Saturday, August 15, 2015

44. இசைக்கருவிகள் அருங்காட்சியகம், ப்ரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்

ஜெர்மானிய அகழாய்வுக் குழுவினர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் தொடர்ந்து மேற்கொண்ட அகழாய்வுப் பணிகளில் 30,000 முதல் 37,000 ஆண்டுகள் வரை பழமையானது எனக் கணக்கிடப்படும் மிகப் பெரிய அளவிலான இசைக் கருவிகளைக் கண்டெடுத்தனர். இவை எலும்புகளால் செய்யப்பட்ட குழல் போன்ற இசைக்கருவி வகை. இவையே இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பழமையான இசைக்கருவிகள் என நாம் கணக்கிடலாம்.

உலகின் எல்லா நாடுகளில் வாழும் மக்களும் தங்கள் இனக்குழுக்களில் நாகரிகம் படிப்படியாக வளரும் காலம் தொடங்கி தங்கள் பண்பாட்டு அம்சங்களில் ஒன்றாக இசை, இசைக்கருவிகள், நடனம் என்ற பண்பாட்டுக் கூறுகளை வளர்த்து வந்தனர் என்பதை வரலாற்று நூல்களையும் தகவல் களஞ்சியங்களையும் நோக்கும் போது உணர முடிகின்றது.

நம்மில் பலருக்கு நாம் பார்த்து பழகிய அல்லது பிறர் வாசிக்கக் கேட்டு அறிமுகமான சில இசைக்கருவிகளே நினைவிருக்க சாத்தியமுண்டு. ஒரு சிலர் தமது இனக்குழுவில் அதிகம் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளை மட்டும் அறிந்திருப்பர். ஒரு சில அண்டை நாட்டு அல்லது தூர தேசத்து மக்கள் பயன்படுத்தும் கருவிகளைப் பற்றி போதிய அறிமுகம் கிட்டாத சூழலிலும் பலர் இருப்பர். ஆனால் தகவல் தொழில்நுட்பம் மிகத் துரிதமாக வளர்ந்து விட்ட இக்காலகட்டத்தில் உலக மக்கள் பல்வேறு நாடுகளில் தங்கள் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக தனித்துவம் வாய்ந்த இசைக்கருவிகளை மீட்டும் வாய்ப்பை, அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே பார்த்து அறிந்து கொள்ளவும் கேட்டு மகிழவும் யூடியூப், வலைப்பக்கங்கள், ஒலிக்கோப்புக்கள் ஆகியன உதவுகின்றன என்பதை மறுக்க முடியாது.

இசைக்கருவிகளுக்காக அருக்காட்சியகங்களும் உள்ளன. ஜெர்மனியில் லைப்ஸிக், பெர்லின் ஆகிய நகரங்களில் இசைக்கருவி அருங்காட்சியகங்கள் உள்ளன. இசைக்கருவிகளுக்காக அருங்காட்சியகங்கள் அமைத்திருக்கும் ஏனைய நாடுகள் என்று சொல்வதென்றால் உதாரணமாக ஸ்வீடன், நெதர்லாந்து அமெரிக்கா, ப்ரான்ஸ் ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம். அந்த வகையில் பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸ் நகரத்தில் இருக்கும் இசைக்கருவி அருங்காட்சியகத்தைப் பற்றியதே இன்றைய பதிவு,




இந்த இசைக்கருவி அருங்காட்சியகம் தொடங்கிய கதையே நமக்கு சுவாரசியமான தகவலாக இருக்கின்றது. ஆரம்பத்தில் பெல்ஜியம் அரச குடும்பத்திற்குச் சொந்தமானதாக இருந்தது இந்த இசைக்கருவிகளின் காட்சிக் கூடம். இசையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு அறிமுகம் அளிப்பதே இதன் செயல்பாடுகளின் மைய நோக்கமாக அமைந்திருந்தது. இதன் தொடக்க காலத்தில் இந்தஅருங்காட்சியகத்தின் சேகரிப்பில் இருந்தவை இந்திய மன்னர் சௌரிந்த்ரோ மோகுன் தாகூர் பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்டுக்கு 1876ம் ஆண்டில் அளித்த 100 இந்திய இசைக்கருவிகளும் பெல்ஜியத்தின் இசை வல்லுநர் ஃப்ரான்ஸுவா ஜோசப் ஃபெட்டிஸ் அவர்களிடமிருந்து அரச குடும்பம் விலைக்கு வாங்கிய இசைக்கருவிகளும் ஆகும்.




படிப்படியாக இந்த கண்காட்சிக்கூடத்தின் சேகரிப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. 1924ம் ஆண்டில் 3,666 இசைக்கருவிகள் இந்த காட்சிக் கூடத்தில் சேகரிப்பில் இருந்தன. இப்போது இந்த அருங்காட்சியகத்தில் 7000க்கும் அதிகமான இசைக்கருவிகள் வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளும் போது ஆச்சரியம் மேலிடுகின்றது அல்லவா?



ஆறு மாடிகளில் ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு வகையான பிரிவுகளில் என்ற வகையில் கண்காட்சி அமைப்பு அமைந்துள்ளது.



பழமையான சமூகங்களின் இசைக்கருவிகள். தற்காலப் பயன்பாட்டில் அதிகம் இருக்கும் இசைக்கருவிகள், சீன, இந்திய, இந்தோனேசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க பழங்குடிகள், ஐரோப்பிய தேசத்தின் பல்வேறு இனக் குழுக்கள், அரேபிய, ரஷ்ய என உலகின் எல்லா மூலைகளிலும் பழங்காலம் தொட்டு இன்று வரை உருவாக்கப்பட்ட இசைக்கருவிகள் இந்த சேகரிப்பில் அடங்குகின்றன.



நான் இந்த அருங்காட்சியகம் சென்ற போது மதிய வேளை. ஏறக்குறைய 90 நிமிடங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருந்தேன். எல்லா இசைக்கருவிகளையும் பார்த்தும் அதன் இசை ஒலிப்பதிவுகளைக் கேட்டும் ரசிக்க இந்த நேரம் நிச்சயம் போதாது என்பதை அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறிய போது உணர்ந்தேன். இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சில இசைக்கருவிகளைப்பற்றி அடுத்த பதிவில் தொடர்கின்றேன். அதுவரை எந்த இசைக்கருவியை நீங்கள் வாசிக்க விரும்புகின்றீர்கள் என யோசித்துக் கொண்டிருங்கள்!

தொடரும்

No comments:

Post a Comment