Monday, September 30, 2013

8. வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லம் அருங்காட்சியகம், ஒட்டப்பிடாரம், தமிழகம், இந்தியா.


உலகின் வெவ்வேறு சில நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களைப் பார்த்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிப்பொருட்களின் தரங்களையும் பார்த்த அனுபவம் உள்ள எனக்கு இந்த அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருட்கள் ஒரு ஆரம்பப்பள்ளியில் இருக்கக்கூடிய தகவல் சுவரொட்டி போல இவை காட்சியளிப்பதைப் பார்த்த போது உண்மையில் மன வருத்தமே தோன்றியது. கண்காட்சி மேளாண்மை-பராமரிப்பு என்பது ஒரு தனிக் கலையாக உருவாகிவிட்ட காலம் இது.  புதிய தொழிற்நுட்பங்களின் துணை கொண்டு தரம் வாய்ந்த காசிப்பொருட்களை அமைக்கக்கூடிய வாய்ப்பு தற்கால நிலையில் ஒரு எட்டாக் கனியல்ல.  ஆனால் அதற்கான சிந்தனையும் முயற்சியும் இருக்கின்றதா என்பதே கேள்வி.  இங்கு பார்த்தபோது காட்சிப்பொருட்களின் தரம் என் எதிர்ப்பார்ப்பிற்கு ஏமாற்றத்தை அளித்தது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ஒரு வகையில் இந்தச் சுதந்திரப் போராட்ட தியாகியின் பிறந்த இல்லத்தை நிர்வகித்து அவரது ஞாபகம் மக்கள் மத்தியில் மறையாமல் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி கூற நினைக்கும் என் மனம் அதே வேளையில் இன்னமும் தகுந்த தரத்துடன் இக்காட்சிப் பொருட்களைத் தயார்படுத்தி வைத்தால் என்ன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

வ.உ.சி அவர்கள் தமிழக சரித்திரத்திலும் தமிழர் தம் வாழ்விலும் மறக்க முடியா அங்கம் வகிப்போரில் ஒருவர்.  அம்மனிதரின் நினைவாக இன்று காட்சியளிக்கும் இந்த நினைவு இல்லத்தில் உள்ள அறிக்கைகளைத் தரமான காகிதங்கள் கொண்டு தயாரித்து அதற்கு ப்ரேம் போட்டு பாதுகாத்து வைக்கலாம்.  அவரது நூல்களின் படிவங்களை ஒரு கண்ணாடி அலமாரியில் காட்சிக்கு வைக்கலாம். அவரது கையெழுத்தில் அமைந்த ஆவணங்களைப் பத்திரப்படுத்தி காட்சிக்கு வைக்கலாம்.  அவரது உருவப்படங்களைக் கொண்டு உருவாக்கிய ஒரு டாக்குமெண்டரி திரைப்படத்தை வருவோர் காணும் வகையில் ஒரு தொலைக்காட்சியைப் பொருத்தி அதில் ஒலிபரப்பலாம். அவரது சேவையைப் பாராட்டிப் பேசியோரின் பேச்சுக்களின் ஒலிப்பதிவுகளை அங்கே வருவோர் கேட்டு பயன்பெற ஏற்பாடு செய்யலாம்.  இவற்றை செய்வதற்கு மிக அதிகமான பொருளாதாரம் தேவை என்பதில்லை. மனித முயற்சி இருந்தால் தற்கால கணினி, அச்சு தொழிற்நுட்பம் வழங்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இவற்றை எல்லாம் சாதிக்கலாம்.  வருங்காலத்தில் இவ்வகையில் இந்த அருங்காட்சியகம் புதுப் பொலிவு பெற்றால் நான் மிக அகம் மகிழ்வேன்.

உலகில் நிகழ்ந்த,  நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைவதே தனி மனித முயற்சிகள் தாம்.  தனி மனிதரின் ஆன்ம பலமும்,  ஆய்வுத் திறமும் சிந்தனையும் முயற்சியுமே உலகில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.  அத்தகைய்ச் பண்புடன் கூடியவர்களில் ஒருவராகத்தான் நான் வ.உ.சி அவர்களை நான் காண்கின்றேன்.


வ.உ.சி  வள்ளியம்மாளுடன் (2010)

அருங்காட்சியகத்தில் நான் பார்த்து எடுத்துக் கொண்ட குறிப்புக்கள் வழி அவரது குடும்பத்தினர் பற்றிய சில தகவல்களை நான் அறிந்து கொண்டேன்.  வ.உ.சி அவர்களின் முதல் மனைவியார் வள்ளியம்மை.  வள்ளியம்மை பிறகு இறந்து விட இவருக்கு இரண்டாம் திருமணமும் நிகழ்ந்தது.


வ.உ.சி  இரண்டாம் துணைவியாருடன்(2010)

வள்ளியம்மையுடனும் பிறகு அவரது மறைவுக்குப் பிறகு திருமணம் முடித்த இரண்டாம் மனைவியுடன்  இருப்பது போன்ற மூன்று படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.  இவை அக்கால சூழலில் செல்வந்தர்கள் வீட்டு ஆண் பெண்களின் ஆடை அலங்காரத் தன்மையை வெளிக்காட்டும் சிறந்த ஆவணங்கள்.  வணிக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று வக்கீலாகத் தொழில் புரிந்த சிதம்பரனாரின் மேன்மை பண்புகளை வெளிக்காட்டும் மிடுக்கான தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பதை இப்படங்களில் காண முடிகின்றது.


இறுதி ஊர்வலம் (2010)

சிதம்பரனார் நினைவு மண்டப அருங்காட்சியகத்தில் அவரது மறைவுக்குப் பின் அவருக்கு நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் உள்ளது.  அவரது அனைத்து சேவைகளையும் தெரிந்து அவரது இல்லத்திலேயே இருந்து உணர்ந்து இப்புகைப்படத்தைப் பார்க்கும் போது மனம் கலக்கம் கொள்வதை தடுக்கமுடியவில்லை.  இந்த இறுதி யாத்திரை புகைப்படத்தில் இவரது மகன்கள் வ.உ.சி. ஆறுமுகம், வ.உ.சி. சுப்பிரமணியம், வ.உ.சி. வாலேஸ்வரன்  ஆகியோர் இருப்பதாக இப்படத்தோடு உள்ள குறிப்பில் உள்ளது. இவர்களோடு இவரது நண்பர்கள் பெ.கந்தசாமி பிள்ளை, மாசிலாமணிப்பிள்ளை, பாபா ஜான் ஆகியோரும் இருப்பதாகவும் இந்தக் குறிப்பில் உள்ளது.

வ.உ.சி.  ஆங்கில ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடந்த மக்களின் சிந்தனையில் புத்துணர்ச்சியை ஊட்டியவர் என்பது மட்டும் அவரது பண்பு நலனுக்கு மதிப்பளிக்கும் ஒன்றாக அமைந்து விடவில்லை. அவரது தத்துவ ஞான விசாரணை,  தமிழ்க்கல்வி,  ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக்கத்திற்கு தமிழ் நூற்களைப் புதிய வடிவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பு ஆகியவை அவரைப் பற்றிய நம் சிந்தனையை மென்மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதாக அமைகின்றது.  வ.உ.சி அவர்கள் தமிழுக்கு நல்கிய தம் இலக்கியப் பங்களிப்பையும் இனி காண்போம்.

அவர் எழுதி வெளி வந்த நூல்கள்:


  • மெய்யறிவு
  • மெய்யறம்
  • எனது பாடல் திரட்டு
  • வ. உ.வி.கண்ட பாரதி
  • சுயசரிதை


இவர் மொழி பெயர்ப்பு செய்த நூல்களின் பட்டியல்:

  • மனம் போல வாழ்வு
  • அகமே புறம்
  • வலிமைக்கு மார்க்கம்
  • சாந்திக்கு மார்க்கம்


இவர் உரை எழுதியவையாக குறிப்பிடப்படும் நூல்களின் பட்டியல்:

  • சிவ ஞான போதம்
  • இன்னிலை
  • திருக்குறள்



வ. உ.சி எழுதிய நூல்களில் இதுவரை வெளிவராத நூல்கள் பற்றியும் சில தகவல்கள் இதோ.

1. சிவ மதம்
2. விஷ்ணு மதம்
3. புத்த மதம்
4. ஊழை வெல்ல உபாயம்
5. இஸ்லாம் மதம்
6. கிருஸ்து மதம்
7. மனித மதம்
8. முத்தி நெறி
9. The Universal Scripture
10. திருக்குறள்
11. திலக் மகரிஷி

உயர் குலச்சமூகத்தினருக்கும் வசதி வாய்ப்புக்கள் நிறைந்தோருக்கும் மட்டுமே  கிடைத்த கல்வி ஞானத்தை அச்சுப்பதிப்பாக்க முயற்சிகள் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தி கல்வியும் ஞான நூல்களும் இலக்கியங்களும் எல்லோருக்கும் கிடைக்கும் வகை செய்தன.  அந்த வகையில் 18, 19, 20ம் நூற்றாண்டுகளில் பல சேவையாளர்களின் முயற்சியில் அறிய பல தமிழ் நூல்கள் ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்தன.  வ.உ.சி அவர்களும் இந்த முயற்சியில் பங்கெடுத்துக் கொண்டவர் என்பது பலரும் அறியாத ஒன்று. அவரது முயற்சியில் பனை ஓலை சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூல்களின் பட்டியல்:

  • தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் (இளம்பூரனார் உரை)
  • தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (இளம்பூரனார் உரை)
  • சிவஞான போதம்


சைவ சித்தாந்த சாஸ்திரங்களின் தலையாயதும் குருபரம்பரையினர் போற்றிப் புகழ்ந்த மெய்கண்டாரின் சிவஞான போத நூலை முதன் முதலில் பனை ஓலைச் சுவடியிலிருந்து அச்சு வடிவத்திற்குக் கொண்டு வந்தவர் நம் சிதம்பரனார் என்பதை அறியும் போது அவரைப் போற்றாமல் இருக்க முடியுமா?   இத்தகைய இலக்கியப் பணிகள் மட்டுமின்றி இவர் பத்திரிக்கைகளையும் நடத்தியிருக்கின்றார். அவற்றின் பட்டியல்:

  • விவேக பாநு
  • தமிழ் நேஷனல்
  • பத்திரிகை
  • இந்து நேசன்


சைவ சித்தாந்த சபையில் முக்கியமான அங்கம் வகித்தும் சைவ சித்தாந்த தத்துவங்களில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்திருக்கின்றார் வ.உ.சி அவர்கள்.  தான் அச்சு வடிவத்தில் வெளியிட்ட சிவஞானபோத நூலுக்கு உரை எழுதுவதற்கு முன்னரே தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபையில் அவர் பல சைவ  சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் தொடர்பான உரைகளை தொடர்ந்து நிகழ்த்தி வந்துள்ளார்.   1934-35களில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த தினமணி நாளிதழின் வருஷ அனுபந்தத்தில் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சிவஞானபோத உரையின் முதல் வடிவை எழுதியிருக்கின்றார்.  பிறகு அந்த உரை, நூல் வடிவில் தூத்துக்குடி எட்டையபுரம் நெடுஞ்சாலையிலுள்ள குறுக்குச் சாலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.  இவரது சொற்பொழிவுகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு 'எனது அரசியல் பெருஞ்செயல்'  என்ற தலைப்பில்  அச்சு வடிவம் கண்டுள்ளது.  இது அவரது அரசியல் அனுபவங்களை எடுத்துக் காட்டும் சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படுகின்றது.

இந்த விவரங்கள் எல்லாம் இக்கால இளம் தலைமுறையினர் அறிந்து உணர்ந்து போற்ற வேண்டிய விஷயங்கள் அல்லவா? இவையெல்லாம் தமிழ் நாட்டு கல்விப்பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றனவா?  வ.உ.சிதம்பரனார் பற்றிய தகவல்கள் செக்கெழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்ற மேல் நோக்கானப் புகழ்ச்சியோடு மட்டுமே என நின்று விடாமல் இம்மாமனிதரின் பரந்த சிந்தனை,  உயர்வான வாழ்வியல் நெறி முறைகள்,  தன்னலமற்ற சேவை, ஞானப் பரப்பு,  அறிவின் ஆழம் ஆகியவை பாடத்திட்டத்தில் கூறப்படுகின்றனவா என்று கேட்டு அவை இல்லையென்று அறிந்து சோர்ந்து ஏமாற்றம் அடைகின்றேன்.   இவர் எழுதி அவர் காலத்திலேயே வெளியிடப்படாத நூல்கள் எப்போது அச்சு வடிவம் பெறும்? என நினைக்கும் போதே அதனைத் தேடி அவற்றை பதிப்பிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.  தமிழகத்தில் உள்ளோர் இப்பதிவினை வாசிக்க நேர்ந்தால் நான் குறிப்பிட்டுள்ள நூல்கள் கிடைக்கும் இடத்தை எனக்கு அறியத்தருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

வ.உ.சி அவர்களின் கையெழுத்தில் அமைந்த ஒரு கடிதம் ஒன்றினை எட்டயபுரம் இளசை மணியன் அவர்கள் எனக்கு இந்தப் பயணத்தின் போது காட்டினார். அதன் டிஜிட்டல் வடிவத்தை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைத்து வைத்துள்ளேன்.  இக்கடிதத்தைப் பார்க்க விரும்புவோர் http://tamilheritagefoundation.blogspot.de/2010/05/blog-post.html பக்கத்தில் காணலாம்.

இந்த சிந்தனைகளுடனேயே இங்கிருந்து புறப்படுவோம். வேறொரு நாட்டில் மற்றுமொரு அருஙகாட்சியகத்தை நாம் அடுத்து காண வேண்டுமல்லவா?

Monday, September 23, 2013

7. வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லம் அருங்காட்சியகம், ஒட்டப்பிடாரம், தமிழகம், இந்தியா.

முனைவர்.சுபாஷிணி 

இன்று நாம் நமது அருங்காட்சியகப் பயணத்தில் மேலும் ஒரு புதிய இடத்திற்குச் செல்கின்றோம். நான் வசிக்கும் ஜெர்மனியின் லியோன்பெர்க் நகரிலிருந்து தமிழகத்திற்கு 7545 கிமீ தூரம் விமானம் மூலம் செல்கின்றோம். எதற்கு விமானத்தில் பறக்க வேண்டும்? தமிழகத்தில் தானே இருக்கின்றேன் என்று குறிப்பிடுவோருக்கு..., ஏதாவது ஒரு வகையில் பேருந்தோ, ரயிலோ எடுத்து தென் தமிழகம் வந்து விடுங்கள். அடுத்து உங்களை நான் அழைத்துச் செல்லவிருப்பது தென் தமிழகத்தில் திருநெல்வேலி நகருக்கு அருகே இருக்கும் நகரங்களில் ஒன்றான ஒட்டப்பிடாரம்!

தமிழகத்தில் ஒட்டப்பிடாரம் என ஒரு நகரின் பெயரை 2009ம் ஆண்டு வரை நான் கேள்விப்பட்டதில்லை. வ.உ.சி எனும் பெயரும் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோரில் குறிப்பிடத்தக்கவர்களில் இவரும் ஒருவர் என்பதும் மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த நான் அதுவரை அறிந்த செய்திகள். அதற்கு மேல் இவரைப் பற்றி அவ்வப்போது வரும் சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்ததில் செக்கெழுத்த செம்மல் என்பதும் ஆங்கிலேய காலணித்துவ ஆதிக்கத்தில் கல்வி கற்ற சுதந்திர தாகம் மிக்க இளைஞராக இருந்ததோடு பலரையும் தனது ஆளுமையால் வசீகரித்து சுதந்திர சிந்தனை ஆழமாக தமிழர் மனதில் பதிய தொண்டாற்றியர் என்பதும் இவரைப் பற்றி நான் அறிந்திருந்த கூடுதல் செய்திகள்.

2009ம் ஆண்டின் இறுதியில் நான் தமிழகத்தில் தன்னார்வ தொண்டூழிய நிறுவனமான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணி செய்வதற்காக 2 வார பயணம் ஒன்று ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அந்தப் பயணத்தில் எட்டயபுரம் சென்று அங்கிருக்கும் எட்டயபுர ஜமீன் மாளிகையைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவினைத் தயாரிக்க வேண்டும் என்பது அப்பயணத்தின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. அப்பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது எனது நண்பர் திரு.மாலன் அவர்களை அணுகி  திட்டமிட ஆரம்பித்த வேளையில் எட்டயபுரம் செல்லும் முன் வழியில் ஒட்டப்பிடாரத்தைக் கடந்து சென்றால் அங்கிருக்கும் வ.உ.சி. நினைவு இல்ல அருங்காட்சியகமும் சென்று வரலாம். அது பயணத்திற்கு மேலும் வளம் சேர்ப்பதாக அமையும் எனக் குறிப்பிட்டார். இது நல்ல யோசனையாக இருக்க நான் ஒட்டப்பிடாரத்திற்குச் செல்ல வேண்டும் என்று என் பயணக்குறிப்பில் இணைத்துக் கொண்டு தயாரிப்பு காரியங்களில் ஈடுபட்டேன். திருநெல்வேலியில் திரு.மாலனின் இளைய சகோதரர் திரு.ஜெயேந்திரனின் இல்லத்தில் தங்கி அங்கிருந்து அவர் என்னுடன் துணைக்கு அனுப்பிய மூன்று ஆசிரியர்களையும் அழைத்துக் கொண்டு ஒட்டப்பிடாரம் பயணித்தேன்.

ஒட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள இந்த நினைவு இல்லம் ஓர் அருங்காட்சியகம் மட்டுமன்று;  ஒரு நூலகமாகவும் இது இயங்குகின்றது என்பது தனிச்சிறப்பு. உள்ளூர் மக்கள் வந்து  பயன்படுத்தும் நிலையில் இந்த நூலகம் சிறப்புடன் இயங்கி வருவது பாராட்டுதலுக்குறிய விஷயம்.


வ.உ.சி. நினைவு இல்லம் (2009)

ஒரு வீடாக இருந்த இந்தக் கட்டிடத்தை  அருங்காட்சியகமாகப் புதிதாக நிர்மாணிக்க திட்டம் எழ,  7.8.1957 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த திரு.கு.காமராஜ் அவர்களால் இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கட்டிடம் முழுமையடைந்த பின்னர்  12.12.1961ல்  அன்றைய முதலமைச்சர் திரு.கு.காமராஜ் அவர்களால் இது திறந்து வைக்கப்பட்டது.  வ.உ.சி அவர்கள் பெயரிலேயே ரூ 80 லட்சம் செல்வில் 2005ம் ஆண்டு திருநெல்வேலியில் ஒரு மணிமண்டபம் ஒன்றும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா  அவர்களால்  திறந்து வைக்கப்பட்டது என்பதும் இவ்வேளையில் குறிப்பிடப்பட  வேண்டிய ஒரு செய்தி.

இந்த நினைவு இல்லத்தில் உள்ளே நுழைந்ததுமே நம்மை வரவேற்பது ஒரு இரும்புத் தகட்டில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் வ.உ.சி அவர்களின்  சிறு வாழ்க்கை குறிப்பு செய்திகள். அதில் உள்ள குறிப்பினைத் தருகின்றேன்.


வ.உ.சி. நினைவு இல்லத்தில் அவரது 1900ம் ஆண்டு புகைப்படம் (2009)


  • 1872 செப்டம்பர் 5  வியாழன்.  பிறப்பிடம்: ஒட்டப்பிடாரம்
  • 1895 திருமணம்
  • 1900 தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணி ஏற்பு
  • 1908 'சுதேசிக் கம்பெனி'  எனும் பெயரில் கப்பல் கம்பெனி நிறுவுதல்
  • 1907 சூரத் காங்கிரசில் புரட்சி
  • 1908 மார்ச் 12 வ. உ.சி. கைது
  • 1908 மார்ச் 13, நெல்லை தூத்துக்குடியில் கலகம்
  • 1908 ஜூலை 7. வ. உ. சிக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை


இவை வாசலில் இருந்த சிறு குறிப்பு மட்டுமே. உள்ளே நுழைந்ததும் நமக்கு வ.உ.சி .அவர்களின் வாழ்க்கை குறிப்புக்களை அறிமுகம் செய்யும் தகவல்கள் பல படங்களுடன் விளக்கப்பட்டிருப்பதையும் காண முடியும்.

சமூக பணிகளுக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் வ.உ.சி எனச் சொன்னால் அது சிறிதும் மிகையில்லை. உணர்ச்சிப்பூர்வமான நிலையைக் கடந்து அறிவுப்பூர்வமான வகையில் செயல்பட்டு தமிழ் மக்களிடையே சுதந்திர சிந்தனையை வளர்த்தவர் இவர்.

காலணித்துவ ஆட்சியில் இருந்த இந்தியாவில் ஆங்கிலேய  ஆட்சியை எதிர்த்தவர்கள் கையாண்ட யுக்திகள் பலவிதம். இதில் வ. உ.சிதம்பரனாரின் உத்திகள் தனித்துவம் வாய்ந்தவை.  பொருளாதார அடிப்படையில் மக்கள் சுயமாக முன்னேறவும் ஆங்கிலேயர்களை அண்டி இல்லாமல் சுயமரியாதையுடன் பொருளாதாரத் தேடலில் இயங்கவும் புரட்சிகரமாகத் திட்டமிட்டு செயல்பட்டவர் இவர். வணிக குடும்பத்தில் பிறந்து வக்கீலாக கல்வித் தகுதி பெற்றதோடு நின்று விடாமல் வணிகத்திலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தமிழர்களின் சரித்திரத்தில் கடந்த நூற்றாண்டில் வணிகத்திற்காகக் கப்பல் விட்டு சரித்திரம் படைத்தவர் இவர். இந்தச் செயல் இவருக்கு கப்பலோட்டிய தமிழன் என்னும் மங்காப் புகழை இன்றும் நினைவு கூறும் வகையில் அமைத்துத் தந்தது. பெறும் செல்வந்தராக இருந்த போதிலும் மக்கள் நலனுக்காவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் மக்களோடு இணைந்து போராடி அவர்களுக்குச் சிந்தனை எழுச்சி ஊட்டியவர் இவர்.



வ.உ.சி. நினைவு தபால் தலை (2009)

அப்போதிருந்த ஆங்கிலேய அரசு இவர் மேல் குற்றம் சுமத்தி இவரைச் சிறைக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாது அவரது குடும்பச் சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. செல்வந்தரான வ.உ.சி அவர்களின் குடும்பத்தினர் அனைவருமே இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. நாட்டுக்காக தன் வாழ் நாளையே உழைத்து அர்ப்பணித்த இந்த மகான்  தன் இறுதி நாட்களில் மிகுந்த பொருளாதார நிலையில் நலிவுற்று சிரமத்தில் இருந்தார் என்பதை எழுதும் போதே என் மனம் கலங்குகின்றது.

இத்தொடரின் அடுத்த பதிவில் இந்த அருங்காட்சியகத்தில் நான் அறிந்து கொண்ட  குறிப்பிடத்தக்க தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

Monday, September 16, 2013

6. பெர்காமோன் கோயில் - பெர்காமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி


இஸ்லாமிய கலைப்பொருட்கள் கண்காட்சி கூடத்திலிருந்து மீண்டும் உங்களை பெர்காமான் கோயில் பிரகாரப் பகுதிக்கு அழைத்து வருகின்றேன். இந்த அருங்காட்சியகத்திலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்றுச் சேகரிப்பாகவும் உலகப் பிரசித்தி பெற்ற அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புக்களின் வரிசையில் இடம்பிடிப்பதுமாகிய பெர்காமோன் கோயிலைப் பற்றிச் சொல்லாமல் அடுத்த அருங்காட்சியகத்திற்குச் செல்வதற்கு எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.  ஆக இந்த அருங்காட்சியகத்திற்குப் பெயராகவும் அமைந்துள்ள இந்தக் கோயிலைப் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் காண்போமே.



பெர்காமோன் கோயில் இடப்பக்க பிரகாரமும் அதில் உள்ள சிற்பங்களும் (ஆகஸ்ட் 2013)


1878ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் கார்ல் ஹூமன் பெர்காமோன் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டார்.  இந்த ஆய்வு 1888 வரை தொடர்ந்தது.  அது போது கண்டெடுக்கப்பட்ட கோயில் சுவர்கள்,  தூண்களோடு அமைந்த வாயில்புறச் சுவரில் அலங்கரித்திருந்த சிற்பங்கள் என அனைத்தும் சேகரிக்கப்பட்டன.  அப்போதைய ஓட்டோமான் அரசிடம் (துருக்கி) கலந்து பேசி இப்பொருட்களை ஜெர்மனிக்குச் சொந்தமாக்கி பெர்லினுக்கு அவை கொண்டு வரப்பட்டன.  முதலில் போட அருங்காட்சியகத்தில் பாதுகாக்கபப்ட்டு பின்னர் பெர்காமோன் அருங்காட்சியகம் 1932ம் ஆண்டில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்ட போது இங்கு கொண்டுவரப்பட்டு அன்றிலிருந்து இந்த அருங்காட்சியகத்திலேயே முதல் அறையில் இக்கோயில் பகுதி வீற்றிருக்கின்றது.

ஏறக்குறைய கி.மு 2ம் நூற்றாண்டு கோயிலாகக் கருதப்படும் இதனைக் கட்டியவர் பெர்காமோம் அரசர் 2ம் ஈமுனெஸ்(Eumenes II) .  இங்கிருப்பது முழுமையான கோயிலா என்றால் இல்லை என்பதே விடையாகின்றது. கோயிலின் பகுதிகளில் பெறும்பாலானவை இன்னமும் வடமேற்கு துருக்கியில் பெர்காமோம் நகரில் இன்றும் உடைந்து சிதிலமடைந்த நிலையில் காணக்கிடைக்கின்றது.  இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பகுதி 35.64 மீ அகலமும் 33.4 மீ ஆழமும் உடையது.  முன்பக்க படிக்கட்டு மட்டுமே 20 மீ அகலம் கொண்டது.



பெர்காமோன் கோயில் சிற்பங்கள் (ஆகஸ்ட் 2013)


இக்கோயிலின் நீண்ட சுவரில் 113மீ நீளத்திற்கு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கோயிற் சுவரில் பதிக்கப்பட்டிருந்த சிற்பங்கள் உடைந்த நிலையில் இருந்தாலும் அவை சொல்லும் கதையை விளக்கங்களுடன் வாசிக்கும் பொழுது நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தச் சிற்பங்களில் பெரும்பாலானவை அரக்கர்களும் அவர்களை எதிர்த்து போரிடும் கடவுளர்களுமாக சிற்பி வடித்திருக்கின்றார். அரக்கர் வாழும் சூழலாக பெரும் நாகங்களுடனும் பல கைகள் கொண்ட விரிந்த மரங்களின் பின்னனியிலும் இருப்பது போல இச்சித்திரங்கள் இருக்கின்றன. அரக்கர்களின் கொடூரமான பார்வையும் பாம்பின் வடிவிலமைந்த கீழுடல் பகுதியும் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கும் தன்மையுடயவை.



பெர்காமோன் கோயில் சிற்பங்கள். அரக்கனும் அவனைக் கொல்லும் கடவுள் ஹீராவும் (ஆகஸ்ட் 2013)


கடவுளர்கள் எனும் போது எத்தகைய கடவுளர்களின் வழிபாடு அக்காலத்தில் இப்பகுதியில் வழக்கில் இருந்தது என்பது கேள்வியாக பலருக்கு எழலாம். இக்கோயில் கட்டப்பட்ட காலம் கி.மு. 2 அல்லது அதற்கு சற்றே முந்திய காலக்கட்டம்.  அக்காலகட்டத்தில் இப்போது இப்பகுதியில் விரிவாக வழக்கில் இருக்கும் இஸ்லாம் மதமோ அல்லது கிறிஸ்துவமோ தோன்றாத காலகட்டமது.  பழமையான பேகன் வழிபாடும் கிரேக்க தெய்வங்களின் வழிபாடுமே வழக்கில் இருந்தன.  அந்த வகையில் இங்கு கடவுளர்களாக அமைந்திருப்போர் கிரேக்க கடவுளர்களாவர்.  ஒலிம்பிக் கடவுளர் (Olympian Gods)  என பொதுப்பெயரில் அழைக்கப்படும் ஸீயூஸ், அப்போலோ, ஹீரா, பொஸைடன்  போன்றவர்களை இப்படியலில் குறிப்பிடலாம்.  இந்த ஒலிம்பிக் கடவுளர்களில் ஆண் பெண் இருபாலரும் உண்டு.  இக்கடவுளர்களின் தலைவர் ஸீயூஸ்.  ஸீயூஸ் என்பது கிரேக்க மொழிச் சொல். பொதுவாக தற்சமயம் ரோமானியப் பெயர்களே பரவலாகி விட்டமையால் ரோமன் மொழியின் ஜூப்பிட்டர் என அழைக்கப்படுபவரே இந்தக் கிரேக்க ஸீயூஸ் கடவுள்.  இவர் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என அறியப்படுபவர்.

பெர்காமோன் நகர் கி.மு.1ம் நூற்றாண்டு கால கட்டத்தில் தொடர்ச்சியாக பல போர்களைச் சந்தித்தது.  பல அழிவுகள் இப்பகுதியில் தொடர்ந்து நிகழ்ந்தன. இதனால் இக்கோயில் சாத்தான் குடியிருக்கும் கோயில் என்று அக்காலத்தில் குறிப்பிடப்பட்டது.   இக்கோயில் பேகன் வழிபாட்டு மையமாகவும் அமைந்திருந்தது என்பதை மறுக்கலாகாது. இப்பகுதியில் பிற்காலத்தில் செழித்து நிலைத்த இஸ்லாமும் கிறிஸ்துவமும் பேகன் வழிபாடுகளை அவை உருவ வழிபாடுகளாக அமைந்தமையால் சாத்தானின் வழிபாடுகள் என்றும் கூறுவது வழக்கில் உருவானது. இதுவும் இக்கோயிலை பிற்காலத்தில் சாத்தான் வாழும் இடம் எனக் குறிப்பிடுவதற்குக் காரணமாகியது என நான் கருதுகின்றேன்.

1933ல் அடோல்வ் ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் அவரது கட்சியின் தலைமையகத்தை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது.  1932ல் பெர்காமோன் அருங்காட்சியத்தில் இக்கோயிலைக் கண்ட பொழுதில் அவருக்கு இக்கோயிலில் ஸெப்பலின் ட்ரிபியூனின் மேல் இருந்த மோகத்தை அறிந்த ஆர்க்கிடெக்ட் ஆல்பெர்ட் ஸ்ப்பியர் (Albert Speer)  ஸெப்பலின் ட்ரிபியூனின் வடிவத்தில் தலைமையகத்தின் மையப்பகுதியை வடிவமைத்தார்.  இம்மண்டபம் 1934 முதல் 1937 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டு நாஸி கட்சியின் தலைமையகம் இவ்விடத்திலேயே இயங்கி வர ஆரம்பித்தது.  நாஸி கட்சியின் பல குறிப்பிடத்தக்க மாநாடுகள் இங்கு நிகழ்ந்தன.



ஸெப்பலின் ட்ரிபியூன் (1942).
நன்றி. ஜெர்மனி தேசிய ஆர்க்கைவ்


ஜெர்மனியின் ஆட்சிபுரிந்த தலைமை பீடத்தில் இருந்தவர்களிலேயே அடோல்வ் ஹிட்லர் ஒருவரே சாத்தானின் குணம் கொண்ட ஒருவர் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.  இவரது ஆட்சியில் இவரது சித்தாந்தத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் ஒரு புறமென்றால் இவரது ஆட்சியை அழிக்கத் தோன்றிய 2ம் உலகப்போரால் இன்னும் மில்லியன் கணக்கான உயிர் சேதங்கள் நிகழ்ந்தன.  சாத்தானை அழிக்கும் வகையில் அமைந்த இக்கோயிலை 2ம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் சாத்தானின் நிலையை ஜெர்மானியின் பெர்லின் நகர மக்களுக்கு அளித்த ரஷ்யப் படைகள் இந்த பெர்காமோன் கோயில் பிரகாரப்பகுதியைத் தங்கள் சோவியத் ரஷ்யாவின் லெனிங்க்ராட்(Leningrad)  நகருக்கு 1948ம் ஆண்டு கொண்டு சென்றன.  மீண்டும் இந்தக் கோயில் 1958ம் ஆண்டில் பெர்காமோன் அருங்காட்சியகத்துக்கே திரும்பியது.

எத்தனை பிரயாணங்களை இந்தக் கோயிற் பகுதி சந்தித்திருக்கின்றது பாருங்கள்.  இக்கோயிலைக் கட்டிய ஈமுனெஸ் கூட இக்கோயில் இப்படி ஐரோப்பிய,  ரஷியப் பயணம் செய்யும் என சற்றும் நினைத்திருக்க மாட்டார். :-)

பெர்காமோன் கோயிலின் வெண்மையான பளிங்குத் தூண்களும் வெண்பளிங்குச் சிற்பங்களும் வரலாற்றுப் பிரியர்களின் மனதைக் கொள்ளைக் கொள்வன.  இப்பெரிய கோயிலுக்கென பெர்காமோன் அருங்காட்சியகம் மிகப் பெரிய மண்டபப்பகுதியையே ஒதுக்கியிருக்கின்றது.  இங்கு அமர்ந்து ஓவ்வொரு சிற்பங்களையும் பார்த்து ரசித்து அதன் விளக்கங்களைச் செவிமடுத்து குறிப்பெழுதிக் கொள்ள குறைந்தபட்ஷம் ஒன்றரை மணி நேரம் தேவைப்படும்.  அவசரமாக இக்கோயிலைப் பார்த்து அருங்காட்சியகத்தைப் பார்த்துச் செல்ல விரும்புபவர்கள் கூட ஆக மொத்தம் இந்த அருங்காட்சியகத்திற்கு 2 மணி நேரங்களைக் கட்டாயமாக ஒதுக்கித் தான் ஆக வேண்டும்.

பெர்காமோன் கோயிலைப் பற்றி இப்பதிவில் ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.  இவ்வருங்காட்சியகத்தில் இந்தக் கோயில் இருக்கும் பகுதிக்குப் பின்புறம் கிரேக்க காவிய நாயகன் டெலிஃபஸ் கதையைக் கூறும் கோயிலும், கோயிற்சிற்பங்களும் அருமையாக காட்சிக்கு ஒரு முழு நீள அறையில் வைக்கப்பட்டிருக்கின்றன.  இக்கதையைப் பற்றி சொல்ல எனக்கு விருப்பமென்றாலும் பிரிதொரு சமயம் வேறொரு கட்டுரையில் இதனைப் பற்றி எழுதுகிறேன்.


பெர்காமோன் கோயிலின் உள்ளே (ஆகஸ்ட் 2013)

பெர்காமோன் அருங்காட்சியகத்தையும் அதன் உள்ளே பாதுகாக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்சிப்பொருட்களையும்  உங்களுக்கு ஓரளவு  அறிமுகம் செய்து விட்டேன்.  என்னைப் பொருத்த அளவில் நான் நேரில் பார்த்து என் மனதில் நிற்கும் அருங்காட்சியகங்களின் வரிசையில் முதல் 10 அருங்காட்சியகங்களில் இந்தப் பெர்காமோன் அருங்காட்சியகமும் இடம் பிடிக்கின்றது.

சரி.  ஜெர்மனியின் பெர்லினில் ஏனைய அருங்காட்சியகங்களுக்கு நாம் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் வேறொரு நாட்டில் வேறொரு ஊரில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா?

அடுத்த திங்கள் நாம் செல்வதற்கு முன்னர் எங்கு செல்லவிருக்கின்றோம் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன்.  :-)

தொடரும்….
சுபா

Monday, September 9, 2013

​5. இஸ்லாமிய கலைப்பண்பாட்டு சேகரிப்புக்கள், பெர்காமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி 

இன்னமும் நாம் பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகத்தின் உள்ளே தான் இருக்கின்றோம். 5000 ஆண்டு பழமை மிக்க ஊருக் நகர் பற்றி விளக்கும் கண்காட்சியைப் பார்த்த நாம் அடுத்த பகுதிக்குச் செல்வோமா?

பெர்காமோன் அருங்காட்சியகத்தின் சிறப்பினைப் பற்றிக் கூறும் முதல் பகுதியிலேயே இந்த அருங்காட்சியகம் இன்றைய ஐக்கிய அரபு நாடுகள் இருக்கின்ற பகுதிகளிலிருந்து சேகரிப்பட்ட இஸ்லாமிய கலைப்பொருள் கண்காட்சியையும் கொண்டிருக்கும் விஷயத்தைச் சிறிது குறிப்பிட்டிருந்தேன். இந்த இஸ்லாமிய கலைப் பொருட்கள், அவற்றின் தனிச் சிறப்புக்கள் யாவை என்பதனைப் பற்றியும் விளக்க வேண்டியது அவசியம் என நான் நினைப்பதால் இப்பதிவில் அதனைப் பற்றி சில விவரங்கள் பகிர்ந்து கொள்கிறேன்.

பெர்லின் அருங்காட்சியகத் தீவு (Museum Insel) பகுதியில் முதலில் தென்படுவது ‘போட அருங்காட்சியம்’. அதனைத் தொடர்ந்தார் போல பெர்காமோன் அருங்காட்சியகம் கட்டப்பட்டிருக்கின்றது. வரலாற்றை நோக்கினால் இப்பகுதியில் முதலில் அமைந்திருந்த கட்டிடம் போட அருங்காட்சியகம் மட்டும் தான். இங்கு தான் முதன் முதலில் பல்வேறு நாடுகளிலிருந்து பெர்லினில் அருங்காட்சியகத்திற்காகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அதில் இஸ்லாமிய கலைப்பொருட்களும் அடங்கும் . வில்ஹெல்ம் போஃன் போட (Wilhelm von Bode) இந்த அருங்காட்சியகத்தில் இஸ்லாமிய கலைப்பொருட்களுக்கானச் சிறப்புப் பகுதியை ஏற்பாடு செய்திருந்தார். அப்பொழுது அந்தச் சேகரிப்பில் இடம்பெற்றிருந்த கலைப்பொருட்கள் அனைத்திலும் மிகப் புகழ் பெற்றதும் அளவில் பெரியதுமாக அமைந்தது மஷாட்டா அரண்மணை சுவர்ப்பகுதி தான். இது இன்றைய சிரியாவிற்கும் ஜோர்டான் நாட்டிற்கும் இடையே அமைந்துள்ள ஒரு அரண்மணையின் சுவர் பகுதி. ஓட்டோமான் சுல்தான் அப்ஹுல் ஹமீட் (1842 – 1918) இந்த அரண்மனை சுவரை ஜெர்மானிய அரசுக்குப் பரிசாக வழங்கியிருந்தார். இந்த அரண்மனைச் சுவர் மட்டுமன்றி ஏனைய கலைபொருட்களையும் முறையாகக் காட்சிக்கு வைப்பதிலும் சிரமம் இருந்து வந்தது. 1932ம் ஆண்டு பெர்காமோன் அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டு பெர்காமோன் கோயிலுடன் அருங்காட்சியகம் அமைந்த போது இங்கு சில அறைகள் இஸ்லாமிய கலைப்பொருட்களின் காட்சிக்காகவும் ஒதுக்கப்பட்டன. அன்றிலிருந்து இஸ்லாமிய பண்பாடு மற்றும் கலைகளைச் சொல்லும் வெவ்வேறு காலகட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இங்கு தொடர்ந்து இணைக்கப்பட்டு இப்பொழுது ஈரான், ஈராக், சிரியா, இந்தியா, பாக்கிஸ்தான், ஸ்பெயின். லிபியா, எகிப்து, மொரோகோ, துனிசியா போன்ற நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் காட்சியில் அங்கம் வகிக்கின்றன.

இஸ்லாமிய கலை என்பது இஸ்லாமிய மதம் பரவிய எல்லா நாடுகளிலும் பரவியுள்ளதை இன்றும் நாம் காண்கின்றோம். மன்னர்களின் விருப்பத்தின் பெயரிலும் ஆணையின் படியும் இஸ்லாமிய அரசர்களின் ஆட்சியின் கட்டிடங்களாக, ஓவியங்களாக, கலைபொருட்கள் தனித்துவத்துடன் காட்சியளிப்பதைக் காண்கின்றோம். ஐக்கிய அரபு நாடுகள் மட்டுமன்றி இஸ்லாம் பரவிய ஸ்பெயின், இந்தியா, போன்ற நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள் இங்கிருக்கின்றன. உதாரணத்திற்காக இங்கு சேகரிப்பில் உள்ள குறிப்பிடத்தக்க கலைப்பொருட்களை அறிமுகம் செய்வது தகும் என நினைக்கிறேன்.


மஷாட்டா (Mshatta) அரண்மனை சுவர்.

பெர்காமோன் அருங்காட்சியகத்தில் இருக்கும் இஸ்லாமிய கலைப்பொருட்களிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்த காட்சிப்பொருள் இது என்றால் அது மிகையில்லை. இந்த அரண்மனை உடைந்தோ சிதிலப்பட்டோ அழிந்த ஒன்றல்ல. இன்றும் இருக்கும் ஒரு அரண்மனையே. ஜோர்டான் தலைநகர் அம்மானின் விமான நிலையத்திற்கு அருகாமையில் இருக்கின்றது இந்த அரண்மனை. 1903ம் ஆண்டு இந்த அரண்மனையின் ஒரு பக்க மதில் சுவரை அன்னாளைய ஓட்டோமான் சுல்தான் அப்ஹுல் ஹமீட் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்குத் தனது பரிசாக அனுப்பி வைத்தார். ஏன் அனுப்பி வைத்தார் அதற்கான காரணமென்ன என்பது தெரியவில்லை.ஆனால் பரிசாக இந்த மதில் சுவர் வந்தமை குறிப்பில் உள்ளது.

மஷாட்டா அரண்மனை இடதுபக்கச் சுவரின் முன்னே (ஆகஸ்ட் 2013)


இன்றைய சிரியா ஜோர்டான் ஆகிய நாடுகள் இருக்கும் பகுதி இன்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய மதத்திற்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக அமைந்திருந்தது. முகமது நபி இறந்த பிறகு இப்பகுதியில் உமையாட் பரம்பரையினர் அடுத்தடுத்து வரிசையாக ஆட்சி புரிந்து வந்தனர். அக்காலகட்டத்தில் அதாவது 8ம் நூற்றாண்டு வாக்கில் (கிபி 740) கட்டப்பட்டது இந்த அரண்மனை. ஏறக்குறைய 20,000 சதுர அடி பரப்பளவில் இந்த அரண்மனையைக் கட்டியிருக்கின்றனர். ஒரு வகையில் இதன் கட்டுமானம் தொடர்ந்து கொண்டேயிருந்திருக்கின்றன. அறைகளுக்கு மேல் அறைகள் என விரிவாகிக் கொண்டேயிருந்திருக்கின்றது இந்த அரண்மனை. அந்த அரண்மனையின் மதில் சுவரின் ஒரு சிறு பகுதியே இங்கிருப்பது.


மஷாட்டா அரண்மனை சுவரின் கலைவேலைப்பாடு (ஆகஸ்ட் 2013)


பெர்கமோன் அருங்காட்சியகத்தில் ஒரு அறை முழுமையையும் நிறப்பிய வண்ணம் இந்தச் சுவர் அமைந்திருக்கின்றது. அங்கு போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்து இந்த சுவர்ப்பகுதி பெர்லினுக்குப் பயணித்து வந்த தகவல்களை ஒலிப்பதிவின் வழி கேட்டு அறிந்து கொள்ளலாம். மிகப் பிரம்மாண்டமான மதிற் சுவரில் கலை வண்ணங்கள் நிரம்பியிருப்பதை நன்கு காணலாம். மயில், புலி, சிங்கம், பறவைகள், விலங்குகள் பூ வடிவங்கள், கொடிகள், போன்ற அமைப்புகளில் சுவர் அலங்காரம் செய்யப்பட்டு இந்த மதிற் சுவர் காட்சியளிக்கிறது. உதாரணமாக மேலுள்ள படத்தில் புலி நீர் அருந்துவதையும் அதிலிருந்து Tree of life அதாவது உயிர்களின் ஆதாரம் எனப்படும் தாவரங்கள் முளைத்து எழுவதும் உள்ளுரை உவமமாகக் காட்டப்படுகின்றது. Tree of life என்பது பண்டைய பெர்ஷிய தாக்கத்தின் வெளிப்பாடு.

எகிப்திய பொன் ஆபரணங்கள்
உடைந்த சுவர்களும் ஓவியங்களும் மட்டும் கலைப்பொருட்களல்ல. அக்காலத்தில் இஸ்லாமிய அரச குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஆபரணகங்களும் கூட இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியை நிறைத்திருக்கின்றன.


எகிப்திய காதணிகள் (ஆகஸ்ட் 2013)

இங்கு படத்தில் காணப்படுவது 7ம் அல்லது 8ம் நூற்றாண்டெனக் கணிக்கப்படும் ஒரு எகிப்திய அரச குடும்பத்தின் காதணிகள். இதனைப் போன்று மோதிரங்கள், கழுத்தணி, காலில் அணிந்து கொள்ளப்படும் ஆபரணங்கள் ஆகியவை இங்கு சேகரிப்பில் உள்ளன.

மோகுல் கம்பளம்

கம்பளங்களைப் பற்றி ஆசிய நாடுகளில் பொதுவாக அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. வரவேற்பு அறையை அலங்கரிக்க கம்பளங்களை வாங்கி அலங்கரிப்பது வழக்கம். ஆனால் வட ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகள் எங்கெங்கிலும் கம்பளங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன என்பது உண்மை.

ஒரு முறை துருக்கியில் பஸ் பயணம் செய்து கொண்டிருந்த போது சுற்றுலா வழிகாட்டி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த ஜெர்மானிய பயணிகளைப் பார்த்து ‘உங்கள் ஊரில் எப்படி மெர்ஸடிஸ் கார்கள் உங்கள் நாட்டிற்குப் பெருமையானதாகக் கருதுகின்றீர்களோ அதைப் போல எங்களுக்குக் கம்பளங்கள் நாட்டிற்குப் பெருமை அளிப்பன’ என்று விளக்கினார். கம்பளங்களின் விலை அதன் தரம் வேலைப்பாடு ஆகியவற்றைப் பொருத்து வித்தியாசப்படும் என்பதை கம்பளங்களை வாங்க முயற்சித்தவர்கள் அறிந்திருப்பர். மொரொக்கோ, துனிசியா, லிபியா, ஜோர்டான், எகிப்து, துருக்கி என இங்கெல்லாமே கம்பளங்கள் ஒரு குடும்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகக் கருதப்படுகின்றன.


மோகுல் பேரரசின் 17ம் நூற்றாண்டு கம்பளம் (ஆகஸ்ட் 2013)

1610ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் மோகுல் பேரரரசின் அரண்மனை கம்பளம் ஒன்று இங்கு சுவற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது பாக்கிஸ்தானின் லாகூரிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்ட கம்பளம்.

இது தவிர்த்து வட இந்தியாவிலிருந்து சேகரிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க இஸ்லாமிய கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக பேரரசர் ஜஹாங்கீர் தொழுது கொண்டிருப்பது போன்ற ஒரு ஓவியம் ஒன்றும் இந்த சேகரிப்பில் அடங்கும். கிபி 1610ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இது 33 x 19.3 cm அளவில் பூக்களில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காண்போர் கண்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இஸ்லாமிய கலைப்பொருட்களைப் பார்த்து ரசித்தோம். இனி முன்பக்கம் வந்து பெர்காமோன் கோயிலைச் சுற்றி வருவோமா?

தொடரும்…

Friday, September 6, 2013

4. 5000 ஆண்டு பழம் நகரம் ஊருக், பெர்காமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி


இன்றைய தெற்கு ஈராக் நகரமாக அறியப்படும்  வார்க்கா (Warka) முந்தைய மெஸொப்போட்டேனியாவின் ஊருக் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டதொரு நகரம்.  இந்த நகரம் ஈராக் தலைநகரமான பக்டாட்டிலிருந்து 300கிமீ தூரம் தெற்கில்,  சமாவா நகருக்கு 15கிமீ  கிழக்கில்,  இயூக்ரப்டீஸ், திக்ரீஸ் நதிக்கரை அமைந்திருந்த பகுதியில் உள்ள பகுதி. இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உலகளாவிய மனித நாகரிகத்தின் சுவடுகளை ஆராயும் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு நின்று விடாமல் தொடர்ந்து பல ஆய்வுகளுக்கு அடிப்படையாகவும் அமைந்தது.

முதன் முதலில் 1849ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயர் வில்லியம் கென்னத் லோஃப்டுஸ் என்னும் தொல்லியல் ஆய்வாளர் இப்பகுதியில் ஓர் நகரம் இருப்பதை கண்டுபிடித்தார். இதுவே  பழமையான சுமேரியன் நகரான ஊருக். ஆங்கிலேய அரசின் ஆணையின் படி வெவ்வேறு நாடுகளில் சில குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட திரு.கென்னத் இறுதியாக தனது பணியை ஆங்கில காலணித்துவ இந்தியாவில் ஆற்றிக் கொண்டிருந்த சமயத்தில் உடல் நிலை நோய்வாய்ப்பட்டு 1856ல்  இந்தியாவிலேயே இறந்தார். அப்போது அவருக்கு வயது 38.

அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மானிய கீழ்த்திசைச் சங்கம் அப்போதைய ஒட்டோமான் பேரரசை அணுகி ஊருக்  (ஈராக்) நகரப் பகுதியில் தொடர்ந்து தாங்கள் அகழ்வாராய்ச்சிகள் செய்ய விண்ணப்பித்து சம்மதம் பெற்று 1912ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினர். ஊருக் எனும் ஒர் நகரமும் அங்கு நாகரிகம் அடைந்த ஒரு சமூகம் இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் இருந்தமையையும் குறிப்பிடும் சான்றுகளை இந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடித்தது இவ்வாய்வை மேற்கொண்ட குழு. இவ்வாய்வு தொல்பொருள் ஆய்விற்கு ஒரு மிகச் சிறப்பான  ஒரு கண்டுபிடிப்பாக அமைந்து பல்வேறு தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு அடிப்படையாகவும் அமைந்தது.



ஊருக் நகரில் ஆய்வுப் பணிகளின் போது
நன்றி: http://www.dainst.org

இங்கு தொல்லியல் பணிகள் தொடங்கிய காலம் தொட்டு இப்பகுதியில் இடைக்கிடையே நடைபெற்று வந்த போர், அரசியல் மாற்றங்களால் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் தொடர்ந்து இடர்பாடுகளுக்குள்ளாகி வருவது தொல்லியல் ஆய்விற்கு பெருமளவில் தடங்கலாகவே அமைந்திருப்பது உண்மை. இத்தகைய தடைகளுக்கிடையேயும் இது வரை நாற்பதற்கும் குறையாத வெவ்வேறு ஆய்வுகள் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்டு இங்கு ஊருக் நகரமும் அந்நகரத்து மக்களின் நாகரிகம் பண்பாடு பற்றியும் ஓரளவு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது ஆய்வு உலகத்திற்கு கிடைத்திருக்கும் பெறும் நன்மையே.

இத்தனை ஆய்வுகளும் இந்த நகரைப் பற்றிய  முழுமையான தகவல்களை வழங்கி விட்டதா என்றால் இல்லை என்பது தான் விடையாகின்றது. ஜெர்மானிய கீழ்த்திசைச் சங்கத்தினரின் அறிக்கையின் படி ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான ஊரூக் நகர் மட்டுமே இதுவரை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்னும் தகவலை அறிகின்றோம். இக்குறுகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகளே இந்த நகரத்தின் அக்கால நிலையை இன்று நமக்கு விளக்க உதவுவதாக உள்ளன.


ஈனன்னா கோயில் கண்டெடுக்கப்பட்ட பகுதி. தொல்லியல் ஆய்வுப்பகுதியாக ஈராக்கில் பாதுப்பில் இருக்கும் ஒரு பகுதி.
நன்றி: http://www.dainst.org

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டையாடியும் மீன்  பிடித்தும் ஊர் ஊராக நாடோடிகளாகத் திரிந்த சமூகத்தினரில் ஒரு சிறு பகுதியினர் மெஸபொட்டோமியாவின் தெற்குப் பகுதியில் குடியேறினர். கிபி 3200 ஆண்டு வாக்கில் அங்கே நிரந்தரமாக தங்கள் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள் அமைத்த நகரமே ஊருக் என்ற பெயருடன் இன்று அறியப்படுகின்றது. இங்கு அறியப்படும் நகரம் நல்ல நாகரிகம் அடைந்த ஒரு சமூகத்தின்  வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது என்பது ஆச்சரியமளிப்பதாகவும் அமைகின்றது. சிறந்த கட்டுமான வடிவத்தைக் காட்டும் கட்டிடங்களின் அமைப்பு, சிற்பங்கள், சிலைகள், வழிபாட்டு முறைகள், ஈமக்கிரியை முறைகள், எழுத்து வடிவங்கள் என பண்பாட்டு வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தைக் காட்டும் சான்றுகளாக இவை நமக்கு இன்று கிடைக்கின்றன.  சுமேரிய நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க ஒரு நகரமாக ஊருக் கருதப்பட்டாலும் பெரும்பாலும் அக்காடியப் பேரரசுடன் இணைத்து கருதப்படும் ஒரு நகரமாகவே இது பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றது.

பெர்லின் பெர்கமோன் அருங்காட்சியகத்தில் இவ்வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்த கண்காட்சியாக 5000 ஆண்டு பழமை வாய்ந்த நகரமான ஊரூக் பற்றிய கண்காட்சி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் மாதம் பெர்லின் நகருக்கு நான் சென்றிருந்த வேளையில் அங்கு பெர்காமோன் அருங்காட்சியகத்தில் இந்தக் கண்காட்சியைக் காணும் வாய்ப்பு அமைந்தது. ஜெர்மனியின் பழமை வாய்ந்ததும் உலகப்புகழ் வாய்ந்ததுமான  ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஊருக் நகர கண்டுபிடிப்புக்களும் இந்தக் கண்காட்சியில் இணைத்து வைப்பட்டிருந்தன.


ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு - எழுத்துக்குறியீடும் சிற்பமும் இணைந்து அமைக்கப்பட்டிருக்கும் ஒரு படிமம்.

1912ம் ஆண்டு முதல் 1989 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இந்த நகரின் வழிபாட்டு மையங்களைக் கண்டுபிடிப்பதைக் குறிக்கோளாக வைத்து ஆய்வுகளை மேற்கொண்டன. இக்காலகட்டத்தில் 39 தனித்தனி ஆய்வுகளில் பல சான்றுகள் இப்பகுதியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டன. அவற்றில் போர்,அருள் இவையிரண்டிற்கும் ஆதாரமாகக் கருதப்படும் ஈனன்னா தெய்வம், சொற்கத்திற்கான இறைவடிவமான அனு, கிமு 14ம் நூற்றாண்டுக் கோயிலான காரைண்டாஷ் கோயில், கிமு 3-2ம்  நூற்றாண்டு கோயிலான காரெய்ஸ் கோயில், கிமு 20-18ம் நூற்றாண்டு ஷின்காஷிட் அரண்மணை  போன்றவையும், எழுத்து வடிவங்களும், ஈமக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகளும், அலங்காரப் பொருட்களும்  கண்டுபிடிக்கப்பட்டன.

உலகப் பிரசித்தி பெற்ற கண்காட்சிகளின் வரிசையில் இடம் பெறும் ஊருக் கண்காட்சியை நேரில் பார்த்து அறிந்து கொண்டமை தனிப்பட்ட வகையில் எனக்கு பிரமிப்பை அளிக்கும் உணர்வினை அக்கணத்தில் ஏற்படுத்தியது என்பதை நான் மறுக்க முடியாது.  இன்றைக்கு 5000 ஆண்டுகால பழமையான ஒரு நாகரிகம் நமக்கு விட்டுச் சென்றுள்ள விஷயங்கள் ஏராளம். இந்த கண்டுபிடிப்புக்களை தன் வாழ் நாளில் பெரும் பகுதியை செலவிட்டு மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து முடித்த ஆய்வாளர்களையும் தொடர்ந்து இவ்வாய்வுகளில் ஈடுபட்டு புதிய ஆய்வு முடிவுகளை உலகுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களையும் நினைத்துப் பார்க்கும் போது மனம் பெருமிதம் அடைகின்றது. இத்தகைய கண்காட்சிகளுக்கு லட்சக்கணக்கான யூரோ செலவிட்டு அவற்றை பாதுகாத்தும் ஆய்வாளர்களை ஊக்குவித்தும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தும் வரும் பெர்கமோன் அருங்காட்சியத்தைப் பாராட்டுவது மிகத் தகும் அல்லவோ!

நன்றி:
http://www.smb.museum/smb/kalender/details.php?lang=en&objID=31969
http://www.pasthorizonspr.com/index.php/archives/01/2013/uruk-5000-years-of-the-megacity

Monday, September 2, 2013

3. பெர்காமோன் அருங்காட்சியகம் பெர்லின், ஜெர்மனி

அருங்காட்சியகம்:பெர்காமோன் அருங்காட்சியகம்
நகரம்: பெர்லின்
நாடு:ஜெர்மனி
தொடங்கப்பட்ட ஆண்டு:1930
சிறப்புக்கள்:தொல்லியல் ஆய்வுகள் - பெர்காமோன் கோயில், இஸ்லாமிய கலைப்பொருட்கள், இஸ்தார் மண்டபக்கதவு, 5000 ஆண்ட் பழம் நகரம் ஊருக்.



பெர்காமொன் அருங்காட்சியகம் (ஆகஸ்ட் 2013)

இன்றைய துருக்கியின் மேற்கு கடற்கரை நகரமான பெர்காமும் (துருக்கிய மொழி) நகர் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  பழமையான பேகன் வழிபாட்டு மையமாகத்  திகழ்ந்தது. பல ஆண்டுகளின் தொடர்ச்சியான போர், அரசாட்சி மாற்றம், சித்தாந்த மாற்றம், இயற்கை அழிவுகள் இவைகளால பாதிக்கப்பட்ட இந்த நகரத்தின் எஞ்சிய சான்றுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை அப்பகுதி மக்களுக்கோ துருக்கியின் அப்போதைய அரசாங்கத்துக்கோ எழவில்லை. உடைந்து சிதைந்து கிடந்த பெருந்தூண்கள், கோயிற்சுவர்கள், சிலைகளைத்  தங்கள் சுய தேவைக்காக மேலும் சிதைத்து  விட்டிருந்தனர் அப்பகுதி மக்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  சீறும் சிறப்பும் பெற்று விளங்கிய இந்நகர் 19ம் நூற்றாண்டிலோ அடையாளம் தெரியாமல் சுவடிழந்து மறைந்திருந்த  நேரம் அது. 1864ம் ஆண்டு  இப்பகுதிக்குத் தொழில் நிமித்தம் வந்திருந்த ஒரு ஜெர்மானிய பொறியியலாளர் கார்ல் ஹூமன் இந்தச் சிதைந்து கிடைந்த நகரின் எச்சங்களைக் கண்டு அதிர்ச்சியுற்றார். விலைமதிப்பற்ற இந்தக் கோயில் மண்டபங்களையும் சிற்பங்களையும் கண்டு அவர் இதனை ஏதாகினும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் தீர்மானம் செய்து கொண்டார்.

ஜெர்மனியிலும் அன்றைய துருக்கியிலும் முறையான அனுமதி பெற்று இந்நகரின் அகழ்வாராய்ச்சிப் பணியில்  இறங்கினார். 1878ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கின. அவரது முயற்சி வீண் போகவில்லை. அவருக்குக் கிடைத்ததோ  விலைமதிக்க முடியாத ஒரு பரிசு.  பண்டைய கிரேக்க தெய்வம் ஸியூஸ் (Zeuz) க்காக எழுப்பப்பட்ட கோயில் முழுமையாக இவ்வாய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்டது!

1886 வரை இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள்  தொடர்ந்து நடைபெற்றன. அன்றைய துருக்கி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் அகழ்ந்து எடுக்கப்பட்ட இக்கோயில் முழுமையாக ஜெர்மனியின் பெர்லின் நகருக்குக் கொண்டு வரப்பட்டது. உலக அகழ்வாராய்ச்சி வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியாக இது இன்றளவும் திகழ்கின்றது.



1878ல் கார்ல் ஹுமனின் குழு அகழ்வாராய்ச்சிப் பணியில்.

ஸியூஸ் கடவுளுக்காகக் கட்டப்பட்ட இக்கோயில் இன்று வரை பழம் நகரான பெர்காமோன் நகரிலேயே இருந்திருந்தால் என்ன நிலைக்குச் உள்ளாகியிருக்குமோ யாரும் அறியார். தொல்லியல் ஆராய்ச்சியினாலும் ஒரு தனி மனித முயற்சியாலும் இக்கோயில் முழுமையாகக் காப்பாற்றப்பட்டு இன்று ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள பெர்காமோன் அருங்காட்சியகத்தில் உலக மக்கள் அனைவரும் வந்து பார்த்து மகிழும் சந்தர்ப்பை அளித்திருக்கின்றது.

பெர்காமோன் கோயில் ஜெர்மனிக்குக் கொண்டு வரப்பட்ட சமயம் முதலில் `போட` அருங்காட்சியகத்தில் (Bode Museum) தான் வைக்கப்பட்டது. ஆனால் இந்த அருங்காட்சியகம் இக்கோயிலின் சிறப்பை முழுமையாக வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கவில்லை. இதனை மனதிற்கொண்டு புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டியதன் அவசியம் உருவாகியது. அந்தச்  சிந்தனையின் அடிப்படையில் தோன்றியதே இன்றிருக்கும் பெர்காமோன் அருங்காட்சியகம். 1910 முதல் 1930 வரை இப்புதியகட்டிடப் பணிகள் நடைபெற்றன.

முதலாம் உலகப்போரின் போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகளையும் சமாளித்து இந்த அருங்காட்சியகப் பணிகள் தொடர்ந்தன. இருபது ஆண்டுகால உழைப்பில் இந்த அருங்காட்சியகம் 1930ம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்ககாகத் திறக்கப்பட்டது. 1933ம் ஆண்டு ஹிட்லரின் நாஸி கட்சி வெற்றி பெற்று அடோல்வ் ஹிட்லர் பெர்லினைத் தலைமையகமாகக் கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் பெர்கமோன் அருங்காட்சியகம்  பெர்லினின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. பெர்கமோன் அருங்காட்சியகத்தில் உள்ள ஸீயூஸ் கடவுளுக்கான பெர்கமோன் கோயில் கட்டிடத்தின் தூண்களின் வடிவிலே ஆழ்ந்த  விருப்பம் கொண்டிருந்த ஹிட்லர் இதே அமைப்பில் தனது தலைமையகத்தைக் கட்டினார்.  அந்த மண்டபம் இன்று இல்லை. ஆனால் பெர்காமோன் கோயிலோ இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட பெரும் சேதத்தையும் தாங்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டு இன்றளவும் பெர்லின் நகரில் அழியாது இருக்கின்றது.


பெர்காமோன் அருங்காட்சியகத்திலுள்ளே வீற்றிருக்கும் ஸியூஸ் கடவுளுக்கான அக்ரோபோலிஸ்: அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட முழு கோயில் (ஆகஸ்ட் 2013)

பெர்கமோன் கோயிலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் மட்டுமே இங்கு சேகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணி விட வேண்டாம். இங்கே குறிப்பிடத்தக்க ஜெர்மானிய அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் பலர் பண்டைய ஈராக், ஈரான், பாபிலோன், ஊருக், அசூர்,ஆகிய இடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட பிரமாண்டமான வரலாற்றுச் சான்றுகள் பல நிறைந்திருக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்திற்கு நான் இருமுறை  சென்று வந்திருக்கின்றேன். 2010ம் ஆண்டில் ஒரு முறையும் இவ்வாண்டில் சில வாரங்களுக்கு முன்னரும் இங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

பண்டைய பாபிலோனின் இஸ்டார் கதவு (Ishtar Gate), ஊருக் நகரம், சுமேரிய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் ஆகியவை பெர்காமோன் கோயிலைப் போன்றே இந்த அருங்காட்சியகத்திற்குச் சிறப்பு சேர்க்கும் ஏனைய விலைமதிக்க முடியாத கண்டுபிடிப்புக்களாகத் திகழ்கின்றன. இந்த அருங்காட்சியகத்தின் ஒரு தனிச்சிறப்புப் பகுதியாக இஸ்லாமிய கலைப்பொருட்களின் நிரந்தரக் கண்காட்சியும்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பற்றி ஒரு தனிப் பதிவு ஒன்று தேவை என நான் கருதுவதால் விரிவாக பின்னர்  ஒரு பதிவில் எழுத நினைத்திருக்கின்றேன். அதே போல பெர்காமோன் கோயிலின் முக்கியத்துவததை நினைத்து இதற்காக ஒன்று அல்லது இரண்டு தனிப்பதிவுகளை வழங்க நினைத்திருக்கின்றேன். இவற்றை எழுதுவதற்கு முன்னராக இந்த  அருங்காட்சியகத்தில் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் நான் சென்றிருந்த வேளையில் அங்கு சிறப்பு கண்காட்சியாக ஏற்பாடாகியிருந்த 5000 ஆண்டு பழமை வாய்ந்த ஊருக் நகரத்திற்கு உங்களை பெர்காமான் அருங்காட்சியகத்தின் வழியாக அழைத்துச் செல்கின்றேன். உடன் வரத் தயார் தானே?

தொடரும்....!

முனைவர்.சுபாஷிணி