Wednesday, May 28, 2014

31. மூஸியோ டி செரா (Museo de Cera), மட்ரிட், ஸ்பெயின்

முனைவர்.சுபாஷிணி 

​மெழுகுச் சிலைகளில் பிரபலமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் உருவத்தை வடித்து வைத்து ​இதனைக் காட்சிக்கு வைப்பதே இத்தகைய அருங்காட்சியகங்களின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு நாட்டின் சூழலிலும் அங்கே பிரபலமாகக் கருதப்படுவோர் இந்த உருவச் சிலை வடிவங்களில் இடம்பெறுகின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற மனிதர்களின் சிலைகளை உருவாக்கும் அதேவேளை உள்ளூர் அரசியல், சினிமா, சமூக, வரலாற்று நிகழ்வுகளில் முக்கியப் பங்கெடுத்தோர் இத்தகைய மெழுகு உருவச் சிலைகளாக இவ்வகை அருங்காட்சியகக் கூடங்களில் காட்சிக்கு நிற்பர். அர்சியல் தலைவர்களில் ஒபாமா, தற்போது இத்தகைய அனேக மெழுகு அருங்காட்சியகங்களில் காட்சி தருகின்றார். நடிகர்களில் ஆஞ்சலினா ஜூலி அவர் கணவர் நடிகர் ப்ராட் பிட் இருவரும் இதே வகையில் நான் பார்த்த வேறு மெழுகு அருங்காட்சியகங்களிலும் காட்சியில் இருக்கின்றனர். இதே போல காந்தியும். இரண்டு வெவேறு அருங்காட்சியகங்களில் காந்தியின் மெழுகுச் சிலையப் பார்த்திருக்கின்றேன்.

மூஸியோ டி செரா, காதலர் தினமாகக் கொண்டாடப்படும் பெப்ரவரி 14ம் தேதி 1972ம் ஆண்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. 2000 சதுர அடி விரிவான கட்டிடத்தில் இரண்டு மாடித்தளங்களில் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் அமைந்துளளது. எந்த அளவிற்கு வரலாற்று பிரபலங்களின் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தை அலங்கரிக்கின்றனவோ அதே அளவு பொழுது போக்கு அம்சங்களான காற்பந்து, சினிமா துறையைச் சார்ந்த பிரபலங்களின் சிலைகளும் இங்கு நிறைந்திருக்கின்றன.

பைரட் ஆஃப் கரீபியன்  ​(ஜூலை 2013)

பல பெண்களின் கனவு நாயகரான ஜோர்ஜ் க்ளூனி, ப்ராட் பிட் ஆகியோரும் இளைஞர்களின் கனவு தேவதைகளான ஆஞ்சலினா ஜூலி, பெனலோப் க்ரூஸ் போன்றோரும் இங்கு காட்சியளிக்கின்றனர். ஸ்பெயினில் இரண்டு உலகத் தரம் வாய்ந்த காற்பந்து குழுக்களான ரியால் மட்ரிட் குழுவின் பிரபலங்களும் எஃப்ஸி பார்ஸலோனா குழுவின் பிரபலங்களும் கூட இந்த அருங்காட்சியகத்தில் மெழுகு வடிவத்தில் உருவச் சிலைகளாக காட்சியளிக்கின்றனர்.

சில பிரபலங்கள் தங்கள் உருவச் சிலைகள் தயாராகி இங்கு காட்சிக்கு வைக்கப்படும் நிகழ்வு நடைபெறும்போது நேரில் மூஸியோ டி செரா வந்து சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் நடக்கின்றது. உதாரணமாக ரியால் மட்ரிட் காற்பந்து குழுவில் பிரபலமான போர்த்துக்கீஸியரான ரொனால்டோ, தனது உருவச் சிலை இந்த அருஙகட்சியகத்தில் இடம் பெறத் தயாரான வேளையில் அந்த நிகழ்வுக்கு நேரடியாக வந்து இவ்விழாவைச் சிறப்பு செய்தார் என்ற செய்தியையும் இணையத்தில் காணலாம்.


​அமெரிக்க ஜனாதிபதிகள்  ​(ஜூலை 2013)
​​
மெழுகுச் சிலைகள்​ (Wax sculptures)  என நாம் அறிந்திருக்கும் இவ்வகை உருவச் சிலைகள் ஐரோப்பாவில்  பண்டைய காலத்தில் அரச குடும்பத்தினரில் யாரேனும் இறக்கும் போது அவர்களை ஒத்த வடிவில் உருவம் அமைத்து மரியாதைச் செலுத்தும் நோக்கில் ஆரம்பகாலத்தில் உருவாகியது. மிகப் பழமையான இவ்வகை உருவச் சிலை எனத் தேடினால் இப்போது நமக்குக் கிடைப்பது இங்கிலாந்தின் லண்டன் நகரில் வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் இருக்கும் British royal wax effigies சேகரிப்புக்களைக் குறிப்பிடலாம். இதில் குறிப்பாக மன்னர் 3ம் எட்வர்ட் (1377) அவர்களின் மெழுகு உருவத்திலான உருவச் சிலையும் உள்ளது. 

​19ம் நூர்றாண்டில் மேடம் தூஸோ ​(Madame Tussauds) இத்துறையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர். அவரது உருவாக்கங்களை காட்சிக்கு வைக்கும் வகையில் ஒரு அருங்காட்சியகத்தை அவர் நிறுவினார். அதுவே லண்டன் பேக்கர் ஸ்ட்ரீட்டில் இருக்கும் மேடம் தூஸோ மெழுகுச் சிலைஅருங்காட்சியகம். இங்கு நடப்பதற்குக் கூட இடம் கூட குறைவு. அந்த அளவிற்கு எல்லா பகுதிகளையும் நிறைத்துக் கொண்டு இவ்வகை சிலைகள் நிறைந்திருக்கின்றன. மேடம் தூஸோ அவர்களின் பெயரிலேயே இங்கிலாந்து தவிர்த்த பல இடங்களில் மெழுகுச் சிலை அருங்காட்சியகங்கள் உருவாகின. சில தனியார், அல்லது அரசாங்க முயற்சிகளினால் உருவான இவ்வகை அருங்காட்சியகங்களும் உலகின் பல நாடுகளில் காணக்கிடைக்கின்றன.

தி லாச்ட் சப்பர்  ​(ஜூலை 2013)
நாம் விரும்பும் பிரபலங்களை நேரில் சந்திக்க வேண்டும், அவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்து அது சாத்தியமல்ல என நினைக்கும் பலருக்கு இவ்வகை அருங்காட்சியகங்கள் மகிழ்ச்சி தருபவை. நேரில் இவ்வகை அருங்காட்சியகங்கள் செல்லும் போது மக்கள் ஆங்காங்கே தமக்கு பிடித்தோரின் சிலைகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாகச் செல்வதைக் கண்டு ரசிக்க முடியும். ஒரு வகையில் மக்களின் மகிழ்ச்சிக்காகத்தானே இவ்வகையிலான அருங்காட்சியகங்களும் அமைக்கப்படுகின்றன!

இத்தகைய அருங்காட்சியகங்கள் சென்று வரும் போது பலரை ஒரே இடத்தில் பார்த்த ஒரு திருப்தியும் ஏற்படும் :-)  அடுத்த பதிவில் உங்களை மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். 

​உசாத்துணை​

No comments:

Post a Comment