு வரை நீடித்தது. க்ரீண்லாந்து நாட்டைக் கடந்து மேலும் பல தீவுகளைக் கண்டுபிடித்து அவற்றை வரைபடத்தில் இணைக்கும் பணியைச் செய்தார். இவற்றுள் பல சிறு தீவுகள் கண்டறியப்பட்டன, பெயரிடப்பட்டன, வரைபடத்தில் இணைக்கப்பட்டன. இந்தத் தீவுத் தொகுதிகளுக்கு இவரது பெயரிலேயே சுவேதுரூப் தீவுகள் (Sverdrup Islands) என்ற பெயரும் வழங்கப்பட்டது. இவருக்கு அந்நாளைய ஜெர்மனியின் பெரூசியன் அரசின் விருது 1917ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் 2ம் உலகப்போரில் ஜெர்மானியப் படை நோர்வேயின் மீது தாக்குதல் நடத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமையை எதிர்த்து இந்த விருதை திரு. ஓட்டோ சுவேதுருப் ஜெர்மனிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். பல தனியார் அமைப்புக்களினாலும் பல்கலைக்கழகங்களினாலும் இவர் கவுரவிக்கப்பட்டார். இவரது பிறந்த ஊரான சாண்ட்விகா நகரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



திரு. ரோல்ட் அமுண்ட்சன் (16 ஜூலை1872 -18 ஜூன் 1928) வரலாற்றில் தனக்கெனத் தனியிடத்தைப் பெறுபவர். இவரே உலக வரைபடத்தில் தென்துருவத்தை முதலில் அடைந்து ஆராய்ந்து அதனைப் பதிவு செய்தவர் என்ற பெருமையைப் பெறுகின்றார். இவரது தென் துருவத்திற்கானப் பயணத்திலும் ஃப்ராம் மரக்கலமே பயன்படுத்தப்பட்டது. இவர் 1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் நாள் தென்துருவத்தை அடைந்து சாதனை நிகழ்த்தினார். கடல் மார்க்கமாகவும் நில மார்க்கமாகவும் வடதுருவத்தை இவருக்கு முன்னரே திரு.நான்சன் சென்றடைந்து சாதனைப் படைத்திருந்தார். இவர் விமானம் வழிப்பயணித்து வடதுருவத்தை 1926ம் ஆண்டு சென்றடைந்தவர் என்ற சிறப்பும் பெறுகின்றார். முதலில் ஆர்க்டிக் பகுதியில் அதாவது வடமேற்குப் பகுதிப் பயணத்தை (1903-1906) நிகழ்த்தியவர் என்ற சிறப்பும் இவருக்குச் சேர்கின்றது. இத்தகைய ஒரு பயணத்தில் 1928ம் ஆண்டு ஈடுபட்டிருக்கும் போது காணாமல் போன தமது குழுவின் சிலரை கண்டுபிடிக்கச் சென்றபோது இவர் சென்ற அவசரக்கால பாதுகாப்பு விமான தொலைந்து போனதில் இவரும் காணாமல் போய்விட்டதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.


வட துருவம் என்பது உலக உருண்டையின் வடக்கின் கடைக்கோடியில் உள்ள புள்ளி. அதே போல தென்துருவம் என்பது உலக உருண்டையின் தெற்கே கடைக்கோடியில் உள்ள புள்ளி. இப்பகுதிகள் பனிக்கட்டிகளாலும் பனித்துகள்களாலும் சூழப்பட்டு கடுங்குளிருடன் ஆண்டு முழுக்க இருக்கும் நிலப்பகுதிகளாக அறியப்படுபவை. இவற்றிற்குப் பயணம் மேற்கொள்வது என்பது ஒரு அசாதாரணக் காரியமே. கடலில் பயணிக்கலாம் என்றால் நீர்மட்டம் பனிக்கட்டிகளால் இறுக்கமாகச் சூழப்பட்டு கப்பல் பயணத்தைத் தடுத்துவிடும் சூழல் உண்டு. ஆக இப்பகுதிகளில் ஆய்வு செய்யச் சொல்வோர் ஓரளவிற்குக் கடலில் கப்பல் வழி பயணித்து பின்னர் பனியில் சருக்கிச் செல்லும் ஸ்கீ வகை கருவிகளைப் பயன்படுத்திச் சென்றே ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இதே போன்று பிரத்தியேக விமானங்களின் வழி பயணம் மேற்கொள்வதும் இவ்வகைப் பயணங்களைச் சாத்தியப்படுத்துகின்றன.



வடதுருவங்களிலும் தென் துருவங்களிலும் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இன்று நமக்குக் கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் வடதுருவத்தில் இன்றைக்கு ஏறக்குறைய 4500 ஆண்டுகள் வாக்கிலேயே மனித இனம் இங்கு வாழ்ந்துள்ளது என்ற தகவல்கள் ஆராய்ச்சிகளின் வழி கிடைத்துள்ளன. குளிரான தட்பவெட்ப நிலையினால் இங்கு மக்கள் குடியேற்றம் என்பது மிகக் குறைவாகவே அமைந்திருக்கின்றது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது. இக்குளிரான தட்பவெட்ப சூழலிலும் இங்குள்ள சூழலுக்கேற்ற வகையில் தாவரங்களும் விலங்குகளும் இங்கு உயிர்வாழ்கின்றன. இவற்றைப்பற்றிய தொடர் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. இவ்வகை ஆய்வுகளில் குறிப்பாக ஸ்கேண்டினேவியன் நாடுகள் என நாம் குறிப்பிடும் நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகியவற்றோடு கனடா, வட அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

மனிதனின் தேடுதல் எல்லைகள் அற்றது. அத்தகைய ஒரு செயலே மனிதன் உலக உருண்டையின் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் பயணம் மேற்கொண்டு நிகழ்த்திய சாதனை. உலகின் அறியப்படாத விடயங்கள் பல இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அறிவதில் அறிவியல் முயற்சிகள் ஒவ்வொரு நாளும் முன்நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றது. அத்தகைய அறிவியல் சாதனைகளில் பங்கு எடுத்துக் கொண்ட ஃப்ராம் கப்பல் பாதுகாக்கப்படும் ஃப்ராம் அருங்காட்சியகம் உலகப் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது!

No comments:

Post a Comment