Monday, September 9, 2013

​5. இஸ்லாமிய கலைப்பண்பாட்டு சேகரிப்புக்கள், பெர்காமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி 

இன்னமும் நாம் பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகத்தின் உள்ளே தான் இருக்கின்றோம். 5000 ஆண்டு பழமை மிக்க ஊருக் நகர் பற்றி விளக்கும் கண்காட்சியைப் பார்த்த நாம் அடுத்த பகுதிக்குச் செல்வோமா?

பெர்காமோன் அருங்காட்சியகத்தின் சிறப்பினைப் பற்றிக் கூறும் முதல் பகுதியிலேயே இந்த அருங்காட்சியகம் இன்றைய ஐக்கிய அரபு நாடுகள் இருக்கின்ற பகுதிகளிலிருந்து சேகரிப்பட்ட இஸ்லாமிய கலைப்பொருள் கண்காட்சியையும் கொண்டிருக்கும் விஷயத்தைச் சிறிது குறிப்பிட்டிருந்தேன். இந்த இஸ்லாமிய கலைப் பொருட்கள், அவற்றின் தனிச் சிறப்புக்கள் யாவை என்பதனைப் பற்றியும் விளக்க வேண்டியது அவசியம் என நான் நினைப்பதால் இப்பதிவில் அதனைப் பற்றி சில விவரங்கள் பகிர்ந்து கொள்கிறேன்.

பெர்லின் அருங்காட்சியகத் தீவு (Museum Insel) பகுதியில் முதலில் தென்படுவது ‘போட அருங்காட்சியம்’. அதனைத் தொடர்ந்தார் போல பெர்காமோன் அருங்காட்சியகம் கட்டப்பட்டிருக்கின்றது. வரலாற்றை நோக்கினால் இப்பகுதியில் முதலில் அமைந்திருந்த கட்டிடம் போட அருங்காட்சியகம் மட்டும் தான். இங்கு தான் முதன் முதலில் பல்வேறு நாடுகளிலிருந்து பெர்லினில் அருங்காட்சியகத்திற்காகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அதில் இஸ்லாமிய கலைப்பொருட்களும் அடங்கும் . வில்ஹெல்ம் போஃன் போட (Wilhelm von Bode) இந்த அருங்காட்சியகத்தில் இஸ்லாமிய கலைப்பொருட்களுக்கானச் சிறப்புப் பகுதியை ஏற்பாடு செய்திருந்தார். அப்பொழுது அந்தச் சேகரிப்பில் இடம்பெற்றிருந்த கலைப்பொருட்கள் அனைத்திலும் மிகப் புகழ் பெற்றதும் அளவில் பெரியதுமாக அமைந்தது மஷாட்டா அரண்மணை சுவர்ப்பகுதி தான். இது இன்றைய சிரியாவிற்கும் ஜோர்டான் நாட்டிற்கும் இடையே அமைந்துள்ள ஒரு அரண்மணையின் சுவர் பகுதி. ஓட்டோமான் சுல்தான் அப்ஹுல் ஹமீட் (1842 – 1918) இந்த அரண்மனை சுவரை ஜெர்மானிய அரசுக்குப் பரிசாக வழங்கியிருந்தார். இந்த அரண்மனைச் சுவர் மட்டுமன்றி ஏனைய கலைபொருட்களையும் முறையாகக் காட்சிக்கு வைப்பதிலும் சிரமம் இருந்து வந்தது. 1932ம் ஆண்டு பெர்காமோன் அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டு பெர்காமோன் கோயிலுடன் அருங்காட்சியகம் அமைந்த போது இங்கு சில அறைகள் இஸ்லாமிய கலைப்பொருட்களின் காட்சிக்காகவும் ஒதுக்கப்பட்டன. அன்றிலிருந்து இஸ்லாமிய பண்பாடு மற்றும் கலைகளைச் சொல்லும் வெவ்வேறு காலகட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இங்கு தொடர்ந்து இணைக்கப்பட்டு இப்பொழுது ஈரான், ஈராக், சிரியா, இந்தியா, பாக்கிஸ்தான், ஸ்பெயின். லிபியா, எகிப்து, மொரோகோ, துனிசியா போன்ற நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் காட்சியில் அங்கம் வகிக்கின்றன.

இஸ்லாமிய கலை என்பது இஸ்லாமிய மதம் பரவிய எல்லா நாடுகளிலும் பரவியுள்ளதை இன்றும் நாம் காண்கின்றோம். மன்னர்களின் விருப்பத்தின் பெயரிலும் ஆணையின் படியும் இஸ்லாமிய அரசர்களின் ஆட்சியின் கட்டிடங்களாக, ஓவியங்களாக, கலைபொருட்கள் தனித்துவத்துடன் காட்சியளிப்பதைக் காண்கின்றோம். ஐக்கிய அரபு நாடுகள் மட்டுமன்றி இஸ்லாம் பரவிய ஸ்பெயின், இந்தியா, போன்ற நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள் இங்கிருக்கின்றன. உதாரணத்திற்காக இங்கு சேகரிப்பில் உள்ள குறிப்பிடத்தக்க கலைப்பொருட்களை அறிமுகம் செய்வது தகும் என நினைக்கிறேன்.


மஷாட்டா (Mshatta) அரண்மனை சுவர்.

பெர்காமோன் அருங்காட்சியகத்தில் இருக்கும் இஸ்லாமிய கலைப்பொருட்களிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்த காட்சிப்பொருள் இது என்றால் அது மிகையில்லை. இந்த அரண்மனை உடைந்தோ சிதிலப்பட்டோ அழிந்த ஒன்றல்ல. இன்றும் இருக்கும் ஒரு அரண்மனையே. ஜோர்டான் தலைநகர் அம்மானின் விமான நிலையத்திற்கு அருகாமையில் இருக்கின்றது இந்த அரண்மனை. 1903ம் ஆண்டு இந்த அரண்மனையின் ஒரு பக்க மதில் சுவரை அன்னாளைய ஓட்டோமான் சுல்தான் அப்ஹுல் ஹமீட் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்குத் தனது பரிசாக அனுப்பி வைத்தார். ஏன் அனுப்பி வைத்தார் அதற்கான காரணமென்ன என்பது தெரியவில்லை.ஆனால் பரிசாக இந்த மதில் சுவர் வந்தமை குறிப்பில் உள்ளது.

மஷாட்டா அரண்மனை இடதுபக்கச் சுவரின் முன்னே (ஆகஸ்ட் 2013)


இன்றைய சிரியா ஜோர்டான் ஆகிய நாடுகள் இருக்கும் பகுதி இன்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய மதத்திற்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக அமைந்திருந்தது. முகமது நபி இறந்த பிறகு இப்பகுதியில் உமையாட் பரம்பரையினர் அடுத்தடுத்து வரிசையாக ஆட்சி புரிந்து வந்தனர். அக்காலகட்டத்தில் அதாவது 8ம் நூற்றாண்டு வாக்கில் (கிபி 740) கட்டப்பட்டது இந்த அரண்மனை. ஏறக்குறைய 20,000 சதுர அடி பரப்பளவில் இந்த அரண்மனையைக் கட்டியிருக்கின்றனர். ஒரு வகையில் இதன் கட்டுமானம் தொடர்ந்து கொண்டேயிருந்திருக்கின்றன. அறைகளுக்கு மேல் அறைகள் என விரிவாகிக் கொண்டேயிருந்திருக்கின்றது இந்த அரண்மனை. அந்த அரண்மனையின் மதில் சுவரின் ஒரு சிறு பகுதியே இங்கிருப்பது.


மஷாட்டா அரண்மனை சுவரின் கலைவேலைப்பாடு (ஆகஸ்ட் 2013)


பெர்கமோன் அருங்காட்சியகத்தில் ஒரு அறை முழுமையையும் நிறப்பிய வண்ணம் இந்தச் சுவர் அமைந்திருக்கின்றது. அங்கு போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்து இந்த சுவர்ப்பகுதி பெர்லினுக்குப் பயணித்து வந்த தகவல்களை ஒலிப்பதிவின் வழி கேட்டு அறிந்து கொள்ளலாம். மிகப் பிரம்மாண்டமான மதிற் சுவரில் கலை வண்ணங்கள் நிரம்பியிருப்பதை நன்கு காணலாம். மயில், புலி, சிங்கம், பறவைகள், விலங்குகள் பூ வடிவங்கள், கொடிகள், போன்ற அமைப்புகளில் சுவர் அலங்காரம் செய்யப்பட்டு இந்த மதிற் சுவர் காட்சியளிக்கிறது. உதாரணமாக மேலுள்ள படத்தில் புலி நீர் அருந்துவதையும் அதிலிருந்து Tree of life அதாவது உயிர்களின் ஆதாரம் எனப்படும் தாவரங்கள் முளைத்து எழுவதும் உள்ளுரை உவமமாகக் காட்டப்படுகின்றது. Tree of life என்பது பண்டைய பெர்ஷிய தாக்கத்தின் வெளிப்பாடு.

எகிப்திய பொன் ஆபரணங்கள்
உடைந்த சுவர்களும் ஓவியங்களும் மட்டும் கலைப்பொருட்களல்ல. அக்காலத்தில் இஸ்லாமிய அரச குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஆபரணகங்களும் கூட இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியை நிறைத்திருக்கின்றன.


எகிப்திய காதணிகள் (ஆகஸ்ட் 2013)

இங்கு படத்தில் காணப்படுவது 7ம் அல்லது 8ம் நூற்றாண்டெனக் கணிக்கப்படும் ஒரு எகிப்திய அரச குடும்பத்தின் காதணிகள். இதனைப் போன்று மோதிரங்கள், கழுத்தணி, காலில் அணிந்து கொள்ளப்படும் ஆபரணங்கள் ஆகியவை இங்கு சேகரிப்பில் உள்ளன.

மோகுல் கம்பளம்

கம்பளங்களைப் பற்றி ஆசிய நாடுகளில் பொதுவாக அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. வரவேற்பு அறையை அலங்கரிக்க கம்பளங்களை வாங்கி அலங்கரிப்பது வழக்கம். ஆனால் வட ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகள் எங்கெங்கிலும் கம்பளங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன என்பது உண்மை.

ஒரு முறை துருக்கியில் பஸ் பயணம் செய்து கொண்டிருந்த போது சுற்றுலா வழிகாட்டி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த ஜெர்மானிய பயணிகளைப் பார்த்து ‘உங்கள் ஊரில் எப்படி மெர்ஸடிஸ் கார்கள் உங்கள் நாட்டிற்குப் பெருமையானதாகக் கருதுகின்றீர்களோ அதைப் போல எங்களுக்குக் கம்பளங்கள் நாட்டிற்குப் பெருமை அளிப்பன’ என்று விளக்கினார். கம்பளங்களின் விலை அதன் தரம் வேலைப்பாடு ஆகியவற்றைப் பொருத்து வித்தியாசப்படும் என்பதை கம்பளங்களை வாங்க முயற்சித்தவர்கள் அறிந்திருப்பர். மொரொக்கோ, துனிசியா, லிபியா, ஜோர்டான், எகிப்து, துருக்கி என இங்கெல்லாமே கம்பளங்கள் ஒரு குடும்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகக் கருதப்படுகின்றன.


மோகுல் பேரரசின் 17ம் நூற்றாண்டு கம்பளம் (ஆகஸ்ட் 2013)

1610ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் மோகுல் பேரரரசின் அரண்மனை கம்பளம் ஒன்று இங்கு சுவற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது பாக்கிஸ்தானின் லாகூரிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்ட கம்பளம்.

இது தவிர்த்து வட இந்தியாவிலிருந்து சேகரிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க இஸ்லாமிய கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக பேரரசர் ஜஹாங்கீர் தொழுது கொண்டிருப்பது போன்ற ஒரு ஓவியம் ஒன்றும் இந்த சேகரிப்பில் அடங்கும். கிபி 1610ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இது 33 x 19.3 cm அளவில் பூக்களில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காண்போர் கண்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இஸ்லாமிய கலைப்பொருட்களைப் பார்த்து ரசித்தோம். இனி முன்பக்கம் வந்து பெர்காமோன் கோயிலைச் சுற்றி வருவோமா?

தொடரும்…

No comments:

Post a Comment