Friday, April 18, 2014

28. லியானார்டோ அருங்காட்சியகம், வின்ச்சி, இத்தாலி

முனைவர்.சுபாஷிணி 
வரலாற்றில் இடம்பெறும் முக்கிய நபர்களில் சிலர் வாழ்ந்த இல்லங்கள் அல்லது அவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு மணடபங்கள் போன்றவற்றிற்குச் செல்லும் போதெல்லாம் காலத்தைக் கடந்து நிற்கும் அவர்களது நினைவுகளுடன் நான் சஞ்சரிப்பது வழக்கம். இப்படி அமையும் வாய்ப்புக்களெல்லாம் ஒரு அனுபவம் தானே என்று மிகச் சாதாரணமாக என்னால் நினைத்து விட முடியாது. மாறாக இவ்வகை நிகழ்வுகளை எனது டைரியில் முக்கிய நிகழ்வுகளாக நான் குறித்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.
இப்படி வாய்க்கும் அனுபவங்களில்.. அதிலும் குறிப்பாக நம் மனதில் மிக மிக நாம் ரசிக்கும், விரும்பும், அதிசயத்து வியக்கும், லயித்துப் போகும் ஒருவரது நினைவின் சுவடாக இருக்கும் ஒரிடத்திற்கு நாம் செல்கின்றோம் எனும் போது அந்த அனுபவம் தரும் உணர்வுப் பூர்வமான அனுபவங்களைப் பிரமிப்பு என்று சொல்வதா அல்லது வியப்பு என்று சொல்வதா எனக் குழம்பிப் போனாலும் இந்த வாய்ப்பு அமைந்ததை நினைத்து மனம் முழுக்க மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பது என் அனுபவப் பூர்வமான உண்மை.
உலக மனிதர்களில் என்னை மிகக் கவர்ந்த ஒருவர்.. எப்போது நினைத்தாலும் அல்லது அவர் பெயரைக் கேட்டாலும் வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும் ஒருவர்.. என்று சொன்னால் அதில் முதல் இடம் பெறுபவர் லியோனார்டோ டாவின்சி.
ஒரு கலைஞன்..!
ஒரு விஞ்ஞானி…!
ஒரு கட்டிடக் கலைஞன்..!
ஒரு அறிஞன்..!
இவற்றிற்கும் மேல் லியோனார்டோ டாவின்சி …
ஒரு புதுமை சிற்பி..!
unnamed
லியோனார்டோ டா வின்ச்சி
பொதுவாக டாவின்சி என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனம் தொடர்பு படுத்திப் பார்ப்பது இந்தக் கலைஞன் உருவாக்கிய வரலாற்று பிரமாண்டங்களான தி லாஸ்ட் சப்பர் (The Last Supper) சித்திரமும் மோனா லிசாவின் (Mona Lisa) உருவப் படமும் தான். இதில் மோனா லிசா சித்திரத்தைப் பற்றி முந்தைய பிரான்ஸிலுள்ள லூவ்ர அருங்காட்சியகத்தைப் பற்றிய அருங்காட்சியகப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். லியோனார்டோ என்னும் இந்தப் புதுமை உலகப் படைப்புச் சிற்பியின் புகழைச் சொல்லிக் கொண்டிருப்பது இந்த இரண்டு சித்திரப் படைப்புக்கள் மட்டுமல்ல. இக்கலைஞனின் சிந்தனையில் உருவான பல்லாயிரக்கணக்கானச் சிந்தனை ஓட்டங்களின் பிரதிபலிப்பாக, புதிய உருவாக்கங்களைச் சலிக்காமல் படைத்தவன் இம்மாபெரும் கலைஞன். லியோனார்டோவின் படைப்புகள், கண்டுபிடிப்புகள், முயற்சிகள் இவற்றைப் பற்றி தனிப் பதிவாக எழுத வேண்டும் என்பதும் என் விருப்பம். பின்னர் ஒரு முறை இது நிச்சயம் வடிவம் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி இத்தாலியின் வடக்கு மாநிலப் பகுதியின் ஒரு சிற்றூரான வின்ச்சி நகரில் பிறந்தவர் இவர். இவரது படைப்புகளைப் பார்க்கும் போது இவரது சிந்தனையை முற்றும் முழுதுமாக அறிவியலும், இயற்கை நியதிகளும், புதுமை படைக்க வேண்டும் என்ற தீவிர தாகமுமே ஆர்ப்பரித்திருந்தமையை மிக நன்றாக உணர முடியும். தனது சமகால படைப்புகளைப் பார்த்து அதன் நீரோட்டமாக தனது படைப்புகளை உருவாக்கியவன் அல்ல டாவின்சி. இதற்கு முற்றிலும் மாறாக தனது சமகால படைப்புகளிலிருந்தும் அதற்கும் முந்தைய படைப்புகளிலிருந்தும் மாறுபட்ட சிந்தனையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவன் இவன். லியோனார்டோவின் பெயர் சொல்லி உருவான சித்திரக் கூடங்களும், கட்டிட கட்டுமான நெறி முறைகளும், அறிவியல் கருத்துகளும், மாணவர்களும் அவரை பின்பற்றி ரெனைசான்ஸ் எனக் குறிப்பிடப்படும் கலாச்சார மறு பிறப்பினை ஐரோப்பிய பிராந்தியம் முழுமைக்கும் இட்டுச் செல்ல வைத்த மிகப் பலம் பொருந்திய ஒரு ஆளுமை லியோனார்டோ டா வின்சி என்று சொன்னால் இதனை யாரும் மறுப்பதற்கில்லை.
leo3
வின்ச்சி நகரில் நுழையும் சாலை- இரு புறமும் ஆலிவ் மரங்கள் (ஏப்ரல் 2013)
கடந்த ஆண்டு (2013) ஏப்ரல்-மே மாதங்களில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது வின்ச்சிக்கு பிரத்தியேகமாக பயணித்து இங்கிருக்கும் டாவின்சி அருங்காட்சியத்தை நேரில் சென்று பார்த்து வந்தேன். கலையும் அறிவியலும் வெவ்வேறு தானே? இவையிரண்டும் ஓரிடத்தில் சங்கமிக்க முடியுமா என பலர் நினைக்கலாம். ஆனால், இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து லியோனார்டோவின் படைப்புகளைப் பார்வையிடும் ஒவ்வொருவரும் இவன் அறிவியலையும் கலைப்படைப்புகளையும் பிரித்துப் பார்க்காத ஒரு மனிதன் என்பதை அறிவர். அறிவியலுக்கும் கலைப்படைப்புகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை வைக்காது இரண்டையும் இணைத்துப் பார்த்து அதன் வழி புதுமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தனி இடமும் சிறப்பிடமும் பெறுபவர் லியோனார்டோ.
இது வரை கிடைத்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் லியோனார்டோவின் குறிப்புகளும் புதிய கண்டுபிடிப்புகளும் 13,000 பக்கங்களில் அவரது சொந்தக் கையெழுத்தினால் எழுதியும் வரைந்தும் வைக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளில் வானில் பறக்கும் இயந்திரம், போர் இயந்திரங்கள், மனித உடலின் உட்பகுதியில் அமைந்திருக்கும் அங்கங்களை தனித்தனியே ஆய்வு செய்து விளக்கிய வரைபடங்கள்-குறிப்புகள், கட்டுமான வரை படங்கள், வீட்டுத் தேவைக்கான இயந்திரங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.
leo2
லியோனார்டோ வடிவமைப்பான, வின்ச்சி நகரைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் Vitruvian Man (ஏப்ரல் 2013)
ரோபோட் எனப்படும் இயந்திர மனிதன் அல்லது மிருகங்களின் உருவாக்கம் என்னும் கருத்து கடந்த நூற்றாண்டில் விரிவாக வளர்ந்த ஒன்று. லியோனார்டோவின் சிந்தனையில் இயந்திர மிருகம் ஒன்றும் படைக்கும் சிந்தனை எழுந்து அதன் விளைவாக அசைந்து நடந்து சென்று தன் இதயத்தைத் திறந்து லில்லி மலர்களை வழங்கும் ஒரு இயந்திர சிங்கத்தையும் கருத்தில் சிருஷ்டித்து, அதனை உருவாக்கி அதன் உருவாக்கக் குறிப்புகளையும் பதிவு செய்து வைத்திருக்கின்றார்.
ஒரு மனிதனால் இவ்வளவு விஷயங்களைப் படைக்க முடியுமா..? வெவ்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் கலந்து இருந்து அதில் தன் முத்திரையைப் பதிக்க முடியுமா என்றால் முடியும் என்பதற்கு எனக்கு கண் முன்னே தோன்றும் உதாரணம் இந்த 15ம் நூற்றாண்டு மனிதர் லியோனார்டோ டா வின்ச்சி!
அவர் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, இயந்திரக் கல்வி பயின்று தனது இளமைக் காலத்தைச் செலவழித்த வின்ச்சி நகரிலேயே அந்நகரின் ஊராட்சி மையம் அவருக்கு ஒரு அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றது. இப்படி ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் 1919ல் எழ பின்னர் படிப்படியாக இதற்கானப் பணிகள் ஆரம்பிக்க, இவரது ஒரு பிறந்த தினத்திலேயே அதாவது 1953ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் இந்த அருங்காட்சியகம் திறப்பு விழா கண்டது.
leo1
நினைவு இல்லத்தின் வாசலில் (ஏப்ரல் 2013)
இங்கு தான் உங்களை அழைத்துச் செல்ல விருக்கின்றேன்.
வாருங்கள்.. இணைந்து செல்வோம்..!
தொடரும்