Thursday, June 9, 2016

64. அரச அருங்காட்சியகம், கெண்டபரி, இங்கிலாந்து

முனைவர்.சுபாஷிணி

அருங்காட்சியகங்களில் இருக்கின்ற அரும்பொருட்களைக் காட்சிப் படுத்துகின்ற அருங்காட்சியகங்கள் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பணிகளில் சிறப்பு கண்காட்சிகளை இணைத்துக் கொள்வர். உலகப்பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்படுவதற்காக வேறொரு அருங்காட்சியகத்திலிருந்தோ அல்லது தனியார் சேகரிப்பிலிருந்து, அல்லது மற்ற அமைப்புக்களிலிருந்தோ கூட இவ்வகைச் சிறப்பு கண்காட்சிக்குட்படுத்தப்படும் பொருட்கள் தருவிக்கப்பட்டு காட்சி படுத்தப்படுவது வழக்கம்.

எனது அருங்காட்சியகப் பயணங்களில் அவ்வப்போது இத்தகைய உலகப்பிரசித்தி பெற்ற அரும்பொருட்களையோ ஆவணங்களையோ காணக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு சிறப்பான வாய்ப்பு அமையும் போது ஆகா .. என்ன நம் அதிர்ஷ்டம் என என் மனதிற்குள் நான் நினைத்துப் பார்த்து மகிழ்வதுண்டு. அத்தகைய ஒரு வாய்ப்புதான் எனக்குச் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் உள்ள கெண்டர்பரி நகரம் சென்றிருந்த போது கிட்டியது.



இங்கிலாந்தின் புகழ்மிக்க பிரித்தானிய நூலகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படும் மெக்னகார்ட்டா கெண்டர்பரிக்கு கண்காட்சிக்காகக் கொண்டுவரப்பட்டு அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மெக்னகார்ட்டா தற்சமயம் உலகின் பல புகழ்மிக்க அருங்காட்சியகங்களுக்குச் சிறப்பு கண்காட்சிக்கு உலகம் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரும்பொருள். அப்படி என்ன இந்த மெக்ன கார்ட்டாவில் எனக் கேட்பவர்களுக்காக சில விபரங்களைத் தருகின்றேன்.




கி.பி.1215ம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருந்த மன்னன் ஜோன் மிக மனிதாபிமானமற்ற முறையிலான ஒரு அரசாட்சியை நடத்திக் கொண்டிருந்தார். இவர் கி.பி1199ம் ஆண்டில் அரசராக முடிசூட்டிக் கொண்டவர். ஏனைய பிரபுக்களுக்கு ஆட்சி ரீதியில் மிகுந்தபாதிப்பை கொடுக்கும் வகையிலான ஆட்சியை இவர் நடத்திக் கொண்டிருந்தார். இவரைப் பதிவிலிருந்து நீக்குவது என்பதும் முடியாத காரியமாக இருந்தது. ஏனைய பிரபுக்கள் அனைவரும் சேர்ந்து மன்னர் ஜோனுக்கு அழுத்தம் கொடுத்து நில உரிமை தொடர்பான விசயத்தில் சட்ட மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் அப்படி ஒத்துழைக்கத் தவறினால் அவர்களது ஆதரவை மீட்டுக் கொள்வர் எனவும் முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தான் மன்னர் ஜோன் பிரான்சு நாட்டில் நடைபெற்று முடிந்த போரில் தோல்வியைத் தழுவி தனது படைகளோடு இங்கிலாந்தின் கெண்டபரி திரும்பியிருந்தார். ஆக இந்தச் சூழலில் பிரபுக்களை எதிர்ப்பது சரியல்ல என்ற முடிவுக்கு அவரும் வந்தார். இல்லையென்றால் ஆட்சி பறிபோய்விடும் என்பதை அவரால் ஊகிக்க முடிந்தது.

மன்னர் ஜோனுக்கும் ஏனைய பிரபுக்களுக்குமான பேச்சு வார்த்தை தொடங்கியது. ஆனால் அது வெற்றிகரமான வளர்ச்சியைக் காணவில்லை. சலிப்படைந்த ஏனைய பிரபுக்கள் இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபர்ட் நகரில் படைகளைத் திரட்டினர். 1215ம் ஆண்டு மே 17ம் நாள் மிகப்பெரிய   படையுடன் அணிவகுத்துச் சென்று லண்டன் நகரை அடைந்து லண்டன் நகரைக் கைப்பற்றினர். இதனைக் கேள்வியுற்று எங்கே தம் ஆட்சி பறிபோய்விடுமோ என்று மன்னர் ஜோன் அஞ்சத்தொடங்கி பேச்சு வார்த்தைக்கு மீண்டும் சம்மதம் தெரிவித்தார்.


​ 

மன்னர் ஜோனின் குழுவும் ஏனைய பிரபுக்களும் ரன்னிமீட் நகரில் சந்தித்தனர். ஏற்கனவே உள்ள சட்டத்தை அதிகாரப்பூர்வமாக்குவது என்பதோடு வாய்மொழி உறுதிகளாக இருந்த சில சட்டங்களையும் இந்தச் சந்திப்பில் ஆவணப்படுத்தினர். இந்த ஆவணத்தின் படி சட்டம் என்பது அரசனுக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டது என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதாக அமைந்தது.

தான் ஒப்புதல் அறிவித்து ஏற்றுக் கொண்ட இந்த ஆவணத்தை நடைமுறைப்படுத்தும் முன் புனிதத்தந்தை போப் அவர்களிடம் இவ்விசயம் தெரிவிக்கப்பட்டது. இது அரசனுக்கு நிகழ்ந்த உச்சக் கட்ட அவமானம் என அவர் கூறி இது செல்லாது எனப் பிரகடனப்படுத்தினார். இதனை இப்பிரபுக்கள் ஏர்றுக் கொள்ளவில்லை. சலிப்படைந்த பிரபுக்கள் உள்ளூரில் போரை தொடக்கினர். 1216ம் ஆண்டில் ஏறக்குறைய இங்கிலாந்தின் பாதி அளவு மன்னர் ஜோனின் எதிரிகளான பிரபுக்களின் கைவசமானது. அதே ஆண்டு மன்னர் ஜோன் மரணமடைந்தார். இது நிலமையை மேலும் மோசமாக்கியது. மன்னரின் ஒன்பது வயது புதல்வர் புதிய மன்னரானார். மன்னர் மூன்றாம் ஹென்றி என அவருக்குப் பெயர் வழங்கி பட்டம் சூட்டப்பட்டது.

அதன் பின்னர் மெக்னா கார்ட்டாவில் மாற்றங்கள் சில செய்யப்படுவது நிகழ்ந்தது. மெக்னாகர்ட்டா இங்கிலாந்தின் முதல் சட்ட ஆவணம் என்பது இதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும். மெக்னா கார்ட்டாவில் மேலும் புதிய சட்டங்கள் தொடர்ந்து இணைக்கப்பட்டும் சட்டத்திருத்தங்கள் உள்ளிணைக்கப்பட்டும் மாற்றங்கள் நிகழ்வது இயல்பாக நடந்தது. ஆனால் 1300க்குப் பிறகு மெக்னா கார்ட்டா பொதுவாக மறக்கப்பட்ட ஒரு விசயமாக அமைந்து போனது. அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் அதனை மறந்து போயினர். ஆனால் மெக்னா கார்ட்டா பற்றிய பேச்சுக்களும் அதன் தேவையும் மீண்டும் 17ம் நூற்றாண்டில் உயிர்பெற்றுக் கிளம்பியது.



சட்ட நிபுணர் சர் எட்வர்ட் கோக் மெக்னா கார்ட்டாவை மறுவாசிப்பு செய்தார். அதன் பின் மெக்னா கார்ட்டா பற்றிய பேச்சு தொடர இது இங்கிலாந்தின் மிக முக்கிய சட்ட ஆவணம் என்ற சிறப்பை பெற்றது. மெக்னா கார்ட்டாவில் இருக்கும் சட்ட குறிப்புக்களில் தனி மனித உரிமை தொடர்பானவை, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பானவை என்பவை குறிப்பிடத்தக்கவை.

உதாரணமாக இதில் உள்ள ஒரு சட்டத்தின் படி,  எந்தவொரு தனிமனிதரும் முறையான ஒரு விசாரணை இல்லாமல் சிறையில் அல்லது அரசின் பாதுகாப்பில் வைக்கப்படக் கூடாது என்று ஒரு சட்டம் குறிப்பிடுகின்றது.



மெக்னா கார்ட்டாவில் உள்ள எழுத்துக்கள் லத்தீன் மொழியில் அமைந்துள்ளன.

மெக்னா கார்ட்டாவின் 800ம் ஆண்டு விழா 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி, அது நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த அரும்பொருள்,  சிறப்பு கண்காட்சிக்காக வந்திருந்த கெண்டர்பரி நகரமானது, இங்கிலாந்தைப் பொறுத்தவரை வரலாற்று ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரம்.  ஏனெனில் இங்குதான் ரோமானியப்படை முதன் முதலாக ஆட்சியைக் கைப்பற்றியதோடு பின்னர் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தையும் இங்கிலாந்து முழுமைக்கும் பரவலாக்கியது.

அருங்காட்சியகம் பர்றிய குறிப்பு
Canterbury Royal Museum
Beaney House of Art and Knowledge
18 High St, Canterbury CT1 2BD, United Kingdom
நுழைவு இலவசம்

இங்கே நான் சென்றிருந்த அரச அருங்காட்சியகத்தில் கெண்டர்பரி நகரின் வரலாற்றைச் சொல்லும் பல அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் பார்த்து குறிப்பெடுத்து வர நிச்சயம் நான்கு மணி நேரங்களாவது ஆகும். இங்கிலாந்தின் கெண்டர்பரி நகரம் செல்பவர்கள் தவறவிடாமல் செல்ல வேண்டிய மிக முக்கிய ஒரு அருங்காட்சியகம் இந்த அரச அருங்காட்சியகம்.

Monday, May 23, 2016

63. இஸ்லாமிய கலைகள் அருங்காட்சியகம், மலேசியா


முனைவர்.சுபாஷிணி


தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய இஸ்லாமிய கலைப்பொருட்களுக்கான அருங்காட்சியகம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் நகரில் உள்ளது. 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் இருக்கும் இடம் கோலாலம்பூரின் மையப் பகுதி. 30,000 சதுர அடி பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் கட்டிடங்கள் கட்டட அமைப்பு. அல்குரான் மற்றும் ஆவணங்கள், இந்தியாவில் இஸ்லாம், சீனாவில் இஸ்லாம், மலேசியாவில் இஸ்லாம், ஆபரணங்கள், துணி வகைகள், போர் கருவிகள், காசுகள், இரும்பு கருவிகள், இஸ்லாமிய கலையில் மரங்களின் பயன்பாடு, களிமண்பாண்டங்கள் ஆகிய பணிரெண்டு வகைகளில் இங்கே காட்சிப்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய ஏழாயிரம் அரும்பொருட்களும் இஸ்லாமிய சமய தொடர்பான நூல்களும் இந்த அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கின்றன.

ஒவ்வொரு தளத்திலும் பார்த்து குறிப்பெடுத்துக்கொள்ள ஏராளமான அரும்பொருட்கள் இருப்பதால்  இங்கு செல்ல விரும்புவோர் ஏறக்குறைய நான்கு மணி நேரங்களையாவது இந்த அருங்காட்சியகத்திற்காக ஒதுக்கி விடுவது நல்லது. நான் சென்றிருந்த சமயத்தில் இதற்கு நுழைவுக்கட்டணமாக 14 ரிங்கிட் வசூலித்தார்கள். ஆக செல்லும் முன் இதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை ஒரு முறை பார்த்து தகவல்களை அறிந்து கொண்டு செல்வதும் உதவும்.



இஸ்லாமிய கலைகள் எனும் போது அதிலும் கட்டட கட்டுமானம் எனும் போது யந்திர வடிவங்களின் இணைப்பில் உருவாக்கப்பட்ட அமைப்புக்களை உலகம் முழுவதிலும் காணலாம். உலகில் இஸ்லாம் பரவிய நாடுகளில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களின் மாடல்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஸ்பெயினின் புகழ் மிக்க அல்ஹம்ரா, மாலியில் உள்ள ஜேனா பள்ளிவாசல், வட அமெரிக்கவின் நியூ மெக்சிக்கோ மானிலத்தில் உள்ள டார் அல் இஸ்லாம் பள்ளிவாசல், திருக்கியில் உள்ள செலிமியே பள்ளிவாசல், சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகர் பல்ளிவாசல் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.



அல்குரான் மற்றும் ஆவணங்கள் உள்ள பகுதியில்  அரிய ஆவனங்களும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அல்குரான் நூல்களும் இருக்கின்றன. உதாரணமாக 12 அல்லது 13ம் நூற்றாண்டு  அல்குரான் நூல் ஒன்று இங்குள்ளது. அனேகமாக இது ஸ்பெயின் அல்லது வட ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற குறிப்புடன் இந்த நூல் உள்ளது. வட இந்தியாவில் உருவாக்கப்பட்ட காஷ்மீரிய தாளைக் கொண்டு உருவாக்கப்பட்ட 19ம் நூற்றாண்டு அல்குரான் ஒன்றும் இங்குள்ளது.



இந்தியாவில் இஸ்லாம் எனும் பகுதியில் கண்களைக் கவரும் பல அரும்பொருட்களைக் காண முடிகின்றது. வட இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்கு அதாவது கி.பி.1526-1828 வரையிலான காலகட்டத்திற்கு முன்னரே பரவலாக இந்தியாவிற்கான அரேபியர்களின் வருகை என்பது விரிவானது. முகலாய கலைப்பொருட்கள் அரேபிய இஸ்லாமிய கலைகளிலிருந்து மாறுபட்ட வடிவத்தில் தனித்துவத்துடன் திகழ்வது. அதனை வெளிப்படுத்தும் அரும்பொருட்கள் சில இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஓவியங்கள், கைவினைப்பொருட்கள், ஆடை ஆபரணங்கள், மன்னர்களின் கோட்டைகளை அலங்கரித்த பொருட்கள் என்பனவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். இந்திய இஸ்லாமிய கலையை வெளிப்படுத்தும் வகையிலான  1850ம் ஆண்டு தங்கத்தில் வைரம் படித்த கழுத்தணி ஒன்றும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



மலேசியாவிற்கு இஸ்லாமிய மதம் சிறிது சிறிதாக 14ம் நூற்றாண்டு வாக்கில் பரவியது. அரேபிய வணிகர்கள் மலாயா தீபகற்பம் வர ஆரம்பித்து பின்னர் படிப்படியாக உள்ளூர் மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய நிலையில் பின்னர் மலாக்காவில் மன்னராக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட மன்னர் பரமேஸ்வரர் இரு நாடுகளுக்கான நல்லிணக்கத்திற்காக அரேபிய இஸ்லாமிய பெண்ணை மணந்து இஸ்லாமிய மதத்தை தாமும் தழுவியதால் மலாயா முழுமையாக இஸ்லாமிய நாடாக கி.பி15ம் நூற்றாண்டில் உருமாற்றம் கண்டது. படிப்படியாக நாடு முழுமைக்கும் இஸ்லாமிய கலைகள் வளர்ச்சியுற்றன.  இஸ்லாமிய கட்டுமானக் கலைகள் கடந்த சில ஆண்டுகளில் மேலும் பரவலாக வளர்ச்சியுறுவதை  நாடெங்கிலும் நன்கு காணலாம்.  இதனை வெளிப்படுத்தும் நூல்கள், ஆவணங்கள், கைவினைப்பொருட்கள், ஆடை ஆபரணங்கள் ஆகியனவும் இங்கே சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.




இந்த அருங்காட்சியகத்தைப் பற்றியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிரந்தர  கண்காட்சிகளைப்பற்றியும் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படுகின்ற தற்காலிக கண்காட்சிகளைப்பற்றியும் இதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் தகவல் அறியலாம். http://www.iamm.org.my/ இப்பக்கத்தில் அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரம், கட்டணம், முகவரி ஆகிய தகவல்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

மிகப் புதுமையான கட்டுமான அமைப்பில் அமைக்கப்பட்டு ஏராளமான காட்சிப்பொருட்களுடன் நாட்டின் மையப்பகுதியில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது. மலேசியா செல்பவர்கள் இங்கே சென்று பார்த்து வருவதை உங்கள் பயணத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Monday, May 2, 2016

62. கெல்ட்டன் அருங்காட்சியகம், ஹோஹ்டோர்ஃப், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி


ஏறக்குறைய இன்றைக்கு 2500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியின் பாடன் ஊர்ட்டென்பெர்க் எனும் மானிலத்தில் உள்ள ஹோஹ்டோர்ஃப், எனும் பகுதியில் இறந்த தங்களின் மன்னனுக்காக கெல்ட் மக்கள் குன்று ஒன்றை உருவாக்கி அதில் நினைவாலயம் ஒன்றை உருவாக்கினார்கள். நாளடையில் அப்பகுதியில் பல்வேறு பூகோள நில மாற்றங்களினாலும் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளினாலும்  அந்தக் குன்று சற்றே தாழ்நிலமாக வடிவம் பெற்றது. 1968ம் ஆண்டில் ஒரு தன்னார்வத் தொண்டூழிய தொல்லியல் ஆய்வாளர் சில வித்தியாசமான கற்களை அப்பகுதியில் கண்டெடுக்கவே, அப்பகுதியைத் தொல்லியல் ஆய்விற்கு உட்படுத்த  முயற்சிகள் எடுக்க, அங்கு ஆய்வுகள் தொடங்கின. உயர்தரமான அகழ்வாய்வு முறைகளைப் பயன்படுத்தி இப்பகுதியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைத்தது.




2500 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன தம் மன்னனைப் புதைத்து வைத்து அவன் சென்றிருக்கும் மறு உலகத்தில் அவனுக்குத்தேவை எனத் தாம் கருதிய பொருட்களையும் கூடவே வைத்து மிக அழகிய அறை ஒன்ற அந்தக் குன்றிற்குள் அம்மக்கள் உருவாக்கியிருக்கின்றனர். அகழ்வாராய்ச்சியின் போது இறந்த மன்னனுக்காக அம்மக்கள் கட்டிய அறை, அந்த அறையில் அம்மன்னனை அவர்கள் உறங்க வைத்திருந்த தங்கக்கட்டில், அவன் உடலின் மேல் அவர்கள் அணிவித்திருந்த தங்கத்தினாலான அணிகணலன்களான கால் வளையங்கள், கை வளையங்கள் நெற்றிப்பகுதி அலங்காரம் என்பனவற்றோடு அவன் மேற்குலகில் பயணம் செய்வான் என்ற நம்பிக்கையில் அவனுக்காக உயர்தரமான  ஒரு தேரும் அவன் நீர் அருந்தும் வகையில் பெரிய தங்கத்தினாலான ஒரு கூஜாவையும் தயாரித்து அந்த அறையில் அம்மக்கள் வைத்திருந்தனர் என்பது இந்த அகழ்வாயில் கண்டுபிடிக்கப்பட்டது.

டோனாவ் நதிக்கறையில் கண்டெடுக்கப்பட்ட ஏனைய சில இறந்தோருக்கான ஈமச்சடங்கு நினைவாலயங்களை ஒத்த வடிவிலேயே இந்த கெல்ட் நினைவாலயக் குன்றும் அதில் கிடைத்த ஈமச்சடங்குச் சின்னங்களும் அமைந்திருக்கின்றன, இந்த ஆய்வு ஜெர்மனியில் எந்தெந்த பகுதிகளில் கெல்ட் இன மக்கள் விரிந்து பரந்து வாழ்ந்தனர் என்பதை அடையாளம் காண உதவும் வகையில் இருக்கின்றது என்பது மிக முக்கிய அம்சமாக அமைகின்றது.


மன்னன் புதைக்கபப்ட்ட பகுதியில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிகழ்த்திய அகழ்வாய்வுகளில் அதே பகுதியில் கெல்ட் இன மக்கள் வாழ்ந்ததற்கானத் தடயங்களாக அமையும் பல பொருட்களை அகழ்வாய்வுக் குழுவினர் கண்டெடுத்திருக்கின்றனர். அதில்  கெல்ட் சமூகத்தினர் தமது அன்றாட வாழ்க்கை உபயோகத்திற்காகப் பயன்படுத்திய பொருட்கள், இரும்புப் பட்டறை, மண்பாண்டங்கள், குதிரை வண்டிகள், சமையல் அடுப்புக்கள், சமையல் பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள். தொழிற்கருவிகள், போருக்கான கருவிகள் என பலதரப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மனித  எலும்புக்கூடுகளும்  இதில் அடங்கும்.




இந்தப் பொருட்களை எல்லாம் காட்சி வைக்கும் பொருட்டு ஜெர்மனியின் பாடர்ன் ஊர்ட்டெம்பெர்க் மானிலத்தில் உள்ள ஹோஹ்டோர்ஃப் பகுதியில் ஒரு பிரத்தியேக அருங்காட்சியகத்தை உருவாக்கி, அது  1991ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் கி.மு540 வாக்கில் வாழ்ந்து இறந்த அம்மன்னனின் ஈமச்சடங்கு அறை, அவனது முழு உடலின் எலும்புக்கூடு ஆகியவற்றோடு  அங்கே கண்டெடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் காட்சிக்கு வைத்திருக்கும் ஒர் இடமாகத் திகழ்கின்றது.

அருங்காட்சியகத்தின் உள்ளே பட விவரனைகள் உள்ளன. ஆங்கிலம், டோய்ச் ஆகிய இரு மொழிகளிலும் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. முதல்  தளத்தில் கெல்ட் சமூகத்து மக்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களோடு விரிவான அகழ்வாய்வுப் பணி தொடர்பான செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. மன்னனின் எலும்புக்கூடும் முதல் தளத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.




கீழ்தளத்தில் ஒரு தனிப்பகுதியில் மன்னனின் அறை, அவனது தங்கக் கட்டில், அவனது தேர், அவனது அணிகலண்கள், தண்ணீர் கூஜா ஆகியன மிகச்சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனைக் கடந்து சென்றால் ஒரு தனி அறை வருகின்றது. அங்கே இந்த அருங்காட்சியகம் பற்றியும் இங்கு படிப்படியாக நிகழ்ந்த  தொல்லியல் ஆய்வுகள் பற்றிய விளக்கமும் ஆவணப்படமாக காட்டப்படுகின்றது.  பார்வையாளர்கள் இங்கு வந்து அமர்ந்து முழு தகவல்களையும் திரைக்காட்சியாகப் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

இப்பகுதியில் நிகழ்ந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய சிலை ஒன்றும் இதே அருங்காட்சியகத்தில் உள்ளது. அது ஒரு போர் வீரனின் சிற்பம். இது மிகத் தனித்துவம் வாய்ந்த கெல்ட் இன போர் வீரர்கள், அதிலும் குறிப்பாக ஆல்ப்ஸ் பகுதியை பிரதினிதிக்கும் வகையில் அமைந்த ஒரு மிகப் பெரிய ஆள் உயர சிற்பம்.



இந்த அருங்காட்சியகத்திற்கு வருபவர்கள் கெல்ட் மக்களைப் பற்றி அறிந்து கொள்ள பல தகவல்கள் உள்ளன. புத்தகங்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் கெல்ட் மக்களின் பண்டைய வாழ்க்கை முறையை சித்தரிக்கும் மாதிரி குடியிறுப்புக்களை உருவாக்கியுள்ளனர். இது கெல்ட் மக்களின் பண்டைய இல்ல அமைப்பு,  பட்டறை அமைப்பு, விவசாய அமைப்பு ஆகியவற்றைப் பார்வையாளர்களுக்கு விளக்குவதாகவும் அமைகின்றது.




நான் வசிக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து 27கிமூ தூரத்தில் தான் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது என்றாலும் இந்த ஆண்டு தான் இதற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கெல்ட் இன மக்களைப் பற்றி ஒரு நூலில் வாசித்த போது இந்த நகர் பற்றி  தற்செயலாக அறிய வர மேலதிகத் தகவலை இணையத்தில் தேடிய போது இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது.  இங்கே நேரில் சென்று இங்குள்ள அரும்பொருட்களை அதிலும் குறிப்பாக இறந்த மன்னனின் ஈமச்சடங்கு அறை, தேர், அவனது தங்கக் கட்டில், அணிகலன்கள்   என பார்த்தபோது ஆச்சரியத்தில்  மூழ்கினேன்.

அருங்காட்சியகத்தின் முகவரி
Keltenmuseum Hochdorf/Enz
Keltenstraße 2, 71735 Eberdingen.

இப்படித்தான் பக்கத்திலே  இருந்தாலும் கூட பல முக்கிய இடங்களை நாம் காணத்தவறுவது என்பது பலருக்கும் நிகழ்ந்திருக்கும். ஆக நமது சுற்றுப்புறத்தில் இருக்கின்ற முக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தேடி அவற்றைச் சென்று பார்த்து வருவது நமது வரலாற்று அறிவை மேலும் பெறுக்கிக் கொள்ள உதவும்.

சரி. அடுத்த பதிவில் ஐரோப்பாவில் உள்ள மேலும் ஒரு அருங்காட்சியகத்தை  அறிமுகம் செய்கின்றேன். எந்த ஊரில் உள்ள எந்த அருங்காட்சியகமாக இருக்கும் என்று யோசித்து வையுங்கள்!

Friday, April 8, 2016

61. ஜிம் தோம்சன் அருங்காட்சியகம், பாங்கோக், தாய்லாந்து

http://www.vallamai.com/?p=67788
முனைவர்.சுபாஷிணி


இந்த் வாரம் நாம் காணவிருக்கும் அருங்காட்சியகம் அமைந்திருப்பது தாய்லாந்தின் பாங்காக் நகரில்.

இந்தப் பூவுலகில் மனிதர்கள் பிறந்து, வாழ்ந்து மறைந்து கொண்டேயிருக்கின்றோம். ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு வந்த காரணத்தை ஏதாவது ஒரு வகையில் நிறைவேற்றிவிட்டுத்தான் செல்கின்றோம். ஒரு சிலரது வாழ்க்கை தனக்கு மட்டுமே பயனளிப்பதாக அமைந்து விடுகின்றது. ஒரு சிலரது வாழ்க்கை பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் நாச செயல்கள் நிறைந்ததாய் அமைந்து விடுகின்றது. ஒரு சிலரது வாழ்க்கையோ அவர்கள் மறைவிற்குப் பின்னரும் கூட அவர்கள் பெயர் உலகில் நிலைத்து நிற்கும் வகையில் அமைந்து விடுகின்றது.  அப்படி நிலைத்து நிற்கும் வரிசயில் இருப்போர் ஏராளம்.

ஒருவரை நினைத்துப் பார்த்து நினைவு கூர்ந்து அவர்களது செயற்பாடுகளை சில குறிப்பிடத்தக்க காரணங்களுக்காக பாராட்டுகின்றோம். அந்த வகையில் வருபவர்தான் திரு.ஜிம் தோம்சன் அவர்கள்.



ஜிம் தோம்சன் அவர்கள் பிறப்பால் ஒரு வட அமெரிக்கர். டெலேவர் மானிலத்தில் உள்ள க்ரீன்வீல் நகரில் 1906ம் ஆண்டில் பிறந்தார். கட்டிடக் கட்டுமானத்துறையில்  பயிற்சி எடுத்தவர் இவர். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் அவர் தாமாகவே முன் வந்து அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் இவருக்குப் பணி ஐரோப்பாவில் வழங்கப்பட்டிருந்தது. ஆகையால் ஐரோப்யாவில் அச்சமயம் ராணுவப் பணியில் இருந்த துருப்புக்களோடு ஐரோப்பாவில் தங்கி பணியாற்றினார். பின்னர் பணிக்காக இவர் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். இவரது முதல் பணி தாய்லாந்தில் அமைந்திருந்தது. ஆயினும் பாங்காக் வருவதற்கு சில தினங்களுக்கு முன்னரே இரண்டாம் உலகப் போர் முடிவுற்றது என்ற காரணத்தால் அவர் ராணுவச் சேவையில் ஈடுபட வாய்ப்பு அமையவில்லை. ராணுவச் சேவைக்காகத் தாய்லாந்து வந்து சேர்ந்த ஜிம் தோம்சன் தாய்லாந்தின் அழகில் தன் மனதைப் பறிகொடுத்தார்.

தாய்லாந்தின் கலையம்சங்களும் கிராமிய கைவினைப் பொருட்களும் துணி வேலைப்பாடுகளும், மர வேலைப்பாடுகளும் ஜிம் தோம்சனின் மனதைக் கொள்ளைக் கொண்டன. தான் இதுவரை பார்த்திராத கலையம்சங்கள் தாய்லாந்து கலை பாணியில், இருப்பதை அவர் உணர்ந்தார். அவரது சிந்தனை தாய்லாந்து கிராமப்புற வாழ்க்கையில் இருக்கும் நுணுக்கமான விஷயங்களிலேயே ஆர்வம் கொண்டு அவர் கவனத்தை முழுமையாக ஈர்க்க ஆரம்பித்தது.



குறிப்பாக கையால் பின்னப்படும் பட்டு ஆடைகள் மறக்கப்பட்ட ஒருகலையாக அச்சமயம் மாறிக்கொண்டிருந்தது. இது ஜிம் தோம்சனின் கவனத்தை ஈர்க்கவே, இக்கிராமியத் தொழிற்கலை மறையக் கூடாது  என்றுமுடிவெடுத்து இந்தக் கலையை மீட்டெடுக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அவருக்கு இயற்கையாகவே துணிகளில் வர்ணம் சேர்க்கும் கலையில் அனுபவமும் இருந்தது. இதன்  அடிப்படையில் இந்தக் கலையை புதுமைப்படுத்தி கிராமத்துக் கலைக்கு புதிய வடிவம் கொடுத்து இதனை ஒரு வர்த்தகப் பார்வையில் விரிவு படுத்தினார். உலக அளவில் குறிப்பாக ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் இக்கலை விரிவாக்கம் பெற தொடர்ந்து பல முயற்சிகளைச் செய்து வெற்றியும் கண்டார்.

அடிப்படையில் ஒரு கட்டிடக் கலைஞராகத் தொழில் முறையில் பயிற்சி பெற்றவர் ஜிம் தோம்சன். அவருக்குத் தாய்லாந்து தேக்கு மர கிராமிய வீடுகளின் கட்டுமானக் கலை மனதை கவர்ந்தது. தாய்லாந்து வீடுகளும் சரி, புத்த விகாரைகளும் சரி, பொதுவாகவே கூரைப்பகுதி என்பது சமமாக இல்லாது தனித்துவமிக்க வகையில் அமைந்திருக்கும் தன்மை கொண்டது. இது மேற்குலக கட்டுமானக் கலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு வடிவம்.



தாய்லாந்து வீடுகள் எனும்போது அவை தரைப்பகுதியானது நிலத்திலிருந்து உயரமாக தூக்கி வைத்து கட்டப்பட்ட வகையில் இருக்கும். கால்கள் அமைத்தது போன்ற அமைப்பும் இருப்பதால் வீட்டுக்குக் கீழ்ப்பகுதியில் மணல் தரை பார்வைக்குத்தென்படும் வகையில் இருக்கும்.  வெள்ளம் வரும் போது நீர்மட்டம் அதிகரித்தால் அது வீட்டை பாதிக்காதவாறு இவ்வகை வீடுகள் அமைந்திருப்பதும் மிக சமயோஜிதமாக யோசித்துக் கட்டிய கட்டுமானம் இவை என்பது புலப்படும்.

தாய்லாந்து கட்டுமானக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஜிம் தோம்சன் பாங்கோக் நகரின் மையப்பகுதியில் ஒரு நிலத்தை வாங்கி அங்கே தாய்லாந்து கட்டுமானக் கலையை வளர்க்கும் வகையில் 6 வீடுகளை அமைத்தார். அந்த வீடுகளில் தான் ஆசியாவில் பயணித்த சமயத்தில் தான் சேகரித்த கலைப்பொருட்களைக் காட்சிக்கு வைத்தார். ஒரு தனி வீட்டில் தாய்லாந்து பட்டு பற்றிய தகவல் களஞ்சியத்தை வடிவமைத்தார். பட்டுப்புழுக்களிலிருந்து நூல் தயாரிக்கும் விதத்தை விளக்கும் விபரங்களை அருங்காட்சியகமாக அமைந்தார்.



இந்தவீடுகளை அமைத்து காட்சிப்பொருட்களை வைக்கும் முன் தாய்லாந்து சமயச் சடங்கு முறைகளைப் பின்பற்றி  புதுமணை புகு விழாவினையும் நடத்தினார். இதற்குத் தாய்லாந்து ஜோதிடர்களை அணுகி நல்ல நேரம் கணித்து புதுமணை புகு விழாவை ஏற்பாடு செய்து பின்னரே தன் புதிய இல்லப் பூங்காவிற்கு குடி புகுந்தார். முதலில் இந்த இடத்தை தனது சொந்த கலையுணர்வுக்காக அமைந்த ஜிம் தோம்சன் இந்த இல்லப்பகுதி பலரது கவனத்தை ஈர்ப்பதைப் பார்த்து இதனைப் பொது மக்கள் பயன்பெறும் வகையில் அருங்காட்சியகமாக  மாற்றினார். தனக்கென்று ஒரு குடும்பம் என இல்லாத நிலையில் இந்த அருங்காட்சியகத்திலிருந்து சேகரிக்கின்ற வருமானத்தை தாய்லாந்து கலைப்பண்பாட்டு வளர்ச்சிக்காகச் செயல்படும் ஸ்தாபனங்களுக்குச் சென்று சேரும் வகையில்  ஏற்பாடுகளைச் செய்தார்.

1967ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி மலேசியாவின் கேமரன் ஹைலண்ட்ஸ் மலைப்பிரதேசத்தில் தமது நண்பர்களோடு சுற்றுலாவிற்குச் சென்ற ஜிம் தோம்சன் அவர்கள் திடீரென்று காணாமல் போனார். அவரை எங்கு தேடியும் யாராலும் கண்டு பிடிக்கமுடியவில்லை. எந்த வித தடயங்களும் அவரது மறைவைப் பற்றி யாருக்குமே கிடைக்கவில்லை.  அவரது மறைவுக்குப் பின்னர் அவர் அமைத்த தாய்லாந்து கட்டுமானக் கலைக்கூட அருங்காட்சியகம் ஜிம் தோம்சன் அறக்கட்டளையினால் தொடர்ந்து பராமரிக்கப்படு வருகின்றது. அவரது விருப்பப்படியே அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கே தொடர்ச்சியாக தாய்லாந்து பாரம்பரிய பட்டு நெய்யும் கலையும் காட்சிப்படுத்தப்படுகின்றது.


ஜிம் ஜோம்சன் அருங்காட்சியகத்திற்கு நான் 2013ம் ஆண்டில் ஜனவரி மாத ஆரம்பத்தில் சென்றிருந்தேன். தாய்லாந்தில் சுற்றுலா முடித்து பாங்காக் நகரில் இருந்த இறுதி நாட்களில் தற்செயலாக இந்த அருக்காட்சியகம் பற்றி கேள்விப்பட்டு சென்று வந்தேன்.

அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும் முன்னரே பச்சை பசேலன தாவரங்கள் நம்மை வரவேற்கின்றன. எழில் கொஞ்சும் அழகிய கலைக்கூடம் இது.  கலைப்பிரியர்களாக இருந்தால் ஒரு நாள் முழுவதையும் இந்தவளாகத்திலேயே நிச்சயம் செலவிடலாம்.


ஜிம் தோம்சன் இந்த அருங்காட்சியகத்தில்

தாய்லாந்து செல்பவர்கள் இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று வரலாம். திரு.ஜிம் தோம்சனின் தாய்லாந்து கட்டிடக் கலை வேலைப்பாடுகளின் மீதான மிகுந்த ஈடுபாட்டினை  இங்கு வருபவர்கள் நிச்சயமாக உணரமுடியும். ஜிம் தோம்சன் மறைந்தாலும் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது.

சரி.. அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன்... தொடர்ந்து வாருங்கள்!

Wednesday, March 23, 2016

60. பாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகம், எட்டயபுரம் (2), தமிழ்நாடு

http://www.vallamai.com/?p=67372
முனைவர்.சுபாஷிணி


பாரதி நினைவு இல்லத்தின் பக்கத்து வீட்டில் தான் நான் இந்தப் பயணத்தின் போது தங்கியிருந்தேன் என்று முதல் பதிவில் குறிப்பிட்டேன். அந்த   வீட்டின் சொந்தக்காரர் திருமதி சாவித்ரி. இவரது கணவர் மறைந்த திரு.துரைராஜ் அவர்கள். இவர் எட்டயபுரம் ராஜா  பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்தவர். தற்சமயம் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக  அவர்களது மகள் தான் பொறுப்பேற்றிருக்கின்றார். திரு.துரைராஜ்,  அவர் வாழ்ந்த காலத்தில் எட்டயபுரத்தில் இருந்த பாரதி அன்பர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டவர். அம்மையார் சாவித்திரி, தமிழகம் நன்கறிந்த திரு.பாஸ்கர தொண்டைமான் அவர்களின் சகோதரி. இவர்களது சகோதரர் ரகுநாத தொண்டைமான் பாரதி நூலகம் ஒன்றினை ஏற்படுத்தினார். அந்த நூலகம் இந்த இல்லம் இருக்கும் வீடுகளின் வரிசையில் முதலாவதாக இருக்கின்றது. நான் சென்ற சமயத்தில் அந்த நூலகத்தின் பொறுப்பாளராக இருந்தவர் திரு.இளசை மணியன் அவர்கள்.

பாரதி பிறந்த இல்லமாக இருக்கும் இந்த வீடு எவ்வாறு ஒரு  அருங்காட்சியகமாக மாறியது என்று சிலர் யோசிக்கலாம்.


நுழைவாயிலில்

பாரதியின் தாய் மாமன் திரு.சாம்பசிவம் ஐயர்,  பாரதி இங்கிருந்து சென்ற பிறகும் இந்த இல்லத்தில் இருந்திருக்கின்றார். பிறகு அவருடைய உறவினர்கள் சிலர், அவர்கள் கல்கத்தாவில் இருந்திருக்கின்றனர். அவர்கள் இந்த இல்லத்தைச் சில காலம் வேறொருவருக்கு வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர். பக்கத்து வீட்டில் குடியிருந்த திரு.துரைராஜ் ஆசிரியர்,  அதாவது அம்மையார் சாவித்திரியின் கணவர் சாம்பசிவ ஐயரின் உறவினர்களை அணுகி இந்த இல்லத்தை வாங்கியிருக்கின்றார். இந்த வீடு பாரதியின் பெயர் சொல்லும் ஒரு இடமாக அமையவேண்டும் என்பது திரு.துரைராஜ் அவர்களின் கனவாக இருந்திருக்கின்றது. ஆக, வாங்கியவுடன் அந்த இல்லத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். 1973ம் ஆண்டு வரை   இந்த இல்லம் பலர் வந்து நூல்களை வாசித்து செல்லும் நூலகமாக இருந்துள்ளது. 1973ல் அன்றைய தமிழக முதல்வர்.திரு.கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இந்த இல்லத்தை பாரதி நினைவு இல்லமாக பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது.  அப்போது இந்த இல்லத்தை அரசாங்கத்திடம்,  இக்கட்டிடத்திற்கானப் பணத்தை பெற்றுக் கொண்டு திரு.துரைராஜ் ஆசிரியர் குடும்பத்தினர்  ஒப்படைத்து விட்டனர்.




இன்று இந்த இல்லம் தமிழக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டு தினமும் ஒரு சிலர் வந்து பார்த்துச் செல்லும் வகையில் ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்படுகின்றது.

இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே பாரதியின் வரலாற்றுக் குறிப்பு  வழங்கப்பட்டுள்ளது.  பாரதி வெளியிட்ட நாளிதழ்கள், பாரதி சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், சில ஆவணங்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


பாரதியின் கையெழுத்து

பாரதியாரின் இலக்கிய முயற்சிகளை விட தேசப்பற்று சார்ந்த, சமுதாய சீர்திருத்தம் சார்ந்த, விடுதலை வேட்கை நிறைந்த சிந்தனைகள் மக்கள் மனதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின.

பாரதியார் தான் பிறந்த எட்டயபுரத்தில் தொடக்கப்பள்ளியில் கற்று பின்னர் திருநெல்வேலியில் உள்ள இந்துக் கல்லூரியில்  உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை பயின்றார்.  1897 ஜூன்மாதம் பாரதிக்கும் செல்லம்மாளுக்கும் கடையம் என்ற ஊரில் திருமணம் நடைபெற்றது. 1898ல் பாரதியின் தந்தை இறந்த போது அவருக்கு வயது 15 தான். அதன் பின்னர் காசிக்குச் சென்று அங்கு சில காலம் இருக்கும் சூழல் அவருக்கு ஏற்பட்டது அங்கே அலாகாபாத் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். டெல்லிக்கு அப்போது ஒரு தர்பாரில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எட்டயபுரம் ஜமீந்தார் பாரதியை மீண்டும் எட்டயபுரத்திற்கே அழைத்து வந்தார்.  ஆக 1901 முதல் 1904 வரை மீண்டும் எட்டயபுரத்தில் பாரதி வசிக்கும் சூழல் உருவானது. 1904ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சுதேசமித்திரன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் பணி அவருக்கு அமைந்தது.


அடுத்த இரண்டாண்டுகளில் பாரதியின் எழுத்துப் பணி மேலும் விரிவடந்தது. 1906 ஆண்டில் இந்தியா வார இதழின் பொறுப்பாசிரியராக இருந்து செயல்படத்தொடங்கினார். 1908 ம் ஆண்டில் இந்தியா பத்திரிக்கைக்கு தடை வழங்கியது அப்போதைய ஆங்கிலேய காலணித்துவ  அரசு.  அதே ஆண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரியிலிருந்து இந்தியா பத்திரிக்கையை வெளிக்கொணர்ந்தார்.  1909ம் ஆண்டில் தொடர்ச்சியாக புதுவையில் இருந்த வாரே விஜயா, கர்மயோகி ஆகிய இதழ்களை வெளியிட்டார்.  1910ம் ஆண்டு மார்ச் மாதம் புதுவையிலும் இந்தியா இதழுக்கு தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. இப்படி இவரது பத்திரிக்கைப் பணி என்பது தொடர்ச்சியாக மேடு பள்ளங்களைச் சந்தித்தவாறே நிகழ்ந்தது.

1920ம் ஆண்டில் மீண்டும் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் இவருக்கு தொடர்பு உண்டானது . மீண்டும் அதன் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அதன் அடுத்த ஆண்டு திருவல்லிக்கேணி கோயில் யானை தாக்கியதில் உடல் நிலை தளர்ந்து போக அதே ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவில் 12ம் தேதி அதிகாலையில் மறைந்தார். அப்போது பாரதிக்கு வயது 39 மட்டுமே.



இவ்வளவு குறுகிய காலங்கள் மட்டுமே வாழ்ந்தாழும் பாரதி விட்டுச் சென்ற தாக்கம் என்பது தமிழ் உலகில் மாறாத இடம் பிடிப்பதாய் அமைந்திருக்கின்றது.

ஏட்டில் பாரதியைப் பற்றி படிக்கும் போது ஏற்படும் உணர்வு என்பது ஒரு வகை. பாரதி பிறந்த இடத்திற்கு வந்து பார்த்து அங்கே சில நிமிடங்களைச் செலவிடும் போது பாரதியுடன் இணைந்து பயணிக்கும் உணர்வு மேலிடுவதைத் தவிர்க்க முடியாது.

இந்த அருங்காட்சியகம் வார நாட்களில் திறந்திருக்கின்றது. எட்டயபுரம் வருபவர்கள் இங்கே வந்து பார்த்து செல்லும் போது அதே வரிசையில் இருக்கும் ரகுநாதன் நூலகம்  - பாரதி ஆய்வு மையத்தையும் தவறாமல் பார்த்துச் செல்லுங்கள். இங்கே பாரதி தொடர்பான பல சேகரிப்புக்கள் உள்ளன. இவை ஏனைய பல தொடர் ஆய்வுகலுக்கு நிச்சயம் உதவக் கூடியவை.

Monday, March 21, 2016

59. பாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகம், எட்டயபுரம், தமிழ்நாடு

http://www.vallamai.com/?p=67232
முனைவர்.சுபாஷிணி


நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே

இளம் வயதில் என் தாயார் தமிழ்ப்பாடம் போதித்த போது இப்பாடலையும் சொல்லக் கேட்டு வளர்ந்தேன். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் இருப்பவை தனித்தனி சொற்கள் தாம் என்றாலும் அவை ஒன்றாக இணைந்து  முழு வடிவம் பெற்று இவ்வரிகள் ஏற்படுத்திய அதிர்வுகளும் அதனால்  என் உள்ளத்தில் ஏற்பட்ட தாக்கம் என்பதும் மிக ஆழமானது;  அர்த்தம் நிறைந்தது.

தமிழ் இலக்கியச் சுவையை விரும்புவோராகட்டும், நாட்டின் சுதந்திரத்தை விரும்புவோராகட்டும், தனி மனித சிந்தனைச் சுதந்திரத்தை விரும்புவோராகட்டும், மத நல்லிணக்கத்தை விழைவோராகட்டும், பெண் சமூகத்தின் விடுதலைக்கு உழைப்பவர்களாகட்டும், சமய சிந்தனைகளில் திளைப்போராகட்டும், சாதிக் கொடுமைகளை எதிர்ப்போராகட்டும்.. இவர்கள் அத்துணை பேருக்கும் ஏதாவது ஒரு வகையில் பாரதியின் செய்யுள் வரிகளோ, விரிவான கட்டுரைகளோ, கார்ட்டூன் வரைப்படச் சித்திரங்களோ, நாளிதழ் செய்திகளோ கைகொடுத்துத் துணையாக நிற்கின்றன.

பாரதி வாழ்ந்த காலம் இந்திய தேசமே சுதந்திர தாகம் கொண்டு எழுச்சியுடன் இருந்த ஒரு காலகட்டம். தன்னலம் கருதா சுதந்திர தியாகிகள், சிந்தனையாலும், உடலாலும் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியை எதிர்த்து தனியாகவோ, குழுக்களாகவோ  ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டிய கால கட்டம் அது. இந்த எதிர்ப்புக்கள் சுவரொட்டிகளாகவும். கையெழுத்துப் பிரதிகளாகவும், நாளேடுகளாகவும், திறந்த வெளி பிரச்சாரப் பேச்சுக்களாகவும்,  வெளிப்பட்டு மக்கள் மனதில் தோன்றிய சுதந்திர தாகத்திற்கு மேலும் எழுச்சியை ஊட்டின. அப்படி சுதந்திர தாகத்துடன் நாட்டு விடுதலைக்காகவும், மக்கள் மனைதிலே ஆழப்பதிந்திருக்கும் மூடசிந்தனைகள், சமூக உயர்வு தாழ்வுகள் ஆகியனவற்றைக் களைந்து அதற்கும் விடுதலை வேண்டி செயல்பட்டவர்களில்  பாரதியார் தனித்துவம் மிக்கவராகத் திகழ்கின்றார். சாகாவரம் பெற்ற அவரது சிந்தனையின் எழுத்து வடிவங்கள் வாசிப்போர் மனதில் இன்றும் அதே அதிர்வினை ஏற்படுத்துவதை புறக்கணித்து விடமுடியாது.

தமிழகத்தின் கடந்த நூற்றாண்டில் தோன்றி வாழ்ந்து மறைந்த முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் திகழும் சுப்ரமணிய பாரதியார் பிறந்தது தமிழகத்தின் எட்டயபுரம் என்ற ஒரு சிற்றூரில். அந்தச் சிற்றூரில் அவர் பிறந்து, வளர்ந்து வாழ்ந்த இல்லம் தற்சமயம் பாரதியார் நினைவு இல்லம் ஒரு அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சிகயத்திற்குத்தான் இன்றைய பதிவின் வழி நாம் செல்லவிருக்கின்றோம்.

2009 ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவுகளுக்காக  தமிழகத்தின் தென்பகுதிக்குச் சென்றிருந்தேன். அந்தப் பயணத்தில் எட்டயபுரத்து ஜமீந்தரின் அரண்மனை தொடர்பான தகவல்களைப் பதிவாக்கும் பணி மையப்பணியாக எனது திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. அப்பணியின் போது எட்டயபுரத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.

நான் தங்கியிருந்த வீடு இப்போது பாரதியார் பிறந்த இல்ல அருங்காட்சியகமாக இருக்கின்ற பாரதியார் பிறந்த இல்லத்தின் பக்கத்து வீடு!



நான் என் பயண ஏற்பாடுகளைச் செய்த போது இது எனக்குத் தெரியாது. இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கலந்த அனுபவம் கிட்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றி எட்டயபுரம் சென்ற எனக்கு நான்  அங்கு சென்ற பிறகு தான்  பாரதி பிறந்து வளர்ந்து ஆடி ஓடி விளையாடிய வீட்டின் பக்கத்து வீட்டில் இரண்டு நாட்கள் தங்கப் போகின்றோம்  என்ற விடயம் தெரிந்தது.


பாரதியார் பிறந்த இல்லத்தின் பக்கத்து வீட்டு வாசலில் திரு.இளசை மணியன் மற்றும் நண்பர்களுடன்

பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட வீடு அது.  வீட்டின் மாடிப்பகுதியில் பாரதி பிறந்த வீடு என்ற பெயர் பலகை மாட்டப்பட்டுள்ளது.  நுழை வாசலிலேயே வீட்டின் இரண்டு பக்கங்களிலும் திண்ணை வைத்து கட்டப்பட்ட வீடு அது. வீட்டின் பின்புறத்தில் கிணறு ஒன்றும் உள்ளது. திண்ணையைத் தாண்டி உள்ளே நுழையும் போது முகப்பு பகுதி வருகின்றது. அப்பகுதியில் வலது புரத்தில் கருஞ்சிலை வடிவத்தில் பாரதியார் முகத்தை வடித்து வைத்திருக்கின்றனர். அதற்கு சற்று தள்ளி ஒரு பகுதியை பாரதி பிறந்த இடம் எனக்குறிப்பிட்டுள்ளனர்.


பாரதியார் பிறந்த இடம் எனக் குறிக்கப்படும் பகுதி

தொடர்ந்து வாருங்கள்.  உள்ளே சென்று இந்தபாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகத்தில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்வோம்.

தொடரும்..

Wednesday, March 9, 2016

58. கைரோ அருங்காட்சியகம் (2), எகிப்து

​http://www.vallamai.com/?p=66951​


முனைவர்.சுபாஷிணி

கைரோ அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் எகிப்திய அருங்காட்சியகம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது. ஏறக்குறைய 120,000 அரும்பொருட்களைச் சேகரித்து வைத்துள்ளது இந்த அருங்காட்சியகம். உலகிலேயே ஃபாரோக்களைப் பற்றிய மிக அதிகமான தகவல்களைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் என்றால் அது இந்த கைரோ அருங்காட்சியகம் தான்.


எங்கள் குழுவினருக்குப் பயண வழிகாட்டி விளக்கம் தருகின்றார்


கைரோ அருங்காட்சியகத்தில் மம்மிக்களைப் போல கவரும் இன்னொரு விடயம் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள இறந்த பண்டைய அரச குடும்பத்தினரின் ஈமச்சடங்குப் பொருட்கள். ஈமச்சடங்குப் பொருட்கள் என்றவுடன் உடனே தூபக்கால், சிறிய மண்பாண்டம், மணிகள், கைவினைப் பொருட்கள், சாமி வடிவங்கள் என்று எண்ணி விடவேண்டாம்.

ஒவ்வொரு அரச குடும்பத்தினரது புதைக்கப்பட்ட வீடுகளிலிருந்து வெளிக்கொணரப்பட்டவை அனைத்தும் விலைமதிக்கமுடியாதவை. தங்கம், வெள்ளி, வைடூரியம், விதம் விதமான மணிகள், வைரக்கற்கள் என ஒவ்வொரு அரச குடும்பத்தினரின் அவரது தகுதி, முக்கியத்துவத்திற்கேற்ற வகையில் இறந்தவரின் மம்மி செய்யப்பட்ட உடலோடு இணைத்து வைக்கப்பட்டிருக்கும். அது மட்டுமா ?

இறந்த அந்த அரச குடும்பத்தினரின் இறப்புக்குப் பின்னர் அவர் வாழ்கின்ற உலகத்தில் அவர் பயன்படுத்துவதற்காகத் தேர், வாகனங்கள், பெட்டிகள், மிக நுணுக்கமாகச் செய்யப்பட்ட ஆடைகள், சாப்பிடுவதற்கான பாத்திரங்கள், இன்னும் அவர் என்னென்னவெல்லாம் பயன்படுத்துவார் என்று நினைத்தார்களோ அத்தனையையும் தங்கத்தினாலும் வெள்ளியாலும், விலை உயர்ந்த பொருட்களினாலும் செய்திருக்கின்றனர். தேர்கள், படுக்கை கட்டில்கள் எல்லாம் தங்கமுலாம் பூசப்பட்டு கண்களை கூசச் செய்வதாக இருக்கின்றன. புதைக்கப்பட்ட வீடுகள் என்று குறிப்பிட்டேன். ஆம். புதைக்கப்பட்ட ஒவ்வொரு அரச குடும்பத்தினருக்கும் பல அறைகளைக் கொண்ட குகை வீடுகள் உருவாக்கப்பட்டன. இந்த குகை வீடுகள் எகிப்திய பாலைவனப் பகுதியில் நைல் நதியின் இரு பக்கங்களிலும் அமைந்திருக்கின்றன.ஒரு பக்கத்தில் அரசர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings), மறு பகுதியில் அரசியர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Queens).


கர்னாக் ஆலய வாசலில்

நான் கைரோ அருங்காட்சியகம் சென்ற சமயத்தில் இளம் வயதில் இறந்த மன்னன் தூத்தான்சாமூனின் ஈமச்சடங்குப் பொருட்கள் அனைத்தும் அங்கு அன்றைக்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்பகுதி மிகுந்த பாதுகாப்புகளோடு கண்காணிக்கப்படும் பகுதி. தூத்தான்சாமூனின் மம்மிபடுத்தப்பட்ட உடல் ஏனைய அரசர்களது உடலைப் போல நல்ல நிலையில் இல்லை. இதற்குக் காரணம் இந்த இளம் அரசன் ஒரு சதிச்செயலால் மிக இளமையிலேயே வெட்டி கொல்லப்பட்டவர். இவரது உடல் மிகுந்த சேதப்படுத்தப்பட்ட நிலையில் மம்மியாக்கப்பட்டு ஏதோ ஒரு வகையில் பாதுகாத்துவிட்டார்கள். தாக்குதலில் அவரது தலைப்பகுதி மிகச்சிதைந்து போனதால் அவரது உடலின் மேல் தங்கத்தாலான கவசம் ஒன்றினைச் செய்து வைத்திருக்கின்றனர். தூத்தான்சாமூனுக்காகச் செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளையும் பார்த்து அதிசயத்தில் திகைத்துப் போய் நின்றேன்.

கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கும் பல ஒரு விலை மதிக்க முடியாத பொருட்களில் என் மனதைக் கவர்ந்த மேலும் ஒன்று என்னவென்றால் இங்கிருக்கும் அரசி ஹட்செப்சத் அவர்களது மம்மி என்று கூறலாம்.

கைரோ அருங்காட்சியகம் வருவதற்கு முன்னர் கட்சிப்சத் தனக்காக நினைவு மண்டபமாகக் கட்டிய கோயிலை பெனி ஹசான் பகுதியில் பார்த்து விட்டுத்தான் கைரோ அருங்காட்சியகம் வந்திருந்தேன். ஆகையால் பேரரசியார் ஹட்செப்சத் அவர்களது பராக்கிரமங்களை ஓரளவு அருங்காட்சியகம் வரும் முன்னரே தெரிந்து கொள்ள முடிந்தது.



பேரரசியார் ஹட்செப்சத் தானே தனக்குக் கட்டிய நினைவாலயம்


இவர் அரசியாக முடிசூடிக் கொண்டு பண்டைய எகிப்தின் பதினெட்டாவது பரம்பரையின் ஐந்தாவது ஃபாரோவாக (மாமன்னனாக அல்லது பேரரசியாக) ஆட்சி செய்தவர். இவரது காலம் கி.மு 1507 – 1458. அதாவது மாமன்னன் ராம்ஸசுக்கு முன்னரே ஆட்சி செய்தவர் என்பதோடு பண்டைய எகிப்தில் மிகப் பிரமாதமான பல கட்டுமானங்களைச் செய்வித்தவர் என்ற பெரும் புகழ் பெற்றவர். இவர் பேரரசர் முதலாம் தூத்மோசிசின் மகள். முதலாம் தூத்மோசிசின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். அதே முதலாம் தூத்மோசிசின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த இரண்டாம் தூத் மோசிசை மணந்தவர்.

பேரரசியார் ஹட்செப்சத் தன் ஆட்சிக் காலத்தில் மிக விரிவாக நாடெங்கிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். முடங்கிக்கிடந்த சாலை சீரமைப்புப் பணிகளை செம்மைப்படுத்தி பிற நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் செழிப்புற வகை செய்தார். குறிப்பிடத்தக்க கோயில்களை இவர் எகிப்தில் கட்டினார். இவர் காலத்தில் சிற்பக்கலை செழித்தது. இவர் காலத்து சிற்பங்கள் உலகின் பல அருங்காட்சியகங்களைச் சிறப்பு செய்கின்றன. அதில் குறிப்பாக நியூயோர்க் மெட்ரோபோலிட்டன் அருங்காட்சியகத்தில் பேரரசியார் ஹட்செப்சத் கால சிற்பத் தொகுதிகளுக்கென்றே ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது குறைப்பிடப்படவேண்டிய ஒன்றே.


கர்னாக் கோயில் ஒபிலிஸ்க்


இவர் காலத்தில் கார்னாக் கோயிலில் மேலும் சில சிற்பங்களை இவர் இணைத்திருக்கின்றார். பண்டைய பெண் தெய்வமான முட் தெய்வத்தின் கற்பக்கிருக பகுதியைச் சீர் செய்தார். அது மட்டுமன்றி இரட்டை ஒபில்ஸ்குகளை இக்கோயிலின் வாசலில் பிரதிஷ்டை செய்தார். அதில் ஒன்று உடைந்து விழுந்து விட்டது. ஆனால் மற்றொன்று இன்னமும் அதே கோயிலில் இருக்கின்றது. இதுவே உலகின் மிக உயரமான ஒபிலிஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபிலிஸ்க் என்பது செலிண்டர் போன்ற அமைப்பில் மிக உயரமாக அமைந்து அதன் நுனிப்பாகத்தில் சூரியக் கதிர்போல் கூர் முனையைக் கொண்டிருக்கும் ஒரு வடிவம். இது சூரியக் கடவுளை பிரதிபலிக்கும் ஒரு வடிவம் என்றும் குறிப்பிடலாம். பேரரசியார் ஹட்செப்சத் தனது 22வது ஆட்சிக் காலத்தில் இறந்தார். கிடைக்கின்ற ஆவணங்களின்படி இவர் ஜனவரி மாதம் 16ஆம் தேதி கி.மு 1458ஆம் ஆண்டு இறந்தார் எனத் தெரிகின்றது.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னெவென்றால் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மன்னர்கள் தாடி வைத்திருப்பது வழக்கம். அதனை பிரதிபலிக்க பேரரசியார் ஹட்செப்சத் தானும் செயற்கை தாடி ஒன்றினை செய்து அணிந்து கொண்டு அரசவைக்கு வருவாராம்.



பேரரசியார் ஹட்செப்சத் உருவச்சிலை தாடியுடன்


இந்தப் பேரரசியார் ஹட்செப்சத் அவர்களின் மம்மியும் இந்த கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. இவரது ஆட்சிக் காலத்து விடயங்களை அறிந்து கொண்டு நேரில் இப்பேரரசியார் ஹட்செப்சத்தை பார்த்தபோது உண்மையிலேயே பிரமிப்பில் உறைந்து போனேன்.



​பேரரசியார் ஹட்செப்சத்தின் மம்மியாக்கப்பட்ட உடல்

இப்படி சொல்லிச் சொல்லி விளக்க எத்தனை எத்தனையோ அரும்பொருட்கள் இந்த கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் விலை மதிக்க முடியாத அரும்பொருட்கள்.

உலக வரலாற்றிற்கு உன்னத சரித்திரத்தை எகிப்து வழங்கியுள்ளது. அந்த பழைய காலத்தை மீட்டுக்கொண்டுவந்து நம் கண்முன்னே அனுபவமாகத் தருவதாக இந்த கைரோ அருங்காட்சியகம் திகழ்கின்றது.

சரி.. அடுத்த பதிவில் மேலும் ஒரு அருங்காட்சியகத்துடன் உங்களைச் சந்திக்கின்றேன். இந்த ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து பெயர்ந்து வேறு எங்கு உங்களை அழைத்துச் செல்லப்போகின்றேன் என ஊகித்து வையுங்கள்.​