Monday, October 31, 2016

75. வதை அருங்காட்சியகம், ப்ராக், செக்

http://www.vallamai.com/?p=72970

முனைவர்.சுபாஷிணி

உலகமெங்கும் ஒரு அரசின் கருத்துக்கு எதிர் கருத்து ஒன்று எழும்போது, மாற்றுக் கருத்துகளை உரக்கப் பேசுவோர் ஏதாவது ஒரு வகையில் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது என்பது காலம் காலமாக நடந்திருக்கின்றது. உலகெங்கிலும் இவ்வகை நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் இத்தகைய வதைகள் எவ்வாறு நிகழ்த்தப்பட்டன? அவற்றை நிகழ்த்துவதற்கு உபயோகித்த வதைக்கும் கருவிகள் என்பன பற்றிய செய்திகளை ஆசிய நாடுகளில் பொதுவாகக் காணமுடிவதில்லை, தாய்லாந்து போன்ற ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர.

ஆனால் ஐரோப்பாவில் வதை முகாம்கள் பற்றியும், வதை செய்யும்போது பயன்படுத்திய கருவிகள், வதை செய்யப்பட்ட முறைகள் பற்றிய ஆவணங்கள் என்பன சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தனது தேசத்திலேயே தங்கள் மூதாதையர் நிகழ்த்திய கொடுமைகளை இன்று மனம் திறந்து பேசும் சிந்தனைப்போக்கு ஐரோப்பாவில் விரிவாக வந்துவிட்டமைக்கு இது ஒரு சான்று என்றே நினைக்கின்றேன். ஆசிய நாடுகளிலோ, தாமும் தம் மூதாதையரும் என்றுமே நன்மைகளை மட்டுமே செய்தவர்கள் என்றும், குறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற சிந்தனையும், பொதுவாகவே எண்ண ஓட்டத்தில் நிறைந்திருக்கும் தன்மையைப் பார்க்கின்றோம். ஆக, தங்கள் மூதாதையர்களின் நிறைகளை மட்டுமே பேசத்துணியும் வரலாற்று ஆர்வலர்களாகவே ஆசிய நாடுகளின் மக்கள் சிந்தனைப்போக்கு இருக்கின்றது என்றே நினைக்கத்தோன்றுகிறது..

ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளின் சுவடுகளாவன பல்வேறு வகையில் ஆவணப்படுத்தப்படுதல் என்பது நடந்துள்ளது. பொதுமக்கள், அரசியல் எதிரிகள், விஞ்ஞானிகள், மாற்றுச் சிந்தனையும் மாற்றுக் கருத்துகளையும் பிரச்சாரம் செய்பவர்கள், தெய்வீக சக்தியைக் கொண்டுள்ளதாகச் சொல்லிக் கொள்பவர்கள் போன்றோர் அரச சக்திகளாலும் அரசு ஆதரவு பெற்றோராலும் கண்டுபிடிக்கப்பட்டு “சமுதாயச் சீரழிவைத்தடுத்தல்” என்று முத்திரைக்குத்தப்பட்டு அத்தகையோர் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வுகள் ஏராளம் நடந்திருக்கின்றன என்பதை இவ்வகை அருங்காட்சியகங்களில் நாம் காண்கின்ற ஆவணங்களின் வழி அறிய முடிகின்றது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், பெல்ஜியம் நாட்டின் ப்ரூகஸ், ஜெர்மனியின் ரூடர்ஷைம் அம் ரைன், ரோத்தன்பர்க், இத்தாலியின் சான் கிமிக்னானோ போன்றவை அவ்வகையில் பிரசித்தி பெற்றவை. அந்த வரிசையில் இடம்பெறும் ஒன்றுதான் செக் நாட்டின் தலைநகரான ப்ராகில் இருக்கின்ற வதை அருங்காட்சியகம்.

ப்ராக் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதி கட்டிடத்தின் வரிசையான கடைகளுக்கு இடையே இந்த வதை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. வதைப்பது என்றாலே அச்சமூட்டும் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வுதானே. ஆக முகப்பிலும் வரவேற்பு பகுதியிலும் நம்மை வரவேற்பனவாக வதை செய்யப் பயன்படுத்தும் சில கருவிகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.



வதைக்கருவிகள் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு என மாறுபாட்டுடன் பயன்படுத்தினாலும் ஒட்டு மொத்தத்தில் ஒரு மனிதரைக் கொல்வதற்கு முன்னர் அவர் எவ்வளவு வதைகளை அனுபவிக்க முடியுமோ அந்த அளவிற்குக் கொடுமை செய்து கொல்வது என்பது வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒவ்வொரு வகை வதைக்கும் என பிரத்தியேகக் கருவிகளைத் தயாரித்து வதை செய்து கொலைகளை நிகழ்த்தியிருக்கின்றனர் என்பதையும் குறிப்புகளின் வழி அறியமுடிகின்றது.

உதாரணமாக மரத்தை வெட்ட தச்சர்கள் பயன்படுத்தும் ரம்பம் போன்ற ஒரு கருவியைக் கொண்டு மனிதனின் உடலை இரு வேறு பகுதிகளாக வெட்டுவதோ அல்லது சிறிது சிறிதாக மனிதரின் உடலின் பாகங்களை வெட்டி வதைத்துக் கொல்வது என்பது வழக்கில் இருந்திருக்கின்றது.



இரும்பு ஆணிகள் பொருத்திய நாற்காலி என்பது ஒரு வகை வதைக்கருவிதான். ஒரு ஆணி நம் உடலில் பட்டாலே எத்தகைய உடல் வேதனை ஏற்படும் என்பதை நாம் அறிவோம். ஆனால் முழுவதும் ஆணிகள் பொருத்தப்பட்ட ஒரு நாற்காலியில் தண்டனைப்பெறுபவரை உட்கார வைத்து கயிற்றினால் கட்டி சிறிது சிறிதாக இறுக்கி வதைத்துக் கொல்வது என்பதை பண்டைய ஐரோப்பாவில் நிகழ்த்தியிருக்கின்றனர். இப்படி வதைக்கும் போது இந்தத் தண்டனை மணிக்கணக்கில் நீண்ட நேரம் நிகழ்த்தப்படுமாம். உடலில் இரத்தம் வெளியேறி மனிதர்கள் இறந்து போவது ஒருவகை என்றால் ஒரு சிலரை அச்சமூட்டும் வகையில் மட்டுமே இந்த இரும்பு ஆணி நாற்காலியை பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதையும் அறிய முடிகின்றது.



இப்படி ஒவ்வொரு கருவிக்கும் அதனை எவ்வாறு பயன்படுத்தினார்கள். எப்படி தண்டனை கொடுத்தார்கள் என்பதை அறியும் போது மனம் அச்சத்தால் உறைந்து போவதை தடுக்க முடிவதில்லை. ஒரு மனிதர் தன் சக மனிதரை எவ்வாறு வதைக்க மனம் வருகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது.

பொதுவாகத் தண்டனை வழங்குவது என்பது ஒருபுறமிருக்க, போர்க்காலங்களில் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்படுவோர் எதிரி நாட்டு படையினரால் வதைக்கப்படுவது என்பது எல்லா நாடுகளின் வரலாற்றிலும் காணக்கூடிய ஒன்றே. கற்காலத்தில் மட்டும்தான் இந்த நிலை என்பதல்ல. இன்றும் கூட இந்த நிலை தொடர்கின்றது.



ப்ராக்கில் உள்ள இந்த வதை அருங்காட்சியகம் தொடங்குவது கீழ்த் தளத்தில். பாதையைக் குறுகலாக அமைத்து ஆங்காங்கே சில மாதிரி வடிவங்களைச் செய்து வைத்திருக்கின்றார்கள். வதை செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் காட்சிக்கு இருப்பதோடு அவற்றிற்கான விளக்கங்களும் செக், டோய்ச், ஆங்கிலம், பிரென்சு ஆகிய நான்கு மொழிகளில் வழங்கப்பட்டுள்ளன. ப்ராக் செல்பவர்கள் இந்த அருங்காட்சியகம் சென்று நேரில் பார்த்து பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். அருங்காட்சியகத்தின் முகவரி :
Křižovnické nám. 1, 111 00 Praha 1-Staré Město, Czech Republic


சரி, அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்தைப் பற்றிய தகவல்களைத் தருகின்றேன். தொடர்ந்து வாருங்கள்!

No comments:

Post a Comment