Thursday, October 15, 2015

50. அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (3(

முனைவர்.சுபாஷிணி

http://www.vallamai.com/?p=62531​

கெடா அரிசி அருங்காட்சியகம் மிக விரிவான ஒரு கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. நுழைவாயிலில் நுழைந்தவுடன் ஏறக்குறைய 2 மீட்டர் உயரம் கொண்ட நெல்லின் உருவ வடிவமைப்பை முகப்பில் காண்போம். அதனைத் தொடர்ந்து வளைந்து மேல் செல்லும் படிகளில் ஏறி அடுத்தடுத்த தளங்களில் உலகில் விளையக் கூடிய பல் வேறு நெல் வகைகளைப் பார்த்து பரிச்சயம் செய்து கொள்ளலாம்.



உலக நாடுகளில் எங்கெல்லாம் நெல் விளைகின்றதோ அங்கெல்லாம் கிடைக்கின்ற நெல்வகைகளை எடுத்து வந்து அதன் வகைப்பெயர் சேர்க்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இங்கே காணக்கிடைக்கும் அரிசி வகைகளை எடுத்துக் கொண்டால் நேபாளம், நியூசிலாந்து, ஸ்பெயின் தென் அமெரிக்க நாடான உருகுவே., ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து ஆகிய நாடுகளின் நெல்வகைகளைக் காணலாம். அது மட்டுமல்ல.. இத்தாலி, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, லாவோஸ், மொரோக்கோ, ஆப்கானிஸ்தான், தான்சானியா, நார்வே, புருணை, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் அரிசி வகைகளையும் இங்கு காணமுடிகிறது.



மலேசிய நாடு நெல் வயல்கள் சூழ்ந்த நாடு. அதிலும் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் கெடா மாநிலம் நெல் களஞ்சியம் என சிறப்புடன் அழைக்கப்படும் மாநிலம். ஆக மலேசிய நெல் வகைகள் இந்த அருங்காட்சியகத்தில் இல்லாமல் போகுமா? ஆம். இங்கே மலேசியாவில் விளைவிக்கப்படும் ஏறக்குறைய 60 நெல் வகைகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறியும் போது வியப்பாக உள்ளது அல்லவா?

அரிசி என்றாலே பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, பாசுமதி அரிசி, கருப்பு அரிசி, குத்தல் அரிசி என்று மட்டுமே அறிந்திருக்கும் பலருக்கு இந்த அருங்காட்சியகம் உலகில் விளைகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட நெல்வகைகளை அறிமுகம் செய்து வைக்கின்றது என்பது வியப்பளிக்கும் ஒன்றே.



இந்த வெவ்வேறு வகை நெல் விதைகளைப் பார்த்து அடுத்த தளத்திற்குச் சென்றால் அங்கே நெல்வயல், உழவுத் தொழில் ஆகியனவற்றை விவரிக்கும் செயற்கைக் காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவை கிராமத்து இயற்கை காட்சியைப் படம் பிடித்தார் போல நம் முன்னே உலவ விடும் முயற்சிகளாக அமைந்திருக்கின்றன. அதனை அடுத்தார் போல அரிசியினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு வந்து சேர்வோம்.

இந்த அருங்காட்சியகத்தை முழுதுமாகச் சுற்றிப் பார்த்து விட்டு வெறுமனே சென்று விடாமல் அங்கு கட்டிடத்திலேயே அமைந்துள்ள உணவு விடுதியிலும் சாப்பிட்டு விட்டுச் செல்வது வருகையாளர்களுக்கு நல்லதொரு அனுபவமாக இருக்கும்.


மலேசியா செல்பவர்கள் அதிலும் குறிப்பாக கெடா மாநிலம் செல்பவர்கள் இந்த அருங்காட்சியகத்திற்குக் கட்டாயம் சென்று வரவேண்டும். இதன் முகவரி

Muzium Padi
Lot 798 Jalan Gunung Keriang, Mukim Gunung Keriang
06570 Alor Setar, Kedah Darul Aman
Tel: 04 735 1315

​இந்த அருங்காட்சியகம் தினமும் காலை 9 மனி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். ​

​2004ம் ஆண்டு 12ம் தேதி அக்டோபர் மாதம் இந்த அருங்காட்சிகம் மாட்சிமை தங்கிய கெடா மாநில சுல்தான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. உலகில் உள்ள ஏனைய மூன்று அரிசி அருங்காட்சியகங்கள் ஜப்பான், ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளன. அந்த வரிசையில் நான்காவது அரிசி அருங்காட்சியம் என்ற சிறப்புடன் இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது.

asuகெடா மானிலத்தின் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்தது. கெடா மாநில மலாய் மக்களின் உடை மிக எளிமையான தன்மை கொண்டது. இந்த அருங்காட்சியகம் வருகின்ற பொது மக்கள் கெடா மாநில ஆண்களும் பெண்களும் அணியும் ஆடைகளை தாங்களும் அணிந்து பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டால் அதற்கும் ஒரு வழி இருக்கின்றது. இங்கே கெடா மாநில மக்களின் எளிய ஆடை அலங்காரத்தைக் காட்டும் உருவ அட்டைவைக்கப்பட்டுள்ளன. அதற்குள் வருகையாளர்கள் நம் முகத்தைப் பதித்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.



ஏறக்குறைய 2 மணி நேரம் இந்த அருங்காட்சியக வளாகத்தில் கழித்தேன். 2011ம் ஆண்டில் எனது மலேசிய பயணத்தில் இப்பகுதிக்குச் சென்றிருந்த போது இந்த அருங்காட்சியகத்தைப் பார்த்து வரவேண்டும் என்று சென்ற முயற்சியும் இங்கு நான் கண்டு களித்த காட்சிகளும் மனதில் மிகப் பசுமையாகவே உள்ளன.

சரி. இங்கிருந்து புறப்படுவோம். அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். காத்திருக்கவும்!

தொடருவோம்​

No comments:

Post a Comment