-முனைவர் சுபாஷிணி
ஏசு நாதருடன் துணையாக இருந்த 12 இறை தூதர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் செயிண்ட் தோமஸ் அவர்கள். செயிண்ட் தோமஸ் அன்றைய ஜெருசலத்தின் ரோமானியப் பேரரசிலிருந்து வெளியேறி ஆசிய நாடுகள் பக்கம் வந்ததாகவும், அவர் தமிழகத்தில் வந்திறங்கி வாழ்ந்து பின் மறைந்ததாகக் கிறித்துவ மதத்தினரால் நம்பப்படுகின்றது. இன்று நமக்குக் கிடைக்கின்ற பாரம்பரியச் செய்திகளின் தொடர்பில் பார்க்கும்போது, செயிண்ட் தோமஸ் அவர்கள், அன்று தென் இந்தியாவின் மிக முக்கிய மேற்குக் கடற்கரை துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்த முசிறிக்கு கி.பி.52ம் ஆண்டில் வந்ததாகவும், அங்கே ஏசு கிறித்துவின் பொன்மொழிகளைக் கூறி அங்கு வாழ்ந்த உள்ளூர் மக்களுக்கு ஞானஸ்நானம் அளித்ததாகவும் நம்பப்படுகின்றது. அப்படி அவரால் ஞானஸ்நானம் அளிக்கப்பட்டவர்கள் செயிண்ட் தோமஸ் கிறித்துவர்கள், அல்லது நஸ்ரானியர்கள் என அறியப்படுகின்றார்கள்.
இன்று நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின்படி அன்றைய தமிழகத்தில் வாழ்ந்து வந்த செயிண்ட் தோமஸ் சிலரால் கொலை செய்யப்பட்டதாக அறிகின்றோம். மக்களால் பரங்கிமலை என அழைக்கப்படும் செயிண்ட் தோமஸ் குன்றில் இன்று மிக அழகான தேவாலயம் ஒன்று கட்டப்பட்டிருப்பதைப் பலரும் அறிந்திருப்பார்கள். கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி எல்லோரும் சென்று பார்த்து வழிபட்டு வரும் தலமாக இந்தத் தேவாலயம் அமைந்திருக்கின்றது. தேவாலய அமைப்பு மட்டுமன்றி இந்தத் தேவாலயம் அமைந்திருக்கும் மலைப்பாங்கான சூழலும் இயற்கைக் காட்சிகளும் இந்த இடத்தின் சிறப்பினைக்கூட்டும் வகையில் உள்ளன.
இந்தத் தேவாலயத்தின் ஒரு பகுதியில் செயிண்ட் தோமஸ் அவர்கள் கொல்லப்பட்டதாக அறியப்படும் இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. செயிண்ட் தோமஸ் அவர்கள் அக்குறிப்பிட்ட இடத்தில் கொல்லப்பட்டார் என்றபோதிலும், அவரது உடல் புதைக்கப்பட்ட கல்லறை சென்னையில் மயிலாப்பூரில் இருக்கும் செயிண்ட் தோமஸ் தேவாலயத்தின் பின்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் இருக்கின்றது. பொது மக்களால் பேச்சு வழக்கில் ‘சாந்தோம் சர்ச்’ என அழைக்கப்படும் இந்தத் தேவாலயத்தின் சரியான பெயர் செயிண்ட் தோமஸ் பசிலிக்கா என்பதாகும். செயிண்ட் தோமஸ் என்பதே பேச்சு வழக்கில் மருவி சாந்தோம் என மாற்றம் பெற்றுவிட்டது.
கி.பி.16ம் நூற்றாண்டு முதல் எல்லா மதத்தைச் சார்ந்தோரும் வந்து வழிபட்டுச் செல்லும் வழிபாட்டுத்தலமாக பரங்கிமலை செயிண்ட் தோமஸ் குன்று இருந்து வருகின்றது. இன்று செயிண்ட் தோமஸ் கல்லறை இருக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட தேவாலம் கி.பி 16ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகும். இதனை போர்த்துக்கீசியர்கள் கட்டி அமைத்தார்கள். இந்த தேவாலயத்தின் பின்பகுதியில் ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சான்றுகள் பல மிக நேர்த்தியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள், இலத்தீன் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள் ஆகியனவற்றோடு கிறித்துவ வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் பல சின்னங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செயின்ட் தோமஸ் அவர்களின் இறைத்தன்மைகளை விளக்கும் சித்திரங்கள் இங்கு சேகரிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தமிழ்க் கல்வெட்டு ஒன்று கி.பி.12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்ரம சோழன் காலத்து கல்வெட்டாகும்.
இன்று நாம் காண்கின்ற செயிண்ட் தோமஸ் தேவாலயம் 19ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும். இதன் முந்தைய, அதாவது அது முதன் முதலில் போர்த்துக்கிசியர்களால் கட்டப்பட்டபோது இருந்த தோற்றத்தைக் காட்டும் ஓவியம் ஒன்றும் இங்குள்ளது.
முதல் தளத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், சின்னங்கள், புகைப்படங்கள், வரைப்படங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தளத்தின் கீழ்ப்பகுதியில், அதாவது நிலத்துக்கு அடியில் தான் செயின்ட் தோமஸ் அவர்களின் கல்லறை உள்ள பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் காண, படிகளில் இறங்கி இந்த அடித்தளப்பகுதிக்குச் செல்லவேண்டும். அங்கு இருபக்கமும் இந்தக் கல்லறைக்கு வந்து வழிபட்டு மரியாதைச் செலுத்திச் சென்ற முக்கியமானவர்களது புகைப்படங்கள் சுவரில் மாட்டப்பட்டுள்ளதைக் காணலாம். மரியாதைக்குரிய போப் 2ம் ஜோன் பவுல் அவர்கள் இங்குவந்து வழிபட்டுச் சென்றமையைக் குறிக்கும் புகைப்படங்களும் அவற்றில் அடங்கும். அதனைத் தாண்டி உள்ளே சென்றால் அங்கே செயிண்ட் தோமஸ் சமாதியைக் காணலாம்.
செயிண்ட் தோமஸ் தேவாலயம் 1956ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி சிறிய பசிலிக்கா என்ற நிலைக்கு மரியாதைக்குரிய போப் 2ம் ஜோன் பவுல் அவர்களால் உயர்த்தப்பட்டது. இந்த பசிலிக்காவின் கருவரையில் அன்னை மேரியின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. Our Lady of Mylapore என இந்த பசிலிக்காவின் புனித மேரியார் அழைக்கப்படுகின்றார்.
பொதுமக்கள் வந்தவண்ணம் இருக்கும் இந்த அருங்காட்சியகம் வரலாற்று ஆர்வலர்கள் வந்து சென்று காண ஒரு சிறந்த அருங்காட்சியகம் எனக் கூறலாம். சென்னையின் மத்தியிலேயே தேவாலயத்தின் பின் இப்படி ஓர் அருங்காட்சியகமா என என்னை வியக்கவைத்த அருங்காட்சியகம் இது. சென்னையிலே வசித்தாலும், மயிலாப்பூரின் வீதிகளில் தினம் தினம் சுற்றி வந்தாலும் கூட இத்தகைய ஓர் அருங்காட்சியகம் இருக்கின்றது எனப் பலர் அறியாமல் இருக்கலாம். உள்ளேசென்று பார்க்க இங்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.
No comments:
Post a Comment