Monday, April 24, 2017

85. சைப்ரஸ் தொல்லியல் அருங்காட்சியகம், நிக்கோசியா, சைப்ரஸ்


முனைவர் சுபாஷிணி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Published today in Vallamai E-zine http://www.vallamai.com/?p=76521


ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களும் சந்திக்கும் இடத்தில், மெடிட்டரேனியன் சமுத்திரம் சூழ அமைந்திருக்கும் ஒரு தீவு தான் சைப்ரஸ். இந்தக் காரணத்தினாலேயே பல பேரரசுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு நிலப்பகுதியாக இந்தத் தீவு அமைந்து, அதனால் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பேரரசுகளின் ஆதிக்கத்தை இந்தத் தீவு சந்திக்க நேர்ந்தது.

சைப்ரஸ் நாட்டின் வரலாறு என்பது தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் கி.மு.7500க்கும் முன்னரே இங்கு மனித குலம் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருப்பதாகச் சான்று அளிக்கின்றது. இங்குப் பரவலாக மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மனிதர்களின் நடமாட்டம் இங்கு கி.மு 10,000 வாக்கிலேயே இத்தீவின் Aetokremnos பகுதியில் வேட்டையாடிப் பிழைத்த மக்கள் இங்கு வாழ்ந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. நாடோடிகளாகத் திரிவதை விடுத்து கிராமங்களை அமைத்து மக்கள் வாழ்ந்ததற்கு இந்தப்பகுதியில் அறியப்பட்ட தொல்லியல் சுவடுகள் சான்றுகளாக இருக்கின்றன.

இங்கே மக்களால் உருவாக்கப்பட்ட, இன்றைக்கு ஏறக்குறைய 10,000 ஆண்டுகள் பழமையான கிணறுகள் இரண்டு இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. எட்டு மாத பூனை ஒன்றின் எலும்புக்கூடு ஒரு மனித எலும்புக்கூட்டுடன் இருக்கும் வகையில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் சைப்ரஸ் தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சமாதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பண்டைய எகிப்திய சடங்குகளுடன் இங்கே இறந்தோருக்கான வழிபாடுகள் நிகழ்ந்தமையை விவரிப்பதாக உள்ளன. சைப்ரஸின் மேற்குப் பகுதியில் உள்ள Khirokitia என்ற நகரம் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் பழம் பெருமை கொண்ட நகரமாகத் திகழ்கின்றது. இப்பகுதி கி.மு 6500 ஆண்டு பழமையான நகர் என்ற பெருமை கொண்டதாக அமைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இரும்புக்காலத்தில் கிரேக்கத்திலிருந்து வந்தவர்கள் சைப்ரஸில் மிகுதியாகக் குடியேறியிருக்கின்றனர். மைஸேனியன் கிரேக்க (Mycenaen Greek) வணிகர்கள் குழு இங்கு கி.மு 1400 வாக்கில் வந்து வணிகத்தில் ஈடுபட்டனர் என்பதோடு இங்கேயே வந்து தங்கி வாழ்விடங்களை அமைத்தனர். அதன் பின்னர் கி.மு. 1100 லிருந்து 1050 வரை மிக அதிக அளவிலான கிரேக்க வணிகர்கள் இங்கே குழுக்களாக வந்து குடியேறினர். இதுவே இங்கு நிகழ்ந்த மிகப்பெரிய குடியேற்றம் எனலாம். கிரேக்க புராணங்களில் வருகின்ற முக்கிய கதாபாத்திரங்கள் பிறந்த ஊராகவும் சைப்ரஸ் திகழ்கின்றது. அப்ரோடைட் (Aphrodite) , அடோனிஸ் (Adonis), சினிராஸ் மன்னர் (King Cinyras), டொய்சர் (Teucer), மற்றும் பிமேலியன் (Pygmalion) ஆகிய கடவுள்களின் பிறப்பு இங்கே நிகழ்ந்ததாகக் கிரேக்க புராணங்கள் கூறும்.



மிகப்பழமை வாய்ந்த அசிரிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் சைப்ரஸ் கி.மு.708ல் இருந்தது. பின்னர் எகிப்தியர்களாலும் ஆட்சி செய்யப்பட்டு, பின்னர் கி.மு.545ல் பெர்சிய மன்னர்களின் ஆட்சிக்குக் கீழ் சைப்ரஸ் இருந்தது. பின்னர் வெவ்வேறு மன்னர்களின் கைப்பிடிக்குள் வந்து கி.மு333ல் மாமன்னன் அலெக்ஸாண்டரால் கைப்பற்றப்பட்டது .

அத்தோடு நிற்கவில்லை.

தொடர்ந்து ரோமானியர்களால், துருக்கியர்களால், ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு இதன் ஆட்சி என்பது பலமுறை கைமாறிய ஒரு நாடாக சைப்ரஸ் இருந்துள்ளது. 1960ம் ஆண்டில் இங்கிலாந்து, கிரேக்கம், துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்ததின் அடிப்படையில் சைப்ரஸ் சுதந்திரம் அடைந்தது. ஆனாலும் உள்நாட்டில் அமைதி நிலவவில்லை. 77% கிரேக்கர்களும், 18 % துருக்கியர்களும் 5% ஏனையோரும் என இருந்த நிலையில், தொடர்ந்து பிரிவினைக்கானப் பல முயற்சிகள் நடந்து கொண்டேயிருந்தன. கிரேக்கர்கள் அதிகம் வாழும் மேற்குப் பகுதியையும் கிழக்கில் துருக்கியர்கள் வாழும் கிழக்குப் பகுதியையும் பிரிக்கும் சுவர்களும் முள் கம்பிகளும் அமைக்கப்பட்டன.
இன்று சைப்ரஸ் தீவு, ஒரு பகுதியில் அதாவது மேற்குப் பகுதியில் அதிகமான கிரேக்கர்களும், மற்றொரு பகுதியான அதாவது கிழக்குப் பகுதியில் துருக்கியர்கள் அதிகமாக வசிக்கும் வகையிலும் அமைந்திருக்கின்றது. நான் 2005ம் ஆண்டு சைப்ரஸ் சென்றிருந்த வேளையில் பெருமளவு கிரேக்கர்கள் வாழும் பகுதியில் இருக்க வேண்டிய சூழல் அமைந்தாலும், துருக்கியர்கள் வாழும் பகுதியில் அமைந்திருக்கும் எல்லைப்பகுதியையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்தது. முள் வேலிகள் போட்ட நீண்ட மதில் சுவர்கள் இரு பகுதிகளையும் பிரித்திருப்பதைக் காணமுடிந்தது.


சைரப்ஸின் வரலாற்றை விவரிக்கும் மிக முக்கியமான ஒரு அருங்காட்சியகமே சைப்ரஸ் அருங்காட்சியகம். 1882ம் ஆண்டில் இது கட்டப்பட்டது. சைப்ரஸில் நிகழ்த்தப்பட்ட பல்வேற்று தொல்லியல் ஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் அடங்கிய மிக முக்கியமான வரலாற்றுக் கூடம் இது எனலாம். சைப்ரசின் தலைநகரான நிக்கோசியாவில் இது அமைந்திருக்கின்றது. சைப்ரஸ் அருங்காட்சியகம் என்றும் சைப்ரஸ் தொல்பொருள் அருங்காட்சியகம் என்றும் இரு பெயர்களில் இந்த அருங்காட்சியகம் அழைக்கப்படுகின்றது.


சுவீடன் நாட்டு தொல்லியல் ஆய்வாளர்களுடன் இணைந்து 1927 முதல் 1931 வரை சைப்ரஸின் சில பண்டைய நகர்களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகளில் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்துள்ளன. கட்டிடத்திற்குள் உள்ள 14 பெரிய அறைகளுக்குள் மண்பாண்டங்கள், எலும்புக்கூடுகள், தங்க ஆபரணங்கள், இரும்புக் கருவிகள், சிற்பங்கள், கிரேக்க தெய்வங்களின் சிற்பங்கள், இறந்தோருக்கானச் சடங்குகள் செய்து இறந்தவர் உடலை வைக்கும் பானைகள், என பலவாரியான அரும்பொருட்கள் இங்குள்ளன. ஒரு அறையில் நூலகமும் அமைந்திருக்கின்றது.

பொதுவாக திங்கட்கிழமைகளில் இந்த அருங்காட்சியகம் மட்டுமல்ல, எல்லா அருங்காட்சியகங்களும் மூடப்பட்டிருக்கும். திங்கட்கிழமை தவிர்த்த ஏனைய நாட்களில் இந்த அருங்காட்சியகம் வருகையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.

சைப்ரஸ் நாட்டின் பண்டைய வரலாற்றைக் கால வாரியாகப் பிரித்து அறிந்து கொள்ள பல தகவல்களை ஒரே இடத்தில் வழங்கும் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டிடமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது.
குறிப்பு:Cyprus, Plurigraf.

2 comments:

  1. மேடம் வணக்கம், தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி. பூம்புகார் குமரிக்கண்டம் பற்றிய மேலும் கடலுக்குள் மூழ்கிய நகரங்களின் குறிப்புகளோ அதைப்ற்றி விவரமாக அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புகள் தங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாமா.

    ReplyDelete
  2. பகிர்ந்து கொள்கிறேன்

    ReplyDelete